Today’s News 14/07/2019

மத்திய அரசு அனுமதி நியூட்ரினோ திட்டத்தை மதிமுக கடுமையாக எதிர்க்கும் – வைகோ

என்னது மதிமுக கட்சியா? அது இன்னமும் இருக்கின்றதா என்ன?

எந்த விஜயலட்சுமி?

தமிழ்பெண் என்பதான் கன்னட திரை கும்பல் என்னை கொடுமைபடுத்துகின்றது , தமிழ்திரையுலகம் என்னை மீட்க வேண்டும் : நடிகை விஜயலட்சுமி கதறல்

எந்த விஜயலட்சுமி?

அங்கிள் சைமனுக்கு கேக் ஊட்டி, பின் சைமன் எதை எல்லாமோ ஊட்டிய அந்த விஜயலட்சுமி

அம்மணி, நான் தமிழச்சி தமிழச்சி என கதறுகின்றது, தமிழச்சிக்கு ஒரு ஆபத்து என்றால் “நாம் தமிழர்” படை சும்மா இருக்குமா?

ஆனால் அங்கிள் மேல் பிராது கொடுத்தவர் தமிழச்சியாக இருந்தால் என்ன? தங்கச்சியாக இருந்தால் என்ன? எப்படி காக்க முடியும்? என சைமனின் தும்பிபடை அமைதி காக்கின்றது

ஒரு லாரி தண்ணீரின் விலை 4500 ரூபாயாக :உயர்ந்தது : செய்தி

இனி ஒரு பயல் விவசாயம் செய்வான்?

அரும்பாடுபட்டு கடன்பட்டு பயிர்களை விளையவைத்து நஷ்டமடைவதை விட‌ நீரை விற்பது எவ்வளவு லாபகரமானது.

விவசாயிகள் வாழ ஒரு அரசு இதை விட என்ன திட்டம் கொண்டுவந்துவிட முடியும்?

உலக விவசாயிகளுக்கே முன்னோடி திட்டம் இது.

அவர் திறந்த கிட்டதட்ட 10 ஆயிரம் அரசு பள்ளிகளை மூடும் நிலைக்கு கொண்டுவந்துவிட்டு இரு நாட்களில் அந்த காமராஜருக்கு கல்வி கண் திறந்த மகான் என விழா எடுக்க தயாராகின்றது தமிழகம்..

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ராமசந்திரன் பெயரை சூட்டி சிக்கலை தொடங்கினார்கள், அது தேவையற்ற ஒன்று

விவகாரம் இப்பொழுது ஈரோட்டு நிலையத்துக்கு பெரியார் பெயரை சூட்டவேண்டும் என கனிமொழியால் தொடரபடுகின்றது

இன்னும் பல கோரிக்கைகள் விரைவில் வரலாம்

இதில் முந்திகொள்ள வேண்டாமா?

இதனால் திருச்சி ரயில் நிலையத்திற்கு தங்க‌ தலைவி குஷ்பு பெயரை சூட்டும்படி சங்கம் கோரிக்கை வைக்கின்றது

பாண்டிசேரியில் நடக்கும் அதிகார போட்டியினை கண்டால் மறுபடியும் பிரெஞ்ச்காரனே வந்து நாராயணசாமியினையும் கிரண் பேடியினையும் விரட்டிவிட்டு ஆட்சியில் அமர்ந்தாலும் அமர்ந்துவிடுவான் போலிருக்கின்றது..

மாட்டுகறி எல்லாம் ஏன் சர்ச்சையாகின்றது என்றால் சுவையான கறி கிடைக்காத காராணமன்றி வேறல்ல‌

மான் கறியினை போல சுவையான கறி இல்லை, அர்ஜூனா கறிகளில் நான் மான் கறி என அர்ஜூனன் காதில் ரகசியமாக பகவான் கண்ணன் சொல்லியிருக்கின்றான்

மான்கறி, மிளா கறி தடையினை விலக்கினால் யார் மாட்டுகறி பக்கம் போக போகின்றார்கள்?

ஆக மான்கறியினை அனுமதிப்பதே மாட்டு கறி சர்ச்சைக்கு முடிவே அன்றி வேறல்ல..

கேப்டனே நேரில் சென்று செய்தி எழுதி கொடுப்பார் போலிருக்கின்றது

எல்லா செய்தியிலும் அவர் பெயர் அத்தி வரதர் என்றால், விஜயகாந்தின் கேப்டன் டிவியில் மட்டும் அவர் பெயர் “அத்திர வரதர்”

மாற வேண்டியது சிந்தனையே தவிர உணவு அல்ல..

யூதனுக்கு மீனும் மாடும் முக்கிய உணவு அவன் உலகின் மிகசிறந்த அறிவாளி இனம்

ஜப்பானியன் எல்லா ஜீவராசிகளையும் அதுவும் அரைவேக்காட்டிலே விழுங்குவதில் கில்லாடி அவனும் மிகபெரும் சுறுசுறுப்பான அறிவாளி

ஆட்டுகறியும் கோழியும் விரும்பி உண்ணும் ஜெர்மானியரும் மற்ற ஐரோப்பியர்கள் வாழும் தேசமும் நன்றாகத்தான் இருக்கின்றன‌

உணவில் ஒரு மண்ணாங்கட்டியுமில்லை, வாழ்வு என்பது அவர்கள் மனதை பொறுத்தது, நாடு என்பது மக்கள் உழைப்பையும் சிந்தனையும் பொறுத்து வாழும்

மாறாக உணவு வகைகளால் ஒரு மாற்றமும் வராது, மாற வேண்டியது சிந்தனையே தவிர உணவு அல்ல..

கடற்கரையில் தமிழகம் காத்திருக்கும் நிலை ஒரு நாள் நிச்சயம் வரும்

தமிழ்நாடு முழுக்க சுற்றிபார்த்தாலும் தாமிரபரணி தவிர எந்த ஆறிலும் நீர் ஓடுவதாக தெரியவில்லை, நீர்தான் இல்லை மணலாவது இருக்கவேண்டாமா?

அதையும் நன்றாக சுரண்டியிருக்கின்றார்கள்

60 வருடங்களில் தமிழகம் மிக மோசமாக சுரண்டபட்டிருக்கின்றது, நீரை சேமிக்க ஒரு நடவடிக்கையுமில்லை

100 நாள் வேலைதிட்டத்தை பார்த்தால் குளத்தின் வரப்பினை வெட்டி அதன் மேலேயே போடுகின்றார்கள், நல்லவேளையாக 10 நிமிடம் மட்டும் அவர்கள் வேலை செய்வதால் குளங்கள் இன்னும் முற்றிலும் அழியவில்லை

நீர் மேலான்மை துளியும் இல்லை, நீங்களே உங்களுக்கான நீர் தேவையினை பூர்த்திசெய்யுங்கள் என கைகளை மறைமுகமாக விரித்துவிட்டது தமிழக அரசு

வாக்குக்கு பணம் வாங்கிய மக்களும் தங்களை அறியாமல் அதை சுமக்க தொடங்கிவிட்டனர்

விளைவு நிலத்தடி நீர் பல வகைகளில் வகை தொகை இல்லாமல் சுரண்டபட்டு 500 அடிக்கு கீழே சென்றாலும் இல்லை

உலகிலே நிலத்தடி நீரை மட்டும் நம்பி இயங்கும் மிக மோசமான பகுதியாக தமிழகம் மாறிவிட்டது

நிச்சயம் அது நீண்டகாலம் வராது, இன்னும் மகா மோசமான நிலையினை வருங்காலங்களில் தமிழகம் எட்டும்

மாபெரும் திட்டங்களும் மிக பெரும் அதிரடி நடவடிக்கைகளும் எடுக்கபடாவிட்டால் இன்று ஜோலார் பேட்டையிலிருந்து வரும் ரயில் போல எங்கிருந்தோ நீர் கொண்டு வரும் கப்பலுக்காக கடற்கரையில் தமிழகம் காத்திருக்கும் நிலை ஒரு நாள் நிச்சயம் வரும்

தோணியினை காலம் தாழ்த்தி களமிறக்கியதின் விலை

பல உள் அரசியல் காரணங்களுக்காக தோணியினை காலம் தாழ்த்தி களமிறக்கியதின் விலை உலககோப்பை பறி போனது.

ஆம் தோணி 2டவுணாக இறங்க வேண்டியவர், தினேஷ் கார்த்திக், ரிஷ்பபந்த் என யாரெல்லாமோ இறங்கிய பின் கடைசி நேரத்தில் அவரை களமிறக்குவது யாருக்கும் சரியாக படவில்லை டோனி உட்பட‌

தேசமே இப்பொழுது சோகத்தில் இருக்க, ஒரே ஒரு நபர் மட்டும் புன்னகை புரிந்துகொண்டிருப்பார்

அவர் யுவராஜ்சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங்

அவரும் கிரிக்கெட் ஆட்டக்காரர், 1980ம் ஆண்டுகால ஆட்டக்காரர், நன்றாகத்தான் ஆடியிருக்கின்றார், க‌பில்தேவ் காலத்து நபர். அவருக்கும் கபிலுக்கும் சரிவரவில்லை

இருவருமே ஹரியானாக்காரர்கள் என்றாலும் பொருந்தவில்லை. கபிலின் எழுச்சி யோக்ராஜ் சிங்கிற்கு வீழ்ச்சியினை கொடுத்தது.

பின்பு உலககோப்பையினை கபில் பெற்று கொடுத்ததில் யோக்ராஜ் காணாமலே போனார்

ஆனால் மனதில் வைராக்கியம் இருந்தது, அந்த வெறியில் யுவராஜ்சிங்கினை மாபெரும் ஆட்டக்காரராக வளர்த்தார்,

சும்மா சொல்ல கூடாது யுவராஜ் சிங்கினை அற்புதமான ஆட்டக்காரராக வளர்த்தார், 2011 உலக கோப்பை அவராலே வந்தது

யுவராஜ் சிங் வடிவில் தானே ஆடுவதாக மகிழ்ந்துகொண்டிருந்தார்..

பின்பு அணிஅரசியலால் டோனி இடம் மாற்றி யுவராஜ்சிங்கினை களமிறக்கி அவரை பழிவாங்குகின்றார் என அடிக்கடி புலம்பினார்

அதில் சில உண்மைகளும் இல்லாமல் இல்லை

டோனி இப்பொழுது ஒருமாதிரி இறக்கபடுவது போலவே யுவராஜும் இறக்கபட்டு நிலை தடுமாறவைக்கபட்டு பழிவாங்கபட்டார்.

என் வாழ்க்கையினை கபில் தேவும், என் மகன் வாழ்க்கையினை டோனியும் நாசமாக்கினர் என மனிதர் அடிக்கடி அழுதுகொண்டிருந்தார்.

இப்பொழுதுதான் அவர் மனம் அமைதியாயிருக்கும், கடவுள் இருக்கின்றான் என மனம் ஆறுதல்பட்டிருக்கும்.

டோனியின் மனம் எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை

அது அவருக்கு மட்டுமே புரியும் , 
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது இதுதான்

டோனிக்கு விளைந்துவிட்டது

கோலிக்கும் அப்படி விளைச்சலை கொடுக்க எங்காவது ஒருவன் மட்டையும் பந்துமாக சுற்றிகொண்டிருப்பான் என்பது மட்டும் உண்மை..

ஹஹஹா அரசியல் பழகணும் கண்ணா..

டோனி மீதான சர்ச்சை குறித்து விரைவிலில் விசாரணை : பிசிசிஐ

“கண்ணா டோனி கிரிக்கெட்டும் ஒரு அரசியல், ஆளுக்கு முன்னாடி உள்ளே போகவே கூடாது

ஆனா கால்ல பேட் எல்லாம் கட்டி ஹெல்மெட் சகிதம் தயாரா இருக்கணும், வாய்ப்பு கிடைச்சா பெவிலியன்ல இருந்து கிரவுண்டுக்கு போரேன்னு கிளம்பிட்டு ஓடி வந்துரணும்

இப்போ கூட பாரு கண்ணா, அந்த பாண்டியாவுக்கு பின்னாடி நீ ஏன் இறங்கின? அந்த புவனேஸ்வருக்கு பின்னாடி போயிருந்தா அவன் அவுட் ஆயிருப்பான் நீ நாட் அவுட்டா நின்னுருக்கலாம்

வேஸ்ட் பண்ணிட்டியே குழந்த…

இனியாவது பொழைச்சிக்கோ, உடனே களத்துல இறங்க கூடாது 9 விக்கெட்ட் போனாலும் அம்பையர் விளையாடுவாரான்னு கேட்டு மேட்சை இழுக்கணும், நாம இறங்கவே கூடாது கண்ணா

எல்லாரையும் இறக்கிவிட்டுட்டு , 10 விக்கெட்டுக்கு இறங்கி நாட் அவுட்டா இருக்கணும்..

இனியாவது வாரேன் ஆனா வரமாட்டேனன்னு சொல்லிட்டு ஓடி ஓளிஞ்சி ஓடிரு.. ஒகே யா?

ஹஹஹா அரசியல் பழகணும் கண்ணா..”

ஈழவரலாற்றில் மறக்கமுடியா பெருமகன் அமிர்ந்தலிங்கம்

இலங்கை தமிழர்களில் அவர்தான் மிக முக்கிய தலைவராக இருந்தார். ஈழத்துகாந்தி சாமுவேல் செல்வநாயகத்திற்கு பின் அவரைத்தான் ஈழதமிழர்களின் தலைவராக உலகம் கருதிற்று

பன்மொழி ஆற்றல் முக்கவர், பெரும் ஜனநாயகவாதி, எல்லா நாட்டு மக்களாலும் மதிக்கபட்டவர் என அவருக்கு பெரும் மதிப்பு இருந்தது, இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக இருந்த முதல் தமிழர்

அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்

செல்வாவிற்கு பின் அவர்தான் ஈழபிரச்சினையினை முன்னெடுத்து சென்றார், கொழும்பு கலவரத்தை தொடர்ந்து ஈழதமிழர் மேல் உலகெல்லாம் ஒரு அனுதாபம் ஏற்பட அவர்தான் காரணம்

தமிழகத்திற்கு அவர் ஆதரவு தேடி வந்தார். அவரை வரவேற்பதில் எம்ஜிஆருக்கும், கலைஞருக்கும் போட்டியே இருந்தது, “நாவலரே வருக..” என போஸ்டர் ஓட்டி அசத்தினார் கலைஞர்

நான் தான் முதல்வர், என் காரில்தான் நீங்கள் வரவேண்டும் என விமான நிலையத்திலிருந்து தன் காரில் அழைத்து சென்று கருணாநிதியினை பார்த்து கிக்கிக்க்க்கி என சிரித்தபடி சென்றார் எம்ஜிஆர்

சுருக்கமாக சொன்னால் ஈழபிரச்சினையினை தமிழகத்தில் கொண்டு வந்து பெரிய செய்தி ஆக்கியதே அமிர்தலிங்கம் தான்

இந்திராகாந்தியிடம் அவர்தான் முதலில் ஈழநிலையினை எடுத்துரைத்தார், அமிர்தலிங்கமும் தந்தை செல்வாவின் மகனுமான சந்திரஹாசனுமே இந்தியாவில் ஈழபோராளிகள் பயிற்சிபெற அனுமதிபெற்றனர்

அமிர்தலிங்கத்தி அமைதியான அணுகுமுறையே இந்திரா ஈழபோராட்டத்தில் இறங்க வழிகோலியது, அமிர்தலிங்கம் இல்லையென்றால் ஈழபோராட்டம் இந்த அளவு வளர்ந்திருக்காது, புலிகள் என்றோ காலியாயிருப்பர்

1984 குடியரசு தின விழாவின் பொழுது அமிர்தலிங்கத்தை அழைத்து தன் அருகே சிறப்பு விருந்தினராக அமரவைத்தார் இந்திரா

அது வெளிநாட்டு அதிபருக்கே கொடுக்கபடும் கவுரவம், ஆனால் ஒரு நாட்டின் எதிர்கட்சி தலைவருக்கு எப்படி கொடுத்தார் என பெரும் பரபரப்பு எழும்பியது

அமைதியாக ஜெயவர்த்தனேவினை பார்த்து புன்னகைத்தார் இந்திரா, ஆம் அதன் அர்த்தம் ஜெயவர்த்தேனேவிற்கு மட்டும் புரிந்தது

ஈழம் அமைந்தால் அதற்கு அமிர்தலிங்கம்தான் அதிபர் என்ற பொருள் யாருக்கு புரியாது? அலறினார் ஜெயவர்த்தனே, சிங்கள இனமே அலறிற்று

இந்திரா காலத்திற்கு பின் ராஜிவ் வந்ததும், ராஜிவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் வந்தபொழுதும் அமிர்தலிங்கம் இந்தியா பக்கமே இருந்தார்

இந்தியா மூலமே இலங்கை தமிழர்கள் நன்மை பெறமுடியும் என்பதும், இன்னொரு நாடு ஒருகாலும் ஈழதமிருக்காய் வராது, இந்தியா மட்டுமே ஏதாவது நன்மை பயக்கும் நிலையில் இருக்கின்றது, நாளை சிக்கல் என்றாலும் இந்தியாதான் கொடுக்கும் என்பது அவரின் நம்பிக்கை

அது மகா உண்மையும் கூட‌

இது பிரேமதாசாவிற்கு பெரும் எரிச்சலை கொடுத்தது, புலிகளும் பிரேமதாசாவும் இந்திய படைகளுக்கு எதிராக கூட்டாஞ்சோறு பொங்கி ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்ட காலங்கள் என்பதான் கொலபொறுப்பினை புலிகள் எடுத்தனர்

அவர்களுக்கென்ன தமிழர் தரப்பு பிரதிநிதி என எவர் வந்தாலும் கொல்ல வேண்டும்.

அமிர்தலிங்கம் புலிகளின் கடும் போக்கினை விமர்சித்தார், போராளிகள் என்பவர்கள் செய்யும் அட்டகாசங்கள் நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது என்றார், தமிழர்களை கொல்லும் அந்த கொடூரம் ஒரு காலமும் நன்மை பயக்காது என பொதுவாக சொல்லிகொண்டிருந்தார்

அவர்தான் ஈழதமிழர்களின் பிரதிநிதி என உலகம் பார்த்து கொண்டிருந்தபொழுதே புலிகளுக்கு சகிக்கவில்லை. அவர்களை பொறுத்தவரை தாங்கள் மட்டுமே ஈழ தமிழரின் பிரதிநிதி என சொல்லிகொண்டார்கள்

போட்டிக்கு வந்தவர்களை எல்லாம் தொலைத்த புலிகள், அமிர்தலிங்கத்தை விடுவார்களா?

நாங்கள் துப்பாக்கி தூக்கி போரிடும் பொழுது, அமிர்தலிங்கம் இலங்கை அரசோடு பேசுகின்றார் அதனால் அவர் துரோகி என அறிவித்தார்கள்

(ஆனால் இதே புலிகள் பின்பு பிரேமதாசாவோடு கொஞ்சியது வரலாறு,அவர்கள் செய்தால் ராஜ தந்திரம் மற்றவர் செய்தால் கொடூரம்)

புலிகளின் வாயில் ஒருவனை துரோகி என சொல்லிவிட்டால் அவன் சாகபோகின்றான் என பொருள்

பிரபாகரன் பற்றி தன் கருத்தை இப்படி பண்பட்ட மொழியில் சொன்னார் அமிர்தலிங்கம்

தம்பி பிரபாகரன் தமிழனித்திற்காக சிறுவயதில் இருந்தே போராடுவது வரவேற்கதக்கது, ஆனால் எதனை செய்யவேண்டும், எதனை செய்யகூடாது எனும் அறிவு அவரிடம் இல்லை, பக்குவம் இல்லை, முதிர்ச்சி இல்லை.

இவர் இப்படியே செய்துகொண்டிருந்தால் அது பெரும் அழிவில் முடியும், அவர் பின்னால் இளைஞர்கள் செல்வது நல்ல அறிகுறி அல்ல…”

துரோகி என புலிகள் குமுறிகொண்டிருந்தபொழுது, இந்த வார்த்தைகள் புலிகளை வெறியூட்டின‌

ஒரு பெரும் தலைவனே, தமிழர் தலைவனே இப்படி சொல்லிவிட்டபின் மக்கள் எப்படி பிரபாகரனை நம்புவர்?, விடுவார்களா?

3 புலிகளை அமிர்தலிங்கத்துடன் பேசவேண்டும் என அனுப்பினர், அவர்களும் சில நாட்கள் சென்று பேசினர், அப்பொழுதெல்லாம் ஆயுதம் இல்லை

அமிர்தலிங்கம் பெரும் பாதுகாப்பில் இருந்தவர், சிங்கள அரசு அவருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கியிருந்தது, காரணம் உலகம் மதிக்கும் ஒரு தமிழ் தலைவனுக்கு போராட்டம் நடக்கும் காலத்தில் ஏதும் நடந்து தொலைத்துவிட்டால் அது இலங்கை அரசுக்கு பெரும் சிக்கல்”

இஸ்ரேலியர் அராபத்தை விட்டு வைத்தார்கள் அல்லவா? அப்படி

இந்நிலையில் அந்த கொலைகார புலிகள் ஆயுதத்தோடு அவரை பார்க்க வந்தார்கள், வாசலில் நின்ற சிங்களன் தடுக்கின்றான், அனுமதிக்கவில்லை பெரும் சத்தம். அதனை கேட்டு மாடியிலிருந்து சொல்கின்றார் அமிர்தலிங்கம்

“அவர்கள் எனக்கு தெரிந்தவர்கள் அனுப்புங்கள், ஆயுதம் பற்றி கவலை இல்லை” என அனுமதி கொடுக்கின்றார் அமிர்தலிங்கம்

எப்படி நம்பியிருக்கின்றார் பார்த்தீர்களா?

அதன் பின் அமிர்தலிங்கத்துடன் பேசுகின்றார்கள் கொலைகாரர்கள், அவரோடு இன்னும் இருவர் இருந்தார்கள், யோகேஸ்வரன் போன்றவர்கள், அவர்களும் சிறந்த சிந்தனையாளர்கள்

அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையற்கரசி எல்லோருக்கும் தேநீர் கொண்டு வருகின்றார், கொலைகார புலிகள் குடிக்கின்றார்கள்

கொஞ்சமும் மனிதாபிமானம் உள்ளவர்கள் அதனை குடிப்பார்ளா? அல்லது அந்த மங்கல மகராசி கையால் தேநீர் குடித்தபின் அவள் தாலிபறிக்க நினைப்பார்களா?

புலிகளுக்கு ஏது நன்றி? ஏது மனது? எல்லாம் கொடூரம்

தேநீரை அருந்திவிட்டு அமிர்தலிங்கத்தை சுட்டார்கள், அதன் பின் அருகிலிருந்தவரை சுட்டுவிட்டார்கள். சத்தம் கேட்டு அமர்தலிங்க மனைவியும் அந்த சிங்கள காவல்காரனும் ஓடிவந்தான்

அவனை கண்டதும் அமிர்தலிங்கம் மனைவியினை சுடும் திட்டத்தை கைவிட்டு கொலைகாரர்கள் ஓடினர்,

ஆம் அவர்கள் அமிர்தலிங்கதினை சுட்டுவிட்டு தனிஈழம் பெற அவசரமாக ஓடினர்.

ஆனால் அந்த சிங்களன் பின்னால் விரட்டி சென்று சுட்டடான்

கொலையாளிகளை அவன் விரட்டி சுட்டு கொன்றான், ஒரு தமிழ் தலைவனை கொன்ற தமிழ்புலிகளை சுட்டு கொன்றவன் ஒரு விசுவாசமான சிங்களன்

அது மட்டுமல்ல அமிர்தலிங்கத்தின் பாதுகாவலரானா அந்த சிங்களன் அமிர்தலிங்கம் மனைவியிடம் அழுதான், என்னை மன்னியுங்கள், நான் அவர்களை தடுத்திருக்கவேண்டும், இவர் அழைத்தார் என்றுதான் விட்டுவிட்டேன் என் கடமையினை நான் சரியாக செய்யவில்லை

எப்படிபட்ட மிக உயர்ந்த சிங்களன் அவன்?, அமிர்தலிங்கத்தை அவன் தமிழனாகவா பார்த்தான் இல்லை, நிச்சயம் இல்லை அவரை தலைவனாக கண்டிருக்கின்றான்

அமிர்தலிங்கத்தை போலவே வரலாற்றில் நின்றுவிட்டான் அந்த நல்ல சிங்களன்

பிரபாகரனுக்கு பின்னும் இலங்கை அமைதியாக இருக்கின்றது என்றால் அது இதுபோன்ற நல்ல சிங்களர்களால்தான்.

அமிர்தலிங்கத்தின் கொலை பெரும் பிரச்சினையாயிற்று, ஈழமக்கள் அழுதனர், வழக்கம் போல மறுத்தனர் புலிகள், பின் அமைதியாயினர்

புலிகள் கொலையினை மூன்று வகையாக எதிர்கொள்வர், ஒன்று கொன்றது நாங்கள்தான் என்பர், இரண்டாது ரகம் முணுமுணுப்பு, மூன்றாம் ரகம் மர்ம அமைதி

ராஜிவ் கொலை என்பது மூன்றாம் ரகம், அமிர்தலிங்கம் கொலை இரண்டாம் ரகம்

புலிதளபதி மாத்தையா அமிர்தலிங்கத்திற்கு கொடுக்கபட்டது மரண தண்டனை என பகிரங்கமாக சொன்னார்,

பிராபகரன் உத்தரவுபடி அந்த கொலையினை செய்தது நிச்சயம் மாத்தையாதான், பின் மாத்தையாவும் பிரபாகரனுக்கு துரோகி ஆனார், கொஞ்சநாளில் பிரபாகரனால் கொல்லபட்டார்.

பின் ராஜிவும் கொல்லபட்டு , புலிகளின் நன்றி கடனுக்காக பிரேமதாசாவும் கொல்லபட்டார்

எப்படிபட்ட நன்றிமிக்கவர் புலிகள், காப்பாற்றி சோறு போட்டவனை எல்லாம் மண்டையில் போட்டவர்கள்

வடமராட்சியில் தன்னை காத்த ராஜிவினை கொன்றார்கள், பின் அமைதிபடையிடமிருந்து காத்த பிரேமதாசாவினை கொன்றார்கள்

அப்படியே தாங்கள் பெரும் போராளிகளாக இடமளித்து பயிற்சிபெற‌ இந்தியாவிடம் வாதாடி வழிகொடுத்த அமிர்தலிங்கத்தையும் கொன்றார்கள்

புலிகள் செய்த மிக மிக தவறான அரசியல் கொலைகளில் அமிர்தலிங்கம் கொலையும் ஒன்று

ஜூலை 13ம் நாளில்தான் அவர் புலிகளால் கொல்லபட்டார், இப்படி எல்லாம் சிரித்துகொண்டே கொலை செய்வது ஒருவகையான மனநோய், பிரபாகரனுக்கும் அவர் கும்பலுக்கும் அதுதான் இருந்திருக்கலாம்

இதன் பின் என்னவெல்லாமோ நடந்து புலிகள் 2009ல் பெரும் மக்கள் அழிவோடு அழிந்தும் போயினர்

இன்று யாருமில்லா அனாதைகளாக நிற்கின்றது ஈழ தமிழினம், மறுபடி அமிர்தலிங்கம் போன்றவர்கள் பிறந்து வந்து வழிகாட்டட்டும்

பிரபாகரன்கள் இனி பிறக்காமலே போகட்டும்

திருப்பெரும்புதூரில் காவலர் அனுசுயா தற்கொலை குண்டுதாரி அனுசுயாவினை தடுக்க, அவரை தடுக்காதீர்கள் மாலையிட அனுப்புங்கள் என சொல்லி தனுவினை தன் அருகே அழைத்தார் ராஜிவ்

அந்த சதிகாரியும் வந்து குனிந்து வணங்கி கொன்றாள்

இவர்கள் எனக்கு தெரிந்தவர்கள், அவர்களிடம் ஆயுதம் இருப்பது பிரச்சினையில்லை உள்ளே அனுப்புங்கள் என சொல்லி கொலையாளிகளை தன்னை கொல்ல அனுமதி கொடுத்தார் அமிர்தலிங்கம்

அவர்களும் வந்து வணங்கி தேநீர் குடித்துவிட்டே கொன்றனர்

புலிகளின் பயிற்சி இப்படித்தான் நம்ப வைத்து கழுத்தறுப்பதாக இருக்கின்றது

இதனைத்தான் பெரும் வீரகாவியமாக இந்த சீமானும் வைக்கோவும் பழநெடுமாறன் எனும் இந்த தேசத்தின் சாபங்கள் எல்லாம் சொல்லிகொண்டிருக்கின்றன‌

அமிர்தலிங்கத்தின் மரணம் ராஜிவிற்கு பெரும் எச்சரிக்கை, பத்மநாபாவின் கொலை அடுத்த எச்சரிக்கை இதனை எல்லாம் கொஞ்சமும் சிந்திக்காமல்தான் ராஜிவ் இறந்தார்

இன்று அமிர்தலிங்கத்தின் பிறந்த நாள், ஈழமக்களின் துயரத்திற்கு இந்தியா மட்டுமே உதவமுடியும் என இங்கு ஓடோடி வந்து இந்தியாவின் தலையீட்டில் சில நன்மைகளை அடையலாம் என நன்முயற்சிகளை எடுத்தவரின் பிறந்த நாள்

ஈழதமிழருக்காக உயிர் கொடுத்து ராஜிவினை எச்சரித்தவர் அவர்

நிச்சயம் தமிழகத்தில் ஈழபிரச்சினையினை கொண்டுவந்தவர் அவரே, அவர் மூலமே ராமசந்திரன் கலைஞர் எல்லாம் ஈழசிக்கலில் நுழைந்து, பின் இந்திய அரசு நுழைந்து பல முயற்சிகள் நடந்தது

எல்லாம் புலிகளின் விபரீத புத்தியால் நாசமானது

அவர் தமிழகத்தில் விதைத்த விதைதான் வளர்ந்தது, ஆனால் அவரை யார் கொன்றார்களோ அவர்களையே தீரர்கள், வீரர்கள் என சொல்லும் கூட்டம் இங்கு பின்னாளில் வந்தது

இதனை விட அறிவுகெட்டதனம் இருக்கவே முடியாது.

எது எப்படி ஆயினும் ஈழவரலாற்றில் மறக்கமுடியா பெருமகன் அமிர்ந்தலிங்கம், அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

மிக அற்புத கவிஞர் வைரமுத்து

கண்ணதாசன், வாலிக்கு பின் தமிழகம் கண்ட மிக அற்புத கவிஞர் வைரமுத்து, தமிழ் அவரின் நாவில்,பேனாவில் எல்லாம் அப்படி விளையாடும்

எல்லா வகை உணர்வுகளையும் பாடலில் வடிக்கும் வரம் அவரது, அதுவும் கிராமத்து பாடல்கள் என்றால் இன்னும் அட்டகாசம்

ஆம் இளையராஜாவுக்கும் அவருக்கும் சர்ச்சை வந்தது, ஆனால் இளையராஜா இல்லாவிட்டாலும் தன்னால் தேசிய விருது வாங்கிவிட முடியும் என ஐந்து முறை காட்டிய கவிஞன் அவர்

இளையராஜா இல்லா வைரமுத்து சாதித்ததும், வைரமுத்து இல்லா இளையராஜா தடுமாறுவதும் உங்கள் முடிவினை பொறுத்தது

1977களில் பொன்மாலை பொழுது என வந்த வைரமுத்து எட்டியிருக்கும் உயரம் கொஞ்சமல்ல‌

சில சர்ச்சைகளை சொல்வ்வார்கள், கவிஞர்கள் வாங்கி வந்த சாபம் அப்படி. அவர்கள் அப்படித்தான்

கம்பனின் தனிப்பாடல் திரட்டு அவனின் பெண் மோகத்தை சொல்கின்றது

பாட்டுகொரு பாரதி கஞ்சாவில் குடியிருந்திருக்கின்றான்

கண்ணதாசன் மதுவும் மங்கையுமாகவே வாழ்ந்தவர் அதை ஒப்பும் கொண்டவர்

எல்லா கவிஞர்களின் வாழ்வும் அப்படித்தான் இருந்திருக்கின்றது, அந்த சாபத்துக்கு வைரமுத்து மட்டும் தப்ப முடியுமா?

மங்கையோ மதுவோ போதையோ அந்த சபிக்கபட்ட வாழ்வின் அங்கமாகிவி

டுகின்றது, ஏதாவது ஒன்று இல்லாத‌
கவிஞர்கள் கிடையாது

கண்ணதாசன் வாலிக்கு பின் தமிழகம் கண்ட அற்புத கவிஞன் வைரமுத்து

அவருக்கு இன்று பிறந்தநாளாம், வாழ்த்துவோம். அதற்கு பெரும் காரணமும் இருக்கின்றது

அழியா பாடல்கள் , அற்புதமான கிராமத்து கதைகளை அவர் எழுதியதை விட நமக்கெல்லாம் பெரும் உதவி செய்திருக்கின்றார், மறக்க முடியாத உதவி

குஷ்பூவிற்கு மிக பொருத்தமான பாடல்களை வைரமுத்து எழுதினார்

“எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று..” என அவர் குஷ்பூவிற்கு எழுதியபாடல் ரசனையின் உச்சம், மிகபெரும் குஷ்பூ ரசிகனாக இல்லாவிட்டால் அப்பாடல் சாத்தியமே இல்லை

“சிரிக்கும் போது கண்ணில் மின்னல் தெரித்து ஓடுதே அதுவா” என்ற வரிகளாகட்டும், முல்லை நிறத்து பற்களில் ஒன்று தள்ளி உள்ளதே அதுவா” என்ற வரிகளாகட்டும், குஷ்பூவிற்காய் எழுதபட்டது

இந்த வரிகளுக்காகவே வைரமுத்துவிற்கு வைரமாலை சாற்றலாம்.

கம்பன் தன் கதை நாயகியினை பாடியது போல அப்படி ஒரு உருவகம் தந்த இரண்டாம் கம்பன் அவர்.

நம்மை போலவே உருகி ரசித்து ஆனால் நம்மால் சுத்தமாக முடியாத, அற்புதபாடலை கொடுத்தவர் வைரமுத்து

அப்பாடலை எழுதியதற்காகவே அவரை கொண்டாடலாம், இப்பாடலை எழுதியற்காகவே இன்னொரு முறை தேசிய விருது கொடுக்கபட வேண்டிய கவிஞர் அவர்

அதனால் ஸ்பெஷல் வாழ்த்து

அந்த அற்புத கவிஞனுக்கு சங்கத்தின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்,

இன்னொருமுறை அவர் குஷ்பூவிற்கு இன்னொரு அழியாபாடல் இயற்ற வாழ்த்துவோம்

இப்பொழுதும் அவரின் பாடல்களை, வரிகளை கூர்ந்து கேட்கின்றோம்

ஆம் கடல் படத்தின் நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன் பாடலாகட்டும், ராவணா படத்தின் பாடல்களாகட்டும்

நிச்சயம் இளையராஜாவோடு இணைந்தால் அது இன்னும் பிரகாசித்திருக்கும்

வைரமுத்துவின் பாடல் சிங்கத்து பால் அதை இளையராஜாவின் இசை எனும் தங்க தட்டில்தான் வைக்க வேண்டும் இல்லாவிட்டால் கெட்டுவிடும்

இன்னும் காலமிருக்கின்றது

இருவரும் இணையட்டும் மறுபடியும் பூங்காற்று திரும்புமா பாடல் வரட்டும்

தமிழகம் கண்ட தனிபெரும் கவிஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில் சங்கம் பெருமை அடைகின்றது

அதுவும் நேற்று அவர் வெளியிட்ட தமிழறாற்றுபடை புத்தகததின் செய்திகளோடு அவரை வாழ்த்துகின்றது

இன்னும் ஆயிரம் ஆயிரம் புத்தகமும் கவிதையும் பாடலும் எழுத வாழ்த்துக்கள்

உங்களை விட்டால் இப்போதைக்கு யார் எங்களுக்கு இருக்கின்றார்கள் எம் அன்புகுரிய தமிழ்கவிஞரே?