விளையாட்டும் இந்த உலகில் முக்கியமல்லவா?

தங்க மங்கை கோமதி தமிழ்நாடு திரும்பிவிட்டார் ஆயினும் அரசு பெரிதாக கண்டுகொண்டதாக தெரியவில்லை

இந்திய பெண்கள் ஹாக்கி அணியினையே கண்டுகொள்ளாத மத்திய அரசு வழக்கம் போல் கண்டுகொள்ளவில்லை

பழனிச்சாமி அரசு சம்பிரதாயத்துக்கு ஏதோ சொன்னது

திமுக 10 லட்சம் பரிசு கொடுத்திருக்கின்றது, நிச்சயம் வாழ்த்துகுரியது, தமிழக காங்கிரசும் பரிசு அறிவித்திருக்கின்றது

நடிகர்கள் உட்பட அந்த சமூகம் அமைதி, தொழிலதிபர் உலகமும் கனத்த அமைதி

கோமதியின் கதையினை திரும்பிபார்த்தால் வலிக்கத்தான் செய்கின்றது

கடும் வறுமை, அந்த வறுமையிலும் விடாபிடியாக விளையாடி போராடியிருக்கின்றார்

ஓரளவு வென்று வேலையில் அமரும்பொழுது தந்தைக்கு புற்றுநோய் , இவருக்கு காலில் அடி என பலத்த தடங்கல்

இவரின் பயிற்சியாளரின் மரணமும் அவரை புரட்டி போட்டிருக்கின்றது.

இன்னொரு பெண் என்றால் முடங்கியிருப்பார், ஆனால் கடும் பயிற்சியும் முயற்சியும் கொண்ட கோமதி விளையாடி ஜெயித்திருக்கின்றார்

அம்மணி பல விஷயங்களை சொல்லும்பொழுது வழக்கம் போல தமிழ்நாட்டு விளையாட்டுதுறை பல்லிளித்து கிடப்பது தெரிகின்றது

இங்கு அப்படித்தான், விளையாட்டு என்பது அரசு வேலைக்கு என்பதை தாண்டி யாரும் யோசிப்பதில்லை , விளையாட்டுக்கு சம்பிரதாய செலவு என்பதை தாண்டி யாரும் யோசிப்பதுமில்லை

ஆனால் விளையாட்டை நேசிப்பவர்கள் வேலை கிடைத்ததோடு நிற்பதில்லை

அவர்கள் தங்களையும் தங்கள் திறமையினையும் நிரூபிக்க போராடுகின்றார்கள்

கோமதி அப்படி போராடுகின்றார், பல உதவிகள் தற்காலிகமாக கிடைக்கலாம் ஆனால் தமிழகத்தில் ஒரு அரசு வேலை வேண்டும் என விரும்புகின்றார்

பழனிச்சாமி அரசு அதை பரீசிலித்தால் நல்லது

நல்ல விளையாட்டு வீரர்கள் விளையாட்டை மனமார நேசிப்பார்கள், பயிற்சியும் விளையாட்டும் அவர்களுக்கு உணவும் சுவாசமும் போன்றது

எந்த ஒரு கட்டத்திலும் உண்மையாக அதை நேசிப்பவர்களுக்கு அது தொடர்ந்து கொண்டே இருக்கும் , காலம் தவறிய அங்கீகாரம் கிடைக்கலாம்

எனக்கு ஒரு வகுப்பு தோழன் இருந்தான், நெல்லைமாவட்டம் திருமலாபுரத்துக்காரன்

அந்த மண் விளையாட்டுக்கு பெயர்போனது, நல்ல விளையாட்டு வீரர்கள் உருவாவர்கள் , அப்படியே அரசு வேலைக்கு செல்வார்கள் அத்தோடு பலர் அதிலே நின்றுகொள்வார்கள்

ராஜிவோடு திருப்பெரும்புதூரில் இறந்த ராஜகுரு என்பவரும் அந்த ஊர்காரரே

அந்த ஊரை சேர்ந்தவன் Ramachandran lakshmanan , இரு வருடங்கள் பள்ளியில் அவன் என் வகுப்பு, சுமார் படிப்பு ஆனால் விளையாட்டில் கெட்டி

அவனுக்கு அப்பொழுதே எல்லா விளையாட்டும் சாதாரணமாக வந்தது, ஈட்டி எறிதலும் உயரம் தாண்டுதலும் அவனுக்கு அசாத்தியம்

15 வயதில் அவன் மாநில அளவில் விளையாடி பெரிசு பெற தொடங்கியபொழுது ரஷ்ய போல்வால்ட் வீரர் கலக்கிகொண்டிருந்தார்

செர்ஜி புப்கா, 35 முறை உலக சாதனை படைத்தவர் 1994ல் அவர் தாண்டிய 6.14மீ உயரத்தை இன்றுவரை யாரும் மிஞ்சமுடியவில்லை.

ஆம் அவரின் சாதனை 6.14 மீட்டர்

ஆனால் இவரோ அப்பொழுதே 5.70 மீட்டர் வரை அனாசயமாக போல்வாட்டில் தாண்டிகொண்டிருந்தார்

உறுதியாக சொல்லலாம் நல்ல பயிற்சியாளர் கண்ணில் அவன் பட்டிருந்தால் இல்லை தமிழகத்தில் மிக பெரும் தடகள வசதிகள் இருந்திருந்தால் அவனால் பெரும் பிம்பமாக உருவாகியிருக்க முடியும்

விவசாயி மகனுக்கு யார் உண்டு? என்ன உண்டு?

ஆனாலும் போராடினான் , அனுதினமும் உண்பானோ இல்லையோ கண்டிப்பாக விளையாடுவான்

அதில் ராணுவத்தில் வேலையும் கிடைத்தது, சென்னை ரெஜிமென்டில் இருந்தார். ஒரு கட்டத்தில் அதிலிருந்து வெளியேறினான். அவன் வெளியேறினானே அன்றி விளையாட்டு அவனிடம் விடைபெறவில்லை

காலம் அவனை கனடாவுக்கு நகர்த்தியது, அங்கும் விளையாட்டினை தொடர்ந்தான், கனடியருக்கு அவன் ஆச்சரியமாக தெரிகின்றான்

இன்று கனடாவில் 40 வயதை நெருங்கும் அவனுக்கு மிகபெரிய விளையாட்டு ரசிகர் கூட்டம் இருக்கின்றது, சீனியர் வீரராக பங்குபெற்று பதக்கங்களை குவிக்கின்றான்

இளவயதிலே நல்ல பயிற்சி பெற்றிருந்தால் அவனால் ஒலிம்பிக் பதக்கங்களை குவித்திருக்க முடியும் என கனடியர் நம்புகின்றனர்

சிறுவயதிலே அவன் கனடா வந்திருந்தால் அவன் கனடா சார்பாக உலக தடகளத்தில் பங்குபெற்று விருது வாங்கியிருப்பான் என அவர்களே ஒப்புகொள்கின்றார்கள்

ஆம் தடகளத்திலும் ஒலிம்பிக்கிலும் முன்னணியில் நிற்கும் அந்த கனடியர்கள்

நெல்லை மாவட்டத்தின் பிந்தங்கிய கிராமத்தின் மகனை அத்தேசம் விளையாட்டுக்காக கொண்டாடுகின்றது

இப்பொழுதும் அனுதினமும் விளையாட்டுகளில் பங்குபெறுகின்றன் , பலமுறை பதக்கத்தோடு படமெல்லாம் பதிவிடுவான்

அவனை நினைத்தால் மனதில் ஒரு வலிவரும், அசாத்திய விளையாட்டு வீரன் அவன். இங்கிருக்கும் அரசியலும் விளையாட்டு என்றால் ஒருவித புறக்கணிப்பும் அவன் சர்வதேச வீரனாவதை தடுத்தன‌

அவனுக்கு உதவுவாரும் யாருமில்லை, நிச்சயம் நல்ல உதவிகள் பெற்று, நல்ல பயிற்சியாளர் அமைந்து திறமையான பயிற்சி பெற்றிருந்தால் செர்ஜி பூப்கா சாதனை எலலம் அவனால் உடைக்கபட்டிருக்கும்

பன்முக விளையாட்டு வீரனாக அவன் உருவாகியிருப்பான், விதி அவனை சீனியர் விளையாட்டு வீரனாக கனடாவில் உலாவவிட்டு பார்த்துகொண்டிருகின்றது

விளையாட்டை மனமார சுவாசித்ததால் அவனுக்கான அங்கீகாரம் கனடாவில் கிடைத்திருக்கின்றது

கோமதிக்கும் அதே அங்கீகாரம் தோகாவில் கிடைத்திருக்கின்றது, உறுதியாக சொல்லலாம் அவருக்கு நல்ல பயிற்சியும் ஆதரவும் கிடைக்கும் பட்சத்தில் அவரால் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியும்

இன்னும் எத்தனை கோமதியும் ராமகிருஷ்ணனும் வறுமையின் பெயராலும் உதவ யாருமின்றியும் ஆனால் விடா முயற்சியுடன் விளையாட்டை நேசித்து இந்த பரிதாபத்திற்குரிய தமிழ்நாட்டில் சுற்றிவரலாம்

நல்ல வீரர்கள் இங்கு எக்காலமும் உண்டு ஆனால் அவர்களை அடையாளம் கண்டு பயிற்சியும் வசதியும் செய்து கொடுத்து கை தூக்கிவிடத்தான் யாருமில்லை

பள்ளி, கல்லூரி , பொறியியல், மருத்துவ கல்லூரி என எல்லாம் தனியாருக்கு கொடுத்து கல்வி வளர்க்க படும்பாட்டில் அதாவது பணம் சம்பாதிக்க தனியாருக்கு வாய்ப்பு கொடுத்து அது கல்வி புரட்சி என சொல்லும் அரசுகள் விளையாட்டும் முக்கியம் என கொஞ்சமும் நினைப்பதில்லை

விளையாட்டும் இந்த உலகில் முக்கியமல்லவா? ஆனால் இந்த ஆட்சியாளர்கள் ஏன் அதை பற்றி சிந்திப்பதில்லை

ஆம் அவர்களுக்கு கட்சியும் ஆட்சியுமே விளையாட்டு எனும் பொழுது தனி விளையாட்டு எதற்கு என எண்ணிவிட்டார்களோ என்னமோ

கோமதி சாதித்துவிட்டு இன்னும் சாதிக்க தயாராகின்றார்

இதை எல்லாம் கனடாவில் இருந்து அமைதியாக பார்த்துகொண்டிருக்கும் ராமசந்திரன் என்ன நினைப்பனோ தெரியாது

ஆனால் விளையாட்டையும் இந்த மண்ணயும் மனமார நேசிக்கும் அவனுக்கு மனதில் மகிழ்ச்சியும் அதே நேரம் ஒருவித வலியும் வந்துதான் போகும்

பிட்டி தியாகராயர்

தமிழகத்தில் திராவிட குரல்கள் முதலில் 1900களிலே கேட்க தொடங்கின, அது பிரமணர் அல்லாதோர் சங்கம் என்றே தொடங்கபட்டது, அதில் பல சிந்தனையாளர்கள் இருந்தனர், பின் அது நீதிகட்சி என பயணித்தது

அந்த நீதிகட்சியினை அக்காலத்தில் தொடங்கியர்களில் ஒருவர்தான் தியாராய செட்டி அல்லது பிட்டி தியாகராயர், வழக்கறிஞர், தொழிலதிபர் என பன்முகம் கொண்டவர்.

பிராமணருக்கு எதிரான முதல் குரலை இவர்தான் எழுப்பினார்

நடேச முதலியார், டி.எம் நாயர் ஆகியோருடன் சேர்ந்து 1916ல் நீதிகட்சியினை தொடங்கினார்

மற்ற சாதி மக்களின் உரிமைகளுக்காக முதலில் குரல் கொடுத்தது நீதிகட்சிதான், அது 1920ல் சென்னை மாகாண ஆட்சியினையும் பிடித்து அசத்தியது, அதாவது அன்றைய கேரளா, ஆந்திரம் என பிரிக்கபடாத சென்னை மாகாணம்.

இவருக்கு வந்திருக்க வேண்டிய முதல்வர் பதவியினைத்தான் பனகல் அரசருக்கும், சுப்புராயலுவிற்கும் கொடுத்தார், இறுதிவரை முதல்வராக ஆசைபடாத பெருந்தன்மை அவருக்கு இருந்தது

பிரிட்டிசார் அதிகாரத்திற்குட்பட்ட ஆட்சி எனினும் இட ஒதுக்கீடு, தேவதாசி ஒழிப்பு என பல மசோதாக்களை அது கொண்டுவந்தது, அன்று அது தோற்றாலும் பின்னாளில் அவை சாத்தியமாயிற்று

இங்கு சமூக நீதி சீர்திருத்தங்களை முதலில் கொடுத்தது நீதிகட்சியே

இந்தியினை முதலில் எதிர்த்ததும் போராடியதும் நீதிகட்சியே

தென்னக சுயாட்சி முதல் பல முழக்கங்களை அதுதான் முதலில் முன் வைத்தது

அக்கட்சியின் பன்னீர்செல்வம் போன்றவர்கள் பெரும் வரலாற்றளர்கள், அக்காலத்திலே லண்டனில் பிரிட்டிசாரிடம் பிராமணர் அல்லோதார் சார்பாக மநாட்டில் பேசியவர்கள்..

அது பெரும் நல்லதிட்டங்களை கொண்ட கட்சியாக இருந்தாலும் படித்தவர்கள் நிரம்பியிருந்தனர், கடவுள் நம்பிக்கை இருந்த அதே நேரம் பிராமணர்களின் அடாவடியினை எதிர்த்த கட்சி அது

பெரியாரும் இதில்தான் இருந்தார், ஆனால் அவரால் நீடிக்க முடியவில்லை சுயமரியாதை, திராவிடர் கட்சி என பின்பு தனியாக அதிரடி காட்டினார், வரலாற்றை மாற்றினார்

எப்படி ஆயினும் நீதிகட்சிதான் இன்றைய திராவிட கொள்கைக்கும், கட்சிகளுக்கும் முன்னோடி, அதன் தலைவர்தான் பிட்டி தியாகராஜர்

திராவிட கொள்கைக்கும், பெரும் மாற்றத்திற்கும் அடித்தளமிட்ட அவரின் பிறந்த நாள் இன்று

இவரது நினைவால்தான் அன்று புதிதாக உருவாக்கபட்ட சென்னை புறநகர் ஒன்றிற்கு தியாகராய நகர் என அக்கட்சியின் ஆட்சியில் பெயர் சூட்டபட்டது, அவர் பெயரில் அரங்கம் ஒன்றும் கட்டபட்டது

அது இன்று தி.நகர் ஆயிற்று, சென்னையின் மிக முக்கிய பகுதி ஆயிற்று

அதாவது பெரியார் காலத்திற்கு முன்பே திராவிட குரல் எழும்பியது, பலர் எழுப்பினார்கள், பெரியார் அதனை ஆணிதரமாக பிடித்துகொண்டு போராடினார்

அப்படி பெரியாருக்கு வழிகாட்டியவர்களில் ஒருவர்தான் பிட்டி தியாகராஜர்.

நிச்சயம் தியாகராய செட்டி, பனகல் அரசர் எல்லாம் பிராமண எதிரிகள் சந்தேகமில்லை ஆனால் இந்து அபிமானிகள் திட்டமாட்டார்கள்

காரணம் அவர்கள் சீர்திருத்தம் பேசினார்களே தவிர கடவுள் பகிஷ்கரிப்போ, துவேஷமோ செய்யவில்லை அதனால் அவர்களை பிராமணர்கள் தங்களுக்கு எதிரான‌ விஷ வித்துக்களை விதைத்தோர் என்ற வகையில் கூட கண்டுகொள்ளவில்லை

நிச்சயம் பிட்டி தியாகராஜர், பனகல் அரசர், பிடி ராஜன் , டி.எம் நாயர் போன்றோர் எல்லாம் வழிகாட்டிகள்

தென்னகம் இன்று ஓரளவு தனிதன்மையுடன் இருக்க இவரின் துணிவான அணுகுமுறையும், தன்னலமற்ற பொதுநல சிந்தனையுமே முதல் காரணம்

அவர் பற்றிவைத்த தீ இன்றுவரை எரிந்துகொண்டிருக்கின்றது

அந்த தீயினை பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் காத்தனர், இன்றோ நிலை மாறிவிட்டது

தியாகராய செட்டி காலத்திலிருந்து தொடங்கிய இயக்கம் மூன்றாம் கலைஞர் என சொல்லிகொண்டிருக்கும் ஒரு குடும்பத்து கையில் மாட்டிவிட கூடாது, அப்படி சிக்கினால் அது தியாகராயர் போல பல முன்னோடிகளுக்கு செய்யபடும் மாபெரும் அவமானம்

தியாகராஜர் போராடிய காலங்களில் கலைஞர் பிறக்கவே இல்லை என்பதும் நினைவில் வைக்க வேண்டியது

இதனை சமூகநீதி காப்பதாக, நீதிகட்சி வழிவந்த திமுக என சொல்லிகொள்வோர் உணர்ந்தால் நல்லது

நிச்சயம் நீதிகட்சி தியாகமும் போராட்டமும் மகத்தானது

திராவிட வரலாற்றில் மறக்க முடியாத பிதாமகனான அவருக்கு அஞ்சலியினை தெரிவித்துகொள்ளலாம்.

இன்னும் பின் அலைகள் அடித்துகொண்டிருக்கின்றன‌

இலங்கையில் நிலமை சுனாமிதாக்கியது போல் இருகின்றது, இன்னும் பின் அலைகள் அடித்துகொண்டிருக்கின்றன‌

இன்னும் ஏராளமான தீவிரவாதிகள் பதுங்கியிருக்கின்றனர், அவர்களில் சிலரை பிடிக்க ராணுவம் முற்றுகையிட்ட பொழுது துப்பாக்கி சண்டை எல்லாம் நடந்திருக்கின்றது, இருவர் பலி

இந்த சண்டாளர்கள் இந்தியா தப்பலாம் என்பதால் கடும் பாதுகாப்பு எனினும் ராமநாதபுரம் பக்கம் சில பாம்புகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல்களும் உண்டு

இந்தியாவிலும் கடும் பாதுகாப்பு

இலங்கை அரசு இரு விஷயங்களுக்காக அஞ்சுகின்றது முதலாவது சமூக ஒற்றுமை இரண்டாவது இலங்கை பொருளாதாரம்

ஆம் சுற்றுலாதுறை அடிவாங்கி கிடக்கின்றது, சுற்றுபயணிகள் நாம் தமிழர் ஆடியோ கேட்ட கட்சிக்காரர்களாக தெரித்து ஓடுகின்றனர், விமானங்கள் வைகோ கட்சி போல காலியாக கிடக்கின்றது

இன்னும் 3 வருடம் ஆகலாம் ஆனால் அதுவரை ஓலைவெடி கூட வெடிக்க கூடாதே என்ற கவலையில் இருக்கின்றது இலங்கை

ஆனாலும் எங்களுக்கு பணிந்து போ, தென் கொரியா சிங்கப்பூர், தைவான் போல உன்னை பெரும் பணக்கார நாடாக ஆக்குகின்றேன் என சில சக்திகள் அவர்களை நோக்கி கண் சிமிட்டுகின்றன‌

அவர்கள் எதிர்பார்ப்பதும் அதுதான், இலங்கை
யோசிக்கின்றது.

அரசு யோசிக்கும் இன்னொரு விஷயம் உள்நாட்டு கலவரம்

சில இடங்களில் இஸ்லாமியர் மேல் தாக்குதல் நடந்திருகின்றது, எனினும் இஸ்லாமியர் அமைதி

தமிழர் சிங்களர் வீடுகளில் கருப்பு கொடியும், இஸ்லாமியர் வீடுகளில் எங்களை தாக்காதீர் என வெள்ளை கொடியும் பறக்கின்றது

இந்நிலையில் ஒரு மனிதர் உலக கவனம் பெறுகின்றார், அவர் இலங்கை ஆயர் ஜோசப் கண்ணையா

ஏகபட்ட கிறிஸ்தவர் இறந்திருக்கும் வேளையில், கிறிஸ்தவ ஆலயங்கள் தகர்க்கபட்ட நிலையிலும் அவர் மனமுருகி வேண்டுகின்றார்

ஆம் அம்மனிதன் உண்மையான கிறிஸ்தவன், உண்மையான துறவி

அவன் காலை தொட்டு வணங்க கூட இங்குள்ள பாதிரிகளுக்கு தகுதி இல்லை, பிரிவினை கோஷ்டிகளுக்கும் கொஞ்சமும் இல்லை

ஆம் அந்த மனிதனின் உருக்கமான கூக்குரலில் இலங்கை மருவி நிற்கின்றது, அம்மனிதன் சொல்கின்றான்

“யார் மேலும் எங்களுக்கு கோபமில்லை, எள் முனையேனும் கசப்பே இல்லை

இது அன்பின் மதம், பொறுமையின் உச்சம்.

பெருமான் இயேசு அதைத்தான் சொல்லியிருக்கின்றார், உங்களை துன்புறுத்துவர்களுக்காக ஜெபியுங்கள் , உங்களை அடிப்பவர்களுக்காக நன்றி கூறுங்கள்

ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு

இயேசுவே சிலுவையில் மரிக்கும்பொழுது தன்னை கொன்றவர்களுக்காக் பிரார்த்தித்தார்

நாங்களும் அதையே சொல்கின்றோம், அவர்களை இறைவன் மன்னிக்கட்டும்

அந்த கொலையாளிகளுக்காகவும் நாங்கள் பிரார்த்திக்கின்றோம்

இந்த நாடு கடந்த 10 ஆண்டுகளாகத்தான் அமைதியினை பார்க்கின்றது, அதுவும் மும்மதங்களும் சகோதரத்துவமாக வாழ்ந்த இடம் இது

அது தொடரட்டும், இஸ்லாமிய சகோதரர்களை நாங்கள் நேசிக்கின்றோம், அவர்கள் மேல் சந்தேகம் எக்காலமுமில்லை இனியுமில்லை

துயரத்தில் இருக்கும் அம்மக்களுக்கு நாங்கள் ஆறுதலும் பாதுகாவலுமாக இருக்கின்றோம்”

எப்படிபட்ட கிறிஸ்தவ தாக்கம் மிகுந்த பேச்சு, எவ்வளவு அன்பான வார்த்தைகள்

இந்த உலகில் உண்மையான கிறிஸ்தவன் இன்னும் இருக்கின்றான் என்பதற்கு அந்த ஜோசப் கண்ணையா என்பவர் சாட்சி

ஒரு நல்ல கிறிஸ்தவனை வாழ்வில் கண்டுவிட்ட மகிழ்வில் அவன் இருக்கும் திசை நோக்கி வணங்குகின்றேன்

அந்த அழகிய தீவு மீண்டு வரட்டும், அந்த அயலக உறவுகள் வாழ்வில் மறுபடியும் வசந்தம் வீசட்டும்

இலங்கையில் மத நல்லிணக்கம்

இலங்கையில் மத நல்லிணக்கம் பேண நாடும் நாட்டு மக்களும் மிகுந்த சிரத்தை எடுக்கின்றார்கள்

இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்காக பள்ளி வாசல் எங்கும் கடுமையான பாதுகாப்பினை இலங்கை அரசு வழங்கியிருக்கிறது

இஸ்லாமியர்களை நாம் அரவணைக்க வேண்டிய நேரம் இது என்கின்றார் மைத்திரிபாலா

இந்த இடத்தில் இஸ்லாமியர்களின் மன ஓட்டத்தை புரிந்து கொள்ள வேண்டும் மிக உருக்கமான காரியத்தைச் செய்திருக்கிறார்கள்

அதாவது கிறிஸ்தவ தேவாலயங்கள் எல்லாம் மூடப்பட்டு இருக்கும் பொழுது நாங்கள் மசூதியில் தொழுகை செய்வது அவர்கள் மனதை புண்படுத்தும் என்பதால் வீட்டிலேயே தொழுது கொள்கிறோம் என அறிவித்திருக்கிறார்கள்

இலங்கை இஸ்லாமியர்கள் நிச்சயம் வாழ்த்து வாழ்த்துக்கு உரியவர்கள்

உண்மையான இஸ்லாம் எது என்பதை அவர்கள் உலகிற்கு உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்

இந்த ஒற்றுமையில் வலிகளை தாண்டி அந்த தேசம் எழும்பட்டும் செழிக்கட்டும்

இலங்கை இஸ்லாமிய பெருமக்களிடமிருந்து இந்த உலகம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கின்றது

சென்னையில் வடமாநில தீவிரவாதி கைது

சென்னையில் வடமாநில தீவிரவாதி கைது செய்யபட்டிருக்கின்றார்

அன்னார் அசாமின் உல்பா இயக்கத்துக்காரர் அங்கு நாசவேலை செய்துவிட்டு சென்னைக்கு வந்து பாஷாபாய் போல திரிந்திருக்கின்றார்

வடமாநில தொழிலாளர் நிறைய வேலை செய்வது அவருக்கு வசதியாயிற்று

எனினும் மிக நுட்பமாக தொடர்பு கொண்ட காவல்துறை அவனை அமுக்கி சாக்கில் போட்டு கொண்டுபோய்விட்டது

இது உல்பா என விட்டுவிட முடியாது,

காரணம் உலகின் எல்லா தீவிரவாத குழுக்களுக்குள்ளும் ஒரு ரகசிய தொடர்பு உண்டு,

இவர்கள் அவர்களுக்கு ஏதும் செய்வார்கள், அவர்களுக்கு இவர்கள் செய்வார்கள், அவர்களின் நண்பர்களுக்கு இவர்கள் செய்வார்கள் என அதன் எல்லை விரிந்துகொண்டே இருக்கும்

அதுவும் இந்தியா போன்ற நாட்டுக்கு எதிராக ஏகபட்ட தீவிரவாத குழுக்கள் இருக்கும்பட்சத்தில் பல காரணங்களுக்காக ஒன்று சேருவார்கள்

2001க்கு பின்பு ஒரு தீவிரவாத பயலும் இருக்க கூடாது என அமெரிக்கா வாளோடு திரிந்தது அதனால்தான்

இதே உல்பா உட்பட வடகிழக்கு தீவிரவாதிகளுக்கும் புலிகளுக்குமே தொடர்பு இருந்த காலம் எல்லாம் உண்டு

தமிழகத்தில் தொடர்ந்து தீவிரவாதிகள் பிடிபடுவது நல்ல விஷயம் அல்ல‌

இன்னும் பலத்த பாதுகாப்பும் இறுக்கமும் அவசியம்

தமிழகத்து ஐன்ஸ்டீன் அவன்

கணிதம் எல்லோருக்கும் புரியாது,அதற்கொரு ஞானமும் வரமும் வேண்டும், இன்னும் சாதிக்க வேண்டுமென்றால் தனிதிறமை வேண்டும், இவை எல்லாம் அமைந்து உலகில் ஆரியபட்டர், பாஸ்கரருக்கு பின் இந்தியரின் மதிப்பினை உயர்த்தியவர் ராமானுஜம்.

அவர் காலத்தில் கணித உலகில் சிலர் தத்தி நடை பழகி கொண்டிருந்த பொழுது, அவர் ஒலிம்பிக்கில் ஓடி கொண்டிருந்தார், சில நடிகர்கள் வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் பொழுதே அவர் ஆஸ்கார் அவார்டுகளை குவித்தது போன்றது ராமானுஜரின் சாதனைகள்.

ஏழை குடும்பம், கணிதம் தவிர வேறு எல்லா பாடமும் தமிழக பாஜக‌ நிலை, குறிப்பாக ஆங்கிலத்தில் “டெப்பாசிட்” காலி. ஆனால் கணிதத்தில் அபார திறமை. பாவம் கண்டுகொள்ள யாருமில்லை,” பிழைப்பிற்கு வேண்டியதை படி, வேண்டாததை விடு” எனும் தமிழக கொள்கை அவருக்கும் போதிக்கபட்டது,

ஆனால் அவர் 10 வயதில் கல்லூரி மாணவர்களுக்கு கணிதம் போதித்தார்.

“கொடிது கொடிது இளமையில் வறுமை” என்பதற்கு பெரும் எடுத்துகாட்டு ராமானுஜம், ஆனால் அவர் போராடினார், தத்தி போராடி, கும்பகோனம் மற்றும் பச்சையப்பா வரை கல்லூரியில் படித்தாலும், அவரின் கணித அறிவு மெச்சபட்டதே தவிர அவரின் நிலை மகாமோசம். பட்டம் கூட கிடைக்கவில்லை

எண்களோடு வாழுவார், கனவில் அவரின் குல தெய்வத்தோடு கணக்கில்தான் விவாதிப்பார், நோட்டு வாங்க பணமில்லை, ஒரே பக்கத்தில் முதலில் ஊதா மையிலும், அடுத்த பக்கம் எழுத வேண்டியதை இடைஇடையே சிகப்பு மையிலும் எழுதும் அளவிற்கு வறுமை.

யூதர்களை தவிர எல்லோருக்கும் லட்சுமியும்,சரஸ்வதியும் ஜென்ம எதிரிகள், அதிலும் ராமானுஜம் வாழ்வில் சரஸ்வதி மார்கழி கச்சேரியே நடத்திகொண்டிருந்தார், லட்சுமியோ பிய்ந்து போன செருப்பினை கூட விட்டு செல்லவில்லை.

எண்களின் விளையாட்டில் வெற்றிபெற்ற ராமானுஜம், வறுமையுடன் தோல்வி அடைந்தார், விளைவு சென்னை துறைமுகத்தில் எழுத்தர்பணி, ஆனாலும் கணித ஆராய்ச்சி தொடர்ந்தது,

திறமை சூரிய ஓளியினை போல அடக்கமுடியாதது, ஒரு அய்யரின் சிபாரிசில் ஒரு வெள்ளையர் அவரை அடையாளம் காண்கிறார், தான் கண்டது ஒரு கணித வைடூரியம் என்பது புரிகிறது, என்ன உதவி வேண்டும் என்கிறான் அந்த ஆங்கில‌ கணித ஆசிரியர்.

மனம் கலங்காதீர்கள், இளகிய மனமுள்ளவர்கள் இதற்கு மேல் படிக்கவேண்டாம், ராமானுஜம் சொன்னது இதுதான்

“எனது மூளை சோர்வடைகிறது, ஒரு நாளைக்கு ஒரு முறையாவது எனக்கு உணவு வேண்டும், அதுதான் எனக்கு பெரும் சவால், வயிற்றிற்கு மட்டும் ஒரு வழி கிடைத்தால் உற்சாகமாக ஆராய்ச்சி செய்யலாம்”, கண்கலங்கினான் அந்த அதிகாரி, அவன் என்ன? கல்வியின் அருமை தெரிந்த அனைவரும் கலங்கத்தான் செய்வார்கள்.

சொந்த இனம் செய்யா உதவியினை அந்நியன் வெள்ளையன் செய்தான், ராமானுஜத்தின் முடிக்காத கல்வி தகுதியும் பொருட்படுத்தாமல், கணித கழகத்தில் அவரை இணைத்து ரூ75 சம்பளம் கொடுத்தார்.

காவரி கரையின் கணிதநட்சத்திரம் ஜொலிக்க தொடங்கியது.

நம்பர் தியரி (Number theory),காம்பிளக்ஸ் நம்பர் (Complex number), அனாலிசிஸ் (Analysis) ,இன்ஃபைனட் சீரியஸ், (infinite serious), இன்னும் ஏராளமாக‌ என நீங்கள் கற்ற அல்லது அன்று ஐன்ஸ்டீனாகவும், ராமானுஜனமாகவும் காட்சியளித்த ஆசிரியர்கள் எல்லாம் காதை திருகி கற்பித்த அந்த அதிசய கணிதங்கள் எல்லாம் ராமானுஜம் கொடுத்தது.

சில கட்டுரைகளை லண்டனுக்கு அனுப்ப, இது 24 வயது கணிதக்காரரின் கட்டுரை என்பதை ஏற்க மறுத்து, பின்னர் அது உண்மை என கண்டபின் சொன்னார்கள், இவர் இருக்கவேண்டிய இடம் லண்டன், தூக்கி சென்றார்கள், தலைக்கு மேல் வைத்து கொண்டாடினார்கள்.

படிக்க லாயக்கில்லாதவன்,பைத்தியக்காரன்,பிழைக்க தெரியாத பித்தன் என கும்ப்கோணத்திலும்,சென்னையிலும் ஓடஓட விரட்டப்ட்டு தள்ளபட்ட ஒரு மாபெரும் அறிவாளிக்கு லண்டனில் கொடுக்கபட்ட கொளரவம் “Fellow of the royal Society”

உலகில் அந்த அங்கீகாரத்தினை பெற்ற முதல் தமிழன்,முதல் இந்தியன். சொந்த மக்களுக்கு உதாவாக்கரை, முதல்தர கேம்பிரிட்ஜ் கல்லூரிக்கு அறிவுகடல்.

அவரது லண்டன் வாசம் 5 ஆண்டுகளுக்குள்ளேதான் ஆனால் உலகின் கணித மும்மூர்த்திகளில் இவரும் ஒருவர்,என அவரை ஏற்றுகொண்டனர். (மற்ற இரு கணக்கியலர்கள் லியோனார்டு ஆய்லர் (1707-1783) மற்றும் கார்ல் குஸ்டாவ் ஜாகோபி (1804-1851) ), ராமனுஜம் 3 நோட்டுகள் முழுக்க எழுதினார், பின்னாளில் அவற்றை வரிசைபடுத்தி புத்தகமிட்டார்கள்.

அதில் 3542 தேற்றம் அவர் நிறுவினார், 2000 உலகிற்கு அவர் புதிதாய் சொன்னது, இன்னும் பல தேற்றங்களுக்கு கேள்விகளை விட்டு சென்றிருக்கிறார், இன்னொரு ராமானுஜம் வந்தால் மட்டுமே அதற்கு தீர்வு கிடைக்கும் என கணித உலகம் காத்திருக்கின்றது.

5 ஆண்டுகள் கழித்து சென்னை பல்கலைகழகம் அவருக்கு பேராசியரகாக பணி செய்ய வேண்டுகோள் விடுத்தது, மனைவியை காண ஓடோடி வந்த ராமானுஜத்திடம் வறுமை ஒழிந்தது,ஆனால் அது முன்பு விட்டு சென்ற நோய் வளர்ந்து ராமானுஜம் உயிர்கேட்டது.

அன்றைய தமிழ் பிராமண சமூகம் கடல்கடந்து மிலேச்ச நாட்டுக்கு சென்றுவந்தவனை ஏற்காது, அப்படி ராமானுஜமும் புறக்கணிக்கபட்டார், எப்படிபட்ட கொடுமை இது? பிறகு ஏன் காவேரி வற்றாது?

நோயுடனும் போராடி 32 வயதில் அவர் இறப்பதற்கு 1 மாதம் முன்னால் உலகிற்கு கொடுத்தது, புகழ்பெற்ற‌ “மாக் தீட்டா பங்க்சன்ஸ்”,

32 வயதில் அவர் இறந்தபின்னால்தான் உலகில் நுண்கணிதம் எல்லாம் அறிமுகமாயின, முழு வாழ்நாளும் ராமனுஜம் வாழ்ந்திருப்பாராயின் மிக நிச்சயமாக ஐன்ஸ்டீனுக்கு நிகரகாக சாதனைகள் புரிந்திருப்பார் என்பது அறிஞர்கள் ஒத்துகொண்ட உண்மை, ஐன்ஸ்டீனும் இறுதிகாலத்தில் சில கணிதமுடிவுகள் தெரியாமல் வருத்தபட்டு இறந்திருக்கமாட்டார்.

புகழுக்குரியவர்களை வாழும் பொழுது ஓடவிரட்டி, தெருப்புழுதிக்கும், சொறிநாய்க்கும் இணையாக வறுமையாலும்,அவமானத்தாலும் வதைத்து, அவன் இறந்த பின் லட்சகணக்கில் செலவு செய்து சிலை வைத்து கொண்டாடும் அறிவார்ந்த சமூகம் இது.

அவன் ஓடி ஓடி கணிதம் போதித்து 16 வயதிலே மாபெரும் மேதையாய் உருவெடுத்த கும்பகோணத்தில் அவன் வாழ்ந்த வீட்டிற்கு வழி சொல்ல கூட யாருக்கும் தெரியவில்லை, அங்கு அவனுக்கோர் அடையாளமில்லை (அன்னை சத்யபாமாவிற்கு அங்கு கோயிலே உண்டு), ஆனால் அவனின் கையெழுத்து நோட்டு புத்தகம் லண்டன் கணித கழகத்திற்கு இன்றும் மூல பைபிள்.

பிராமணர் என்பதால் தமிழகத்தில் புகழ் மறைக்கபட்ட பெரும் அநீதிக்கு ராமானுஜமும் தப்பவில்லை. அண்ணாவிற்கும், பெரியாருக்கும் ஊரெங்கும் சிலைகள், சாலைகள் உள்ள தமிழகத்தில் ராமானுஜன் பெயரில் ஒரு கல்லூரி அல்லது பல்கலைகழகம் காணப்படும்?, கிடையாது.

உண்மையில் சென்னை பல்கலைகழகத்திற்கு ராமானுஜம் பெயர்தான் சூட்டபட்டிருக்க வேண்டும், ஆனால் அண்ணா பெயர் சூட்டபட்டது, அண்ணாவிற்கும் விஞ்ஞானத்திற்கும் என்ன சம்பந்தம்?

இதுதான் தமிழக யதார்த்தம், சாதித்தவன் ஆயினும் பிராமணன் என்றால் மூச்.

இப்படி எல்லாம் அழிக்கமுடியாத வரலாறான அவர் பிறந்த நாளை தேசிய கணித தினமாக அறிவித்திருக்கின்றார்கள், அக்கணித மேதையினை நாமும் நினைவு கூர்வோம்.

இன்றும் வான்கோள்களின் சுற்றுபாதை, செயற்கைகோள் சுற்றுபாதை முதல் ஏடிஎம் மெஷின்களின் செயல்பாடுவரை அவனது தியரியே துல்லியமாக செயல்பட்டுகொண்டிருக்கின்றது

கெப்ளர், கோப்பர்நிக்கஸ், நியூட்டன், ஐன்ஸ்டீன், ஆய்லர் வரிசையில் இடம்பிடித்த அந்த அறிவாளி தமிழனின் நினைவு நாளில் அவனுக்கு பெரும் அஞ்சலிகள்

தமிழகத்து ஐன்ஸ்டீன் அவன்..முடிவிலி தத்துவத்தை சொன்ன முடிவில்லா புகழுக்கு சொந்தக்காரன்

சீனிவாச ராமானுஜம்

உலகின் ஒப்பற்ற கணிதமேதையான, இந்தியாவின் கணித அறிவு அடையாளமான சீனிவாச ராமானுஜத்தின் நினைவு நாள் இன்று

அவன் வரலாற்றை படியுங்கள், அவரை போல‌ ஒரு ஏழை குடும்பத்துக்காரர் இல்லை

அவருக்கு சாப்பாட்டுக்கே வழி இல்லை. அவ்வளவு வறுமை

நிச்சயம் பெரும் படிப்புமில்லை, பிரமணாள் படித்தவர் ஆங்கில புலமை மிக்கவர் என்பதும் அவர் விஷயத்தில் பொய் அன்னார் ஆங்கிலத்தில் பெயில்

அவரின் வறுமையும் கணித ஆர்வமும் எப்படி இருந்திருக்கின்றது என்றால் இப்படி புலம்பியிருக்கின்றார்

“உணவு மட்டும் கொடுங்கள், கணித முடிவுகளை கொட்டுகின்றேன், மூன்றுவேளை உனக்குத்தான் எனக்கு சிரமம் கணிதம் அல்ல” என அவன் வெள்ளையர் முன் நின்ற வரலாறு கண்களை குளமாக்கும் காட்சிகள்

அச்செய்தி சொல்வதென்ன?

நிச்சயமாக பிராமண சூது, பிராமணன் ஆண்டான், சுரண்டினான் என்பதெல்லாம் முழுக்க ஏற்கும் விஷயம் அல்ல, அன்றே ஏழை பிராமணரும் ஏராளம் இருந்திருக்கின்றார்கள்

ராமானுஜத்தின் அறிவு அவருக்கு ஏற்றம் கொடுத்தது, அந்த திறமை அவரை வாழவைத்தது. அதே நேரம் பிராமண சமூகத்து கட்டுபெட்டிதனமும் அவரை இறுதிகாலத்தில் பாடாய் படுத்தியிருகின்றது

இந்த நாளில் வரும் சிந்தனைஇதுதான்

அந்த ஏழை ராமானுஜத்தை அடுத்தநாட்டுக்காரன் கண்டறிந்து உலகறிய செய்தான்

பிராமணரில் மகா ஏழைகள் அன்றும் இருந்திருக்கின்றார்கள், இன்றும் இருக்கின்றார்கள்

இன்றிருக்கும் ஏழை பிராமணரிலும் ராமானுஜம், விஸ்வேசரய்யர் இன்னபிற மேதைகள் ஒளிந்திருக்கலாம்

ஆனால் பிராமணன் என்ற ஒற்றை விஷயத்திற்காக வாய்ப்பு மறுக்கபட்டு அவர்களை எல்லாம் இத்தேசம் கொலை செய்துகொண்டிருக்கின்றது

அவர்களை காப்பாற்ற யாருமே இல்லை

அதில் தப்பி பிழைக்கும் சிலர் இன்றும் அதே வெள்ளையனிடம் ஓடுகின்றார்கள், அவனும் அணைத்துகொள்கின்றான்

அவர்கள் சுந்தர் பிச்சையாகவும் இன்னும் பலராகவும் உலகில் எங்கோ உயரத்தில் இருக்கின்றார்கள்

ஏழை பிராமணர் நிலை அன்றும் அப்படித்தான் இருந்திருக்கின்றது, ஆச்சரியமாக இன்றும் அப்படித்தான் இருக்கின்றது

ஆனால் பிராமணன் ஆண்டான், பிராமணன் சுரண்டுகின்றான், பார்ப்பான அதிகாரம் என்ற அரசியல் மட்டும் இங்கு ஓயவே இல்லை

கொஞ்சம் விசாரித்து கொடுக்கட்டும்

இலங்கையில் கிறிஸ்தவ ஆலயம் தகர்க்கபட்ட இடம் மூன்று, கொழும்பு கொச்சிகடா, நீர்கொழும்பு மற்றும் மட்டகளப்பு ஆலயம்

இதில் மட்டகளப்பு சற்று தொலைவானது என்பதாலும் கொழும்பு போல் அல்லாது பரபரப்பு வாழ்க்கைக்கு ஒதுங்கிய பகுதி என்பதாலும் அந்த குண்டுவெடிப்பினை நிகழ்த்தியவனை பற்றி தகவல் இப்படி வருகின்றது

கொழும்பு பஸ்நிலையத்தில் அவன் பேருந்து ஏறியிருக்கின்றான் கையில் பொதிசகிதமாக, மட்டகிளப்பு சென்ற அவன் இரவில் பள்ளிவாசல் பூட்டபட்டதால் வெளியிலே உறங்கியிருக்கின்றான்

அதிகாலை குளித்து தொழுகையினை முடித்தபின்பே மாதா கோவில் பக்கம் வந்திருக்கின்றான், அது பழமையான ஆலயம். அவன் இலக்கு அதுதான்

ஆனால் அவன் வருவதற்குள் ஈஸ்டர் திருப்பலி நிறைவேறி இருந்ததால் அவன் எண்ணம் ஈடேறவில்லை

எங்காவது கிறிஸ்தவர் மத்தியில் சாகவேண்டுமே என தவித்த அவன்
சீயோன் தேவாலயம் வந்து அங்கு வழிபாட்டு நேரம் எல்லாம் விசாரித்திருக்கின்றான்

ஈஸ்டர் கொண்டாட்டதில் இருந்த கிறிஸ்தவர்கள் அவனைபற்றி விசாரிக்க தான் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவனாக மாற வந்திருப்பதாக சொல்லியிருக்கின்றான்

இது போதாதா? அது பிரிவினை கோஷ்டி ஆலயம் போல தெரிகின்றது, சில காரணங்களுக்காக அதை குறிவைத்திருகின்றனர்

“வாராய் நீ வாராய்” என அவர்கள் வரவேற்க “போகுமிடம் வெகு தூரமில்லை..” என அவனும் நடந்திருக்கின்றான்

வழிபாடு தொடங்கும்பொழுது எல்லோரையும் பரலோகத்திற்கே அழைத்து சென்றிருக்கின்றான்

எதற்கு சொல்கின்றோம் என்றால் யார் வந்தாலும் ஞானஸ்நானம் கொடுக்கும் கிறிஸ்தவ கும்பல் இனியாவது கொஞ்சம் விசாரித்து கொடுக்கட்டும்

இயேசு ஒன்றும் கோபபடமாட்டார்..

மஞ்சள் நிறம்

இந்துக்கள் மஞ்சள் நிறத்தை ஏன் மங்கல நிறமாக வைத்தார்கள்? நிறங்களில் தனித்துவம் மிக்கது மஞ்சள் நிறம்

இந்துக்களின் ஆலய ஆடை முதல் தாம்பூல தட்டுவரை மஞ்சளை பார்க்க முடியும், மஞ்சளை தொட்டுவைத்துதான் சுபகாரியங்களை தொடங்குவார்கள்

மஞ்சளும் இந்துமத கலாச்சாராமும் பிரிக்கமுடியாதவை

மஞ்சள், மஞ்சள் நிற எலுமிச்சை, அரைத்து வந்த மஞ்சள் சாந்து இவையன்றி இந்துக்கள் வழிபாடே இருக்காது

ஒரு நல்ல இந்து எப்படியாவது மஞ்சள் நிறத்தை அனுதினமும் சிலமுறையாவது பார்க்க வேண்டும் அல்லது அந்நிறம் கொண்டதை கையில் வைத்திருக்க வேண்டும் என்பது அவனுக்கு அம்மதம் செய்திருக்கும் ஏற்பாடு

அதற்கு காரணம் இந்துக்களுக்கு பெரும்பாலும் தெரியாது, அது குருவுக்கு உகந்தது, குரு பார்வை கிட்டும் இன்னும் பல விஷயங்களை சொல்லிவிட்டு செல்வார்கள்

உண்மையில் அதிலும் ஏகபட்ட விஞ்ஞான தத்துவம் இருக்கின்றது

ஆம் நிறங்களில் அதிகம் ஈர்ப்புதன்மை உடையது அதுதான் என்கின்றது ஆய்வு

மற்ற நிறங்களை விட அது பார்ப்போரை அதிகம் ஈர்க்குமாம், தனிகவனம் பெறுமாம்

எத்தனை வகையான பூச்சூடி ஒரு பெண் வந்தாலும் ஒற்றை மஞ்சள் ரோஜா சூடி ஒரு பெண் தனி கவனம் பெறுவாள்

மஞ்சள் ஆடைக்கும் அதே ஈர்ப்பு

இந்த மஞ்சள் வர்ண தத்துவத்தில்தான் உலகெல்லாம் பள்ளி வாகனங்கள் மஞ்சள் வண்ணமாகவே அறிவிக்கபட்டிருக்கின்றன‌

ஆம் மற்ற நிறங்களைவிட அந்த நிறம் தனி கவனம் பெறும் என்பதால் மற்ற வாகனங்கள் எளிதில் கண்டுகொள்ளும் என்பதால் இந்த ஏற்பாடு

இந்தியாமட்டுமல்ல உலகெல்லாம் அதுதான் பள்ளிவாகன நிறம்

இன்று விஞ்ஞானம் ஒப்புகொண்ட இந்த தத்துவத்தை அன்றே இந்துக்களுக்கு சொல்லிகொடுத்தது யார்?

மஞ்சள் எல்லா இடங்களிலும் இருந்தாக வேண்டும் என அவர்களுக்கு சொன்னது யார்?

ஆலய யாத்திரை செல்லும்பொழுது மஞ்சள் ஆடை உடுத்தி சென்றால் தூரத்தில் வரும்பொழுதே கவனம்பெற்று மற்றவர்கள் வணங்கி வழிவிடுவார்கள் என சொல்லிகொடுத்தது யார்?

மனிதனுக்கு தனி உற்சாகம் கொடுக்க கூடியது மஞ்சள் நிறம், உளவியல் ரீதியாக அது பெரும் சந்தோஷம் கொடுக்குமாம்

இந்துக்களின் உடையிலும் ஆலயத்திலும் ஏன் உணவிலும் கூட மஞ்சள் தவிர்க்க முடியாதது

மஞ்சள் மனிதனுக்கு மகத்துவத்தையும் தனி உற்சாகத்தையும் கொடுக்கும் , தனி ஈர்ப்பினை ஏற்படுத்தும் என்பதால்தான் இந்துக்கள் குருபகவான் அவன் அருள் என என்னவெல்லாமோ சொல்லி வைத்தார்கள்

இந்துக்கள் மஞ்சள் நிறத்தினை பெருமை படுத்தியதில் அர்த்தம் உண்டு என இன்றைய உலகம் ஏற்றுகொள்கின்றது

மஞ்சள் இங்கு அப்படி கொண்டாடபட்டது, ஒரு காலத்தில் மங்கலம் மற்றும் நல்லுறவின் அடையாளமாக மஞ்சள் நிறத்தில்தான் ஜவுளி மற்றும் மளிகை கடை அன்பளிப்புகள் கூட இருந்தன‌

இங்கு அந்நிறம் அப்படி கொண்டாடபட்டது

ஆனால் நாகரீகம் என்ற போக்கில் இங்கு அது மாறிவிட்டது, மஞ்சள் என்றால் பட்டிக்காடு என்றும் ராமராஜன் பாணி எனவும் கிண்டல் செய்யும் அளவு ஆகிவிட்டது

ஆனால் மேற்கு நாடுகளோ மஞ்சள் நிறத்தின் மகிமையினையும் உணர்ந்து மாறிகொண்டிருக்கின்றன‌

மஞ்சளை நாமும் போற்றுவோம், இந்துக்கள் சொன்ன தத்துவம் சாதாரணம் அல்ல, மஞ்சள் தனிபெரும் பலன்களை கொடுக்க கூடியது

இன்று விஞ்ஞானம் கண்ட அந்த ரகசியத்தை அன்றே சொன்ன இந்துக்கள் எப்படிபட்ட அறிவார்ந்த சமூகமாக இருந்திருக்க வேண்டும்?

மஞ்சளின் மகிமை தெரிந்ததாலோ என்னவோ மிகபெரும் அறிவாளியும் கடும் முன்னெச்செரிக்கை கொண்டவருமான கலைஞர் கருணாநிதி மஞ்சள் துண்டுக்கு மாறினார்

பார்க்கவே அருவெறுப்பானதும் அமங்கலத்தின் அடையாளமானதும் இந்திய பருவகாலத்திற்கும் ஒத்துவராததும் , பார்த்ததும் வெறுப்பினை கொடுக்கும் வண்ணத்தில் இருந்து அவர் மஞ்சளுக்கு மாறினார்

ஆனால் மஞ்சளுக்கு அவர் மாறியபின் அவருக்கான பெரும் விபரீத ராஜயோகம் தொடங்கிற்று

சன்டிவி வந்தது, மத்திய அமைச்சரவையில் 15 ஆண்டுகாலம் இடம்பிடித்தார், ஜெயாவுக்கு நெருக்கடி கொடுத்தார் , சிறையிலும் தள்ளினார் இன்னும் ஏராளம்

ஆம் மஞ்சள் துண்டுக்கு மாறியபின் அவருக்கு வளர்ச்சியே தவிர சரிவு இல்லை, நிச்சயம் இல்லை

என்ன ஜாதகம் அவருடையது? ஒரு மனிதன் அதுவும் நாத்திக மனிதன் ஆத்திகத்துக்குமா எடுத்துகாட்டாக இருப்பான்?

அவர் இருந்திருக்கின்றார், விசித்திரமான மனிதர் அவர்

அவர் இருக்கட்டும்

மஞ்சள் சாந்து, அரைத்த மஞ்சள், எலுமிச்சை, மஞ்சள் நீர் விளையாட்டு, ஆலயங்களுக்கான மஞ்சள் ஆடை என இந்துக்களின் பெரும் அடையாளமான மஞ்சள் நிறத்தில் ஏகபட்ட விஞ்ஞான ரகசியம் உள்ளது

உணவுக்காக சேர்க்கபடும் மஞ்சள் பெரும் நோய்களை தவிர்க்கின்றது என்பது மருத்துவம் அதையும் இந்துக்கள் செய்தார்கள்

பார்த்தாலே தனி கவனம் கொடுக்கும் என மஞ்சள் நிறத்தை சொல்லி பள்ளிவாகனம் வரை வைத்திருக்கின்றார்கள் மேல்நாட்டவர்

இதை இந்துக்கள் என்றோ சொல்லிவிட்டார்கள்

காலசக்கரத்தில் எதெல்லாம் இந்துக்களின் மூடபழக்கம் என சொன்னார்களோ அதெல்லாம் மாபெரும் விஞ்ஞான தத்துவமாக ஏற்றுகொள்ளபட்டே வருகின்றது

அணுவுலை எவ்வளவு ஆபத்தானது

அதுவரை அணுவினை அழிவு குண்டாக அல்ல, ஆக்கசக்திக்கும் நம்பலாம் என உலகம் நம்பிகொண்டிருந்தது, இப்படி அமைதிக்கான பெரும் சக்தியாக அணுசக்தி இருந்தால் நல்லது என்றும் சில நாடுகள் சொல்லிகொண்டன‌

எல்லாம் இந்த ஏப்ரல் 26, 1986 வரை மட்டும்தான்

இன்று ஜென்மவிரோதிகளாக‌ அடித்துகொள்ளும் ரஷ்யாவும் உக்ரைனும், அன்று சோவியத் யூனியன் , பழைய ரங்கராவின் படங்களின் குடும்பம் போல‌ மகா ஒற்றுமை, பொதுவுடமை அல்லது பண்ணைமுறை ஏதோ ஒன்றில் இணைந்திருந்தது.

அன்று அவர்கள் பெரும் வல்லரசு, வல்லரசு என்றால் நிச்சயம் அணுகுண்டு வேண்டும். அணுகுண்டு வேண்டுமென்றால் அணுவுலை வேண்டும்.

1955 களிலே ஏகபட்ட அணுவுலைகளை அமைத்திருந்தது ரஷ்யா, 1958ல் அவர்களின் முதல் அணுவுலை விபத்து நிகழ்ந்தது, 1974ல் ஷென்ஸ்கோவ், 1983ல் ஆட்டோமோஷ் என அவ்வப்போது அவர்களின் நுட்பம் விபத்தினை தந்து கொண்டே இருந்தது,

அங்கு என்றல்ல அமெரிக்காவிலும் 3மைல் ஐலண்ட் என்ற இடத்தின் அணுவுலையிலும் விபத்துக்கள் உண்டு சொல்லமாட்டார்கள், அவர்களே சொல்லாதபொழுது சோவியத் எப்படி?

அவர்கள் இரும்புதிரை நாடு, ஊரே செத்தாலும் உலகிற்கு ஒன்றும் தெரியாமல் பார்த்துகொள்வார்கள், அவ்வளவு கட்டுபாடு. ஆனால் அதனை எல்லாம் மீறி அவர்களே ஆடிப்போனவிபத்து செர்னோபில்,

அவர்கள் என்ன? உலகமே அலறிற்று.

1986, ஏப்ரல் 26ல் செர்னோபில் அணுவுலை, கூடங்குள எதிர்காலத்தினை போல 4 உலைகளோடு இயங்கிகொண்டிருந்தது, வழக்கமான சோதனை, எல்லாம் சரி எனும் நிலையில், திடீரென நீராவிகுழாயில் ஏற்பட்ட விபத்து பெரும் விபத்தாக மாறி அணுவுலை வெடித்தது.

ஏதோ தீ விபத்தை அணைப்பது போல தீயணைப்பு சம்பிரதாயங்கள் நடந்துகொண்டிருந்தன, நரகாசுரன் என்றால் கொன்றுவிடலாம், ரத்தபீஜன் என்றால்?

ரத்த பீஜனின் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் இன்னொரு அரக்கனாக மாறும் என்பது புராணகதை, அணுவும் அப்படித்தான், பிளக்க பிளக்க போய்கொண்டிருக்குமே தவிர முடிவே இல்லை.

அந்த உலையில் ஊற்றபட்ட தண்ணீர் வழிந்தோடி ஆற்றில் விழுந்து ஆறு செல்லும் இடமெல்லாம், கதிரியக்கம் பரவியது, வானத்திலிருந்து ஹெலிகாப்டரில் நீருற்றிய பணியாளரில் 5 பேர் உடனடி கதிரியகத்திற்கு பலியாயினர். அடுத்த உலைகளில் பணியாற்றிய 30 பேர் மூச்சுவிட நேரமில்லாமல் செத்தார்கள்.

கம்யூனிச ரஷ்ய அரசு அதிர்ந்தது, ஆனால் மக்களை உடனடியாக வெளியேற்றியது, கிட்டதட்ட 5 லட்சம் மக்கள் உடனடியாக 100 கி.மீ தள்ளி கொண்டுசெல்லபட்டார்கள்.

அந்த 5 லட்சம் மக்களும் அலறி அடித்து ஓடினார்கள், பல்லாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் ஓடினார்கள், அப்படி தூக்கிகொண்டு ஓடபட்ட குழந்தைதான் பின்னாளைய டென்னினிஸ் குஷ்பு மரியா ஷெரபோவா

இந்த கதிரியக்கம் என்பது மெல்லகொல்வது, கிழக்கு ஐரோப்பா முழுவதும் அது பரவிற்று. 2 லட்சம் புற்றுநொயாளிகளை ஒரு மாதத்தில் உருவாக்கிற்று.

மேற்கு ஜெர்மனியில் மட்டும் கிட்டதட்ட 40000 குழந்தைகள் ஐ பட விக்ரம் போல அலங்கோலமாக உருமாறி பிறந்தன, அச்சபட்ட அரசுகள் அதிரடியாக கருக்கலைப்புகளை தமிழக கள்ளவோட்டுபோல கணக்கற்று செய்தன.

அந்த அணுவுலையை மிக சிரத்தைஎடுத்து 5 அடி தடிமன் கொண்ட காங்ரீட்டால் மூடியபொழுதும் அது 3 ஆண்டுகளில் சிதைந்தது. மறுபடி செலவு, மக்கள் இடமாற்றம், அணுவுலை பராமரிப்பு என ரஷ்ய பட்ஜெட் எகிறியது.

அழிவென்றால் மகா அழிவு, இன்னும் அவ்வுலையை சுற்றி 200 கி.மீ அளவு வாழ தகுதியற்ற இடம், அப்படி விட்டால் கூட பரவாயில்லை 400 கி,மீ தள்ளி புற்களில் கூட கதிரியக்கம் இருந்ததாம், அங்கு வளர்ந்த மான்களும், கால்நடைகளுக்கும் கதிரியக்கம் ஏற்பட்டு அவைகளை உண்ண கூடாத நிலை வந்தது.

அவ்வளவு ஏன் குடிநீரில் கூட கதிரியக்கம் இருந்ததால், அச்சபட்டு வேறுநாட்டிலிருந்து குடிநீரும் கொண்டுவரபட்டது.

1986ல் சும்மாவே சோவியத் பொருளாதாரம் ஆட்டம் கண்டிருந்தது, அன்றைய அதிபர் மிகாயில் கார்பசேவ் பெரோஸ்திகா எனும் கசப்பு மருந்தினை அதாவது மோடியின் நடவடிக்கை போல பொருளாதார சீர்திருத்தங்களை அழிச்சாட்டியமாக செய்துகொண்டிருந்தார்

நாடு எப்படி தாங்கும்?

உக்ரைன் என்பது ஐரோப்பானின் தானிய களஞ்சியம், நமக்கு பஞ்சாப் போல செழிப்பான பூமி. நெப்போலியன் முதல் ஹிட்லர் வரை ரஷ்ய பகுதியினை குறிவைக்க அதுவும் பெரும் காரணம.

சோவியத் ரஷ்யாவிற்கு அதுதான் ரொட்டி கொடுத்தது.

அந்த உணவுபொருளில் கதிரியக்கம், அதன் இறைச்சியில் கதிரியக்கம் சாப்பிட கூடாது என்றால் சோவியத் மக்கள் எதனை உண்பது?

ஒரு பக்கம் பண தட்டுப்பாடு இன்னொரு பக்கம் செர்னோபில்லில் பாதுகாப்பு செலவு, நாட்டில் உணவு பஞ்சம் என்னாகும்? அமெரிக்காவிடம் கோதுமைக்கு கையேந்தும் அளவு ரஷ்ய நிலை போயிற்று

நிலமை மோசமாகி ஒரு கட்டத்தில் அந்த அமைப்பே சிதறிற்று. பின் உக்ரைனுக்கு கொடுக்க வேண்டிய நஷ்ட ஈட்டையும் கொடுக்க ரஷ்யாவால் முடியவில்லை

ரஷ்ய உக்ரைன் மோதலின் தொடக்கபுள்ளி இது.

சோவியத் யூனியன் எனும் மாபெரும் சக்தி சரிய இந்த மாபெரும் அணுவுலை வெடிப்பும் பெரும் காரணம்

ஐரோப்பாவிற்கே சோறு போட்ட உக்ரைனின் சொந்த நாட்டு விவசாய பொருட்களை கூட 3 ஆண்டுகள் உண்ணாமல் வேறு நாடுகளிலிருந்து வாங்கி சாப்பிடும் அளவிற்கு நிலை மோசம், இதனை கண்டு மனம் வெறுத்து மிகசரியாக அடுத்த 2 ஆண்டுகளில் ஏப்ரல் 26ம் தேதி தற்கொலை செய்துகொண்டார் அந்த அதிகாரி.

அவர்பெயர் “வாலெரி லெகசோவ்” சோவியத் ரஷ்ய தலமை அணுசக்தி விஞ்ஞானி, இதற்குமேல் சொல்வதற்கு என்ன இருக்கின்றது.

அணுவுலை எவ்வளவு ஆபத்தானது? அது உறங்கும் எரிமலை விட மகா மோசமானது என்பதை உலகம் அறிந்துகொண்ட நாள் ஏப்ரல் 26.

இந்த மாயை வியாபார உலகில் உள்ளாடைகளுக்கு கூட ஒரு நாள் உண்டு, மிக தந்திரமாக அணுகுண்டு வீசபட்ட நாள் அணு எதிர்ப்புநாள், ஆனால் அணுவுலை வெடித்தநாளில் ஒரு மண்ணாங்கட்டி நினைவஞ்சலியும், ஊர்வலமும் கிடையாது.

காரணம் அதனை நினைவுபடுத்தி மக்களை சிந்திக்கவிட்டால் உலகெங்கும் ஒரு அணுவுலை கூட அமைக்கமுடியாது, அந்த அளவிற்கு அதனைபற்றிய கடும்கட்டுபாடுகளை அரசுகள் மேற்கொள்கின்றன.

உக்ரைனில் வெடித்ததும் நீராவிகுழாய் வால்வுதான், புக்குஷிமாவில் பெரும் அழிவினை உண்டாக்கி இன்று ஜப்பான் வலுஇழப்பதற்கும் காரணம் அதே நீராவிகுழாய் அழுத்தம்தான், இரண்டுமே ரஷ்ய டிசைன்கள்.

கொஞ்சநாளைக்கு முன்பாக கூடன்குளத்து உலையில் நடந்ததும் வெறும் நீராவிகுழாய் வெடிப்புதான் என செய்திகள் வந்ததும் நினைவிருக்கலாம்.

அப்பகுதி மக்கள் ஒரு பெரும் போராட்டத்தை அதுவும் உலகமே திரும்பிஎன கேட்கவைத்த போராட்டத்தை அவ்வளவு எளிதில் மறக்கமுடியாது.

ஆனால் அது சாதிரீதியாக விமர்சிக்கபட்டு, பின்னர் போராட்டகுழு தலைவர் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டபொழுது மத ரீதியாக விமர்சிக்கபட்டு தோற்றும்போனார் பெரும்பான்மைபெற்றவர் டெல்லிசென்றார்.

அங்கு அவர் என்ன செய்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும், தலையணை மட்டும் இல்லை. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்றால் எவ்வளவு பெரும் வாய்ப்பு? அதுவும் சொந்தமாவட்ட மக்களின் வாழ்வாதார பிரச்சினை. ம்ஹூம் அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் வேறு.

உதயகுமார் மீது ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும் கூடங்குளத்திலான போராட்டத்தில் நியயாம் இல்லை என சொல்லமுடியாது

அவரை சாதி மதத்தால் விமர்சிக்கலாம். ஆனால் அணு அப்படிபட்டது அல்ல. அதற்கு ஜாதி,மதம்,இனம் தெரியாது. வெளியே வந்துவிட்டால் ஓரறிவுமுதல் ஆறறிவுவரை அனைத்து உயிர்களையும் அழித்துவிட்டு, அடுத்த 1000 ஆண்டுகளுக்காவது அதனை சுடுகாடாக மாற்றும்.

பாதுகாப்பான அணுவுலை கதிரியக்கத்தை கட்டுபடுத்தலாம் எனும் விஞ்ஞானிகள், அந்த கழிவினை என்ன செய்வீர்கள் என்றால் அப்படியே எலிபொந்துக்குள் ஒழிந்துகொள்கின்றார்கள். அவர்களும் என்ன செய்வார்கள், அவர்களுக்கும் தெரியாது என்பதுதான் உண்மை,

சமீபத்தில் உச்சநீதிமன்றம் கேட்ட இதே கேள்விக்கும் அணுவுலை சார்பாக பதிலே இல்லை, ஆனால் அந்த கழிவு மகா ஆபத்தானது.’

அணுகுண்டு துகள்போக மீதியை இரும்புபெட்டியில் போட்டு நிலத்தில் புதைக்கவேண்டும், அல்லது நடுகடலில் போடவேண்டும். கன்னடர் போல கோலாரில் எதிர்ப்பு தெரிவிக்க (ஆனால் மின்சாரம் வேண்டும்) கடலில் நெத்திலிமீன்கூட சண்டைக்கு வராது.

கல்பாக்கத்தில் அபாயகரமான ஈணுலை அமைக்கின்றார்களாம், கூடங்குளத்தில் 3,4 என விரல்கள் உயர்கின்றன. இதில் அமெரிக்காவோடும் ஒப்பந்தமாம். அமெரிக்க 3 மைல் அணுவுலை விபத்து கொஞ்சமும் குறைந்தது அல்ல.

தினமும் வாழமுடியாமல் பலபேர் சாவதை கண்டுகொள்ளாத அரசு, விவசாயிகளை கொஞ்சமும் கண்டுகொள்ளாத அரசு நிச்சயம் ஏப்ரல் 26 போன்ற ரணங்களையும் கண்டுகொள்ளாது.

மக்களிடம் விழிப்புணர்வு வேண்டும், அது சாத்தியமே இல்லை. நிச்சயம் அணுவுலைக்கு எதிராக பொங்கவேண்டிய தென் தமிழகம், சாதிக்கும் இன்னபிற கொடுமைகளிலும் மூழ்கி கிடப்பதை பார்க்கும்பொழுது அதெல்லாம் சாத்தியமில்லை,

உதயகுமாரும் அவர்களும், இடிந்தகரை மூதாட்டிகளும் மட்டுமே அதற்கு போராட பிறந்தவர்கள் என்பது இவர்களின் கொள்கை, இவர்கள் என்பதில் நானும் உண்டு என்பதையும் சேர்த்துகொள்ளலாம்.

நியூட்ரிணொ என்பதெல்லாம் கதிரியக்க வகை அல்ல, அது சுற்று சூழல் பாதிக்கும் விஷயம் எனும் வகையில் வரலாம். மலையினை குடைவதுதான் சிக்கல்

ஆனால் அணுவுலை அப்படி அல்ல, அபாயம்நிறைந்தது

அணுவுலை வெடிப்பு என்பது என்னவென்றால்
அந்த புராணத்தின் ரத்தபீஜனை நினைத்துகொள்ளுங்கள், அவன் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் இன்னொரு அரக்கனை உருவாக்கி உலகமே அவனால் நிறைந்ததாம், பின் அன்னை காளி அவன் ரத்தம் கீழே விழாமல் குடித்துதான் அவனை கொன்றாளாம்.

அவனது ரத்ததுளிக்கும் அணுவிற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை, ஆனால் அதனை விழுங்குவதற்கு யாரும் இல்லாமல்தான் செர்னோபில்லும், புக்குசிமாவும் இன்னும் ஏராளமான அணுவிபத்துக்களும் நமது கண்முன்னே நடந்து ஏராளமான உயிர்களை கொன்றுகொண்டிருக்கின்றது.

ஆயினும் நாமெல்லாம் பாரத தாயின் மக்கள், இன்றைய அணுவிஞ்ஞானம் ஐரோப்பியர் அல்லது யூதருடையது. ஆனால் மகா பாரதத்திலே அஸ்வத்தாமன் ஒரு புல்லை பிரம்மாஸ்திரமாக மாற்றினான், அதற்கு அர்ச்சுணனிடம் பதில் கனையும் இருந்தது.

அர்ச்சுணனுக்கு அதை கட்டுபடுத்தும் வித்தை தெரிந்தது, ஆனால் அஸ்வத்தாமனுக்கு தெரியவில்லை என்று சொல்லபட்டிருக்கின்றது.

அதாவது சாதாரணபொருளை அழிவு ஆயுதமாக செய்யலாம், அப்படிதான் வெறும் கல்லான யுரேனியம் அணுகுண்டாக மாறுகின்றது, அது அழிவுசக்தி ஆனால் கட்டுபடுத்தும் வித்தை நிச்சயம் உண்டு, என பாரதம் நம்பிக்கை அளிக்கின்றது.

ஒருவேளை அந்த நுட்பம் தெரியாதவர் வரும் முன், யாராவது அஸ்வத்தாமன் போல வீசிவிட்டால்? , அப்பொழும் காக்க பகவான் தான் வரவேண்டும்.

அப்படித்தான் இடிந்தகரை கடற்கரை அருகில் ஒரு கூட்டம் கடலைகளயும் தாண்டி வருடகணக்கில் கதறிகொண்டிருந்தது.

அந்த கதறல் நிச்சயம் அவர்களுக்கானது மட்டுமல்ல, மொத்த தென் தமிழ்,வட இலங்கை மற்றும் கேரள மக்களுக்கானது, அவர்களின் சந்ததிகளுக்கானது என்பதை மறந்தாயிற்று, இலங்கை இப்பொழுது இந்தியாவினை கட்டுபடுத்தும் விஷயங்களில் இந்த அணுவுலை விவகாரமும் சேர்ந்து கொண்டது

தமிழகம் அணுவுலைகளால் பாதுகாப்பான மாநிலம் அல்ல என்பதை ஏப்ரல் 26, செர்னோபில் கொடூரம் நினைவுபடுத்திகொண்டே இருக்கின்றது. இந்த மாநிலத்தில் கல்பாக்கம், கூடன்குளம் என இரு நிலையங்கள் நிச்சயம் சரி அல்ல‌

செர்னோபில் பாதிப்பு வரலாற்றின் பெரும் அவலம், ஹிரோஷிமா அழிவிற்கு சற்றும் குறையாதது

ஹிரோஷிமாவிலாவது அணு குண்டுக்குபின் மக்கள் வாழ்ந்தார்கள், அந்த சுவடு மட்டுமே இன்னும் உண்டு. ஆனால் செர்னோபில் மனிதர் வாழ தகுதியற்ற இடமாயிற்று, இன்றும் அது சுடுகாட்டு மயானம் போலே இருக்கின்றது

அணுகுண்டை விட ஆபத்தானது இந்த அணுவுலைகள்

இந்த வெடிப்பால் நேரடியாக பாதிக்கபட்ட 2 லட்சம் மக்கள், மறைமுகமாக பாதிக்கபட்ட 8 லட்சம் மக்கள், கால்நடைகள், அலங்கோரமான மனிதபிறப்புக்கள் என அதனை ஒருமுறை எண்ணினால் போதும்.

அந்த அணு அரக்கனை அடக்கும் வரம் நமக்கு வரும்வரை அந்த அரக்கனை எழுப்பாதீர்கள், அவன் அப்படியே உறங்கட்டும் என உரக்க கத்த தோன்றும்,

ஞானியின் இதயம் துக்க வீட்டு சிந்தனையில் இருக்கும் என்கின்றன தத்துவ நூல்கள்.

அணுவினை நினைக்கும் பொழுதெல்லாம் இந்த செர்னோபில்தான் நினைவுக்கு வரும் அதற்கு ஞானம் எல்லாம் வேண்டாம், மனசாட்சி போதும்

ஆள்வோர்களுக்கு ஞானம் இல்லாவிட்டாலும், மனசாட்சியும் இல்லாமலே போயிற்று, அதனை இயக்கிவிட்டார்கள், இன்னும் பெருகிகொண்டே செல்லுமாம்

இந்த பாவபட்ட இந்தியர் என்ன செய்ய முடியும்? கடவுளிடம்தான் அழமுடியும்

பாரதம் அந்த அணுகுண்டை கண்முன் காட்டி நிற்கின்றது, அஸ்வத்தாமன் அப்படி அழித்திருக்கின்றான், அந்த சாம்பலில் கர்பிணியின் கரு கூட பாதிக்கபடும் அபாயம் இருந்திருக்கின்றது, கண்ணன் உட்புகுந்து காப்பாற்றி இருந்திருக்கின்றான்

அர்ஜூனனும் கனை பாய்ச்சி இருந்தால் உலகம் அழிந்திருக்கும், ஆனால் எய்துவிட்டு திரும்ப பெற்றான் என்கின்றது அந்த புராணம்

ஆக கட்டுபடுத்தும் சக்தி பிற்காலத்தில் வரலாம் என்பது உண்மை, காலமாகலாமே தவிர இந்துக்கள் புராணத்தில் சொல்லபட்டது எதுவும் நிஜம் ஆகாமல் போனதில்லை

ஏவுகனை, விமானம் , தொலைதொடர்பு , மருத்துவம் என எல்லாம் அவர்கள் சொன்னபடியே எல்லாம் இன்று சாத்தியமான நிலையில் இந்த அணுசக்திக்கும் முடிவு பின்னாளில் வரலாம்

அதுவரையில் கண்ணனிடம் தான் காத்து நில் என கேட்க வேண்டும்.

“அர்ச்சுணனுக்கு தெரிந்த அந்த கட்டுபடுத்தும் வித்தையை, எமக்கு சொல்லமாட்டாயா பரந்தாமா?” என்று அவரிடம்தான் கேட்க வேண்டும்.

அவர் புல்லாங்குழலோடு மாய சிரிப்பு சிரிக்கின்றார், அதன் அர்த்தம் நமக்கு புரியாது

காளி கொன்ற ரத்தபீஜனின் கதையும் அணுதத்துவத்தை அழகாக சொல்கின்றது, அதை கட்டுபடுத்தமுடியும் என நம்பிக்கை அளிக்கின்றது

என்றேனும் ஒரு நாள் அந்த கட்டுபடுத்தும் வித்தையினை மானிட இனம் பெறக்கூடும். அதுவரை அடம்பிடிக்கும் அரசுகளின் அணுவுலைகள் அமைதியாய் இயங்கட்டும்