பெரிய வியாழன்

இன்று பெரிய வியாழன் , அதாவது இயேசுபிரான் தான் மரணிக்கபோவதை உணர்ந்து தன் சீடர்களுக்கு பிரியாவிடை கொடுத்த நாள்.

அன்று தன் கடைசி நாளில் சீடர்களின் கால்களை தானே கழுவினார், அப்படி இன்று கத்தோலிக்க ஆலயங்களிலும் அச்சடங்கு நடக்கும், போப் ஆண்டவரே தன் சீடர்களின் பாதங்களை கழுவுவார்

கடைசி பிரியாவிடையினை இயேசு அற்புதமாக செய்தார், விவேகானந்தர் வாழ்வின் கடைசியிலும் இந்த சாயல் உண்டு

இந்த பெரிய வியாழன் பொதுவாக கத்தோலிக்க ஆலயங்களிலே சிறப்பு, இந்த பிரிவினைகள் எல்லாம் இதில் வராது, கேட்டால் இதனை செய் என பைபிளில் உண்டா என சீறிவிட்டு வானம் பார்த்து பரவசம் அடைவார்கள்

ஒருமாதிரியான கூட்டம் அது, ஏதும் அதனை மீறி கேட்டால் நாம் சாத்தான் அல்லது ஆர்.எஸ்.எஸ் ஆகிவிடுவோம்

கிறிஸ்தவ கத்தோலிக்க‌ ஆலயங்களில் அதனை நினைவு கூறும் விதமாக பல அசனம் எனப்படும் விருந்து நடைபெறும். அதிலும் கத்தோலிக்க ஆலயங்களில் இயேசு செய்தது போல பாதம் கழுவும் சடங்கும் நடைபெறும்.

முன்பெல்லாம் கிறிஸ்தவ கிராமங்களில் வீடுவீடாக துக்கபாட்டு படித்து ஊர்வலமாக வருவார்கள், வீட்டில் இருக்கும் நெல் அல்லது உளுந்தினை மக்கள் கொடுப்பார்கள், அது இந்த கிறிஸ்தவ விரத காலங்களில் தெரு தெருவாக ஏழை மக்களுக்கு கஞ்சியாக ஊற்றபடும்.

இது போக எல்லா விவசாய வீடுகளிலும் இந்த காலங்களில் குறிப்பாக பெரிய வியாழன் காலத்தில் இந்த உணவு உபசரிப்புகள் மிக பலமாக இருக்கும்.

இப்பொழுதெல்லாம் இவை மாறிவிட்டன, ஏதோ ஆலய சம்பிரதாயத்திற்கு நடத்தபடும் சடங்குகளாக அவை தோற்றமளிக்கின்றன.

காரணம் விவசாயி பசிபோக்க தெரிந்தவனே அன்றி வியாபாரம் செய்ய தெரியாதவன், விவசாயம் குறைந்த பின் சகலமும் வியாபாரநோக்கில் பார்க்கபடும் காலம், பத்து பேருக்கு உணவளிக்க எவ்வளவு அரிசி வேண்டும் என கணக்கு பார்த்தவன் விவசாயி,

ஆனால் அதனால் எவ்வளவு செலவாகும்? அதனால் தனக்கு என்ன லாபம் என பார்க்கும் வியாபார காலம் இது.

விவசாயி, வியாபாரி வித்தியாசம் இதுதான். விவசாயம் அழிந்ததும் வியாபாரி வாழ்வதும் இப்படித்தான்

இப்படியான வெள்ளந்தி விவசாய காலம் மறைந்த பின், இந்த அசன வைபவங்களும் கொஞ்ச கொஞ்சமாய் மறைந்துகொண்டிருக்கின்றன. சில இடங்களில் கேட்டரிங் சிஸ்டமாம், இன்னும் வரும் காலங்களில் இவை நின்றாலும் நின்றுவிடும்

அசனம் என்றால் சனத்தின் எதிர்மறை என்பார்கள், அதாவது திமுக அதிமுக போல, சொந்தமில்லாத சனம். கிறிஸ்தவ பாஷையில் அந்நியர்கள்.

ஆனால் இன்று பெரும்பாலான அசனங்களில் அந்நியர்களை பார்க்கமுடியாது, சபையினை சார்ந்தவர்கள் மட்டும் உணவருந்துவார்கள், அந்நியர்களுக்கு பெரும்பாலும் இடமில்லை,

அதாவது கிறிஸ்தவமில்லா கிறிஸ்தவம்.

நீங்கள் பந்தியமரும்பொழுது குருடரும் சப்பாணியும் நோயாளியோடும் அமருங்கள் என்ற அந்த போதனை எல்லாம் யார் காதிலும் கேட்பதில்லை.

விவசாயத்தின் வீழ்ச்சி பல மாறுதல்களை கொண்டுவந்துவிட்ட காலம், அக்காலத்தில் வீட்டு அரிசியும், விறகடுப்பும், உருளி போன்ற வார்ப்பு பாத்திரத்தில் மணக்க வைக்கபடும் கூட்டுவகைகளும் பெரும் ருசிகொடுத்தன.

எல்லாவற்றிற்கும் மேல் வாழை இலையிட்டு ஒரு மனமார்ந்த பரிமாறும் தன்மை அந்த சுவையினை கூட்டிற்று

அந்த அசன சோற்றினை ஒருமுறை உண்டால் ஈஸ்டர் வரைக்கும் வயிறு அப்படி நிறைந்திருக்கும், பெரிய வெள்ளி விரதங்களை அசால்ட்டாக கடக்கலாம்

அக்கால உணவின் சுவையும், மணமும் அப்படி இருந்தது

அக்காலம் ந‌ன்றாய் இருந்தது. இன்று தலைகீழாக நின்றாலும் அச்சுவை வருவதில்லை

காரணம் அன்று எல்லாமே அங்கே விளைந்த பொருட்கள் அரிசி முதல் காய்கறி எல்லாமே கிராம உற்பத்தி, விறகு அடுப்பு, பாத்திரம் எல்லாவற்றிற்கும் மேல் கிராம கைபக்குவமும் இருந்தது

இன்று விலையரிசியும், கலப்பட பருப்பும், என்றோ பறிக்கபட்ட காய்கறிகளும்,அலுமினிய பாத்திரங்களும் அக்கால சுவையினை கொடுப்பதே இல்லை,

எனினும் மிகச்சில கிராமங்களில் பழம் பாரம்பரிய அசனம் நடக்கின்றது என்கின்றார்கள் அந்த கிராமங்கள் கொடுத்துவைத்தவை.

எங்கள் பக்கம் வைக்கும் அந்த சம்பா அரிசி சோறு, அக்கால பருப்பு சாம்பாரும், தேங்காய் எண்ணெய் கத்தரிக்காய் பச்சடி போன்ற கூட்டும் நாவில் நின்றுவிட்ட சுவைகள்

எங்கு தேடினாலும் அது கிடைப்பதே இல்லை, எவ்வளவு பெரும் வித்தகர்கள் சமைத்தாலும் அந்த ருசி வரவே இல்லை. சுவையினை விடுங்கள் மணம் கூட வருவதில்லை

தாளிக்கும் மணமே ஊரெல்லாம் பரவி பந்திக்கு தயார் என அறிவித்த காலங்கள் அவை

இன்று அதெல்லாம் சுத்தமாக இல்லை..

உணவுபொருட்கள், பாத்திரங்கள், அடுப்பு என பலவும் மாறிவிட்ட உலகில் அக்கால சமையல் முறைகளும் மாறிவிட்டது நன்றாக தெரிகின்றது, அந்த மக்கள் தலைமுறை தலைமுறையாக கொண்டுவந்த அந்த சுவையினை இந்த தலைமுறை தொலைத்துவிட்டது..

நாகரீகம் எனும் பெயரில் நல்ல சமையல் உட்பட‌ எவ்வளவு விஷயங்களை தொலைத்துவிட்டோம்..

அந்த காலங்கள் அருமையானவை, அவர்கள் ரசித்து, ருசித்து வாழ்ந்திருக்கின்றார்கள். ஏக்க பெருமூச்சுடன் விட்டுவிடலாம்.

அந்த காலங்கள் இனி வாரா.

ஆனாலும் ….

நீங்கள் பந்தியமரும்பொழுது குருடரும் சப்பாணியும் நோயாளியோடும் அமருங்கள் என்ற அந்த கிறிஸ்தவ போதனை எந்த கிறிஸ்தவன் காதிலும் கேட்பதில்லை.

நல்ல கிறிஸ்தவன் என்றால் இந்நாளில் புறக்கணிக்கபட்ட‌ அயல் சனங்களுக்கே உணவளித்து இந்நாளை நினைவு கூற வேண்டும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s