பேசியே கெட்ட மாநிலம் தமிழகம்

பேசியே கெட்ட மாநிலம் தமிழகம்

பட்டுகோட்டை அழகிரியின் பேச்சு இன்று வைகோவின் பேச்சாக உருமாறி யாருக்கும் உதவமாலே போய்விட்டது

பசும்பொன் தேவரின் பேச்சின் சாயல் இல்ல மாறாக அவரின் “எக்குலமும் வாழட்டும் அதில் முக்குலத்தோர் வாழட்டும்.. என்ற சாயல் அங்கிள் சைமனின் “தமிழன் ஆளட்டும்” என உருமாறி வந்து காமெடியாகிவிட்டது

அண்ணாவின் பேச்சு கலைஞரில் தொடர்ந்தது, கலைஞர் அண்ணாவாக சிந்தித்தார், அண்ணாவாக மாறினார் அண்ணாவாக எழுதினார்

சும்மா சொல்ல கூடாது, அண்ணாவினை தன் பேச்சிலும் எழுத்திலும் அந்த பேசியே கழுத்தறுக்கும் தந்திரத்திலும் அப்படியே பின்பற்றினார் கருணாநிதி

எம்மை பொறுத்தவரை அண்ணா இறந்தது கடந்த வருடம் தான்

ஆக பட்டுகோட்டை அழகிரி, முத்துராமலிங்க தேவர், அன்ணாவின் வாரிசுகளாக இன்று நிற்பவர்கள் யார் தெரியுமா?

வைகோ, சீமான், முக ஸ்டாலின்

வெற்று கோஷமும் வீண் ஆர்பாட்டமும் வறட்டு சிந்தாந்தமும் இப்படியான தலைவர்களைத்தான் உருவாக்கும்

அந்த நாடகத்தை இப்பொழுதும் நடத்துகின்றது

தமிழ் தமிழ் என முழங்குபவர்கள் தமிழுக்கும் தமிழருக்கும் என்ன கிழித்தார்கள் என்பதுதான் தெரியவில்லை

தமிழை வளர்க்க வேண்டுமென்றால் என்ன செய்திருக்க வேண்டும் சைவ சித்தாந்த கழகம் விட்டு சென்ற பணிகளை திராவிட மற்றும் திமு கழகம் செய்திருக்க வேண்டும்

ஆனால் செய்யவில்லை ஏன்? அப்படி செய்தால் தமிழனின் மதம் இந்து என பண்டைய இலக்கியங்கள் சொல்வதை உறுதிபடுத்தபடும் என்பதால் தயங்கி மறைத்தார்கள்

சரி, ஆந்திரமும் கன்னடமும் மலையாளமும் இந்தியினை எதிர்க்கவில்லை ஆனால் சொந்தமொழியினை காத்தன‌

இங்கு இந்தியும் வளரவில்லை, ஆங்கிலமும் வளரவில்லை அட தமிழும் வளரவில்லை

தமிழ் வாழவேண்டும் வளரவேண்டும் என இவர்கள் நினைத்திருந்தால் என்ன செய்திருப்பார்கள் தெரியுமா?

ஒரு இந்தியனாக அதை சொல்லமுடியாது என்றாலும் நியாயத்தை சொல்லவேண்டும்

ஆம், ஈழபோராட்டத்தை இவர்கள் வெற்றிபெற செய்திருக்க வேண்டும், ஈழபோராட்டம் தமிழருக்கானது மட்டுமல்ல தமிழ் மொழி உலகிலே தனி ஆட்சி மொழியாக மலரும் வாய்ப்பு அங்குதான் இருந்தது

சிங்கப்பூர், மலேசியா, இலங்கை என தமிழ் ஆட்சி மொழிகளில் ஒன்றாக இருந்தாலும் தனி தமிழ்நாடாக ஒரு நாடு மலரமுடியுமென்றால் அது ஈழபூமியாக இருந்தது

இவர்கள் அதை ஆதரித்திருக்க வேண்டும் ராஜிவ் கொலைக்கு முன் தலைகீழாக நின்றவர்கள் அதற்கு பின் அப்படியே ஜகா வாங்கினார்கள்

ஈழம் அமையாது என உறுதியாக சொன்ன பாஜகவோடும், காங்கிரஸோடும் கூட்டணி வைத்து பதவியில் அமர இவர்களுக்கு தயக்கமே இல்லை

நல்லவர்கள் என்றால் தமிழ்மேல் பற்றும் பாசமும் கொண்டவர்கள் என்றால் அந்த ஈழபோராட்டத்தில் இவர்கள் நின்றிருக்க வேண்டும்

அப்படி செய்தால் ஈழம் மலர்ந்து தமிழ் இன்னும் வளர்ந்திருக்கும்

வாழ விட்டார்களா அந்த தமிழை?

அல்ல இவர்கள் ஆட்சியும் அதன் வருமானமும் இவர்களுக்கு முக்கியமாக இருந்தது

தமிழ்பற்றாளர்கள் என்றால் கடல்கடந்தும் தமிழ் வளர இருந்த வாய்ப்பினை இவர்கள் விட்டிருக்க கூடாது

ஆனால் விட்டுவிட்டார்கள் ஏன்?

எல்லாம் சுயநலம் நாடகம் வோட்டு தமிழ் அரசியல்..

அந்த நாடகம் மறுபடியும் தொடர்கின்றது

இந்தி வந்தால் தமிழ் அழியும் என்பார்கள் ஆனால் அது வந்த மாநிலங்கள் எதிலும் மாநில மொழி அழிந்ததாக தெரியவில்லை

இல்லா ஒன்றை இருப்பதாக சொல்லி படம்காட்டி பயமுறுத்தி வாக்கு வாங்கி சம்பாதிப்பதில் தன்னிகரற்ற கட்சி திமுக‌

அந்த நாடகத்தை இப்பொழுதும் நடத்துகின்றது

வல்லவன் வகுத்ததே வியாபாரம்

“லேய் மாமா, அரோம்கோவுல குண்டு வெடிச்சிட்டாம்ல, எங்க அப்பா பிரண்டு அங்கதாம்ல வேலை செய்றார், என்ன ஆச்சின்னு தெரிலடா, நாங்கெல்லாம் பயந்து இருக்கோம்டா..” என மருகன் சொன்னபொழுது சவுதியின் தென் எல்லையான தமாம் பக்கம் ஏதோ குண்டுவெடிப்பு என சாதாரண செய்தியாகத்தான் கடந்தோம்

ஆனால் விஷயம் பெரும் விளைவுகளை கொடுக்கின்றது

கச்சா எண்ணையினை காவேரியாக கொண்டால் அரோம்கோ எனப்படும் சவுதி அமெரிக்க எண்ணெய் ஆலையினை மேட்டூர் மற்றும் கிருஷ்ணராஜ சாகருக்கு ஒப்பிடலாம்

அவ்வளவு பெரும் எண்ணெய் வயல் அது, உலக எண்ணெய் உற்பத்தியின் 20% அளவு அதுதான் கொடுக்கும், அதில் சவுதி மன்னருக்கும் அமெரிக்காவுக்கு பங்கு உண்டு

சவுதி மன்னருக்கு பங்கு குறைவு அமெரிக்காவுக்கு அதிகம்

ஆயினும் சவுதிமன்னரின் 5% பங்கு மட்டும் சில டிரில்லியன் டாலர்கள் என்றால் அதன் மதிப்பினை நீங்களே கணக்கிட்டுகொள்ளுங்கள்

இன்றைய உலகின் தனிபெரும் குபேர கடாட்சம் அது

அது சவுதியின் தெற்கே அதாவது ஏமன் அருகில் அமைந்திருக்கின்றது, அது அமெரிக்காவின் ஏக போக பகுதி

உள்ளே சவுதியின் சட்டம் செல்லாது அமெரிக்கர்கள் ஜெப கூட்டம் நடத்துவது முதல் நற்செய்தி முழங்குவது வரை எல்லாமும் உண்டு என்பார்கள், குட்டி அமெரிக்கா

அருகில் இருக்கும் ஏமனில் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சிக்காரகள் உண்டு

சிரியாவில் அசாத் அரசு, லெபனானில் ஹிஸ்புல்லா , பாலஸ்தீனத்தில் ஹமால் போல ஏமனில் ஹவுத்தி

அந்த ஹவுத்தி அமெரிக்காவுக்கு இடம் கொடுத்த நாடு என்ற வகையில் சவுதியினை அடிக்கடி தாக்கும்

அமெரிக்கா பலவகை ஆயுதங்களை எல்லாம் கொடுத்து சவுதிக்கு கொம்பு சீவும்

இதுவரை அரோம்காவினை தாக்கினால் பதிலடி கடுமையாக இருக்கும் என நினைத்த ஹவுத்தி அதை விடுத்து ரியாத் போன்ற இடங்களை தாக்கியது

இப்பொழுது யுத்ததிற்கு தயார் என அறிவித்தார்களோ என்னமோ மிக சரியாக அடித்துவிட்டார்கள், அதுவும் ட்ரோன் தாக்குதல்

சவுதிக்கும் அமெரிக்காவுக்கும் இது புதிது என்பதால் கடும் அப்செட்டில் அதிர்ச்சியில் உற்பத்தி சில நாட்களுக்கு நிறுத்தம் என்கின்றார்கள்

உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் விவரம் வெளியிடபடவில்லை

இது பின்லேடன் முன்பு சொன்ன விஷயம், வளைகுடா போருக்கு முன் சவுதி அரசரை அரோம்காவினை கிளப்புங்கள் இல்லை இன்னொரு நாளில் அரேபிய சிங்கங்கள் அதை விரட்டுவார்கள் என அன்றே எச்சரித்தார்

அரோம்கோவின் உற்பத்தி நின்றது கச்சா எண்ணெய் உலகில் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்துகின்றது

எங்களுக்கு இல்லா எண்ணெய் வியாபாரத்தை அரேபியாவில் யாரும் செய்ய முடியாது என ஈரான் முன்பு மிரட்டியதும் குறிப்பிடதக்கது

இதில் ரஷ்யா வராது காரணம் எண்ணெய் விலை ஏறினால் அவர்களுக்கு மகா கொண்டாட்டம்

எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன் என்ற வகையில் இஸ்ரேல் சவுதியினை அரவணைத்து ஈரானை நொறுக்க ரகசியமாக கையினை உயர்த்துகின்றது

கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கபட்டிருக்கும் நிலையில் அமெரிக்காவின் அறிவிப்புத்தான் பிரதானம்

ஒன்றும் சிக்கல் இல்லை, அரோம்கோவின் உற்பத்தி மறுபடி தொடங்கும் வரை அமெரிக்காவின் அவசர நிலைக்காக சேகரிக்கபட்டிருக்கும் ரிசர்வில் இருந்து பல லட்சம் பேரல்களை அனுதினமும் சந்தையில் இறக்க தயார் என்கின்றது அமெரிக்கா

அமெரிக்காவில் எண்ணை உண்டு அது நிலத்தடியே பத்திரமாக இருக்கின்றது

அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் எண்ணெய் எல்லாம் அரேபிய எண்ணெய்

இனி அரேபிய எண்ணெய்யினை இவர்கள் விற்று காசாக்குவார்கள்

வல்லவன் வகுத்ததே வியாபாரம்

சரி இதை தொடர்ந்து ஹவுத்தி மற்றும் ஈரானின் மிரட்டலும் எதிர்கோஷ்டியில் அமெரிக்கா மற்றும் சவுதி கோபமும் ஒரு மாதிரி சூழலை ஏற்படுத்துகின்றன‌

செய்திகள் வர வர உங்களுக்கு தருகின்றோம்

ஒன்றின் தொடக்கம் அல்ல, அதன் போக்கும் முடிவுமே கவனிக்கதக்கது

ஒன்றின் தொடக்கம் அல்ல, அதன் போக்கும் முடிவுமே கவனிக்கதக்கது

அவ்வகையில் பெரும் தோல்வி இந்த அண்ணா என்பவருடையது, நிச்சயம் அது பெரும் தோல்வி

திராவிட நாடு என்பது இன்று சீமான் சொல்லும் இனவிடுதலை போன்றது

இன்று அங்கிள் சைமன் எந்த நிலையில் இருக்கின்றாரோ அன்று அந்த நிலையில்தான் அண்ணா இருந்தார், சீமானின் ஒரே பலம் அவரின் தொண்டை , அண்ணாவின் பலம் ஆங்கிலமும் தமிழும் தேனில் விஷம் தடவும் அந்த தன்மையும்

பெரியாருக்கு ஆங்கிலம் வராது, ஆனால் ரஷ்ய கம்யூனிஸ்டுகளின் கட்டுரைகளை படிக்க விரும்பினார், பெரியாரிடம் பணம் இருந்ததால் அதை வாங்கமுடிந்தது ஆனால் படிக்க முடியவில்லை

அண்ணா அங்குதான் புகுந்தார் பொதுவுடைக்கு பதில் திராவிடம், செஞ்சட்டைக்கு பதில் கருப்பு சட்டை, ரஷ்ய கத்தோலிக்க பீடத்த்துக்கு பதில் பிராமணியம்

அப்படியே ரோம் இடத்தில் காஞ்சிமடம் இந்த பீட்டர், மேரி இடங்களில் ராமன் கண்ணன் இந்த காஞ்சி விஷாலாட்சி எல்லாம் வைத்தால் திராவிட சித்தாந்தம் ரெடி

ஒரு நாளும் சொந்த புத்தியோ கோட்பாடோ அவர்களிடம் இல்லை

பெரியார் என்பவரிடம் அடிமையாக இருந்த கோஷ்டி மணியம்மை திருமணத்தை காட்டி ஓடிவந்தது, வந்தாலும் அதை சீண்டுவார் யாருமில்லை

இன்று நாம் தமிழர் தும்பிகள் இருப்பது போலத்தான் அன்று திமுக இருந்தது

அண்ணா அறிவாளி, சிந்தனையாளன் போராளி புண்ணாக்கு என்றால் லெனின், மாவோ, ஹோசிமின், காஸ்ட்ரோ போல மக்களை திரட்டியிருக்கலாம்

ஆனால் ஒரு தமிழனும் அவர்களை கண்டுகொள்ளவில்லை எனும் வலியில் சீனப்போர்தான் சாக்கு என திராவிட கொள்கையினை கைவிட்டனர்

சீமானின் இனவிடுதலை காலாவதியாகி பனங்கொட்டை நடுதலில் வந்து நிற்பது போல அவர்களின் திராவிட நாடு காற்றோடு கலந்தது

சிந்தனைவாதி அறிவாளி என புகழ்பட்ட அண்ணாவுக்கு சினிமாக்காரர்களின் அவதாரமே புகலிடமானது

ஆம் அரிதாரம் பூசிய கூத்தாடிகளிடம் அடைக்கலமானார் அண்ணா

இது உன் தகுதிக்கும் நம் போராட்டத்துக்கும் நல்லதல்ல என எச்சரித்து எனக்கு மானம் உண்டு, அறிவு உண்டு என தனியே சென்றார் சம்பத்

இரண்டும் இல்லா அண்ணா ராமசந்திரனை பகைக்க விரும்பாமல் இதயகனி என சொல்லிகொண்டிருந்தார்

அண்ணாவின் பெரும் பரிதாபம் இது, அவமானம் இது

அந்த ராமசந்திரனை சக நடிகன் சுட்டதை எல்லாம் ஏதோ இந்திக்காரனும் ஆரியனும் சுட்டது போல நாடகம் ஆடி மக்களை மயக்கி வாக்குகளை வாங்கி பதவிக்கும் வந்தார் அண்ணா

தமிழகத்துக்கு சனி பிடித்தது அப்பொழுதுதான்

பாம்பு கடித்தபின் அதை மயக்கும் வித்தை தெரிந்தாலும் பலனில்லை எனும் பழமொழி அண்ணாவிடம் உண்மையாயிற்று

அதன் பின் ராமசந்திரனை அவரால் அடக்க முடியவில்லை, அண்ணாவுக்கு பின் ராம்சந்திரன் பெரும் பிம்பமானார்

ஏன் அண்ணா பெறா வெற்றியினை ராம்சந்தர் பெற்றார் அவருக்கு பின் ஜெயா பெற்றார்

அண்ணாவின் சித்தாந்தம் வென்றிருந்தால் இங்கு கலைஞர் கருணாநிதிதான் அசைக்கமுடியா சக்தியாக இருந்திருக்க வேண்டும்

ஆனால் உண்மையில் இங்கு வென்றது அண்ணாவின் சித்தாந்தம் அல்ல மாறாக அண்ணா உருவாக்கிய சினிமா பூதம்

இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுவது சினிமா, அதில் இல்லா திராவிடத்தை இருப்பதாக காட்டி ராம்சந்திரனை உருவாக்கி தமிழகத்தை தீரா இருளில் தள்ளினார் அண்ணா

கவனியுங்கள் அண்ணாவுக்கு பின் வந்த முதல்வர் எல்லாம் சினிமா கோஷ்டி, இப்பொழுதுதான் சினிமாக்காரர் அல்லா பழனிச்சாமி வந்திருக்கின்றார்

திமுக நிலை மகா மோசம்

அது ஆட்சிக்கு வர ரஜினி எனும் சினிமாக்காரன் தேவைபட்டான், அதன் பின் விஜய்காந்த் தேவைபட்டான் அவன் வரவில்லை திமுக ஆட்சி பக்கம் வரவே இல்லை

ஆக அண்ணா என்ன உருவாக்கினார் என்றால் ஒன்றுமே இல்லை

லிங்கன், கென்னடி, புஷ் என வந்த அமெரிக்கா இன்று வல்லரசு

சன்யாட்சன், மாவோ, டெங் இன்று ஜின்பிங்க் என வந்த சீனா இன்று வல்லரசு

லெனின், ஸ்டாலின் ,குருச்சேவ், புட்டீன் என ரஷ்யா வல்லரசு

ஆனால் இங்கு என்ன வரிசை தெரியுமா?

அண்ணா, கலைஞர், ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்

அண்ணா, ராம்சந்தர், ஜெயா, பன்னீர், பழனிச்சாமி

ஆக அண்ணா அந்நாளைய சீமான் என்பதை வரலாறு எக்காலமும் சொல்லிகொண்டே இருக்கும்

அண்ணா ஒரு வெற்று பேனர், ஆனால் சரியாக கட்டிவைத்து பிம்பம் காட்டினார்கள்

ஆனால் காலம் அந்த கயிறை அவிழ்ந்துவிட்டது, அந்த பேனர் சரிந்துகொண்டிருக்கின்றது

ஒரு தீபம் ஓராயிரம் தீபங்களை ஏற்றும்

ஒரு வீரன் பல்லாயிரம் வீரர்களை உருவாக்குவான்,

ஒரு சிந்தனையாளன் நல்ல சிந்தனை தலைமுறையினை உருவாக்குவான்

ஒரு போராளி பெரும் போராளி தலைமுறையினை உருவாக்குவான்

அவ்வை சன்முகம் கூட சிவாஜி, ராதா, கமலஹாசன் என நல்ல நடிப்பு தலைமுறையினை உருவாக்கினார், பால சந்தர் கூட அப்படியே

ஆக‌ திமுக அதிமுக என பெரும் காமெடி கோஷ்டியினை உருவாக்கிய அண்ணா எவ்வளவு பெரும் காமெடியனாக இருந்திருக்க முடியும்?

இது ஒருவகை தந்திரம்

“தோல்வி மனிதனுக்கு வெறியூட்டும், வெறியில் மதிமாறும் அந்நேரம் எதிரி இடம் கண்டு அடிப்பான், வெறி மேலும் ஓங்கி மதிகெட்டு அறிவுகெட்டு அவன் படுகுழுயில் வீழ்வான்”

இது ஒருவகை தந்திரம், மகாபாரத சகுனி இதைத்தான் செய்ததாக சொல்கின்றான் கண்ணன்

இந்த இடத்தில் துரியோதனன் நம் இம்ரான்கான், சகுனி யாரென்றால் ரஷ்யா

காஷ்மிர் கைவிட்டு போனபொழுது அமெரிக்கா காட்டிய அமைதி, தாலிபான்களோடு தன்னைவிட்டு அமெரிக்கா மட்டும் பேசியது என ஏக கடுப்பில் இருக்கும் பாகிஸ்தானை ரஷ்யா சீண்டியது

ரஷ்ய பத்திரிகை இம்ரான் கானை பேட்டி கண்டு லேசாக கொக்கி போட்டது, அவ்வளவுதான் மனிதர் கொட்டிவிட்டார் “ரஷ்யாவுக்கு எதிராக தாலிபன்களை உருவாக்கியது அமெரிக்கா, பாகிஸ்தான் அதற்கு ஆதரவளித்தது நாங்கள் இருவருமே சேர்ந்து ஆப்கனை நாசமாக்கினோம், எல்லாம் அமெரிக்கா தொடங்கி வைத்த அழிவு” என மனிதர் வாக்கு மூலமே கொடுத்துவிட்டார்

இது உலக அரங்கில் பலத்த அதிர்ச்சியினை கொடுத்திருகின்றது

இந்த பாகிஸ்தானுக்கும் அமெரிக்க்காவுக்குமான கள்ள உறவு தெரியாததல்ல எல்லோருக்கும் தெரியும் ஆனால் மறைப்பார்கள்

முதல் முறையாக அண்ணா பாணியில் நான் பத்தினி அல்ல அமெரிக்கா யோக்கியனும் அல்ல என சொல்லியிருகின்றது பாகிஸ்தான்

விவகாரத்தை கவனித்த அமெரிக்கா பதில் ஏதும் சொல்லவில்லை

மற்ற நாடுகள் வாயில் கைவைத்து கவுண்டமணி பாணியில் சிரிக்கின்றது

ரஷ்யா ஒரு காலத்தில் எந்த பாகிஸ்தானும் அமெரிக்காவும் ஆப்கன் மண்ணில் இருந்து தங்களை விரட்டியதோ அதே பாகிஸ்தான் பிரதமர் வாயில் இருந்து பாவமன்னிப்பு கேட்டதில் கடும் சந்தோஷத்தில் இருக்கின்றது

இன்சினியர் தினம்

சர்.விஸ்வேசரய்யாவின் பிறந்தநாள்.

இவரின் பிறந்த நாள்தான் இன்றுவரை இந்தியாவின் “இன்சினியர் தினம்”, வருங்காலத்தில் ராமேஸ்வரத்தில் ராமர்பாலம் கட்ட தொடங்கிய நாள் தெரிந்தால் இந்த நாள் மாற்றபடலாம்.

நல்லவேளையாக வால்மீகி அந்த நாள்,நட்சத்திரத்தினை குறித்துவைக்காமல் விட்டதால், இனி விஸ்வேசரயாவின் பிறந்தநாளுக்கு ஆபத்து இல்லை. ஆனால் இந்தியாவின் புகழ்மிக்க அணைகள்,தொழிற்சாலைகள் என சகலமும் கட்டியவர்.

காவேரி பிரச்சினைக்கு மிக அபாயகரமான திருப்பம் இவர் கொடுத்தது, அதாவது அது அருமையான திட்டம்தான், ஆனால் தமிழக போலி அரசியல்வாதிகளால் அது இன்று குப்புறகிடப்பது வேறுவிஷயம்.

பெரும் சிக்கல்கள் போராட்டம் என்றாலும் இன்னும் காவேரி சிக்கல் தீர்ந்தபாடில்லை , தமிழகத்திற்கு இது
மாபெரும் அநீதி, பெரும் அக்கிரமம். ஆனால் இது ஒரு நாளில் தொடங்கிய பிரச்சினை அல்ல, வரலாறு பெரிது.

அகத்தியர் முனிவர் காலத்திலிருந்தே தமிழ்நாட்டை வளப்படுத்தியது காவேரி, சந்தேகமே இல்லாமல் சொல்லலாம், தென்னிந்தியாவின் மிக முக்கியமான நதி, அதுவும் தமிழகத்திற்கு 4000 ஆண்டுகளாக தாங்கி நிற்கும் ஆணிவேர்.

தமிழரும் கல்லணை என மிக அற்புதமான அமைப்பினை அமைத்து டெல்டா பகுதிகளை உருவாக்கினர், கல்லணை அமையாவிட்டால் தஞ்சாவூரும் இல்லை (மீத்தேனுக்கு பிரச்சினையே இல்லை), அது ராமநாதபுரத்தின் தொடர்ச்சியாக வறண்ட பகுதியாய் அமைந்திருக்கும், அப்பக்கம் வீராணம் ஏரியுமில்லை (ஊழலுமில்லை),

மொத்ததில் கல்லணை அமையாவிட்டால் டெல்டா ஒரு நேர்கோடு இருந்திருக்கும்.

இவ்வாறாக தமிழகத்தை செழிக்க செய்த காவேரியில் முதல் பிரச்சினை சாளுக்கிய மன்னர்கள் வடிவில் வந்தது, அதுவும் சோழர்களுக்கும் அவர்களுக்கும் வந்த தகறாறு, ஆனாலும் சோழர்கள் உச்சத்தில் இருந்த நேரம், சாளுக்கியரை அடக்கி காவேரியை மீட்டார்கள்.

அதன்பின் 700 வருடங்களுக்கு பிரச்சினை இல்லை, அங்கு விஜயநகரபேரரசு உதயமாகி, மொகலாயரையே விரட்டும் அளவிற்கு வலுவானபோதும் காவேரியில் கைவைக்கவில்லை, காரணம் எந்த அவசியமும் இல்லை.

பின்னாளில் நாயக்கர் தமிழகம் வர அதில் பிரச்சினை வர வாய்ப்பே இல்லாமல் ஆயிற்று. வைகை கரை,காவேரிகரை எல்லாமே நாயகர்கள்.மைசூரிலும் நாயக்கர்கள் ஒரு பிரச்சினையும் இல்லை.

கவனியுங்கள், மைசூரிலிருந்து வந்து மதுரையிலும், தஞ்சாவூரிலும் சம்மணம் போட்டு அமர்ந்துகொண்டார்கள் என்றால், நாம் இங்கு உருவாக்கி வைத்திருந்த நன்செய் நிலங்கள் அப்படி, மைசூர் பக்கம் அன்றெல்லாம் ஒன்றுமில்லை.

மதுரை நாயக்கருக்கும், தஞ்சாவூர் நாயக்கருக்கும் வாரிசுசண்டை ஆரம்பித்தபொழுது, தஞ்சாவூர் நாயக்கர்களுக்கு ஆதரவாய் சிவசேனை வந்தது, சிவசேனா என்பது பால்தாக்கரே அல்ல, மாமன்னன் சிவாஜியின் உறவினர் படை. காரணம் அவர்கள் வராவிட்டால் பிஜப்பூர் சுல்தான் தஞ்சாவூரில் அமர்ந்திருப்பார்.

இப்படியாக மராட்டியர் தஞ்சையை பிடித்ததும் , கொஞ்சம் உரசல் உருவாயிற்று. அது பின்னாளில் மைசூர் சமஸ்தானம் (அது திண்டுக்கல் வரை இருந்தது) சோழமண்டல மராட்டியர் பிரச்சினை என உருவாயிற்று.

விளைந்தால் பிரச்சினை இல்லை, ஆனால் வெள்ளத்தால் அழிந்தால் அதற்கு மைசூர் அரசு தண்ணீரை அழிப்பதற்காகவே அனுப்புகின்றது என சில சர்ச்சைகள் எழுந்தன, ஆடிமழையில் அந்த தண்ணீரை எங்கு வைப்பது என அவர்களுக்கும் தெரியவில்லை, இவ்வளவிற்கும் கொஞ்சம் விவசாயம் தொடங்கி மைசூர் சமஸ்தானம் பொருளாதாரம் உயர்ந்த நேரம்.

எப்படியோ இனி தஞ்சையில் வெள்ளத்தில் பயிர்கள் அழிந்தால் அதற்கு மைசூர் சமஸ்தானம் பொறுப்பு என ஒரு கருத்து உருவானது, மைசூர் மன்னர் நஷ்டஈடு தரவேண்டும் என்றெல்லாம் குரல்கள் வந்தன, அக்கால மைசூர் உடையார்களும் சில நேரங்களில் நெல்லாகவோ, விதை நெல்லாகவோ,பணமாகவோ கொடுக்க ஆரம்பித்தார்கள்.
இந்நிலையில் ஆங்கிலேயர் தஞ்சையை ஆளுகைக்குள் கொண்டுவந்தனர், மைசூர் சமஸ்தானம் அடங்க மறுத்தது, பழைய பிரச்சினையை பெரும் பிரச்சினையாக உருவாக்கினர் ஆங்கிலேயர்.

தஞ்சாவூரில் வெள்ளத்திற்கு மைசூர் அரசு நஷ்ட ஈடுகொடுக்கவேண்டும் என வாங்கியே கொடுத்தனர், தஞ்சை மக்களுக்கும் பொம்மை சாம்போஜிக்கும் ஏக மகிழ்ச்சி, விட்டால் பிரகதீஸ்வரர் ஆலயம் பக்கம் வெள்ளையருக்க்கு ஆலயமே எழுப்பியிருப்பர், ஏனோ செய்யவில்லை.

ஹைதர் அலி இதனை கண்டித்தார், திப்பு சுல்தான் இந்த இழப்பீட்டை கொடுக்க மறுத்தார். காவேரி பொதுவான நதி, வெள்ளம் என்பதை நாங்கள் என்ன செய்யமுடியும்? என மறுத்தார். ஆனாலும் திப்பு நஷட ஈடு கொடுத்தே ஆகவேண்டும் என பொங்கியபொழுது ஆத்திரபட்ட திப்பு படையினர் சில இடங்களில் தமிழக மதகுகளை சேதபடுத்தினர்.

அது இந்துகிராமங்களை திப்பு தாக்குகின்றார் என வெள்ளையரால் விபரீதமாக பரப்பபட்டன, திப்பு சுல்தான் ஒரு பெருந்தன்மையான மாவீரன், மைசூரின் ஒப்பற்ற புலி. வரலாற்று பெருந்தகையாளன்.

இப்படி இல்லாத பொய் எல்லாம் கூறி திப்புவை இந்து எதிரியாக்கி தனிமையாக்கி அழித்தனர் பிரிட்டிசார், பின் மைசூருக்கு உடையார் அரசன் ஆனார். யார் ஆண்டால் என்ன?, பின்புலம் பிரிட்டிசார்.

அப்பொழுதும் தஞ்சையில் வெள்ளமென்றால் மைசூர் பணம் கொடுக்கவேண்டும், இது மைசூர் மன்னருக்கு பெரும் தலைவலியாயிற்று.

“இது காவேரி ஆறு, அதுவும் 4 ஆறுகள் கூட சேர்ந்து தமிழ்கம் செல்கிறது, அங்கும் பவானி,அமராவதி,நொய்யல் என எல்லாம் கலந்துதான் திருச்சி வருகின்றது, அங்கு அழிவென்றால் நான் பணம் கொடுக்கவேண்டுமாம்?

முப்போகம் விளைந்தால் நமக்கா தருகின்றார்கள்?”
செயலற்ற நிலையில் கேட்டதை கொடுத்துவிட்டு அந்தபுரத்தில் அழுதுகொண்டிருந்த மன்னருக்கு, 1895ல் ஒரு இளைஞன் வேலைக்கு வந்தான்.

அப்பொழுதே சிவில் இன்சினியரிங் முடித்திருந்த பிராமண இளைஞன், பெரும் அறிவாளி, கட்டடகலை நிபுணர், எல்லாவற்றிற்கும் மேல் பெரும் நிர்வாகி.

“தனது வேலையில் கருத்தாக இருப்பவன், அரசனோடு பந்திக்கு அமர்வான்” என்பது யூதமொழி, அவனும் அப்படித்தான் விரைவில் திவான் ஆனார்.

மைசூர் சமஸ்தானம் தஞ்சாவூருக்கு வெள்ளநிவாரண நிதிகொடுத்து அழுதுகொண்டிருக்கும் பொழுது அவன் நிதானமாக திட்டமிட்டான்.

வீணாக செல்லும் நீருக்கு தஞ்சை மக்களுக்கு கப்பம் கட்டுவதை விட, நாமே அணைகட்டி விவசாயத்தை பெருக்கினால் என்ன?, அதுவரை அப்படி ஒரு திட்டம் மைசூருக்கு இல்லை, அவரை வினோதமான பார்த்தமன்னன் கேட்டார்? அது சாத்தியமா?

எனக்கு சாத்தியம் இல்லை என்றால் எவனுக்கும் சாத்தியமில்லை என்றான் அந்த இளைஞன்.

காவேரி பெரும் ஆறு ஆனால் அதோடு ஹேமாவதி,சிம்சா,அக்ராவதி,கபினி என பல சிற்றாறுகள் (நம்பியாறு போல) கலந்துதான் வெள்ளம் தமிழகம் செல்லும், முதலில் நாம் காவேரி குறுக்கே அணைகட்டினால் பாதிவெள்ளம் குறையும், அதாவது நஷ்டஈடு குறையும்.

அற்புதமான யோசனை சொன்ன இளைஞனை நம்பிக்கையாய் பார்த்தது மைசூர், அந்த இளைஞர் விஸ்வேசுவர அய்யர்.

கன்னடத்தின் அப்துல்கலாம் அல்லது லி குவான் யூ அவரின் அறிவுகூர்மையும், செயல்திறனும் அப்படி.

அற்புதமாக கட்டிகொடுத்த அணை கிருஷ்ணராஜ சாகர், மீதி நீர் தஞ்சை மக்களை அழிக்காமல் இருக்க வெள்ளையர் கட்டியது மேட்டூர் அணை.

அணைகட்டிவிட்டால் போதுமா? அந்த நீரை எப்படி விவசாயமாக்குவது, எப்படி தடுப்பணை கட்டுவது, உற்பத்தியை பெருக்குவது எப்படி என பெரும் அகராதி வகுத்தார் விஸ்வேசரையர்.

அவர் கொடுத்த அடித்தளத்தில்தான் மைசூர் விவசாயத்தில் செழித்தது, கர்நாடக பொன்னி, மைசூர் பருப்பு , இன்று தமிழகத்தை தாங்கும் காய்கறிகள் என கன்னடம் கொட்டி முழக்குகின்றது என்றால் அதற்கு காரணம் அவர்தான்.
முத்துபடத்தில் ரஜினி குதிரைவண்டியோடு பசுமைவயல்கள் வழியே மணிக்கணக்கில் செல்வாரல்லவா? அந்த பசும் வயல்கள் அவரின் உருவாக்கம்.

இன்று கன்னடத்தில் சிறிதும் பெரிதுமாக காணப்படும் 28 அணைகளுக்கும் அவரே முன்னோடி. கட்டடகலை அவருக்கு கைவந்தது,

கன்னட அடையாளமான விதான சவுதா, இன்னும் பல ஆலைகள் எல்லாம அவரின் டிசைன்.

அன்று மிகசிறிய ஊரான பெங்களூர் இன்று உலகின் முன்னனி நகரம் என்றால் அதற்கு அய்யரும் ஒரு காரணம். இந்தியாவின் ஒப்பற்ற இன்சினியரான அவரின் பிறந்தநாள்தான் இந்தியாவில் “இஞ்சினியர் தினம்”

இந்தியாவின் மிக சிறந்த கட்டட பொறியாளரில் அவரும் ஒருவர், ஐதரபாத் வெள்ளதடுப்பிற்கு அவர் போட்டு கொடுத்த திட்டம் இன்றும் பயன்படுகின்றது

பெரும் தொழிற்சாலைகளுக்கான நிர்மாணத்தை எல்லாம் அவர்தான் இந்தியாவில் செய்தார். மறக்க முடியா மாமனிதர் அந்த விஸ்வேசரய்யர்.

கிருஷ்ணராஜ சாகருக்கு முன்பே பிரிட்டிசாரோடு சேர்ந்து நிறைய அணைகட்டிய சாதனைகளை அவர் செய்திருக்கின்றார். நவீன‌ இந்திய அணைகட்டுகளின் பிதா மகன் அவர்.

அந்த அறிவாளியினை மிக சரியாக பயன்படுத்திகொண்டது கர்நாடகம், பின்னாளைய கன்னட எழுச்சிக்கு அவர் மிக பெரும் அடித்தளம் அமைத்தும் கொடுத்தார்.

தமிழகத்திற்கு அப்படி யாரும் கிடைக்காமலே போனதுதான் பெரும் சோகம், அதுவும் பின்னாளில் அய்யர்களுக்கு ஆகாத மாநிலமாகவே அறியபட்டது தமிழகம், பின் எங்கிருந்து வருவார்கள்?

ஆனால் அப்படி ஒரு அறிவாளி வராமல் இனி உருப்படாது தமிழகம்.

பொறியியல் கல்லூரி நிறைந்திருக்கும் தமிழகத்தில் இப்படி ஒரு தினம் இருப்பது தெரியுமா? கொண்டாடுவார்களா என்றால் கொண்டாட மாட்டார்கள்.

அதற்கு ஆயிரம் காரணங்கள். எப்படியாயினும் விஸ்வேஸரய்யர் இந்திய வரலாற்றில் முக்கியமான ஒருவர் என்பதில் சந்தேகமேயில்லை.

இந்த பொறியாளர் தினத்தில் சென்னையின் புகழ்பெற்ற பொறியாளரும் பெரும் கட்டங்களை கட்டியவருமான முன்னாள் நண்பரும் இந்நாள் எதிரியுமான Kennedi என்பவருக்கு ஸ்பெஷல் வாழ்த்து

கையில் துப்பாக்கியுடன் “டேய் சங்கி உன்னை சுடாமல் விடமாட்டேன்..” என அவர் விரட்டி கொண்டிருப்பதால் ஒளிந்திருந்து பொறியாளர் தின வாழ்த்துக்களை மட்டும் தெரிவித்து கொள்ள‌லாம்

விஸ்வேசர்ய்யாவின் பிறந்த நாளில் கன்னட அணையும் விதான சவுதாவும் இன்னும் பல ஆலைகளும் பாலங்களும் நினைவுக்கு வரும்

அப்பொழுது உடைந்துவிழும் சென்னை விமான நிலையம், வெறும் சாரல் மழைக்கு இடியும் பாலம், திடீரென சரிந்துவிழும் பேருந்து நிலையம் போன்ற தமிழக காட்சிகள் உங்கள் நினைவுக்கு வரவே கூடாது

இது திராவிட பகுத்தறிவு மண் இப்படித்தான் இருக்கும், அதாவது அவை கட்டபடும் பொழுது இது பெரியார் அண்ணா கலைஞர் மண் என்பதால் அது கொஞ்சம் கூடுதலாக சிமெண்டில் கலந்து கட்டபட்டு கட்டங்கள் உறுதி இல்லாமல் ஆகிவிடுகின்றன , இடிகின்றன வேறொன்றுமில்லை

பெரியார் மண் அப்படி..

பெங்களூரும் இன்னும் கன்னட நகரங்களும் வளரும் மாண்டியாவும் இன்னும் பலவும் செழிக்கும், காரணம் அது பெரும் அறிவாளி விஸ்வேஸ்ரய்யாவும் அவனுக்கு முன்பே கடவுள் உண்டு என சொல்லி சீர்திருத்தங்களை செய்ய்த பசவய்யாவும் காரணம்

தமிழ்நாடு இன்னும் நாசமாகும் காரணம் இங்கு ஏகபட்ட அழிச்ச்சாட்டியங்களை செய்த, கோவிலை சுத்தபடுத்துவதற்கு பதிலாக இடித்து போட்ட பெரியார் அண்ணா கோஷ்டிகள் உள்ள மண் இது

விஸ்வேஸ்சய்யா சிற்பி அவன் மிக கவனமாக செதுக்கினான்

இது கடப்பாரை கோஷ்டி எல்லாவற்றையும் அழிக்க இவர்களுக்கு தெரியுமே தவிர உருப்படியாய் ஒன்றையும் உருவாக்க தெரியாது, தெரியவே தெரியாது

“ஒரு யோகியின் சுயசரிதை”

இந்து மதத்தின் சிறப்பினை மிக நுட்பமாக அழகாக சொல்லும் புத்தமாக “ஒரு யோகியின் சுயசரிதை” புத்தகம் பிரமாதம் என்கின்றார்கள்

அதன் தமிழாக்கம் கிடைக்குமா? எமக்கு படிக்க வாய்பளிக்க முடியுமா?

யாராயினும் எமக்கு அந்த உதவியினை யாரும் செய்தால் மிக்க நன்றியுடவனாக இருப்போம்.