பிடித்தமான மாதம் ஆடிதான்

மாதங்களில் நான் மார்கழி என அர்ஜுனனிடம் பகவான் சொன்னாலும் அதெல்லாம் இருந்துவிட்டு போங்கள் எங்களுக்கு பிடித்தமான மாதம் ஆடிதான் என்பது தமிழர் முடிவு

ஆனி ஆடி மாதங்களில் தமிழகத்தின் கொண்டாட்ட மாதங்கள், திரும்பும் பக்கமெல்லாம் ஒலிபெருக்கியில் “ஆத்தாடி மாரியம்மா” என எல்.ஆர் ஈஸ்வரி அம்மனை அழைப்பார், மண்கட்டை சுவரிலும் கோயில் கொடை விளம்பரங்கள் இருக்கும்

இரவில் 9 மணிக்கு மேல் வில்லுபாட்டு கேட்கும்,திடீர் கடைகள், ஒளிவெள்ளம், இன்னும் ஏராளம்.

பொதுவாக சுபகாரியங்கள் ஏதும் செய்யமாட்டார்கள், சுத்தமாக தெய்வத்திற்கு அர்ப்பணிக்கபட்ட மாதம் ஆடி

கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களிலும் 10நாள் விழா நடக்கும், படு விமரிசையாக கொண்டாடுவார்கள், தென்னக‌ கத்தோலிக்கர்களுக்கு அதுதான் உச்சகட்ட கொண்டாட்டம், கொடியேற்றி தேர் இழுத்து, மேளமிட்டு,கடா வெட்டி கொண்டாடுவார்கள்.

உண்மையான தமிழ் கலாச்சாரம், மண்ணின் மாண்பு அது. மதம் மட்டும் வேறு, அது பிரச்சினையே இல்லை. ஆட்டம்பாட்டம், உற்சாகம்,கொண்டாட்டம்,

கூடவே ஒருமனமான வழிபாடு.

கிராமங்கள் களை கட்டும் காலம் இது, பொங்கல் தீபாவளியை விட கிராம திருவிழாக்கக்ளே அவர்களுக்கு முதன்மை, இது தங்கள் மண் என உரிமையோடு கொண்டாடும் விழாக்கள், உறவினர்கள்,ஊர்மக்கள் என சேர்ந்து கொண்டாடும் விழாக்களுக்கு ஈடு இல்லை.

விவசாயம் தோற்று எங்கோ உலகெல்லாம் சிதறிக்கபட்டிருக்கும் மக்கள் கூடுவதற்கு இதனைவிட வேறு சந்தர்ப்பமும் இல்லை.

வாழ்க கொடை விழாக்கள்.

தெற்கே கொடைவிழா என்றால், வேறு இடங்களில் இன்னமும் கொண்டாட்டம், காவேரியில் வரும் புதுவெள்ளத்தினை வரவேற்கும் ஆடிபெருக்கு மத்திய தமிழகத்தில் பெரும் விழா

இன்னும் பல பூஜைகள்,புணஷ்காரங்கள்,ஆச்சாரங்கள், ஆடி அமாவாசைக்கு முன்னோர்களுக்கு திதி என தமிழகமே ரொம்ப பிசி.

அட்சயதிரிதியை அன்று தங்கம் வாங்குவது போல, ஆடி அமாவாசை அன்று கொள்ளையிட்டால் தொழில் வளரும் என்பது திருடர்கள் நம்பிக்கை, அவர்களும் பிசி

மாதங்களில் நான் மார்கழி என்றுதான் கண்ணனே போதித்தார், தை பிறந்தால் வழிபிறக்கும் என்றுதான் பழமொழி இட்டார்கள், ஆனிஆடி பற்றி யாரும் சொல்லவில்லை எனினும் முக்கிய‌ கொண்டாட்டம் இம்மாதங்களில் மட்டுமே.

தென்னகம் இதில் விஷேஷம்

கல்தோன்றி மண்தோன்றி நீர்தோன்றி பனையும் தோன்றிய முற்காலத்தின் பனைதொழிலான கருப்புகட்டியும்,இன்னும் சில வருமானங்களும் ஆனி,ஆடியில் மிக மிக அதிகம்.

மக்களிடம் பணம் வந்தவுடன் தெய்வத்தினை தேடி சென்று நன்றி தெரிவித்தார்கள், மனம் உவந்து அளித்த கொடைகள் பின்னாளில் அதே மாதங்களில் நிலைபெற்றது, தொடர்கிறது

தென்னகத்தில் முருகன்,முழுமுதற்கடவுள் திருமால், சர்வசக்தி கொண்ட சிவபெருமான் இவர்களுக்கெல்லாம் தனி ஆலயங்கள் உண்டு, வருடம் முழுவதும் வழிபாடுகளுக்கும்,இன்னும் சில சாத்வீக சம்பிரதாயங்களுக்கும் குறைவில்லை.

ஆனால் வேறு சிறு தெய்வங்களுக்கு அப்படியல்ல வருடத்தில் ஒருமுறை மட்டுமே கொண்டாட்டம்.

தென்னகத்தில் பல தெய்வங்களை வணங்கி வந்தாலும், இரு தெய்வங்களுக்கு அப்பகுதியில் சிறப்புகள் அதிகம்.

ஒருவர் சிலப்பதிகார காலத்திலே சேரநாட்டின் (கேரளம்) எல்லைக்கு காவல் தெய்வம் என அழைக்கபட்ட இசக்கி அம்மன், கேரளாவில் இன்றும் அம்மனே பிராதான காவல் தெய்வம்.

முற்காலத்திலே அப்பகுதியின் கேரள எல்லையான முப்பந்தல் இன்றும் என்றும் இசக்கியம்மனின் பிரதான கோயில்.

இன்னொருவர் சுடலைமாடன்.

இசக்கியம்மனாவது கேரளம் மற்றும் தென் தமிழக தெய்வம், ஆனால் நெல்லை,கன்னியாகுமரி பகுதிகளின் பிராதன காவல் அரசர் நிச்சயமாக சுடலைமாடன் சாமியே.

அவரின் ஸ்பெஷாலிட்டி எனவென்றால் இந்த பகுதிகளை மிகவும் நேசிப்பவர், மண்ணை பிரிய மனமில்லாதவர், வேறு எங்கும் செல்ல மாட்டார், அவ்வளவு பிரியம் அவருக்கு அந்த மண்ணின் மீது.

உலகில் வேறு எங்கும் அவரை காணமுடியாது, உலகினை விடுங்கள் தாமிரபரணிக்கு வடக்கே கூட கிடையாது.

நெல்லை,தூத்துகுடி,கன்னியாகுமரி பகுதிகளை தவிர எங்கும் செல்லமாட்டார். மிக மிக பிராதான் கோயில்கள் அவருக்கு இங்கு மட்டுமே உண்டு.

அங்கு எல்லா ஊர்களிலும் இருவருக்கும் அல்லது ஒருவருக்காவது கோயில்கள் உண்டு, ஊரின் மின்கம்பிகளை விட இவர்களின் ஆலயங்கள் அதிகமான ஊர்களும் உண்டு, எங்கும் வியாபித்திருப்பவர்கள், மக்களுக்கும் இவர்களின் மீது அவ்வளவு பக்தி, மரியாதை.

அந்த‌ மக்கள் சாதாரமானவர்கள் அல்ல, 50பைசா மளிகையை கடைக்காரர் ஏமாற்றினால் கடையை மாற்றுவார்கள். அரசு சரியில்லை என்றால் 5 வருடத்தில் மாற்றுவார்கள்

தொன்றுதொட்டு இன்றுவரை இந்த தெய்வங்களை கொண்டாடுகின்றார்கள் என்றால், நிச்சயமாக அந்த தெய்வங்களின் சக்தி மீது அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை, வாழ வைக்கும் நம்பிக்கை.

அன்று ஜெயா அரசு தமிழக அரசு கோயில்களில் ஆடு,மாடு,கோழி வெட்டகூடாது, கொசு,பூரான்,கரப்பான் பூச்சிகளை கொல்லகூடாது என சட்டமிட்டபொழுது ஒட்டுமொத்த தமிழ்நாடே சிறுவளஞ்சி சுடலை கோயிலை நோக்கியது, அணுவுலைக்கு போல கடும்காவல் இடபட்டது,

இன்றுபோல அன்றும் தமிழகம் வாய்திறக்க அஞ்சியது. சில தலைவர்கள் யாரும் இல்லாத இடத்தில் உரக்க‌ பேசிக்கொண்டிருந்தனர், சிலர் பெரியார் கொள்கை என ஒதுங்கினர்

ஆனால் முதலில் இந்ததடை விரைவில் அகலும் என அறிவித்தது அந்த சுடலைமாடன் ஆலயத்தின் பூசாரியே, சொன்னபடி தடையும் அகன்றது என்பது குறிப்பிடதக்கது

இந்த தெய்வங்கள்,இன்னும் பிற‌ தெய்வங்களை ஆனி,ஆடி மாதத்தில் கையில் பணமிருந்த பொழுது, முன்னோர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். தெய்வங்களும் அவர்களை ஆசீர்வதித்தது,

மக்களை தெய்வம் கவனிக்கட்டும், ஆனால் மக்கள் கையில் பணமிருந்தால் வியாபாரிகள் கவனிக்காமல் விடுவார்களா?, ஏதாவது செய்து அதனை பிடுங்கினால்தான் அவர்களுக்கு உறக்கமே வரும், திட்டமிட்டார்கள்.

அன்று நிச்சயமாக ஆடிமாதம் மக்கள் செலவழிக்கதயார், தள்ளுபடி என அறிவித்தால் கூட்டம் மொய்க்கும், விலையை கூட்டி பின்னர் கொஞ்சம் குறைத்தால் அள்ளிவிடலாம், முதலில் நெல்லை பகுதி ஜவுளிகடைகளில் அறிவித்தார்கள் ஆடி தள்ளுபடி.

அல்வாவிற்கு உலக புகழ்பெற்ற நெல்லை, அடுத்த கொடுத்த “அல்வா”தான் ஆடி தள்ளுபடி. வியாபார உலகில் நெல்லையர்கள் கொடிபறக்க ஆடி தள்ளுபடியும் மதுரை,திருச்சி,சென்னை, மலேயா,சிங்கப்பூர்,ஐரோப்பா என பரவியது. ஜவுளியில் இருந்து எல்லா வியாபாரங்களுக்கும் தொற்றிகொண்டது.

இன்று நகைக்கடை,செருப்புஏசி, ஃபேன், ஃப்ரிட்ஜ், மிக்சி, கிரைண்டர், அரிவாள் மணை, வத்திப்பெட்டி, படுக்கைகள், தரை விரிப்புகள், மேசை, நாற்காலி, சோபா செட்டுகள், பிளாஸ்டிக் ஸ்பூன், தகர டப்பா அனைத்திலும் தள்ளுபடி.

ரியல் எஸ்டேட்டில் கூட‌

ஆனால் கண்மூடித்தனமாக வேண்டியது, வேண்டாதது என்று அனைத்தையும் வாங்கிச் சேர்த்துக்கொள்ளும் வழக்கத்தை இந்தத் தள்ளுபடிக் கலாசாரம் தொடங்கிவைத்திருக்கிறது என்பது வேறு விஷயம்

ஆனால் இன்னமும் உணவகங்களில் மட்டும் ஆடி தள்ளுபடி இல்லை, டாஸ்மாக்கிலும் இல்லை அந்த பொன்னாளுக்காக காத்துகொண்டுதான் இருக்கவேண்டி இருக்கின்றது, நிச்சயம் அறிவிப்பார்கள். நம்பிக்கைதான் வாழ்க்கை

இன்று அந்த பழைய‌ வாழ்க்கை முறை மாறிவிட்டது, எந்த மாத தொடக்கத்திலும் கொடைகள் கொடுக்கலாம் எனும் அளவிற்கு பணம் புழங்குகிறது, ஆனால் முன்னோர்களின் அஸ்திவாரம் மிக வலுவாக அமைக்கபட்டிருப்பதால் ஆனி,ஆடிமாத கொடைகள் அக்காலத்தினை நினைவுபடுத்திகொண்டே இருக்கும், தெய்வங்களும் மகிழ்ந்து ஆசீர்வதித்துகொண்டே இருக்கும், மாறாது.

தென் தமிழகத்தில் கலைந்துவிட்ட தினகரனின் அணி போல ஆங்காங்கே தென்படும் பனைமரங்கள் பெருமூச்சோடு ஆடிகொண்டாட்டத்தினை பார்த்துகொண்டிருக்கிறது, ராஜராஜனின் சிலை பெரியகோயிலை பார்த்துகொண்டிருப்பது போல,

பனைகள் இல்லாவிட்டால் இந்த கொண்டாட்டங்களின் மூலம் ஏது?.

தென்னக‌ பனை பொருளும், அதன் பிண்ணனியில் உழைத்த மக்களும், அவர்களை காவல் காத்த தெய்வங்களும், அவற்றிற்கு கொடுக்கபட்ட கொடைவிழாக்களுமே ஆடிதள்ளுபடியின் முதல் காரணம், இன்று கோலாலம்பூரின் இந்தியகடைகளில் சீனப்பெண்கள் ஆடிதள்ளுபடியில் ஆடைவாங்குகின்றனர்,

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம், வேறு என்ன சொல்லி வாழ்த்த?

தென்னகத்தில் ஆனி,ஆடியில் கொடை திருவிழா கொண்டாடும் இந்து நண்பர்களுக்கும், ஆண்டு திருவிழா கொண்டாடும் கிறிஸ்தவ நண்பர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்.

மொத்தத்தில் ஆடியில் மக்களுக்கு மகிழ்ச்சி, தெய்வங்களுக்கு திருப்தி, வியாபாரிகளுக்கு ஒருநாளும் நிறைவுவராது எனினும் தற்காலிக சந்தோசம், திதிகள் கொடுப்பதால் முன்னோர்களின் ஆன்மாவிற்கும் சாந்தி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s