மோடிக்கு விருது

இந்தியாவில் ஏழை பணக்காரர் இடைவெளியினை குறைத்ததற்காக மோடிக்கு விருது : தென் கொரியா விளக்கம்

எப்படி இடைவெளியினை குறைத்தார் மோடி

தன் குழப்பமான திட்டங்களால் கோடீஸ்வரர்கள் லட்சாதிபதி ஆனார்கள், லட்சாதிபதிகள் தெருவுக்கு வந்தார்கள்

ஆக பணக்காரர்கள் ஏழைகளோடு ஏழைகளாக ஆகிவிட்டார்கள், இந்த சமத்துவத்தை கொண்டுவந்ததற்கு விருதாம்

அதைவிட கொடுமை மோடி உலக அமைதிக்கு பாடுபட்டாராம்?

சிரிய போரை நிறுத்தினாரா? இல்லை கொரிய பதற்றத்தை தணித்தாரா? இல்லை ஈரான் இஸ்ரேல் இடையே சமாதானம் பேசினாரா என்ன செய்தார் என தலைகீழாக யோசித்தாலும் ஒன்றும் புரியவில்லை

மிக ஆழமாக யோசித்தால் ஒன்று புரிந்தது

அதிமுகவும் ஓபிஎஸ் இபிஎஸ் சமாதானத்திற்கும் நட்புறவிற்கும் மிகுந்த பாடுபட்டவர் மோடி

அதற்குத்தான் தென்கொரியாவில் விருது கொடுத்திருப்பார்களோ?

அடேய் சவுத் கொரியன்ஸ், ஹூண்டாய் கார்முதல் சாம்சுங் போன்வரை விற்க‌ இந்திய சந்தை வேண்டும் என கேட்டால்தான் என்ன?

ஏன் இந்த பில்டப்?

உங்களுக்கெல்லாம் வடகொரிய அதிபர்தான் சரி

தேர்தல் துளி – 22 பெப்ரவரி 2019

நலமே

“ஏ புள்ள வாசல்ல நிக்குற 3 பேரும் யார்?

வந்திருப்பது 2 பேர்தான் நீங்க பார்க்கிறது கலைஞரோட ஆவியா இருக்கும்.

இருக்கும் புள்ள, சரி இந்த 2 பேரும் யாரு?

முதல்ல நிக்குறது பழனிச்சாமி, பின்னால நிக்குறது மோடி

எதுக்கு வந்திருப்பாங்க?

வழக்கம் போல நலம் விசாரிக்க வந்திருப்பாங்க, துளியும் அரசியல் இருக்காது

15 தொகுதி கொடுத்தா கேப்டன் நலம்னு வாசல்ல போர்டு வச்சிருவோமா புள்ள, ஒரே டிஸ்டர்பென்ஸா இருக்கு”

நலம் விசாரிக்கும் ஸ்டாலின்

திருநாவுக்கரசர், ரஜினியினை தொடர்ந்து விஜயகாந்தினை சந்திக்கின்றார் முக ஸ்டாலின்

இதென்ன? அந்த ஆளை எல்லோரும் ஓடி ஓடி பார்த்துட்ட்டு?, சரியில்லையே, நம்மள காலி பண்ணிருவாங்களோ?

திமுக தமிழருக்கு செய்த துரோகம் என்னென்ன? என எழுதி ஒரு பைல் போட்டு வச்சிருந்தேன், இனி அதை தேடனும்

நலம் விசாரிக்கும் ரஜினிகாந்த

“அர்ரே தமிழிசை, ரஜினிகாந்த விஜயகாந்த் வீட்டுக்கு அனுப்புனது மோடின்னு சிலபேர் கிளம்பிருக்காங்க‌

எனக்கே அவர்கிட்ட பேசி கிறுக்கு பிடிச்சி போச்சி

அவர புரிஞ்சிக்க யாராலயும் முடியல, எனக்கு பெப்பெ காட்டிட்டு அங்க அழகிரிக்கு ஹாய் சொல்லிட்டு இப்போ திடீர்னு விஜயகாந்த பார்க்க போயிருக்காரு

அஸ்ட்ராய்டு கல்லை கணிக்கும் 
அமெரிக்க சயின்டிஸ்டே இவர் போக்கு தெரியாம மண்டைய பிய்ச்சிட்டு இருக்காங்கோ

பிளீஸ் தமிழிசை மாத்தா ஜி, ரஜினி அனுப்பினது நம்பிள் இல்லேன்னு ஊரெல்லாம் சொல்லிருங்கோ..”

அபிராமி…அபிராமி

நானும் ஒரு கட்சி வச்சிருக்கேன், என்ன வந்து பார்க்காம ரஜினி விஜயகாந்தை பார்ப்பாராம்

இதெல்லாம் என்ன நியாயம் அபிராமி…அபிராமி

அரசியலே இல்ல

அரசியல் குறித்து துளியும் பேசவில்லை; அவர் நல்ல மனிதர்: விஜயகாந்தை சந்தித்த பின் ரஜினிகாந்த் பேட்டி

ஆக விஜயகாந்த் என்றொரு மனிதர் இருப்பதும் அவர் நல்ல மனிதர் என்பதும் ரஜினிக்கு இப்பொழுதுதான் இருந்திருக்கின்றது

இன்னும் தேர்தல் நெருங்க நெருங்க என்னவெல்லாம் ரஜினிக்கு தெரியுமோ தெரியவில்லை..

வள்ளியம்மை

வெள்ளையன் உலகெல்லாம் ரப்பர் தோட்டம் தேயிலை தோட்டம் சுரங்க வேலை என சகலத்திற்கும் தமிழரையே அழைத்து சென்றான்

தமிழன் அரச விசுவாசம் கொண்டவன், கடும் உழைப்பாளி என்ற அபிமானம் ஆங்கிலேயருக்கு அதிகமாக இருந்தது. கயானா முதல் பிஜி தீவுகள் வரை தமிழர்கள் பரவியது இப்படித்தான்

அப்படி ஏகபட்ட தமிழர்களை தென்னாப்ரிக்காவுக்கும் கொண்டு சென்றான், அதில் மயிலாடுதுறையினை அடுத்த தில்லையாடி கிராமத்தை சேர்ந்த முனுசாமி. அவருக்கு ஜோகன்ஸ்பர்க்கில் பிறந்தவர்தான் வள்ளியம்மை

பிறந்தது இதே பிப்ரவரி 22

அவள் பிறக்கும்பொழுது தென்னாப்ரிகாவில் இனவெறியும் வெள்ளையனின் மதவெறியும் உச்சத்தில் இருந்தது, வெள்ளையரை தவிர யாரையும் மிருகத்தை போல அவர்கல் நடத்திய காலகட்டம் அது

காந்தி அப்பொழுதுதான் போராட்டத்தை தொடங்கியிருந்தார், அப்பொழுது இன்னொரு கட்டுபாட்டையும் வெள்ளை அரசு இட்டது

அதாவது கிறிஸ்தவ ஆலயங்களில் நடக்கும் திருமணமே செல்லும் என்றும் இந்துக்கள் வீட்டில் நடத்தும் திருமணம் செல்லாது எனவும் அறிவித்தது

கூடவே கொடுமையான வரிவிதிப்புகள், மற்ற இனத்தவர் மேல் கொடூர அடக்குமுறை

இதை எல்லாம் கண்டித்து போராட்டம் வெடித்தது, வள்ளியம்மைக்கு அப்பொழுது 15 வயதுதான் இருக்கும் ஆனால் அச்சூழல் அவளுக்கு மான உணர்ச்சியினையும் இந்தியருக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற வெறியினையும் ஏற்படுத்தியது

காந்தி போராட்ட குழுவுக்கு தலைவரானார், அவருடன் எங்கு சென்றாலும் துணை சென்றாள் வள்ளியம்மை. ஒரு ஆர்ப்பாட்டத்தில் அவருக்கு எதிராக துப்பாக்கி தூக்கினான் ஆங்கிலேய அதிகாரி, குறுக்கே வந்து நின்றாள் “என்னை சுட்டுவிட்டு அவரை சுடு” என அவள் சொன்னபொழுது அவளின் துணிச்சல் பெரும் பெயரை கொடுத்தது

கூட்டம் அவளை கொண்டாடியது, காந்திக்கு அவள் பேரில் தனிபாசமே வந்தது

எங்கு போராட்டம் என்றாலும் செல்வாள் வள்ளியம்மை “ஒரு கொடி கூட இல்லா அடிமை தேசத்து அடிமை நீ, நீ எல்லாம் பேசுகின்றாயா? உனக்கேன் உரிமை” என அந்த அதிகாரி கேட்க , தன் சேலையினை கிழித்து அவன் முகத்தில் எரிந்து இந்த மானமே எம் கொடி என முகத்தில் அறைந்து சொன்னாள்

மிக சிறிய வயதிலே போராட்டத்தில் அவள் பங்கெடுப்பதும், ஓடியாடி வேலை செய்வதும் வெள்ளையருக்கு அச்சத்தை கொடுத்தன‌

ஒரு போராட்ட நிகழ்வில் அவளை கைது செய்து சிறையில் அடைத்தார்கள், அங்கு கிட்டதட்ட வ.உ.சி பாணியில் அவள் கொடுமைபடுத்தபட்டாள்

20 மணிநேர வேலை, சரியான உணவோ ஓய்வொ இல்லை, சுகாதாரமற்ற சிறை எல்லாம் அவளை நோயாளியாக்கின‌

பதறிய மக்களும் காந்தியும் அவளை பிணை எடுக்க முயன்றனர், அரசும் அனுமதித்தது

அவளோ கோரிக்கை ஏற்படும் முன் விடுதலை ஆவது இல்லை என உறுதியாக நின்றாள், காந்தியே நேரில் சென்று அவளை விடுதலையாக வற்புறுத்தினார்

அஹிம்சை போதித்த நீங்களே என்னை போராட்டத்தை கைவிட சொல்கின்றீர்களா? நாளை ஒரு போராடத்தில் உங்கள் நிலையும் இப்படி இருந்தால் உயிர்பிழைக்க வேண்டி போராட்டத்தை விட்டுவிடுவீர்களா?

அவள் கேட்ட கேள்வியில் வாய்மூடினார் காந்தி, தான் அவள் மனதில் எந்த அளவு பதிந்திருக்கின்றோம் என்பது அவரை கண்ணீர் விட செய்தது

ஆம், அவளே காந்திக்கு சத்தியாகிரகத்தின் வலிமையினை முதலில் சொன்னவள்

அவள் சிறையில் சத்தியாகிரகம் இருக்க, தென்னாப்ரிக்க இந்தியரிடையே பெரும் எழுச்சி ஏற்பட்டது, காந்தி தலமையேற்றார்

அதன்பின் அந்த வரி நீக்கபட்டது, மகிழ்வுடன் வெளிவந்தாள் வள்ளியம்மை

அஹிம்சையின் வெற்றியினை எனக்கு உணர்த்திய தெய்வம்மா நீ என அணைத்துகொண்டார் காந்தி

அஹிம்சை எவ்வளவு பெரும் ஆயுதம் என அவர் அனுபவ பூர்வமாக கண்டுகொண்டது அங்குதான்

சிறைவாசமும் அஹிம்சை போராட்டமும் வள்ளியம்மைக்கு பெரும் நோயினை கொடுத்தது, அதிலிருந்து அவள் மீள முடியவில்லை

இதே பிப்ரவரி 22ம் நாள் மரித்தும் போனாள், ஆனால் அவள் ஏற்றிவைத்த எழுச்சி முதலில் காந்திக்கு வெற்றியாகவும் பின்னாளில் மண்டேலாவுக்கு வெற்றியாகவும் முடிந்தது

இருவருமே தயக்கமின்றி வள்ளியம்மையின் தியாக வாழ்வினை முன்மாதிரியாக கொண்டவர்கள்

தென்னாப்ரிக்காவில் வென்ற காந்தி அந்த உத்வேகத்துடன் இந்தியா வந்தார், 1915ல் இந்தியா வந்த காந்தி தன் மனைவியுடன் நேரே மயிலாடுதுறை வந்து தில்லையாடிக்கு சென்றார்

அந்த மண்ணை குனிந்து முத்தமிட்டார் , கண்ணீர் சிந்தினார். “தமிழகத்து வள்ளியம்மையே பலன் ஏதும் கருதாமல் தென்னாப்பிரிக்காவில் தியாகம் செய்து வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மை அவர்கள் தாம் எனக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர்

அப்படி ஒரு மனஉறுதியினை நான் யாரிடமும் கண்டதில்லை, அவரே நான் கொண்ட மனவுறுதிக்கும் பெற்ற வெற்றிகளுக்கும் காரணம்” என மனம் திறந்து சொன்னார்

அந்த மண்ணை வள்ளியம்மை நினைவாக வணங்கிவிட்டே மாபெரும் போராட்டத்தை எடுத்தார் காந்தி, அதில் வெற்றியும் பெற்றார்

மகாத்மா காந்தி எனும் மாமனிதனின் வாழ்க்கையில் பெரும் நெருப்பை ஏற்றிவைத்த தீக்குச்சி வள்ளியம்மை, அதில் மாற்றுகருத்து இருக்கவே முடியாது

நிச்சயம் வள்ளியம்மை பெரும் தியாகி, மானமும் வீரமும் கொண்ட தமிழச்சி

ஆனால் தமிழர் என அழிச்சாட்டியம் செய்யும் கும்பல் யாராவது அவரை நினைவு கூர்வார்களா? அவளின் தியாகத்தை எடுத்து சொல்வார்களா? என்றால் இல்லை

காரணம் அவள் காந்தியவாதி வெற்றிபெற்ற காந்தியவாதி, அவளை விட தோற்றுபொன பயங்கரவாதிகளே இவர்கள் கண்ணுக்கு தெரியும்

அடக்குமுறைக்கு எதிரான அஹிம்சை போராட்டத்திலும், உலகிற்கே அப்போராட்டத்திற்கு முன்மாதிரியான பெண் ஒரு தமிழச்சி என்பதில் நிச்சயம் நமக்கெல்லாம் பெருமையே

அவள் காட்டிய வழியே தென்னாப்ரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் விடிவினை கொடுத்தது

வெறும் 16 ஆண்டுகளே வாழ்ந்தாலும் வரலாற்றில் தீரா இடம் பிடித்த அந்த சத்யாகிரக தமிழச்சிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

காந்தி பெயர் உள்ளளவும் அவள் தியாகமும் நிலைத்திருக்கும்

ஜார்ஜ் வாஷிங்டன்

அவர் ஒரு சாதாரண விவசாயி, அமெரிக்க தீவில் பிரிட்டிசாரும் பிரான்சும் மோதிகொண்ட காலத்தில் பிரிட்டன்பக்கமாக நின்று போரிட்டவர்

ஓரளவு அறிவாளி அதனால் களத்தில் பிரிட்டனின் ராணுவம், பிரான்ஸும் செவ்விந்தியர்களும் இணைந்த படையினை வெல்வது கடினம் என முதலில் சொன்னவர்

பிரிட்டானியருக்கும் அவருக்கும் சரிவரவில்லை, ஆயினும் ராணுவவீரனாக தொடர்ந்தார். பெரும் தோல்வியில் தெய்வாதீனமாக உயிர்தப்பியபின் ராணுவம் எல்லாம் வேண்டாம் என முடிவெடுத்து மறுபடி விவசாயி ஆனார்

அன்று அவரின் விவசாய பண்ணை கிட்டதட்ட 8 ஆயிரம் ஏக்கர் என்கின்றது வரலாறு. அதாவது சசிகலா பாணியில் வளைத்தவர் அல்ல. அமெரிக்கா மிகபெரும் தேசம் என்பதால் நிலம் சிக்கலே இல்லை. மக்கள் தொகை குறைவு என்பதால் உழைப்பதுதான் சிக்கல்

அக்காலத்திலே 8 ஆயிரம் ஏக்கரை பராமரித்திருகின்றார் என்றால் பெரிய விஷயம், முன்னாள் ராணுவத்தார் என்பதால் நல்ல மதிப்பும் இருந்திருக்கின்றது

பின்பு பிரிட்டிசார் வரிவசூல் தொடர்பாக கறாராக நடக்க, அவருக்கும் பிரிட்டிசாருக்கும் மோதிற்று, மோதல் யுத்தமானது உள்நாட்டு போர் வெடித்தது

முன்பே பிரிட்டன் ஆர்மியில் இருந்ததால் அவர்களின் பலகீனத்தை நுனியில் வைத்திருந்தவருக்கு வெற்றி குவிந்தது, உச்சமாக பாஸ்டனில் பிரிட்டன் பொருட்கள் எல்லாம் அடித்து நொறுக்கபட்டு புரட்சி வெடித்தது, இதற்கு பிரான்ஸ் ஆசியும் உண்டு

அமெரிக்க மக்களை ஓரணியில் திரட்டி போராட்டத்தை மிக வெற்றிகரமாக முன்னெடுத்த சாதனையினை வாஷிங்டன் செய்தார். அவராக படை திரட்டினார் பயிற்சி அளித்தார், பிரான்சின் உதவினையும் பயன்படுத்திகொண்டார்.

அமெரிக்க எழுச்சி அவர் கொடுத்தது.

ஒரே மொழியாக இருந்தால் ஒற்றுமையாக இருக்கலாம், ஒரே இனமாக இருந்தால் வாழ்வாங்கு வாழலாம் என்பதெலலம் சரிவராது

அமெரிக்கர்கள் பிரிட்டன் எனும் தேசிய இனத்து பிள்ளைகள்தான், ஆங்கிலம் பேசியவர்கள்தான், பின் பிரிவும் போரும் எங்கிருந்து வந்தது? மக்கள் அதிருப்தி அடைந்த பின் தேசிய இனமாவது, மொழியாவது? மண்ணாங்கட்டியாவது?

இத்தனைக்கும் அவர் ஆங்கிலேயர், ஆங்கில பேரரசை எதிர்த்து அவர் போராடியபொழுது அந்நிய மொழி தேசமான பிரான்ஸ்தான் ஆதரவளித்தது

பிரான்ஸின் ஆதரவே அமெரிக்கா சுதந்திரமாக காரணம். அதனால் உறுதியாக வரலாறு சொல்கின்றது, ஒரே மொழி ஒரே தேசம் என்பதெல்லாம் சாத்தியமில்லை, வெறும் கனவு

அமெரிக்க விடுதலைப்போர் அதனைத்தான் சொன்னது, ஒரே மொழி ஒரே இனம் ஆயினும் ஒற்றுமையாய் வாழ்வது கடினம்.

இனி அமெரிக்காவினை ஆளமுடியாது முடிந்தால் வியாபாரம் செய்யலாம் என அமெரிக்காவிற்கு சுதந்திரம் கொடுத்துவிட்டு கப்பல் எறியது பிரிட்டன்

இந்தியாவினை பிரிட்டனுக்கு அடிமைபடுத்தி கொடுத்த ராபர்ட் கிளைவினை வாஷிங்டனுக்கு எதிராக களமிறக்க முடிவு செய்தது பிரிட்டன், கிளைவ் வந்திருந்தால் வாஷிங்டன் நின்றிருக்க முடியாது, அமெரிக்காவும் உருவாகி இருக்காது

ஆனால் கிளைவ் லண்டனில் தற்கொலை செய்து கொண்டான், உண்மையில் அமெரிக்காவிற்கு சுதந்திரம் வழங்கியவன் அவனே

அதன் பின் வாஷிங்டன் புதிய அமெரிக்காவினை உருவாக்கினார் அவர், இன்றைய அமெரிக்காவின் அடித்தளம் அவர் இட்டது

ஜார்ஜ் வாஷிங்டன், அமெரிக்கர்களின் மிக பெரும் கவுரவம்

தேர்தலில் அவரே வென்றார், சர்வாதிகாரியாக வாழும் வாய்ப்புத்தான் ஆனால் ஒருவர் இருமுறைக்கு மேல் ஜனாதிபதியாக இருக்க கூடாது எனும் சட்டத்தை அவர்தான் எழுதினார், இன்றளவும் அது பின்பற்றபடுகின்றது

உலகம் மன்னர் ஆட்சியில் இருந்தபொழுது ஜனநாயக ஆட்சி எப்படி இருக்கவேண்டும் என உருவாக்கி காட்டியவர் அந்த வாஷிங்டன், அவரின் அந்த உருவாக்கமே பின்னர் உலகம் மாறியதற்கு முதல் காரணம்

மனிதர் நல்ல கைராசிக்காரர்

அவர் தொட்டதெல்லாம் துலங்கியிருக்கின்றது. அவர் உருவாக்கிய அமெரிக்கா இன்று மாபெரும் வல்லரசு. அவர் படம் சுமக்கும் டாலர் உலகின் பொருளாதார ரத்தம்

மேலாக அவர் உருவாக்கிய நகரான வாஷிங்டன் இன்று உலக நாடுகளின் தலையெழுத்தை நிர்மானிக்கும் நகரம். ஏறகுறைய ஒவ்வொரு மனிதனின் நிலையினையும் அந்த நகர் நேரடியாக அல்லது மறைமுகமாக தீர்மானிக்கின்றது

அந்த மனிதருக்கு ஜாதகம் அப்படி. அதே நேரம் அவரின் மிக உன்னதமான தியாக உழைப்பும், அவரிடம் இருந்த ஜனநாயகமும் வாழ்த்தபட வேண்டியது

இன்று அவரின் பிறந்தநாள் அத்தேசம் அவரை நன்றியோடு நினைத்து வணங்குகின்றது அது வாழும்

அவர் உருவாக்கிய அந்த நாடே இன்று உலகையும் விண்வெளியினையும் ஆள் கடலையும் ஆண்டுகொண்டிருக்கின்றது

அருமையான எண்ணம்

அனிதா நினைவாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஸ்டாலினின் எண்ணம் வாழ்த்துகுரியது

ஆனால் அனிதா ஏதோ பயிற்சிபெற்று வேலைக்கு செல்லவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவர் அல்ல, மாறாக மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு இருந்தவர் அது பலிக்காமல் செத்தும் போனவர்

ஆக அவர் நினைவாக ஏதும் செய்வதாக இருந்தால் ஏழை மாணவர்கள் டாக்டராக , மருத்துவ உயர்படிப்பு படிக்க உதவினால்தான் அது மிக பொருத்தமாக இருக்கும்

பயன்பெறும் அம்மாணவர்களால் அனிதாவின் சாவு அர்த்தமுள்ள சாவாக இருக்கும்

இதை சொன்னால் நாம் சங்கி அல்லது அடிமை கூட்டத்தில் ஒருவராகிவிடுவோம்

கண்துடைப்பு

தீவிரவாதி ஹபிஸ் சயித்தின் ஜமாத் உத் தவா அமைப்புக்கு தடை: பாகிஸ்தான் நடவடிக்கை

கண்துடைப்பு என்றால் என்ன என்பதற்கு இதுதான் உதாரணம்

மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் ஹபிஸ் சயீத், அதற்கு முன்பே அமெரிக்கா 12 பில்லியன் வரை இவனுக்கு விலை வைத்து தேடிகொண்டிருக்கின்றது

அப்படிபட்ட பெரும் கொடூர தீவிரவாதியினை ஒப்படைப்பது முறையா? இல்லை இனி அந்த இயக்கத்துக்கு தடை என சொல்லி அவனை பற்றி அமைதிகாப்பது முறையா?

இன்னும் ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பற்றியோ மசூத் அசார் பற்றியோ தகவலே இல்லை

ஏன் மசூத் அசார் பற்றி பேச்சு வரும்பொழுது ஹபீஸ் சயித்தை இழுக்கின்றது பாகிஸ்தான்

ஆம் பின்லேடன் போல ஹபீஸ் சயித்தினை அமெரிக்கா ரகசியமாக ரவுண்ட் கட்டியிருக்கலாம், எப்பொழுதும் போட்டு தாக்க தயாராக இருக்கலாம், அந்த தகவல் பாகிஸ்தானுக்கு கிடைத்து ஏதோ நாடகமாட முந்தி கொள்ளலாம்

அதை தவிர வேறு ஏதுமில்லை

குட்டிசாத்தான்களையும் மந்திரவாதியினையும் பிரிக்க முடியாது, ஒழித்தால் இரண்டையும் ஒன்றாகவே ஒழிக்க முடியும்

அப்படி பாகிஸ்தானையும் தீவிரவாதிகளையும் பிரிக்கவே முடியாது, ஒருவர் இல்லாவிட்டால் இன்னொருவரால் வாழவே முடியாது

ஒப்பற்ற தியாகி கஸ்தூரிபாய்

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்பும் ஒரு பெண் இருப்பாள் என்பது பொதுவான நியதி, ஆனால் பெரும் தியாகிகளின், போராளிகள் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்பது அபூர்வம்

மார்க்ஸுக்கு ஜெனி போல மிக சிலருக்கே அந்த யோகம் கிடைத்திருகின்றது, அதில் ஒருவர்தான் தேசப்பிதா மகாத்மா காந்தி

13 வயதில் அவருக்கு கஸ்தூரிபாயினை திருமணம் செய்துவைத்தார்கள். கஸ்தூரி சாதாரண குடும்பத்து பெண் அல்ல, சிலப்பதிகாரத்தில் கண்ணகி போல பெரும் வியாபார குடும்பத்து வாரிசு

அக்கால வழக்கபடி கஸ்தூரி கல்வி கற்கவில்லை, அவருக்கு எழுதபடிக்க சொல்லிகொடுத்தது யாரென்றால் காந்திதான், ஆம் படுக்கை அறையே அங்கு வகுப்பு கூடமும் ஆயிற்று, காரணம் பெண் கல்வி அன்று சொந்த வீட்டிலே மறுக்கபட்டது

காந்தி லண்டனில் படிக்கும்பொழுதும் இன்னும் எங்கெல்லாமோ சுற்றி திரியும்பொழுதும் அவருக்காக காத்தே இருந்தார் கஸ்தூரிபாய்

காந்தி தென்னாப்ரிக்கா வந்ததில் இருந்து ஒரு நொடி அவள் அவரை பிரியவில்லை, மூத்த குழந்தை இறந்தபொழுதும் அடுத்த 4 குழந்தைகளை கவனமாக வளர்த்தார்

காந்தி தென்னாப்ரிக்காவில் பொதுவாழ்க்கைக்கு திரும்பிய பொழுது, இனவெறிக்கு எதிராக போராடிய பொழுது பெண்கள் அணி திரட்டி களமிறங்கினார் கஸ்தூரிபாய்

ஆம், முதன் முதலில் இந்திய பெண்கள் போராட்ட களம் வந்தது, தென்னாப்ரிக்கவிலே, தில்லையாடி வள்ளியம்மை செத்தது அங்கேயே, கஸ்தூரிபாய் போராளியானதும் அங்குதான்

அங்கு சிறையிலும் அடைக்கபட்டார் , சைவ உணவு கேட்டும் கிடைக்காமல் அவர் பட்டபாடு கொஞ்சமல்ல, எல்லாவற்றையும் தாங்கினார், பட்டினி கிடந்து தாங்கினார்

அவரின் மன உறுதி எளிதானது அல்ல, அசாத்தியமானது

தென்னாப்ரிக்காவில் காந்தி தனியாக போராடவில்லை, கஸ்தூரிபாயின் பெரும் ஆதரவு இருந்தது. ஏன் களத்திற்கே குழந்தைகளோடு வந்தவர் கஸ்தூரிபாய்

இதைவிட ஒரு கணவனுக்கு என்ன வேண்டும்? அந்த உற்சாகத்தில்தான் காந்தியால் தென்னாப்ரிக்காவில் வெற்றி பெற முடிந்தது

அந்த வெற்றி அவரை இந்தியாவிற்கும் அழைத்து வந்தது, இங்கேயும் காந்திக்கு நிழலாக இருந்தார் கஸ்தூரி

எவ்வளவு போராட்டம்? எவ்வளவு சிக்கல்கள்? எல்லாவற்றிலும் காந்திக்கு துணையிருந்தார், துணை நடந்தார்

காந்தி நடந்த ஒவ்வொரு முள்பாதையிலும் கால்களிலும் மனதிலும் ரத்தம் வழிய நடந்தார்

பெண் விடுதலை, பெண் சுதந்திரம் என காந்தி பேச தொடங்கியதெல்லாம் கஸ்தூரிபாயின் அணுகுமுறையில் இருந்தே

காந்திக்கு ஞானம் கொடுத்தவர் கஸ்தூரிபாய்

அந்த சபர்மதி ஆசிரமத்தில் ஒரு வெள்ளையன் தங்கினான், அன்று கழிவறை வசதி எல்லாம் இல்லை எல்லாம் மட்பாண்டமே, அதை சுத்தம் செய்யும் தொழிலாளி வரவில்லை

காந்தி கஸ்தூரிக்கு ஆணையிட்டார், பெரும் குடும்பத்து வாரிசான கஸ்தூரி அதை செய்தார்.

காந்தி என்னவெல்லாமோ யோசித்தவர், ஒரு கட்டத்தில் பெண்கள் ஏன் பொதுவாழ்க்கைக்கு வருவதில்லை என கஸ்தூரியிடம் விவாதித்தபொழுது சட்டென சொன்னார் கஸ்தூரி

“பெண்கள் பாதுகாப்பினை தேடுபவர்கள், துறவறம் ஏற்காத பிரம்மசரியத்தை பேணாத எந்த தலைவனை நம்பி அவர்கள் வருவார்கள்?”

அதிலிருந்துதான் பிரம்மசரியத்தை ஏற்றார் காந்தி, ஆம் நாட்டுக்காக ஏற்றார். சொந்த கணவனையே நாட்டுக்காக கொடுத்தவர் கஸ்தூரிபாய்

1915 முதல் காந்தி இந்தியாவுக்கு தன் வாழ்வினை அர்பணிக்க ஒரு பக்கம் அவரையும் மறுபக்கம் குடும்பத்தையும் கவனித்து தியாக வாழ்க்கை வாழந்தவர் அவர்

இறுதியாக 1942ல் தேசம் வெள்ளையனே வெளியேறு என கொந்தளித்தபொழுது காந்தி தீவிரமாய் களமிறங்கினார், அவரோடு கஸ்தூரிபாயும் போராட வந்தார்

பெரும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார் காந்தி

வெள்ளை அரசு காந்தியினை கைது செய்து சிறையில் போட்டது, கூட்டம் இனி நடக்குமா என மக்கள் திகைத்த பொழுது, அட்டகாசமாக பேச்சினை தொடக்கினார் கஸ்தூரிபாய்

அவருக்கு தென்னாப்ரிக்க சிறையிலே நோய் இருந்தது, கூடவே பஜனை பூஜை என தன்னை வருத்திகொண்டார், அந்நிலையிலும் உணர்ச்சி பொங்க பேசினார்

கூட்டத்தில் பெரும் எழுச்சி உண்டாயிற்று, அந்த நெருப்பே நாடெங்கும் பரவிற்று

விடுவானா வெள்ளையன் காந்தியினை விட கஸ்தூரிபாய்க்கு அஞ்சினான், நோயாளி என பாராமல் சிறையிலிட்டான்

எரவாடா சிறையில் அடைக்கபட்டார் கஸ்தூரி , உடல் இன்னும் நலிவுற்றது , காந்தி சிறையில் இருக்கும் பொழுதே 1944ல் மரணமடைந்தார் கஸ்தூரிபாய்

உண்மையில் தியாக தலைவி என இந்தியாவில் ஒருவரை சொல்லமுடியுமென்றால் முழு தகுதி கஸ்தூரிபாய்க்கும் உண்டு

விஞ்ஞானிகள், பொதுநல பித்தர்களோடு வாழ்வது என்பது சாபம், எடிசனையும் ஐன்ஸ்டீனையும் விட்டுவிட்டே மனைவி மார் தலைதெறிக்க ஓடினர்

பாரதியினை கட்டி கொண்டு அழுது செத்தார் செல்லம்மாள்

காந்திக்கு மனைவியாக வாழ்ந்தது பெரும் கொடுமை, நாட்டிற்காக அந்த சுமையினை சுமந்தார் கஸ்தூரி. அந்த மாபெரும் தியாகத்திற்கு ஈடாக சாஸ்திரியின் மனைவி லலிதா அம்மையாரையும் சொல்லலாம்

நிச்சயம் கணவனால் அவர்களுக்கு கிடைத்தது பிள்ளை செல்வம் என்பதையன்றி வெறொன்றும் அல்ல, தங்கம் உட்பட இருந்ததை பறித்தார்களே அன்றி கொஞ்சமும் வளமாக வாழவைத்தவர்கள் அல்ல‌

ஆனால் நாட்டுக்காக அந்த வலியினை தாங்கினார்கள், இந்த தேசத்திற்காக எல்லாவற்றையும் அர்பணித்தார்கள்

கஸ்தூரிபாய் ஒருவகையில் நல்மரணம் அடைந்தவர்

ஆம் தேசம் பிரிவதையோ, காந்தி சுட்டுகொல்லபடுவதையோ இங்கு மதவாதம் தாண்டவமாடுவதையோ அவர் காணவில்லை

அவ்வகையில் அந்த மாதரசி நல்மரணம் அடைந்திருக்கின்றார்

கஸ்தூரிபாயின் வரலாறு இந்திய வரலாற்று பக்கங்களில் குறிப்பிடதக்கது, காந்தி கூட அவரின் வரலாற்றில் கொஞ்சத்தைத்தான் பகிர்ந்திருக்கின்றார்

உண்மையில் அந்ததாய் செய்த சேவையும் தியாகமும் ஏராளம், ஏராளம்

காந்தி என்ற மனிதரை மகாத்மா ஆக்கியதில் அவருக்கு பெரும் பங்கு உண்டு, அவரால்தான் காந்தி அவ்வளவு பெரிய இடம் அடைந்தார்

நாடாவது மண்ணாவது? ஒழுங்காக சம்பாதித்து கொட்டு மகனுக்கு சேர்த்துவை என சாதாரண மனைவி போல காந்தி கழுத்தில் துண்டு போட்டு அவர் இழுத்து சென்றிருந்தால் இன்று காந்தி எனும் மாமனிதர் இல்லை

இதென்ன இம்சை? என் தந்தையின் வியாபாரத்தை கவனி என கஸ்தூரி காந்தியின் காதை திருகியிருந்தால் அந்த மாமனிதன் உருவாகியிருக்கமாட்டான்

கஸ்தூரி பாயின் தன்னலமற்ற தியாகமே அந்த மகாத்மா எனும் மாமனிதனை உருவாக்கிற்று

கணவனுக்கே பிரம்மசரியம் கொடுத்து அவரை மகாத்மாவாக உருவாக்கிய இன்னொரு தாய் அவர்

கஸ்தூரிபாயின் வாழ்க்கை கண்களை கலங்க வைக்க கூடியது

கஸ்தூரிபாய் இறந்ததுமே மனமுடைந்தார் காந்தி “என்னில் பாதி சிதைந்து போனது, மீதம் இனி இருந்து என்ன செய்ய போகின்றது?” என வாய்விட்டு சொன்னார்

ஆம் 65 ஆண்டுகள் காந்தியோடு இருந்து அவரை காத்து உருவாக்கியவர் கஸ்தூரிபாய்.

கஸ்தூரிபாயின் மறைவுக்கு பின் காந்தி சாக தயாரானார், தனக்கு கொலைமிரட்டல் இருந்தும் கொலை முயற்சி நடந்தும் கொஞ்சமும் அஞ்சவில்லை, பாதுகாப்பும் கோரவில்லை

ஆம் சாவை தேடிகொண்டிருந்தார், கஸ்தூரிபாய் இல்லா வாழ்வு அவருக்கு மனமார பிடிக்கவில்லை

அந்த காந்தியினைத்தான், மனமார சாகதுணிந்த காந்தியினைத்தான் கொன்றது இந்துமகா சபை கும்பல்


பொதுவாக கவிஞர்கள் மனம் மென்மையானது, சில விஷயங்கள் அவர்களின் மனதை பாதித்துவிடும்

கண்ணதாசனும் சத்திய சோதனை எல்லாம் படித்தவர், அவரின் பாடலிலும் கஸ்தூரிபாயின் வலியும் தியாகமும் வரும்

பாரதியின் செல்லம்மாள் , கஸ்தூரிபாய், கமலா நேரு, லலிதா சாஸ்திரி என தியாக செம்மல்களின் தியாகத்தை வியட்நாம் வீடு படத்தில் அட்டகாசமாக எழுதியிருப்பார்

“உண் கண்ணில் நீர் வழிந்தால்..” என தொடங்கும் பாடலது

“உன்னை கரம்பிடித்தேன் வாழ்க்கை ஒளிமயமானதடி
பொன்னை மணந்ததினால் சபையில் புகழும் வளர்ந்தடி”

“ஆலம் விழுதுபோல் உறவுகள் ஆயிரம் வந்துமென்ன 
வேரேன நீ இருந்தாய் அதில் நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்”

“என் தேவையாய் யார் அறிவார்?
உன்னை போல் தெய்வமொன்றே அறியும்”

இதெல்லாம் காந்தியின் மனமொழியில் கஸ்தூரிபாய்க்கும் பொருந்தும்

இன்று கஸ்தூரிபாய் இறந்த தினம்

சுதந்திர போராட்ட தியாகியும், காந்தி எனும் மாமனிதனை உருவாக்கிய அந்த தியாக சுடருமான இந்தியாவின் தலை மகளுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்