திராவிடத்தால் நல்ல படங்களை பெற்றோம் உறவே

தமிழ் சினிமாவில் முதன் முதலில் கிராமத்து காவியம் என சொல்லி சாதிய படங்களை எடுக்க தொடங்கியவர் பாரதிராஜா

அல்லி நகரத்து பால்பாண்டி பாரதிராஜா என மாறினாலும் அந்த ஜாதிபெருமை மட்டும் மாறவே இல்லை

(பாக்யராஜ் ஒரு சிலர் பாரதிராஜாவின் படங்களை போல கோயம்புத்தூர் கவுண்டர் படங்களை கொடுத்தாலும் அதில் கிராமத்து சாயல் இருந்ததே தவிர சாதி வெறி இல்லை

அக்கால கோவை பகுதி சினிமாக்காரர்கள் அப்படித்தான் இருந்திருக்கின்றார்கள்

இதில் சின்னப்ப தேவர் போன்றவர்கள் அப்படித்தான் அவர் தேவராக இருந்தாலும் சாதிய அடையாளங்களை ஒரு காலமும் காட்டவே இல்லை

சொந்த சாதிக்காரன் என்றாலும் சிவாஜி கணேசனை வைத்து ஒரு படம் கூட அவர் எடுத்துவைத்ததில்லை)

பாரதிராஜா போட்டு வைத்த பாதையில் யாரெல்லாமோ வந்தார்கள், ஏன் சைமன் கூடஅவர் பழைய படங்களில் முத்துராமலிங்க தேவரை மறக்காமல் காட்டிகொண்டிருந்தார்

அதே நேரம் இன்னொரு விஷயமும் இங்கு நடந்தது

அதுவரை தமிழ் சினிமாவின் பைனான்சியர்கள் எனப்படும் பெரும் பொறுப்பு செட்டி மார்வாடி என சிலர் கையில் இருந்தது

சசிகலாவின் எழுச்சிக்கு பின் கந்துவட்டி கும்பல் சினிமா உலகத்தை வளைத்தது

கவனித்து பாருங்கள் , இந்த மதுரை தேனி பகுதி கதைகள் அதிகம் வர ஆரம்பித்தது இந்த அன்புசெழியன் போன்றவர்கள் திரைப்படம் தயாரிக்க வந்தபின்பு தான், அதற்கு முன் நிலமை அப்படி அல்ல‌

ஆக இந்த தேவராட்டம் போன்ற படங்கள் வர முதல் காரணம் பாரதிராஜா, அடுத்த காரணம் சசிகலாவின் பினாமிகள்

அவ்வளவுதான் விஷயம்

ஜாதியினை வைத்து சினிமாவில் சம்பாதிக்கலாம் என வந்த இன்னொரு முகம் பா.ரஞ்சித்

முதலில் இந்த ரஞ்சித்திடம் இருந்தும், முத்தையாவிடமிருந்தும் தமிழ்சினிமாவினை காப்பாற்ற வேண்டும்

ஒரு விஷயத்தை கவனித்து பார்க்கலாம், 1960களிலும் சாதிவெறி இருந்தது ஆனால் திமுக போன்ற கட்சி பிரமுகர்களின் சினிமா பிடி ஜாதி வெறி படங்கள் வராமல் பார்த்து கொண்டது

சிவாஜிக்கும் ராமசந்திரனுக்கும் இன்னும் பலருக்கும் சாதி அடையாளமின்றி திராவிட கட்சி பிரபலங்கள் வராமல் பார்த்துகொண்டன‌

பல நல்ல கதையம்சம் உள்ள படங்கள் , சாதி மதத்துக்கு அப்பாற்பட்டு வந்தது அந்த பொற்காலத்தில்தான்

1990க்கு பின் அதாவது திராவிட சிந்தனையுள்ள அரசியல்வாதிகள் சினிமாவிலிருந்து வெளியேற, கலைஞரும் பல சிக்கல்களில் சிக்கிகொண்ட பின்பே இம்மாதிரி ஜாதிவெறி படங்கள் வரதொடங்கின‌

திராவிடம் செய்த நல்ல விஷயம் சுமார் 30 ஆண்டுகாலம் சினிமாவில் ஜாதி மதம் கலக்காமல் பார்த்துகொண்டது ஒன்றே

திராவிடத்தால் நல்ல படங்களை பெற்றோம் உறவே…

மாபெரும் அச்சுறுத்தல் அவர்கள்தான்

இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்தலாம் என பலத்த எச்சரிக்கை வந்து கொண்டேதான் இருந்தது

இந்த அரசு தான் ஒரே எதிரி என கருதும் பாகிஸ்தானையும் அது தயாரிக்கும் தீவிரவாதிகளையும் மட்டுமே கண்காணிக்கின்றது

நாட்டின் எதிரிகளும் ஆபத்துக்களும் அவர்கள் மட்டுமல்ல, இத்தேசத்தின் உண்மையான தீவிரவாத இயகம் மாவோயிஸ்டுகள், அவர்கள்தான் தேசத்தின் மிகபெரும் மிரட்டல்

சந்தேகமில்லை அவர்கள் பின்னால் சீனா இருக்கின்றது இன்னும் ஏகபட்ட சக்திகள் இருக்கின்றது

நேபாளம் அவர்களின் கோட்டையாக இப்பொழுது திகழ்கின்றது, அதன் தொடர்ச்சியாக கிழக்கு மாநிலங்கள் தொடங்கி பல மாநிலங்களில் அவர்களின் பலம் நீடிக்கின்றது

புல்வாமா என்றால் உடனே பாகிஸ்தான் மேல் தாக்குதல் நடத்திய இந்த அரசு, இந்த மாவோயிஸ்டுகள் தாக்குதலுக்காக நேபாளம் மற்றும் இன்னும் சில நாடுகளின் காடுகளில் தாக்குமா என்றால் தாக்காது

காரணம் அதன் தன்மை வேறாகிவிடும் என்பதால் மாட்டார்கள், ஆனால் பாகிஸ்தான் என்றால் கிளம்புவார்கள்

காஷ்மீரிய தீவிரவாதிகள் மேல் மட்டும் அரசு வன்மம் கொண்டு திரியும் பொழுது நாங்களும் களத்தில் உண்டு என காட்டிவிட்டனர் மாவோயிஸ்டுகள்

பாகிஸ்தான் என்றால் பொங்கும் பாஜகவும் அதன் அடிப்பொடிகளும் மாவோயிஸ்டுகள் என்றால் பெரிதும் கண்டுகொள்ளமாட்டார்கள்

மாவோயிஸ்டுகளுக்கு இத்தேசம் முடிவு கட்டியே தீரவேண்டும், மாபெரும் அச்சுறுத்தல் அவர்கள்தான்

மாபெரும் நடவடிக்கை எடுத்து அவர்களை கருவறுக்க வேண்டிய நேரமிது

அதென்ன பாகிஸ்தான் அகதிகள்?

இலங்கையில் நடந்தது இஸ்லாமியத்தை காக்க வந்ததாக சிலர் செய்த தாக்குதல்தான்
, ஆனால் யரை பாதித்திருகின்றது என்றால் பல பாவபட்ட இஸ்லாமியரையும் பாதித்திருக்கின்றது

பாகிஸ்தான் அகதிகளும் பாதிக்கபட்டிருக்கின்றார்கள்

அதென்ன பாகிஸ்தான் அகதிகள்?

ஆம், இந்த இஸ்லாமில் சன்னி, ஷியா, அகமதியா, அல்லாவி தவிர ஏகபட்ட பிரிவுகள் உண்டு அதில் ஒன்று அகிமியா குழுவோ இல்லை வேறு பெயரிலோ ஒன்று

பாகிஸ்தான் இஸ்லாமிய பூமி என சொல்லிகொண்டாலும் பெரும்பாலும் சன்னி பிரிவு, அதை தவிர மற்ற இஸ்லாமியருக்கு நிலை சிக்கல்

அப்படி ஒரு விரட்டியடிப்பில் மிக சிறுபான்மையான இந்த குழு இலங்கைக்கு வந்தது சுமார் 200 குடும்பங்கள் அங்கு அடைக்கலமாகி இருந்தது

அந்த குடும்பங்களுக்கு இப்பொழுது சிக்கல், அவர்களுக்கு வீடு இல்லை, தெரு இல்லை, வீடு இல்லை என அடித்துவிரட்டபடுகின்றனர்

அவகள் ஐ.நா அகதிகள் என்பதால் ஐ.நா என்ன செய்யலாம் என யோசிக்கின்றது

கடவுளுக்காக சாகிறோம் என ஓரு கும்பல் சாக, அந்த கடவுளின் பெயரால் பாகிஸ்தானில் இருந்து அடித்துவிரட்டபட்ட இனம் ஒன்று பரிதவித்து நிற்கின்றது

ஒரே கடவுளை வணங்குகின்றோம் என மார்தட்டும் கூட்டம், இப்படி பல பிரிவுகளாக ஏன் அடித்துகொள்கின்றார்கள் என்பதுதான் புரியா புதிர்..

பைபிள் காட்டிய உணவுமுறை

இந்த பைபிளை யாரும் எப்படியும் ஆராய்ச்சி செய்யட்டும், சங்கம் ஆய்வு செய்தது பைபிள் காட்டிய உணவுமுறை

ஆம் பைபிளில் ஆச்சரியமான உணவுகள் எல்லாம் வரும், ஏதோ சுவையான மன்னா எல்லாம் வானத்தில் இருந்து விழுந்த காட்சி எல்லாம் அதில் உண்டு

அது மானிடருக்கு கிடைக்கா தெய்வீக உணவாம், இருக்கட்டும் நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்

இந்த பழைய ஏற்பாட்டில் ஒரு அதிசய உணவுபிரியன் இருந்திருக்கின்றான், அவன் பெயர் மாமன்னன் சாலமோன்

அவன் ஞானிகளுக்கெல்லாம் ஞானி என்பதால் தன் ஞானத்தில் சமையலுக்கும் ஒருபங்கு கொடுத்திருக்கின்றான்

பொதுவாக கோதுமை உணவு நிரம்பிய அந்த மேற்காசியாவில் அவனுக்கு அரிசி உணவுமேல் ஆசை இருந்திருக்கின்றது

இந்தியாவில் இருந்து அரிசியும், வாசனை பொருட்களையும் வாங்கி குவித்திருக்கின்றான்

ஆம் பிரியாணியினை அவனே முதலில் சமைத்தான் என்கின்றது வரலாறு

அவன் அரண்மனையின் புகழ்பெற்ற உணவாக அது இருந்திருக்கின்றது, இது இஸ்லாமியரின் புத்தகங்களிலும் சுலைமான் பெருமை என வருகின்றது

ஆம் அவன் சமைத்த பிரியாணியே அரேபியாவில் பரவி அதன் பின் இந்தியாவிலும் ராஜ குடும்பத்து உணவாக இங்கு வந்திருக்கின்றது

நல்ல கிறிஸ்தவன் நிச்சயம் பழைய ஏற்பாட்டை பின்பற்ற வேண்டும் என்கின்றார்கள்,பைபிளில் ஏதாவது ஒன்றை பின்பற்ற வேண்டும்

அதனால் சாலமோனின் சமையலையும் அவன் தயாரித்த பிரியாணியினையாவது பின்பற்றி தீரவேண்டும்

கிறிஸ்துவத்தில் ஒரு சோகம் நிகழ்ந்திருக்கின்றது

ஆம் பத்துகட்டளை கொடுக்கபடும் பொழுது அக்காலத்தில் சாலமோன் இல்லை

இருந்திருந்தால் “பிரியாணி சாப்பிடாதவன் கடவுளின் அருளை பெறாத பாவி” என்றும், “பிரியாணி சுவையில் கடவுளை போற்றுவாயாக” என்றும் 11ம் கட்டளை ஒன்று நிச்சயம் வந்திருக்கும்

சாலமோனுக்கு பின் கிருஷ்ணர் அவதரித்தால் என்ன சொல்லியிருப்பார்?

பகவான் கண்ணன் மட்டும் என்ன சொல்லியிருப்பார் “அர்ஜூனா உணவுகளில் நான் பிரியாணி”

கார்ல் மார்க்ஸ்

தொழிலாளரை பற்றி பலர் கவலை கொண்டாலும் முதலில் அதிகம் கவலையுற்றது கார்ல் மார்க்ஸ்

அவனோடு பிரான்ஸின் இங்கர்சால் போன்ற சிலர் உண்டு

“உலக தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்” என முதலில் முழங்கியவன் மார்க்ஸ்

அந்த அழைப்புத்தான் சோவியத் யூனியனாக பின்னாளில் மலந்தது, உலகில் பாதிக்கு செங்கொடி பறக்க வைத்தது

அதில் வந்த சோவியத் யூனியன் தொழிலாளருக்கான சட்டதிட்டங்களை வகுத்து நல்வாழ்வு வாழ வழிசெய்தது

அந்த எதிரொலி தன் ஆட்சிநடக்கும் நாட்டிலும் நடக்காமல் இருக்க பிரிட்டனும் அமெரிக்காவும் தொழிலாளர் சலுகைகளை அளித்தன‌

அப்படித்தான் இந்தியாவிலும் தொழிலாளருக்கான விடிவு காலம் பிறந்தது

உண்மை இப்படி இருக்க அம்பேத்கர்தான் மே 1 தேதி தொழிலாளர் நாள் என அறிவித்து புரட்சி செய்தார், தொழிலாளருக்கு அவரே விடிவெள்ளி என்றொரு கோஷ்டி புலம்புகின்றது

அம்பேத்கர் தொழிலாளருக்கு பெரிதும் பாடுபட்டவர் அல்ல, அவர் படித்த பொருளாதாரபடி அது சாத்தியமுமில்லை

அந்த பரோடா மன்னரின் கணக்குபிள்ளையாக அம்பேத்கர் இருந்தபொழுது என்ன புரட்சி நடத்தினார் ஒன்றுமில்லை

இன்னொரு கோஷ்டி வழக்கம் போல பெரியார் என கிளம்பிற்று

பெரியார் சாதி ஒழிப்பு, பிராமண ஒழிப்பு என அலைந்தவரேயன்றி தொழிலாளருக்கு கிஞ்சித்தும் செய்தவர் அல்ல‌

அந்நாளைய அரசு ஊழியரான பிராமணனை சாடுவாரே தவிர மில் முதலாளியான, நிலசுவாந்தார்களான நாயுடு, செட்டிகள் மேல் எல்லாம் பெரியாரின் பார்வை திரும்பவே இல்லை

என்றாவது தொழிலாளருக்கு ஊதியம் அதிகம் கொடு , கூலியாட்களுக்கு நெல் அதிகம் கொடு என பெரியார் பேசியோ எழுதியோ யாராவது கண்டோமா? இல்லை

இது பற்றி அவரிடம் கேட்டால் பதில் இப்படி வந்தது

“தொழிலாளி சம்பளத்தை கூட்டினால் முதலாளி பொருள் விலைய கூட்டுவான், அப்புறம் கூட்டுன சம்பளம் தொழிலாளி வாங்குற பொருளுக்குத்தான் சரியா இருக்கும்

அதுனால தொழிலாளி சம்பளம் பற்றி எல்லாம் நான் பேசமாட்டெனுங்க”

ஏன் பேசமாட்டார்?

அவருக்கு பெரும் சொத்தும் இன்னும் ஏராளமான தொழில்களில் பங்கும் இருந்தது

அதனால் தொழிலாளர் பற்றி பெரியார் ஒருநாளும் பேசவேயில்லை தவிர்த்தே வந்தார்

காரல் மார்க்ஸுக்கு கவலை இனம் மொழி மதம் தாண்டி உலகத்தில் எல்லா தொழிலாளரையும் பற்றி இருந்தது

லெனின் உலகெல்லாம் பொதுவுடமை பரவ வேண்டும், தொழிலாளர் துயரம் என கவலை கொண்ட மானிட நேயன்

பெரியார் ஒரு இனத்தை வெறுத்து தன் இனத்தை வாழவைக்க எண்ணிய குறுகிய மனப்பான்மையில் இருந்தார்

அம்பேத்கரும் அப்படித்தான் இருந்தார்

அதனால் உறுதியாக சொல்லலாம் உலகளாவிய பார்வை கொண்ட மார்க்ஸ் மற்றும் லெனின் அருகே கூட வர இவர்களுக்கு தகுதி இருப்பதாக சொல்ல முடியாது.

பிரேமதாச‌

இலங்கை மிகசிறிய தீவு, சிங்கள எண்ணிக்கையும் அதிகம் அல்ல ஆனால் மிக சிறந்த ராஜ தந்திரிகள் எல்லாம் அங்கு உருவானார்கள்

தங்கள் நாட்டுக்கு ஆபத்து வந்தபொழுதெல்லாம் அற்புதமாக முறியடித்தார்கள். அவர்கள் வரம் அப்படி. பண்டாராநாயக காலத்திலிருந்து புலிகளை வீழ்த்திய ராஜபக்சே வரை அவர்களின் நாட்டுபற்று துணிவும் அலாதியானது

ஜெய்வர்த்தனே என்பவரெல்லாம் யூதர் போன்றே நரிமூளைக்காரர். இலங்கையில் இந்தியாவின் ஆட்டத்தை தன் அபார அணுகுமுறையால் கத்தியின்றி ரத்தமின்று முடித்து வைத்த வித்தகர்

அந்த வரிசையில் ஒருவர் பிரேமதாச‌

மிக மிக ஒடுக்கபட்ட ஏழை இனத்திலிருந்து தன் அயாராத உழைப்பில் பெரும் இடத்திற்கு சென்றார். அவர் பிரதமராக இருந்த காலத்தில்தான் அமைதிபடை இலங்கை சென்றது

அதை எதிர்த்த முதல் அரசியல்வாதி பிரேமதாச, ஆனால் இந்தியா பயிற்சி கொடுத்த போராளிகளை இந்தியாவின் படைகொண்டே அடக்கும் தந்திரத்தினை கையாண்ட ஜெயவர்த்தனேவினை அவரால் மீறமுடியவில்லை

பின் ஜெயவர்த்தனேவுக்கு பின் அதிபரான பிரேமதாச அதிரடி ஆட்டம் ஆடினார்.

ஜெயவர்த்தனே அமெரிக்க அடிமை. பிரேமதாச ஒருவித சோஷலிஸ்ட் என்பதால் அமெரிக்காவினை அவர் விரும்பவில்லை. இந்தியா, அமெரிக்கா (சீனா அன்று களத்தில் இல்லை) என எந்த நாட்டுக்கும் கட்டுபடாத இலங்கையினை அவர் நிர்மானித்தார்

அதில் அவர் காட்டிய ராஜதந்திரம்தான் இந்திய படைகளை வெளியேற்றுவது. இந்தியா அங்கு முகாம் நிரந்தரமாக அமையும் முடிவில் இருந்தது. புலிகளை நொறுக்கி கிட்டதட்ட முடிக்கும் நிலைக்கு வந்தது

ஒரு இலங்கை அதிபராக பிரேமதாச இந்திய படைகள் தங்குவதை விரும்பவில்லை, விரும்பவும் முடியாது. யாரும் எதிர்பாரா வகையில் புலிகளுடன் கை கோர்த்தார்

ஆயுதங்களை அள்ளிகொடுத்தார், கப்பல் கப்பலாக கொடுத்தார்

சோர்ந்திருந்த புலிகளும் பிரேமதாசாவினை பிடித்து கொண்டு, “இது அண்ணன் தம்பி பிரச்சினை, ஏய் இந்திய நாய்களே வெளியேறுங்கள்..” என கத்தவும் தவறவில்லை

சிங்களருடன் புலிகள் கைகோர்ப்பது கனவிலும் நடக்காது என நம்பிய இந்தியா அதிர்ந்தது, ஆயினும் இந்தியா போராடியது

சிங்களரும் புலிகளும் கைகோர்த்தபின் இந்திய படைகளுக்கே மனம் வெறுத்தது, ச்சீ இவர்களை காக்கவா வந்தோம் என மூத்த தளபதிகளே மனம் வெறுத்தனர்

மண்டியிடா மானம், வீழ்ந்துவிடா புலி வீரம் எல்லாம் பிரேமதாசா முன் குப்புற கிடந்தது

பின் அமைதிபடை மீட்கபட்டது, புலிகளுக்கும் வடக்கு கிழக்கு முழுக்க கொடுக்கபட்டது. பிரேமதாச அதில் கைவைக்கவில்லை

புலிகள் விஷயத்தில் அவர் வேகம் காட்டவில்லை, இந்த நாட்டை இந்தியாவிடம் இருந்து மீட்டவர்கள் என்ற அபிமானம் அவருக்கு இருந்தது, பிரிவுபடா இலங்கைக்குள் தமிழருக்கு தீர்வுகொடுக்கவும் அவரிடம் திட்டம் இருந்தது.

ஆனால் அமெரிக்க எதிர்ப்பு அவருக்கு இருந்தது. அமெரிக்க எதிரிகள் எங்கிருந்தாலும் வாழமுடியாது அல்லவா?

ராஜிவினை புலிகள் அப்பொழுதுதான் கொன்றிருந்தனர். எக்காரணம் கொண்டும் தன் மீது புலிகள் பாயமாட்டார்கள் என மலைபோல் நம்பி இருந்தார் பிரேமதாச‌

புலிகளின் உயிரை மீட்டு கொடுத்த என்னை புலிகள் ஏன் தொடபோகின்றார்கள் என அவரின் பாதுகாப்பு தளர்த்தபட்டது

நம்பியவரை கொல்வதில் புலிகளின் படிப்பு ஆராய்ச்சிபடிப்பிற்கும் அப்பாற்பட்டது

அப்படி இதே மே தின ஊர்வலத்தில் கொழும்பில் மனித வெடிகுண்டால் கொல்லபட்டார் பிரேமதாச‌

பிரேமதாசவும், ராஜிவும் பிராந்திய எதிரிகள் என்றாலும் அடிப்படை ஒற்றுமை அமெரிக்க எதிரிகள்

அதனாலே அமெரிக்க கைகூலிகளால் கொல்லபட்டார்கள்

இப்படி பெருந்தலைவகளை எல்லாம் மனிதவெடிகுண்டை அனுப்பி தங்கள் பலத்தை வெளிகாட்டிய புலிகளால் , மிக இக்கட்டான 2009ல் ராஜபக்சே நிழலையும் தொடமுடியாமல் போயிற்று

சுருக்கமாக சொன்னால் பின்னாள் இலங்கை அதிபர்கள் புலிகளை எப்படி கையாள வேண்டும் என செத்து பாடம் கொடுத்தவர் பிரேமதாச‌

இதற்குபின்புதான் சிங்கள தரப்பு புலிகளை சுத்தமாக நம்பவில்லை, ஒருகாலமும் நம்பதகாதவர்கள் புலிகள் எனும் அபிமானம் அவர்களுக்கு இதே நாளில்தான் வந்தது

இலங்கை வரலாற்றில் துணிச்சல் மிக்க அதிபர் பிரேமதாச, அவரின் நடவடிக்கை எல்லாம் இலங்கைக்கானது, இறுதியில் இலங்கைக்காக உயிரையும் விட்டார்

இன்று அவரின் நினைவு தினம்

பிரேமதாசாவிற்கு காட்டிய நன்றிகடனை பின்னாளில் ராஜபக்சேயிடம் வட்டியும் முதலுமாக வாங்கினர் புலிகள்

அந்த தீவு தேசம் அந்த தியாக தலைவனுக்கு அஞ்சலி செலுத்திகொண்டிருக்கின்றது

மே தினம்

உலகம் முழுக்க மே தினம் கொண்டாடபடபடுகின்றது

அது எப்படி உலக தொழிலாளர் தினமாக கொண்டாடுகின்றது என்றால், இந்த தொழிலாளி மானிட வர்க்கம் தாண்டி வந்திருக்கும் கொடூர காலம் அப்படியானது.

ஆதிகாலத்தில் தொழிலாளியின் பெயர் அடிமை, ஒரு அடிமை என்பவன் வாய்பேசும் மாடு அல்லது ஒட்டகம். மற்றபடி அவனுக்கு எந்த உரிமையோ பாதுகாப்போ இல்லை.

இந்த அடிமை முறை பைபிள் எழுதபட்ட காலத்திலே இருந்தது என்றாலும், அது சர்ச்சையாக வெடித்தகாலம் தொழில்புரட்சி காலமும், வெள்ளையன் உலகெல்லாம் சென்று தோடங்கள் அமைத்த காலமும், சுரங்கங்கள் அதிவேகமாக தோண்டபட்ட காலமும்தான்.

அதில் ஆப்ரிக்க அடிமைகள் கடுமையாக பாதிக்கபட்டார்கள், ஆனால் குரலெழுப்ப முடியாது. மற்ற தொழிலாளர்கள் ஓரளவிற்கு குரலெழுப்பி 15 மணிநேர வேலையினை 8 மணிநேரமாக குறைக்க அமெரிக்காவிலும், இன்னபிற நாடுகளிலும் போராடிகொண்டிருந்தார்கள்.

லிங்கனின் அடிமைமுறை ஒழிப்பிற்கு பின் அமெரிக்க கருப்பர்களும் அவ்வுரிமையினை கேட்டு போராடினர், முதலாளி வர்க்கத்தின் கடும் கெடுபிடியினையும் தாண்டி அவர்கள் வெற்றிபெற்றனர், மார்க்ஸின் முழக்கமும், சோவியத் யூனியனின் அசுரபலமும் உலகில் தொழிலாளர் நலம் காத்தன.

8 மணிநேர வேலை, பணி பாதுகாப்பு, இன்னபிற சலுகைகள் என உலகம் பயனடைந்தது இப்படித்தான், இன்று தொழிற்சங்கங்கள், கொடிகள்,யூனியன் என தொழிலாளருக்கு ஒரு பாதுகாப்பு இருப்பதும் இப்படித்தான், எல்லாம் 1990வரை சரியாக இருந்தது.

அதன்பின் சோவியத் சிதறவும், உலகமயமாக்கல் கொடுமையும் இன்று நவீன அடிமை முறையினை அறிமுகபடுத்திவிட்டன, அன்று பாமர அடிமைகள் இன்று படித்த அடிமைகள்.

அன்று சுரங்கத்திலோ, கரும்பு தோட்டத்திலோ, தேயிலை தொட்டத்திலோ 15 மணிநேரம் பாமரர்கள் உழைத்ததை போல இன்றைய காலத்தில் கார்ப்பரேட் கம்பெனிகள் குறிப்பாக ஐ.டி கம்பெனிகள்.

ஒரு ஐடி தொழிலாளி அப்படித்தான் உறிஞ்சபடுகின்றான் 16 மணிநேரம் அவனை பிழிந்துவிடுவார்கள், இன்னும் ஏராள இம்சைகள். உச்சமாக அவனுக்கு சங்கமோ அல்லது பணிபாதுகாப்போ சுத்தமாக கிடையாது.

அதுவும் அவன் ஒழுங்காக வந்து உழைக்கும்பொழுதும் அவனுக்கு அப்ரைசல் என ஒரு கொடுமையினை வைத்து, அம்மா கட்சி அமைச்சராகவோ அல்லது வேட்பாளராகவோ பதைபதைப்பில் வைத்திருப்பதில் அவர்களுக்கொரு ஆனந்தம்.

நான் நீங்கள் இட்ட பணியினை எல்லாம் செய்துதானே வருகிறேன், பின்னர் ஏன் ஆயிரம் கேள்விகள்? என எந்த ஐ.டி தொழிலாளியும் கேட்க முடியாது. திடீரென தூக்குவார்கள் அதற்கு ஆயிரம் காரணம் வேறு சொல்வார்கள்.

ஒரு ஆட்டோ டிரைவருக்கு ஒரு அவமானம் என்றால் தமிழகம் முழுக்க அது எதிரொலிக்கும், ஒரு கொத்தனாருக்கு பிரச்சினை என்றால் அது கட்டட பணியினை பாதிக்கும், இவ்வளவிற்கும் இவர்கள் அடிப்படை கல்வி மட்டும் பெற்றிருப்ப்பார்கள.

ஆனால் ஒரு ஐ.டி ஊழியன் பணி பறிக்கபடும்பொழுது, அவசர அவசரமாக சக ஊழியன் தனது நண்பர் அல்லது உறவினரின் பயோடேட்டாவினை அங்கு சமர்பித்துகொண்டிருப்பான், படித்தவர் உலகம் இப்படி சுயநலமானது.

ஆக பெரும் போராட்டம் போராடி தொழிலாளர் உலகம் பெற்ற உரிமைகளை, இன்றைய கார்பரேட் உலகம் காலில்போட்டு நசுக்குகின்றது. மறுபடியும் ஆதிகாலத்திற்கு கொண்டுபோயாயிற்று.

ஐடி என்று மட்டுமல்ல, எல்லா கார்பரேட் தொழிலும் 15 மணிநேரம் உழைக்காமல் வாழமுடியாது என்ற அளவிற்கு உலகினை மாற்றிவிட்டார்கள்.

மருத்துவர்கள் கூட கார்பரேட் கம்பெனிகளான மருத்துவனைகளில் ஓய்வே இல்லாமல் உழைக்க வைக்கபடும் கொடுங்காலம் இது

ஆனால் அக்காலம் எப்படி இருந்திருக்கின்றது.

8 மணிநேர வேலை என, 8 மணிநேர சமூக உறவுகள், 8 மணிநேர தூக்கம் என அக்கால வாழ்க்கைமுறையினை சுத்தமாக ஒழித்தும் விட்டனர், அக்கால கிராம வாழ்க்கை இப்படித்தான் இருந்தது,

எவ்வளவு சுகமான காலங்கள் அவை

இன்று இந்தியாவில், பிலிப்பைன்ஸில் ஐ.டி வளர்ச்சிபெற்றிருக்கிறது என சொன்னால் அதன் பின்னால் மறைந்திருப்பது இந்த கடுமையான தொழிலாளர் சுரண்டல், 3 வருடத்தில் முடிக்கவேண்டிய பணீகளை 3 மாதத்தில் முடிக்கசொல்லி அவர்கள் படுத்தும்பாடு அப்படி.

ஐரோப்பியர்களிடம் அதிகம் பேசமுடியாது, அவர்கள் உல்லாசம் அவர்களுக்கு முக்கியம், ஓய்வு முக்கியம் என ஏராள சிக்கல்கள், அதன்பின் என்ன செய்ய ஆசியன் தான் இளிச்சவாயன், அந்நாட்டு அரசுகள் ஒரு மண்ணாங்காடி தொழிலாளர் நலமும் பேணாது.

இன்னும் ஆபத்தான அணுவுலை பணிகளில் தொழிலாளர்களுக்கு செய்யபடும் மருத்துவசோதனை, பாதுகாப்பு என ஏராளம் உண்டு, இந்தியாவில் எப்படி என தெரியவில்லை, ஆனால் நன்றாக மட்டும் இருக்காது.

அன்று கரும்பு பண்ணை அடிமைக்கு ஒரு பெட்டி சோளமும், ஒரு பெட்டி கறியும், குளிருக்கு சுருட்டும், தீபெட்டியும் வழங்கபடுமாம்.

இன்று ஐ.டி காரனுக்கு என்ன? பர்கர், பீசா கூடவே எடிஎம் கார்டு, அவ்வளவுதான், ஒரு போன் அதுவும் எதற்கு தூங்காமல் உழைப்பதற்கு, நடுநசியிலும் அழைப்பதற்கு, காரொ வாகனமோ அல்லது வீடோ, எல்லாமே பொறிகள், சிக்க வைக்கும் பொறிகள்.

இதில் அவனுக்கான உரிமையோ, அவனுக்கான சொந்த சிந்தனையோ அவன் செய்துவிட முடியுமா? விடுவார்களா? அனாதையாக விட்டுவிடுவார்கள்.

இன்று உலகில் சங்கமே இல்லாதவர்கள் இரண்டு பேர், ஒன்று தெருவில் சுற்றும் மனநிலை பாதிக்கபட்டவர்கள், அவர்களுக்கான சங்கம் எப்படி சாத்தியமாகும்? இன்னொன்று கார்பரேட் தொழிலாளர்கும் ஐ.டி பொறியாளர்களும்.

பைத்தியங்கள் ஒன்றாய் சேர்ந்து கொடிபிடித்தாலும் நிச்சயம் இந்த ஐ.டி தொழிலாளி ஒருநாளும் சேரப்போவது இல்லை, இப்படி உரிமைகெட்டு நிற்காவிட்டால் அவன் எப்படி அவன் கனவு தேசமான அமெரிக்கா செல்வது?

ஆனால் தொழிலாளர் போராட்டம் தொடங்கியதே அமெரிக்காவில் என்பதும், அங்கிருக்கும் வெள்ளை மக்களுக்கான மட்டும் பாதுகாப்பும் அவனுக்கு தெரியவில்லை அய்யோ பாவம்.

இந்த மே தினத்தில் பரிதாபபட்டு பார்க்கவேண்டியது இம்மாதிரியான தொழிலாளர்களைதான், நாகரீகமான வேடத்தில் இருக்கும் இந்த அடிமைகளைத்தான்.

இன்னும் இந்தியாவில் தொழிலாளர் சுரண்டல் எவ்வளவோ உண்டு, அது அங்காடி தெரு கதையாகட்டும், இன்னபிற சம்பவங்களாகட்டும் ஏராளம் உண்டு

களை கூத்தாடிகளில் உள்ள சிறுவர் சிறுமியரை கணக்கில் எடுக்காமல், கடைகளில் தொழிற்சாலைகளில் மட்டும் கணக்கெடுக்கும் விசித்திரமான நாடு இது, இதோ ஒரு சிறுவனை வேலைக்கு வைத்தால் மிரட்டும் அதிகாரிகள், சினிமாவில் நடிக்கும் சிறுமிகளை மட்டும் கொஞ்சுவார்கள், அங்கு என்ன சட்டமோ தெரியவில்லை.

இப்படி மேதினம் பல சிந்தனைகளை கிளறிவிட்டாலும், பொல்லாத முதலாளிவர்கக்கம் தொழிலாளர் உரிமையினை கொஞ்ச கொஞ்சமாக ஒழித்துவிட்டு மறுபடியும் அடிமை முறையினை ஆசியாவில் கொண்டு வந்துவிடுமோ என பலகுரல்கள் எழும் வேளையில் தமிழன் நிலை என்ன தெரியுமா?

தல அஜித்தின் பிறந்த நாள், தமிழக திருவிழா.
எங்கு நிற்கின்றான் தமிழன், இதுதான் தமிழகம், மே தினம், மார்க்ஸ்,தொழிலாளர் வரலாறு எல்லாம் அவனுக்கு தெரியவேண்டிய அவசியமில்லை, மாறாக அஜித் எனும் அவதாரம் பிறந்துவிட்டார் போதாதா?

உலகம் முழுக்க மே தின கொண்டாட்டமும் செய்தியும் தெரிவிக்கபட்டுகொண்டிருக்க, தல பிறந்த நாளிலும் மேதினத்தை கொண்டாடுகின்றான்.

ஐடி இந்திய அடிமையோ அன்று 24 மணிநேர உழைப்பில் தீவிரமாக இறங்கி இருக்கின்றான்.

ஒன்று மட்டும் உண்மை, தொழில்நுட்பம் எவ்வளவும் வளரட்டும், அதன் கரங்கள் புளூட்டோ வரை கூட நீளட்டும். ஆனால் மனித உரிமைகளை காக்கும் பொறுப்பு தொழிலாளர் சங்கங்களுக்குத்தான் உண்டு.

அவ்வகையில் மேதினம் மகா மதிப்புகுரியது, போற்றுதலுக்குரியது

எல்லா தொழிலாள நண்பர்களுக்கும் மே தின வாழ்த்துக்கள்

இந்த தினத்திலும் கடமை ஆற்றும் பலர் உண்டு. காவல்துறை, மருத்துவர், தாதியர், ராணுவம், பத்திரிகை எல்லாம் இந்த சிறப்பு வகை,, அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

அன்று நடந்திருப்பது இப்பொழுது புகைகின்றது

இந்தியாவின் இரு போர்விமானத்தை வீழ்த்தினோம் என அபினந்தன் கைதுசெய்யபட்டபொழுது சொல்லிகொண்டிருந்தது பாகிஸ்தான்

சரி ஒன்று மிக் விமானம் அபிநந்தனுடையது, அந்த இன்னொரு விமானம் என்ன வகை? பைலட் யார் என இந்தியா கேட்டதற்கு பாகிஸ்தான் பதில் சொல்லவே இல்லை, “அதை நீங்கள்தான் சொல்லவேண்டும்” என தீபா சொன்னது போல சொல்லிகொண்டிருந்தது

இப்பொழுது மாபெரும் பல்டி அடித்திருக்கின்றது, ஒரு வகையில் இது அவர்களுக்கு அவமானம்

ஆம் இரண்டு விமானம் அல்ல, ஒரு விமானத்தைத்தான் வீழ்த்தினோம் என பாகிஸ்தான் ராணுக செய்தி தொடர்பாளர் அறிவித்திருக்கின்றார்

அவருக்கு தவறான தகவல் சொல்லபட்டதாம், ஜனகராஜ் ஸ்டைலில் சாரி.. என இழுக்கின்றார்

சரி பரவாயில்லை உண்மையினை இப்பொழுதுதாவது திருந்தினார்களே என பார்த்தால், நாங்களாவது திருந்துவதாவது என அடுத்த குண்டை வீசுகின்றார்கள்.

அதாவது ஒரு விமானம் வீழ்த்தியதுதான் உண்மையாம், அப்படியே இனொரு உண்மையும் உண்டாம்

அது என்னவென்றால் அவர்கள் விமானம் இந்தியா பக்கம் வந்த பொழுது இந்தியாவின் நடமாடும் ஏவுகனை தளங்களை எல்லாம் இடம் மாற்றி பதறியதாம் இந்தியா, அது ஏன் என இந்தியாதான் விளக்க வேண்டுமாம்

அதாவது அவர்கள் ஏதோ விவகாரத்தை கிளறுகின்றார்கள்

அன்று எல்லை தாண்டி பால்கோட்டை விமானபடை அடித்தாலும் ஏவுகனை உட்பட பல விவகாரங்களோடு இந்தியா தயாராக இருந்திருக்கின்றது

அதாவது தாக்குதலுக்கு பின் ஏவுகனை ஏவும் சாதனம் உட்பட இந்தியா தயாராகியிருக்கின்றது

அந்த தகவலை பெற்ற பாகிஸ்தான் இந்திய ஏவுகனை தளங்களுக்கு ஏதோ ஆபத்தை விளைவிக்க வந்திருக்கின்றது

அப்பொழுது ஏதோ நடந்திருக்கின்றது

அதைத்தான் இழுத்துவிடுகின்றது பாகிஸ்தான், ஏன் இந்தியா அதை மறைக்கின்றது என விவகாரத்தை இழுக்கின்றது

இந்தியாவோ “ஏன் என்ன நடந்தது என அவர்கள் சொல்லமாட்டார்களாமா? ஏதும் நடந்தால்தானே சொல்வார்கள், அவர்கள் அப்படித்தான்” என சொல்லிவிட்டு அதன் போக்கில் இருக்கின்றது

விவகாரம் இனி எப்படி திரும்பும் என பார்க்கலாம், ஆனால் ஏதோ அன்று நடந்திருப்பது இப்பொழுது புகைகின்றது

விஷயம் இதுதான்

இந்திய உளவுதுறை எப்படி இலங்கை தாக்குதலை முன்பே அறிந்தது என்பதை நேற்று வெளியான பல தகவல்கள் உங்களுக்கு புரிய வைத்திருக்கலாம்

ஆம் ஐ.எஸ் இயக்கத்தவனாக இலங்கையில் தாக்குதல் நடத்திய அக்கும்பலின் தலைவன் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சிலரை சந்தித்தான் என்ற விசாரணையும் செய்திகளும் நேற்று பரபரப்பினை கிளப்பின‌

விஷயம் இதுதான்

ஐ.எஸ் இயக்கத்தில் தமிழ்நாட்டு நபர்கள் உட்பட இந்திய நபர்கள் பலர் இருந்திருக்கின்றனர், சிரிய பக்கம் அவர்கள் பயிற்சி பெறும்பொழுதுதான் இலங்கையரின் தொடர்பும் ஏற்பட்டிருக்கின்றது

இலங்கையரை அங்கு அனுப்பியது இன்னொரு தெற்காசிய நாடு, கொழும்பில் அவர்களை தேர்ந்தெடுத்து அங்கு அனுப்பியிருக்கின்றார்கள்

அங்கு இவர்களுக்குள் நட்பு ஏற்பட்டிருக்கின்றது, கொலைகார நட்பு அல்லவா? அது பலபட்டிருக்கின்றது

இந்நிலையில் இந்த தமிழ்நாட்டு தீவிரவாதி இந்தியா திரும்பி தன் திருப்பணியினை தொடங்க ஆயத்தமாகி அடிக்கடி இலங்கையருடன் பேசியிருக்கின்றார்

இவரை ஆரம்பத்திலிருந்தே கண்காணித்த இந்திய உளவுதுறை அவரை கண்காணித்தது, அவர் இலங்கையருடன் பேசிய பேச்சினை இடைமறித்து விஷயத்தை அறிந்தது

தற்கொலை தாக்குதல் நடத்தபோகும் நபர், நாள், இடம் உட்பட சகல விஷயங்களையும் இந்தியா சொன்னது, ஆனால் கொழும்பு அலட்சியம் செய்தது

இந்தியாவின் நோக்கம் கொழும்பு தாக்குதலை தடுப்பது அல்ல மாறாக இந்திய தூதரகத்தை காப்பது என்பதால் அதை மிக வலுவாக தற்காத்து கொண்டது

இந்த சம்பவத்தின் தொடர்ச்சிதான் நேற்று தமிழகத்தில் கசிந்த விஷயங்கள்

ஏன் இப்பொழுது கசிய விடுகின்றார்கள்?

இங்கு இனி மிக கடுமையான களையெடுப்பும் , கைதுகளும் நடக்க இருப்பதால் முன் கூட்டியே விஷயத்தை மெல்ல வெளிவிடுகின்றார்கள்

இது கமலஹாசன் மகிழ்ச்சி கொள்ளும் நேரம்

ஆம் தமிழகத்தில் சர்வதேச பயங்கரவாதி இருப்பதாக தன் விஸ்வரூப படத்தில் கமல் சொல்லிவிட்டார் என இஸ்லாமிய அமைப்புகள் பொங்கின‌

அவை எல்லாம் இப்பொழுது தீகோழி போல தலையினை மண்ணுக்குள் புதைத்து ஒளிந்துகொண்டிருக்கின்றன