பை பை யுவராஜ் சிங்

உலக கோப்பை கிரிக்கெட் நடந்துகொண்டிருக்கும் பொழுதே அந்த அறிவிப்பும் வந்துவிட்டது

யுவராஜ்சிங் தன் ஓய்வினை அறிவித்துவிட்டார், மனமார அல்ல மாறாக மனம் வெறுத்துத்தான் அறிவித்திருக்கின்றார்

அற்புதமான கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர் , 2001க்கு பின்னரான இந்திய கிரிக்கெட்டை அவர்தான் தாங்கினார்

பஞ்சாப் ஆட்டக்காரருக்கான ஒரு விளையாட்டு வெறி அவருக்கு இயல்பாய் வந்தது, எத்தனையோ ஆட்டங்களில் அவரால் இந்தியா வென்றது

அட்டகாசமான பீல்டர் அவர், எவ்வளவோ அருமையான மின்னல்வேக பீல்டிங்கில் அசத்தியிருக்கின்றார்

2011 உலக கோப்பையின் யுவராஜ்சிங்கினை மறக்க முடியாது

அன்றைய வலுவான பாகிஸ்தானையும், ஆஸ்திரேலியாவினையும் நொறுக்கி அணியினை இறுதிசுற்றுக்கு அழைத்து சென்றது அவர்தான்

ஆம் அவரே நங்கூரமாய் நின்று அணியினை கரைசேர்த்தார்

அந்த கோப்பையினை வென்றதில் அவரின் பங்கு கணிசமானது

ஐபிஎல் ஆட்டங்களில் ஓவரின் எல்லா பந்துகளையும் சிக்ஸர் அடித்த சாதனை அவருடையது

அவருக்கு கிரிக்கெட் மட்டையும் பந்தும் ஒத்துழைத்த அளவு விதி ஒத்துழைக்கவில்லை

புற்றுநோய் தாக்கியது என அதற்கான சிகிச்சை பெற்றார், பின்னர் அது புற்றுநோய் அல்ல என சொல்லபட்டது

எனினும் அந்த வலிமிகுந்த சிகிச்சைக்கு பின் அவரால் சோபிக்க முடியவில்லை

ஓரளவு ஆடத்தான் செய்தார்

சேவாக் போன்ற சீனியர்கள் இல்லா நிலையில் ஓரத்திலேதான் இருந்தார், இந்த தொடரிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கபடவில்லை

அந்நிலையில் ஓய்வினை அறிவித்துவிட்டார்

எல்லா வீரரும் ஒரு கட்டத்தில் ஓய்வினை அறிவிக்கத்தான் வேண்டும் , அவரும் விடைபெற்றுவிட்டார்

எனினும் 1983 உலககோப்பை கபில்தேவால் வந்தது என்பது போல 2011 உலக கோப்பை யுவராஜ்சிங்கால் வந்தது என குறித்து கொண்ட கிரிக்கெட் உலகம் அவரை வழியனுப்பி வைக்கின்றது

உங்களை ஒருபோதும் கிரிக்கெட் உலகம் மறக்காது யுவ்ராஜ்

கபில், சச்சின் போல நீரும் ஒரு மிகசிறந்த ஆட்டக்காரர்..

பை பை யுவராஜ் சிங்..

Happy Birthday தங்க மகனே

அன்றொரு நாள் அவர் தந்தையின் நினைவுகளில் மூழ்கியிருந்தார் அப்பா, அவரென்றால் அவருக்கு பாசம் அதிகம்.

“அவரை ரொம்ப பிடிக்குமாப்பா?

ஆமா, நான் கடைசி பையன்லா அதனால ரொம்ப பாசமா இருப்பாரு

அவர் இல்லண்ணதும் எப்படி தாங்கிட்டீங்க?

அவர் இல்லாத உலகத்துல எதுக்கு வாழனும்னுதான் தோணிச்சி, ஆனா உங்க அம்மாவும் அவ கையில நீனும் இருந்தியா, அதனாலதான் இவ்வளவு நாள் இருக்கேன். .”

மகனை நோக்கும் பொழுதெல்லாம் அவர் சொன்ன வார்த்தைகள் மனதுக்குள் ஒலித்துவிட்டே செல்லும்

இன்று அவனுக்கு முதலாம் பிறந்த நாள்

தந்தையினை கையில் தாங்கி வளர்க்கும் வரம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை எமக்கு வாய்த்திருக்கின்றது, அவ்வகையில் நாம் அதிர்ஷ்டசாலி.

புனித அந்தோணியார் முதல் எல்லா தெய்வங்களும் அவனை ஆசீர்வதிக்கட்டும்

அவன் தாத்தா வாழாத வாழ்வினையெல்லாம் அவன் வாழட்டும். காலம் அவனுக்கு துணை நிற்கட்டும்

Happy Birthday Alphones Rajan….

“நீ வளர்ந்து மரமாகி நிழல்தரும் காலம் வரை, தாய்மனதை காத்து நிற்பேன் தங்க மகனே..”

புனித அந்தோணியார்

இன்று கத்தோலிக்க திருச்சபை ஒரு பெரும் புனிதரின் திருவிழாவினை கொண்டாடுகின்றது, புனிதர்கள் என்றால் இயேசுவின் பெயரில் சம்பாதித்து கல்லூரியும், பங்களாவும், எஸ்டேட்டும் சேர்த்தவர்கள் அல்ல‌

மாறாக கிறிஸ்துவிற்காக துறவு வாழ்க்கை வாழ்ந்து அவருக்காக உயிரையும் விட்டவர்களை, புனிதர்கள் என திருச்சபை ஏற்றிருக்கின்றது.

அப்படி கிட்டதட்ட 800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து புனிதரானவர் புனித அந்தோணியார், ஐரோப்பாவில் ஏகபட்ட அந்தோணி உண்டு, காட்டில் இருந்த அந்தோணி, எகிப்தில் இருந்த அந்தோணி என ஏராளம், இவர் இத்தாலியின் பதுவாவில் வசித்ததால் பதுவை அந்தோணி, ஆர் என்பது தமிழின் மரியாதைக்குரிய விகுதி, அந்தோணி+ஆர் ‍= அந்தோணியார் ஆனார்

போர்சுகல்லில் லிஸ்பன் நகரில், பெரும் பிரபு குடும்பத்தில்தான் பிறந்தார், அவர் பெயர் பெர்டினாண்ட். அக்காலத்தில் ஏகபட்ட துறவிகள் சபை நடத்தினர், தனி சபைகள் அல்ல, மாறாக போப்பாண்டவர் அனுமதியோடு நடந்தன‌

அப்படி முதலில் அகுஸ்தினார் சபையிலும், பின் பிரான்சிஸ்கன் சபையிலும் இருந்தார் , அங்குதான் இவர் பெயர் அந்தோணி என மாறியது, 24 வயதில் குருவானார், உலக இன்பங்களை வெறுத்தார்

துறவிக்குரிய உடை அணிந்தார், தலையினை ஒரு மாதிரி வட்டமாக மழித்து தன்னை அலங்கோல படுத்தினார், (இன்றும் அவரின் சொரூபங்களில் அதனை காணலாம்), ஜெபம், தவம் என இருந்த அந்தோணி முதலில் செய்தது சமையல் கூட பணி

அன்றொருநாள் பேசவேண்டிய குரு வராமல் போக, இறைவார்த்தை பேசி சமாளிக்கும் பொறுப்பு அந்தோணியாருக்கு வழங்கபட்டது, அன்று அவர் பேசிய அற்புதமான பேச்சு, மடத்தின் தலைவருக்கு பிடித்து போக வேகமாக பெரும் இடத்தினை பிடித்தார்

அன்றைய கிறிஸ்தவம் சிசிலி தீவு, மொராக்கோ போன்ற மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் பரவிகொண்டிருந்தது, அந்தோணியார் அங்கு அனுப்பபட்டார்

அவர் வாழ்வின் பெரும் புதுமைகள் அங்குதான் நடந்தேறின,

சிறுவயது முதலே அவருக்கு இறைவனின் அருள் இருந்தது, சாத்தானுக்கும் அவருக்கும் பெரும் யுத்தமே நடந்தது, 5 வயது முதலே அவரை கொல்ல தேடிய சாத்தானிடம் இருந்து புதுமையாக அவர் தப்பியே வந்தார், ஆனாலும் ஆப்ரிக்க நாடுகளில் அவரின் புதுமை பெரும் ஆச்சரியமானது

அந்நாட்டு மக்கள் அவர் பேச்சை கேட்கவில்லை, மனமுடைந்த அந்தோணியார் கடற்கரையில் தனியே பேச மீன்கள் கூடிவந்து கேட்டன, அதன் பின் மக்கள் கேட்டார்கள்

நோயினை குணமாக்கியது, பேய்களை ஓட்டியது, குழந்தையினை பேசவைத்தது, இறந்தவர்களை உயிர்பித்தது என பெரும் அதிசயங்களை செய்தவாறே இறைவனை அவர் போதித்த்தார்

யாராலும், எந்த சக்தியாலும் அவரை தடுக்க முடியவில்லை, பெரும் பெயரும் புகழும் பெற்றாலும் மகா எளிமையாக இருந்தார் அவர்

ஆப்ரிக்க நாடுகளில் அவர் பெரிதும் மதிக்கபட காரணம், மக்களிடம் அவர் பேரம் பேசவில்லை, ஞானஸ்நானம் பெறுவாயா? இதனை செய்கின்றேன் என அவர் சொல்லவில்லை, மாறாக யாராவது அழுதால் அவரும் அழுதார், யாராவது நோயில் துடித்தால் அவரும் துடித்தார், தேவைபட்டவருக்கு எல்லாம் தன்னால் முடிந்த வகையில் ஜெபத்தால் உதவினார்

அம்மக்கள் சிந்தித்தனர், இவரே இப்படி என்றால் இவரின் கடவுள் எவ்வளவு நல்லவராக இருப்பார் என எண்ணியே கிறிஸ்தவத்திற்கு வந்தனர்

ஏழை முதல் பெரும் மன்னர்கள் வரை அவரை பணிந்து நின்றது இப்படித்தான், அவர் வாழ்வு அவ்வளவு அர்ப்பணிப்பு உள்ளதாய் இருந்திருக்கின்றது

யாரையும் அவர் கிறிஸ்தவராக மாற‌ வற்புறுத்தவில்லை, மாறாக அவர்கள் நம்மைபோல‌ மனிதர்கள், அவர்கள் தேவையில் உதவ வேண்டும் எனும் வகையிலே அந்தோணியாரின் பணி இருந்தது

எல்லா மக்களுக்கும் அவரை பிடித்திருந்தது, இயேசுவே குழந்தை உருவில் அவரோடு வந்து விளையாடினார், அற்புதங்களை செய்வது அந்தோணியாருக்கு மகா எளிதானது, இயற்கை அவர் முன்னால் கட்டுபட்டு நின்றது

கோடிகணக்கான அற்புதங்களை செய்ததால் அவர் கோடி அற்புதர் ஆனார்.. எந்த அற்புதமும் அவருக்கு சிரமம் அல்ல, அற்புதங்கள் அவரின் வார்த்தைக்காக காத்திருந்தன‌

கிறிஸ்தவ துறவிகளில் தனிபெரும் இடம் பிடித்த அந்த அந்தோணியார், தன் 36ம் வயதில் இதே ஜூன் 13ம் நாள் இறந்தார்

அவர் இறந்த பின்னும் அவரை நினைத்தவர்களுக்கு, அவர் துணை கேட்டவர்களுக்கு உதவினார், ஒரே வருடத்தில் கத்தோலிக்க திருச்சபை அவரை புனிதர் தரத்திற்கு உயர்த்தியது

கத்தோலிக்கத்தில் புனிதர் அடையாளம் பெற்றவர்களின் திருவுருவம் பீடத்தில் வைக்கபடும், மக்கள் அவர்களை கடவுளாக அல்ல, மாறாக கடவுளிடம் எங்களுக்காக வேண்டிகொள்ளும் என ஜெபிப்பார்கள்

முதன் முதலில் அப்படி அந்தோணியாரின் சுரூபம் முன்னால் வேண்டிகொண்டது யார் தெரியுமா? அவர்களின் பெற்றோர்கள்

இதனை விட பெரும்பேறு யாருக்கு கிடைக்கும், தன் மகனை தெய்வம் என வணங்கும் பேறு அவர்களுக்கு கிடைத்திருக்கின்றது

கிறிஸ்தவம் உலகெல்லாம் பரவ பரவ அந்தோணியாரும் பரவினார், இன்று உலகெல்லாம் அவருக்கு ஆலயங்கள், தமிழகத்தையே எடுத்துகொள்ளுங்கள் அவர் சொரூபமோ ஆலயமோ இல்லாத ஊர்கள் மிக குறைவு.

எல்லா மதத்திலும் அவருக்கு பக்தர்கள் உண்டு, மனதிற்குள் வழிபடும் ஏராளமான மாற்றுமத பக்தர்கள் உண்டு

கடலோடிகளுக்கும் , ஆபத்தான மீணவதொழில் செய்பவர்களுக்கும் அவரே பாதுகாவல், கச்சதீவில் அந்தோணியார் ஆலயம் எழும்பியது அப்படித்தான்

வேளாங்கண்ணி போன்றே பெரும் புண்ணிய ஸ்தலமாக உவரி எனும் கடற்கரை கிராமம் திகழ்வதும் அப்படித்தான்

அந்தோணியார் மறைந்து நெடுங்காலம் கழித்து அவரின் கல்லறையினை தோண்டினார்கள், அவரின் எலும்பும் அவரின் நாக்கும் அழியாமல் கிடைத்தன, எலும்பும் நாக்கும் இன்றும் பாதுக்காக்கபடுகின்றன‌

நாக்கு ஏன் அழியவில்லை என்றால், ஒரே விஷயம் அவர் பொய் சொன்னதில்லை, தன் பக்தர்களுக்கு கொடுத்த வாக்கை அவர் கைவிட்டதில்லை

“எங்கு என்னை நினைக்கின்றீர்களோ அங்கு உங்களுக்காக ஓடோடி வருவேன் என தன் பக்தர்களுக்கு அவர் உறுதியளித்திருந்தார்..” , அதனை இன்றுவரை என்றும் போல காத்துகொண்டிருக்கின்றார்

தன்னை நம்பிவருபவர்களை அவர் கைவிட்டதாக சரித்திரமே இல்லை, அவரின் ஆற்றல் அப்படி

அவரிடம் யாரும் பிரார்த்திக்கலாம், யாரும் கேட்கலாம், அதற்கு ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவனாகவோ, பைபிளை அலசி ஆராய்ந்த ஞானியாகவோ இருக்க அவசியமில்லை, பெரும் பாவியாக இருந்தாலும் , எந்த மதமாக இருந்தாலும், மனிதனாக இருந்தால் போதும்

உங்கள் கண்ணீரை கண்டுவிட்டால் ஓடிவந்து துடைப்பார், அப்படி பலன் பெற்ற சாட்சிகள் ஏராளம் உண்டு

அவர் ஆலயத்தில் அனுதினமும் கூடும் கூட்டமே அதற்கு சாட்சி, அவர்கள் பெற்றிருக்கும் நலமே அதற்கு சாட்சி

சில விஷயங்களை அனுபவத்தினால் மட்டுமே பெறமுடியும், நம்பிவரும் அனைவருக்கும் அவர் நலம் கொடுப்பார், அவருக்கு பேதமில்லை

சிறுவயதில் இருந்தே அந்தோணியாரை அனுதினமும் வணங்கி வந்ததால் அவர் மீதான பற்று அதிகம், , அவர் குடும்பத்தில் ஒருவராகவே இருப்பவர், ஊரைவிட்டு நீங்கும் பொழுது அவரை விட்டு வந்ததாகவே மனம் வலித்தது.

ஆனால் கோலாலம்பூரின் பிரமாண்ட ஆலயத்தில் அமர்ந்திருந்து அவர் என்னை வரவேற்றபொழுது இழந்த‌ சொந்தம் மறுபடி கிடைத்தது போன்றதொரு மகிழ்வு

வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் அவ்வாலயம் சென்று வருவதுண்டு, அங்கு சென்றாலே சொந்த ஊருக்கு சென்ற ஒரு நிறைவு

புனித அந்தோணியாரின் வாழ்வு திரைப்படமாக தமிழகத்திலும் வந்திருந்தது, முத்துராமன் சிறப்பாக‌ நடித்திருந்தார் அவரை விட சிறப்பாக சாத்தான் வேடத்தில் உசிலை மணியும், ஒய்.விஜயாவும் நடித்திருந்தார்கள்.

கண்ணதாசன் மிக அற்புதமான பாடல்களை எழுதியிருந்தார், ஞானத்தின் உச்சியில் அவர் எழுதிய பாடல் “ஆனந்தமானது அற்புதமானது நான் அந்த மருந்தை கண்டுகொண்டேன்..” எனும் தத்துவபாடல்

அதில் இயேசு என்றோ, மாதா என்றோ, பைபிள் என்றோ ஒரு வார்த்தை வராது, கண்ணதாசனை நினைத்தால் ஏன் மனம் சிலிர்க்கும் என்றால் அவர் யாருக்கு பாடல் எழுதுகின்றாரோ அந்த நபர் எழுதியது போலவே இருக்கும், அவர் வரம் அப்படி

அப்படி அந்தோணியாரில் நிறைந்து , சாட்சாத் அந்தோணியின் வார்த்தைகளில் அவர் சொன்ன வரிகள் எந்நாளும் அந்தோணியார் ஆலயத்தின் அழைப்பிற்கு பொருந்தும்

திறந்திருக்கும் அந்தோணியார் ஆலயகதவுகள் அந்த வரியினைத்தான் சொல்கின்றன‌

“நம்பிக்கையுடனே இறைவனை தேடு
நாளைய பொழுதே அவன் வருவான்
நன்மை தீமையை அவனிடம் நாடு
நன்மையே மட்டும் அவன் தருவான்..”

அதுதான், அதேதான் நீங்கள் யாராயினும் உங்கள் துன்பநேரத்தில் அந்தோணியாரிடம் மன்றாடலாம், எதனையும் கேட்கலாம், உங்களுக்கு எது தேவையோ அதனை அவர் நிச்சயம் தருவார்.

முயற்சித்து பாருங்கள், உங்கள் துன்ப கண்ணீரை ஆனந்த கண்ணீராக மாற்றும் அற்புத சக்தி புனித அந்தோணியார் சொருபத்திற்கு உண்டு

அதனை ஏறேடுத்து பார்த்து மனமுருகவேண்டினாலே, உங்கள் அருகில் ஆறுதலோடு வந்து நிற்பார் புனிதர்

இன்று அவரின் திருவிழா, உலகெல்லாம் சிறப்பிக்கபட்டு கொண்டிருக்கின்றது, “புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டி கொள்ளும்..” என்ற குரல்கள் கேட்டுகொண்டே இருக்கின்றன‌

புனித அந்தோணியார் நம் எல்லோருக்காகவும் வேண்டி கொள்ளட்டும்.