கடவுளின் கணக்கு அவ்வளவு துல்லியமானது

தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகெல்லாம் இயேசு பின்னால் வந்தால் சகலமும் கிட்டும், செல்வம் கொட்டும் என ஏமாற்றும் கும்பலை வன்மையாக கண்டிக்கின்றோம்

மனிதனின் குறைந்தபட்ச தேவை நிம்மதி, அதை தருவதே மதங்களின் நோக்கமே அன்றி வேறல்ல. வழிதவறி செல்லும் மனிதன் ஒரு சக்திமேல் நம்பிக்கை வைத்து அதன் வழி நடந்தால் சமூகம் சீர்படும் என்பதே மதங்களின் ஆணிவேர்

மத கட்டளைகளும், அமைப்பும் அப்படித்தான் உருவாயின‌

மற்றபடி இயேசுவினை நம்பினால் வாழ்வாங்கு வாழலாம் என்பதெல்லாம் கடைந்தெடுத்த பொய், கிறிஸ்தவம் மன அமைதியினை வேண்டுமானால் வழங்கலாம் அது எந்த மதத்திலுமே முறையாக இறங்கினால் கிடைக்க கூடிய ஒன்று

யூதமதம் இன்றளவும் கிறிஸ்துவத்தை குட்டிசாத்தானாக பார்க்கின்றது ஆனால் அந்த இனம் அறிவும் பணமும் பெற்று வாழ்வாங்கு வாழ்கின்றது

அரேபிய சுல்தான்களும் இயேசுவினை ஏற்றவர்கள் அல்ல..

மேல்நாட்டு விஞ்ஞானிகள் என்றாலும் பாதிக்கும் மேற்பட்டோர் கிறிஸ்துவினை நம்பியவர்கள் அல்ல‌

கிழக்காசியாவின் பெரும் ஜாம்பவான்களும் உலகை ஆட்டி வைக்கும் சக்தி கொண்டவர்களும் கிறிஸ்தவர்கள் அல்ல‌

ஏன் பழைய ஏற்பாட்டிலே , அதாவது சர்வசக்தி படைத்த கடவுள் காலத்திலே அலெக்ஸ்டாண்டரின் எழுச்சி பற்றி அவரே சொல்கின்றார்

ஏன் ஒரு யூதனை பெரும் மாவீரனாக உலகை வெல்லும் வல்லமை மிக்கவனாக கடவுளால் உருவாக்கமுடியவில்லை என்ற கேள்விக்கு கடவுளின் தூதனால் பதில் சொல்லமுடியவில்லை

அலெக்ஸாண்டர் முதல் நெபுகாத்நேச்சர் இன்னும் யாரெல்லாமோ பெரும் அரசர்களாக இருந்து யூத இனத்தை அடிமையாகவே வைத்திருந்தனர்

ஏன் என்றால் பெரும் அரசர்களையும் அரசுகளையும் கடவுளே எழுப்புகின்றார், கடவுளே அமர்த்துகின்றார் என்கின்றது பைபிள்

ஆம் அவரை நம்பாதவரையும் நம்புபவரையும் அவர் ஒரே மாதிரிதான், அவரின் விருப்பபடிதான் நடத்தி தொலைகின்றார்

கடவுளும் மதங்களும் ஆழமானவை, சராசரி மனிதனால் புரிந்து கொள்ளமுடியாதவை

இவனால் இந்த காரியம் இந்த உலகில் நடக்கும் என உலகை இயக்க மனிதன் அனுப்படுகின்றான், அவனின் காலம் முடிந்ததும் அடுத்த மனிதன் அதை செய்ய பிறக்கவைக்கபடுகின்றான்

உலக இயக்கம் அதன் போக்கில் நடக்கின்றது

ஷாஜகான் அரசனானதும் அவன் மும்தாஜிடம் மனதை பறிகொடுத்ததும் தாஜ்மகாலை கட்ட என்றால், அதில் கல்லுடைத்த தொழிலாளி அந்த கல்லை உடைக்கவே பிறக்கவைக்கபட்டான்

இதோ ஷாஜகானும் மும்தாஜூம் அந்த தொழிலாளியும் ஒரே மாதிரிதான் செத்தார்கள் புதைக்கபட்டார்கள்.

யார் எப்படி வாழ்வது, சாவது என முடிவு செய்யும் சக்தி மனிதனுக்கு இல்லை.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு சூழல் தரபடுகின்றது,ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு சிந்தனை தரபடுகின்றது

அது அவனை உருவாக்கி செதுக்கி வழிநடத்தி அவனை செல்லவேண்டிய இடத்துக்கு மிக சரியாக இழுத்து செல்கின்றது

நியூட்டன் ஏன் கீழே விழுந்த ஆப்பிள்பழத்தை எடுத்து வைத்து சிந்தித்தான்?

ஐன்ஸ்டீன் ஏன் அணு அமைப்பும் வான் கோள்கள் அமைப்பும் ஒன்று போல் இருக்கின்றது என சிந்தித்தான்?

இவர்களுக்கு மட்டும் சிந்தனை ஏன் அப்படி சென்றது?

அப்துல்கலாம் எப்படி ராக்கெட் விஞ்ஞானியானார்? சந்தண வீரப்பன் ஏன் கொள்ளைக்காரனானான்

இதெல்லாம் அவரவர் சிந்தனையாலும் சூழலாலும் விளைந்தது

ஜூலியஸ் சீசர் ஏன் அவ்வளவு பெரும் சாம்ராஜ்யத்தை அமைக்க வேண்டும் பின் கிளியோபாட்ராவினை சந்தித்து சரிய வேண்டும்?

பெரும் சக்கரவர்த்தியாக வாழ்ந்திருக்க வேண்டிய நெப்போலியன் ஏன் சாதாரண‌ ஜோசப்பின் கரங்களில் வீழவேண்டும்?

ராபர்ட் கிளைவ் அப்படித்தான் இந்தியா வந்தான், தற்கொலைக்கு தப்பிய அவன் மாபெரும் ஆளுநராக வாழ்ந்து செத்தான்

வியாபாரியாக வாழவேண்டிய காந்தி உலக மகாத்மா ஆனார், அவருக்கான சூழல் அப்படி இருந்தது, இனி ஒரு காந்தி வரமுடியுமா?

திருக்குவளை கிராமத்தில் ஒரு குழந்தை ஏழையாக பிறக்க வேண்டும் என்பதும் பின்னாளில் அது இந்திய தலைவராக வாழ்ந்து காந்தி முதல் ராகுல்காந்திவரை சந்திப்பார் என எது வழிநடத்திற்று?

அவரின் மரணத்திற்கு இந்தியாவே திரண்டு வந்து அஞ்சலி செலுத்தவேண்டும் என நடத்தியது எது?

அலகாபாத் மாளிகையில் கொஞ்சி விளையாடிய நேருவின் பேரன் திருப்பெரும்புதூர் காட்டுக்குள் சிதறிகிடப்பான் என நடத்திய சக்தி எது?

எல்லாம் அவனனவனுக்கு விதிக்கபட்டது.

கிறிஸ்துவினை ஏற்று கொண்டவர் மட்டும் வாழ்ந்ததுமில்லை, அவரை ஏற்காதவர்கள் அழிந்து போவதுமில்லை

வானத்து பறவைகளுக்கு உணவும் நீரும் கிடைப்பது போல இந்த உலகில் எல்லா மனிதருக்கும் வாழும் வாய்ப்பு எப்படியாவது கிடைத்தே தீரும்

மரணத்துக்கு பின் நடப்பது வாழும் மனிதனுக்கு தெரியாது, செத்தவன் திரும்ப வந்து சொன்னதுமில்லை

ஆதலால் கிறிஸ்தவமே வாழ்வுக்கும் வளத்துக்கும் நோய்தீரவும் வழி என எவனாவது கிளம்பினால் அவனிடம் பேசாதீர்கள்

அதெல்லாம் பிழைப்புக்காக பலர் செய்துகொண்டிருக்கும் அயோக்கிய தனம்

கடவுள் ஒருவரே, அவர் தன் விருப்பபடி உலகை இயக்கிகொண்டிருக்கின்றார். அவனவனுக்கு விதிக்கபட்டது அவனுக்கு வந்தே தீரும்

அது நல்லதோ கெட்டதோ அவனவன் சுமந்தே தீரவேண்டும் , இதை மாற்ற எந்த கொம்பனாலும் முடியாது

அதில் ஒரு இன்ஞ் கூட மதம் மாறுவதால் கூட்டவோ இல்லை கழிக்கவோ முடியாது

கடவுளின் கணக்கு அவ்வளவு துல்லியமானது, மதமாற்ற மோசடிகளால் இங்கு யார்வாழ்வும் மாறாது

“அவனவன் இருக்குமிடம் ஆண்டவன் போட்ட பிச்சை அறியா மானிடருக்கு அக்கறையில் பச்சை”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s