உலக தாய்மொழி தினம்

இன்று உலக தாய்மொழி தினமாம், அதனால் என்னரும் தாயே தமிழே என பலர் கலைஞர் பாணியிலும், எடுடா கொலை வாளை என பாரதிதாசன் பாணியிலும் பலர் முழங்கிகொண்டிருக்கின்றனர்

தாய்மொழி என்பது ஒவ்வொருவருக்கும் தாயினை விட முக்கியமானது, மொழியே ஒருவனுக்கு சகலமும், மொழி வழியே அவன் உலகை அறிகின்றான், புரிகின்றான் தன் நிலை பகிர்கின்றான்

தாய்மொழி ஒருவனுக்கு உயிர் சந்தேகமில்லை, ஆனால் மற்ற மொழிகளை படிப்பது ஒன்றும் தவறல்ல. தமிழகத்தில் என்ன நடந்ததென்றால் இந்தி வலுகட்டாயமாக ஆட்சி மொழி என அறிவிக்கபட்டது முதல் தவறு

1930களிலே அக்கொடுமை ஆரம்பித்தது, இந்தியில் 14 வகையான இந்தி உண்டு என்கின்றார்கள். இதில் 2 கோடிபேர் மட்டும் பேசும் இந்தி எல்லா மக்கள் மேல் வலுகட்டாயமாக திணிக்கபட்டது நிச்சயம் தவறு

இதுதான் இங்கு போராக மாறிற்று பின் அரசியலாக மாறிற்று, பின் என்னவெல்லாமோ ஆயிற்று

இந்தி எதிர்ப்பே தமிழுணர்வு ஆயிற்றே தவிர, தமிழை எப்படி வளர்ப்போம், பாதுகாப்போம் என்ற பிரக்ஞை எல்லாம் கொஞ்சமும் இல்லை

இதனால் தமிழகத்தில் தமிழ் தடுமாறிற்று, இங்கு தமிழ் வளர்ந்திருக்க வெண்டுமானால் பல விஷயங்கள் சட்டமாக்கபட்டு தமிழ் திணிப்பு நடந்திருக்க வேண்டும்

அதனை செய்யாமல் தமிழ் மிக கடுமையாக சீரழிந்துவிட்டது, இந்தி எதிர்ப்பில் மிக முண்ணணியில் நின்றவர்கள் தண்டவாளத்தில் உருண்டவர்கள் டிவி கூட தமிழ் உச்சரிப்பில் கவனமற்று போயிற்று. அந்த தமிழை கேட்டாலே கோபம் வருமளவு தமிழ்கொலை நடக்கின்றது

இவை எல்லாம் ஒப்புகொள்ள வேண்டிய விஷயங்கள், இன்னும் தமிழ் இங்கு சீரடையவில்லை

தமிழும் இல்லா, முறையான ஆங்கிலமும் இல்லா ஒரு மாதிரியான மொழி பேசும் தலைமுறை இங்கு உருவாகிகொண்டிருப்பது தமிழுக்கு மகா ஆபத்து

தமிழை காப்பவர்களில் ஈழத்தவர்கள் குறிப்பிடதக்கவர், அவர்களின் பெரும் போராட்டமே தமிழுக்காக என்பது மறக்க முடியாதது, ஆனால் முறையற்ற தலமையின் கீழ் நாசமானது

மலேசியாவிலும் இன்னும் ஈழம் போன்ற‌ சில நாடுகளிலும் அந்த செந்தமிழ் பசுமை மாறாமல் இருக்கின்றது, கேட்க கேட்க சுகம். காதில் தேன் வந்து பாய வைப்பது அந்த தமிழ்தான்

உலகில் தமிழ் சீரழிந்து கிடக்கும் ஒரே இடம் தமிழகம், அதனை முடிந்த அளவு விரைவில் மீட்டல் வேண்டும்

இப்படி வீழ்த்தியதில் கட்சி, அரசியல், சினிமா , ஊடகம் என எல்லா தரபிற்கும் பெரும் பங்கு உண்டு

அதில்தான் சுத்த தமிழில் பாடல் எழுதுவேன் என Kavignar Thamarai சொல்வதும், அவர் தவமிருப்பதும் மகா ஆச்சரியமாக பார்க்கபடுகின்றது.

Kavignar Thamarai உணர்வுள்ள‌ தமிழச்சி , அவர் கடமையினை அவர் செய்வது ஆச்சரியமாம்

நல்ல நீர் அருந்துபவரை என்னவெல்லமோ கலந்த சாக்கடை நீர் அருந்துபர் பார்ப்பது போல் பார்க்க வேண்டிய ஆச்சரிய பார்வையினை நிச்சயம் Kavignar Thamarai மீது வீசவேண்டும்,

ஆனால் அவை எல்லாம் இங்கு நடக்கவில்லை

தாமரை பாணியில் எல்லோரும் கிளம்பிற்றால் நிச்சயம் தமிழில் மாற்றம் வரும். நல்ல தமிழ் எங்கும் பொங்கும்

இது அடித்து மிரட்டி கொண்டுவரவேண்டிய விஷயம் அல்ல, ஒவ்வொரு தமிழனும் தமிழின் சிறப்பறிந்து, அதனை காக்கும் அவசியமறிந்து பேசினாலே போதும்

இந்த அறிவிப்பு பலகை, கடை பலகை, டிவி, வானொலி, திரைப்படம் என கொஞ்சம் கொஞ்சமாக சுத்த தமிழை கொண்டுவந்தால் அடுத்த தலைமுறை அட்டகாசமாக விழிக்கும், நிச்சயம் செய்ய வேண்டிய விஷயம் இது

இன்று ஏன் உலக தாய்மொழி தினம்

விஷயம் இதுதான் பாகிஸ்தான் பிரிந்தபின் கிழக்கு பாகிஸ்தானுக்கும் மேற்கு பாகிஸ்தானுக்கும் மொழி தகறாறு வந்தது. கிழக்கு பாகிஸ்தானியர் வங்கம் ஆட்சிமொழி என்றனர் மேற்கு பாகிஸ்தான் உருது என்றது

பிரச்சினை கலவரமானது 1952ல் துப்பாக்கி சூடுவரை சென்று மாணவர்கள் இதே நாளில் பலியாகினர்

இது பெரும் நிகழ்வாக கருதபட்டு இந்நாள் தாய்மொழி நாள் ஆயிற்று

ஆனால் இதற்கு முன்பே 1939ல் தமிழகத்தில் இந்தியினை எதிர்த்து பெரும் போர் வெடித்தது, நடத்தியது திமுக அல்ல அன்று திராவிட கழகம் கூட இல்லை

நீதிகட்சி அதனை நடத்தியது கலைஞருக்கு அன்று வயது 14 அவரும் திருவாரூர் பக்கம் ஊர்வலம் எல்லாம் சென்றார்

அந்த போராட்டம் தமிழகம் மட்டுமல்ல சென்னை மாகாணம் முழுக்க நடந்தது, அதில் சிறைக்கு சென்று கொடுமை அனுபவித்த நடராசன் முதலாவதும் தாளமுத்து இரண்டாவதுமாய் செத்தார்கள்

முதல் மொழிப்போர் தியாகிகள் இவர்கள்தான். நடராசன் இறந்த ஜனவரி 15ம் தேதிதான் நிச்சயம் தாய்மொழி தினம் ஆகியிருக்க வேண்டும்

ஆனால் ஆகவில்லை ஏன்?

வெள்ளையன் ஆட்சியில் மொழிக்காக ஒருவன் இறந்தால் உலகம் கண்டுகொள்ளாது ஆனால் சொந்தநாட்டு ஆட்சியில் மொழிக்காக ஒருவன் இறந்தால் ஓடிவரும்

தமிழன் சாவு அன்றிலிருந்தே வீணாகத்தான் போயிருக்கின்றது

அந்த தாளமுத்து நடராசன் நினைவாகத்தான் சென்னையில் ஒரு அரசு கட்டத்திற்கு அவர்கள் பெயர் சூட்டபட்டது

எப்படி ஆயினும் இந்த பிப்ரவரி 21க்கு சிறப்பு உண்டு

ஆம், 1939ல் வெடித்த எதிர்ப்பினை கண்டு ராஜாஜி அரசு பினவாங்கி 1940 இதே பெப்ரவரி 21ல் இந்தி ஆணையினை திரும்பபெற்றது

பின் பலமுறை ராஜாஜி கோஷ்டி இந்தியினை திணிக்கபார்த்தும் தமிழகமும் திராவிட இயக்கமும் முறியடித்து ராஜாஜியினை வீட்டுக்கும் அனுப்பின‌

ஆனால் ஆட்சிக்கு வந்தபின் திராவிட இயக்கம் தமிழை சரியாக காக்கவில்லை வளர்க்கவில்லை என்பதில் மாற்று கருத்து இல்லை, அதே நேரம் மக்களிடமும் தமிழுணர்வு விட்டுபோயிற்று என்பதும் மறுக்கமுடியாத விஷயம்

அது இருக்கட்டும், உலக தாய்மொழி தினம் பெப்ரவரி 21 என உலகம் சொல்ல, இது இந்தியினை தமிழகம் திருப்பி அடித்த வெற்றிநாள் என தமிழகம் கொண்டாட வேண்டும்

ஆனால் யாரும் அப்படி கொண்டாடியதாக தெரியவில்லை

திமுகவில் சொல்ல ஆளில்லை, எதிர்கட்சிகளுக்கோ சொன்னால் நீதிகட்சி திமுகவிற்கு விளம்பரம் என சொல்லவுமில்லை

இங்கு எல்லாமே அப்படித்தான் அரசியல் , பின் எப்படி தமிழ் வளரும் ?

இந்நாள் இந்தியினை தமிழகம் வெற்றிகரமாக விரட்டிவிட்ட பொன்னாள் என்பதால் இதனை தாய்மொழி தினமாக ஒவ்வொரு தமிழரும் கொண்டாடலாம்

வெல்க தமிழ்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s