வீரப்பனின் வாழ்வு அதனைத்தான் சொல்கின்றது

அன்று பெங்களூர் மிக மிக பரபரப்பாக இருந்தது, காரணம் மாநில சட்ட ஒழுங்கு பிரச்சினையை காக்கும் பொறுப்பு கூடுதலாக மத்திய அரசின் படைகளும் குவிக்கபட்டிருந்தன, காரணம் 1986ம் ஆண்டின் சார்க மாநாடு பெங்களூரில் நடைபெற்றது, சிங்களர்களின் “ராஜகுரு ஜெயவர்த்தனே” வருகிறார், புலிகளின் தலைவர் பிரபாகரன் சென்னையில் இருக்கிறார், எப்படி இருக்கும் நிலமை?

(அடுத்த 5 ஆண்டுகளில் ராஜிவ் கொல்லபட்டபோது பெங்களூரில் குவிந்திருந்த புலிகள் ஏராளம், அந்த அளவிற்கு புலிகள் ஒரு அடைக்கல நகரமாக அதனை மாற்றி இருந்தார்கள்)

காவல்துறையில் அந்த தீவிரபரபரப்பில் ஒரு கைதி கர்நாடக சிறையில் இருந்து தப்புகிறார், அவரைபற்றி அன்று அதிகம் யாருக்கும் தெரியாது, கன்னட எல்லையில் ஒரு கொலைகுற்றவாளி அவ்வளவுதான், ஆனால் அடுத்த 18 ஆண்டுகளுக்கு அவர்தான் மூன்று மாநிலங்களை ஆட்டுவித்தவர், பல கடத்தல்களில் ஈடுபட்டாலும் சந்தண கடத்தல் எனும் பட்டம் மட்டும் வீரப்பனுக்கு நிலைத்துவிட்டது.

இன்றும் அது தமிழகத்தின் மிக பின் தங்கிய பகுதி, ஆனால் இயற்கை செல்வம் குவிந்திருக்கும் மலைபகுதி, அங்கு மாடுமேய்த்த சாதாரண சிறுவன் தான் வீரப்பன், மலையூர் மம்பெட்டியானின் தீவிர ரசிகராகிரார், மாடுமேய்க்கும் கானகத்தில் சால்வை கவுண்டர் என்பவரால் தான் வேட்டைக்கு பழக்கபடுகின்றார்,

பெரிய படிப்பில்லை, துப்பாக்கி தோட்டாவோ அல்லது யானை தந்தமோ எண்ணித்தான் எண்ணவே கற்றுகொண்டார்.

யானை வேட்டைதான் அவரது விருப்பமான தொழில், ஆனால் சந்தண கட்டைகளின் மதிப்பு தெரியவருகிறது, அது ஒரு வரமான மலைபகுதி, உலகில் எங்கும் கிடைக்காத சந்தணம்,

ஒரு காலத்தில் மாமன்னன் சாலமோன் கூட சந்தணம் கிடைக்க ஆளனுப்பிய இடம்.

தென்னிந்தியாவின் இரு பெரும் அடையாளங்கள் மிளகும்,சந்தணமும். உலகில் எங்கும் விளையாத அல்லது விளைவிக்க முடியாத பொருள்கள் அவை, நமக்கு அது ஒரு வரம்.

வீரப்பன் சந்தண கடத்தல்காரராகிறார் கிட்டதட்ட 300 ஆட்களுடன் அவரது “சந்தண தொழிற்சாலை” அமோகமாக நடக்கின்றது.

வன அலுவலர்கள் அதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தொடங்கிய காலத்தில் வீரப்பன் பெரும் கொலைகாரனாகிறார். வன அதிகாரி சிதம்பரம்,சீனிவாஸ் என அவ்விருவரும் கொல்லபட்டவிதம் தென்னகத்தை உலுக்கியது, தொடர்ந்து அவர் செய்த போலீஸ்மீதான தாக்குதலில் 150 காவலருக்கு விண்ணக உயர்வு, ஏற்றுகொள்ளவே முடியாத கொடூரம்.

அதாவது காட்டில் மிருகங்களை கொல்லும் முறையிலே தன்னை பிடிக்க வருபவரையும் கொன்றார்.காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க, இனி தொழிற்சாலை நடத்தமுடியாது என்பதால், 10பேராக குழுவை குறைத்துகொண்டு ஆள்கடத்தலில் ஈடுபட்டார்.

நட்சத்திர கடத்தலாக ராஜ்குமார், அதோடு விட்டாலும் பரவாயில்லை, அப்படியே கடத்திகொண்டிருந்தால் பத்திரிகைகளுக்கும் நமக்கும் பெரும் செய்தியாகி இருப்பார்

ஆனால் பூலன் தேவி போல பொதுமன்னிப்பு கிடைக்காது என்றவுடன், அவருக்கு யாரோ வேறுமாதிரி போதித்தார்கள், “அண்ணே நீங்க போராளி ஆய்ட்டீங்கண்ணா, தமிழர்கள் விடமாட்டார்கள். தமிழ் போராளி வேடம் போடுங்கண்ணே, ராஜிவ் கொலையாளிகளையே தூக்கில் போடமுடியாதநாடு இது, இனி அதுதான் உங்களுக்கு பாதுகாப்புண்ணே…”

அவ்வளவுதான் வீரப்பனுக்கு தமிழ் உணர்வு பொத்துக்கொண்டு வந்தது.

திடீர் புரட்சியாளரானார், காட்டிற்குள் தமிழ் கொடியேற்றினார், காவேரி நீருக்கு உத்தரவிட்டார், தமிழீழம் நிச்சயம் மலரவேண்டும் என்றார், தமிழகம் தனிநாடு ஆவதற்கு தனது ஆதரவு உண்டு என கருத்து தெரிவித்தார்.

யாரும் எதிர்பாராவிதமாக மாவோ காட்டுக்குள் இருந்து புரட்சி செய்யவில்லையா? எனும் அளவிற்கு அவருக்கு ஏதோ ஒரு மரத்தடியில் ஞானம் வந்தது.

இறைவன் எல்லோருக்கும் ஒரு வட்டமிட்டிருப்பான், சிலருக்கு பெரிது,சிலருக்கு சிறிது, தாண்டினால் அவ்வளவுதான். தனக்கான வட்டத்தினின்று வீரப்பன் வெளியே வந்தவுடன் இனி தாமதிப்பதில்லை என களமிறங்கிய அரசுகள் அவரை முடித்துவிட்டது, அன்றைய ஜெயலிதாவின் அரசிற்கு அது பெரும் சாதனை.

(வீரப்பன் என்ற பெயரே அவருக்கு பிரச்சினைதான் 🙂 )

ஆயிரம் சர்ச்சைகள், எண்ணமுடியாத குடும்பங்களின் பாதிப்புகள், ஏராளமான உயிர்ப்பலிகள், அதிரடிபடை வீரப்பனை தேடி செய்த கொடூரங்கள் என மாபெரும் பிரளயத்தை அப்பகுதியில் நிகழ்த்த வீரப்பன் செய்த சாதனை என்ன?

நாட்டின் சொத்துக்கள கொள்ளை அடிப்பது இன்று “தொழில் வளர்ச்சி”. பெட்ரோல்,மணல்,மலை,நீர் என சகலத்தையும் கொள்ளை அடிக்கலாம். அரசாங்கதுக்கு சொந்தமான ஆற்றுநீரை அரசுக்கே விற்கலாம், உயிர்நாடியான பெட்ரோலை எடுத்து இஷ்டத்திற்கு தனியார் விற்கலாம், இதுதான் கசப்பான யதார்த்தம்.

இவை எல்லாம் எப்படி நடக்கின்றது?

அரசிடமிருந்து ஒரு லைசென்ஸ், கொஞ்சபேருக்கு வேலைவாய்ப்பு, பின்னர் மாபெரும் கொள்ளை, அதில் ஆங்காங்கு அதிகாரிகளுக்கு பங்கு. ஏதாவது பிரச்சினை என்றால் லைசன்ஸ் உரிமையை காட்டி நீதிமன்றம் செல்லலாம், இந்தியன் பீனல் கோடினை பீஸ் பீஸாக உடைத்து வெளிவரலாம்.

வொடோபோனும், நோக்கியாவும் ஏன் ஆனானபட்ட மணிரத்தினத்தின் குருபாய்(உண்மை உங்களுக்கு தெரியும்) அப்படித்தான் வெளிவந்தார்கள், இன்னும் பலபேர் வருவார்கள்.

கிரானைட் பழனிச்சாமி என்பவரும் தாதுமணல் வைகுண்டராஜனும், மணல் ஆறுமுகசாமியும் இன்னும் பெரும் பலத்தோடு சுற்றும் தமிழகம் இது

பெரும் சட்டவிரோத காரியங்கள் செய்து பணத்தை குவித்துவிட்டால் போதும், சாதி, மதம் எதனையாவது சொல்லி சீட் வாங்கி, அப்படியே வோட்டை வாங்கி அமைச்சராகவும் ஆகலாம்.

அல்லது நன்கொடைகளை அள்ளிகொடுத்து, கட்சி என்ன? முதல்வரையே பின்னிருந்து இயக்கலாம். அதுதான் இந்திய தொழில்வளர்ச்சியின் இன்றைய நிலை.

எல்லா கட்சியிலும் குறிப்பிட்ட எண்ணிக்கை எம் எல் ஏக்களை கையில் வைத்திருந்தால் எந்த ஆட்சியினையும் மிரட்டலாம்.

பாவம் வீரப்பன் இதெல்லாம் அவனுக்கு தெரியவில்லை.

ஒருலைசன்ஸ் வைத்து கொண்டு, டெல்லிவரை ஆள்வைத்துகொண்டு, இரண்டு பத்திரிகைகளை. ஒரு தொலைகாட்சியினை, முகநூலில் 20 அல்லக்கைகளை கையில் வைத்துகொண்டு ஆள் வைத்து செய்யவேண்டிய சந்தண ஆலை வேலையை, தானே முன்னின்று செய்து ஒரு பாதுகாப்புமில்லாமல் ஓடி ஒளிந்து, இறுதியில் தோற்றும் போனார்.

ஒரு கட்சி,தொழிலதிபர் அடையாளத்தோடு செய்திருந்தால் நிச்சயமாக இன்று தென்மேற்கு தமிழகத்தில் வீரப்பனார் பெரும் அடையாளமாக இருப்பார்.

கிரானைட் கிங், மணல் மாபியா, கனிம மண் கண்ணன், என அந்த வரிசையில் சந்தண சாம்ராஜ்ய சக்கரவர்த்தி, யானை தந்த ஜாம்பவான் என வீரப்பனாரும் இடம்பெற்றிருப்பார்.

வீரப்பனார் சந்தண தொழிற்சாலை, வீரப்பனார் பொறியியல் கல்லூரி,

வீரப்பனார் லாரி சர்வீஸ், வீரப்பனார் யானை நிலையம், வீரப்பனார் யானை சவாரி , வீரப்பனார் சினி புரடக்க்ஷன்,

வீரப்பனார் துப்பாக்கி சுடும் பயிற்சி நிலையம், வீரப்பனார் யோகா நிலையம், ஹோட்டல் வீரப்பா குரூப்ஸ் , வீரப்பா ரிசார்ட்ஸ் என மாபெரும் சக்தியாக வளர்ந்திருப்பார்.

தொழிலதிபராக தமிழகத்தை அவர் மிரட்டியிருக்கலாம், கூடவே அந்த மலைபகுதியில் வீரப்பனார் வழங்கும் “சிறுவாணி வாட்டர்” பிசினஸை தொடங்கி இருந்தால் இந்திய பணக்காரர் அவர்.

அப்படி ஒரு நிலைக்கு வந்துவிட்டால் அவரை யாராவது தொட முடியும்? எத்தனை போலிசார் காவலுக்கு சல்யூட் அடித்து நிற்பார்கள்.

இந்த வால்டர் தேவாரமும், விஜயகுமாரும் கூட அவர் பெரும் தொழிலதிபராக வலம் வந்தால் பாதுகாப்பிற்கு சென்றிருப்பார்கள்.

அதனையும் மீறி பிரச்சினை வந்தால்

எத்தனை ஆயிரம் மக்களுக்கு படியளக்கும் சந்தணமர தொழிலை தடுப்பதா? என மக்களை ஏவிவிட்டு தப்பிக்கலாம்.

எவ்வளவு வாய்ப்பு அவனுக்கு இருந்தது?. எல்லாம் கெட்டது

ஆனால் விதி அது அல்ல, அவரை வைத்து எல்லோரும் சம்பாதிப்பார்கள் அவர் குடும்பத்தார் மட்டும் ஓடி ஓடி சாகவேண்டும் என்பது தலையெழுத்து.

அவருக்கு ஏன் அவ்வளவு பணம் வேண்டும் என கேப்டனே ஆர்.கே செல்வம‌ணி கோர்ட்டில் 100 பக்கம் பேசிவிட்டார். நாம் இங்கு எழுத வேண்டாம், எழுதினால் லியாகத அலிகான் கோபிப்பார், கோர்ட்டுக்கும் போவார். அவரே அவ்வளவையும் எழுதிவிட்டார்

ஆனால் அந்த வீரப்பனை வைத்து தந்த,சந்தண வியாபாரிகள் ஒருபுறம், ஊடகங்கள் ஒருபுறம், பத்திரிகைகள் ஒருபுறம் என சம்பாதித்து தள்ளின, எல்லோருக்கும் பணம் கொட்டும் பொருளாக வீரப்பன் மாறினார்.

அவன் பெயரில் சினிமா, பத்திரிகை, தொலைகாட்சி என எல்லோரும் நன்றாக சம்பாதித்தார்கள், நிரம்ப கல்லா கட்டினார்கள், இன்றும் அவனை சொல்லி நாலு வாக்கு கிடைக்காதா என அலைகின்றார்கள்.

எத்தனை ஐ.எஃப்.எஸ் எத்தனை ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு இரண்டாம் வகுப்பினை தாண்டாத காட்டுவாசி தண்ணி காட்டினான் என்ற பொருளில் அவர் நல்ல விற்பனை ஆனார்.

உண்மையில் ஒரு கட்டத்தில் வீரப்பனை தேடுவதை போலீஸ் சலிப்பில் கைவிட்டது, காரணம் அவரின் படம் கூட அவர்களிடம் கிடையாது, அதை அப்படியே தொடர்ந்து ஒரு கிராமத்து விவசாயியாக மாறினால் கூட வீரப்பனை கண்டுபிடித்திருக்கமுடியாது.

ஆனால் அவரை படமெடுத்து உலகெங்கும் காட்டி, அவரது உரையை உள்துறை அதிகாரிகள் வரை கேட்க செய்து, பரபரப்பில் சம்பாதித்ததில் காவல்துறை சுதாரித்தது. வீரப்பனும் தம்ழ்தேசியவாதி அவதாரமெடுத்து முடிவினை மிகவிரைவாக தேடிகொண்டார்.

இந்த வீரப்பனால் யாருக்கு லாபம்?

பல நூறு கோடிகள் சம்பாதித்தார் என சொல்லபடும் வீரப்பனின் சொந்த குடிசைவீடு இடிந்து கிடக்கிறது, மூலக்காட்டில் 6 அடியில் கல்லறை இருக்கின்றது, உடன்பிறந்தோர் போலீசாலீசாரல் மறைமுகமாக கொல்லபட்டாயிற்று, அண்ணன் மாதையன் தூக்கு எதிர்நோக்கும் கைதி.

மனைவி இன்னும் காவல்துறையால் கண்காணிக்கபடுபவர், இரு மகள்களும் அனாதையாக அரசு காப்பகங்களில்தான் வளர்ந்தனர், சாதாரண படிப்புகளையே கஷ்டபட்டு கடந்தனர், தந்தை இல்லை அல்லது ஒரு பழி. தாய் சதா சர்வகால சிறைவாசி.

மகள் பருவவயதில் காதலிலும் விழுந்து, இன்று அந்த காதல் கசந்து தூக்கி எரியபடும்பொழுது ஏன் என்று கூட கேட்க யாருமில்லாத அப்பாவி அனாதை.

அந்த பெண்ணின் தந்தை தான் மூன்று மாநில அரசினை அச்சுறுத்தியவர், கோடிகளை எண்ணமுடியாமல் சம்பாதித்தார் என்றால் நம்பமுடியுமா?.

இதுதான் இந்தியா, எல்லா இயற்கைவள கொள்ளைகளும் முதலிலே தடுக்க ஆயிரம் வழி இருக்கும். ஆனால் செய்யவே மாட்டார்கள். எல்லைமீறி போனால் வீரப்பன் போல அவந்தான் காரணம் என முடித்து விடுவார்கள். அந்த தந்தமும்,சந்தன மரமும் எங்கு விற்பனையானது? யார் வாங்கினார்கள் என்று கூட ஒரு செய்தியும் வராது.

அவனால் கொல்லபட்ட அப்பாவி வன அதிகாரிகளுக்கும், காவல்துறையின் மிக சிறந்த அதிகாரிகளுக்கும், காவல்துறை ஊழியர்களையும் ஒரு கணம் நினைத்துபாருங்கள், அவர்களின் குடும்பத்தாரை நினைத்து பாருங்கள், அப்படியே வீரப்பன் பிள்ளைகள் நிராதரவாய் நிற்பதையும் நினைத்தால் மனம் கனக்கத்தான் செய்கிறது, தன்னிலை வீரப்பன் அறிந்திருந்தால் இவ்வளவு அழிவு வந்திருக்குமா?,

இந்த பரபரப்பான பெயர் இருந்திருக்காது,ஆனால் எத்தனை ஆயிரம் குடும்பங்கள் நிமதியாக இருந்திருக்கும். இறுதியில் வீரப்பன் என்னதான் சாதித்துவிட்டார்?

இன்று நினைவு நாள். பெரும் வரமான அந்த சந்தண காடும், யானை கூட்டமும் , அவனை பிடிப்பதற்காக உயிரைவிட்ட காவல் துறையினரின் சோகமும் நினைவுக்கு வருகின்றது.

கூடவே ஆற்றுமண்,குளத்து மண், கடல், கடற்கரை மண்,கிரானைட் மலை என சகல இயற்கை வளங்களும் கண்ணுக்குளே நிற்கின்றது.

சுட்டுகொல்லபட்டது இயற்கையினை சுரண்டிய கும்பலின் சாதாரண கூலியாள், ஆனால் முதலாளிகள் காலகாலத்திற்கும் மிக பாதுகாப்பாக வலம்வருவார்கள், அவர்களை நோக்கி எந்த தோட்டாவும் பாயாது ,

தோட்டா என்ன? சட்டம் கூட வளைந்து யோகாசனம் அவர்களுக்காக சொல்லிகொடுக்கும்.

இதுதான் இந்தியா, சுதந்திர இந்தியா.

ஆக பத்து பேரினை கொண்டு பினாமியாக செய்திருக்கவேண்டிய தொழிலை, ஒரு கட்சிக்காரனாக அல்லது கட்சியின் புரவலராக இருந்து செய்திருக்கவேண்டிய தொழிலை

தனிமனிதனாக செய்து செய்யகூடாத அட்டகாசங்களை செய்து, இந்த நாட்டின் யதார்த்தம் புரியாமல் செத்தவன்

காவல்துறையின் அணுகுமுறை தெரிந்த அவனுக்கு, கட்சி அரசியலும், அதன் அமைப்புதன்மையும் தெரியவில்லை

இன்றைய கிரானைட், மண், கனிம மண், போன்றவற்றை அள்ளிவிட்டு தொழிலதிபர்கள் என வலம் வருவோர் போன்ற பெரும் ஜாதகம் அவனுக்கும் இருந்தது

ஆனால் விதி அதனை தடுத்துவிட்டது.

ஆக வருங்கால தொழிலதிபர்களுக்கு, மறைமுகமாக அரசினை மிரட்டவேண்டும் தமிழகத்தை ஆட்டுவிக்கவேண்டும் என நினைப்பவர்களுக்கு எல்லாம் ஒரு அபாய அறிவிப்பு வீரப்பன்.

என்ன செய்வது, இந்நாட்டில் கட்சி அரசியல் செய்தால் கொள்ளையனும் வாழ்வாங்கு வாழலாம், அதனை விட்டு பகிரங்கமாக மோதினால் தொலைத்துவிடுவார்கள், அவன் கோடி கோடியாக சம்பாதித்திருந்தாலும் குடும்பத்தை நடுதெருவில் விட்டுவிடுவார்கள்

அதாவது வீரப்பன் செய்ததை செய்யுங்கள், ஆனால் லைசென்ஸ், கட்சி, எம்பி, எம் எல் ஏ, சாதிய சங்க பலம், கட்சி பலம் , பத்திரிகை பலம், ஊடக பலம், தொழிலாளர் பலம் போன்ற அடையாளங்களோடு செய்யுங்கள். ஏதாவது ஒரு முகமூடி போட்டு செய்யுங்கள் போதும்.

போலிசார் சல்யூட் அடிப்பார்கள், நீதிபதிகள் விருந்துக்கு வருவார்கள், சில கறுப்பாடு வனத்துறையினர் மான்கறியோடு வருவார்கள், பத்திரிகையில் புகழ்வார்கள், ஊரெல்லாம் பேனர் வைப்பார்கள், வாழ்வினை கொண்டாடி தீர்க்கலாம்.

வீரப்பன் செய்ததை முறையாக செய்திருந்தால் இந்த ஐஜி தேவாரமும், விஜயகுமாரும் வீரப்பனுக்கு சல்யூட் அடித்திருப்பார்கள், நிச்சயம் நடந்திருக்கும்

கன்னட ராஜ்குமாரும், நாகப்பாவும் இன்னும் பலரும் அவர் வீட்டில் விருந்துக்கு வந்திருப்பார்கள்

பத்திரிகையில் “ஒரு சந்தணம் மணக்கும் கதை” என அவர் தொடர் எழுதியிருக்கலாம், அல்லது தொலைக்காட்சியில் ஜம்மென்று அமர்ந்து பேட்டி கொடுக்கலாம்.

எவ்வளவும் செய்யலாம்.

ஆனால் இப்படி பட்டவர்களுக்கு கட்சி இல்லை, லைசென்ஸ் இல்லை, மாட்டிகொண்டான் என்றால் அவ்வளவுதான், போலிஸ் தேடும், நீதிமன்றம் தண்டனை விதிக்க தேடும், பத்திரிகை கொள்ளையன் என பக்கம் பக்கமாய் எழுதும், வாழ்க்கை நரகமாய் கழிந்து முடியும்.

எத்தனை கோடி சம்பாதித்தாலும் அவன் குடும்பம் சரியாக தெருவில் நிற்கும்.

வீரப்பனின் வாழ்வு அதனைத்தான் சொல்கின்றது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s