தெய்வீக குரல்

தமிழகத்தில் எவ்வளவோ பாடகர்கள் உண்டு

சீர்காழியின் குரல் வெண்கல குரல், சவுந்தராஜனின் குரல் ஆண்மை மிக்கது, பாலசுப்பிரமணியத்தின் குரல் தங்க தூணில் தட்டுவது போன்ற இனிமை

ஜேசுதாஸின் குரல் தெய்வீக குரல், அது தேனை குழைத்து வெண்கலத்தில் வார்த்து வெண்ணையில் கலக்கியது போன்ற ஒரு பாந்தமான குரல்

அந்த‌ தெய்வீக குரல் என்பது சிலருக்கே வாய்க்கும்,அக்குரல் அமைவது அபூர்வம்

அவ்வகையில் ஜேசுதாஸ் மகா அற்புதமான பாடகர், கிட்டதட்ட 40 வருடங்களுக்கு மேலாக பாடிகொண்டிருப்பவர்

மலையாள உலகில் இருந்துவந்து இசையால் எல்லா இந்தியரையும் கவர்ந்த பாடகர் அவர்

சினிமாவில் அழியாத பல பாடல்களை பாடியிருக்கின்றார், கண்ணதாசன், வாலி போன்றோரின் வரிகள் அவரின் குரலால் கல்வெட்டாக பதிந்து நிற்கின்றன‌

பாடல் அவர் குரலில் வரும்பொழுது பூ எடுத்து தேனில் நனைத்து காதில் ஊற்றுவது போல் அப்படி ஒரு சுகாந்தம் கிடைக்கும், அக்குரல் உள்ளிரங்கும்பொழுதே ஒரு சிலிர்ப்பும் அமைதியும் ஏற்படும்

கிறிஸ்தவ பாடல்களில் அவரின் பாடல்கள் சாகா வரமுடையது, இந்து பாடல்கள் கேட்கவே வேண்டாம்

“ஹரிவராசனம்” அவர் குரலில் கேட்டால் உருகா மனமும் உருகும்

“ஆனந்தமானது அற்புதமானது” எனும் பாடல் அவரை தவிர யாருக்கும் சாத்தியமில்லை

ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல?

பாடகர்களால் படத்தை வெற்றிபெற செய்யமுடியும் என்பதற்கு எடுத்துகாட்டு ஜேசுதாஸ், சிந்துபைரவி என்ற படமே ஜேசுதாஸின் பாடலால் நின்றது, மறக்க முடியாது

எழுதினால் எழுதிகொண்டே செல்லலாம், மனிதரின் முத்திரை அவ்வளவு வலுவானது

மனதிற்கு பெரும் நிம்மதியும், உருக்கமும் கொடுக்கும் குரல் அந்த ஜேசுதாசுடையது

அந்த முகம் போலவே அக்குரலும் அமைதியானது, பாடும் பொழுது எவ்வித சலனமும் அவரிடம் இருக்காது, தியானத்தில் பாடுவது போன்றே இருக்கும்

ஆன்மாவில் இருந்து அவர் பாடுவதால் அந்த குரலும் ராகமும் எல்லோர் மனதையும் எளிதாக தொடுகின்றது

நிறைகுடம் தழும்பாது என்பது அதுதான்

இன்றைய பாடகர்கள் செய்யும் அழிச்சாட்டியம் ஏராளம், காதை பொத்துவார்கள், ஒரு மாதிரி வானம் பார்க்க இழுப்பார்கள், சரிவார்கள் இன்னும் ஏராள இம்சைகள்

நல்ல பாடகர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஜேசுதாஸ் பெரும் உதாரணம், இன்றிருப்பவர்கள் அவரிடம் நிறைய படிக்க வேண்டும்

கிட்டதட்ட 79 வயதானாலும் இன்னும் குரல் அப்படியே இருக்கின்றது, ஆனால் அதிகம் பாடுவதில்லை

1980,90களின் பாடல் உலகில் அவரின் முத்திரை அதிகம், குரலால் கட்டிபோட்டிருந்தார் மனிதர்

ஜேசுதாஸ் பாட வந்தது ஒரு பொற்காலம், ஆம் விஸ்வநாதனின் காலங்கள், இளையரஜாவின் காலங்கள், மெல்லிசை கொடுத்த ரகுமானின் தொடக்க காலம் அவை

அந்த பூங்காற்றுகளே ஜேசுதாஸ் எனும் மெல்லிய தூரலை சுமந்து வந்தன, அந்த காற்றே மலர் மணமும் பக்தி மணமும் கொண்ட ஜேசுதாஸின் ஆன்மீக குரலை சுமந்து வந்தன‌

காலம் காலத்துக்கும் நிற்கும் பாடல்களை கொடுக்க காலத்தால் கொடுத்த பாடகன் அவன்

வழிபாடோ தியானமோ ஆளற்ற நிசப்தத்தில் குறிப்பாக யாருமற்ற நள்ளிரவில் இரைச்சலற்ற தனிமையில் அவர் பாடலை கேளுங்கள்

அந்த பரவசம் ஆயிரம் மணி நேரம் தியானம் செய்த திருப்திக்கு சமம்

ஜேசுதாஸின் குரலும் அவர் பாடலும் அதன் அழகும் ஆத்மார்த்தமானவை, அதனை இனி கொடுக்க இன்னொரு ஜேசுதாஸ் வந்தால் மட்டுமே முடியும்

அந்த தெய்வீக பாடகனுக்கு இன்று பிறந்தநாள்

அவர் இன்னும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள், அவர் குரலின் இனிமை போல அவர்வாழ்வு இனிது அமையட்டும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s