கப்போஸ்தலரான சைமன் எழுதிய சுவிஷேஷம் : அதிகாரம் 3

கப்போஸ்தலரான சைமன் எழுதிய சுவிஷேஷம் : அதிகாரம் 3

அவ்வேளை அவரது சீடர்களோ வடகீழ் தேசத்தின் எல்லையுள் வாழும் பன்னிரு வயது கடந்த எல்லா குழந்தைகளையும் தம் சேனைகளில் சேர்ப்பித்து அவர்களுக்கு நச்சுக்குப்பிகளை பரிசாகக் கொடுத்தனர். அவற்றை அவர்களின் கழுத்தில் அணிவித்து பரமபிதா சந்தோசம் அடைந்தார்.

அச்சேனைகளில் இருந்து ஸ்திரீகளை மட்டும் தேர்ந்தெடுத்து இராப்போசன விருந்தளித்து அவர்களை குண்டுகாவிகளாக மாற்றி மகிழ்வது பரமபிதாவின் முக்கிய கடமைகளில் ஒன்றாகிற்று.

அந்த ஸ்திரீகளும் பரமபிதாவுடன் விருந்துண்ணும் பாக்கியம் பெற்றதை எண்ணி குதூகலித்தனர். தங்கள் பாவங்கள் எல்லாம் பரமபிதாவின் ஜீவ இரத்தத்தால் கழுவப்பட்டுவிட்டதாக எண்ணி சந்தோசித்தனர்.

அவ்வேளை பரமபிதா அவர்களை நோக்கி ஒரு கேள்வி கேட்பார். நீங்கள் மௌனமாய் இருப்பதென்ன, மக்களுக்காக மரிக்க உங்களுக்கு சம்மதம்தானே? உங்களுக்கான இடம் பரலோக இராட்சியத்தில் ஒதுக்கப்பட்டிருக்கின்றது என்பார்.

அதற்கு பிரதியுத்தரமாக அவர்களும் ஆம் பரமபிதாவே உமது சித்தம் பரமண்டலங்களில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக என்பர். அதன் பின்னர் அந்த குண்டுகாவி ஸ்திரீகள் தென் தேசத்து ராஜாவுக்காகிலும், மந்திரிகளுக்காகிலும் சில வேளைகளில் அன்னிய தேசத்து ராஜாக்களை நோக்கியும் புறப்பட்டுப் போவார்கள்.

இப்படி தென்தேசத்தில் பலரையும், பிற தேசத்தின் ராஜா ஒருவரையும் பரமபிதா கொன்று போட்டார்.

இப்படியே அவரது சேனைகள் சர்வவல்லமை பொருந்தியதாக மாறியதை எண்ணி பரமபிதா அகமகிழ்ந்தார். புறசமயத்து ஆலயங்களுக்குள் நுழைந்து நூற்றுக்கணக்கானோரை வெட்டிக்கொல்லவும் பரமபிதா துணிந்தார்.

வடதேசத்தில் இருந்து ஒரு லட்சம் புறசமய ஜனங்களை தென்திசை நோக்கி துரத்திவிடுமாறும் பரமபிதா கட்டளையிட்டார். ஆனால் சேனைகளோ, சேனைகளின் மேய்பர்களோ கூட பரமபிதாவை நேரடியாக காண்பது அருகிக்கொண்டே வந்தது. அவர் அனேகமாக ஆவியானவராகவே இருந்தார்.

வருடம் ஒருமுறை மட்டும் அவர் முன்அறிவித்ததைப் போலவே தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்களை பொதுஜனங்களுக்கு வெளிப்படுத்தும் எண்ணத்தில் அவர் காட்சியளிப்பார். அப்போது அவரது சீடர்கள் பரமபிதா மக்கள் முன் தோன்றினார் எனச் சொல்லி மகிழ்ச்சியில் துள்ளிக்குதிப்பார்கள்.

புறதேசத்து ராஜாவினை கொன்றவகையில் பரமபிதாவுக்கு அந்நாட்டு ராஜா தடைவிதித்திருந்தான், பரமபிதாவோ ஆண்டுக்கு ஒருமுறை தடையினை நீக்க மன்றாடுவார், பரமபிதாவினை விசுவசிக்கும் அந்நாட்டு சீட கோடிகளும் அந்நாளில் உருண்டு புரண்டு அழுது மன்றாடும்

ஆனால் அத்தேசத்து ராஜாக்கள் கண்டுகொள்ளவில்லை, பரமபிதா தன் தேசத்தில் தன் பரிபாலனைகளை செய்துகொண்டிருந்தார், யாரையாவது கொல்வதும் சிதறடிக்க வைப்பதுமாக அவரின் பரிபூரண ஆட்சி நடந்துகொண்டிருந்தது

பரமபிதாவின் பராக்கிரமத்தை கேள்விபட்ட புற தேசத்து நாடக கோஷ்டிகள் வந்து பரமபிதா மாளிகையினையும் அவரின் ஆமைகறி விருந்தையும் சிறப்பித்தார்கள், அவைகளை ஏடுகளில் எழுதிவைத்து புகழ்ந்தும் கொண்டார்கள்

பரமபிதாவின் முதன்மைச் சீடர்களின் ஒருவன் ஆறாயிரம் பேரைக்கொண்ட பெரும்சேனைக்கு அதிபதியாய் இருந்தான். கீழ்த் திசை தேசத்தில் அதிபதியாய் இருந்த அந்த சீடன் மீது பரமபிதாவுக்கு சந்தேகம் உண்டாயிற்று. அச்சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டு மற்றய தமது சீடர்களில் இருவரைத் தேர்ந்தெடுத்து கீழ்த்திசை சென்று வருமாறு பரமபிதா கட்டளையிட்டார்.

அவர்களும் அப்படியே சென்று அந்த முதன்மைச் சீடனையும், கீழ்த்திசை நிலவரங்களையும் கண்காணித்து திரும்பினர். நீண்ட பயணத்தின் இறுதியில் அம்முதன்மைச் சீடன் பற்றிய துர்ச்செய்தியுடன் பரமபிதாவின் முன் முழந்தாள் இட்டு பணிந்து அந்த முதன்மைச் சீடனுக்கு விரோதமாக சாட்சி சொன்னார்கள்.

“ஆறாயிரம் பேரடங்கிய அவனிடம் இருக்கும் சேனைகள், பரமபிதாவாகிய உமக்கன்றி அவன் மீதே விசுவாம் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமன்றி, அவனது சேனைகளுக்கு வஸ்திரங்களோ, போஜன பானங்களோ எவ்வித குறைவுமின்றி அவன் காத்துவருகின்றான்.

கிழக்கில் அவன் விளைவித்திருக்கும் பழத்தோட்டங்களும், தானியங்களும் எண்ணற்றவையாக உள்ளன. எம்மிடம் அப்படி ஏதுமே இல்லை. மேலும் அவற்றிக்கான எந்தவொரு வரவுசெலவு கணக்குகளையும் பரமபிதாவாகிய உம்மிடம் அவன் சமர்ப்பிப்பதேயில்லை. இவையெல்லாம் உமக்கு விரோதமான செயல்கள் அன்றி வேறென்ன?”

பரமபிதா ஆழ்ந்து யோசித்தார். அதன் பின்னர் அந்த கீழ்த்திசை சீடனுக்கு அவசரமாக ஒரு கட்டளை அனுப்பினார். அவனது சேனைகளில் பெரும்பகுதியை வடக்கு தேசம் நோக்கி பாளயம் இறக்குமாறும், அவனது பொக்கிஸங்கள் பற்றிய விபரங்களை தமது காலடிகளுக்கு வந்து ஒப்புக்கொடுக்குமாறும் அவனுக்கு கட்டளையிடப்பட்டது.

தந்திரம் கொண்டவனான முதன்மைச்சீடன் சுதாகரித்துக்கொண்டான். பரமபிதாவின் இராட்சியத்துக்கு விரோதமாக பகிரங்கமாகவே தன் கருத்துக்களை வெளிப்படுத்த தொடங்கினான். அந்த கீழ்த்திசை வீரனின் கீழ் மூவாயிரம் பெண் சேனைகளுக்கு அதிபதியாக இருந்த பெண் ஒருத்தியும் கீழ்த்திசை வீரனுடன் சேர்ந்து பரமபிதாவுக்கு எதிராக கலகம் பண்ணினாள்.

பரமபிதாவின் சுரூபங்களை தெருக்களில் போட்டு எரிக்குமாறு பொதுஜனங்களைத் தூண்டினாள். இதை கேள்வியுற்ற பரமபிதா மூச்சுத்திணறினார். அந்த கீழ்த்திசை வீரன் சாத்தானின் வார்த்தைகளால் விழுங்கப்பட்டு விட்டதாகவும், அசுத்த ஆவி அவனைப் பீடித்திருப்பதாகவும் பரமபிதா பிரசங்கித்தார்.

அந்த பெண்சேனைகளின் தலைவியும் அவனுடன் சேர்ந்துகொண்டு வேசித்தனம் பண்ணினாள் என்றார். பரமபிதாவின் கோபம் அக்கினியாய் இறங்கிற்று.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s