தாயின் மணிக்கொடி பாரீர்

“தாயின் மணிக்கொடி பாரீர்,
அதை தாழ்ந்து பணிந்து வணங்கிட வாரீர்” என சுதந்திரத்துக்கு முன்பே அதைபற்றி கனவு கண்டான் பாரதி

அவனுக்கு கிடைக்காத வாய்ப்பினை அந்த சுதந்திர இந்தியாவினை காண நமக்கு கொடுத்து வைத்திருக்கின்றது

200 ஆண்டுகால போராட்டம், அடித்து கேட்டு பின்னர் அமைதியாய் கேட்டு, அடி வாங்கி போராடி, ஒரு கட்டத்தில் வெள்ளையனாலும் கட்டுபடுத்தமுடியா நிர்பந்தத்தில் மாபெரும் சிக்கல் ஏற்பட்டு சுதந்திரம் கிடைக்கும் நேரத்தில் கூட வஞ்சகமாய் உடைக்கபட்டு 2 துண்டுகளாக பிரிக்கபட்டு சிதைக்கபட்டது சுதந்திர இந்தியா

சுரண்டி போட்ட பாண்டமாக இந்த தேசத்தை விட்டு சென்றான் வெள்ளையன், அவன் வருவதற்கு முன் உலகின் வளமான தேசமாக இருந்த இந்தியா அவன் விட்டுசெல்லும் பொழுது மிக வறியதேசமாய் இருந்தது

என்னவெல்லாம் கடந்தோம், 73 ஆண்டுகளாக இந்த தேசம் தாங்கியிருக்கும் வலி என்ன? பெற்றிருக்கும் நலம் என்ன?

சிந்தித்தால் இந்தியா ஆச்சரியத்தை கொடுக்கும், அவ்வளவு சுவாரஸ்யமானது சுதந்திர இந்தியாவின் வெற்றி நடை

அது சுதந்திரம் பெறும்பொழுதே மாபெரும் கலவரம் குழப்பம், பிரிட்டிசார் விதைத்து சென்ற மத பிரிவினையின் உச்சம், ஒரு கட்டத்தில் மாபெரும் தலைவனின் உயிர்பலியோடுஅது நின்றது.

சுதந்திரம் கொடுத்தாகிவிட்டது இன்னும் 2 ஆண்டில் இந்தியா 100 துண்டாக சிதறும் என்றார்கள், அதனை எல்லாம் எதிர்கொண்டு கடந்து உலகிற்கே அதிர்ச்சி கொடுத்தோம்

இந்தியர்களுக்கு ஜனநாயகம் தெரியாது, ஆளதெரியாது என்பதை எல்லாம் பொய்யாக்கி ஜனநாயக தேசமாக வளர்ந்தோம்.

பின்னர் காஷ்மீரை காட்டி 2 போர்கள், அதையும் தாங்கியது தேசம், நண்பனாய் நினைத்து ஐ.நா சபையில் நிரந்தர இடம்கொடு என வாதாடும் பொழுதே சுய உருவம் காட்டிற்று சீனா, ஆசிய நாடு ஒன்றிற்கு ஐ.நாவில் அந்தஸ்து என நாம் அவர்களுக்காய் போராட , அவர்களோ ஆசியா தாதா நான் என முதுகில் குத்திற்று. அதையும் தாங்கி வளர்ந்தது இந்தியா.

மறுபடியும் போர், இன்னும் ஏராள பிரச்சினைகள் ஆனால் இந்தியா அசரவில்லை.

மீண்டும் போர், அதையும் தாண்டி மத கலவர முயற்சிகள், மக்கள் தொகை பெருக்கம், எப்போதும் நேரடியாக கொஞ்சமும், மறைமுகமாக நிறையவும் தொல்லை கொடுக்கும் வல்லரசுகள்.

ஆளுக்கொரு கட்சி, அவனவக்கொரு கொள்கை, அவர்களுக்கென ஒரு வேலையற்ற கூட்டம், வெற்று கூச்சல், வீண் ஆர்ப்பாட்டம் என தினம் ஒரு பிரச்சினையை சந்தித்தாலும் வளர்கின்றது இந்தியா, குதிரை வேகமாக ஓடலாம்.

ஆனால் யானை எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் பலமானது, அதுதான் இந்தியா.

அன்று சுரண்ட ஒன்றுமில்லை என‌ ஏழை இந்தியாவினை விட்டு சென்றான் வெள்ளையன், அந்த லட்சணத்தில் நாம் பாகிஸ்தானுக்கும் நஷ்ட ஈடு கொடுத்து திவாலில் இருந்தோம், தேர்தல் நடத்த கூட பணமில்லை.

உலகம் இரண்டாம் உலகப்போரின் தாக்கத்தில் இருந்ததால் பெரும் மந்த நிலை.

அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டோம். ஐந்தாண்டு திட்டம் என சொல்லி விவசாயம், பால், கடல் உணவு என உணவுக்கு தன்னிறைவு அடைந்தோம்

கல்விசாலைகள் கட்டி, அதற்காக பெரும் திட்டம் தீட்டி கல்வியில் உச்சம் பெற்றோம்.இன்று உலகநாடுகள் ஐ.டி உட்பட பல தொழில்களில் இந்தியாவினை மதிக்கின்றது என்றால் அந்த கல்விதான் அடிப்படை

ஒரு துப்பாக்கி கூட செய்ய தெரியா தேசமாக இருந்தோம், கொஞம் கொஞ்சமாக சுதாரித்தோம். இன்று உலகின் ராணுவபலம் பொருந்திய நாடுகளின் முதல் 5 இடங்களில் இருக்கின்றோம்

சைக்கிளில் ராக்கெட் பாகங்களை கொண்டுசென்றுதான் விண்வெளி ஆராய்ச்சிகளை தொடங்கினோம், நமக்கு கைகொடுப்பார் இல்லை. தத்தி திணறி தோல்வியுற்று படிபடியாக முன்னேறி இன்று கிரையோஜனிக் என்ஜின் வரை செய்து அசத்தியிருக்கின்றோம், செவ்வாய் கிரகம் வரை இந்தியரால் தொட முடிகின்றது.

சிறிய தேசங்கள் முன்னேறுவது விஷயம் அல்ல. இந்த மாபெரும் தேசம் இவ்வளவு பெரும் மக்களை வைத்துகொண்டு அதுவும் பல இன மொழி மக்களை வைத்துகொண்டு முன்னேறுவது வெகு சிரமம்

இன்னொரு நாட்டிற்கு இது சாத்தியமே இல்லை. அந்த அதிசயத்தை நாம் செய்துகொண்டிருக்கின்றோம்.

இவ்வுலகில் உள்ள நாடுகளை கவனியுங்கள், பல நாடுகளில் மக்கள் வாழவே முடியாது,பொறுப்பற்ற அரசாங்கமும் மனித தன்மை இல்லா போராட்டங்களும்,இன்னும் பற்பல கொடுமைகளும் பெரும் அச்சுறுத்தலை மக்களுக்கு கொடுக்கின்றது, உணவு இல்லை, கல்விசாலை இல்லை,ராணுவம் இல்லை, நீதிமன்றம் இல்லை,காவல் இல்லை, ஒன்றுமே இல்லை.

சிலநாடுகளில் ராணுவ ஆட்சி மட்டும் உண்டு, அது பெரும் ஆபத்து, சாப்பாட்டில் உப்பு போடுவதை கூட ராணுவம்தான் நிர்மானிக்கும்.

சில நாடுகள் மன்னர் வகையரா, சில நாடுகள் கம்யூனிச வகையறா, சில நாடுகள் யார் ஆள்கின்றார்கள் என தெரியாத வகை. ஒரு உரிமையும் மக்களுக்கு கிடையாது உயிர்பயம் அதைவிட அதிகம்

ஒரு வகையில் நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகள், பொருளாதாரம் ஏறும் இறங்கும், ஆனால அமைதியாய் வாழ்கின்றோம், நிம்மதியாய் உறங்கி நம்பிக்கையாய் எழுகின்றோம், என்றாவது இங்கு வாழவே முடியாது என்று குடும்பத்தோடு அகதியாய் நாட்டை விட்டு கிளம்பியிருக்கின்றோமா?

இதுதான் சுதந்திர இந்தியாவின் வெற்றி.

எந்த நாட்டில் சிக்கல் இல்லை? இவ்வுலகின் எல்லா நாட்டிலும் சிக்கலும், வறுமையும் உண்டு, இந்தியாவிலும் அப்படி சில சர்ச்சைகளும் பிரச்சினைகளும் இருக்கலாம். அதற்காக இத்தேசம் மகா மோசம் என எவனாவது சொல்வான் ஆனால் அவனை கடலில் தள்ளுதல் நன்று.

அது மோசம், இது மோசம், எல்லாமும் மோசம் எல்லாம் அசிங்கம் என குணா கமலஹாசன் போல மோச ராகம் பாடும் பத்திரிகைகளும், தொலைகாட்சிகளும் ஒன்றை மறந்து விடுகின்றன.

சில நாடுகளில் முகநூல் கூட கிடையாது, சீனாவில் தடைசெய்யபட்ட ஊடகங்கள் சீன பெருஞ்சுவரையும் தாண்டும், இன்னும் சில நாடுகள் செவ்வாய் கிரகத்தில் மனிதனின் நிலைபோல, உலகைவிட்டே துண்டிக்கப்ட்டிருப்பார்கள், ஆனால் இந்தியா அப்படி அல்ல‌

காந்தி முதல் மோடி வரை விளாச முடிகிறது, கார்ட்டூன்கள் போட்டு கலைஞர் வரை கலாய்க்கமுடிகிறது, பெரும் ஊழலை கூட அனாசயமாய் டீகடை பெஞ்சில் விவாதிக்க முடிகிறது, இது எத்தனை நாடுகளில் சாத்தியம்?

ஏராளமான நாடுகளில் இதெல்லாம் நினைத்தே பார்க்கமுடியாத விஷயங்கள். ஒரு வார்த்தை அரசினை விமர்சித்தாலே பிடுங்கி விடுவார்கள். காலத்திற்கும் சிறை அல்லது கல்லறை.

இத்தேசத்தில் எல்லா உரிமையும் மிக அதிகமாகவே கொடுக்கபட்டிருக்கின்றது.

நமது பொது சுதந்திரத்திற்கு கேடு வரும்பொழுது கத்த முடிகிறது, கொடி பிடித்தோ அல்லது ஊர்வலமோ, சில நேரங்களில் வேறுவகையிலோ எதிர்ப்பினை காட்ட முடிகிறது, 5 வருடம் பொறுத்தால் ஆட்சியை தூக்கி எறிய முடிகிறது, காலத்திற்கும் ஆட்சியே மாறாத நாடுகளை நினைத்துபாருங்கள்??

இந்தியா கடந்த 73 ஆண்டுகளில் கடந்தபாதை மிக சிக்கலானது, எவ்வளவு இழப்புகள், எவ்வளவு நெருக்கடிகள், நிறைய துரோகங்கள்,முக்கியமாக பெட்ரோல் முழுதும் இறக்குமதி, அதனையும் தாண்டி வளர்ந்திருக்கின்றோம் அல்லவா? அதுதான் சுதந்திர வெற்றி.

1960களில் ஒரு நுட்பத்தினையும் தரமாட்டேன் அல்லது தரவிடமாட்டேன் என அடம்பிடித்த அமெரிக்கா, தனது செயற்கை கோள்களை ஏவுவதற்கு இந்திய உதவியை நாடுகின்றது அல்லவா? அது வெற்றி.

இந்தியாவின் உதவியின்றி தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் அமைதி சாத்தியமில்லை என உலகம் கருதுகின்றதல்லவா அது வெற்றி. 1962 போல் அல்ல, நாம் அடித்தால் மறுநொடி இந்திய ஏவுகனைகள் ஷாங்காய் வரை தாக்கும் என சீனா யோசிக்கின்றது அல்லவா? அது வெற்றி.

ஐ.நா சபையில் நிரந்தர உறுப்பினராகலாம் எனும் அளவிற்கு தனது முத்திரையினை உலக அரங்கில் பதித்திருக்கின்றது அல்லவா? இது தான் வளர்ச்சி.

ஒரு காலத்தில் காஷ்மீரில் நாங்கள் இல்லாமல் முடிவு இல்லை என சொன்ன நாடுகள் இப்பொழுது அதுஇந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என சொல்லி ஒதுங்குகின்றன அல்லவா? அது வெற்றி

சொன்னால் சொல்லிகொண்டே செல்லலாம், அவ்வளவு குறிப்பிடதக்க முன்னேற்றம். அதனாலதான் 1998ல் நடந்த கிழக்காசிய பொருளாதார வீழ்ச்சி, 2008ல் நடந்த சிக்கல், சமீபத்திய கிரீஸ் திவால் மிரட்டல் இவை எல்லாம் இந்தியாவினை தாக்க முடியவில்லை. காரணம் மெதுவாக நடந்தாலும் பலமிக்க யானை இது.

இந்தியா இன்னும் வளரவேண்டிய துறையில் மகா முக்கியமானது போர் விமானங்களும், பெரும் கப்பல்களும், அணுசக்திக்கான பாகங்களை செய்தலும்

இவற்றால் நாம் செலவழிக்கும் தொகை கொஞ்சமல்ல அனாசமயாக சில விமானங்களே பல்லாயிரம் கோடிகளை தட்டிசெல்கின்றன, கப்பலும் இதர பாகங்களும் தனி செலவு

அந்த நுண்ணிய விஞ்ஞானத்தில் நாம் இன்னும் வளரவேண்டும் அடுத்த 10 ஆண்டுகளில் வளர்ந்துவிடுவோம் என நம்புவோம், நிச்சயம் சாதிப்போம்

இந்நாடு பற்றி அய்யய்யோ என ஒப்பாரி வைப்பவன் எக்காலமும் உண்டு, அவனுக்கு பெரும்பாலும் உலகம் புரிவதில்லை என்பதைவிட சுயநலத்தால் தேசத்தை எதிர்க்கும் புல்லுருவிகளின் அரசியலுக்கு அவனை அறியாமல் துணை செல்வான் என்பதே உண்மை

கருப்புகொடி, சிகப்பு கொடி, புறக்கணிப்புகள் எல்லாம் அரசுக்கு செய்யகூடியவையே அன்றி, நாட்டிற்கு எதிராக அல்ல‌

நாடு வேறு, அரசாங்கம் வேறு.

இந்தியா அமைதியான நாடு, அதிலும் நமது தென் பகுதி நிச்சயமாக ஆனந்தமான‌ பகுதி, அந்த அருமையை உண‌ரவேண்டுமானால் சுதந்திர தினத்தன்று டிவியில் 20 வயது நடிகை 120 கோடிமக்களுக்கும் பேட்டியளிப்பார் அல்லது சினிமா குப்பைகள் அல்லது பட்டிமன்ற அரட்டைகள் ஓடிக்கொண்டிருக்கும்

அல்லது சாராய அரசியல்வாதிகள், ஊழல்வாதிகள் உணர்ச்சிமிக்க சுதந்திரதின வாழ்த்துக்களை சொல்வார்கள், உடனே அலைவரிசையை மாற்றிவிட்டு

பல குழப்பமான நாட்டு அரசுகளையும், சிக்கலான வாழ்க்கை வாழும் வடகொரியா போன்ற நாடுகளையும், பலமான அரசுகள் இல்லாததால் கொடூரமான தீவிரவாதத்திற்கு பலியாகும் நாடுகளை பாருங்கள்.

எத்தனை கொடூர அரசுகள், எத்தனை காட்டுமிராட்டிதனங்கள், போதை கும்பல்கள் ஆளும் நாடுகள், கற்பனைக்கும் எட்டாத கட்டுப்பாடுகள்,அட்டகாசங்கள்.

அம்மக்களின் அழுகுரலும், பசியால் கதறும் பிஞ்சுகளின் கூக்குரலும் கேளுங்கள் தானாக உங்கள் காதுகளில் தேசிய கீதம் ஒலிக்கும், கைகள் தேசிய கொடியை வணங்கும்.

அப்படி ஒரு அற்புதமான நாடு இது, அகதியாய் சுதந்திர போராட்ட காலத்தில் கூட ஒருவர் வெளியேறாத நாடு இது, இன்றும் சர்வ சுதந்திரமாய் , மகிழ்வாய் நம்மால் வாழமுடிகின்றது.

இந்தியா ஒரு நாடு மட்டுமல்ல, ஒரு மாபெரும் அதிசயமும் கூட, பல இனங்கள், மதங்கள்,கலாச்சாரம் என கலந்து வாழும் அற்புதமான ஒரு அமைப்பு, இந்தியாவினை தவிர உலகில் எந்த நாட்டிற்கும் அது சாத்தியமானதே அல்ல.

அந்த அற்புதமான‌ நாட்டின் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் பெருமை அடைகின்றோம்

இந்நாட்டிற்கு காலம் ஒவ்வொரு தலைவனை கொடுத்துகொண்டே இருக்கின்றது. அன்றைய சிக்கலான காலத்தில் நேரு, ராணுவ‌ போட்டியான காலத்தில் இந்திரா, பொருளாதார சவலான காலத்தில் மன்மோகன் சிங், இன்று ஒரே இந்தியா என்ற உணர்வு வரவேண்டிய நேரத்தில் மோடி என யாராவது வந்து இந்த தேசத்தை தாங்குகின்றார்கள்.

மோடி மீது ஆயிரம் சர்ச்சை இருக்கலாம். ஆனால் மாநில அரசியல் வலுபெற்று அதனால் இந்த தேசமே ஒரு மாதிரி சென்ற நிலையில், காங்கிரஸ் வலுவிழந்த நிலையில் நாடு முழுக்க அறியபடும் தலைவனாக, ஒரே இந்தியாவின் இரும்பு தலைவனாக , பிரதமராக மோடி அமர்ந்திருப்பது இந்நாட்டிற்கு நல்லது.

சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட அந்த தியாகிகளையும், அதன் பின் இத்தேசத்தை காத்து நின்ற நேரு போன்ற தலைவர்களையும், கல்வி கண் திறந்த காமராஜரையும், விஞ்ஞானத்தில் இத்தேசத்தை காத்து நின்ற பாபா, சதீஷ்தவான், அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகளையும்

யுத்தத்தில் இத்தேசத்தை காத்து நின்ற கரியயப்பா, மோனக்ஷா போன்ற தளபதிகளையும் , எல்லை காப்பில் உயிரிழந்த எண்ணற்ற வீரர்களுக்கும் நன்றி கண்ணீர் தெரிவித்தபடி சொல்கின்றோம்.

வந்தே மாதரம், வாழ்க பாரதம்.

உலகின் மாபெரும் அதிசயமும், பெரும் அற்புதமுமான இந்த தேசத்தின் 70ம் சுதந்திரதின விழாவினை இத்தேசம் மிக உற்சாகமாக கொண்டாடட்டும்.

இனிவரும் காலம் இந்தியர் காலமாய் உலகில் மலரட்டும்.

நம் தாயின் மணிக்கொடி கம்பீரமாய் பறக்கட்டும்

சென்னை கோட்டையில் ஒரு மியூசியம் உண்டு அதில் சுதந்திர தருணத்தில் பிரிட்டிஷ் கொடி இறக்கபட்டு முதன் முதலில் ஏற்றபட்ட இந்தியகொடி பாதுகாக்கபடுகின்றது

அதை சுற்றி இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களின் பெயரும் பட்டியலிடபட்டிருக்கும்

அந்த கொடியினையும் அந்த பட்டியலையும் பார்க்கும் பொழுது இந்தியனாய் உங்கள் மனது உருகும், சிந்தனை எங்கெல்லாமோ இழுத்து செல்லும்

தேசாபிமானமும் பக்தியும் மனதில் ஏறும், அந்த உணர்வின் நிலையே வேறு

அந்த தேசபக்தியின் உயரத்தில் இருந்து, உலகின் ஒப்பற்ற அதிசயமும் ஆச்சரியமுனான இந்த திருநாட்டின் சுதந்திர வாழ்த்தை சொல்வதில் சங்கம் பெருமையடைகின்றது

தேசியகொடி உயர கம்பீரமாக பறக்கின்றது

“கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் – எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற்க் குரியர் அவ்வீரர் – தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார்” எனும் வரிகளுக்கு ஏற்ப இந்தியர் அதை வணங்கி நிற்கின்றனர்

தேசத்தார் மத இன மொழி எல்லாம் கடந்து இந்தியராக அக்கொடியினை வணங்கி நிற்கின்றனர்

மனமும் உடலும் சிலிர்க்கும் அந்த காட்சியுடன் இந்த பொன்னாளை கொண்டாடுகின்றது அருமை இருந்தியா..

தேசபற்றில் இந்தியர் கொஞ்சம் மோசம்

மலேசியாவில் ஆகஸ்ட் 30ம் தேதிதான் சுதந்திர தினம்

ஆனால் ஒருமாதத்துக்கு முன்பே வீடுகள், வணிக நிறுவணங்கள், கல்வி நிலையங்கள் எல்லாம் தேசிய கொடியால் நிறைந்திருக்குக்கின்றன‌

எங்கு திரும்பினும் அவர்கள் கொடி கம்பீரமாக பறக்கின்றது

ஊடகங்களும் , செய்திகளும் அதை தாங்கியே வருகின்றது

அருமை இந்தியாவில் அரசு உயர் பீடங்களை தவிர தேசியகொடி எங்காவது பார்க்க முடியுமா?

தேசபற்றில் இந்தியர் கொஞ்சம் மோசம் அதுவும் தமிழ்நாடு சுத்த மோசம்

இம்சை கட்சிகொடிகள் எண்ணிக்கையினை விட அங்கு தேசியகொடி பலலட்சம் மடங்கு குறைவு என்பதுதான் மகா சோகம்..

காட்டு விலங்குகளில் மிக அறிவானது யானை

உலக விலங்குகளில் மனிதனோடு ஒட்டும் விலங்குகள் குறைவு, எல்லா விலங்குகளையும் மனிதன் அடக்கி நடத்திவிட முடியாது. மிக சில விலங்குகளே மனிதனுடன் நெருங்கி பழகும் அளவு அறிவு கொண்டவவை

அதில் ஒன்றுதான் யானை

மிக பெரும் உடலும் கடும் பலமும் கொண்டதாயினும் அதை பழக்கும் வித்தை ஆசியருக்கு குறிப்பாக இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாட்டு இனங்களுக்கு அத்துபடி, ஆதிகாலத்தில் இருந்தே தொடர்ந்து வரும் பந்தம் அது.

மனிதன் யானையோடு பழக தொடங்கியது மிக பழங்காலம் எனினும் இந்திய தாய்லாந்து பகுதிகளில்தான் அந்த வழக்கம் அதிகம் மற்ற நாடுகளில் அது இல்லை

பைபிளில் கூட யானைபற்றி குறிப்புகள் இல்லை

ஐரோப்பியருக்கு குதிரை வளர்க்க தெரியும் , அரேபியருக்கு ஒட்டகம் என இருந்த காலத்தில் இந்தியருக்கு குறிப்பாக தென்னிந்தியருக்கு யானையினை பழக்கும் அந்த வித்தை தெரிந்திருக்கின்றது

அதை கடுமையான வேலை செய்ய பணித்தார்கள், மரத்தடி தூக்குவது முதல் அணைகட்ட, கோவில் கட்ட கல் இழுப்பது வரை அவை பயன்பட்டன‌

அவை அன்று மிக மிக முக்கியமான இடத்தில் இருந்தது, யானை என்பது கடவுளாக கூட வணங்கபட்ட தேசம் இது. இன்றுவரை இந்து ஆலயங்களில் யானை நிற்கும் தத்துவம் அதுவே

தனக்கு உபயோகமான விலங்குகளை கடவுளின் அம்சமாக பார்க்கும் இந்துமதம் யானையினையும் கடவுள் நிலைக்கு வைத்திருந்தது

காடு, மேடு, கோவில் என கடும் உழைப்பினை கொடுத்த யானைகள் போர்களத்திலும் சாகசம் காட்டின, பட்டத்து யானை என மன்னனும் ஸ்பெஷல் யானைகளை எல்லாம் வைத்திருந்தான்

அன்று கோட்டைகளை இடிப்பது முதல் கோட்டை கதவினை இடித்து நொறுக்குவது வரை யானைகளே செய்யும் , இக்கால பீரங்கிக்கு சமமானது அது

அன்று இந்திய மன்னர்களின் யானைபடை உலக பிரசித்தி, ஐரோப்பிய மன்னர்கள் எல்லாம் அதை அதிசயமாக பேசிகொண்டார்கள்

மாவீரன் அலெக்ஸாண்டர் மிக எளிதாக ஐரோப்பா, மேற்காசியா என வெற்றிபெற்று வந்தபொழுது அவனை தோற்கடித்து விரட்டியது போரஸின் யானைபடை என்கின்றது வரலாறு, அவன் அதனிடம் தோற்றிருக்கின்றான்

இந்திய யானைபடை பன்னெடுங்காலம் இங்கு காவல் இருந்தது

ஆப்கானியர்களிடம் செங்கிஸ்கான் விட்டுசென்ற குதிரைவளர்க்கும் கலையில் ஆப்கானியரிடம் பலம் வாய்ந்த குதிரைபடை உருவானது

இந்திய யானை பலமானது என்றாலும் ஆப்கானிய குதிரையின் வேகம் வேறுமாதிரி இருந்தது, ஊடுருவி தாக்கும் கலையில் அவர்கள் தேர்ந்தார்கள்

அது கோரி முதல் பாபர் வரை வெற்றிகொடுத்தது, பின்பு தைமூர் இந்திய யானைபடையினை எப்படி நொறுக்குவது என கொடூரமாக கற்றுகொடுத்தான், தும்பிக்கையினை வெட்டி வீழ்த்டுவது வரை அவனின் கொடூரம் அதிகமாக இருந்தது

வலுவான குதிரைபடையின் வேகத்தின் முன்னாலும் அவர்களின் மூர்க்கத்தின் முன்னாலும் நிற்கமுடியாவிட்டாலும் யானை படை ஒரு கம்பீரத்தின் அடையாளமாக இன்றும் தொடர்கின்றது

காட்டு விலங்குகளில் மிக அறிவானது யானை, கூடித்தான் வாழும் அந்த கூட்டத்துக்கு வயதான பெண் யானையே அதற்கு தலமை தாங்கும்

அவைகளின் கன்று கூட வழிதவறி போக கூடாது என்பதற்காக யானை தடங்களை உருவாக்கும், அவற்றில் மானிடன் குறுக்கிடாதவரை அவை மனிதனை சீண்டுவதில்லை

மனிதன் சாலை, கட்டடம் என அவற்றின் வழியில் ஆக்கிரமிப்பு செய்தால் அன்றி அவை இங்கு திரும்பாது, அந்த வழியினை அவை எப்படி நினைவில் வைக்கின்றன, எப்படி அந்த தடத்தை பின்பற்றி மிக சரியாக நடக்கின்றன என்பதெல்லாம் அவற்றுக்கே தெரிந்த வித்தை

இன்னொரு அதிசயமான பழக்கம் அவைகளிடம் உண்டு, காடென்றாலும் எல்லா நேரமும் அங்கு நீர் கிடைக்காது. வறண்ட காலங்களில் வயதான யானை முன் நடக்க மற்ற யானை பின் தொடரும் குறிப்பிட்ட இடத்தில் அந்த மூத்த யானை காலால் மிதித்தால் நீர்வரும்

ஆபத்து காலத்திலும் நீர்வரும் வழியினை அவை அறிந்து வைத்திருக்கின்றன, இன்னும் அவைகளின் வாழ்வில் ஏகபட்ட ரகசியங்களும் ஆச்சரியங்களும் உண்டு

பார்க்க பிரமாண்டமானதும் பலமானதுமாயினும் பழகிவிட்டால் மனிதனுக்கு குழந்தையாய் அடங்கும் குணம் அதனுடையது

பழக்குவது சாதாரணம் அல்ல, அதை பட்டினி போட்டு அடக்கி அங்குசம் வைத்து மிரட்டி இன்னும் கொஞ்ச கொஞ்சமாக உணவு கொடுத்து பாகன் இல்லையென்றால் தான் வாழமுடியாது என அதை பயமுறுத்தி கொண்டுவருவது ஒருவகை

இன்னொரு வகை போர்களத்த்துக்கு பழக்குவது, அது இப்பொழுது இல்லை, களத்துக்கு யானை ஒரு வெறியோடு செல்ல வேண்டும் என்பது யுத்த கணக்கு அந்த வழக்கம் இப்பொழுது இல்லை

எனினும் ஜோத்பாய் அக்பர் படத்தில் யானையினை பழக்கும் ஒரு காட்சி உண்டு, அப்படித்தான் அந்நாளில் போருக்கு பழக்கினார்கள்

இன்று வெறும் வேடிக்கை பொருளாக ஆகிவிட்டது யானை, அதன் இடத்தினை புல்டோசர்களும் பெரும் எந்திரங்களும் பிடித்து கொண்டன, தந்தம் மட்டும் இல்லையென்றால் இப்பொழுது யானையினை தேடுவார் யாருமில்லை

இந்திய காடுகள் குறிப்பாக நமது மேற்குதொடர்ச்சி மலை காடுகள் யானைக்கு பெயர் பெற்றவை, தாய்லாந்தும் பிரசித்தி. அங்கும் யானைக்கு தனி மரியாதை உண்டு

தேவை இல்லாத எதையும் மனிதன் தூர வீசிவிடுவான் அது அவனின் குணம் அதனால் யானை பயன்பாடு நின்றுவிட்ட காலத்தில் அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக மறந்துகொண்டிருக்கின்றது மானிட சமூகம்

ஆனால் இந்துக்களின் ஏற்பாடு சிலாகிக்க கூடியது, நன்றி மறக்காதது இந்துமதம்

மனிதனோடு வாழ்ந்த , அவனுக்கு உபயோகமாய் இருந்த எல்லா விலங்குகளையும் தெய்வ நிலைக்கு உயர்த்தியது அந்தமதம்

கோவில் காளை, குதிரை, கோவில் யானை என அவை உயர்த்தி வைத்திருக்கும் தத்துவம் அதுதான்

இன்றும் யானைகள் கம்பீரமாக ஆலய வளாகங்களில் நிற்கும் சாஸ்திரமும் அதுதான்

இந்துமதம் இருக்குமளவும் யானைகள் நினைவுகூறபடும் , ஐந்தறிவு மிருகங்களுக்கும் அவை நன்றியோடு கொடுத்த இடமே தனி

இன்று உலக யானை தினம், ஆப்ரிக்க யானைகளின் அஞ்சதக்க நிலையினை விட இந்திய யானைகளின் நிலை ஓரளவு நன்றாகவே இருக்கின்றது

அந்த அறிவுமிக்க, சிறிய கண்களும் ஆடும் காதும், நீண்ட தும்பிக்கையினை ஆட்டியபடி வரும் குழந்தை போன்ற அதிசய உயிரினை காக்க வேண்டியது நம் கடமையாகும்..

உண்மையான இஸ்லாம்

எதற்கெடுத்தாலும் உபியில் காட்டுமிராண்டிதனம் , உபியில் பெரியார் பிறக்கவில்லை, அம்பேத்கர் பிறக்கவில்லை என்றெல்லாம் நாம் சொல்லிகொண்டிருந்தாலும் உலகமே கண்ணீர் விடும் காரியத்தை செய்திருக்கின்றனர் உபி இஸ்லாமியர்

ஆம் நேற்று பக்ரீத் தினம், வாரனாசியில் ஒரு இந்துபெண் வறுமைபட்ட பெண் நோயுற்று இறந்திருக்கின்றாள்

பக்ரீத் கொண்டாட்டம் எனினும் அதை மட்டுபடுத்துவிட்டு இஸ்லாமியர் அப்பெண்ணை சுமந்து சென்று இந்து மதப்படி தகணம் செய்திருக்கின்றனர்

ஈத் என்பது மகா முக்கியமான கடமை என்றோ, அந்நாளில் இன்னொரு சமய பிரேதத்தை அடக்கம் செய்வது முடியா விஷயம் என அவர்கள் கருதவில்லை

அதுவும் அதுமட்டுமல்லாமல் இந்து சமய சடங்குப்படி, சோனியை சுமந்து செல்லும்போது, ராம் நாம் சத்யா ஹை என்கிற ஸ்லோகத்தையும் உச்சரித்தபடி சுமந்துசென்றுள்ளனர்.

இஸ்லாமிய பெருமக்கள் இந்து சகோதரியினை அதுவும் இந்து ஸ்லோகங்களை சொன்னபடி சுமந்து சென்று இந்து முறைப்படி தகணம் செய்திருப்பது நாடெங்கும் ஏன் உலகெங்கும் கவனிக்கபடுகின்றது

தேசாபிமானிகள் அந்த இஸ்லாமிய சகோதரகளுக்கு பெரும் நன்றியும் வாழ்த்தும் தெரிவிக்கின்றனர்

உண்மையான இஸ்லாம் என்றால் இதுதான், இதுவே தான்

ஏ உபியின் இஸ்லாமிய உடன்பிறப்புக்களே உங்களால் தேசம் பெருமை கொள்கின்றது, காந்தி கண்ட இந்தியா இதுதான்

இந்த ஒற்றுமை வளரட்டும் செழிக்கட்டும்

உபி வானில் விடிவெள்ளி கிளம்பியிருப்பது வரவேற்கதக்க , மகிழதக்க விஷயம்

மானிட தேவதை

பணிகளில் மிக பொறுமை வாய்ந்த மதிப்பு மிக்க பணி தாதியர் பணி, மிக மிக பொறுப்பு வாய்ந்த பணியும் கூட.

அதனால்தான் அது தாய்க்கு அடுத்த வார்த்தையான தாதியர் என தமிழில் போற்றபடுகின்றது,

மருத்துவமனையில் பாருங்கள், மருத்துவர் ஒரு நோயாளியினை கவனிப்பது சொற்பநேரம்தான்,

ஆனால் முழுநேரமும் உடனிருந்து மருந்துகொடுத்து , உணவு கொடுத்து அன்பாக கவனிப்பது தாதியர்கள் தான். அவர்களின் பணி இல்லை என்றால் ஒரு மருத்துவமனையும் இயங்காது, ஒரு உயிரும் பிழைக்கமுடியாது.

மிக மிக பொறுமையும் , சகிப்புதன்மையும் வாய்ந்த பணி என்பதால் அப்பணி பெண்களுக்கே கொடுக்கபடுகின்றது

தாய்மை போன்றது தாதிமை

தாதி எனும் சொல்லுக்கு இன்னொரு தாய் என பொருள். செவிலியர் எனப்படு வார்த்தையினை விட தாதியர் எனப்படும் வார்த்தைதான் அவர்களுக்கு பொருந்தும்

அப்படித்தான் ஒரு தாய் தன் குழந்தையினை உண்ணாமல் உறங்காமல் பார்த்துகொள்வது போல் நோயாளிகளை கண்ணும் கருத்துமாக பார்த்துகொள்கின்றார்கள்

தினமும் ஒவ்வொருவிதமான நோயாளிகளை தாய் போல் கவனித்துகொள்வது என்பது மிகபெரும் சேவை, சேவைகளில் எல்லாம் உயர்ந்த சேவை

மருத்துவர் என்பவர் ஆணிவேர் என்றால் தாதியர் என்பவர்கள்தான் சல்லி வேர். மருத்துவமனை என்பது உயரபறக்கும் பட்டம் என்றால் தாதியரே நூல்

மருத்துவமனையின் உண்மையான அஸ்திவாரமே தாதியர்கள்தான்

அந்த மாபெரும் மதிப்பும், பொறுப்பும் மிக்க தாதியர்களை இந்த தமிழ்சினிமா ஒரு மாதிரி பிம்பமாக ஆக்கி வைத்திருக்கின்றது, இது கண்டிக்கதக்கது

உண்மையில் கை எடுத்து வணங்க வேண்டிய பணி அவர்களுடையது

உலகெல்லாம் பணியாற்றும் அனைத்து தாதியர் சகோதரிகளுக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

தாதியர் நாள் ஏன் கொண்டாடபடுகின்றது என்றால், அன்று ஐரோப்பாவில் ஒரு பெண்மணி இருந்தாள் அவர் பெயர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல்

கிறிஸ்துவிற்காக தன்னை அர்பணித்தவள், அதனால் நோயாளிகள் பால் அவள் கவனம் திரும்பியது , அதுவரை நர்ஸ்கள் என்பது தனி துறை கிடையாது

நர்ஸ் என்பது மதிப்பில்லா பணி, சமையல் முதல் கழிவறை அவர்கள்தான் பார்த்துகொள்ள வேண்டும், மற்றபடி மருத்துவருக்கு உதவுவதெல்லாம் கணக்கில் வராது

மருத்துவமனை வேலைக்காரி பெயர் நர்ஸ் அவ்வளவுதான்

புளோரன்ஸ் நர்ஸ் துறையினை உருவாக்கினார், சுத்தமே முதல் சிகிச்சை என்ற கொள்கை அவரால் உருவாக்கபட்டது. 10 பெண்களை சேர்த்து கொண்டு நர்ஸ் பணி என்றால் என்ன? என முதலில் பாடம் நடத்தியது அவர்தான்

புன்னகை பூத்த முகமும், சகிப்புதன்மை மிக்க சேவை மனப்பான்மையும் தேவை என அவரே முதலில் போதித்தார்

அப்பொழுது ரஷ்யாவிற்கும் பிரான்ஸ், பிரிட்டன், ஓட்டோமான் கூட்டணிக்கும் பெரும் போர் மூண்டது

இதில் பிரிட்டன் படைகள் துருக்கி எல்லையோரம் நின்றன, அங்கு போரில் காயபட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நைட்டிங்கேல் தன் குழுவினரோடு அனுப்பபட்டார்

முதன் முதலாக நர்ஸ்கள் எவ்வளவு அவசியம் என்பதை அந்த முகாம்தான் உணர்ந்தது, அப்படி மிக கண்ணும் கருத்துமாக காயம்பட்ட‌ வீரர்களை அவர் கவனித்தார், இரெவல்லாம் கையில் விளக்கினை எடுத்து ஒவ்வொரு நோயாளியாக அவர் கவனித்தபொழுது ஆச்சரியமாக பார்க்கபட்டார்

கைவிளக்கு ஏந்திய காரிகை என அவர் பெயர் எடுத்தது அங்குதான்

நவீன நர்ஸ் முறை அந்த முகாமில்தான் உருவானது, பின் ஐரோப்பாவின் எல்லா மருத்துவமனைகளும் அதை அமைத்தன‌

நர்சுகளுக்கு ஓரளவு மருத்துவம் தெரியவேண்டும் என சில பயிற்சிகள் வழங்கபட்டன, பின் தனி பாடபிரிவு தொடங்கபட்டது

நர்ஸ் உலகை இப்படித்தான் அந்த நைட்டிங்கேல் தொடங்கி வைத்தார்

அவர் நர்சிங் படித்தவர் அல்ல, மருந்துகள் தெரியாது ஆனால் அன்பாக நோயாளிகளை கவனிக்க வேண்டும் என்ற கருணை எண்ணம் மட்டும் இருந்தது

அவர்களுக்கு வேளா வேளைக்கு மருந்து கொடுத்து, உணவு கொடுத்து தேவைகளை கவனித்து சுத்தமான சூழலை உருவாக்கி அவர்களை கவனித்துகொள்ள வேண்டும் என்ற தெய்வீக மனம் இருந்தது

அந்த பெரிய மனதும் உயர்ந்த சிந்தனையும்தான் தாதியர் எனும் தாய்மை உலகத்தை தொடங்க செய்தது.

இன்றிருக்கும் கோடான கோடி நர்ஸ்களுக்கு அவரே மூலம். நோயாளி மருந்தினால் மட்டுமல்ல அன்பான கருணையான கவனிப்பாலும் சுகம்பெறுவான் என்பதே அவரின் போதனை, தத்துவம்,கொள்கை

அந்த மாபெரும் பெண்மணியின் பிறந்த நாளே நர்ஸ் தினம் என கொண்டாடபடுகின்றது

வளரட்டும் அவர்கள் பணி, வாழ்த்துக்கள்

மருத்துவ வானில் அவர்களே கருணைமழை பொழிந்துகொண்டிருக்கின்றனர், அந்த கருணையாலே பல்லாயிரகணக்கான நோயாளிகள் நலம் பெற்று கொண்டிருக்கின்றனர்

அந்த மானிட தேவதைகளுக்கு மறுபடியும் வாழ்த்துக்கள்

இன்று நோயாளிகளுக்காக கைவிளக்கு ஏந்திய அந்த காரிகையின் நினைவுநாள்

மானிட குலம் உள்ளமட்டும் மானிடருக்கு நோயும் பிணியும் கிசிச்சையும் அவசியம் அதில் தாதியர் சேவை தொடர்ந்து கொண்டே இருக்கும்

அதில் நைட்டிங்கேல் வாழ்ந்துகொண்டே இருப்பார், தன்னலமற்றவருக்கு மரணமே இல்லை என்பது அதுதான்.

கிறிஸ்துவத்தில் ஏது சாதி?

கிறிஸ்தவர்களாக மாறிய தலித்துகளுக்கு சலுகை வேண்டும்- திருமா

கிறிஸ்துவத்தில் ஏது சாதி?

தலித் எனும் அடையாளத்தை தூக்கி சுமக்க இந்துவாக இருந்துவிட்டு போகலாமே ஏன் மதம் மாற வேண்டும்

சரி தலித் சலுகை கிடைக்க அவர்கள் இந்துவாக மாற தயாரா?

திருமாவும் அவர் கொள்கையும்…

வீர தம்பதிகள் இருப்பதில் என்ன ஆச்சரியம்

நெல்லை மாவட்டத்தில் கொள்ளையர்களை எதிர்த்த அந்த தம்பதியரின் வீர வீடியோ வைரலாகிவிட்டது

நெல்லை மண் என்றால் சும்மாவா? கட்டபொம்மனும் பூலித்தேவனும் வாழ்ந்த மண் அது

அட அவ்வளவு ஏன் இன்றும் அதன் சிறப்பே தனி, அங்கு வீர தம்பதிகள் இருப்பதில் என்ன ஆச்சரியம்

அவர்களை சந்திக்க சென்றிருக்கின்றார் டிஎஸ்பி, சந்தித்து வாழ்த்தியிருக்கின்றார்

அந்த வீரபெண்மணியினை பார்த்துவிட்டு கணவரை பரிதாபமாக டிஎஸ்பி பார்த்ததாக இதுவரை தகவல் இல்லை

எதற்கு சென்றிருப்பார் டிஎஸ்பி?

ஒருவேளை காவல்துறைக்கு அந்த வீர தம்பதிகளின் பயிற்சி தேவைபடுமோ?

கடைசி வரை யார் அந்த கொள்ளையர் என்ற விவரமே வரவில்லை என்பது வேறுவிஷயம், அது பற்றி எல்லாம் நாம் டிஎஸ்பியிடம் கேட்க முடியாது.