தேர்தல் துளி 07/03/2019(2)

எப்படி இவரால் சொல்லமுடிகின்றது?

நயினார் நாகேந்திரனை இவர் இப்படித்தான் பாஜக பக்கம் அனுப்பியிருப்பாரோ?

********

“பிரபாகரன் மேல் சத்தியமாக இனி இந்திய எதிர்ப்பு பேசமாட்டேன்……..

ஆமைகறி தந்தாலும் இந்திய ராணுவத்தை, இந்திய தேசியத்தை எதிர்க்கவே மாட்டேன்..”

********

இந்த விவாத நிகழ்ச்சி டிவிக்கள் உடனே துரைமுருகனையும் சுதீஷையும் ஒன்றாக அமர்த்தி பேச வைக்க வேண்டும்

அதிர வைக்கும் பல விஷயங்கள் வரும்போல் தெரிகின்றது.

********

கன்னியாகுமரியில் 13ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவார் ராகுல்காந்தி : கே.எஸ் அழகிரி

சரி, கன்னியாகுமரி தொகுதி காங்கிரசுக்கா? வேட்பாளர் யார்?

அதெல்லாம் சொல்லமுடியாது அல்லது தெரியாது

ஒருவேளை பின்னால் வரப்போகும் வேட்பாளருக்கு ஆதரவளியுங்கள் என ராகுல்காந்தி பிரச்சாரம் செய்வாரோ?

********

“ரொம்ப அவமானமா இருக்கு சரத், வாங்க தினகரன் பக்கம் போகலாம்

என் சாதிக்காரன் என்ன கொன்னுருவான் கேப்டன், வேற ஐடியா சொல்லுங்க‌

தாடிய இன்னும் கொஞ்சம் வளர்த்துட்டு அப்படியே முடியும் வளர்த்து சாமியாரா எங்காவது போயிருங்க..”

கலைஞரின் அணுகுமுறை

அது அண்ணா கட்சி நடத்திய காலம், மிகவும் எதிர்பார்த்த ஒருவருக்கு அன்று சீட் கிடைக்கவில்லை அதைவிட முக்கியமான விஷயம் அவருக்கு பிடிக்காதவருக்கு சீட் கிடைத்தது

மனிதர் கொதித்து போய் அண்ணாவிடம் நியாயம் கேட்டார், தன் இயல்பான புன்னகையில் நிதானித்து சொன்னார் அண்ணா

“தம்பி ஒரு பெண்ணிடம் இரண்டு பட்டுசேலைகள் ஒரே நேரம் கிடைத்தால் பொங்கலுக்கு ஒன்று, தீபாவளிக்கொன்றாக கட்டுவாளா? இல்லை ஒரே நேரத்தில் கட்டுவாளா?

இன்று அவனுக்கொரு வாய்ப்பு கொடுத்தான் அண்ணன் உனக்கொரு வாய்பினை நாளை தரமாட்டேனா?

இதுதான் உன் நம்பிக்கையா? என்மேல் அன்பிருந்தால் உனக்கு இந்த சந்தேகம் வருமா? என் மனதில் உனக்கென உள்ள இடம் உனக்கு தெரியுமா? நான் உன்மேல் சந்தேகம் கொள்வேனா?”

அவ்வளவுதான்,கோபத்தில் வந்தவன் ஆனந்தத்தில் அழுதுகொண்டே சென்றுவிட்டான்

இதே பாணிதான் கலைஞருக்கும் இருந்தது, “தம்பி என் இதயத்தில் இடம் வேண்டாமா?” என அவர் உருக்கமாக கேட்டால் கலங்காதோர் யாருண்டு?

(ராமசந்திரன் பிரிந்தபொழுது, இருவரும் ஒருமுறை சந்தித்து பேசினால் நிலமை சரியாகும் என பலர் துடித்தனர், கலைஞர் தயாராக இருந்தார்

ஆனால் அவரை சந்தித்தால் தன் மனம் மாறிவிடும் அவர் பேச்சிலே அவரிடம் உருகிவிடும் என அஞ்சிய ராமசந்திரன் சந்திக்க மறுத்தார்..)

ஆம் கலைஞரின் அணுகுமுறை அப்படி இருந்தது

இப்படிபட்ட பக்குவபட்ட தலைவர்களால்தான் திமுக 60 ஆண்டுகளை கடந்தும், எத்தனையோ புயலடித்தும் நிலைத்து நின்றது

இப்பொழுது அப்படிபட்ட சுவாரஸ்யமான தலைவர்கள் எல்லாம் இல்லை

திமுகவிலாவது இப்படிபட்டவர்கள் அன்று இருந்தார்கள் மற்ற கட்சிகளில் என்றுமே இருந்ததில்லை..

தேர்தல் துளிகள் 07/03/2019 (1)

கலைஞர் இருந்திருந்தா “தம்பி இரு இடம் வேண்டுமா? இதயத்தில் இடம் வேண்டுமா?”னு கேட்டு உருக வச்சிருப்பாரு புள்ள‌

இவனுக இதயத்தில் இடம் வேணுமான்னு கூட கேட்கல புள்ள அதான் வருத்தமா இருக்கு…

ஆமாங்க, பால் காலியாயிட்டுன்னு கூட சொல்லியிருக்கலாம்

*********

அக்கட்சி ராமசந்திரன் காலத்திற்கே திரும்பிவிட்டது

ஆம் யார் வலுவான தலைவரோ அவர்கள் காலில் விழுவதில் என்றுமே அதிமுகவிற்கு வருத்தமே இருந்ததில்லை

இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை

********

40 தொகுதிகளிலும் தனித்து போட்டி : சரத்குமார்

கட்சியில் இருப்பது இவர் ஒருவர்தான், 39 இடங்களிலும் எப்படி போட்டியிடுவார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி

********

விருதுநகரில் ஸ்டாலின் மாநாடு

52 ஆண்டுகளுக்கு முன்னால் காமராஜரை ஒழிக்க இதே விருதுநகரில் படாதபாடுபட்ட கட்சி திமுக

இப்பொழுது அதே விருதுநகரில் காங்கிரசுக்காக உழைக்க போகின்றது

வரலாறு திரும்புவது என்பது இதுதான்

********

இந்த 40 எனும் எண்ணோடு தமிழகம் படும்பாடு மிக பெரிது

ஒருபக்கம் கிறிஸ்தவர் 40 நாள் விரதம் என படாதபாடு படுத்துகின்றார்கள்

இப்பக்கம் ஸ்டாலின் “40 நமதே நாடும் நமதே” என பேசிகொண்டிருக்கின்றார்

மோடி திடீர் ராமசந்திரன் ரசிகனாகி “நாளை நமதே நாற்பதும் நமதே” என கடும் அழிச்சாட்டியம்

திரும்பும் இடமெல்லாம் இந்த 40 இம்சை தாளவில்லை

*********

சின்னமென்னமோ தோப்பு
ஆனால் காலமெல்லாம் தனிமரம்தான்

பாபநாசம் பண்ணையாரின் பரிதாப சோகமிது

*********

“எல்லாம் இந்த பயவுள்ளையால வந்தது மக்கழே..

வாய வச்சிட்டு சும்மா இருக்கானா? எல்லா பயலும் என் வீட்டு வாசல்ல நிக்குறான்னு எகத்தாளம் பேசினான், அவனுக வச்சி செஞ்சிட்டானுக‌

அப்பன தெருவுல விட்டுட்டு இவன் நிக்குற ஸ்டைல பாருங்க மக்கழே.. .

ராமதாஸ் , கலைஞர் மாதிரி எனக்கும் பிள்ளைங்க சரியில்ல மக்கழே…

எனக்கு அவமானங்களா இருக்கு”

“ஏ மூணு முடிச்சால முட்டாள ஆனேன்
கேளு கேளு தம்பி…

நான் இருந்தேன் தேருக்குள்ள…
இப்போ விழுந்தேன் சேறுக்குள்ள…”

அவரவர் எல்லைக்குள் போராடலாமே

GobackModi எனும் கோஷம் பாகிஸ்தானில் இருந்து வரட்டும், பங்களாதேஷில் இருந்தும் வரட்டும், ஏன் அண்ட சராசர விண்வெளிக்கு அப்பால் இருந்தும் வரட்டும்

ஆனால் வோட்டு இந்திய மக்கள்தான் செலுத்த வேண்டும்,

மிக சில காலங்களை தவிர தமிழக பாராளுமன்ற முடிவுகள் மத்திய அரசை பாதிப்பதே இல்லை

ராஜிவ் காலத்திற்கு பின் மோடிகாலத்தில் அது திரும்பி விட்டது

இடைபட்ட வாஜ்பாய் காலமுதல் மன்மோகன் காலம் வரை அக்குழப்பம் இருந்தது அதில் திமுக பங்குபெற்று பலனும் வளமும் அடைந்தது

அந்த 20 வருட காலத்தில் மத்தியில் திமுக பங்குபெற்ற காலத்தில் தமிழகத்திற்கு என்ன நன்மை கொணர்ந்தது?

காவேரி தீர்ந்ததா? இல்லை ராமேஸ்வரம் சிக்கல்தான் தீர்ந்ததா?

அணுவுலையினை விரட்டினார்களா? ஸ்டெர்லைட்டை மூடினார்களா? இல்லை மீத்தேன் பூமியினை மீட்டார்களா?

ஒன்றுமே இல்லை ஆனால் அவர்கள் குடும்பத்தார் தொழில் வானளவா உயர்ந்தது

ஒன்றை உறுதியாக சொல்லலாம்

மாநில அரசியல் வேறு, இந்திய அரசியல் வேறு

தமிழக எல்லைக்கும் திமுக அதிமுக குட்டிகரணம் அடிக்கட்டும் சமூக நீதி காக்கட்டும் என்னமும் செய்யட்டும்

நாளை திமுக மாநிலத்தில் ஆட்சிக்கு வந்து மத்தியில் பாஜக வலுவாக இருந்தால் என்ன செய்வார்கள்?

ஆட்சியினை கலைத்துவிட்டு ஓடுவார்களா? அவ்வளவு மானமிக்கவர்களா?

வருங்காலத்தில் எதுவும் நடக்கலாம்

மாநில அரசு மத்தியில் இருக்கும் அரசுடன் ஒத்துழைத்தால்தான் இங்கு பெரும் நலதிட்டங்களை செயல்படுத்தமுடியும் என வாய்விட்டு சொன்னவர் கலைஞர்

இந்திராவுடன் அவர் சமரசமான விஷயம் அதுவே

அதை கலைஞர் செய்தால் ராஜதந்திரம், பழனிச்சாமி செய்தால் அடிமைத்தனமா?

தமிழ்நாட்டில் செய்ய வேண்டிய அரசியலை விட்டுவிட்டு அதாவது பழனிச்சாமிக்கு கூட்டணியாக நெருக்கடி கொடுப்பதை விட்டுவிட்டு அவரை பலம்பெற விட்டுவிட்டு சும்ம்மா மோடி மோடி என திமுக அலறுவதால் ஒன்றும் ஆகபோவதில்லை

அவரவர் எல்லைக்குள் அவரவர் போராடுவதே சரி..

பழைய காட்சிகள் திரும்பலாம்

அமெரிக்க வடகொரிய சந்திப்பு தோல்வியில் முடிந்திருக்கின்றது

தமிழ்பட வில்லன் பாணியில்” நீ என்னிடம் அடிமையாய் காலுக்குள் இருக்கணும், என்ன எதிர்த்தா என்ன ஆகும்னு உலகத்துக்கு தெரியணும்” என டிரம்ப் பேசிவிட “போடா..டேய்” என்ற ரீதியில் வந்துவிட்டார் வடகொரிய அதிபர்

வரட்டும் அவன் பழைய பன்னீர்செல்வமா வரட்டும் என்பது போல் இருக்கின்றது அமெரிக்கா

அதற்கேற்றார் போல் மீண்டும் ராக்கெட் வடகொரியா என தன் பழைய ரவுடி இமேஜூக்கு திரும்புகின்றது அந்நாடு

விரைவில் பழைய காட்சிகளை மறுபடியும் எதிர்பார்க்கலாம்

அட பழைய காட்சியினையே எதிர்பார்க்கலாம்

இதோ எங்கள் ராக்கெட், அணுகுண்டு என பழைய வீடியோவினை ஒளிபரப்பி வடகொரியா எந்நேரமும் அதிரடி காட்டலாம்

நல்ல தலைவன் தேடல்

உலக மீடியாக்கள் எவ்வளவு கரித்து கொட்டினாலும் வடகொரியாவுக்கும் கிம்முக்கான ஆதரவு சற்றும் குறையவில்லை

மக்கள் அதிருப்தி , புரட்சி அது இது என கொஞ்சமும் சத்தமில்லை

அம்மக்கள் அந்த தலைவனை கொஞ்சமும் தயக்கமின்றி ஏற்றிருக்கின்றார்கள் , அதில் மிக்க மகிழ்ச்சியும் கொண்டிருக்கின்றார்கள்

ஈரானில் அந்த புரட்சிபடை ஆட்சியினை தக்கவைத்திருப்பதும் இப்படியே

ஏதும் தடை என்றாலோ பட்டினி போட்டாலோ அம்மக்கள் பொங்கி எழுந்து அந்த அரசை மாற்றுவார்கள் என்பது அமெரிக்க கணக்கு

ஆனால் அவர்களோ அத்தலைவர்களை கைவிடுவதாக இல்லை

அதாவது ஊடகம் ஆயிரம் எழுதலாம், மக்கள் அபிமானம் என்பது வேறு

இவ்வரிசையில் ஜம்மென்று அமர்ந்திருக்கின்றார் மோடி

தமிழக பத்திரிகையும், திக திமுக கோஷ்டிகளும் ஆயிரம் எழுதினாலும் மோடிக்கான ஆதரவு தேசத்தில் குறைந்ததாக தெரியவில்லை

சுருக்கமாக சொன்னால் மோடிக்கு நிகரான தலைவன் இவரென காட்ட இங்கு யாருமில்லை

ராகுலை சொன்னால் மம்தா செருப்பை தூக்கி கொண்டு வருகின்றார், அகிலேஷை சொன்னால் மாயாவதிக்கு பிடிக்கவில்லை

சந்தடி சாக்கில் கன்னட பிரதமர் என குமாரசாமி கண்ணடிப்பதை வெறுப்பாய் பார்க்கின்றது காங்கிரஸ்

முக ஸ்டாலின் மோடிக்கு சரியான போட்டி என சொன்னால் துரைமுருகனுக்கே சிரிப்பு வரும்

ஆக ஒரு நலல் தலைவனை மோடிக்கு எதிராக நிறுத்தமுடியா சூழலில்தான் இந்திய யதார்த்தம் இருக்கின்றது

இதை சொன்னால் நாம் சங்கி…

முதலில் மோடிக்கு மாற்றாக ஒருவரை எதிர்கட்சியில் ஒருமித்து காட்டுங்கள், அதன் பின் போட்டிக்கு வரலாம்

இதென்ன அநியாயம்?

இதென்ன அநியாயம்?

இந்திய அரசை பற்றி அதன் வலுவான தலமை பற்றி சொன்னால் அதில் பாஜக மோடி பற்றி சொன்னால் நீ கிறிஸ்தவனா என ஏகபட்ட குரல்

புலிகளை பற்றி சொல்லும்பொழுது நீ தமிழனா என கேட்கபட்ட கேள்விக்கான பதில்தான் இப்பொழுதும்

ஆம், நான் இந்தியன்

ஆனானபட்ட கலாமையே நீ இஸ்லாமியனா என கேட்ட சமூகம் என்னை விடுமா?

விடாது

நான் ஒரு இந்தியன் அதை உரக்க சொல்லமுடியும்.

வலுவான தலமையாக வரட்டும், வரவேற்போம்

சாஸ்திரி, இந்திரா, ராஜிவ் வரிசையில்தான் எமக்கும் மோடியும், ஆம் தனிபெரும் தலைவர்கள் சுலபத்தில் அமைவதில்லை

மோடிக்கு சரியாக ராகுல் தனிபெரும் தலைவனாக வரட்டும், பிரியங்கா வரட்டும்

தயக்கமேயின்றி வரவேற்போம்

ஏன் உதயநிதியே தேசியவாதியாக அகில இந்திய தலைவனாக நல்ல இந்தியனாக வரட்டும்

முதல் ஆளாக வரவேற்கின்றேன் போதுமா? இன்னும் வேண்டுமா?

( அதுவும் போதாதென்றால் தனி தமிழ்நாடோ திராவிட நாடோ வேண்டுமென்று உரக்க கேளுங்கள்

ஒன்று தேசியத்தில் இருங்கள் இல்லை தனியாக செலவதில் குறியாய நிலையாய் நில்லுங்கள்

அப்படியும் செல்லமாட்டேன் இந்தியாவோடும் ஒற்றுமையாக‌ இணைந்திருக்கமாட்டோம் என்பது எவ்வகை நியாயம்?

நான் திராவிடன், தமிழன் ஆனால் இந்தியாவில் கலக்கமாட்டேன் எனபது யாருக்கு பலன் தரும்?..

உங்களின் டெல்லி அமைச்சர் பதவிக்கன்றி வேறு ஒருவருக்கும் பயன்படாது..

தகப்பன் வீட்டிலும் இருக்கமாட்டேன் புகுந்த வீட்டிலும் வசிக்கமாட்டேன் என்றால் ஒரு பெண் எத்தகையவள்?? )

நம்பியார்

அவர் இல்லாவிட்டால் அன்று ராமசந்திரன் படங்கள் இல்லை, அவர் வசூல் சக்கரவர்தியுமில்லை, பின்னாளில் முதலமைச்சருமில்லை

ராமசந்திரனை மிக சிறந்த மக்கள் திலகமாக உருவாக்கியதில் அந்த எம்.என் நம்பியாருக்கு மகா முக்கிய பங்கு உண்டு

தான் குத்து வாங்கி மிக சிறந்த குத்து சண்டை சாம்பியனை உருவாக்கும் மணல் மூட்டை போன்ற சினிமா வாழ்க்கை நம்பியாருடையது

அவர் பெயர் மாஞ்சேரி நாராயணன் நம்பியார், 13 வயதிலே நடிக்க வந்தவர்

நவாப் ராசமாணிக்கம் நாடக குழுவில் நடித்தவர் பின் எங்கெல்லாமோ சுற்றி சினிமா நடிகரனார்

கிட்டதட்ட ராமசந்திரனுக்கும் அவருக்கும் தொடக்க காலம் ஒன்றே, அவ்வளவு போராட்டம் போராடினார்கள் இருவரும்

ராமசந்திரனின் முதல் படம் ஹிட்டாகும் பொழுது அவருக்கு வயது 40ஐ தாண்டியிருந்தது, நம்பியாரும் அப்படியே, முன்பு பல படங்களில் நடித்திருந்தாலும் அவர் அறியபட்டது பிற்காலத்திலேதான்

அந்த ஆசை தெரிக்கும் கண்களும், முகத்தில் அவர் காட்டும் வில்லத்தனாம உணர்ச்சியும் அவர் சிறிய உருவமாயினும் பெரும் பெயரை பெற்றுகொடுத்தன‌

எம்ஜிஆர் படங்களுக்கு அவரை வில்லனாக அமர்த்த ராமசந்திரனே சிபாரிசு செய்த காலங்களும் இருந்தன‌

ஆச்சரியமாக ராமசந்திரன் திரையுலகில் இருக்குமட்டும் வில்லனாக இருந்த நம்பியார் அதன் பின் குணசித்திர நடிகனாக மாறினார்

கடைசி வரை நடித்தார், 2008 வரை நடித்து கொண்டேதான் இருந்தார்

கிட்டதட்ட ஆயிரம் படங்களை கடந்தவர் நம்பியார், மனோராமாவின் சாதனையினை செய்த ஒரே நடிகர் அவர்தான்

திகம்பர சாமியார் எனும் படத்தில் 11 வேடத்தில் அசத்திய காலமும் உண்டு

இந்தியில் பிரான் எனும் நடிகரை போல இங்கு பெரும் அடையாளமிட்டவர் நம்பியார்

இத்தனைக்கும் அந்தக் காலத்தில் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த வில்லன்கள் ஏராளம். அசோகன், பி.எஸ்.வீரப்பா, ஆர்.எஸ். மனோகர், ஓ.ஏ.கே. தேவர் என பலர் வந்தார்கள்

ஆயினும் தனி அடையாளமிட்டவர் நம்பியார், அவர் முன் அவர்களால் நிற்க முடியவில்லை

எவ்வளவு அற்புதமான வில்லன் நடிகர் என்றால், திரையில் அவர் ராமசந்திரனை மிரட்டும்பொழுது ராமசந்திர பக்தர்கள் திரையினையே வெட்டிய காலமெல்லாம் உண்டு

அது நம்பியார் எவ்வளவு பெரும் நடிகன் என்பதை பிற்காலத்தில் உணர்த்தியது

70 ஆண்டுகளாக இங்கு ஒரு நடிகன் நடித்தான் என்றால் அந்த பெருமை நம்பியாரை தவிர யாருக்குமில்லை

தமிழ்நாட்டு பெண்கள் சாபமிட்டே பலரை கொன்றார்கள், உதாரணமாக பாசமலர் பி.எஸ் ஞானத்தை சொல்லலாம்

அந்த படத்தின் வில்லி அவர், படம் பார்த்த பெண்கள் எல்லாம் அவரை கரித்து கொட்டி சாபமிட திருதங்கல் பக்கம் கொடூரமாக மரித்தார் பி.எஸ் ஞானம்

அது தற்செயல் என்றாலும் தமிழக பெண்கள் கொடுத்த சாபமாகவே கருதபட்டது, இன்றும் ராமசந்திரனை அதுவும் செத்து 31 வருடம் கழிந்தும் இன்றும் மோடி பாராட்டும் ராமசந்திரனை வாழ்த்தும் பெண்கள் உண்டு

ராமசந்திரன் பெற்ற புகழுக்கெல்லாம் பெண்கள் ஆசிதான் காரணம்

அப்படிபட்ட தாய்குலம் நம்பியாரை கரித்து கொட்டியது கொஞ்சமல்ல, அவர்களின் சாபத்தில் இருந்து நம்பியாரை காப்பாற்றியது சபரிமலை அய்யப்பன்

60 ஆண்டுகளாக சபரிமலை சென்ற பெரும் பக்தர் அவர்

அதுவும் ராமசந்திரன் அரசியல் காலத்தில் நம்பியார் நிஜத்தில் நல்லவர், ராமசந்திரன் நிஜத்தில் மோசம் என எதிர்தரப்பு புகையினை கிளப்ப நம்பியாரின் இமேஜ் உயர்ந்தது

சினிமாக்காரர்களுக்குரிய எல்லா பழக்கமும் நம்பியாருக்கு இருந்தாலும் , ராமசந்திரனை சரிக்க அவர் பெரும் உத்தமராக கொண்டாடபட்டார் எனினும் ராமசந்திரன் கொடி இறங்கவில்லை

இருவரும் உண்மை வாழ்வில் எதிரிகளில்லை எனினும் பெரும் நண்பர்களுமில்லை

நம்பியார் அரசியலுக்கு வருவாரா எனும் காலமும் இருந்தது, மிக மிக பின்னாளில் பாஜக அனுதாபி ஆனார்

எம்ஜிஆரை பற்றி அவர் சொன்ன வாக்கியம் குறிப்பிடதக்கது

“எம்ஜிஆருக்கு நண்பனாய் இருப்பது கஷ்டம், சதா சந்தேகபட்டே இருப்பார், ஆனா எதிரியா இருக்குறது சுலபம் அப்படின்னா சந்தேகபடவே மாட்டார்”

ராமசந்திரனின் நாடிதுடிப்பினை நன்றாகவே புரிந்து வைத்திருந்தார் நம்பியார்

இன்று அந்த மாபெரும் நடிகனின் 100ம் பிறந்த நாள்.

எந்த துறையானாலும் எதிரியின்றி வளரமுடியாது, எதிரியே ஒருவன் வெற்றிக்கு பிரதானம்

கலைஞர் எதிர்ப்பு இன்றி யார் இங்கு அரசியல் செய்திருக்கமுடியும்?

ரஷ்ய எதிர்ப்பின்றி அமெரிக்காவால் உலக அரசியல் செய்ய முடியும்?

ஏன் தெய்வமே சாத்தான் முன்னால்தான் தன் சக்தி என்ன என்பதை நிரூபிக்கும், சர்வ வல்லமை வாய்ந்த தெய்வத்திற்கே ஒரு எதிரி தேவைபடுகின்றது

நாடு, நிறுவணம், நடிகன், அரசன் என எல்லோருக்கும் ஒரு எதிரி தேவை, அங்குதான் ஒருவன் தன்னை நிரூபிக்க முடியும்

அப்படியாக ராமசந்திரன் தன்னை நிரூபிக்க அவருக்கு மாபெரும் சவால் கொடுத்த நடிகன் நம்பியார்

எம்ஜி ராமசந்திரன் எனும் மாபெரும் சக்தி இங்கு உருவானதில் நம்பியாரின் பங்கும் உண்டு

அதிமுகவினர் நன்றியுள்ளவர்கள் தர்மம் அறிந்தவர்கள் என்றால் நம்பியாருக்கும் சிலை வைக்க வேண்டும்

எம்.ராதா போல தான் நடிக்கும் வேடங்களில் எல்லாம் உடனிருப்பவரை தூக்கிவிழுங்கும் நடிகர் அவர்

சிவாஜியுடன் அவர் நடித்த படங்களை பாசமலரிலிருந்து, பாகபிரிவினை முதல் பின்னாளைய திரிசூலம் வரை மறக்க முடியுமா?

பண்பட்ட நடிப்பு, பாசபட்ட நடிப்பு, பணக்கார நடிப்பு, டானுக்குரிய நடிப்பு என பின்னியிருந்தார் நம்பியார்

அது பாகபிரிவினையானாலும் சரி, ராஜராஜ சோழனானாலும் சரி, நம்பியாரின் நடிப்பு பிரமாதமாயிருந்தது

அந்த மாபெரும் நடிகனான , தமிழகம் கண்ட மாபெரும் கலைஞனுக்கு இன்று 100ம் பிறந்தநாள்

“மதிமாறா… டேய் ராமு….ஹ்ஹ்ஹ்ம்ம் உன்னை என்ன செய்ய போகின்றேன் தெரியுமா?” என தன் கண்களை உருட்டி கையினை அழுத்தி கத்தி கொண்டிருந்த அந்த நம்பியாரை எப்படி மறக்க முடியும்?

சந்திரபாபு

கடந்த 70 வருட தமிழ்சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் வந்தார்கள், இன்னும் வருவார்கள். ஆனால் முத்திரை பதித்தவர்கள் அல்லது வழிகாட்டிகள், பல முயற்சிகளை மாற்றங்களை கொடுத்தவர்கள் மிக குறைவு. தனித்து நின்ற அந்த அடையாளங்களில் அவரும் ஒருவர்.

அதாவது தமிழ்சினிமா நடக்க கற்றுகொண்டிருந்த காலத்திலே அதனை ஒலிம்பிக்கில் ஓடவைக்கும் கனவில் இருந்தார் ஒருவர், தமிழ்சினிமா லாரியில் தட்டுதடுமாறி பயணித்தபொழுது அவரோ ராக்கெட்டில் ஏற்றும் முயற்சியில் இருந்தார்.

அவர் ஜே.பி சந்திரபாபு அல்லது ஜோசப் பனிமயதாஸ் ரோட்ரிக்கஸ் சந்திரபாபு.

தூத்துகுடியில் பிறந்த கலைமுத்து அவர், தூத்துகுடிக்கும் இலங்கைக்கும் தொடர்பு அதிகம், கொழும்பு அவருக்கு மேல்நாட்டு கலைகளை, கொஞ்சம் கலாச்சாரத்தை கற்றுகொடுத்தது

அதாவது அங்குதான் அவர் தமிழ்சினிமாவையும் மேற்கத்திய சினிமாவையும் ஒப்பிட்டுபார்க்க முடிந்தது, அது பாடலோ,நடனமோ, காட்சியோ தமிழ்சினிமாவை சர்வதேச தரத்திற்கு உயர்த்தவேண்டும் என்ற உணார்வு அங்கே அவருக்கு விதைக்கபட்டது.

அவர் நவீன ஐரோபிய மாடலில் சினிமாவில் நுழையும் பொழுது, அங்கு அரசாட்சி செய்துகொண்டிருந்தவர் “காந்தர்வகுரலோன்” தியாகராஜபாகவதர், அதாவது ஆடைகூட வேஷ்டி, அங்கவஸ்திரம்,கிராப் என 500 ஆண்டுகால தமிழக தொடர்ச்சி அவர், எங்கு திரும்பினாலும் பாகவதர்.

பாகவதர்களின் ஆட்சியில் தமிழ் சினிமாவில் ஆடைமாற்றம் கூட சாத்தியமில்லை என்பது சந்திரபாவுவிற்கு விளங்கிற்று.

அதனால் கோர்ட்,சூட், டை, தொப்பி என்ற சந்திரபாபுவின் கனவு கொஞ்சம் ஒத்திவைக்கபட்டு கிடைத்தவேடத்தில் நடிக்க தொடங்கினார்.

பல திறமைகளை கொண்டிருந்த வெகு சில தமிழ்கலைஞர்களில் அவரும் ஒருவர், அவரே பாடுவார், ஆடுவார், பாடல் எழுதுவார், ஆங்கிலபாணியில் அற்புதமாக இசைக்கும் திறமையும் உண்டு, நடிகர், இயக்குநர்,தயாரிப்பாளர் என பன்முகம் உண்டு.

காலம் மாறிய‌ 1950களுக்கு பின்னால் வேகமாக திரையுலகில் ஏறினார். அவருக்கென்று பெரும் ரசிகர் பட்டாளமும் பெருகிற்று. சில சர்ச்சைகளும் வந்தன, அதாவது கொஞ்சம் திமிர் பிடித்தவர் பாபு.

அவருக்கு இருந்தது திமிர் என்று சொல்லமுடியாது, வித்தை கர்வம் என்று சொல்லலாம். மிக திறமையானவர்களுக்கு தன் திறமைமேல் இருக்கும் நம்பிக்கை அப்படி,

அதில் டி.ஆர் ஒருவர், அற்புதமான வர்ணனை பாடல்களை கொடுத்ததில் கண்ணதாசனை போல முக்கியமானவர், இசையமைப்பார், வசனம் எழுதுவார், இன்றளவும் அவரின் “ஒரு தலை ராகம்” தமிழ் சினிமாவில் குறிப்பிடும் படம். ஆனால் இன்று “டண்டனக்கா” என சொல்லிவிட்டு நகருகின்றார்கள், யாரும் கேட்டால் அவரும் சீறுவார்,

அதாவது வித்தை கர்வம். ஆனால் எல்லா வித்தையும் தனக்கு அத்துபடி என டி.ஆர் நம்புவதுதான் சோகம்

சந்திரபாபுக்கும் வித்தை கர்வம் இருந்தது ஆனால் திரையுலகில் மட்டும் இருந்தது, அவர் காலத்தில் அவர்தான் அஷ்டவதானி, தமிழகத்தின் முதல் அஷ்டவதானி, ஆனால் அதிர்ஷ்டமில்லாதவர்.

ஒரு நடிகன் என்பவன் எல்லா வேடங்களிலும் நடிக்கவேண்டும். வாள்சண்டை மட்டுமோ? அல்லது ஒரு குறிப்பிட்ட வேடத்திற்கு மட்டும் பொருந்துபவர் நிச்சயம் சிறந்த நடிகன் என சொல்லமுடியாது.

அவ்வகையில் தமிழகம் கண்ட தனிப்பெரும் கலைஞன் எம்.ஆர் ராதா. எல்லா வேடங்களிலும் பிய்த்து உதறுவார், ஆனால் பாடல் மட்டும் வராது.

ஆனால் சந்திரபாபு அருமையாக பாடுவார், பாடலை விடுங்கள், அவரது நடனமே ஒரு வகை ஸ்டைல். இன்றும் தமிழக சிறந்த நடன கலைஞன் பிரபுதேவாவின் நடனத்தை ஓடவிட்டு பக்கத்தில் சந்திரபாபு நடனத்தை பாருங்கள்.

(இவ்வளவிற்கும் மாஸ்டர் சுந்தரம் ஒருமுறை சொன்னார், சந்திரபாபுவிற்கு நடனமே தெரியாது, சும்மா நெளிவார் அவ்வளவுதான், மிஸ்டர் சுந்தரம் யார் என்று உங்களுக்கு தெரிந்திருக்கலாம்)

ஒற்றுமை மிக அழகாக தெரியும், காலத்தால் மூத்தவர் பாபு. பாடலும், மெல்லிய நாட்டியமும் தமிழக சினிமா அடையாளம் என அறியபட்ட காலத்தில் காலத்தை மீறிய அந்த அற்புத கலைஞன் வெறும் காமெடியனாகவே அறியபட்டான்.

இதுதான் சந்திரபாபுவின் வலி, அவன் நெஞ்சில் தங்கிவிட்ட வலி. மாபெரும் கலைஞான தன்னை திரையுலகம் நகைச்சுவை கோமாளியாக மட்டும் பார்த்த வலி

உலக திரைப்பட நிலைக்கு தன்னை உயர்த்தி என்னவெல்லாமோ செய்தும், மாய திரையுலகம் செய்த சித்துவிளையாட்டுக்கள் அவருக்கு புரியவில்லை. அது அவரின் தவறல்ல, தமிழக ரசனை தவறு.

இன்னும் தமிழகம் அப்படியேதான் இருக்கின்றது என்பது வேறு விஷயம். உலக அளவில் கொண்டாடபட்டிருக்கவேண்டிய அந்த அற்புத கலைஞன் ஏன் வீழ்ந்தார், அதற்கு ஒரே காரணம் அவரின் கொள்கை, அதற்காகவே வாழ்ந்த ஒரு வாழ்வு. சுருக்கமாக சொன்னால் தென்னக தமிழக குணம்.

தனது சுயமரியாதையை விட்டு கொடுக்காத தாமிரபரணி ஆற்றுகரை மண்ணின் அடையாளம்.

ராமசந்திரன் எனும் அந்நாளைய நடிகன் சந்திரபாபுவிற்கு கொடுத்த தொந்தரவும் கொஞ்சமல்ல, காரணம் ராமசந்திரனை மிக பட்டவர்த்தனமாக கலாய்த்தவர் பாபு

ராமசந்திரன் இமேஜ் விஷயத்தில் கவனமானவர், படபிடிப்பில் தானே அதிகாரம் செலுத்தவேண்டும் என்ற ஒருவகையான சாடிஸம் இருந்தது. மிக கலகலப்பாக எல்லோருடனும் பழகி சுற்றிவந்த சந்திரபாபுவினை அவருக்கு பிடிக்கவில்லை

பழகியே அவர் முதுகில் குத்தினார் ராமசந்திரன். சந்திரபாபு ஒரு படத்திற்கு சம்பளம் கொடுக்க , சம்பளத்தை வாங்கிவிட்டு கால்ஷீட் கொடுக்காமல் சந்திரபாபுவினை அவர் அலைத்த அலைச்சல் கொஞ்சமல்ல‌

அடிமைபெண் படபிடிப்பின் பொழுது சந்திரபாபுவின் ஆங்கிலதில் ஜெயலலிதா மயங்க, அன்று கொடுக்க ஆரம்பித்த தொந்தரவு என்பார்கள். ராமசந்திரனின் தாழ்வு மனப்பான்மை அப்படி இருந்திருக்கின்றது

சந்திரபாபுவின் குணம் உள்வதை சொல்வது, இதனால் நெஞ்சில் பட்டதை நேர்பட பேசிய பேச்சுக்கள், தன் திறமையில் இருந்த அதீத நம்பிக்கை, முற்போக்கான சிந்தனை. அதனால் சர்ச்சைகளும், பிரச்சினைகளும் அவரை சுற்றியே இருந்தது.

தமிழில் சிறந்த நடிகர் யார் என்ற கேள்விக்கு “There is only one Chandra Babu, Next is Sivaji Ganesan” என்று கர்வமமாக சொல்லிவிட்டு, “ஜெமினி ஆதிகாலத்திலிருந்து ஒரே முகபாவனை அதனை மாற்றவேண்டும்” என சொல்லியவிதமாகட்டும் ,

அந்நாளைய செல்வாக்கான நடிகர் பற்றி “மிஸ்டர் எம்.ஜி.ஆரா? அவர் ஆஸ்பத்திரி கட்டுகின்றாராம், அங்கு கம்பவுண்டராக செல்லட்டும்” என சொன்ன தைரியமாகட்டும், அவர் தனித்து நின்றார்.

இப்படி பட்டவர்கள், ஜால்ரா அடித்து வாழ தெரியாதவர்கள் எப்படி சினிமாவில் நிலைக்கமுடியும்?

அற்புதமான கலைஞன் , தட்டுங்கள் திறக்கபடும் என்ற அவர் படத்தின் படத்தின் தோல்வி அவரை குப்புறதள்ளியது, உதவி கேட்டு அவர் தட்டிய கதவுகளும் திறக்கபடவே இல்லை, இதோடு அவரை வீழ்த்தவேண்டும் என்பதற்காக எல்லா கதவுகளும் மூடபட்டன.

கைகொடுத்து தூக்கிவிட எல்லோருக்கும் ஒரு தயக்கம், ராமசந்திரன் மேல் பயம் இருந்தது. எப்படிபட்ட பயம் என்றால் சின்னப்ப தேவரே தன் சொந்த சாதியான சிவாஜிகணேசனை வைத்து படமெடுக்க முடியாத அளவு ராமசந்திரனின் செங்கோல் ஆட்சி இருந்தது

கலைதாகத்தால் சந்திரபாபு துடித்துசாவதை கூட கண்டுகொள்ள யாருமில்லை, அந்த தாகம் அவரை குடியில் தள்ளிற்று.

பலமுறை தற்கொலைக்கும் முயன்றார், அந்த வழக்கு நீதிமன்ற விசாரிப்பில் தீக்குச்சியால் கையை சுட்டுகொண்டு நீதிபதியிடம் சொன்னார்.

“நான் இப்பொழுது சுட்டுகொண்டது மட்டும் உங்களுக்கு தெரியும், ஆனால் நான் இந்த தீயினால் பட்ட வேதனையை என்னால் மட்டும்தான் உணரமுடியும், எந்த சட்டத்தாலும் உள்ளத்தின் வலியை உணரமுடியாது மைலார்ட்”

இதுதான் சந்திரபாபு, அவரின் வலி அவருக்கு மட்டுமே தெரியும்.

அவர் பாடி ஆடிய ராக் அன்ட் ரோல் ( Engilsh dance one another….), குங்குமபூவே பாடலை இன்று பார்த்தாலும் டி.வி சேனலை மாற்ற தோன்றாது.

ஜனாதிபதியிடம் விருது வாங்கிவிட்டு, “இந்த பாடலுக்கு விருது கொடுத்த கண்ணா நீ உண்மையிலே ரசிகன்டா..” என்று அவரை செல்லமாக கன்னத்தில் கொஞ்சிய சந்திரபாபுவின் குறும்புதனம் யாருக்குவரும்?

பெரும் நடிகனாய் , எல்லா வித்தையிலும் கலைஞனாய் முடிசூடும் நிலைக்கு வேகமாய் வளர்ந்த நடிகன், ரத்தகண்ணீர் படத்தில் ஒரு காட்சியில் சர்ரென்று கீழே விழுவார் (டூப் இல்லாமல் அவரே விழுந்தது) அல்லவா?, அப்படியே வேகமாய் வீழ்ந்து மரணித்தபொழுது,

அந்த மகா கலைஞனுக்கு வயது 46.

இவரை விட மகளிரை மதித்த மகா நடிகனை எங்காவது பார்க்கமுடியுமா?, கணவான ஜெமினி கணேசனே கைவிட்ட பின்னரும் இறுதிகாலத்தில் சாவித்திரியை சந்தித்து ஆறுதல் சொன்ன ஒரே நடிகனான அவரை சிலர் கொச்சைபடுத்தியபொழுது அவர் சொன்னது

“ஒரு பெண்ணுக்கு தேவை பெரும் பணமோ, புகழோ அல்ல. ஆறுதலாக நாலு வார்த்தை, அதை நான் சாவித்திரிக்கு சொல்வது தவறென்றால் அது தவறாகவே இருக்கட்டும்”

அவருக்கும் திருமணம் ஆகியிருந்தது, அன்றுதான் அவருக்கு தெரிந்தது அந்த பெண்ணிற்கும் ஒரு காதல் இருந்த விஷயம். மறுநாளே அந்த பெண்ணை காதலனுடன் இணைத்துவிட்டார்.

(அந்த கதை பின்னாளில் படமாக கூட வந்து 100 நாள் ஓடியது)

பெண்ணின் உணர்வுகளை மதித்த ஒரு ஒப்பற்ற தமிழ்கலைஞன் சந்திரபாபு.

சந்திரபாபு மறக்க முடியாத கலைஞன்

தமிழக சினிமா உலகிற்கு மேற்கத்திய பாணியினை புகுத்திய முதல் கலைஞன்

சென்னை தமிழையும், லண்டன் ஆங்கிலத்தையும் அச்சுபிசறாமல் பேசும் அற்புதமான ஆற்றல் அவனுக்கிருந்தது

இன்று வரை வரும் துள்ளிசை பாடல்களுக்கும், மேற்கத்திய ஆடல்களுக்கும் அவனே முன்னோடி

இந்நாளைய பிரபுதேவாக்கள், லாரன்ஸ் இன்னும் பலர் எல்லாம் அவனையே பின்பற்றுபவர்களே, நடனத்தில் அது நன்றாக தெரியும்.

ஆடல், பாடல், நடிப்பு, நகைச்சுவை, இயக்கம் , உடை என பல பரிமாணங்களுக்கு புதிய பரிணாமம் கொடுத்தவன், அன்றே தமிழ் சினிமாவினை ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்த எண்ணிய கலைஞன்.

காலத்தை மீறி கனவு கண்ட அந்த மகா கலைஞனின் நினைவு நாள் இன்று.

“பிறக்கும் போதும் அழுகின்றான், இறக்கும் போதும் அழுகின்றான் , ஒருநாளேனும் கவலை மறந்து சிரிக்க மறந்தாய் மானிடனே” என்ற பாடலை உருக்கமாக பாடியவர் சந்திரபாபு

ஆம் அவர் வாழ்ந்த 46 வருடமும் அவர் சிரித்ததே இல்லை, எத்தனை பேரையோ சிரிக்க வைத்த அவர் வாழ்வு சோகமாகவே முடிந்தது

விண்வெளி சுற்றுலா

விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்க ரஷ்ய அரசுகள் விருப்பம் காட்டாமல் ஒதுங்குவது உலகறிந்தது, இப்போதைய தொழில்நுட்பத்தின் உச்சியில் எவ்வளவு எட்டமுடியுமோ அவ்வளவு எட்டிவிட்டோம் என ஒதுங்கி கொண்டார்கள்

ஆனால் சில விஷயங்களை விடவும் முடியவில்லை என்பதால் அமெரிக்க அரசு தனியாரை களமிறக்க பார்த்தது

ஆம் அமெரிக்காவிடம் இப்பொழுது மனிதர்கள் செல்லும் ஓடம் இல்லை, எல்லாம் பரணுக்கு அனுப்பியாயிற்று, ரஷ்யாவின் சோயுஸ் ஒன்றே இப்பொழுது நம்பகமானது

இதனால் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவணம் பல சோதனை முயற்சிகளை எடுத்தது எல்லாமே தோல்வி

இறுதியாக நேற்று சில பொம்மைகளையும் இன்னும் பல பொருட்களுடன் சோதனை ராக்கெட் ஏவியது அது சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது

முதன் முதலாக தனியார் விண்வெளி நிறுவணம் வெற்றிகொடி நாட்டியிருக்கின்றது

இது வளர்ந்து மனிதர்கள் அடிக்கடி விண்வெளி சுற்றுலா செல்லும் நாள் அருகிலே இருக்கின்றது