ஆத்துமாக்கள் தினம்

இன்று கிறிஸ்தவர்களுக்கு, அதாவது கத்தோலிக்க பாரம்பரிய கிறிஸ்தவர்களுக்கு ஆத்துமாக்கள் தினம், கல்லறை சிறப்பு நாள்.

பிரிவினைகளுக்கு இதெல்லாம் கிடையாது, பைபிளில் இல்லாத ஒன்றையும் கடவுளே சொன்னாலும் கவனிக்காத கூட்டம் அது

இன்று கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னோர்கள் மற்றும் உரித்தானவர்கள் கல்லறைகளுக்கு சென்று அஞ்சலி செலுத்துவார்கள், கத்தோலிக்க பீடம் சொல்லும் கட்டளை அது.

கிறிஸ்தவமரபு படி சிறிய பாவம் செய்தவர்கள் சொர்க்கம் செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும், இங்குள்ளோர் அவர்களுக்காக ஜெபித்தால் அவர்கள் பரலோகம் செல்வார்கள் எனவும் சொல்லபடுகின்றது

இந்து தர்மம் சொல்லுமல்லவா? பூலோகத்தில் நீ ஏதாவது நன்மை செய்திருந்தால் அவர்கள் உனக்காக பிரார்த்திப்பார்கள், நீ செய்திருக்கும் நல்ல காரியத்திற்காக அவர்கள் உன்னை நினைவு கூற கூற நீ சொர்க்கத்தில் மிகுந்த நலமாய் இருப்பாய் என சொல்லும் அல்லவா? அதே தத்துவம் தான்

பேரோளியான இறைவனோடு கலந்துவிட்ட ஆன்மாக்களை ஒளியோடு நினைவு கூறவேண்டும் என்ற தத்துவ அடிப்படையில் மெழுகுவர்த்தி ஏற்றபடுகின்றது

இந்நாளில் கிறிஸ்தவர்களும் மற்றவர்கள் பசியாற்றுவார்கள், இறந்தவர் நினைவாக ஒருவனுக்கு பசியாற்றினால், அந்த ஆன்மா மகிழ்வடையும், இவன் நினைவாக சிலர் பசியாறுகின்றார்கள் என்றால் இவன் ஏதோ உருப்படியாக வாழ்ந்திருக்கின்றான் என வானலோக அதிபதிகளும் மகிழ்வார்கள்

அந்த ஆன்மா இன்னும் மகிழும்

அதனால் இன்றும் கிறிஸ்தவ கிராமங்களில் இந்நாளில் கஞ்சி ஊற்றும் நிகழ்வுகள் உண்டு, தெரிந்த ஆத்துமங்களுக்காகவும் கைவிடபட்ட ஆத்துமங்களுக்காகவும் ஏழைகள் பசிபோக்கி புண்ணியம் தேடும் காரியம் இது

அருமை கத்தோலிக்கம் பல பாரம்பரியங்களையும் ஏராளமான நல்ல விஷயங்களையும் கொண்டது, பிரிவினை ஒரு கலாச்சாரமே இல்லாத ஒருமாதிரியான போக்கு கொண்டது, அவர்களுக்கும் வெறிபிடித்த ஐ.எஸ் இயக்கத்திற்கும் வித்தியாசம் என்னவென்றால் துப்பாக்கி மட்டுமே..

இந்நாளை ஏன் கடைபிடிக்க வேண்டும்?

நலமாய் இருக்கும் ஒரு மனிதன் மருத்துவமனைக்கு சென்று ஒரு சுற்று சுற்றிவந்தால்தான் தான் எவ்வளவு ஆசீர்வாதம் பெற்றவன் என தெரியும்

மருத்துவமனை போதிக்கும் உண்மை அது

கல்லறைகளை சுற்றி வந்தால்தான், உலக வாழ்வு நிலையற்றது என்பதும், அகங்காரம் ஆணவம் எல்லாம் ஒன்றுமே இல்லை என்பதும், வெறும் மண்ணாக போகும் வாழ்வு இது என்பதும் புரியும்

மனிதனின் அகங்காரம் ஒழியும்

அதனால் இந்நாள் கட்டாயம் கடைபிடிக்கபட வேண்டியதே, யார் வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம்

எங்கள் ஊரின் கல்லறை தோட்டம் நினைவுக்கு வருகின்றது, என் கையினை பிடித்து வளர்த்தவர்களும், என்னோடு வளர்ந்தவர்களும், என்னை தொலைத்தே தீரவேண்டும் என பாகுபலி நாசராக அலைந்தவர்களும் அங்குதான் உறங்குகின்றார்கள்

தியாகம், வஞ்சகம், நட்பு, பொதுநலம், காதல், துரோகம் என எல்லாவற்றிற்கும் அக்கல்லறையில் எடுத்துகாட்டுகள் உண்டு

ஒவ்வொரு கல்லறையும் மனிதனின் ஒவ்வொரு குணத்தையும் காட்டிகொண்டே நிற்கின்றன‌

இருக்கும் போது மோதிகொண்டவர்கள், நான் யார் என சீறியவர்கள் எல்லாம் அங்கே ஒன்றாகத்தான் உறங்குகின்றார்கள்

வாழும்பொழுது பார்க்க முடியா சமத்துவம் கல்லறையில் தெரிகின்றது

இவ்வுலகம் ஒரு வாடகை பூமி, வந்து தங்கிவிட்டு முதலாளி கிளம்ப சொன்னதும் கிளம்பவேண்டியதுதான் எனும் தத்துவத்தை போதிக்குமிடம் மயான பூமி,

அதனால்தான் இந்துக்கள் சிவன் சுடலையாக மயானத்தில் ஆடுவதாக சொல்லி வைத்தார்கள், அவ்வளவு பெரும் தத்துவத்தை சொல்லும் இடமது,

ஏன் சொன்னார்கள்? ஏ மனிதா இதுதான் வாழ்க்கை இதுதான் உண்மை, அந்த உண்மையே சிவம் அவரிடம் சரணடைந்துவிடு

ஒருவன் உலகில் தங்கி இருந்த தற்காலிக அடையாளம்தான் இக்கல்லறைகள்

அந்த எல்லா ஆத்துமங்களுக்காகவும் இந்நாளில் இறைவனிடம் பிரார்த்திக்கலாம்.

எல்லா ஆன்மாக்களுக்கும் இறைவன் இளைப்பாறுதல் கொடுக்கட்டும்

வாழ்வில் கண்டு, இனி காணமுடியா எத்தனையோ முகங்கள் நினைவுக்கு வந்துகொண்டிருக்கின்றன‌ , குறிப்பாக சமீபத்தில் உதிர்ந்துவிட்ட தந்தை

எப்படி எல்லாம் அவரை தேடுகின்றேன் என்பதை என் கண்ணீரில் நனையும் தலையணை மட்டுமே அறியும்

கிரிக்கெட் நடக்கும் பொழுது, தமிழகத்தில் மழை என செய்தி வரும்பொழுது , சிவாஜி படங்களை பார்க்கும் பொழுது , கபடி ஆட்டங்களை கவனிக்கும்பொழுது , அரசியல் செய்திகள் என‌ இன்னும் ஏராளம்

ஒவ்வொரு விஷயங்களையும் அவரோடு பகிர்ந்தே வளர்ந்ததால் செய்தி கிடைத்தவுடன் போனை எடுக்கின்றேன் அதன் பின்பே அவர் இல்லா சோகம் புரிகின்றது, போன் நனைகின்றது.

இது மழைக்காலம், முதல் மழை விழுந்தவுடன் அதிகம் பேசமாட்டார், அடுத்த மழை பெய்யும் பொழுது சுத்தமாக இல்லை

ஏன் என தாயிடம்தான் கேட்க வேண்டும், கேட்டால் தோட்டத்துல பருவம் வைக்கணுமாம், நிறைய வேணுமாம் என பதில்வரும்

பணமில்லை என சொன்னால் சத்தமாக அந்த குரல் கேட்கும் “பணமில்லை என சொல்ல இங்கே இருந்தே சொல்லலாம், மலேசியாவில் ஏன் இருக்க வேண்டும்?”

அதன்பின் அனுப்ப வேண்டும், பின் மெதுவாக பேசுவார், அதுவும் வெகுநாள் கழித்து

ஏன் பேசவில்லை என கேட்டால் அம்மா சொல்வார், “உன் ஒவ்வொரு பைசாவினையும் செலவழிப்பதில் அவருக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமால, அவ்ளோ சிரிப்பு”

நான் அருகிருந்து பார்க்கவில்லை என்றாலும் வாழ்வில் செய்துவிட்ட மிகபெரிய கடமை அதுதான்

இன்றும் மழை பொழிகின்றது, அம்மா இருக்கின்றார், பணம் அனுப்ப நானும் இருக்கின்றேன், கேட்க அவர் மட்டும் இல்லை.

எவ்வளவுதான் ஆறுதல் தேடினாலும் ஊரில் மழை என்றவுடன் மனம் அவரை தேடி வெடித்து அழுகின்றது..

மழைக்குத்தான் எவ்வளவு தவமிருந்தார், பகீரதன் கூட அப்படி இருந்திருக்க மாட்டான்.

தோட்டம் அவருக்காக காத்து இருக்கின்றது, அந்த தென்னை மரங்களும் வாழைகளும் அவரை எதிர்பார்த்து நிற்கின்றது

ஆனால் அவர் வரமாட்டார், வரவே மாட்டார்.

அவர் நினைவு வரும்பொழுதெல்லாம் மகன் முகத்தை பார்த்து ஆறுதல் அடைவதை தவிர வேறு வழி இல்லை

வாழும்பொழுது பெரும் துயரங்களை கடந்த அந்த ஆத்மா இறைவனின் சந்நிதியில் நித்தியமாக இளைப்பாறட்டும்

[ November 2, 2018 ]

Image may contain: 1 person, standing