அவரவர் உணவு அவரவர் உரிமை

“வயவாள் எறிந்து வில்லின் நீக்கிப்
பயநிரை தழீஇய கடுங்கண் மழவர்
அம்புசேட் படுத்து வன்புலத் துய்த்தெனத்
தெய்வஞ் சேர்ந்த பராரை வேம்பிற்
கொழுப்பா எறிந்து குருதி துஉய்ப்
புலவுப் புழுக்குண்ட வான்கண் அகலறைக்
களிறுபுறம் உரிஞ்சிய கருங்கால் இலவத்து
அரலை வெண்காழ் ஆலியில் தாஅம்
காடுமிக நெடிய என்னார் கோடியர்..”

இந்த சங்க‌ பாடலின் பொருள் என்னவென்றால், தெய்வம் சேர்ந்த பரு அறை வேம்பின் – தெய்வம் தங்கிய பரிய அரையினையுடைய வேப்ப மரத்தடியில், கொழுப்பு ஆ எறிந்து – கொழுப்பினையுடைய பசுவினைத் தடிந்து, குருதி துஉய் – உதிரத்தைத் தூவிப் பலியிட்டு, புலவுப் புழுக்கு உண்ட – அதன் புலாலைப் புழுக்கி உண்ட இடமாயிருந்தது

அதாவது பசுவினை தெய்வத்திற்கு தமிழகத்தில் பலியிட்டிருக்கின்றார்கள்

பசுவாவது பரவாயில்லை அடுத்த பாடல்தான் அலற வைக்கின்றது

“கள்ளி யகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்
எள்ளற்க யார்வாயின் நல்லுரையைத் – தெள்ளிதின்
ஆர்க்கும் அருவி மலைநாட! நாய்கொண்டால்
பார்ப்பாரும் தின்பர் உடும்பு…”

ஆம் பார்பணர் எனப்படும் பிராமணரும் உடும்புகறி உண்டார்கள் என்கின்றது இன்னொரு பாடல்

சும்மா அல்ல, நாய் வாயில் இருந்தாலும் பரவாயில்லை என பறித்து உடும்பு கறியினை உண்டார்களாம்..

ஆக தமிழர் எல்லா வகை உணவினையும் கலந்து கட்டி அடித்த இனம் என்பது தெரிகின்றது, உணவுக்கு பெயர் போன மாநிலத்தில் மாட்டுக்கறிக்கான சர்சையினை ஏற்றுகொள்ள முடியாது

அவரவர் உணவு அவரவர் உரிமை

யாரையும் இதைமட்டும் உண் என எப்படி சொல்லமுடியாதோ அப்படி இதை எல்லாம் உண்ணாதே என சொல்லவும் முடியாது

எல்லா உணவும் மனிதனுக்காக படைக்கபட்டவை

யூதருக்கும் அரேபியருக்கும் ஒரே மாதிரியான அடையாளம் இருந்தது, அதாவது அவர்களும் மீசை தாடி, குல்லா ஜெருசலேம் நோக்கி தொழுதல், சுன்னத் என ஏக ஒற்றுமைகள் இருந்தன‌

யார் இஸ்லாமியர், யார் யூதன் என கண்டுபிடிக்கமுடியா அளவு சிக்கல் இருந்த நேரம், இஸ்லாமியரை அடையாளபடுத்த புதுவழி கண்டார்கள்

விஷயம் ஒன்றுமில்லை, மீசையும் தாடியும் வைத்தால் யூதன், மீசையின்றி தாடி மட்டும் வைத்தால் இஸ்லாமியன்

ஜெருசலேம் நோக்கி தொழுதால் யூதன், மெக்கா நோக்கி தொழுதால் இஸ்லாமியன்

சிக்கல் தீர்ந்து இன்றுவரை அந்த நல்ல முடிவு தொடர்கின்றது

இந்துமதம் அன்று உயிர்பலி செய்துகொண்டிருந்தது பசு முதல் குதிரை வரை ஏன் மனிதன் வரை வெட்டி அக்கினி குண்டத்தில் பலிகொடுத்துகொண்டிருந்தார்கள்

ஏன் சிவபெருமானே பிள்ளைகறி கேட்டு உண்டிருக்கின்றார்.

புத்தமும் சமணமும் கொல்லாமை போதித்து ஓங்கி வளர்ந்தன, அது உயரிய தத்துவமாயிற்று

சங்கரரின் எழுச்சிக்கு பின் இந்துமதம் தன்னை சீர்படுத்தியது, கொல்லாமை எனும் தத்துவத்தை தன் தத்துவமாக மாற்றிகொண்டது

அதிலிருந்துதான் சைவ உணவு எனப்படும் வழக்கம் இந்து கலாச்சாரமாக மாறியதே அன்றி ஆரம்பத்திலிருந்து அல்ல‌

விதிவிலக்கான உணவுகள் எல்லா மதத்திலும் உண்டு, இயேசுநாதரிடம் கூட கேட்டார்கள், அசுத்த உணவினை உண்ணலாமா?

அவர் சொன்னார் “வெளியிலிருந்து உள்ளே போகும் எதுவும் மனிதனை தீட்டுபடுத்தாது, மாறாக மனிதனின் மனதிலிருந்து வெளிவருபவைதான் ஆபத்தானவை”

ஆம், எல்லா உணவும் மனிதனுக்காக படைக்கபட்டவை. அதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை

மாட்டுகறிக்காக மனிதனை தாக்க கிளம்பும் கும்பலை தமிழகத்தில் முதலிலே கிள்ளி எறிதல் நலம்

இதெல்லாம் திராவிட நியாயங்களாம்

இந்த இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பொங்குபவர்கள் யாரென்றால் திக, திமுக, திருமா இன்னபிற‌

இங்கே இட ஒதுக்கீடு வேண்டுமாம், தாழ கிடப்பவர்கள் மேலே வர வேண்டுமாம்

இதைத்தான் இலங்கையில் இலங்கை அரசும் சொன்னது, ஈழதமிழர் கல்வியில் காலம் காலமாக ஆதிக்கம் செலுத்துகின்றனர், பெரும்பான்மை சிங்கள சமூகம் தாழகிடக்கின்றது, அவர்கள் மேல் எழும்ப இட ஒதுக்கீடு அவசியம்

அதை சொன்னவன் தர்மபாலா, சிங்களருக்கு அவன் தெய்வம் தமிழகத்தில் அவன் இனவெறியன்

ஆனால் இங்கு அதே இட ஒதுக்கீட்டை சொன்ன பெரியார் புரட்சியாளன்

இங்கே பிராமண சமூகம் கல்வியில் அரசுவேலையில் ஆதிக்கம் செலுத்தியது போலத்தான் அங்கு ஈழதமிழரும் இருந்தனர், அதே சாயல்

இங்கே தாழ்த்தபட்ட இனங்கள் போலத்தான் பெரும்பான்மை சிங்கள சமூகம் அங்கு ஒடுங்கி கிடந்தது

இங்கே இட ஒதுக்கீடு செய்தால் எல்லோரும் ஏற்க வேண்டும், ஆனால் இலங்கையில் செய்தால் ஏற்க கூடாது துப்பாக்கி தூக்க வெண்டும், பெரும் அழிவுகளை ஏற்படுத்த வேண்டும், ஒப்பாரி வைக்க வேண்டும்

ஆக தாழகிடப்பவருக்கு இலங்கை அரசு ஏதும் செய்தால் அதன் பெயர் இனவாதம், தமிழர் ஒழிப்பு

ஆனால் இந்திய அரசு செய்தால் அதன் பெயர் இட ஒதுக்கீடு

இதெல்லாம் திராவிட நியாயங்களாம்

இன்னமும் கேளுங்கள்

10% இட ஒதுக்கீட்டை எதிர்ப்போம் திராவிட , அம்பேத்கரிய‌ கோஷ்டிகள்

அட 10% என்ன? 100% கூட நீங்களே எடுத்துகொள்ளுங்கள், ஆனால் பிரபல வக்கீல், டாகடர் இன்னபிற ஆலோசகர்கள் என பிராமணர்கள்தான் வந்து நிற்பார்கள்

கடைசியில் கட்சி வழக்கோ, கட்சி தலைவரின் உடல்நலமோ, இல்லை கட்சியின் சொத்து கணக்குக்கான ஆடிட்டிங் எனப்படும் தணிக்கைக்கு எல்லாம் பிரமாண வக்கீல், டாக்டர், ஆடிட்டர் வித்தகரிடமே வந்து நிற்கின்றார்கள்

60 ஆண்டுகால இட ஒதுக்கீட்டில் ஒரு நிபுணரை கூட உருவாக்க முடியவில்லை ,

பெரும் விஞ்ஞானிகள் கூட வேண்டாம், ஒரு நல்ல டாக்டரையோ வக்கீலையோ கூட உருவாக்க முடியவில்லை

இவர்கள் உருவாக்கியது எல்லாம் போலி மீடியா, பொய் சொல்லி கத்தும் அரசியல்வாதிகள், பொது இடங்களில் வசூல் அதில் மாநாடு + குவார்ட்டரும் பிரியாணியும்

வேறு ஒன்றையும் உருப்படியாக உருவாக்கவில்லை

ஆனாலும் இன்னமும் இட ஒதுக்கீடு வேண்டும் என கேட்டு கொண்டே இருக்கின்றீர்கள்,

இன்னமும் கேளுங்கள்

ஆனால் கடைசியில் ஒரு ஆபத்தில் பிராமணனிடமே சரணாகதி ஆவீர்கள்

இதுவரை அப்படித்தான் ஆகியிருக்கின்றீர்கள், இன்னமும் அதேதான் நடக்கும்

அன்று கற்றவர்கள் இருந்த அவை

இந்த வைகோ பாராளுமன்றம் சென்றால் கிழித்தெறிந்துவிடுவார், பைபிளில் வரும் சாம்சன் போல மாளிகையின் தூணை எல்லாம் பிடுங்கிவிடுவார் என ஏகபட்ட ஒப்பாரிகள்

உண்மையில் வைகோ அங்கு சென்றால் என்ன செய்வார்? ஓரு புல்லும் புடுங்கமாட்டார்.

இந்திராவின் காலத்தில் வைகோ பேசினார் என்றால் அவரை பேசவிட இந்திராவுக்கு அவசியம் இருந்தது. ஈழவிவகாரத்தினை பாராளுமன்றத்தில் பேசுகின்றோம் என இலங்கைக்கு கண்சிமிட்டும் அவசியம் இருந்தது, அதற்கு மேல் திமுகவினை உடைக்கும் அரசியலும் இருந்தது

ஏகபட்ட திட்டங்களுடனே வைகோ பேசவைக்கபட்டார், காலம் அப்படி இருந்தது

எல்லாவற்றுக்கும் மேல் அன்று கற்றவர்கள் இருந்த அவை வைகோவின் பேச்சினை ரசிக்கவும் செய்தது

இன்று அங்கு இருப்பது எல்லாம் ஒருமாதிரி கோஷ்டிகள், வைகோ பேசினாலும் அவர்களுக்கு புரியாது, அவர் பேசி ஆகபோவது ஒன்றுமே இல்லை

கிரிக்கெட்டில் பந்து எல்லை கோட்டை தொட்டுவிடும் என தெரிந்தும் சில பீல்டர்கள் விழுந்து கிடப்பார்கள்

அப்படி ஒன்றுமே செய்யமுடியாது என தெரிந்தும் டெல்லியில் சம்பிரதாயத்துக்கு கத்தி கொண்டிருக்கின்றனர் அக்கோஷ்டிகள், அதில் வைகோ என்பவரும் சேரபோகின்றார், என்பதை தவிர சொல்ல ஒன்றுமில்லை

அந்த குறுகிய இந்திய பயணம் நன்றாகவே முடிந்தது

அந்த குறுகிய இந்திய பயணம் நன்றாகவே முடிந்தது, தந்தையின் முதலாம் ஆண்டு என்பது வாழ்வில் எவ்வளவு தூரம் கடந்து வந்துவிட்டோம் என்பதை உணர்த்தியது

தொட்டில் கட்டி ஆட்டிய தந்தைக்கு கல்லறை கட்டும் அளவு வாழ்வில் பாதியினை கடந்தாகிவிட்டது, காலம் யாருக்கு காத்திருக்கும்,

சூரியனை நிறுத்தி வைக்க நாம் என்ன நித்தி சாமியா?

அவர் மறைந்து ஒரு வருடம் ஆகிவிட்டாலும், அந்த நாளில் மனம் கலங்கத்தான் செய்தது, சம்பிரதாய பிரார்த்தனைகள் மற்றும் இதர விஷயங்கள் செய்தாலும் மனம் நிறையவில்லை

முதியோருக்கு உணவளித்தல், ஆடை அளித்தல் என்றாலும் நிறைவில்லை

இதுதான் வாய்ப்பு என வந்து “மக்கா லேய், அவர் பெயரில் 4 பேர் நன்றாக குடிக்காவிட்டால் அவர் ஆத்மா தாங்குமா?” என கேட்டு அரசின் வருவாயினை பெருக்க வந்த பலரை தவிர்க்க முடியவில்லை

அவர்களுக்குத்தான் தந்தையின் ஆத்ம சாந்தி பற்றி எவ்வளவு அக்கறை?

என்ன செய்தாலும் மனம் நிறையவில்லை ஏதோ ஒன்று குறைவது தெரிந்தது.

ஒரு விஷயம் உணரமுடிந்தது

செத்தவன் நினைவாக செய்வதெல்லாம் வீண். அவன் இருக்கும் பொழுது அவனுக்கு செய்யாமல் அவன் இறந்தபின் செய்வதில் என்ன அர்த்தம் என்றேல்லாம் பல அறிவாளிகள் பேசுவார்கள் பேசட்டும்

மற்ற மதத்தை விட இந்து தர்மம் இறந்தவர்களுக்காக சில காரியங்களை செய்ய‌ ஏன் வலியுறுத்துகின்றது என்றால் அதில்தான் விஷயம் இருக்கின்றது.

ஒருமனிதன் தன் வாழ்நாளில் தான தர்மங்களை செய்ய வேண்டும், அவன் இல்லா காலங்களில் அவன் பெயரால் சில காரியங்கள் நடக்க வேண்டும்

பெரிதாக இல்லாவிட்டாலும் அவன் நினைவாக சிலர் வயிறார உண்ண வேண்டும், ஆடைகள் பெற வேண்டும்

அதில் இறந்தவன் ஆத்மா மகிழுமா இல்லை , அது சாந்தி அடையுமா என்பதல்ல , மாறாக அவன் பெயரில் சிலர் மகிழ்கின்றார்கள், அவன் பெயரால் சிலர் பசியாவது ஆறுகின்றார்கள் என்பதே விஷயம்

ஆம், இந்துமதம் அந்த நற்காரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது

திதி கொடுப்பது, நினைவுநாளை அனுசரிப்பது எல்லாம் இந்த ஏற்பாடே

மற்ற எந்த மதத்திலும் இல்லாத அளவு மிகபெரும் புண்ணிய காரியத்தை ஆத்மா, சொர்க்கம், சாந்தி, பாவமன்னிப்பு, முன்னோர் ஆசி என சொல்லி அது செய்திருக்கின்றது

சமூகத்தில் நாலு பேர் இறந்தவன் பெயரால் பயனடைந்தால், நொடி நேரம் மகிழ்ந்தாலே ஒருவன் வாழ்ந்த வாழ்வு அர்த்தமுள்ள வாழ்வாகின்றது.

அந்த மாபெரும் உண்மையினை வலியுறுத்துகின்றது இந்து தர்மம், அவ்வகையில் இந்துமதம் மிக மிக சிறப்பானது என்பதை ஏற்றுகொள்ள வேண்டியிருக்கின்றது.

திதி, அமாவாசை முன்னோர் வழிபாடு, இன்னும் ஏராளமான விஷயங்கள் எல்லாம் சமூகத்தில் இல்லாதோருக்கு உதவவே அன்றி வேறு எதற்கும் அல்ல..

மாபெரும் புண்ணிய காரியத்தை ஆத்மா, சொர்க்கம் என சொல்லி ஏற்பாடு செய்து வைத்திருக்கும் இந்துமதத்தை மனமார வணங்குகின்றேன்..

ஆனால் என்ன செய்தாலும் மனம் நிறையவில்லை

அவர் நடந்த வரப்பெல்லாம் சுற்றிவிட்டு கடைசியாக அவரோடு சென்ற வாழைக்காய் சந்தைக்கும் சென்றாயிற்று.

விவசாயிகள் பொருளை விவசாயி விற்கும் உழவர் சந்தை நல்ல திட்டம், யாருக்கு நல்ல திட்டமென்றால் 10 கிலோ கத்தரிக்காய், தக்காளி என கால் ஏக்கரில் பயிடுபவனுக்கு சரி

ஆனால் 500 வாழைத்தார்களை மொத்தமாய் வெட்டுபவன், 3000 கிலோ பூசனியினை பறிப்பவன் எல்லாம் அதில் என்ன விற்க முடியும்? வாய்ப்பே இல்லை

நெல், மிளகாய் வற்றல் , பருத்தி போல அவற்றை பாதுகாக்கவும் முடியாது

மொத்தமாக இம்மாதிரி பாதுகாக்கமுடியா பொருள் விளையும் பொழுது வியாபாரிக்கே லாபம்

விவசாயி அழிவது இதில்தான், சந்தையில் ஏலமிடும் வியாபாரிக்கு கிடைக்கும் நிரந்தர பணம் விவசாயிக்கு இல்லை

அதுவும் வாடகை, கமிஷன் எல்லாம் போக விவசாயிக்கு மிஞ்சுவது ஏதுமில்லை..

சந்தை எல்லாம் சுற்றினேன், முன்பெல்லாம் நானும் அவரும் அப்படித்தான் சுற்றுவோம்

நேந்திரம், தொழுவன், கதலி என ஏகபட்ட வாழை ரகங்கள் குவிந்திருக்கும். அவரும் நன்றாக விளைந்த தாரினை குழந்தையின் கன்னத்தை தொடுவது போல லேசாக தொட்டு பார்த்து சிரித்து கொள்வார்

அதெல்லாம் நினைவுக்கு வந்தது

குவித்து வைக்கபட்ட வாழைத்தார்கள் அருகே வாழைத்தாரின் காம்பு போல குனிந்திருந்தான் அந்த விவசாயி

ஏகபட்ட பெண் பிள்ளைகளை பெற்று அவர்கள் திருமணத்தன்று கலங்கி நிற்பவன் போல அவன் அமர்ந்திருந்தான்.

அதே கைலி, அதே பனியன்..அதே பாதி நரைத்த தலை, அதே ஒல்லிய ஒடுங்கிய உருவம்..

அவரை பார்த்ததும் மனம் சட்டென கலங்கிற்று, கையில் எவ்வளவு இருந்தது என தெரியவில்லை, ஓடி சென்று அவர் கைகளில் திணித்தேன்

கலங்கிய கண்களோடு பார்த்தார், அவருக்கு அர்த்தம் புரியவில்லை

வாங்க மறுத்தார், காரணங்களை சொல்லி கடுமையான வற்புறுத்தலுக்கு பின் வாங்கி கொண்டார்

அவர் கைகளை பற்றி கொண்டிருந்தபொழுது என்னை அறியாமல் அழுகை வந்தது

அவர் காரணம் தெரியாமல் திகைத்தார், அந்த கண்ணீருக்கான காரணம் என் மனம் மட்டுமே அறியும்.

அதன் பின்பு மனம் திருப்தியாக தோன்றிற்று, நிறைவோடு வானத்தை நோக்கிபார்த்தால் லேசாக சாரல் முகத்தில் விழுந்தது,

அது தந்தை ஆசிகொடுத்த அடையாளம் அன்றி வேறல்ல..

தமிழக மக்கள் கையில்தான் இருக்கின்றது

வட இந்தியன் இங்கே வந்து குவிந்துவிட்டானாம், அதனால் ஒரே ரேஷன் கார்டு என்பது இங்கு சிக்கலாகிவிடுமாம். அவனுக்கும் சென்றுவிடுமாம்

பெருந்தன்மைக்கு பெயர் போன தமிழினம் சொல்லும் மிக மட்டமான காரணம் இது

மும்பையில் ஏகபட்ட தமிழர் உண்டு, மராட்டிய அரசின் நியாயவிலை கடைகளை கூட அவர்கள் எடுத்து நடத்திய காலங்கள் உண்டு

தமிழன் இந்தியா எங்கும் செல்லலாம், எல்லா மாநிலத்திலும் வாழலாம் சம்பாதிக்கலாம்

பீகாரிலும் ஒரிசாவிலும் பல்கலை கழகமே நடத்தலாம், சிவ் நாடார் போன்றவர்கள் பெரும் கணிணி சாம்ராஜ்யமே டெல்லியில் நடத்தலாம்

ஆனால் வடநாட்டவன் இங்கு வந்து நம்மோடு உண்டால் இவர்களுக்கு பொறுக்காது

எழுதி வைத்து கொள்ளுங்கள்

ஈழதமிழினம் என்ன பாடுபட்டதோ அந்த நிலைக்கு இங்குள்ள தமிழரையும் அழைத்து செல்ல ஒரு கோஷ்டி திட்டமிட்டு வேலை செய்கின்றது

விரைவில் அது நடக்கலாம், ஈழ சிக்கலின் ஆரம்பம் இப்படி முணுமுணுப்பில்தான் தொடங்கியது

பின் பெரும் ரத்த களறியில் முடிந்து இன்று பேரழிவில் சிக்கி, ஓரளவு அனுசரித்து போயிருந்தால் வாழ்ந்திருக்கலாமோ? இப்பொழுது என்ன கிழித்துவிட்டோம் என அந்த இனம் தவிக்கின்றது

முழுக்க அழிந்தபின் அவர்களுக்கு ஞானம் வந்திருக்கின்றது

தமிழகம் அதே ஈழ அழிவுக்கு தயாராகின்றது, நடக்கும் காட்சிகள் அதைத்தான் சொல்கின்றது

அதனை தவிர்ப்பது தமிழக மக்கள் கையில்தான் இருக்கின்றது