ஆசிரியர் தினம் – ஆளுநர் வாழ்த்து

இன்று ஆசிரியர் தினம் ஆளுநர் வாழ்த்து

அதாவது ஆளுநர் எல்லா ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கின்றார்,

எல்லா ஆசிரியர்களும் என்றால் அதில் பேராசிரியை நிர்மலா தேவியும் உண்டா? அவருக்கும் வாழ்த்தா என்றெல்லாம் நாம் ஆளுநரிடம் கேட்க கூடாது.

குருவே நமஹ…குருவே துணை

குருவே நமஹ…குருவே துணை

ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் உள்ள குருகுலங்களில் காலையில் வகுப்புகள் தொடங்கும் பொழுது ஒலித்துகொண்டிருந்த வார்த்தை, நமஹ என்றால் போற்றுகிறோம் அல்லது வணங்குகிறோம் என பொருள்,

அப்படித்தான் வணங்கினார்கள், குரு என்றால் இருளை நீக்குபவர், அறிவினை தருபவர் என பொருள், கிரகங்களில் கூட அறிவினை தரும் கிரகத்திற்கு குரு என பெயரிட்டு கொண்டாடியது பாரதம்.

“குருவில்லாத வித்தை பாழ்”, “குருவில்லாத கல்வி கருஇல்லாத முட்டை” என்றெல்லாம் குருவின் பெருமையை உயர்த்தி பிடித்தனர், அவ்வளவு ஏன் எல்லா அரசுகளிலும் ராஜகுரு என்று ஒருவர் இருப்பார், அரசனே அவரிடம்தான் ஆலோசனை கேட்பார், அரசனுக்கு ஏதும் ஆனதென்றால் அடுத்த மன்னனை தயார் செய்வதும் ராஜ்குருவே.

ராமனுக்கு விசுவாமித்திரரே குருநாதர்.

துரோணரிடமும் பீஷ்மரிடமும் வித்தைகளை கற்ற அர்ச்சுணனுக்கு இறுதியில் தெளிவினை கொடுத்தது அவனது குரு கண்ணணே. இன்று உலகெல்லாம் ஆலயம் அமைத்து கொண்டாடபடும் யேசு கிறிஸ்துவின் சீடர்கள் வாழ்ந்த காலத்தில் இயேசுவினை ஒரு ஞான ஆசிரியனாக போற்றினார்கள், மூல பிரதியின் மொழிபெயர்ப்பு சொல்வது அப்படித்தான்

கிட்டதட்ட கடவுளின் அவதாரம் என்றே குருக்களை முன்னோர்கள் வணங்கினர். ஒவ்வையார் சொல்வார் அல்லவா “எழுத்தறிவித்வன் இறைவன் ஆவான்”, பிற்கால பாரதி சொன்னதும் அதுவே எல்லா சேவைகளுக்கும் மேலானது “ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”

அக்காலத்தில் குருக்கள் எல்லாம் ஆசிரியர்கள், நேரு தலைமையில் நவீன காலத்திற்கு நுழைந்த இந்தியாவில் ஆசிரியர்கள் கல்விக்கு அச்சாணி, சக்கரம் , ஆதாரம் எல்லாம்.

அவர்களை உற்சாக படுத்த ஒரு நாள் வேண்டும் அல்லவா?, கல்விபுரட்சிவேண்டுமென்றால் ஆசிரியர்கள் மனகுறைவு இல்லாமல் வாழவேண்டும் ஆனால் அவர்களின் நிலை அன்று அவ்வளவு நன்றாக இல்லை.

அக்காலத்தில் பள்ளிகள் குறைவு,படிக்க வருபவரும் குறைவு,படிப்பும் குறைவு, ஆசிரியர்களுக்கு சம்பளமும் குறைவு, பெரும் விவசாய நாடான இந்தியா அன்று விவசாயிகளை கொண்டாடிகொண்டிருந்தது

(நம்புங்கள், அப்படியும் காலம் இருந்திருக்கின்றது).

நேரு போன்றவர்கள் மாணவனாக இருந்தபொழுது ஆசிரியர்கள் வீடு சென்று கற்றுகொடுத்திருக்கின்றார்கள், எழுத படிக்க தெரிந்தால் போதும், தேர்வு, சான்றிதழ் இன்னபிற கொடுமைகள் எல்லாம் இல்லை.(நாமெல்லாம் அக்காலத்தில் பிறந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்
🙂 )

ஆசிரியர்கள் மாணவர்களை தேடி அலைந்ததும், ஒரு பக்கம் படிப்பறிவில்லா கூட்டமுமாய் விசித்திரமான காலமாக அது இருந்திருக்கின்றது

ஆசிரியர் பணி என்பது அன்று அவ்வளவு மதிக்கபட்டது அல்ல, நிலசுவாந்தாரும் பெரும் வியாபாரிகளுமே கொண்டாடபட்டனர்.

அந்த பரிதாபகரமான ஆசிரியர் பணியிலிருந்து உயர்ந்தவர் ஒருவர் பெயரில் கொண்டாடினால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணினார்கள், பொதுவாக ஆசிரியர்கள் ஏணிகள் அல்லது தோணிகள் மாணவர்களை கடக்க உதவுவார்களே தவிர அவர்கள் அப்படியே இருப்பார்கள்,

மாணவன் படித்து அமெரிக்கா சென்று பில்கேட்ஸிடம் வேலை பார்த்து நொடிக்கு டாலர்கள் என சம்பாதித்தாலோ அல்லது பெரும் உத்தியோகஸ்தரகா மாறினாலோ அவனுக்கு கற்றுகொடுத்த ஆசிரியர் அங்கு இன்னொரு மாணவனுக்கு அ.ஆஆ அல்லது 1,2 என போதித்து கொண்டிருப்பார், அல்லது தோப்புகரணம் போட வைத்து கொண்டிருப்பார், அதுதான் ஆசிரியர் சிறப்பு.

ஆனால் 1950களில் ஒரு ஆசிரியர் உலகபுகழ்பெற்றிருந்தார், 18 புத்தகம் எழுதியிருந்தார், தத்துவ உலகில் முடிசூட்டிய மன்னராக இருந்தார், உலகம் அவரை அறிவாளி எனகொண்டாடியது, இன்றும் கூட‌ எதையும் கொஞ்சம் தாமதாக உணர்வதுதானே நேரு குடும்பத்தின் சிறப்பு,

நேருவும் அப்படித்தான் இருந்தார், 1962ல் அவரின் சிறப்பினை உணர்ந்து, அந்நாளைய ஜனாதிபதியாக இருந்த அவரின் பிறந்தநாளே இந்தியாவுக்கு ஆசிரியர் தினம் என அறிவித்தார்.

அவர் சாதாரண ஆசிரியராக ஆரம்பித்து, உலக புகழ்பெற்று இந்திய ஜனாதிபதி ஆன, 133 கௌரவ டாக்டர் பட்டம்பெற்ற “சர்வபள்ளி” ராதாகிருஷ்ணன்.

சர்வபள்ளி என்றால் எல்லா பள்ளிகளிலும் பெயிலாகி படித்தவர் என்றோ அல்லது எல்லா பள்ளிகளிலும் பாடம் நடத்தியவர் என்றோ பொருள் அல்ல, அது அவர் ஊரின் பெயர், திருத்தணிக்கு அடுத்த ஊர், மனிதர் கொஞ்சமல்ல கடுமையான ஊர் பற்று உள்ளவர் போலும். ஊரை பெருமை படுத்தியிருக்கிறார்.

பழங்காலத்திலிருந்து ஆசிரியர்கள் உண்டு, ஆனால் ஆயிரகணக்கில் மாணவர்களை அவர்கள் பட்டைதீட்டுகின்றார்கள், ஆனால் ஒன்றோ இரண்டோ ஜொலிக்கும், அந்த ஜொலிப்பில் இந்த ஆசிரியர்கள் பிரகாசமாய் தெரிவார்கள்.

உதாரணம் வேண்டுமென்றால் அலெக்ஸ்சாண்டரை உருவாக்கிய அரிஸ்டாட்டில், சந்திரகுப்தனை உருவாக்கிய சாணக்கியன், அவ்வளவு ஏன் இன்று அப்துல்கலாமும் தனக்குள் விமான கனவினை விதைத்தது தனது ஆசிரியர்தான் என்பார். அதனால்தான் ஐன்ஸ்டீனை போல அப்துல்கலாமும் சிறந்த ஆசிரியராகவும் ஜொலிக்கமுடிந்தது.

ஒருகாலத்தில் வருமானம் குறைந்த பணி என ஒதுக்கபட்ட தமிழக‌ ஆசிரியர்களுக்கு 1980களில் வசந்தம் பிறந்தது, அதுவும் கல்லூரி ஆசிரியர்களுக்கு குபேரனே தலைக்குமேல் வந்தான். ஒப்பீட்டு அளவில் குழந்தைகள் கல்வியே சிரமம் மிக்கது

உதாரணம் வேண்டுமென்றால் வெயிலில் ஒதுங்க கூட இடமில்லாமல் கத்தரிக்காய் நாற்று வைத்து கண்ணும் கருத்துமாக பார்க்கும் விவசாயத்திற்கும், உயர வளர்ந்துவிட்ட ஆற்றங்கரை தென்னந்தோப்பினை பராமரிப்பதற்கும் வித்தியாசமுண்டு,

ஒருகாலத்தில் ஆசிரியர் இருக்குமிடத்திற்கு மாணவர்கள் சென்றார்கள், நாளந்தா பல்கலைகழகத்தினை காண யுவான் சு வாங் கடந்தது 4000 மைல்கள். இப்பொழுது மாணவர்களும் ஆசிரியர்களும் ஒரே இடத்தில் சந்திக்கின்றனர், நாளை ஆசிரியர் இல்லாமல் கணிப்பொறி அல்லது இணையம் மூலமாகவே படிக்கலாம் என்கின்றார்கள், நமது கண்முன்னால் நடக்காது ஆனால் கண்டிப்பாக நடக்கும்,

அன்று ஆசிரியர் தினம் இருக்காது, ஆசிரிய எந்திரம் தினம் இருக்கும்.

பள்ளி கல்லூரிகளை விடுங்கள், அங்கே பாடம் மட்டும் நடத்துவார்கள், தாங்கள் படித்ததை வைத்து , மாணவன் இதை எல்லாம் படித்தால்தான் வகுப்பு தாண்டமுடியும் அல்லது பட்டம் பெற முடியும் என்ற எல்லைக்குள் சொல்லிதருவார்கள், விருப்பம் இருக்கின்றதோ இல்லையோ மாணவன் படித்தே தீரவேண்டும்.

இங்கே நல்ல குரு கிடைக்கபெற்றவர்கள் படிப்பில் ஜொலித்து, அறிவுசார்ந்த துறைகளில் ஜொலிப்பார்கள் அது அப்துல்கலாமோ, சுஜாதாவோ. ஆனால் இவற்றில் சரியான குரு கிடைக்காதவர்கள், தாங்களுக்கு பிடித்தமான துறையிலோ அல்லது தொழிலிலோ இறங்கும்பொழுது நிச்சயமாக ஒரு குருவினை கண்டு மிக உச்சத்திற்கு சென்று பிரகாசிப்பார்கள, அல்லது பிரகாசிக்க தயாரவார்கள்.

விவேகானந்தருக்கு பரமஹம்சர் போல‌ இன்று வியாபாரம், தொழில்துறை,பத்திரிகை, அரசியல் என சகலத்திலும் முத்திரை பதித்தவர்களை பார்த்தீர்கள் என்றால், தங்கள் குரு யார் என்பதை மிக சரியாக ண்டுகொண்டிருப்பார்கள், நல்ல குருவினை பெற்றவர்கள்தான் அழியாத சரித்திரத்திற்கு சொந்தகாரர்கள்.

காமராஜருக்கு சத்யமூர்த்தி கிடைத்தார், பெரியார் பலருக்கு குருவாக கிடைத்தார்.

சாதனையாளர்கள் அல்லது முத்திரை பதித்தவர்கள் என கொண்டாடபடும் அனைவருக்கும் ஆசிரியர்கள் உண்டு,

அது கல்வி போதித்த ஆசிரியர்களாக இருக்கலாம், அல்லது தொழில்போதித்த ஆசிரியர்களாக இருக்கலாம், அல்லது வழிகாட்டிய நல்லவர்களாக கூட இருக்கலாம்,

எல்லோருக்கும் ஆசிரியர் உண்டு, குரு உண்டு, கல்விகூடங்களையும் தாண்டி ஆசிரியர்கள் உண்டு.

இவர்தான் தனது குரு என கைகாட்டுபவர்கள் எல்லோருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்.