ஜெயலலிதா – 24/02/2019

எம்ஜிஆர் தான் சினிமாவில் திரட்டிய மக்கள் சக்தியினை அவரிடமே விட்டுசென்றார். ஜெயா கட்சியினை சிரமபட்டு வளர்த்தவரோ அதற்காக போராடியவரோ அல்ல‌

ஆனால் பின்னாளில் அவரில்லாமல் கட்சி இல்லை எனும் அளவிற்கு அக்கட்சி அவரிடம் சரண்டைந்தது, அனாசயமாக கைபற்றினார் அல்லது நடராஜனால் சிக்க வைக்கபட்டது.

இந்திராவும், ராஜிவும் அவருக்கு கைதூக்கி விடும் அளவிற்கு அவர் ஜாதகத்தில் கட்டம் இருந்தது.

ஆம் ஜெயாவின் நாட்டுபற்று அவரை அவர்களிடம் கவனம் பெற வைத்தது

எதில் வென்று வரலாற்றில் நிலைத்தார் ஜெயலலிதா?

கணக்கிடுவது மிக எளிது, இந்த திமுக என்பது தமிழகத்திற்கு பிடித்தமான கட்சி அல்ல, அதன் பிரிவினை வாதமும் நாத்திகமும் இன்னும் அக்காலத்தில் காமராஜருக்கு எதிரான அரசியலும் அதன் மேல் அதிருப்தியினை கொண்டிருந்தது

ராமசந்திரன் அதில்தான் வெற்றியினை அறுவடை செய்தார், அந்த நுட்பத்தை ஜெயலலிதாவும் அப்படியே பின்பற்றினார். இறுதிவரை திமுகவின் நாத்திக, ஒருமாதிரியான பிரிவினைவாத எதிர்ப்பினை தனக்கான வோட்டு வங்கியாக காப்பாற்றி கொண்டார்.

திராவிட கட்சி ஆயினும் கொஞ்சமும் அவர் ஆன்மீக காரியங்களுக்கு அஞ்சவில்லை, தான் ஒரு பக்தி மிக்க இந்து என்பதில் தெளிவாக இருந்தார், அதே நேரம் எந்த மதத்து எதிரியாகவும் தன்னை காட்டிகொள்ளவில்லை, இதில்தான் ஜெயா வென்றார்

ஏராளமான சர்ச்சைகளுக்கு சொந்தகாரியானார், ஆனால் எந்த இடத்திலும் எதனைபற்றியும் அவர் வருத்தம் தெரிவித்து பேசியதில்லை. நான் அப்படித்தான் என்பது போல அவரின் தோரணை இருந்தது. எந்த வழக்கும் எந்த சிக்கலும் அவரின் அரசியலை பாதித்தில்லை

தமிழகம் அவரை அசைக்க முடியா இடத்தில் வைத்திருந்தது, எத்தனையோ குற்றசாட்டுகளை அவர் எதிர்கொண்டபோதும் தமிழகம் அவரை கைவிடவில்லை, இங்கு அவர் பொருத்தமான முதல்வர் என்பதை நம்பியது

குறிப்பாக பெண்கள் வாக்கு அவருக்கு அதிகம் இருந்தது, தங்களில் ஒருவர் போல அவரை நேசித்தார்கள், அவரும் தாலிக்கு தங்கம், மாணவிகளுக்கு சைக்கிள், இலவச மிக்ஸி கிரைண்டர் என மகளிரின் நாடிதுடிப்பினை அறிந்தே இருந்தார்

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஜெயாவின் செயல்பாடு தீவிரமாக இருந்தது, எத்தனையோ என்கவுண்டர் சர்ச்சைகளும் அதில் வந்தது, இதில் தனக்கொரு தனி அடையாளத்தை பெண்களிடையே தேடிகொண்டார்

அந்த அனுதாபம் குறையா வகையில் திமுகவின் வெற்றிகொண்டான் கோஷ்டிகள் மிக ஆபாசமாக பேசி தங்களையும் அறியாமல் ஜெயாவிற்கு உதவியது

ஒரு வித்தியாசமான அரசியல்வாதி ஜெயலலிதா, பெரும்பாலும் தனிமை விரும்பி , அவர் யாரையும் தேடி சென்றதாக தெரியாது, எல்லோரும் அவரை தேடித்தான் சென்று வணங்கி நின்றார்கள், அப்படியும் காலம் இருந்தது

இப்படி எல்லாம் பெரும் உயரத்தில் பெரும் ராணிக்கு நிகரான வாழ்வினை தமிழகம் அவருக்கு கொடுத்திருந்தது, பிரச்சாரத்திற்கு இந்த சிறிய தமிழகத்தில் ஹெலிகாப்டரில் பறந்த முதல் மற்றும் கடைசியான கட்சி தலைவி அவர்தான்

வாழ ஒரு காலம் உண்டென்றால் அடிவாங்க ஒரு காலம் உண்டல்லவா?

சொத்துகுவிப்பு வழக்கில் அவரால் தப்ப இயலவில்லை, குமாரசாமி வடிவில் விதி வெளியில் விட்டாலும், அவர் மகிழ்ச்சியடையவில்லை

பெரும் எண்ணிக்கை எம்பிக்களை பெற்று பிரதமராகிவிட்டால் தன் வழக்குகளை இந்திரா ஸ்டைலில் புதைத்துவிடலாம் எனும் கனவும் மோடி வடிவில் தகர்ந்தது

அதன்பின் ஜெயலலிதாவிடம் உற்சாகம் குறைந்தது, அதாவது அவர் ஜாதகம் தென்னிந்தியாவில் பலித்தது, வட இந்தியாவில் முடியவில்லை

தொடர்ந்து இரண்டாம் முறை முதல்வரானாலும் அவர் பெரும்பாலும் வெளிவரவில்லை, இந்நிலையில்தான் அவரின் எம்பி சசிகலா புஷ்பா என்னை ஜெயலலிதா அடித்தார் என பாராளுமன்றத்தில் அழுதார்

அதன் பின் காட்சிகள் மாறின, இதனை எதிர்பார்க்காத ஜெயலலிதா குழம்பினார், குழப்பத்திலே அப்பல்லோவில் அனுமதிகபட்டார்

அதன் பின் அப்பல்லோ டாக்டர்களை தவிர யாரும் ஜெயாவினை பார்க்கவில்லை, அவர்களுக்கு அடுத்து பார்த்தது லண்டன் பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள்

அங்கே வாழ்வு முடிந்து பிணமாக‌ வெளிவந்தார் ஜெயா.

கட்சி ஆடியது, அவருக்கு பின் யார் என்ற குழப்பம் கட்சியில் ஒடிகொண்டிருக்கும் பொழுதே தீர்ப்பு வந்தது

அவர் நெடுநாள் சிறைவாசம் பெற்று, ஆட்சி நீங்கும் நிலைக்கும் அவர் விதி ஒப்புகொள்ளவில்லை, காப்பாற்றி இருக்கின்றது, அல்லது காபாற்றபட்டிருகின்றார்

ஜெயலலிதா எங்கும் தன் உணர்ச்சிகளை காட்டுபவர் அல்ல, கண்ணீரோ கத்தலோ பொதுஇடத்த்தில் அவரிடம் இருக்காது, எல்லா அவமானங்களையும், நக்கல்களையும் மனதில்தான் வாங்கிகொண்டிருப்பார்

எம்ஜிஆர் சமாதியில் அடித்து சத்தியம் செய்தார், கோபத்தில் சிரித்தார், ஒரு மாதிரி பேசினார் என எங்காவது ஜெயா வாழ்வில் பார்க்க முடியுமா?

அப்படியே பாறைபோல முகபாவம் இருக்கும், உதடுகள் மட்டும் அசையும்

மொத்தத்தில் கிட்டதட்ட 25 ஆண்டுகாலம் தமிழக அரசியலை ஆட்டுவிக்க வந்த‌ ஆன்மா பிறந்த நாள் இது

எம்.என் ராஜம் போல, சரோஜா தேவி போல, சச்சு போல ஒரு நடிகையாக வாழ்ந்திருக்கவேண்டிய ஜெயாவினை, இன்று மிஞ்சி போனால் கே.ஆர் விஜயா போல டிவி தொடர் நடிகையாக வாழ்ந்திருக்க வேண்டிய அவர் திமுகவினை எதிர்க்க சரியான நபர் எனும் வடிவில் பெரும் அரசியல் பிம்பமாக மாறி இருந்தார்.

அவர் இருக்கும்வரை அவரின் மர்மங்கள் எல்லாம் தூங்கின‌

அவர் தூங்கசென்றவுடன் அவரின் மர்மம் எல்லாம் வெளிவர தொடங்குகின்றன.

உண்மையில் இந்த ஜெயலலிதா என்பவர் பரிதாபத்திற்குரிய பிறவி, அவர் அவருக்காக வாழவில்லை, வாழவே இல்லை

யார் யாரின் சுயநலத்திற்காகவோ பயன்படுத்தபட்டு இறுதியில் கேட்க யாருமின்றி அனாதையாக செத்துவிட்ட ஒரு அபலை அந்த ஜெயலலிதா.

அவர் விதி அப்படி இருந்திருக்கின்றது. தங்கத்தால் அதனை அணிபவருக்கு பலனே அன்றி, அதற்கு என்ன பலன் என்பார் பட்டினத்தார்

அப்படி ஜெயா எனும் தங்கத்தால் மற்றவருக்கு எல்லாம் பயன் இருந்ததே தவிர, அவருக்கு ஒன்றுமே இல்லை, துளி நிம்மதி கூட இல்லை, அப்படி வாழ்ந்த அபலைதான் ஜெயா.

அந்த அபலை நிச்சயம் பரிதாப சோகம், வழக்கம் போல அவரை வைத்து எல்லோரும் பயன்படுத்திவிட்டு அவரை அடக்கம் செய்துமாகிவிட்டது

கோடிகணக்கான சொத்துகள் இருந்தும் அவர் மீது உண்மை அன்புகாட்ட ஒருவருமின்றியே தவித்து செத்த கொடுமை அவருக்கு நடத்தது.

ஆனால் சில விஷயங்களில் அவரை மறக்க முடியாது, அதில் முதலாவது அவரின் நாட்டுபற்று.

அது 1983களிலே வடகிழக்கு மாகாண பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் அட்டகாசமாக பேசியபொழுது தெரிந்தது, இந்திராவே பிரமித்திருந்தார்.

ஜெயாவின் அந்த நாட்டுபற்று இந்திராவிற்கு அவர்மேல் பெரும் பாசத்தை ஏற்படுத்தி இருந்தது, தன் அருகே பல முக்கிய கூட்டங்களில் ஜெயாவினை அமர்த்தி இருந்தார்

புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் ராஜிவிற்கு அவர் உதவியாக இருந்தார், புலிகளின் குறியில் ஜெயாவும் இருந்தார் என்பது குறிப்பிடதக்கது

தமிழிக பிரிவினைவாத அரசியலை அவர் பேசவில்லை, அவர் இருக்கும் வரை எவனையும் தமிழ்தேசியம், தக்காளி தேசியம் எல்லாம் பேசவிடவில்லை

கருணாநிதி எனும் சாகச அரசியல்வாதி 1991க்கு பின் தேவைபடும்பொழுதெல்லாம் ஈழவிவகாரத்தை கிளறியபொழுது அவருக்கு பொட்டில் அடித்தாற்போல பதில் சொன்னவர் ஜெயலலிதா

பிரபாகரனை தூக்கில் போடவேண்டும் என சொன்ன தைரியமிக்க இந்தியர் ஜெயலலிதா, அதில் அவருக்கு கொஞ்சமும் தயக்கமோ அச்சமோ வாக்கு பயமோ இல்லை, இந்தியராக நின்றார்

மண்டல் கமிஷன் அறிக்கையினை சட்டமாக்க போராடியவர் ஜெயலலிதா

ராமசந்திரனும், கலைஞரும் காவேரியிலும் முல்லைபெரியாரிலும் செய்த தவறுகளை எல்லாம் நேராக்க கடும் பாடுபட்டு வழக்கு நடத்தினார் ஜெயலலிதா, முல்லைபெரியாரில் வெற்றியும் பெற்றார்.

அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து இட கூடாது என அணு விஞ்ஞானிகளுக்கு முனனதாகவே நுட்பமாக கண்டித்தவர் ஜெயலலிதா

தன் கட்சிக்காரர்களின் கேடயம் என தெரிந்தும் கந்துவட்டி, மதுகடைகளை அரசுடமையாக்குதல், லாட்டரி ஒழிப்பு என மிக தைரியமான முடிவுகளை எடுத்தவர் அவர், மறக்க முடியாது

சந்தண வீரப்பனை ஒழித்து அவனுக்கு தூதாக இருந்த நக்கீரன் கோபாலை எல்லாம் அவர் விரட்டிய அளவு இன்னொருவர் செய்ய முடியாது

2009ல் திமுக ஈழபிரச்சினைக்காக அரசில் இருந்து வெளியேறினால் மறுநொடி காங்கிரஸ் கட்சியினை ஆதரிக்க தயார் என பகிரங்கமாக பேதங்களை மறந்து இந்தியராக நின்றவர் ஜெயா

அந்த தைரியம், நாட்டுபற்றோடு இனி இங்கொரு பெண் வரப்போவதில்லை

தமிழகத்தில் கடவுள் பக்திமிக்க பெண் முதல்வராக பதவியில் அமர்ந்தவர், பெரியார் மண் இது எனும் மாயயினை அடித்து நொறுக்கினார். அவருக்கான ஆதரவு தமிழகத்தில் அவர் சாகும் வரை அப்படியே இருந்தது.

வைகோ எனும் புலி அபிமானி, இந்திய எதிரி இன்று இப்படி பைத்தியமாய் அலைவதில் ஜெயாவின் அடியும் உண்டு

ஈழ புலி பிரிவினை கோஷ்டிகள் எல்லாம் இங்கு இன்று அடக்கி வைக்கபட்டிருக்கின்றன என்றால், அவற்றால் ஒரு எல்லையினை தாண்ட முடியவில்லை என்றால் அதற்கு முழு காரணம் ஜெயலலிதா.

அவர்மேல் ஆயிரம் சர்ச்சை இருக்கலாம், ஆனால் புலி ஆபத்தில் இருந்து தமிழகத்தை காத்தவர் ஜெயா, கலைஞர் போல காங்கிரஸ் அரசில் இருந்து கொண்டு அப்பக்கம் தமிழ்செல்வனுக்கு கவிதை பாடும் அரசியல் எல்லாம் அவர் செய்யவில்லை

புலிகளை மிக உறுதியாக இந்திய பெண்ணாக எதித்தார், விரட்டினார். இங்கு அந்த அயோக்கிய புலிகள் காலூன்றாமல் பார்த்து கொண்டார், தமிழகம் காக்கபட்டது

ஒரு தமிழ்தேசியவாதி, ஒரு பெரியாரிஸ்ட், ஒரு பிரிவினைவாதி அவர் ஆட்சிகாலத்தில் பேசியதில்லை எனும் அளவு இத்தமிழகத்தை இந்திய மண்ணாக அட்டகாசமாக வைத்திருந்தார், ஜெயாவின் அந்த சாதனை போற்றதக்கது

காமராஜருக்கு பின் ஒரு முதல்வர் நாட்டுபற்றோடு இருந்தார், இத்தமிழகத்தில் மிகுந்த அதிகாரத்தோடு பிரிவினைவாதிகளை ஒடுக்கி, பிரிவினை பேசுவோரை மிதித்து இந்திய தேசியத்திற்கு பலமாக இருந்தார் என்றால் அது சாட்சாத் ஜெயா ஒருவரே

அந்த பெருமை எந்நாளும் அவருக்கு உண்டு, அவர் மேல் ஆயிரம் சர்ச்சை இருந்தாலும் இந்த விஷயத்தில் எதிரிகளும் அவரை குற்றம் சொல்ல முடியாது

இன்றும் அவர் கல்லறை தேசபக்திமிக்க பெண் முதல்வர் ஒருவரின் கல்லறையாகவே தமிழகத்தில் அமைந்திருக்கின்றது, காலம் அதனை சொல்லி கொண்டே இருக்கும்

வெள்ளை யானைக்கு இடபடும் தீனிபோன்றது அரசு ஊழியர் சம்பளம், அதும் போதாதென்று அவர்கள் போராட கிளம்பியபொழுது அதிரடி காட்டிய ஜெயாவினை யார் மறக்க முடியும்?

அனைவரையும் வீட்டுக்கு அனுப்பியதும், கதற வைத்ததும் ஜெயா இருக்கும் வரை அவர்கள் கடும் நிசப்தம் காட்டியதும் கடந்த வரலாறு, ஜெயாவின் பெரும் சாதனை அது

தமிழக அரசியலில் பெண்கள் துணிந்து வரலாம் வெற்றிபெறலாம் என நிரூபித்துவிட்டு சென்றவர் ஜெயலலிதா, சர்ச்சைகள் இருந்தாலும் ஏராளமான தமிழக பெண்களுக்கு அவரே முன்மாதிரி, ஆதர்சம், கனவு நாயகி

இன்றும் பெண்கள் அவருக்கு கொடுக்கும் மரியாதையே தனி, ஆம் அவர்களுக்கான தன்னம்பிக்கையின் வடிவம் ஜெயலலிதா

அந்த தேச பக்தியின் பெண் வடிவிற்கு வீரவணக்கம்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s