தென்னகத்திற்கு பல நன்மைகள் கிடைக்கட்டும்

கனிமொழி டிவிட்டரில் பனங்காட்டு படத்தை வைத்துவிட்டார், பெரியார் படத்தை எடுத்துவிட்டார் என்பதெல்லாம் புகாரே அல்ல‌

அம்மணி இப்பொழுது தூத்துகுடி பக்கம் மிக பெரும் போராட்டத்தை நடத்துகின்றது, நிச்சயம் வெல்வார்

பனைமரம் என்பது தமிழக குறிப்பாக தென் தமிழக அடையாளம்

இதுவரை தென்னகம் மிக முக்கிய அரசியல்வாதியினை பெறவில்லை, தென்னகத்தின் மந்த நிலைக்கும் பின்னடைவுக்கும் அதுவும் காரணம்

கனிமொழி தென் தமிழகத்தின் மாபெரும் அரசியல் அடையாளமாக உருவானால் அது வாழ்த்துகுரியது

அவர் அப்படி பெரும் பிம்பமாக உருவாகி வரட்டும், தென்னகத்திற்கு பல நன்மைகள் கிடைக்கட்டும்

27ம் வெள்ளிவிழாவில் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

கையெழுத்து பத்திரிகை நடத்தினார் கலைஞர், அதனை அருகிருந்தே பார்த்து உதவி வளர்ந்தார் முரசொலிமாறன்

பின்னாளில் முரசொலி என கலைஞரே எழுதி அதனை தலைச்சுமையாக சுமந்து விற்றகாலங்களிலும் உடனிருந்தார் முரசொலிமாறன்

சினிமாவில் கலைஞர் எழுத்துபுரட்சி செய்தகாலங்களில் கலைஞருக்கு அருகிலே இருந்து முரசொலி உட்பட பல விஷயங்களை கவனிக்க ஆரம்பித்தார் மாறன்

முரசொலி அரசியல் இதழானது, ஆனால் எல்லா விஷயங்களையும் கொடுக்கும் பத்திரிகை கொடுக்க ஆசைபட்ட மாறன் பத்திரிகை உலகிற்கும் வந்தார், பல பத்திரிகைகளை நடத்தினார் அவர்

குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் ஆங்கில ரீஜர்ஸ் டைஜஸ்ட்டுக்கு இணையாக தமிழில் முத்தாரம் பத்திரிகையினை நடத்தினார்,

உண்மையில் அது தகவல் களஞ்சியம். உலகம் அப்படி கொட்டி கிடக்கும்

அந்த பத்திரிகையின் இன்னொரு வடிவமாகத்தான், விஞ்ஞான வடிவமாகத்தான் பூமாலை எனும் வீடியோ கேசட் கடை மாறன் குடும்பத்தாரால் தொடங்கபட்டது

1990வரை தமிழக டிவி என்றால் பொதிகையும், இந்தியில் வரும் மண்டல ஒளிபரப்பும், இலங்கை டிவி நிலையமுமே

இக்காலத்தில் உலகெல்லாம் தனியார் டிவிக்கள் வர அதாவது பத்திரிகை உலகம் டிவி மீடியாக்களுக்கு மாறிய புதிதில் கொஞ்சமும் சுணக்கமின்றி கலைஞர் குடும்பமும் பாய்ந்தது

அதில் அன்று அமெரிக்காவில் படித்துவிட்டு வந்த கலாநிதி மாறனின் செயல்பாடும் குறிப்பிட்டு சொல்லவேண்டியது

தமிழக டிவி வரலாற்றினை சன்டிவிதான் தொடங்கி வைத்தது, முதலில் அரைமணி நேரம் பின் ஒருமணி நேரம் என கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அது வளர்ந்தது

கலைஞர் மிக பெரும் சினிமா எழுத்தாளர் ரசனையாளர் மட்டுமல்ல, நுண்ணிய பத்திரிகையாளர் என்பதால் அவரின் பல நுட்பங்களும் பத்திரிகை நடத்திய அனுபவமிருந்த முரசொலிமாறனின் பங்களிப்பும் சன்டிவியினை வேகமாக வளர்த்தன‌

அரசியல், சினிமா, பத்திரிகை பேட்டி, உலகம் என எல்லா விஷயங்களுக்குள் அன்றாடம் புழங்கிய குடும்பம் என்பதால் பத்திரிகைக்குள்ள நேர்த்தியுடனே அதனை வளர்த்தனர்

அரசியல் பேட்டி, நேர்காணல், சினிமா, இன்னபிற நிகழ்ச்சிகள் என வளர்ந்தது சன்டிவி, முக்கியமாக செய்திக்கு அவர்கள் கொடுத்த முக்கியத்துவமே தனி

கலைஞரின் முரசொலிமாறனின் பத்திரிகை அனுபவமே அதற்கு கைகொடுத்தது, குறிப்பாக வார்த்தைகள்

தொடங்கிய 3 வருடங்களுக்குள்ளே அது வளர்ந்தது, ஜெயா கைது நடவடிக்கை அவரின் சொத்துக்களை அது காட்டிய விஷயங்கள் அன்று பரபரப்பானவை

ராஜிவ் கொலையால் வெறும் 1 எம்.எல்.ஏ என்றிருந்த திமுக நிலையினை 1996ல் திமுக ஆட்சியினை பிடிக்கும் அளவிற்கு அது மாற்றிகாட்டியது

பின்னாளில் அது எத்தனையோ சேனல்களை தொடங்கியது, இன்று மாபெரும் நிறுவணமாக வளர்ந்து நிற்கின்றது

இன்று 27ம் ஆண்டுவிழாவாம் வாழ்த்துக்கள்

ஒரு விஷயம் கவனிக்கவேண்டும். சன்டிவியின் வளர்ச்சி என்பது கலைஞர் முதல்வர் என்பதாலோ மாறன் குடும்பம் அமைச்சர் பதவியில் இருந்தது என்பதாலோ அல்ல‌

மாறாக தங்களின் நீண்ட நெடிய அனுபவத்துடன் விஞ்ஞானத்தை கலந்தார்கள். மக்களின் நாடிதுடிப்பினை உணர்ந்து நிகழ்ச்சிகளை படைத்தார்கள். மக்கள் அபிமானம் அவர்களுக்கு இருந்தது

தொழில்நுட்பத்தில் கூட சன்டிவி தெளிவாக தெரியுமாறு கவனமாக இருந்தார்கள்

பணமும் அதிகாரமும் வெற்றியினை நிர்ணயிக்கும் என்றால் ஜெயாடிவி எங்கோ சென்றிருக்க வேண்டும், அதுவோ அதாள பாதாளத்தில் கிடக்கின்றது

அன்று இந்தியாவின் மூன்றாம் பணக்காரனாக இருந்தவர் விஜய் மல்லையா , ஆனால் அவரின் விஜய் டிவியினை நடத்த முடியாமல் ஸ்டார் குரூப்பிடம் கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்

இப்படி தோற்ற டிவிகள் ஏராளம், உப்புமா கிண்டும் டிவிகள் இன்னும் ஏராளம்

ஆனால் சன்குழுமம் மாபெரும் ஆலமாக வளர்ந்திருக்கின்றது என்றால் காரணம் கலைஞர், முரசொலிமாறன் என்ற ஜாம்பவான்களால் அடிதளமிடபட்ட நிறுவணம் அது.

மக்களிடம் எளிதில் செல்லுமாறு அதன் அமைப்பு உருவாக்கபட்டது

இன்று எத்தனையோ தமிழ் டிவிக்கள் வந்தாயிற்று, இன்னும் வரும்

ஆனால் அவற்றிற்கெல்லாம் முன்னோடி சன்டிவியே சந்தேகமில்லை. எந்நாளும் அதன் இடம் முதலிடம்

இப்போதைய சூழலில் அதற்கு சவால் கொடுக்கும் ஒரு டிவி கூட இல்லை என்பதே நிதர்சனம்

உண்மையில் கலாநிதிமாறன் மிகநுட்பமான வியாபாரி. டிவி பத்திரிகைக்கு அடுத்து எப்.எம் ரேடியோவிற்கும் புத்துயிர் கொடுத்தது அவரே

உலகின் மாறுதலுக்கேற்ப மீடியா உலகில் தமிழகத்தையும் இழுத்து கொண்டு செல்கின்றார்

சன்டிவி சந்தித்த சவாலும் கொஞ்சமல்ல. அதனை முடக்க தொடுக்கபட்ட வழக்குகள் ஏராளம். எல்லாவற்றையும் தாண்டி அது மீண்டு வந்தாயிற்று

சன்டிவிக்கு வாழ்த்து சொல்லும் நேரம், சில கசப்பான உண்மைகளும் கண்முன் வந்து போகின்றன‌

உண்மையில் சன்டிவியின் அடிக்கல் கலைஞர், மறுக்கவே முடியாது. அவரோ முடிந்தவரை திமுக சார்பு செய்திகளை வெளியிடும் நிறுவனமாக அதனை நடத்த செய்தார், முரசொலிமாறன் இருக்கும்வரை சிக்கல் இல்லை

ஆனால் மாறனுக்குபின் இளைய மாறன்களுக்கு டெல்லி சூனியம் வைக்க, நடக்க கூடாதது எல்லாம் நடந்தது

கலாநிதிமாறன் திமுக சார்பு எனும் நிலையினை மாற்றி பொதுவான டிவியாக மாற்ற முயன்றதில் வெடித்தது சிக்கல், கலைஞரால் அதனை ஏற்க முடியவில்லை

எந்த வயதிலும் என்னால் எந்த பத்திரிகையும் நடத்தமுடியும், எந்த டிவியும் நடத்தமுடியும் என கலைஞர் டிவியினை தொடங்கினார்

ஆனால் சன்டிவியினை வளரவிட்டது போல் அதனை விட கூடாது என அஞ்சிய சிலரின் யோசனையிலே ஸ்பெக்ட்ரம் ஊழல் இன்னபிற சிக்கல்கள் எல்லாம் வந்தன‌

இச்சிக்கல்கள் வராமல் இருந்திருந்தால், கலைஞர் 2000களிலே கலைஞர் டிவி தொடங்கியிருந்தால் இன்றைய சன்டியின் முதலிடம் சாத்தியமில்லை

தூக்கி விழுங்கியிருப்பார் கலைஞர்

ஆனால் பெரும் அனுபவமும் இன்னும் பல விஷயங்களையும் உணர்ந்த கலைஞர், தன் முதுமையான காலத்தில் சில விஷயங்களில் அமைதிகாத்தார்

விளைவு சன்டிவி அப்படியே நின்றுகொண்டது, மாறன் சகோதரர்களிடமும் மாற்றம் தெரிந்தது. அடக்கி வாசித்தனர்

டெல்லி சூனியம் புரிந்திருக்கலாம்

இந்த சர்ச்சைகளை தாண்டி சன்டிவிக்கு வாழ்த்து சொல்லியே தீரவேண்டும்

கலைஞர் குடும்பம் என்பதால் சன்டிவி வளரவில்லை, அது தொடங்கி 4 அண்டுகளில் வளர்ந்திருக்கலாம் ஆனால் அதற்கு பின்னால் கலைஞர் 1936களிலே உழைக்க ஆரம்பித்த 60 வருட உழைப்பு இருந்தது, முரசொலிமாறனின் 50 ஆண்டுகால அனுபவம் இருந்தது

இவைதான் சன்டியினை உயர செய்தன. மற்ற டிவிக்கள் எல்லாம் மண்ணை கவ்விய பொழுது சன்டிவி உயர நிற்க இதுதான் காரணம்

இவர்களுக்கு அடுத்துத்தான் கலாநிதிமாறன் எனும் அசாத்திய வியாபாரி வருகின்றார். நிச்சயம் அவரின் பிசினஸ் மூளை அபாரமானது

“முரசொலிமாறனுக்கு என்ன உண்டு? அவன் கல்லூரி காலங்களில் நான் தான் 100ரூபாய் கொடுப்பேன்.” என பல இடங்களில் சொன்னவர் ராமசந்திரன்

கலைஞரோ, முரசொலிமாறனோ அதனை மறுக்கவில்லை. அதில் உண்மையும் இருந்தது

அந்த மாறன் குடும்பம் தன் உழைப்பாலும், பத்திரிகை அனுபவத்தாலும் டிவி தொழிலில் மாபெரும் வெற்றியினை அடைந்திருக்கின்றது

இந்த 27ம் வெள்ளிவிழாவில் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

எத்தனையோ பேரை ஏற்றிவிட்ட ஏணியான கலைஞர் சன்டிவியினையும் உயர ஏற்றிவிட்டு ஓய்வெடுக்க சென்றுவிட்டார்

கலைஞர் தொட்டதெல்லாம் துலங்கியிருக்கின்றது அவரின் மிகபெரிய பூர்வ ஜென்ம புண்ணியம் அது

சன்டிவி 27 என கொண்டாடும் நாளில் அந்த மூலவரையும் பார்த்து நன்றி சொல்லவேண்டும்.

இன்று அது அவர்கள் டிவி ஆனால் திமுக எனும் இயக்கத்திற்கு அது சொல்ல வேண்டிய நன்றிகள், காட்டவேண்டிய நன்றிகள் எக்காலமும் உண்டு

அது 27 ஆண்டு அல்ல 27 ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மாற கூடாதாது

அவரையாவது சிலுவையில் அறையாமல் அந்த இனம் இருக்கட்டும்

ஓய்வுநாளில் மனிதன் ஓய்ந்திருக்க வேண்டும் என்பது கடவுள் கொடுத்த கட்டளை

அதன்படி யூதர்கள் இன்றும் சனிகிழமை அதிகம் நடக்க கூட மாட்டார்கள், இன்றும் இஸ்ரேலில் கட்ட லிப்டுகளில் கூட சனிகிழமை தானே நின்று செல்லும் லிப்டுகள் உண்டு

ஆம் பட்டனை தொட்டால் வேலையாம்

அப்படி ஓய்வுநாளை மிக நுணுக்கமாக அனுசரிக்கின்றார்கள்

இந்த கிறிஸ்தவமும் இருக்கின்றதே, இம்சைபிடித்தது. ஓய்வு நாளிலும் காலையில் எழு சர்ச்சுக்கு போ, மதியம் வரை விழுந்து கிட என பெரும் அழிச்சாட்டியம் செய்கின்றது

கர்தரின் நல்ல பக்தர்கள் என்றால் ஞாயிற்றுகிழமை வாயே திறக்க கூடாது, ஒரு அடி எடுத்து வைக்க கூடாது. ஆனால் இவர்கள் கர்த்தருக்கே பைபிள் போதிப்பவர்கள் அதனால் அப்படித்தான் இருப்பார்கள்

இன்று குருத்து ஞாயிறு வேறு

அது என்ன குருத்தோலை ஞாயிறு?

இயேசு போதித்த காலங்களில் அவர் ஹீரோ, யூத மத குருமார்கள் அவரை ஒழிக்க தேடினாலும் யூதர்கள் அவரை மீட்க வந்தவராகவே கருதின‌

இயேசு அதிரடி போதனையால் மட்டுமல்ல, குருடருக்கு பார்வை கொடுத்தல், பாவங்களை மன்னித்தல், தொழுநோயினை சடுதியில் குணப்படுத்துதல் , ஏன் செத்தவனை கூட உயிர்பித்தல் என பின்னிகொண்டிருந்தார்

அதுவரை யூத சமூகம் காணாத ஒரு வல்லமையாளாராக இருந்தார்

அவர் ஜெருசலேமில் நுழைய சில நாட்களுக்கு முன்புதான் லாசர் என்பவனை கல்லறையில் இருந்து உயிரோடு கொண்டு வந்தார், அதனால் பெரும் புகழ் பெற்றிருந்தார்

எல்லா யூதனும் பாஸ்காவில் ஜெருசலேமில் வந்து வழிபட வேண்டும் என்பது அவர்கள் சமயவிதி, அப்படித்தான் அந்த பாஸ் ஓவர் விழாவிற்காக வந்தார்

அவரை கண்ட கூட்டம் அவரை ஆலிவ் மர குருத்து இலைகளை பிடித்து வரவேற்றது

ஆம், பாலஸ்தீன கலாச்சாரபடி ஆலிவ் குருத்து என்பது சமாதானம், நல்வாழ்வின் அடையாளம், யாசர் அராபத் கூட ஐநாவில் ஒரு கையில் ஆலிவ் குருத்து மறுகையில் துப்பாக்கியாய் நின்று எதுவேண்டும் என கேட்டது குறிப்பிடதக்கது

அப்படி சமாதன‌மாக மகிழ்வாக அவரை வரவேற்றது அன்றைய யூத கூட்டம்

ஆனால் 4 நாட்களிலே இதே இயேசுவினை சிலுவையில் அறையுங்கள் என சொன்னதும் இதே கூட்டம்தான்

ஏன்?

இயேசு ஜெருசலேம் தேவாலயத்தை இடித்து 3 நாளில் கட்டுவதாக சொன்னவர் என அவர்க‌ளின் குருமார்கள் சொல்ல, உடனே இயேசுவை கொல்ல துணிந்தது இதே கூட்டம்

அவர்களின் ஜெருசலேம் கோவில் அபிமானம் அப்படி, அதற்காக அந்த இயேசுவினை கொல்ல நொடியில் துணிந்தார்கள்

இன்று யூதர்கள் எப்படி இருகின்றார்கள்?

2000ம் ஆண்டாக இந்த உலகில் சூரியன், சந்திரன் அடுத்து மாறாத ஒன்று உண்டென்றால் யூதர்களின் அதே ஜெருசலேம் கோவில் பற்று

இன்றும் அதனை கட்டத்தான் உலகோடு மல்லுகட்டி பாதி வெற்றியும் பெற்றிருக்கின்றார்கள்.

உலகெல்லாம் அடிவாங்குவார்கள், உயிரையும் இழப்பார்கள், சொத்துக்கள் நாசமானாலும் கவலையுற மாட்டார்கள்,

சம்பாதித்து கொண்டே ஓடுவார்கள்

2000 வருடமாக இப்படி ஒரு இருக்க முடியுமா என்றால் நிச்சயம் யூதர்களை தவிர யாரும் இருக்க முடியாது

இப்பொழுது ஜெருசலேமில் கிறிஸ்தவர் உண்டு, சிலுவை பாதையினை கூட இயேசு பாடுபட்ட வழியில் செய்வார்கள்

ஆனால் குருத்தோலை பவனியினை இயேசு வந்த அதே வழியில் செய்ய முடியாது, ஏன் முடியாது என்றால் அங்குதான் இருக்கின்றது விஷயம்

யூதர்களுக்கு கடவுள் கொடுத்த வாக்குறுதி படி ஜெருசலமேமின் தங்க வாசல் வழியாகத்தான் மெசியா ஜெருசலேமில் நுழைவாராம், இயேசு கடைசியாக அப்படித்தான் நுழைந்தார்

அவர் போலி மெசியா என சொன்ன யூத சமூகம் அந்த வாசல் வழியாக மெசியா வருவார் என காத்தே இருந்தது

சிலுவை போர் காலங்களில் ஜெருசலேம் இஸ்லாமிய மாமன்னன் சலாவுதீன் என்பவரிடம் பிடிபட்டது, அவர் நமது ஊர் அக்பர் போல பெருந்தன்மையான மனிதன்

ஆனால் யூதர்கள் தொடர்ந்து குடைச்சல் கொடுத்தனர், இதோ தங்க வாசல் வழியாக மெசியா வருவார், சலாவுதீனை தூக்கி போட்டு மிதிப்பார் என ஏக சாபங்கள்

மன்னன் சலாவுதீன் ஒரு அட்டகாசமான விஷயத்தை செய்தார், அந்த தங்க வாசலை அடைத்தார் பின் வந்தவர்கள் அதன் முன்னால் கல்லறைதோட்டம் அமைத்துவிட்டார்

காரணம் பிணம் மற்றும் கல்லறையினை யூதர்கள் தாண்ட மாட்டார்கள் அதுவும் அவர்களின் தூய்மையான மெசியா அப்பக்கம் செல்லவே மாட்டார்

இன்று ஜெருசலேமிலும் ஓசன்னா என கிறிஸ்தவர் குருத்தோலை தினம் அனுசரித்தாலும் யூதர்கள் மனதில் சிரித்து கொள்கின்றனர்

ஆனால் தங்க வாசலை திறந்து கல்லறை தோட்டத்தை அகற்றி மெசியா வருவதற்கு ஏன் வழிசெய்யவில்லை என கேட்டால் அந்த இனம் சிரிக்கின்றது

நாங்கள் ஜெருசலேமில் மூன்றாம் ஆலயம் அமைப்போம், அப்பொழுது கல்லறை தோட்டம் எல்லாம் தானே மறையும் சீல் வைக்கபட்ட அந்த தங்க வாசல் தானே திறக்கும் அதன் பின் மெசியா உள்ளே வருவார் என உற்சாகமாக சொல்கின்றார்கள்

அவ்வளவு வல்லமையுள்ள மெசையா தானே ஆலயத்தையும் கட்டினால் என்ன என கேட்டால் முறைக்கின்றார்கள்

நிச்சயம் அவர்கள் மெசியா வருவாராம், தங்க வாசல் வழியாக வருவாராம் இப்படி ஆலிவ் குருத்து முழங்க வரவேற்பார்களாம்

நல்லது, அவரையாவது சிலுவையில் அறையாமல் அந்த இனம் இருக்கட்டும்

அம்பேத்கர்

இந்தியாவின் ஜாதிய கொடுமைகள் தெரியவேண்டுமானால் அம்பேத்கரின் வாழ்க்கையினை ஒருமுறை படியுங்கள், காந்திக்கு சற்றும் குறையாத மாமனிதன் அவர் என்றான் ஒரு மேல்நாட்டு அறிஞர், முக்கால உண்மை ஒன்று உண்டென்றால் அந்த மனிதனின் வார்த்தைகள்தான்.

தலைவலியும்,காய்ச்சலும் மட்டுமல்ல ஜாதி ஒடுக்குமுறையும் அதில் பாதிக்கபட்டவனுக்குத்தான் தெரியும், அவர் அப்படித்தான் பாதிக்கபட்டார், அதனால்தான் அந்த சிக்கல்களை அவரால் பேசமுடிந்தது,போராடமுடிந்தது, முடிவில் சாதி இல்லா புத்தமதத்தில் இணையவும் வைத்தது.

அவர் வாழ்ந்த காலம் அப்படி, மகா கொடுமையானது. அந்த கொடுமையான காலத்திலும் அவர் படித்தார், கல்வியோடு ஜோதிராவ் புலேவின் சீர்திருத்தங்களை உள்வாங்கி படித்தார், வறுமையோடும், அடக்குமுறை சமூகத்தோடும் அவர் போராடிய போராட்டம் கொஞ்சமல்ல, தாழ்த்தபட்டவன் ஒருவேளை உணவினை நன்றாக உண்டாலே பொறுக்கா சமூகம், அவனின் கல்வியினை எப்படி ஆதரிக்கும்?

அவரது பெயர் பீமாராவ் தான், ஆனால் தனக்கு கல்வி தந்து பராமரித்த பிராமண ஆசிரியரான அம்பேத்கர் என்பவரின் பெயரை தன் பெயரோடு இணைத்துகொண்டார், மகர் எனும் தாழ்த்தபட்ட சாதியில் பிறந்த பீமாராவினை, அவனது அறிவுகூர்மைக்காக அணைத்துகொண்ட பிராமண ஆசிரியருக்காக அந்த ஏழைமாணவன் காட்டிய நன்றி இது, பின்னாளில் அப்பெயர் சரித்திரமாக மாறிற்று.

புத்திகூர்மை அவருக்கு இயல்பாய் வாய்த்தது, கல்வியில் நம்பர் 1 என தடம்பதித்த அவரை, பரோடா மன்னர் ஆதரித்தார், படித்துமுடித்து தன் சமஸ்தானத்தில் 10 வருடபணி என்ற ஒப்பந்தத்தில் அவரை மேல்நாட்டுக்கு அனுப்பினார், அங்குதான் பீமாராவ் எனும் ஒடுக்ககட்ட சாதி மாணவன், அம்பேத்கர் எனும் மாமனிதனாக அஸ்திவாரம் இடபட்டது.

பெண்ணுரிமை, சாதி இல்லா சமூகம் , சாதி பார்க்கா மதம் என அவர் இந்திய சமூக கொடுமைகளை ஒப்பிட்டு தன் நாட்டு நிலையினை எண்ணியது அங்குதான், ஒடுக்கப்ட்ட இனத்திற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என அவர் தீர்மானித்ததும் அங்குதான்.

அத்தனை பட்டங்கள் பெற்று இந்தியா திரும்பினார், ரயில்நிலையத்தில் அவரை வரவேற்க ஆளில்லை, அவர் தங்க விடுதிகொடுப்பாரும் இல்லை. பாவபட்டு இடமளித்த பார்சி கூட அவர் தாழ்த்தபட்டவர் என தெரிந்து அவரை விரட்டினார். அந்தோ பரிதாபம் குளத்தில் கைகால் அலம்பும்போது கூட மேல்சாதியினர் அவரை அடித்துவிரட்டினர்.

மெத்தபடித்த அவருக்கே அந்நிலை என்றால், மற்ற மக்களின் நிலை எப்படி இருந்திருக்கும்?

அவர் போராடினார், இந்து மதம் சாதிகளின் கூடாரம் என அறுதியிட்டு சொன்னார். அலெக்ஸாண்டர் காலம் வரை அவ்வளவு ஏன் அரேபியரின், செங்கிஸ்கானின், தைமூரின் காலம் வரை இந்து என்ற வார்த்தை எங்கே வந்தது? இந்து என்பது அவர்கள் சூட்டிய பெயரே அன்றி அப்படி ஒரு மதம் இருந்ததா? என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை.

உங்கள் கோயிலுக்குள் நாங்கள் நுழையமுடியாது, உங்கள் வீதிகளில் நாங்கள் நடக்கமுடியாது, உங்கள் உடைகளை போல நாங்கள் அணியமுடியாது, உங்கள் கிணறு எமக்கு நீர் தராது, காரணம் எங்களை தீண்டினாலே பாவம் எனும் நிலையில், நீனும் நானும் மதத்தால் ஒன்று என்றால் எப்படி? என்ற அவரின் கேள்விக்கும் இன்றுவரை பதில் இல்லை.

இஸ்லாம், சீக்கியம், ஐரோப்பிய கிறிஸ்தவம் எல்லாம் சாதி இல்லா மதங்கள், இந்து மதம் அந்த வரிசையில் வராது, உண்மையில் இந்து மதம் என்பது சமூக உட்பிரிவுகளின் தொகுப்பு என அறுதியிட்டு சொன்னபொழுது, இந்து சமூகம் அவரை நச்சுபாம்பு என்றது.

சாதிகளை ஒழிக்க வேண்டுமானால், தீண்டாமையினை ஒழிக்கவேண்டுமானால் சட்டம் இயற்றினால் போதாது மாறாக மதசீர்திருத்தம் வேண்டும் என்ற அவரின் முழக்கம் சாதரணம் அல்ல.

தென்னாட்டில் படிக்காத அம்பேத்கரான பெரியார் இதனைத்தான் சொன்னார், இந்துமதம் சீர்திருத்தபடமால் சாதி ஒழியாது.

என்னதான் விலக்கினாலும், எத்தனை விளக்குகள் வைத்தாலும் வைரத்தின் ஒளி மங்காது, அப்படி தவிர்க்க முடியாத சக்தியான அம்பேத்கர் இந்தியாவின் தலைவர்களில் ஒருவராக அடையாளம் கொண்டார், வட்டமேசை மாநாடு உட்பட பல பெரும் மாநாடுகளில் பங்குபெற்றார்.

ஒரு குடியரசு நாட்டின் ஒரே அடையாளம் அந்நாட்டின் குடியரசுக்கான சட்டதிடங்கள், அவர் காலத்தில் அதனை எழுதும் தகுதி அம்பேத்கரை தவிர யாருக்கும் இல்லை. ஒரு தாழ்த்தபட்டவனிடம் சட்டமியற்ற சொல்லி சமத்த்துவம் பேணிய இந்தியா என்பதெல்லாம் சும்மா, தவிர்க்கமுடியா தகுதி இருந்ததால் அப்பணி அவரிடம் வந்தது.

உலகின் மிக சிறந்த ஜனநாயக சட்டமுள்ள நாடு என இந்தியா உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்குமாறு அச்சட்டம் அவரால்தான் எழுதபட்டது, இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கபட்டதில் ஒரு பொருளாதார நிபுணராக அவர் பங்கு பெரிது.

இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்தபோதும் சாதி ஒழிய, இந்துமத சீர்திருத்த சட்டம் ஒன்று கொண்டுவந்தார், சமத்துவம் பேசிய நேருவால் கூட அதனை சட்டமாக்க முடியவில்லை, காரணம் நேருவினையே அசைத்துபார்க்கும் சாதிபாடு அன்று இருந்தது, பெரியார் காங்கிரசை ஒழிப்பேன் என கிளம்ப அதுதான் காரணம், அது பின்னாளிம் அம்பேத்கர் வெளியேறவும் வழிகோலிற்று.

புத்தம், ஜைனம்,சீக்கியம்,இஸ்லாம், கிறிஸ்தவம் என ஜாதி கொடுமை இல்லா மதமாக செல்லுமளவிற்கு அவர் மனம் நொந்தார், இதில் இஸ்லாம் அதிதீவிரமாக நாட்டை பிளந்து நின்றது, கிறிஸ்தவம் தொட்டால் இவன் மதமாற்றுக்காரன் என்பார்கள், சீக்கியம் சாதி இல்லை என சொன்னாலும் சில கட்டுப்பாடுகளை உடையது, மிக பொருத்தமான வழி புத்தனுடையது.

வரலாற்று ஆசிரியர் என்பதால் மிக தெளிவாக சொன்னார், புத்தன் இந்த மதத்தின் ஜாதிகொடுமைகளை எதிர்த்து தனிவழி கண்டான், அதில் வெற்றியும் பெற்றான். இந்தியா முழுக்க அல்ல கிழக்காசியா வரை அவன் கொண்டாடபட்டான், சங்கரரின் எழுச்சிக்கு முன்பு வரை சாதியில்லா புத்தமதம் இருந்திருக்கின்றது, நான் அந்த புரட்சிக்கு செல்கின்றேன் என பெரும் மக்களுடன் புத்தமதம் தழுவினார்,

பெரியார் இதனில் அதிரடி, கடவுளே இல்லை என சொல்லி கடுமையாக சாடினார். இருவருமே மறக்ககூடியவர்கள் அல்ல, சாதி ஒழிப்பு எனும் இலக்கினை நோக்கி போராடியவர்கள்.

இப்படியாக தாழ்த்தபட்ட குலத்திலிருந்து வந்து இந்திய சட்டம், பொருளாதாரம், தத்துவம், வரலாறு என சகல துறைகளிலும் தனித்து நிற்கும் அம்பேத்கர் போல் இன்னொருவர் ஒரு காலமும் இந்நாட்டிற்கு சாத்தியமில்லை.

ஆனால் இந்தியா அரசோ, காங்கிரசோ அவ்வளவு ஏன் காங்கிரசின் எதிராக உருவான ஜனதாவோ அவருக்கு கொடுக்கவேண்டிய மரியாதையினை கொடுத்தார்களா? என்றால் இல்லை. இவ்வளவிற்கும் காந்திக்கும், நேருவிற்கும் கொஞ்சமும் குறையாத இடம் அம்பேத்கருக்கு உண்டு.

ஆனால் அம்பேத்கரை தூக்கி பிடிக்க கூட வேண்டாம், அவர் பெயரினை உச்சரித்தாலே வட இந்தியாவில் காங்கிரசோ, ஜனதாவோ ஓரிடம் கூட வாங்கமுடியாது, இந்துக்களுக்கு அவர் நச்சுபாம்பு, மேல்சாதியினருக்கு தன் இருப்பினை ஆட்டிவைத்த ஒரு சாமானியன், அவன் பெருமை ஓங்ககூடாது, அவன் புகழ் வளர்தால் அது பெரும் ஆபத்து, பின் எப்படி விடுவார்கள்?

அவர் ஓரங்கட்டபட்டார், கொஞ்சம் கொஞ்சமாக மறக்கடிக்கபட்டார். காந்தி நேரு புகழ்பாடும் பாடதிட்டங்களில் ஒரு ஓரமாக இந்திய சட்டத்தை எழுதியவர் அம்பேத்கர் என ஒற்றை வரியோடு அவர் நிறுத்தபட்டார், அவருக்கான இடத்தினை இறுதிவரை காங்கிரஸ் அரசோ, ஜனதா அரசோ கொடுக்கவே இல்லை. இந்நாளைய பாஜ அரசும் அவ்வழியே.

காரணம் அம்பேத்கரினை உச்சரித்தால் அது வோட்டு வங்கியினை பாதிக்கும். அதுதான் இந்திய அரசியல், நாசமாய் போன வோட்டு அரசியல்.

1978ல் வட இந்தியாவில் ஒரு கல்லூரிக்கு அம்பேத்கர் பெயர் சூட்டவிருந்த விவகாரம் பெருங்கலவரத்தில் முடிந்து அந்த முயற்சி கைவிடபட்டது, இந்திய கல்லூரிக்கு அவர் பெயரினை விட பொருத்தமான பெயர் உண்டா? ஆனால் முடியவில்லை.

வராது வந்த மாமணியாக இந்திரா ராஜிவ் இல்லா காலத்தில், அத்வானி பாபர் மசூதியினை சுற்றி சுற்றி ஒப்பாரி வைத்த காலத்தில் ஆட்சிக்கு வந்த விபி சிங் அவர்கள் செய்யாததை செய்தார். அம்பேத்கருக்கு செய்ய வேண்டியதை செய்தார்.

1990ல்தான் இந்நாட்டிற்கு சட்டமியியற்றிய அம்மாமனிதனின் திருப்படம் பாராளுமன்றத்தில் திறக்கபட்டது, 1990ல் தால் அவருக்கு “பாரத ரத்னா” எனும் உயரிய விருதே வழங்கபட்டது, கவனியுங்கள் சுதந்திர போராளியாக, சட்ட வித்வானாக, ரிசர்வ் வங்கி உருவாக்கியவனாக, தாழ்த்தப்ட்ட மக்களுக்கு புரட்சியாளனாக உருவான அம்பேத்கருக்கு 1990ல் தான் பாரத ரத்னா.

சொல்ல விருப்பமில்லைதான், சர்ச்சைதான், ஆனால் உள்ளம் கொதிக்கும் உண்மை இது, கேமரா முன் ஒப்பனை இட்டு ஆடிய ஒரு கூத்துக்காரனுக்கு, நடிப்பினை தவிர ஏதும் தெரியா ஒரு அரசியலாதியான எம்ஜிஆருக்கு 1988ல் “பாரத ரத்னா” வழங்கபட்டது

இப்படியாக அம்மாமனிதனை இந்நாடு எப்படி எல்லாம் பழிவாங்கி இருக்கின்றது? எப்படி எல்லாம அவமானபடுத்தி இருக்கின்றது? அவன் செய்த பாவம் என்ன? ஒரே பாவம் தாழ்த்தப்ட்ட சாதியில் பிறந்தது, இன்னொரு பாவம் அதனை கண்டித்து போராடி புத்தன் வழியில் சென்றது.

விபி சிங் எனும் நல்ல பிரதமரால் அம்பேத்கருக்கு இந்த அங்கீகாரம் கிடைத்தது, பின் என்ன ஆனது? அம்பேத்காரினை கொண்டாடிய விபிசிங் அரசியிலலிருந்து விரட்டபட்டு அனாதையாய் மரித்தார். இதுதான் இந்தியாவின் மறைமுக ஆட்சி. சாதி இல்லாமல் அரசியல் இல்லை, கொள்கை, தத்துவம், சேவை, ஊழல், கொள்ளை எல்லாம் சாதிக்கு பின்னால்தான்.

இதோ தமிழக தேர்தல் களம், என்னதான் காங்கிரஸ் தேசியம், கலைஞரின் திராவிடம், பாஜகவின் காவி இந்தியா, அன்புமணியின் வளர்ச்சி தமிழ்நாடு, சீமானின் தமிழ்தேசியம் என எத்தனை கொள்கைகள் இருந்தாலும் சாதி பார்க்காமல், சாதி பலமில்லாமல் வேட்பாளர் நிறுத்தபட்டிருக்கின்றாரா? என பாருங்கள், ம்ஹூம்.

இந்த சாதி வோட்டு அரசியல்தான் அம்பேத்கரினை விரட்டியது, போராடி பார்த்துவிட்டு அவர் புத்தனிடம் சரணடைந்தார். இன்று கிறிஸ்துவத்திலும் ஜாதி புகுந்துவிட்ட கொடும் காலமிது, புத்தம் அவரின் மிக சரியான தேர்வு என்பதை காலம் நிரூபித்துகொண்டிருக்கின்றது.

சாதி கொடுமையின் வலியில் உருவானார் அம்பேத்கர், அதனால் தான் அந்த சமூகத்தின் அடையாளமாக அவர் மாறிப்போனார். இன்றும் தாழ்த்தபட்ட மக்கள் தங்கள் அடையாளமாக அவரை கொண்டாடுகின்றனர், ஆனால் அவர் வழியில் அவர் போதனைகளை ஏற்றுகொள்கின்றார்களா என்பது பற்றி நாம் பேசகூடாது.

ஆனால் இப்படிபட்ட பெரும் ஆளுமையினையே டிஸ்யூ பேப்பராக தூக்கி எறியும் சாதி வன்மம், எப்படி சாமானியவர்களை விடும், பின் கவுரவ கொலைகள், ஆணவ கொலைகள், மர்ம தற்கொலைகள் இந்த தேசத்தில் நடப்பதில் என்ன ஆச்சரியம்?

நெடுநாளைக்கு பின் அம்பேத்கர் அரசியல் இயக்கமான கன்ஷிராமின் கட்சி பிரபலமானது, ஒரு கட்டத்தில் அது ஆட்சியும் பிடித்தது, அந்த கன்ஷிராம் ஒருவரை கன்னத்தில் அடித்து அது சர்ச்சையும் ஆனது, எல்லா இந்திய ஊடகமும் அவரை சாடின, நாகரீகமில்லாதவர் என்றெல்லாம் அவரை வசைபாடின.

ஒரு மேற்கத்திய ஊடகம் மட்டும் சொன்னது, எல்லா இந்திய ஊடகமும் அடிவாங்கியர் பக்க நியாயத்தினை முன் வைக்கும் மர்மமும், கன்சிராமிடம் ஒரு வார்த்தை கூட கேட்காத மர்மத்திற்கும் ஒரே விடைதான். சுதந்திர இந்தியாவில் இன்னமும் தாழ்த்தபட்டோருக்கு என்று ஒரு செய்திதாளோ, ஊடகமோ இல்லை.

இதுதான் இந்தியாவின் இன்னொரு முகம், என்னதான் இப்பாரத நாட்டினை நாம் அம்பேத்கர் போல நேசித்தாலும், சாதி எனும் அரக்கனை ஒழிப்பதில் இன்னும் நெடுந்தூரம் செல்லவேண்டும், பெரியாரும், அம்பேத்கரும், ஜோதிராவ் புலேயும் சொன்னபடி இந்துமதத்தினை சீர்படுத்தாமல் ஜாதியினை ஒழிக்கமுடியாது.

ஆனால் நிலமை மகா விபரீதமாய் சென்றுவிட்டது, கிறிஸ்தவ மதத்திலும் ஜாதி தலைவிரித்தாடுகின்றது, கத்தோலிக்கர்களாவது போப் வந்து சொன்னால் பர்சீலிப்பார்கள், பிரிவினை வாதிகளுக்கு சாட்சாத் இயேசுநாதர்தான் வரவேண்டும், அடிக்கடி அவர்களுக்கு காக்காவலிப்பு போல் வரும் பரிசுத்த ஆவி, அந்நிய பாஷையில் சொன்னாலும் இவர்கள் சாதி ஒழிக்கமாட்டார்கள்.

மீறி சொன்னால் பைபிள் வேண்டுமானால் எறியபடுமே ஒழிய சாதி ஒழியாது, இது சமூக கூறு.

எப்படியும் சாதி முழுவதும் ஒழிய பன்னெடுங்காலம் ஆகலாம், குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறுதல் போன்ற கொடுமைகள் காலவோட்டத்தில் மறைந்தது போல, சாதியும் மறையும் வாய்ப்பு உண்டு, ஆனால் அரசியல் கலக்காது இருந்தால் சாத்தியம்.

லண்டனில் அம்பேத்கர் வாழ்ந்த வீடு உண்டு, அதனை சமீபத்தில் மஹாராஷ்டிர அரசாங்கம் ஏலத்தில் எடுத்து அம்பேத்கர் நினைவிடமாக மாற்றி இருக்கின்றது.

காரணம் அந்த வீட்டில் வசிக்கும்பொழுதுதான், இந்தியாவில் தனக்கு மிக பழக்கமாகிவிட்ட சாதி இழிவினினை மாற்றும் சாத்தியம் உண்டு என அம்பேத்கர் நம்பினார், லண்டன் வாழ்க்கை முறைபோல இந்தியாவிலும் சாத்தியம் என அவர் மனமார நம்பிக்கை பெற்ற போதிமரம் அது.

மஹராஷ்டிர அரசுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்வோம்.

தமிழகத்து அக்கட்சிக்காரர்கள் விசித்திரமானவர்கள், கை வெட்டுவது, நாக்கு வெட்டுவது, பச்சை குத்துவது எல்லாம் அவர்கள் 1972லே தொடங்கிவிட்டார்கள், 1987ல் எம்ஜிஆர் மறையும் பொழுது அவரது உடலை பெரும் புரட்சியாளன் லெனின், மாவோ, ஹோசிமின் போல அழியாமல் காக்க வேண்டும், காரணம் இவர் “புரட்சி தலைவர்” என நன்கு ஒப்பனையிடபட்ட அந்த உடல்முன் போராட்டம் நடத்தியவர்கள்.

டெல்லி அரசு மட்டும் மறைமுகமாக எச்சரிக்காவிட்டால் இன்று அந்த வீபரீதம் நடந்திருக்கும், இன்று அப்படி பாதுகாக்கபட்ட சடலத்தை எடுத்துகொண்டு தெருதெருவாக வருவார்கள். அவர்கள் அப்படித்தான் . நல்ல வேளையாக அப்படி ஒரு ஆபத்து நமக்கு வரவில்லை.

எனினும் மஹாராஷ்டிர அரசினை பின்பற்றி அமெரிக்காவின் புருக்ளின் மருத்துவமனியினை வாங்கி, “பொன்மன செம்மல் புண் ஆற்றிய இடம்..” என்று அறிவிக்கும் எண்ண்ம வராததால் கொஞ்சம் நிம்மதி. சொல்லமுடியாது, எம்ஜிஆர் அம்பேத்கருக்கு முன்னமே “பாரத ரத்னா” பெற்ற தகுதி உள்ளவர் அல்லவா?

வட இந்தியாவில் இன்றும் சுலபமாக அம்பேத்கர் பெயரினை உச்சரிக்க முடியாது, கொலை கூட விழும், தமிழகத்தில் ஓரளவு அவரை பற்றி பேசமுடிகின்றது, விவாதிக்க முடிகின்றது என்றால் அதுதான் பெரியாரின் புரட்சி அல்லது பெரும் சாதனை.

பெரியார் தமிழருக்கு என்ன செய்தார்? என கேட்கும் பதர்கள் எல்லாம் இதனை உணரமாட்டா? இந்த கேள்விகேட்கும் உரிமையினை தொடங்கி வைத்தவரே பெரியார்தான், இல்லையென்றால் வடமாநிலங்களை விட தமிழகம் பின் தங்கி சென்றிருக்கும்.

கல்வி ஒரு மனிதனை உயர்த்தும், கல்வி ஒரு மனிதனை சிந்திக்க செய்யும், கல்வி சாதியினை ஒழிக்கும், கல்வி எந்த சாதிகாரனையும் உயர்த்தும் என இப்பாரத திருநாட்டில் கை காட்டவேண்டுமானால் இருவரினைத்தான் காட்ட முடியும், ஒருவர் அம்பேத்கர், இன்னொருவர் அப்துல் கலாம்.

இன்று அம்பேத்கரின் பிறந்த நாள், இந்திய சாதிகொடுமை எவ்வளவு கொடுமையானது என்பதனை காண, அம்பேத்கரின் வாழ்வும், அவரின் போராட்டமும் பெரும் சான்று.

நெடுங்காலம் தாழ்த்தி ஆட்சி பற்றி கவலைபடாமல் அவருக்கு அங்கீகாரம் வழங்கிய விபிசிங் இந்நாட்டில் ஜாதியின்றி அரசியல் இல்லை என்பதற்கு சுதந்திர இந்தியாவின் பெரும் கால கல்வெட்டு.

மூடபழக்கமும் கணக்கு வழக்கில்லா காட்டுமிராண்டிதனமும் கொண்டிருந்த, மனிதனை மிருகத்தினை விட கீழான நிலையில் வைத்திருந்த சமூகத்தில் புரட்சி செய்து மாற்றம் கொடுத்தார் புத்தர்.

நவீன காலத்திலும் சாதி ஒழிக்க பாடுபட்ட ஒப்பற்ற போராளியும் , வன்முறை போதிக்கா அஹிம்சாவாதியும், பெரும் சிந்தனைவாதியுமான அம்பேத்கர் நிச்சயம் இந்தியாவின் இரண்டாம் புத்தன்.

சாதிபெயரால் அடக்குமுறையும் இழிவும் இங்கு இருக்குமட்டும் பெரியாரும் அம்பேத்கரும் வாழ்ந்துகொண்டே இருப்பார்கள்

மனிதகுல மருத்துவர்கள் அவர்கள்

பேரரிஞனும் சட்ட மேதையும், மாபெரும் மனிதாபிமான போராளியுமான அம்பேதருக்கு ஆழந்த அஞ்சலிகள்.

காலண்டர் தோன்றிய விஷயங்கள்

இந்த புத்தாண்டு விஷயமாக பல விஷயங்களை படிக்க முடிந்தது, அதில் காலண்டர் தோன்றிய விஷயங்களும் இருந்தன‌

தொன்மையான நாட்காட்டிகள் கொண்ட நாடுகளில் இந்தியாவும் சீனாவும் ஒன்று, அப்படியே கிரேக்கமும் ஒன்று

கிழக்கையும் மேற்கையும் முதலில் இணைத்தவன் அலெக்ஸாண்டர், இந்திய அறிவார்ந்த விஷயங்களை பெற்றும் கொண்டார்கள், இந்திய தொடர்பு ஏற்பட்டபின் கிரேக்கர்களின் கணிதம் உட்பட பல அறிவுகள் மாற்றம் பெற்றன

பல இந்திய நடைமுறைகளும், வார்த்தைகளும் ஐரோப்பாவிற்கு சென்றது

ரோமர்கள் எழும்பி கிரேக்கர்களை ஒடுக்கி வல்லரசான பின் ரோமர் சொன்னதே உலக சட்டம் ஆயிற்று

கிரேக்கரிடம் இருந்து ரோமர் பல விஷயங்களை பெற்று அதில் மாற்றம் செய்தார்கள், எல்லா ரோமானிய நாகரீக மாற்றங்களுக்கும் அடிப்படை கிரேக்க முறையே..

அப்படித்தான் அவர்கள் காலண்டரையும் உலகிற்கு தந்தார்கள், அவர்கள் தந்தார்களே அன்றி அதன் உண்மை பெயர்கள் இந்திய சாயலிலே இருக்கின்றன‌

சில பெயர்கள் தேவதைகள் பெயரிலும், சில மாதங்கள் இப்படி மன்னனுக்காகவும் கிரேக்கராலும், ரோமராலும் மாற்றபட்டன..

ஆயினும் இன்னும் பல மாதங்களுக்கு இந்திய சாயல் பெயரே உண்டு

உதாரணம் ஜனனம் என்றால் பிறப்பு என்று பொருள், ஜனனம் என்ற வார்த்தையே திரிந்து ஜனவரி ஆகியிருக்கலாம் என்கின்றார்கள்,

அது வருட பிறப்பாகவும் ஆண்டு தொடக்கமாகவும் ஆயிற்று

இன்னும் சில மாதங்கள் அவர்கள் மன்னனுக்காக மாற்றபட்டது குறிப்பாக அகஸ்டஸ் சீசரின் பெயர் ஆகஸ்டு மாதமாகவும், ஜூலியஸ் சீசரின் பெயர் ஜூலைக்கும் சூட்டபட்டது அதன் பழைய பெயர்கள் தெரியவில்லை

கிரேக்க நாட்காட்டி 10 மாதங்களை கொண்டது, ஆனால் 35க்கும் மேற்பட்ட நாட்கள் இருந்திருக்கின்றன‌.

(சந்திர சுழற்சியினை கொண்டு அல்லாமல் வேறு நட்சத்திர குறியீடுகள் மூலம் அவை அமைக்கபட்டிருக்கலாம் என்பார்கள்)

அதில் பெரும்பாலும் இந்திய வழக்கு பெயர்களே நிலைத்திருக்கின்றன‌

அதில் ஏழாம் மாதத்தை சப்தம் என அழைத்திருக்கின்றார்கள்

சப்தம் என்றால் 7 என பொருள், சப்தரிஷிகள் என்பது அதில் இருந்தே வந்தது

8ம் மாதத்தை அக்டோ என்றே அழைத்திருக்கின்றார்கள்

அஷ்டம் என்பது அக்டோ என திரிந்திருக்கலாம், அஷ்டம் என்றால் 8 என பொருள், அஷ்ட லட்சுமி என்றால் புரியும்

ஒன்பதாம் மாதத்தை நவம் என்றே அழைத்திருக்கின்றார்கள், நவரத்தினம், நவதானியம் என 9 வகைகளை சொல்வார்கள் அல்லவா?

நவம் என்றால் 9 இன்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் நவநாள் என்பதன் மூலம் இதுவே

பத்தாம் மாதத்தை தசம் என்றே அழைத்திருக்கின்றார்கள்

தசம் என்றால் 10

இன்றும் சில கிறிஸ்தவ சபைகள் கழுத்தில் கத்தி வைத்து தசமபாக காணிக்கை வாங்குவதே அதற்கு சாட்சி

ரோமரின் நாட்காட்டி 12 மாதங்களாக கொண்டு ஜூலை, ஆகஸ்டு என கூடுதலாக இரு மாதங்கள் சேர்க்கபட்டாலும் கிரேக்கரின் சப்தம் எனப்படும் 7ம் மாதம், ஆக்டோ எனப்படும் எட்டாம் மாதம், நவம் எனப்படும் ஒன்பதாம் மாதம், தசம் எனப்படும் 10ம் மாதத்தின் பெயரை மாற்றவில்லை

காரணம் அவற்றின் மூலபெயர் ரோமானியருக்கு தெரிந்திருக்கவில்லை, அப்படியே விட்டுவிட்டார்கள்

லத்தீன் திரிபில் அது செப்டம்பர் அக்டோபர், நவம்பர் , டிசம்பர் என ஆகிவிட்டது

ஆழகவனித்தால் இந்தியாவின் பண்டைய நாட்காட்டியின் சாயலை கிரேக்கர்கள் பயன்படுத்தியிருக்கலாம், சில மாற்றங்கள் செய்திருக்கலாம்

பின் ரோமர் அதில் பலமாற்றங்களை செய்து இன்றைய காலண்டர் வந்திருக்கலாம்

அதில் ஜனனம், சப்தம், அஷ்டம், நவம், தசம் என்ற மூல வார்த்தைகள் அதில் இருப்பதை மறுக்க முடியாது.

இந்த உலகளாவிய இன்றைய நடைமுறை காலண்டரிலும் இந்திய பங்களிப்பு இருந்திருக்கின்றது என்பதை அறிய முடிகின்றது

இதை நன்றாக கவனியுங்கள்

தமிழருக்கும் சீனருக்கும் வருடபிறப்பு தைமாதமே வரும் அந்த பண்டைய இனங்கள் அப்பொழுதுதான் கொண்டாடியிருக்கின்றன‌

இது பின்னாளில் இந்திய பாரம்பரியமாகி வருட ஜனனம் அதாவது வருட பிறப்பு என அம்மாதத்தைதான் கொண்டாடியிருகின்றார்கள்

அப்படித்தான் அது ஐரோப்பாவுக்கு கடத்தபட்டு ஜனனம் எனும் ஜனவரிமாதம் வருட தொடக்கமாயிற்று

பல வகையில் பாருங்கள், தமிழருக்கும் வருட பிறப்பு தை மாதமே, ஜனவரி அல்லது ஜனனம் எனப்படும் மாதமே ஒரு காலத்தில் இந்தியா முழுக்க புத்தாண்டாக அமைந்திருந்தது என்பது புரியும்

தை மாதமே தமிழர் புத்தாண்டு

தமிழர் புத்தாண்டு சித்திரையிலா பங்குனியிலா என்ற விவாதம் எந்நாளும் உண்டு, அதில் தமிழரின் வரலாற்றையும் அதன் தொன்மையினையும் புரட்டினால் தை மாதமே தமிழர் புத்தாண்டு

தை என்ற சொல்லுக்கு நாற்று அல்லது தொடக்கம் , முளை என்றுதான் பொருள், இன்றும் தமிழின் மருவிய மொழியான‌ மலையாளத்தில் அந்த வார்த்தை உண்டு

தமிழர் அன்றே வானியல் அறிவு கொண்டிருந்தனர், 12 ராசிகளும் நட்சத்திரங்களும் தெரிந்திருந்தன. தமிழர் காலண்டர் சந்திர அடிப்படையிலானது சீனர்களை போன்றது

மாதம் என்பதே தமிழ்பெயர் அல்ல, திங்கள் என்றுதான் அழைத்தார்கள், சந்திரனின் பவுர்ணமி டூ பவுர்ணமி கணக்கு

இப்படி மாதத்தை பிரித்த தமிழகம், ஏழு நாட்களுக்கும் ஏழு கிரகங்களின் பெயரைத்தான் சூட்டியும் இருந்தது, ஒரு நாளை கூட காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை என 6 சிறுபொழுதாக பிரித்தார்கள், ஒவ்வொரு பொழுதும் 4 மணி நேரம், மொத்தம் 24 மணி நேரம். தமிழர் நாழிகை என்றார்கள்

வருடத்தை பெரும்பொழுது என பிரித்தார்கள் இளவேனில் முதுவேனில் என‌ 6 பாகமாக பிரித்தார்கள். சக ஆண்டு , கொல்லம் ஆண்டு என தமிழருக்கு ஆண்டு கணக்கும் இருந்தது, அவை எல்லாம் தமிழர் கணக்குகள், ஆனால் சில குறைகளும் அதில் இருந்தன.

சந்திர நாட்காட்டியின் படி ஆசிய இனங்கள் கொண்டாடிகொண்டிருந்த தை வருடபிறப்பையே தமிழகமும் கொண்டாடியது

மகர ராசியில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி செல்லும் சூரியனை வணங்கி அவர்கள் வருடத்தை தொடங்கினார்கள் என்கின்றது தமிழர் இலக்கியம்.

வருடா வருடம் ஐயப்பன் ஜோதி என ஒன்றை வணங்குகின்றார்கள் அல்லவா? அதன் ஆரம்பம் இதுவே

தை பூசம் தமிழ்கடவுள் முருகனுக்கானது என தை மாதம் வருட தொடக்கத்தில் வைத்து கொண்டாடிய விஷயமும் கவனிக்கதக்கது

இப்படி ஏக சான்றுகள் கிடக்கின்றன,தமிழ் இலக்கியம் முதல் பாடல் வரை நிரம்ப கிடகின்றது .

ஏன் போகி என்பதே போக்கி, போக்குதல், போகும் பண்டிகை என்ற பெயரில்தான் வரும். ஒரு வருடம் முடிந்து போகின்றது என கொண்டாடபடுவதுதான் போகி.

பின் எங்கே குழப்பம் வந்தது என்றால் ஆரிய வருகைக்கு பின்

சில மேற்கத்திய இனங்களின் நாட்காட்டி சூரிய அடிப்படையிலானது, சூரியன் மேஷத்தில் நுழையும் சித்திரை மாதம் அவர்களின் தொடக்கம், இன்னும் மாதம் ஒருமுறை எந்த நட்சத்திரத்தில் பவுர்ணமி வருமோ அந்த நட்சத்திரத்தை அவர்கள் மாதத்தின் பெயராக்கினார்கள்

அதற்கு முன்பு தமிழரிடை நட்சத்திர கணக்கே மாதம் ஆனது, கவனியுங்கள் உங்களுக்கே புரியும். சித்திரை பவுர்ணமி சித்திரை நட்சத்திரம், வைகாசி விசாகம், ஆவணி அவிட்டம், புரட்டாசி பூரட்டாதி , தை பூசம் கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரம் பங்குனி உத்திரம், மாசி மகம் என பலவற்றை காணலாம்

60 வருட ஜாதக சுழற்சியும் தமிழரிடை இருந்தன, அந்த தமிழகத்தில் வானியல் அறிவும் இருந்தது

பின்னாளில் ஏதோ ஒரு காலத்தில் எல்லாம் மாறிற்று, விசாக மாதம் வைகாசி ஆனது பூரட்டாதி புரட்டாசி ஆனது, அவிட்டம் ஆவணி ஆனது

அப்படியே விஷ்ணுவிற்கும் நாரதருக்கும் 60 குழந்தை பிறந்தது என்ற கட்டுகதையும் வந்தது, பின் தமிழ் புத்தாண்டும் சித்திரைக்கு மாறியது

காலண்டர் எப்படி வந்தது?, இந்த காலண்டர் முறைகளில் சில விஷயங்கள் உண்டு

அதாவது பருவநிலைகளை கணிக்கத்தான் காலண்டர்கள் உருவாயின, எப்பொழுது மழை பெய்யும், எப்பொழுது விதைக்கலாம், எப்பொழுது அறுக்கலாம் என சொல்ல அக்கால மக்களுக்கு ஒரு அட்டவணை தேவை இருந்தது

எல்லா இனங்களும் அப்படி வகுத்தன, சில இனங்கள் நிலாவினை வைத்து நாட்களை கண்க்கிட்டு மாதம் என்றன, சில இனங்கள் சூரியனை வைத்து பிரித்தன‌ மாதங்கள் வருடங்களாயின, நட்சத்திர கூட்டத்தால் வருடங்கள் அடையாளமிடபட்டன,

இந்த காலண்டர்களால் அவர்கள் விவசாயம் செழித்தது, ஆற்று வெள்ளகாலங்கள் கணக்கிடபட்டன, பல நன்மைகள் விளைந்தன‌

ஆசிய இனங்கள் நமது தைமாதம் முதல் தேதி என சொல்லியிருந்தன, சீன, தமிழ் என இப்பகுதி காலண்டர் அப்படித்தான் இருந்தது, இன்றும் சீன புத்தாண்டு ஜனவரி மாத கட்சியில்தான் வரும்

இது ஆசிய பக்கம்,

ஆனால் ஐரோப்பா பக்கம் வித்தியாசமாக இருந்தது, சூரிய காலண்டரை பின்பற்றுபவர்கள், எகிப்தியர்களுக்கு இந்த ஏப்ரல் சமீபம் புத்தாண்டு இருந்திருக்கின்றது, அப்படி ஒரு கொண்டாட்டத்தில் எகிப்தியர் இருந்தபொழுதுதான் யூதர்கள் தப்பியிருக்கின்றார்கள், அது பாஸ்கா ஆயிற்று, யூதர் அதனை இஸ்ரேலில் விமரிசையாக இன்றும் கொண்டாடுவர், அப்படி ஒரு பாஸ்கா விழாவில் யேசு கொல்லபட்டார்

ஆக பெரிய வெள்ளி இக்காலகட்டத்தில் வரும் உண்மை அதுவே

இப்படி ஒரு பக்கம் தை மாதமும் இன்னொரு பக்கம் சித்திரை வாக்கிலும் கொண்டாடிகொண்டிருந்தார்கள், இதில் சிலர் கொண்டாடியது தென் கிழக்கு ஐரோப்பிய‌ வழக்கம்..

சில கால மாற்றங்களில் இங்கும் ஏப்ரல் வாக்கில் புத்தாண்டு என பாடம் எடுத்தார்கள், அப்படி தென்னிந்தியாவில் சித்திரை மாதம் புத்தாண்டு என புகுத்திவிட்டார்கள், அது மலையாள,கேரள, கன்னட, தெலுங்கு, சிங்கள இனங்களிலும் பரவிற்று

சுருக்கமாக சொன்னால் இந்துமதம் இருந்த இடங்கள் எல்லாம் பரவிற்று கிழக்காசியாவில் சில முன்னாள் இந்துமத நாடுகளை கூட அது பாதித்தது

அது பின்னாளில் இந்துமதம் இருக்கும் இடமெல்லாம் மாறிற்று வங்காளத்தில் கூட மாறிற்று,

ஆரிய‌ ஆதிக்கம் இருக்கும் இடமெல்லாம் இப்படித்தான் மாறிற்று. வங்காளத்தில் கூட மாறிற்று

இந்திய இனங்களின் புத்தாண்டு ஏப்ரலுக்கு மாற, அவர்கள் புகாத சீனா அதன் போக்கில் தை மாதம் ஒட்டியே கொண்டாடியது, இன்னும் கொண்டாடுகின்றது

ரோம் அரசாங்கம் எழும்பிய பின் பல விஷயங்களை கொடுத்தார்கள், மைதானம், சாலை, பார்லிமெண்ட் என பல விஷயங்களுக்கு அவர்கள் முன்னோடி, ஜூலியஸ் சீசர் ஐரோப்பிய அரசனாகி ஜூலியன் காலண்டர் கொடுத்தான்,

காலன்டே எனும் லத்தீன் வார்த்தைதான் காலண்டர் ஆயிற்று

அது கிரேக்கர்களின் கடவுளான ஜானுஸ் என்பவரை குறிக்கும் ஜனுவரி எனும் மாதம் முதல் மாதமானது, உண்மையில் ஜனனம் எனும் வார்த்தையின் மருவே ஜனவரி

ஜனனம் என்றால் தொடக்கம் என்றே பொருள், புத்தாண்டு அப்பொழுதுதான் அங்கு தொடங்கி இருக்கின்றது, அதாவது தை மாத சாயல்

கிரேக்கத்தில் நம் தைமாதம் போலவே புத்தாண்டு பிறந்தது, அவர்கள் ஜனவரி என கொண்டாடினர்,

(சீன புத்தாண்டு இன்னும் தை மாதமே)

கிரேக்க காலண்டரை ஜூலியஸ் சீசர் மாற்றி அமைத்தாலும் தொடக்க மாதத்தை மாற்றவில்லை.

பின் வந்த போப் கிரகோரியின் கிரகோரியன் காலண்டரிலும் அம்முறை தொடர்ந்தது

கிரகோரி மாதங்களின் நாட்களை மாற்றி அமைத்தார், போப் உலக அரசர் என்பதால் உலகெல்லாம் கிரகோரியன் காலண்டர் பொதுமறை ஆயிற்று

ஒரு விஷயம் உண்மை கிரேக்கம் இந்தியரின் நாள் காட்டியினையே பின்பற்றி தனக்கு வகுத்தது

அதாவது ஒரு காலத்தில் தமிழரை போல வட நாட்டவருக்கு ஜனவரியே வருடபிறப்பாக இருந்திருகின்றது, அதில் இருந்துதான் கிரேக்கம் எடுத்தது

ஆக வருடபிறப்பு என்பது தமிழர்களுக்கு உள்ளது போல தைமாதமே உலகெல்லாம் கொண்டாடபட்டிருக்கின்றது, சீனர்களும் அந்த காலகட்டமே தொடங்குகின்றார்கள்

இன்னும் பார்க்க போனால்

அதாவது மிக பழமையான காலங்களில் எது அறுவடை காலமோ, அதுதான் புத்தாண்டு காலமாக இருந்திருக்கின்றது, அதிலிருந்துதான் தொடங்கியிருக்கின்றார்கள்

இன்று கலாச்சார தொன்மைமிக்க‌ பஞ்சாபியர் பைசாகி எனும் அறுவடை திருவிழா கொண்டாடுவதே அதன் சான்று..

பண்டைய கலாச்சாரம் எல்லாம் அப்படித்தான் இருந்திருக்கின்றன, பெரும் உதாரணம் இந்த ஈஸ்டர் பண்டிகை கூட ஒருவித அரேபிய விழா, இயேஸ்டர் எனும் தேவதையின் நாளை கொண்டாடும் வசந்த விழா, இரவும் பகலும் சமமான நாளில் வரும் விழா

பின்னாளில் கிறிஸ்து உயிர்த்த பண்டிகை என மருவிவிட்டது, உண்மையில் ஈஸ்டர் எனும் பெயர் பைபிளில் இல்லவே இல்லை, ஆனாலும் ஈஸ்டர் கொண்டாடுவான் அல்லவா? அவன் தான் கிறிஸ்தவன், எதை சொன்னாலும் நம்பிகொள்வது.

அப்படி ஏதோ ஒரு சமூகம் கொண்டாடி கொண்டிருந்த ஈஸ்டர் எனும் விழாவில், ஏய்ய்ய் இது கிறிஸ்து உயிர்த்தநாள் என திணித்து அது உலகெல்லாம் ஈஸ்டர் ஆயிற்று, எல்லாம் கிறிஸ்தவ மாயம்..

சீன புத்தாண்டு ஜனவரி மாதமே வரும், தமிழ்புத்தாண்டும் தமிழரின் அறுவடையான தைமாதமே புத்தாண்டு

யூதர்களுக்கும் அவர்களின் சாயலான இஸ்லாமியருக்கும் இப்போதுள்ள செப்டம்பர் அல்லது அக்டோபரில் வரும், உலகெல்லாம் இப்படி ஆளுக்கொரு புத்தாண்டு கலாச்சார அடிப்படையில் இருந்திருக்கின்றது,

பின்னாளில் போப் தொன்மையானது ஜனவரிமாதமே என வல்லுனர்கள் மூலம் அறிந்தார், அவர்கள் காலண்டர் சூரிய அடிப்படையிலானது அதனால் ஜனவரி 1ம் மாதம் புத்தாண்டு ஆனது

தமிழர் காலண்டர் சீனர்களை போல சந்திர அடிப்படையிலானது அதனால் தைமாதம் புத்தாண்டு வரும்

ஆக தமிழ்புத்தாண்டு மிக தொன்மையாக தைமாதம்தான் வரும், இது காலம் காலமாக இருந்த விஷயம், கலைஞர் தொடங்கியது அல்ல..

தை மாதம் தான் தமிழ்புத்தாண்டு என்பது 1800களிலே தமிழரிஞர்கள் சிந்தித்த ஒன்று, அப்படி ஒரு ஆய்வு இருந்துகொண்டே இருந்தது

பின்பு வந்த மறைமலை அடிகள் போன்றவர்கள் அதில் தீவிரமாக இருந்தனர், அதாவது தைமாதம் தமிழருக்கு புத்தாண்டாக இருந்தது, பின்பு வந்த ஆரிய கலப்பில் அது சித்திரைக்கு மாற்றபட்டது என சொன்னார்

அவரோடு அந்த கூட்டத்திற்கு வந்த 500 தமிழ் அறிஞர்களும் சொன்னார்கள், அவர்கள் இன்றைய அதிமுக அமைச்சர்கள் போன்றவர்கள் அல்ல, மாறாக தமிழக வரலாற்று அறிஞர்கள்

தமிழரின் சக குடிகளான கேரளம், தெலுங்கு, சிங்களம் என எல்லோருக்கும் சித்திரை மாதம் ஆரியர்களால் தொடக்கமாயிற்று மற்றபடி தமிழருக்கு தை மாதமே வருட தொடக்கம் என சொல்லி, இனி திருவள்ளுவர் ஆண்டு என ஒரு முறை கொண்டுவருவோம் என்ற முடிவிற்கு வந்தார்கள்

அது ஆரியர்களா இல்லை வேறு கால குழப்பமா என தெரியா நிலையில் பிராமணர் மேலே பழி விழுந்தது

தமிழ் கலாச்சாரம் போற்றும் யாழ்பாணத்தார் என்ன செய்தார்கள்?

வெள்ளையன் ஜனவரி 1 புத்தாண்டு எனும்பொழுது தை 1ம் அதுவே என தலைகீழாக மாற்றிவிட்டார்கள், ஏன் அப்படி என்றால்? அவர்களின் வெள்ளையன் விசுவாசம் அப்படி இருந்திருக்கின்றது

அவர்கள் காலண்டர் படி தை மாதம் 1ம் தேதி புத்தாண்டு வெள்ளையனோடு கொண்டாடபடும்

அதனை அறியா இந்த தமிழக பதர்கள்தான் மே 17 என்பதை பங்குனி 17 என்றும், நவம்பர் 27 என்பதை கார்த்திகை 27 என்றும் தமிழகத்தில் கொடிபிடிக்கின்றன‌

பங்குனி 17 என மே 17ஐ சொல்ல முடியுமா? என்றால் முடியாது, ஆனால் இந்த திடீர் தமிழர்களுக்கு என்ன? எல்லாம் செய்வார்கள்.

ஆக உலகின் தொன்ம குடிகள் என்று புத்தாண்டு கொண்டாடுகின்றன, மாயன், சீன, புத்தாண்டினை போல தமிழ் புத்தாண்டும் தைமாதம் தான் வரும்

கிரகோரி காலத்திற்கு பின் ஏப்ரலில் புத்தாண்டு கொண்டாடிய ஐரோப்பியர்களை கிண்டல் செய்துதான் முட்டாள் தினம் என்றார்கள்

அப்படி நாமும் முட்டாள்கள் அல்ல என்பதைத்தான் கலைஞர் தை முதல் தேதி தமிழர் புத்தாண்டு என்றார்

அது உண்மையும் கூட, காலண்டர்கள் வரலாறு அதனைத்தான் சொல்கின்றது

இப்படி வல்லுனர்கள் சொன்னதைத்தான் பின் கலைஞரும் தமிழ் புத்தாண்டு தைமாதம் என்றார், அறிவிக்கவும் செய்தார்

இன்னும் ஆழமாக சொல்லி இருக்கலாம், ஆனால் அதற்கு நட்சத்திர கணக்கு, வானவியல் கணக்கு மகர ராசி, சூரிய நகர்வு உட்பட பல விஷயங்களை சொல்ல வேண்டும்

அப்படி சொன்னால் தமிழரிடை ஜாதக அறிவு இருந்ததை ஒப்புகொண்டதாகிவிடும், அது திராவிட பகுத்தறிவுக்கு முரணானது என்பதால் அந்த அடிப்படை ஆதாரங்களை அவர்கள் தவிர்த்தார்கள் பகுத்தறிவு சிங்கங்கள்

அதனால் மென்று விழுங்கி, மறைமலை அடிகள் சொனதின் ஆதாரங்களை மறைத்து மேலோட்டமாக தமிழர் புத்தாண்டு தை என சொல்லிவிட்டார் கலைஞர். எப்படி ஆயினும் அது வரவேற்க தக்கதே

ஆனால் தமிழக சாபக்கேடான அதிமுகவின் ஜெயலலிதாவிற்கு அது உறுத்திற்று, அக்கட்சியின் நிறுவணரான ராமசந்திரனுக்கோ, ஜெயலலிதாவிற்கோ சுய அறிவு என்பதோ, இனபற்று என்பதோ கொஞ்சமும் கிடையாது

அதிலும் ஜெயா சுத்த மோசம், நடராஜனும் சசிகலாவுமே தெய்வங்கள் என நம்பியவர் அவர்

இல்லை மறுபடியும் சித்திரை 1 தமிழ்புத்தாண்டு என்றார், மேஷ ராசி முதலாவது அதில் சூரியன் நுழையும் சித்திரை வருட பிறப்பு என ஆரியவாதம் பேசினார், சர்ச்சைகள் வெடித்தன.

அது கட்சியின் குற்றம், கருவின் குற்றம் அவர் என்ன செய்தாலும் எதிர்த்தே செய்யவேண்டும் எனும் குதர்க்கம்

கலைஞர் சொன்னார், தமிழன் வைகரை முதல் நடுசாமம் வரை தமிழில் வகுத்தவன், இளவேனில் முதல் பின்பனி வரை காலம் பிரித்தவன். அவனுக்கு தை முதல் மாசி வரை வருடம் இருந்தது, இந்த 60 ஆண்டுகால முறை ஆரியர்கள் புகுத்தியது, தமிழன் ஒரு வருடம் முடிந்தால் அடுத்தவருடம் தொடர்வான், இந்த 60 ஆரிய பெயர்களின் வருடமெல்லாம் அவனுக்கு இல்லை என சொல்லிபார்த்தார்

எப்படி கேட்பார் ஜெயா?. அறிவில் சிறந்த பரிவாரங்களோடு ஆடினார்

கலைஞர் தனக்கே உரித்தான நகைச்சுவையுடன் சொன்னார், “தை மாதம் தமிழ்புத்தாண்டு என்றால் தைதை என குதிக்கின்றார் அம்மையார்”

கலைஞரும் ஓய்ந்தாயிற்று

ஆனால் உண்மைகள் ஓய்வதில்லை, தைமாதமே தமிழர் புத்தாண்டு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி, ஆரிய கலப்பற்ற தொன்மை இனங்கள் அப்பொழுதுதான் புத்தாண்டு கொண்டாடுகின்றன‌

ஆயினும் மன நம்பிக்கைபடி பாரம்பரியபடி சித்திரை பிறப்பே தமிழ்வருட பிறப்பு என கொண்டாடும் அன்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்

அனைவரும் எல்லா வளமும் நலமும் பெறவும், நல்ல தலைவர்கள் வந்து நாட்டை வழிநடத்தவும் தலைவியோடு சேர்ந்து நாமும் பிரார்த்திப்போம்..