நாயன்மார்கள் 02 : அப்பூதி நாயனார்

“ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்..” :‍ சுந்தரமூர்த்தி நாயனார்

சோழநாட்டில் திருவையாறு பக்கம் இருக்கின்றது அந்த திங்களூர். அது அன்றும் இருந்தது. இன்றும் இருக்கின்றது. சந்திரனுக்கான ஆலயம் அமைந்த‌ பிரதான தலம் அது. இதனால் திங்களூர் என்றாயிற்று.

அன்று அந்த ஊரில் மதிப்பும், மரியாதையும், பக்தியுமாக, குற்றம் குறை சொல்லமுடியாத‌ சிவனடியாராக வாழ்ந்து கொண்டிருந்தார் அந்த அப்பூதி அடிகள். சிவத்தொண்டும் சிவனடியாருக்கான தொண்டுமே தன் சுவாசமாக கருதி , அதுவே தன் பிறப்பின் கடமையாக கருதி பழுதற செய்து கொண்டிருந்தவர்.

அந்த குடும்பமே சிவபக்தியின் உச்சத்தில் இருந்தது, அவரின் மனைவியும் கணவனுக்கேற்ற மகராசி. கணவன் ஏற்றுக்கொண்ட சிவதொண்டுக்கு முழு உதவியாய் இருந்து வந்தார், கணவனை போலவே முழு சிவபக்தை.

இவர்களுக்கு இரு மகன்கள், எல்லா வகையிலும் ஆசீர்வாதமான வாழ்வு அவர்களுக்கு இருந்தது.

அப்பூதி அடிகள் சிவத்தொண்டர் . ஆனால் ஒரு மிக சிறந்த சிவனடியாரை தன் குருவாக கொண்டிருந்தார், அவரிலே சிவனை கண்டார், அவரே நடமாடும் சிவன் என்றும் அவரே தன் உயிருக்கு உயிரான குரு எனவும் மனதில் கொண்டு நாளெல்லாம் அவர் நினைவில் திருப்பணிகள் செய்தார்.

ஆம், அந்த குரு திருநாவுக்கரசர். இவரின் சமகாலத்தவர்.

ஏகலைவன் துரோணரை நினைத்தே உயர்ந்தது போல திருநாவுக்கரசை நினைத்தே சிவத்தொண்டில் இருந்தவர். அனுதினமும் அவர் புகழை பாடுவார், அவரைப் பற்றிய விஷயங்களை ஆவலாய் கேட்பார். காரணம் சைவத்தை வளர்க்க பல அற்புதங்களை செய்து சமணரை திருநாவுக்கரசர் வென்று கொண்டிருந்த காலங்கள் அவை.

இவ்வளவுக்கும் அப்பூதி அடிகள் திருநாவுக்கரசரை நேரில் கண்டதில்லை.

திருநாவுக்கரசர் எனும் தன் குரு பெயரை எங்கெல்லாம் நிறுத்தமுடியுமோ அங்கு நிறுத்தினார், அவர் வீடு திருநாவுக்கரசு மாளிகை, அவரின் இரு மகன்கள் பெயர் திருநாவுக்கரசர், அவர் கட்டி வைத்த சத்திரங்களும், வெட்டி வைத்த குளங்களும், வழிப்போக்கருக்கு அமைத்த தண்ணீர் பந்தலும் திருநாவுக்கரசர் பெயரையே தாங்கி நின்றன.

எங்கோ பிறக்கும் நதி எங்கோ பாய்வது போல, மலைமேல் பிறக்கும் தென்றல் வழிநடந்து செல்லுதல் போல, எங்கோ நடமாடிய திருநாவுக்கரசரின் புகழ் இந்த அப்பூதி அடிகளை அப்படி கொண்டாட வைத்திருந்தது.

மணமிக்க சாம்பிராணி தெருவெல்லாம் மணம் பரப்புவது போல அப்பூதியாரின் புகழ் சோழநாடெங்கும் பரவி மெல்ல திருநாவுக்கரசரையும் அடைந்தது. அந்த குருவிடம் அவரின் கண் காணா சீடனின் புகழ் சென்று அடைந்தது

அவன் பெயரில் அல்லாது தன் பெயரில் அவன் செய்யும் நலப்பணிகளை கேள்விப்பட்ட திருநாவுக்கரசர் உருகினார். ஒப்பற்ற சிவனடியார் எனும் ஒரே காரணத்துக்காக அப்பூதி அடிகள் தன் பெயரை கொண்டாடுவதை அவர் உள்மனம் உணர்ந்தது.

ஒரு மனிதன் தான் செய்யும் செயலில் எல்லாம் அவனை மறந்து, அவன் பெயரை மறைத்து சிவனடியாரான தன்னை முன்னிறுத்துகின்றான் என்றால் தன்மேலான அன்பும், அதற்கு மேல் சிவன் மேலான பக்தியும் அவரை மனதால் உருக செய்தன.

அப்படி ஒரு சிவத்தொண்டனா? அவனைப் பார்க்க வேண்டுமே என திங்களூருக்கு நடந்தார் திருநாவுக்கரசர்.

திருநாவுக்கரசருக்கு சிவனைத் தவிர எவரையும் தெரியாது. அப்பூதி அடிகளுக்கு திருநாவுக்கரசரைத் தவிர எவரையும் தெரியாது.

இருவருக்கும் இருக்கும் ஒரே இணைப்பு சிவன், இரு சிவனடியாரும் ஒருவரை ஒருவர் சந்திக்கப் போவதை உணர்ந்த சிவன் ஒரு விளையாட்டு ஆட விரும்பினார்.

திங்களூரை அடைந்தார் திருநாவுக்கரசர். எங்கும் அவர் பெயரில் அன்னசத்திரம் , மண்டபம் , குளம், நீர்ப்பந்தல் எல்லாம் அமைந்திருந்தன. நீர்ப்பந்தல் கூட கீற்று வேயப்பட்டக் குடிலில் மணலை குளிராக்கி அதில் புதைக்கப்பட்ட பானைகளில் குளிர்ந்த நீர் இருக்குமாறு அமைக்கப்பட்டிருந்தது, கடும்வெயிலில் வருவோர் தாகசாந்தி செய்யும் பொழுது திருநாவுக்கரசை நினைத்துக் கொள்ள வேண்டுமாம்.

அந்த ஊரில் திரும்பும் இடமெல்லாம் தன் பெயர் இருப்பதையும், தன்மேல் அப்பூதி அடிகளுக்கு இருக்கும் அன்பையும் உணர்ந்து மெல்ல அவர் வீட்டுக்கு சென்றார் திருநாவுக்கரசர். முன்பின் பார்த்ததில்லை என்பதால் அப்பூதி அடிகளுக்கு அவர் திருநாவுக்கரசர் எனத் தெரியவில்லை. வழக்கமாக சிவனடியார்களை வரவேற்று உபசரிக்கும் அப்பூதி அடிகள் திருநாவுக்கரசரையும் ஒரு சிவனடியாராக எண்ணி வரவேற்றார் .

திருநாவுக்கரசர் தான் யாரென சொல்லாமல் , “அன்பரே, நீங்கள் நிறைய தொண்டுகளை செய்கின்றீர்கள், ஆனால் உங்கள் பெயரால் செய்யாமல், ஏன் யாரோ ஒருவர் பெயரில் செய்ய வேண்டும்” என கேட்க, அப்பூதி அடிகளின் முகம் மாறியது. “யாரோ ஒருவர் பெயரில்” எனும் அந்த வார்த்தை அவர் உள்ளத்தைச் சுட்டது.

கொஞ்சம் ஆத்திரமாக “அய்யா, நீர் சிவனடியார்தானே, உமக்கு திருநாவுக்கரசரைப் பற்றி தெரியாமல் இருந்தால் அது நம்பும்படியாக இல்லை. அவர் சமணரை வென்று சைவம் தழைக்க செய்தவர். கடலிலே கல்லைக் கட்டி எறிந்தபொழுதும் கல்லில் தோணிபோல் மிதந்தவர், மதுரை கூன் பாண்டியனின் கொடுநோயினை தீர்த்து அவரை சைவம்பால் திருப்பியவர். சிவனின் முழு அருள்பெற்ற அவரை யாரோ ஒருவர் என்பதா . அவர் எனக்கு தலைவன், குருநாதர், அவரால் சைவம் வாழ்கின்றது.

நாமெல்லாம் சிவனடியார், ஆனால் உம்மாலும் எம்மாலும் செய்ய முடியாத பெரும் விஷயங்களை சிவன் அருளால் அவர் செய்கின்றார் என்றால் அவர் பெயர் நிலைக்க வேண்டுமா. அல்லது என் பெயர் ..உன் பெயர் நிலைக்க வேண்டுமா..

அவர் முன் நான் ஒரு தூசு, அவர் அருகே கூட நிற்கத் தகுதியற்றவன். என்னால் முடிந்தது நான் செய்யும் நற்கிரியைகளில் அவர் பெயரை முன்னிறுத்துவது. அதைச் செய்கின்றேன். அவர் பெயர் வாழவேண்டும். காலமெல்லாம் நிலைக்க வேண்டும். என்னில் இருந்து அவர் செயலாற்றும் பொழுது அவர் பெயரை இடாமல் வேறு எவர் பெயரை இடுவது?

அவரை அறியாத நீர் சிவனடியார் என்பதில் சந்தேகம் வந்து விட்டது, நீர் கிளம்பலாம்” என சொல்லி விட்டார்.

ஆம். தன் குரு மேல் கொண்ட பக்தி அவரை அப்படி சொல்ல வைத்தது. தன் சீடன் தன்மேல் கொண்டிருக்கும் அன்பை அவன் வாயாலேயே கேட்டு மகிழ்ந்து திருநாவுக்கரசர் மெல்ல தன்னை வெளிப்படுத்தினார்.

யாரோ ஒரு அடியாரிடம் பேசுகின்றோம் என நினைத்திருந்த அப்பூதி அடிகளுக்கு அவர்தான் தன் குருநாதர் திருநாவுக்கரசர் என்றவுடன் மனம் துள்ளியது. ஆர்ப்பரித்தது. கண்கள் கலங்கின. ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

தெய்வம் கண்ட பக்தன் போல, கண் பெற்ற குருடன் போல அவ்வளவு ஆனந்தம். சற்று நேரம் பேசாமல் அப்படியே சிலையாய் நின்றார், மெல்ல மூச்சு வாங்கியது, மூச்சு பெரும் அழுகையாய் ஓலமிட்டு உயர்ந்தது.

ஆனந்தத்தில் கதறினார் அப்பூதி அடிகள். அவர் வாழ்வில் அதுதான் மகா மகா உன்னதமான நொடி. யாருடைய‌ புகழ் கேட்டு, சிவ பக்தி கேட்டு குருநாதர் என மனதால் வணங்கினாரோ, அவரே தன் வீட்டுக்குத் தன்னைத் தேடி வந்தால் எப்படி இருக்கும்.

தன் குடும்பத்தாரை அழைத்தார் . ஒரு பாத்திரத்தில் நீரெடுத்து அவர் பாதம் கழுவி தன் குடும்பமாய் குடித்தார், தலையில் தெளித்துக் கொண்டார், வீடெல்லாம் தெளித்தும் கொண்டார்.

அவரைக் கொண்டாடினார். தெய்வம் வந்தபின் விழா எடுக்காமல் எப்படி .விழா என்றால் உணவு இல்லாமல் எப்படி.

அப்பூதி அடிகளின் இல்லாள் இல்லாத வகையில்லை என சொல்லும் அளவு சமையலை வகைவகையாக செய்யத் தொடங்கினார்.

அப்பூதி அடிகள் அவரை கண் கொண்டாமல் பார்த்துக் கொண்டே அவரின் பேச்சுக்களை கேட்டுக் கொண்டிருந்தார், திருநாவுக்கரசரும் இவரின் சந்தேகங்களை எல்லாம் போக்கிக் கொண்டிருந்தார்.

அப்பூதி அடிகள் மனதில் எரிந்து கொண்டிருந்த சிவபெருமான் மீதான ஞான நெருப்புக்கு நெய் ஊற்றிக் கொண்டிருந்தார் திருநாவுக்கரசர்.

நாழிகைகள் நகர்ந்தன, அமுது படைக்கும் நேரம் நெருங்கிற்று.

அந்த அப்பூதி அடிகள் அந்தணர், திருநாவுக்கரசரோ வேளாளர். ஆனால் இப்போது அவர்களெல்லாம் ஒரே சாதி, சிவனடியார் சாதி. அந்த அந்தணர் அப்பூதி அடிகளுக்கு வேளாளர் திருநாவுக்கரசர் சாதி தெரியவில்லை. மாறாக சிவமே தெரிந்தார். வணங்கினார், கொண்டாடினார்.

அப்பூதி அடிகளின் மனைவி நைவேத்தியம் தயாரிக்கும் பக்குவத்துடன் அர்ப்பணிப்புடன் சமையல் முடித்தார், அப்பூதி அடிகளின் மகன்களான சின்ன திருநாவுக்கரசும், பெரிய திருநாவுக்கரசும் ஓடி ஓடி வேலை செய்தனர் . உண்ணும் இடத்தை சுத்தம் செய்து விட்டு பெரிய திருநாவுக்கரசு சமையலறைக்குள் நுழைந்தான், விதி கூரிய விஷப்பற்களோடு காத்திருப்பது அறியாமல் தாயார் அவனை வாழை இலை அறுத்துவர அனுப்பினார்.

வாராது வந்த மாமணியான அந்த மகானுக்கு, திருநாவுக்கரசருக்கு மகாராஜாவுக்கும் கிடைக்கா வரவேற்பினை அக்குடும்பம் உளமார‌ கொடுத்துக் கொண்டிருந்தது.

வாழை இலை அறுக்கப் போனான் மூத்த திருநாவுக்கரசு. நல்ல இளம் இலையாய் அவன் அறுக்கும் பொழுது அங்கு மறைந்திருந்த பாம்பு அவனைத் தீண்டிற்று.

அந்நாளில் பாம்பு கடிக்கு சில மருத்துவம் உண்டு, ஆதுரச்சாலை எனப்படும் வைத்தியசாலை உண்டு, ஆனால் உடனடியாக செல்ல வேண்டும். சிவனடியாரான திருநாவுக்கரசருக்கு அமுது படைப்பதே முதல் வேலை என கருதிய அந்த பாலகன், ஆதுர சாலை செல்லாமல் வீட்டுக்கு ஓடிவந்து இலையைக் கொடுத்தான். தன் கடமையினை நிறைவேற்றிய மகிழ்வில் வாயில் நுரைதள்ள சரிந்தான், அப்பூதி அடிகளின் வளர்ப்பு அப்படி.

உள்ளே திருநாவுக்கரசர் உணவுக்கு அமர்ந்திருக்க, அடுப்பறையில் மகன் இறந்துகிடக்க அதிர்ச்சியில் உறைந்த அப்பூதி அடிகளின் மனைவி உள்ளுக்குள் அழுதாள், பொங்கிவரும் அழுகையினை கட்டுப்படுத்தி மெல்லிய இயல்பான குரலில் கணவனை அழைத்தார்.

ஆம், சிவனடியார் மனதை நோகடிக்கக் கூடாது எனும் உறுதி அவளுக்கு இருந்தது.

உள்ளே சென்ற அப்பூதி அடிகள் மகனின் உடலை கண்டு கலங்கினார். பிள்ளை சடலம் கண்டபின் துடித்து கதறாத பெற்றோர் மனம் உண்டா..

அவர் வாழ்வில் மிகப் பெரும் சந்தோஷம் நடந்த சில நாழிகையிலேயே மாபெரும் துயரமும் நடந்தேறிற்று.

உள்ளே மகனின் சடலம், வெளியே உணவுக்காய் காத்திருக்கும் குரு திருநாவுக்கரசர்.

எவர் பெயரால் அப்பூதி அடிகள் ஊரெல்லாம் நீரும், சோறும் போட்டு திருப்பணி செய்தாரோ அந்த திருநாவுக்கரசருக்கு தன் கரங்களால் அப்பூதி அடிகள் அமுது பரிமாற வேண்டிய நேரமிது. தகப்பனாக மகனுக்கு அழுது கருமாதி செய்ய வேண்டிய நேரமும் அதுவே.

மகனை நினைத்து அழுவதா, திருநாவுக்கரசுக்கு செய்யும் சேவையைத் தொடர்வதா.. கதிகலங்கி நின்றார் அப்பூதி அடிகள், மகனை மடியில் போட்டு மனதால் அழுது கொண்டிருந்தாள் அந்த மாதரசி.

நடப்பதை ஓரமாக பார்த்து திகைத்து நின்று கொண்டிருந்தான் சின்ன திருநாவுக்கரசு.

“ஏ அப்பூதியே உன் வழக்கமான கடமையான சிவனடியாரை அதுவும் உன் குருவான சிவனடியாரை உபசரிக்க போகின்றாயா.. இல்லை அவரை புறந்தள்ளிவிட்டு மகனுக்காய் அழப்போகின்றாயா” என மனசாட்சி கேட்டுக் கொண்டிருக்க, இறுகி அமர்ந்திருந்தார் அப்பூதி அடிகள்.

அவர் முகத்தையே பார்த்து மனதால் கதறிகொண்டிருந்தாள் மனைவி, அருகே இளையவன்.

அப்பூதி அடிகள் சிவனடியார் வந்த வேளை சரியில்லை என்று குறை கூறி அடித்து விரட்டிவிட்டு மானிட இயல்பில் கதறித் துடித்து அழுவாரா , அல்லது சிவனடியாருக்கு உணவிடுவாரா எனும் சோதனையின் கடைசி நொடி நெருங்கிற்று

“அப்பூதி..” என குரல் கொடுத்தார் திருநாவுக்கரசர்.

“அய்யா, ஒரு நிமிடம்” என எழுந்தார் அப்பூதி அடிகள். அவர் குரல் கேட்ட கணம் மனம் சிவத்தால் நிறைந்தது, மனம் தெளிவானது, சிவனே நிரந்தரம். சிவனடியார்களை உபசரிப்பதே தன் சுயதர்மம் . அதுவே முதல் கடமை எனும் தெளிவு பெற்றவராய் எழுந்தார்.

மனைவியினை நோக்கினார், “நான் சொல்வதை கேட்பாயா” என்றார். கணவனுக்கு அடங்கிய அந்த பதிவிரதை அதைத் தவிர என்ன செய்வேன் என்றாள்

“மனையாளே, நிச்சயம் இவன் இனி திரும்பப் போவதில்லை, முடிந்தது முடிந்ததுதான். ஆனால் இது தெரிந்தால் நாம் கால்வைத்த நேரம் இப்படி ஆயிற்றே என குருநாதர் மனமுடைவார், தனக்காக இலை அறுக்கச் சென்று இறந்தான் பாலகன் என கதறித் துடிப்பார்.

அது அவரின் மனதை பாதிக்கும், அழவைக்கும். மிகப்பெரும் பொறுப்பை ஏற்று சிவனுக்காக வாழும் அவர் மனதில் ஏற்படும் அத்துன்பம் அவரின் சிவத்தொண்டை பாதிக்கும். நாம் அதற்கு காரணமாய் இருத்தல் கூடாது

விஷயத்தை அவரிடம் மறைப்போம், இப்போதைக்கு எதுவும் காட்டாமல் உணவிட்டு அவரை அனுப்பிவிட்டு அதன்பின் துக்கத்தை ஏற்போம், இது சிவனடியாரை ஆதரிக்கும் வீடு, நாமோ சிவனடியாரை உபசரிப்பதை கடமையாய் கொண்டவர்கள். மகன் என்றல்ல நானே இறந்திருந்தாலும் இதுதான் நடந்தாக வேண்டும்”

மனைவியும் மகனும் அதை மவுனமாக ஏற்றனர். ஓலைப்பாய் ஒன்றில் மூத்தவன் உடலை சுற்றி ஒளித்து வைத்துவிட்டு இலையும் அமுதுமாக திருநாவுக்கரசை நோக்கி ஓடி வந்தனர்.

உணவருந்து முன் உடலை முறையாக சுத்தம் செய்து, திறுநீர் இட்டு அமர்ந்தார் திருநாவுக்கரசர், அவர்களையும் முறையாக வரசெய்து திருநீறு இட்டு அமரப் பணித்தார்.

அந்த இலையினை இட்டாள் அப்பூதி அணிகளின் மனைவி . அதில் அவள் கண்களை மீறி ஒரு துளி கண்ணீர் விழுந்தது.

மாபெரும் ஞானியான திருநாவுக்கரசருக்கு ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது என்பது விளங்கிற்று. எனினும் வெளிக்காட்டாமல் எல்லோரும் என்னுடன் அமருங்கள் என்றார் . மூவரும் அமர்ந்தனர்.

“எங்கே மூத்த மகன் திருநாவுக்கரசு அவனையும் அழையுங்கள், நாம் சிவன் புகழ் பாடிவிட்டு அமுது உண்ணலாம்” என கோரினார் திருநாவுக்கரசர்.

“அய்யா அவன் இப்போது உதவமாட்டான் நாம் உண்ணலாம்” என சொன்னார் அப்பூதி அடிகள்.

“அவன் வராமல் நான் உண்ணமாட்டேன்..” என அன்னம் தொடாமல் கையெடுத்தார் திருநாவுக்கரசர், அதற்கு மேல் பொறுக்கமுடியாமல் வாய்விட்டு அழுதார் அப்பூதி அடிகளின் மனைவி.

அவள் சொல்லாததை அவள் கண்ணீர் சொல்லிற்று..

ஓடிச் சென்ற திருநாவுக்கரசர் பாயில் சுற்றப்பட்ட பாலகன் உடலைக் கண்டு அதிர்ந்தார், அவனை தன் கையால் சுமந்து சிவாலயம் அடைந்தார் . பதிகம் பாடி மன்றாடத் தொடங்கினார் .

“ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர்வரை
ஒன்று கொலாம் உயரும் மதி சூடுவர்
ஒன்று கொலாம் இடு வெண்டலை கையது
ஒன்று கொலாம் அவர் ஊர்வது.தானே”

“ஒன்றே நினைப்பார் சிவனடியார், அந்த‌ சிவனையே நினைப்பார் சிவனடியார். பாம்பின் விடம் வெப்பமானது, நிலவின் ஒளியோ குளிர்ச்சியானது. நிலவினை சூடியிருக்கும் பெருமானே !இப்பாலகன் உடலிலிருந்து வெம்மை விடம் நீக்கி உடலைக் குளிர்ச்சியுறச் செய்து உயிர்ப் பிழைக்க வைப்பாய்..” என்று பொருள்படப் பாடினார்.

இப்படி இரண்டு கொலாம், மூன்று கொலாம் எனத் தொடங்கும் பத்து பாடல்களைப் பாடினார் திருநாவுக்கரசர். இது விடம் தீர்த்த படலம் என பெரியபுராணத்தில் வரும். முடிந்தால் வாசியுங்கள்

பாடலை உருக்கமாக திருநாவுக்கரசர் பாடப்பாட விஷம் பாலகன் உடலில் இருந்து இறங்கிக் கொண்டே வந்தது, விஷத்தால் உருவான நீலகருப்பு மறைந்து மெல்ல அவன் இயல்பான‌ நிறம் உடலில் படர்ந்தது.

நம்பமுடியாத அதிசயமாக அதைப் பார்த்து கொண்டிருந்தது மக்கள் கூட்டம், அப்பூதி அடிகளும், அவர் மனைவியும் ,மகனும் வியப்பின் உச்சிக்குச் சென்றனர்.

எத்தனையோ அதிசயங்களை சிவன் பெயரால் செய்த திருநாவுக்கரசர், பத்தாம் பாடல் பாடி முடிக்கவும் மெல்ல கண்திறந்தான் பெரிய திருநாவுக்கரசு.

பத்துமாதம் கழித்து பிறக்கும் பிள்ளை போல், பத்தாம் பாடல் முடிவில் மறுபிறப்பாக உயிர்பெற்று வந்தான் அவன்.

கூட்டம் பேச்சற்று நின்றது, நன்றியாலும் கண்ணீராலும் நிறைந்து மகனை அணைத்து கொண்டு கதறிக்கொண்டிருந்தாள் அப்பூதி அடிகளின் மனைவி.

எதுவுமே நடக்காதவர் போல் நின்று கொண்டிருந்தார் திருநாவுக்கரசர், மிக இயல்பாய் நின்றார். எல்லாம் சிவனருளால் நடந்ததன்றி தன்னால் ஏதுமில்லை என்பது அதில் தெரிந்தது.

மகன் செத்துப் பிழைத்த அந்நிலையிலும் மகனை நோக்காமல் “அடியாரே நீர் இன்னும் சாப்பிடவில்லையே, வீட்டுக்கு வந்து உணவருந்துங்கள், மீதியினை பின்னால் பேசலாம்” என குனிந்து நின்றார் அப்பூதி அடிகளார்.

அந்த நொடியில் திருநாவுக்கரசரே அதிர்ந்தார். அவர் என்ன வானலோகமே அசைந்தது, கயிலாயத்து சிவனுக்கே கண்ணீர் துளிர்த்து.

ஆம், ஒரு சிவனடியார் என்ற ஒரு காரணத்துக்காக, ஒரே ஒரு காரணத்துக்காக இப்படி தன்னை மறந்து, தன்னிலை மறந்து அவர்களை இப்படி சிவன் போல் கவனிக்கின்றார் அப்பூதி அடிகள். , இந்த பக்திக்கு எதை கொடுப்பது..

எதை கொடுத்தாலும் ஈடாகுமா..இந்த அன்புக்கு என்ன கொடுப்பது..

“சிவனே ..சிவனே ..உனக்கு இப்படியும் ஒரு அடியாரா.. உன் அம்சம் இப்படியும் உண்டா ” என மனமுருகி சொல்லிக் கொண்டே அவரை அணைத்துக் கொண்டார் திருநாவுக்கரசர்.

கூட்டம் ஆர்ப்பரிக்க, அப்பூதி அணிகளின் மனைவி உயிர் பெற்ற தன் மகனை நெஞ்சோடு அணைத்து சிவனை நோக்கி நன்றியாய் அழுது கொண்டிருந்தார். தானும் தன் கணவனும் குடும்பமாய் செய்த சிவத்தொண்டு தன் மகன் உயிரை காத்து தன் குடும்பத்தைக் காத்தது என்பதை உணர்ந்தாள்.

நிச்சயம் இது தன் குடும்பத்துக்கு வந்த பேராபத்து. எப்படியும் இந்த ஆபத்து வந்திருக்கும். அந்த அரவம் பாலகனை இன்று இல்லையென்றால் இன்னொரு நாள் கூட தீண்டியிருக்கலாம்

அந்த ஆபத்தை யார் நீக்கமுடியுமோ அவர் இருக்கும் நேரம் அதை அனுமதித்து அதை நீக்கியும் விட்டது இறை.

ஆம் சிவன் அவரைக் கண்காணித்து கொண்டே இருந்தார், சரியான நேரத்தில் மிக சரியான அடியாரை அனுப்பி தன் பக்தனைக் காத்தும் கொண்டார், மிக அற்புதமாக செய்தார்.

பின் சில நாட்கள் அப்பூதி அடிகள் வீட்டில் தங்கியிருந்த திருநாவுகரசர் அவர்களை எல்லாம் ஆசீர்வதித்து விட்டு வேறிடம் சென்றார்.

தன் குருமேலான மிகப் பெரும் பக்திக்குச் சாட்சியாக, சிவன் மேல் கொண்ட அன்பு காரணமாய் உதித்த அன்பில் கிடைத்த குருவினை சிவனாக நினைத்து பின் தொடர்ந்து பெரும் சிரமத்தையும் தியாகத்தையும் செய்ததால் அப்பூதி அடிகள் நாயன்மார்களில் ஒருவரானார்.

ஆம் . சிவன் மேலான அன்பே அவரை சிவனடியார்களை கொண்டாடச் செய்தது, அப்படி மிகப்பெரும் அடியாரான திருநாவுக்கரசரை ஞானகுருவாக கொண்டு அவர் கொஞ்சமும் வழிதவறாமல் நடந்ததே, மிகப் பெரும் துயரத்திலும் தன் இறைத்தொண்டில் வழுவாமல் நின்றதே அவரை நாயன்மார்களில் ஒருவராக்கியது.

அப்பூதி அடிகளிடம் அகங்காரமில்லை, பேராசை இல்லை, நான், என் குடும்பம் எனும் சுயநலமில்லை. மாறாக சிவனை யாரெல்லாம் தேடுவார்களோ , அவருக்காக வாழ்வார்களோ, அப்படிப்பட்டவர்களுக்காக நான் வாழ்வேன் என நின்றார்.

சிவனை, சிவனடியார்கள் போற்றினால் நான் அவர்களை போற்றுவேன், அடியார்க்கும் அடியார் நான் என தாழ்ச்சியாய் அவர் எடுத்த முடிவே அவரை அந்த மிகப்பெரும் இடத்துக்குக் கொண்டு சேர்த்தது.

சிவன் மேல் கொண்ட அன்பும், அந்த அன்பினை சிவனடியார்மேல் பணிவாய் காட்டியதுமே அவரின் பெரும் உயர்வுக்கு காரணம்.

இந்த அப்பூதி அடிகளார் காலத்தில் அந்த திங்களூரில் ஏகப்பட்ட செல்வந்தர்கள் இருந்தனர், மிராசுதரும், இன்னும் பணமும் படையும் செல்வாக்கும் மிக்கோரும் இருந்தனர். ஆனால் இன்றுவரை மட்டுமல்லாது என்றும் அப்பூதி அடிகள் மட்டும் நிலைபெற்றது எப்படி?

ஆம் . அவர் அழியக் கூடிய‌ பணமோ, நிலமோ, பொருளோ, பெண்ணோ தேடவில்லை . மாறாக நிரந்தரமான சிவனை தேடினார். அழியாப் புகழ் பெற்றார்

சிவனை நினைந்து சுமந்து திரியும் அடியவருக்கு செய்வதெல்லாம் சிவனுக்கு செய்வதே, அந்த அடியார்களுக்கு தாழ்ச்சியாய் ஒரு கிண்ணம் நீர் கொடுத்தாலும் அது சிவனுக்கே .

அதைக் கணக்கில் வைத்து கண்காணிக்கும் சிவபெருமான் உரிய காலம் வரும்பொழுது நமக்கு பல மடங்காக திருப்பித் தருவான்.

எப்படி நோக்கினாலும் அப்பூதி அடிகளார் வாழ்வு சொல்வது இதுதான் .

சாமான்ய பக்தனுக்கும் ஒரு நல்ல குரு கண்டிப்பாய் வேண்டும், அந்த குருவினை அவன் அணுபிசகாமல் பின்பற்றவும் வேண்டும்.

குரு கிடைக்கவில்லை என்றாலும் மனதால் ஒரு அடியாரை குருவாகக் கொண்டால் இறையருளால் அக்குரு நம்மைத் தேடிவருவார், நம்மை பரமனிடம் சேர்ப்பார்.

காரணம் இயங்குவதும் இயக்குவதும் சிவனே. தேடினால் கண்டடையலாம் அவன் சந்நிதியில் தட்டினால் அக்கதவு திறக்கப்படும், இது முக்கால உண்மை.

தைமாதம் ஒரு சதய நட்சத்திரம் நாளில் அவர் முக்தி அடைந்தார், அன்றிலிருந்து தை மாத சதய நாளில் அவருக்கு குருபூஜை நடத்தப்படுகின்றது, அன்று திங்களூர் கைலாசநாதர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு அவர் நினைவு கூறப்படுவார்.

திங்களூர் கைலாசநாதர் ஆலயம் எக்காலமும் அப்பூதியடிகள் நாயனார் புகழைச் சொல்லி அங்கு நிலைப்பெற்றிருக்கும், ஒப்பற்ற சிவபக்தன் வழிபட்டதால் அந்த ஆலயம் அழியாப் புகழுடையதாய் நிற்கின்றது.

முடிந்தால் அங்கு சென்று வழிபட்டு வாருங்கள், சிவனடியார்களுக்கு உதவிய புண்ணிய பலன் உங்களுக்கும் கிடைக்கும், உங்களுக்கும் நல்ல குருநாதர் அமைவார், அவர் உங்களை சிவனில் வழிநடத்துவார்.

Image may contain: 5 people, people standing

நாயன்மார்கள் : 01- அதிபத்தர்.

அந்த நுளமபாடி சோழ நாட்டின் கடற்கரையில் இருந்த ஊர். நாகப்பட்டினம் எனும் அன்றைய பெருநகருக்கண்மையில் இருந்தது. அது மீன்பிடி கிராமம், மீனும், சங்கும் , சிப்பியும், சங்கினை அறுத்து செய்த‌ வளையலும் நிரம்பக் கிடைக்கும் ஊர். பரதவர்கள் நிரம்பிய குடியிருப்பு.

அந்த பரதவக் கூட்டத்தில் ஒருவர் தான் அந்த அடியவர். அவரின் இயற்பெயர் அறியப்படவில்லை. ஆனால் அவரின் இயல்பான காரியத்தால் அதிபத்தர் என்ற காரண பெயர் வந்தது. இயல்பான காரியம் என்னவென்றால் வேறு ஒன்றுமில்லை. சிவன் மேலான பக்தி, யாராலும் காட்டமுடியாத பக்தி, மகா அர்ப்பணிப்பான பெரும் அன்பான பக்தி.

இதனால் அவர் அதிபக்தர் என அழைக்கப்படலானார், அது அதிபத்தர் என திரிந்து நிலைபெற்றுவிட்டது.

அதி என்றால் மிகப் பெரிய என்ற பொருளில் வரும். அதிவீரர், அதிமதுரம், அதிமேதாவி, அதிபர் எனும் வரிசையில் அதிபத்தர்.

(பத்தன் என்பதன் பொருள் மாசுமறுவற்ற குற்றமற்றவன் என்பது இன்னொரு விஷயம்.)

அந்த அதிபத்தர் மிகப்பெரும் சிவனடியார், கடலில் மீன்பிடித்து வந்து விற்பது அவரின் தொழில், அனுதினமும் காலை சிவனை நினைந்து வழிபட்டு, மடியேறி கடல் புகுந்து, வலைவீசி, மீன்பிடித்து அந்த மீன்களில் மிகப் பெரியதும் நல்லதுமான மீனை சிவனுக்கு அர்ப்பணமாக கடலிலே சிவன் நாமத்தை சொல்லி விட்டுவிடுவார்.

அக்கால மரபு அது. விவசாயி என்றால் தன் விளைச்சலில் சிறந்ததை கோவிலுக்கு செலுத்துவான். ஆடுமாடு வளர்ப்பவன் என்றால் மந்தையில் சிறந்ததை கோவிலுக்கு காணிக்கையாக்குவான்.

எது உன்னில் இருப்பதில் பெரிது என கருதுகின்றாயோ அதை சிவனுக்கு கொடு என்பது தான் சைவ பூமியான தமிழக தத்துவம், எல்லாம்வல்ல பரம்பொருளுக்கு தன்னிடம் இருப்பதில் மிக‌ச் சிறந்ததை கொடுப்பது அந்நாளில் உணர்வில் கலந்த விஷயம்.

இவரோ மீனவன், அவருக்கு கோவில் தெரியாது, வேதம் தெரியாது, சொல்லிக்கொடுப்பார் யாருமிலர், சொன்னாலும் புரியாது, விரதம் தெரியாது, யாகம் தெரியாது, வழிபடத் தெரியாது. சிவனுக்கு லிங்க உருவம் எதனால் என்றும் தெரியாது.

அவருக்கு தெரிந்ததெல்லாம் சிவன் முழுமுதல் கடவுள், அவனே வாழ வைக்கின்றான், அவனே கடலாக ஆடுகின்றான், அவனே படகாக வருகின்றான், அவனே மீன்பிடித்து தான் வாழ உடன் இருக்கின்றான். வாழ்பவனும் அவனே, வாழ வைப்பவனும் அவனே..

அவருக்கு சகலமும் சிவன், சிவனன்றி வேறல்ல, எல்லாம் அவனே, எந்நாளும் அவனே.

அப்படி ஒரு அன்பும் , பக்தியும் சிவன் மேல் அவருக்கு இருந்தது.

அனுதினமும் பிடிபடும் மீன்களில் தலையானதை இழப்பது என்பது பெரும் விஷயம். ஆனால் சிவன் மேலான அன்பு அவரை அதை செய்ய வைத்தது, கொஞ்சமும் தயக்கமின்றி சிவன் கொடுத்தது சிவனுக்கே என அன்போடும் மகிழ்வோடும் அனுதினமும் மிகப் பெரிய நல்ல மீனை கடலில் விட்டார்.

ஒருநாள் கூட அவர் அதில் தவறவில்லை, தன் அன்றாடக் கடமையாக அதைக் கருதினார். சுற்றி இருப்போர் பக்தியின் பித்து நிலை என்றார்கள், வாய்ப்பைத் தவறவிடும் மடையன் என்றார்கள், கடவுளின் ஆசியினை கடலில் எறியும் பைத்தியம் என்றார்கள்.

அவரோ அவர்போக்கில் தன் கடமையில் சரியாக இருந்தார். அந்த மீனின் மதிப்போ பணமோ எதுவும் அவருக்குத் தெரியவில்லை. தன் மீன்களில் எது மிக மதிப்பானதோ , எது உயர்வானதோ அதை சிவனுக்கு கொடுப்பதில் அவருக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி, ஒரு திருப்தி.

அதில்தான் திருப்தி.

“வெறுங்கையோடு கடலுக்கு செல்கின்றேன், மீன்கள் சிவன் கொடுப்பது, அதில் மிகச் சிறந்ததை அவனுக்குக் காணிக்கை ஆக்குகின்றேன். அது சாஸ்திர மீறலா, விதிமீறலா என்பதெல்லாம் தெரியாது. என்னிடம் இருப்பதில் உயர்ந்ததைக் கொடுக்கின்றேன்” என்பது அவர் நம்பிக்கை.

வில்வ இலை தூவி இன்னும் பல ஆகம முறைகளில் வழிபட வேண்டிய சிவனை மீனை கடலில் விட்டு வழிபடுவது அவரை அவமானபடுத்துவதற்கு சமம் , அபச்சாரம் என்ற குரல்கள் அவர் காதில் விழுந்தாலும் என்னிடம் இருப்பதில் உயர்ந்ததைக் கொடுப்பேன் என அவர்போக்கில் இருந்தார்.

அனுதினமும் காணிக்கையாய் சிறந்த மீனை கொடுத்தாரே தவிர சிவனிடம் அவர் கோரிக்கை ஏதும் வைக்கவில்லை.

பிரதிபலன் பார்ப்பது உண்மையான பக்தி ஆகாது , அது வியாபாரம்.

உலகாளும் சிவனுக்கு இவரைத் தெரியாதா.. அனுதினமும் இவர் பக்தியாய் கடலில் சமர்ப்பிக்கும் மீனை ஏற்றுக்கொண்டே வந்தார்.

ஒரு பாமரன் அதுவும் பரதவன், கடலும் படகும் தவிர ஏதும் அறியாத அவன் காட்டும் அன்பில் நெகிழ்ந்தார் .

ஆனால் ஒரு சாஸ்திரமும் , வேதமும் அறியா பாமரன் ஒருவன், மிகப்பெரும் சக்தியினை மனதால் உணர்ந்து, அதில் பக்தி கொண்டு, அனுதினமும் அந்த பரம்பொருளுக்கு காணிக்கை சமர்ப்பிப்பது அவரை உருக்கியது.

எல்லாம்வல்ல பரம்பொருள் தூய்மையான அன்போடு தன்னை வணங்கும் மனிதனை நோக்கி அன்போடு ஓடிவரும், அவனை மனதால் கொண்டாடும். அவன் அருகேதான் நிற்கும். அவன் மனதை கண்டு மகிழும்.

மனிதனால் தான் அதை உணரமுடியாதே தவிர, மனதால் தேடி உயிரால் குரல் கொடுத்தால் சிவம் ஓடிவரும்.

அதிபத்தரின் உன்னத பக்தியில் உருகிய சிவன், அவரின் மாபெரும் பக்தியினை உலகுக்கு உணர்த்த‌ சித்தம் கொண்டார்.

அதற்காக இதோ பக்தன் என சொல்லிவிட முடியாது, அவனின் பக்தி நிரூபிக்கப்பட வேண்டும், மகா இக்கட்டான நேரத்திலும் அவனின் பக்தி நிலையாய் நிற்க வேண்டும், எந்நிலையிலும் அவன் அன்பு மாறவில்லை என்பது தெரிய வேண்டும்.

யாருக்கு தெரியவேண்டும் ?சிவனுக்கா? இல்லை. உலகத்தாருக்கு .

அப்படி ஒரு சூழல் வந்தாக வேண்டும், பரம்பொருள் அப்படி உருவாக்கும் சூழலின் பெயர்தான் சோதனை, பறவை தன் குஞ்சு இனி பறக்கும், கீழே விழாது என எப்படி நம்பும் நிலை வந்தபின் பறக்க கற்று கொடுக்குமோ, கங்காரு எப்படி தன் குட்டி இனி நடக்கும் என தெரிந்தபின் அதை இறக்கிவிடுமோ, அப்படி தன் பக்தன் நிச்சயம் வெல்வான் என அறிந்த பின்பே சோதனையினை கொடுப்பார் சிவன்.

அதுவரை பறவை தன் செட்டைகளில் குஞ்சுகளை காப்பது போல, கங்காரு தன் பையில் குட்டியினை காப்பது போல் காத்து கொண்டிருப்பார்.

யாருக்கு எவ்வளவு தாங்கமுடியுமோ அவ்வளவுதான் சோதனை, தாங்கமுடியா சோதனை என எதுவுமில்லை, அன்பின் ஆழம் எவ்வளவோ அந்த அடிவரை சோதிப்பார் சிவன்.

அப்படி அதிபத்தருக்கும் சோதனை ஆரம்பித்தது, அவர் வலையில் மீன்கள் குறைய ஆரம்பித்தன. அதிபத்தர் எந்த சலனமும் கொள்ளவில்லை கிடைத்ததில் நல்ல மீனை தன் நன்றிகடனாய் கடலில் இட்டு கொண்டே இருந்தார்.

ஆயிரம் மீன்கள் ஐநூறானது, ஐநூறு நூறானது, நூறு பத்தானது. அந்நிலையிலும் அதிபத்தர் இன்முகத்தோடு சிவனுக்கு ஒரு மீன் அளித்து கொண்டே இருந்தார்.

மீன்கள் குறைய குறைய வீட்டில் செல்வம் குறைந்தது, வறுமை முளைவிட்டது, பணியாளர் இல்லை எங்கும் பற்றாக்குறை.

வீட்டில் வறுமை வளர வளர பிடிபடும் மீன்கள் எண்ணிக்கை குறைந்து இரண்டு என்ற எண்ணிக்கைக்கு‌ வந்தது, அப்பொழுதும் இரண்டில் எது நல்லதோ அதை சிவனுக்கு கொடுத்தார் அதிபத்தர்.

சோதனையின் உச்சகட்டம் வந்தது, வீட்டில் ஒரு நேர உணவு தடுமாற்றம் வந்தது, கடனும் இன்னும் சிக்கலும் தளைத்து வளர்ந்தன. இல்லாமை எங்கும் நிறைந்திருந்தது.

அப்பொழுது கடலுக்கு சென்ற அதிபத்தருக்கு ஒரு மீனே கிடைத்தது, அந்நிலையிலும் “என் வறுமை என்னோடு, சிவன் பொருள் சிவனோடு” என அதையும் கடலில் சிவனுக்காக இட்டு வெறும் கையாக திரும்பினார்.

வீட்டின் வறுமை அவருக்கு வருத்தம் கொடுத்தது, வீட்டில் உணவு கூட இல்லை என்பது கவலை கொடுத்தது, மீன்கள் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் இருந்தது, கண்களை அடிக்கடி துடைத்து கொண்டார்.

ஆனால் சிவனுக்கு கொடுக்க ஒரு மீன் கிடைத்ததே எனும் அந்த சந்தோஷம் அவரை எல்லா கவலையினையும் மறக்க வைத்தது

ஆனால் ஊர் உலகம் விடுமா? “சிவனுக்கு அள்ளி அள்ளி கொடுத்தாயே அதிபத்தா, உன் முடிவு என்ன? பைத்தியகாரதனத்தின் உச்சம் நீ. இப்பொழுது தெருவில் நிற்பது நீயா? சிவனா?

அவனுக்கு அபிஷேகமும் ஆராதனையும் எக்காலமும் உண்டு, உனக்கும் உன் குடும்பத்துக்கும் என்ன உண்டு?, காலம் பார்த்து கடல் கொடுத்ததை நாசமாக்கிய கயவன் நீ..” என காதுபட சொன்னார்கள்.

“சிவன் கொடுத்தான், சிவனே எடுத்தான். எனக்கு இப்பொழுது அவனுக்கு கொடுக்க ஒரு மீன் கிடைகின்றதே, அதுவரை அவன் என் கடமையினை சிவன் சரியாக இயக்குகின்றான்” என கொஞ்சமும் நழுவா உறுதியில் இருந்தார் அதிபத்தர்.

அவரும் நம்பிக்கையாய் கடலுக்கு செல்வதும், ஒரு மீன் மட்டும் கிடைப்பதும் அவர் அதையும் மகிழ்வோடு சிவனுக்கு கொடுப்பதும் வாடிக்கையனானது.

இந்த நிலையில் கொடும் வறுமை அவரை வாட்ட உற்றார் விலகினர், பந்தம் விலகியது, குடும்பமும் ஒதுக்கியது, கட்டுமரத்திலே தூங்குவதும், யாசக உணவு உண்பதுமாக காலம் கடத்தினார் அதிபத்தர்.

அப்பொழுதும் ஒரு மீன் கிடைப்பதும், அதை அவர் சிவனுக்கு படைப்பதும் நிற்கவில்லை

சிவனும் ஆட்டத்தை நிறுத்தவில்லை, அதிபத்தரும் கொஞ்சமும் வாடவில்லை, அந்த பாச பக்தி விளையாட்டு தொடர்ந்து கொண்டே இருந்தது.

ஆட்டம் அதன் போக்கில் இருந்தது, இருவரும் சளைக்காமல் ஆடினர். கடைசியாக மிகபெரும் சோதனை ஒன்றை காட்டிவிட்டு ஆட்டத்தை முடிக்க திருவுளம் கொண்டார் சிவன்.

ஆம், மிக மிக இக்கட்டான சோதனை வைக்கப்பட்டது. சிவன்மேல் அதிபத்தர் கொண்ட அன்பினை உலகுக்கு நிரூபிக்கும் சோதனை அது.

அன்று ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திர நாள், ஏதோ விழாவுக்காக கடற்கரை களை கட்டியிருந்தது, அதில் ஆர்வமின்றி வழக்கம் போல் மீன்பிடிக்க கிளம்பினார் அதிபத்தர். அவருக்காக அல்ல , மாறாக‌ ஒரு மீன் கிடைக்கும் அதை சிவனுக்கு கடலில் அர்ப்பணிக்கலாம் எனும் அதே பக்தியோடு படகேறினார்.

அதைத் தவிர என்ன தெரியும் அவருக்கு?

அன்று வழக்கம் போல ஒரு மீனுக்கு வலைவிரித்து அதிபத்தர் காத்திருக்க நெடுநேரம் ஒன்றும் சிக்கவில்லை, எந்நாளும் கிடைத்த ஒரு மீன் கூடவா இன்று சிவனுக்காக சிக்கவில்லை என வருந்திய அதிபத்தர் நெடுநேரம் காத்திருந்தார்.

நெடுநேரம் கழித்து ஒரே ஒரு மீன் சிக்கியது , ஆனால் அது மகா மகா அபூர்வ மீன்.

ஆம், அதன் செதில்கள் தங்கமாய் இருந்தன, கண்களைச் சுற்றி மாணிக்கம் ஒளி வீசியது, வாலில் ரத்தினங்கள் இருந்தன. பற்களில் வைடூரியம் ஒளி வீசிற்று. தங்க சூரியன் கையில் இருப்பது போல அதிபத்தர் கையில் அப்படி மின்னியது அந்த மீன்.

ஒரே நொடியில் ஏழ்மையின் ஆழத்தில் இருந்து கோபுரத்துக்கு அதிபத்தரை தூக்கி செல்லும் மீன் அது, ஏழு தலைமுறைக்கும் அவருக்கு தேவையானதைக் கொடுக்கும் மீன் அது

கடலில் அதை அவர் பிடித்ததும் அக்கம்பக்கப் படகுக்காரர்கள் வந்தார்கள். இத்தோடு அதிபத்தரின் வறுமை ஒழிந்தது என்று கூவினார்கள். சிவன் அவரை கைவிடவில்லை என்றார்கள், தங்கள் வலையினை சோகமாக நொந்து கொண்டார்கள்.

அதிபத்தரின் நிலை ஒருவகையில் சிக்கலாய் இருந்தது, உடன் இருந்த மானிடரோ அதிபத்தருக்கு வாழ்வு வந்தது, சிவன் தன் பக்தரை வாழ வைத்தான் என கூக்குரலிட்டனர், இனி சிவனுக்கு ஆலயம் கட்டி அள்ளி கொடுப்பார் அதிபத்தர் என்றெல்லாம் பேச்சுக்கள் வந்தன.

அதே நேரம் வானில் இருந்து சிவனும் பார்வதியும் பூத கணங்களும் நந்தியும் அதிபத்தரை பார்த்துக் கொண்டே இருந்தனர்.

நிலைமையினை கவனியுங்கள்.

கையில் இருப்பதோ தங்கமீன், வீட்டில் இருப்பதோ கொடும் வறுமை. நிச்சயம் இது சிவனின் கருணை, சந்தேகமில்லை. நாளெல்லாம் சிறந்த மீனை அதிபத்தர் கொடுத்ததற்கு, ஒரே மீனையும் கொடுத்த பலனுக்கு, அந்த பக்தனுக்கு சிவன் கொடுத்த பெரும் பரிசு.

ஆனால் கிடைத்திருப்பது ஒரு மீன், இதை எடுத்துச் சென்றால் அவரின் பக்தி பலன் எதிர்பார்த்தது என்றாகி விடும், இதுகாலம் காத்த தவம் போலி என்றாகி நொடியில் சரியும், தங்கமீனுக்காகத் தவமிருந்தான் அதிபத்தன் எனும் பழி வரும். அவரும் சராசரி பக்தனாகி விடுவார், பின் எங்கிருந்து தனித்து நிற்பது?

இந்தப் புள்ளியில் வசமாக சிக்கினார் அதிபத்தர்.

சிவன் புன்னகை பூக்க அவரை பார்த்து கொண்டிருந்தார், பூத கணங்களும் , பார்வதியும், தேவர்களும் நந்தியும் அவர் என்ன செய்ய போகின்றார் என இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தனர்.

ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு சிந்தனை.

இது பக்தியின் பரிசு என சொல்லி பெரும் கோவில் கட்டுவார் என்றது ஒரு பூதம், தன்னை நம்பிய பக்தனை சிவன் கைவிடவில்லை என அவர் புகழ் நிலைக்கும் என சொன்னது மற்றொரு பூதம்.

“கூட ஒரு மீன் கொடுத்திருக்கக் கூடாதா நாதா.. இதென்ன விளையாட்டு ” என சொல்லிக் கொண்டிருந்தார் தேவி.

அதிபத்தர் கையில் இருப்பது ஒரு மீன், அவரின் வாழ்வும் அதில்தான் இருக்கின்றது, அவர் சிவன் மேல் கொண்ட பக்தியும் அதில்தான் இருக்கின்றது.

வாழ்வா? சிவன் மேல் கொண்ட அன்பா? எதைத் தேர்ந்தெடுக்கப் போகின்றார் அதிபத்தர் என எல்லோரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதிபத்தர் மீனை தூக்கிப் பிடித்தார், “சிவனே, என்னை ஆட்கொண்ட பெருமானே. எக்காலமும் என் கையில் இருக்கும் மீன்களில் எது சிறந்ததோ , அதை உனக்கு தந்தேன், இதோ மீனகளிலெல்லாம் மகா உயர்ந்த தங்கமீன் கிடைத்திருக்கின்றது.

மிக சிறந்த மீனை உனக்காக கடலில் விடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். இதோ எடுத்துக் கொள், ஓம் சிவோஹம்” எனச் சொல்லி சிவனுக்கு கடலில் அர்ப்பணம் செய்து விட்டார்.

அந்த முகத்தில் கொஞ்சமும் வருத்தமோ கலக்கமோ இல்லை, பெரும் தனபொருள் கைவிட்டு போகின்றதே எனும் சிந்தனை துளியுமில்லை.

தன் நிலை கலங்காது எந்நாளும் எப்படி மீனை சிவனுக்காய் கடலில் விட்டாரோ அப்படியே இதையும் செய்தார். அதன் விலை என்ன? பலன் என்ன? இன்னபிற லாப சிந்தனையெல்லாம் அவரில் இல்லை.

கிடைத்த பொக்கிஷமான மீனையும் சிவனுக்குப் படைத்தோம் எனும் திருப்தி மட்டும் அவரின் முகத்தில் ஒளிர்ந்தது.

அவரின் கொடிய வறுமை அவருக்கு நினைவிலில்லை, ஊரின் ஏளனமும் , சீண்டலும் அவருக்கு நினைவிலில்லை, எல்லோரும் கைவிட்டு தனிமனிதனாய், அனாதையாய், பிச்சைக்காரனாய் நின்றதும் அவருக்கு வருத்தமாக இல்லை.

எந்நிலையிலும் என்னிடம் உள்ளதில் சிறந்தது எதுவோ அதை என் அப்பன் சிவனுக்கு தருவேன் என நின்றார். அந்த மீன் அவரை மயக்கவில்லை, குழப்பவில்லை, சுயநலத்தைத் தேடச் சொல்லவில்லை.

எல்லோரும் மீனால் அவருக்கு வாழ்வு என சொல்ல, அவரோ சிவனுக்குக் கொடுக்க, மிகப்பெரும் அர்ப்பணிப்பு பாக்கியம் கிடைத்தது என்று தான் அந்த மீனைக் கண்டார்.

ஆம். அவர் அவருக்காக வாழவில்லை, அவரின் வாழ்வும், நோக்கமும், எண்ணமும் எல்லாமே சிவம், சிவம், சிவம் ஒன்றே.

அந்த அன்பு சிவனை தோற்கடித்தது, மகா தூய்மையான அன்பின் உச்ச பக்தியில் சிவனையே தோற்கடித்தார் அதிபத்தர்.

அந்த நொடி, சிவன் பெயரைச் சொல்லி தங்கமீனை அதிபத்தர் கடலில் இட்ட அந்த நொடி..

அவர் புன்னகையும் நிம்மதியும் கொண்டு , துளி சஞ்சலமின்றி அந்த தங்கமீனை சிவனுக்காக கடலில் விட , வானில் பேரொளி தோன்றிற்று, ஒளியின் நடுவில் சிவபெருமான் ரிஷபம் மேல் பார்வதியுடன் இருந்தார்.

ஊர் அறிய உலகறிய அவரின் பக்திக்குச் சான்றாக சிவனே அங்கு வந்தார், வந்து அருள் புரிந்தார். அதிபத்தர் இழந்த எல்லா வாழ்வும் திரும்பிற்று.

“எல்லாவற்றையும் விட என்மேல் அன்பு வைத்து அதை நிரூபித்தும் காட்டிய அதிபத்தா, உன் புகழ் எக்காலமும் நிலைக்கும், அத்தோடு கயிலையில் நீ என் திருவடியில் இருக்கும் பாக்கியம் பெறுவாய்..” என சொல்லி வாழ்த்தி சென்றார் சிவன்.

அதன் பின் பெருவாழ்வு வாழ்ந்த அதிபத்தர் பூமியில் வாழ்வு கடன் முடித்தபின் சிவலோகப் பதவி அடைந்தார்.

எந்நிலையிலும் கலங்காத, குறையாத சிவனின் மேலான அன்பு அவரை நாயன்மார்களில் முதலிடத்தில் வைத்தது.

63 நாயன்மார்களில் முதல் நாயன்மார் இந்த அதிபத்தரே.

இது எப்படி சாத்தியமாயிற்று?

அதிபத்தர் சாமான்யன், அவருக்கு வேதம் தெரியாது, லிங்கம் தெரியாது, அபிஷேகம் தெரியாது, மந்திரம் தெரியாது, வில்வ இலை அர்ச்சனை தெரியாது, சிவன் மூலகடவுள் என்பதைத் தவிர எதுவும் தெரியாது.

ஆனால் அந்த பக்தியில் உன்னதமாய் உறுதியாய் இருந்தார், தன் மனதில் சிவனுக்கு அவ்வளவு பெரும் இடம் கொடுத்திருந்தார். அந்த அன்பின் உறுதியே அவரை இயக்கிற்று. அந்த அன்பின் தன்மையே அவரை நாயன்மார்களில் முதல் நபராக்கிற்று, காலாகாலத்திற்கும் முதலிடத்தில் அவரை சேர்த்தும் விட்டது.

அவரை நாயன்மார் வரிசையில் சேர்த்தது கல்வியா? வேதமா? வழிபாடா? யாகமா? தவமா? எதுவுமில்லை. மாறாக அன்பு, எனக்கு உன்னை தவிர ஏதும் தெரியாது சிவனே என சரணடைந்த அந்த தூய அன்பு.

அதிபத்தரை வாழ்த்திவிட்டு கயிலாயத்தில் அமர்ந்திருந்தார் சிவன், பூலோகம் எங்கும் அதிபத்தரின் சிவ‌ அன்பும் , சிவன் அவனுக்கு காட்சி கொடுத்ததுமே பேச்சாய் இருந்தது.

சிவனை நோக்கி மெல்ல சிரித்தாள் தேவி, “என்ன சிரிப்பு இது “, என வினவினார் சிவன்.

“நாதா, உங்கள் மேல் அன்பு கொண்ட அடியவரே இவ்வளவு அன்புள்ளம் கொண்டவராக இருந்தால், அவர் வணங்கும் நீங்கள் எவ்வளவு அன்புள்ளம் கொண்டவராக இருக்க முடியும். அன்பே சிவம்” என மெல்ல சொன்னார் தேவி.

“ஆம் தேவி, எந்த சக்தியாலும் கட்டமுடியாத என்னை அன்பு எனும் ஆயுதம் கட்டிப் போடுகின்றது. இதை உணர்ந்து தான் அசுரரும் தவமிருந்து என்னை உருகச் செய்து அவர்களுக்கு வேண்டிய வரத்தை பெறுகின்றனர்.

அன்பு கொண்டு எவர்வரினும் நான் அவர்கள் யாரென பார்ப்பதில்லை, நோக்கம் பற்றி சிந்திப்பதில்லை, அன்பு ஒன்றே அவர்கள் முகவரி. அன்பு என்ற கயிறால் என்னை கட்டுகின்றார்கள், அன்பால் என்னை அடைந்து அவர்கள் கேட்கிறார்கள்.. நான் கொடுத்து விடுகின்றேன் தேவி..”

ஆம், சிவன் எனும் மிகப்பெரும் பரம்பொருள் யாகத்துக்கோ, பலிக்கோ, வழிபாட்டுக்கோ, இல்லை பிரார்த்தனைகளுக்கோ கட்டுப்படுபவர் அல்ல. அவர் அன்பே உருவானவர், அன்பு ஒன்றுக்கே அந்த சிவம் அசையும் என்பதை நிரூபித்து முதல் நாயன்மார் எனும் பதத்தை அடைந்தார் அதிபத்தர்.

அவரை தன் காலடியில் சேர்த்து அது மகா உண்மை என நிரூபித்தார் சிவன். சிவனும் சிவனடியாரும் அன்பும் வேறல்ல, மூன்றும் ஒன்றே.

இன்றும் நாகையில் வருடாவருடம் அந்தக் காட்சி நடைபெறும். திருசெந்தூர் சூர சம்ஹாரம் போல, மதுரை மீனாட்சி கல்யாணம் போல நாகையில் ஆவணிமாதம் ஆயில்ய நட்சத்திர நாள் தங்கமீனை படகில் சென்று கடலில் விடும் நிகழ்வு நடைபெறும்.

அந்த நுளம்பாடி இருந்த இடம் இப்போதைய நாகையின் நம்பிக்கை நகர் பகுதியாகும்.

நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் உடனுறை காயாரோகண சுவாமி கோயிலில் இருந்து கிளம்பும் ஊர்வலம் அப்படியே அமுதீசர் கோவிலை அடையும் . அமுதீசர் கோவிலில் இருந்து தங்கமீன் சிலையினை எடுத்து செல்லும் அதிபத்த நாயனாரின் வாரிசில் ஒருவர் (ஆம் அவரின் வாரிசுகள் இன்றும் உண்டு) அந்தத் தங்க மீனை சிவன் பெயரை சொல்லி கடலில் விடுவர். அப்பொழுது மேளம் இசைக்கப்படும். ஆலய மணி முழங்கும்.

மிக விமரிசையாக நடக்கும் அந்த விழாவும், திருத்தொண்டர் புராணமும் எக்காலமும் அதிபத்தரின் அன்பினை பக்தியினை சொல்லிக் கொண்டே இருக்கும்.

நாகை கடல் அலை அதிபத்தரின் நினைவினை சுமந்து கொண்டே வீசிக் கொண்டிருக்கின்றது.

கடலும் மீனும் உள்ள அளவும் நிலைத்திருப்பார் அதிபத்தர்.

மீனையும் கடலையும் காணும் பொழுதெல்லாம் அதிபத்தர் உங்கள் நினைவில் வந்தால் சிவனின் அருள் உங்களையும் வந்தடையும்.

பகவத் கீதை 18: மோட்ச சந்நியாச யோகம் : 03/03

Image may contain: 1 person, indoor

“அர்ஜூனா, அறிவினால் செயல்களை யெல்லாம் எனக்கெனத் துறந்துவிட்டு, என்னிடத்தே ஈடுபட்டு, புத்தி யோகத்தில் சார்புற்று, எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு.

என்னைச் சித்தத்தில் கொண்டிருப்போனாய் எல்லாத் தடைகளையும் எனதருளால் கடந்து செல்வாய். அன்றி நீ அகங்காரத்தால் இதனைக் கேளாது விடுவாயாயின், பெரிய நாசத்தை அடைவாய்.

நீ அகங்காரத்திலகப்பட்டு “இனிப் போர் புரியேன்” என்று துணிவாயாயின், உன் துணிவு பொய்யாகும் . இயற்கைகுணமான உன் போர் குணம் உன்னை அங்கே இழுக்கும்

இயற்கையில் தோன்றிய ஸ்வகர்மத்தால் கட்டுண்டிருக்கும் நீ, மயக்கத்தால் அதனைச் செய்ய விரும்பாயெனினும்,உன்னை மீறியும் அதைச் செய்ய உந்தபடுவாய்.

அர்ஜுனா, எல்லா உயிர்களுக்கும் பரம்பொருள் உள்ளத்தில் நிற்கிறான். மாயையால் அவன் எல்லா உயிர்களையும் சக்கரத்திலேற்றிச் சுழற்றுகிறான்.

அர்ஜுனா, எல்லா வடிவங்களிலும் அவனையே சரணெய்து, அவனருளால் பரம சாந்தியாகிய நித்திய ஸ்தானத்தை எய்துவாய்.

இங்ஙனம் ரகசியத்திலும் ரகசியமாகிய ஞானத்தை உனக்குரைத்தேன். இதனை முற்றிலும் ஆராய்ச்சி செய்து எப்படி இஷ்டமோ அப்படிச் செய்.

மீட்டுமொருமுறை எல்லாவற்றிலும் ஆழ்ந்த ரகசியமாகிய எனது பரம வசனத்தைக் கேள். நீ திடமான நண்பன். ஆதலால் உனக்கு இந்த ரகசியத்தை சொல்லுகிறேன்.

உன் மனதை எனக்கு தா. என் தொண்டனாகு . எனக்கென வேள்விசெய். என்னையே வணங்கு. என்னை அடைவாய்,இதுதான் உண்மை, நீ எப்பொழுதும் எனக்கு இனியவன்

எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னையே சரண் புகு. எல்லாப் பாவங்களினின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன். துயரப்படாதே.

இதை எப்போதும் தவமிலாதோனுக்கும், பக்தியில்லாதோனுக்கும், கேட்க விரும்பாதோனுக்கும் என்பால் பொறாமையுடையோனுக்கும் சொல்லாதே.

இந்தப் பரம ரகசியத்தை என் பக்தர்களிடையே சொல்லுவோன், என்னிடத்தே பரம பக்தி செலுத்தி என்னையே எய்துவான். ஐயமில்லை.

மானிடருள்ளே அவனைக் காட்டிலும் எனக்கு இனியவன் வேறில்லை. உலகத்தில் அவனைக் காட்டிலும் எனக்கு உகந்தவன் வேறெவனும் இல்லை.

நம்முடைய இந்தத் தர்மமயமான சம்பாஷணையை எவன் படிப்பானோ, அவன் செய்யும் அந்த ஞான காரியங்களால் நான் திருப்தி பெறுவேன். இது என் உறுதி.

நம்புதல் கொண்டு, பொறாமை போக்கி இதனைக் கேட்பது மட்டுமே செய்தாலும், அவனும் விடுதலையடைவான், அப்பால் புண்ணியச் செயல் செய்தோர் எய்தும் நல்லுலகை எய்துவான் .

அர்ஜூனா, சித்தத்தை ஏகாந்தமாக்கி இதை நீ கேட்டு வந்தாயா? தனஞ்ஜயா, உன் அஞ்ஞான மயக்கம் அழிந்ததா?

அர்ஜுனன் சொல்லுகிறான், “கண்ணா மயக்க மழிந்தது நின்னருளாலே, நான் நினைவு அடைந்தேன்; ஐயம் விலகி நிற்கிறேன்; நீ செய்யச் சொல்வது செய்வேன்.

சஞ்சயன் சொல்லுகிறான் , இப்படி நான் வாசுதேவனுக்கும் மகாத்மாவாகிய பார்த்தனுக்கும் நிகழ்ந்த அற்புதமான உரையாடலை கேட்டேன்.

யோகக் கடவுளாகிய கண்ணன் இந்தப் பரம ரகசியமான யோகத்தைத் தான் நேராகவே சொல்லும்போது நான் அதை வியாசனருளால் கேட்டேன்.

அரசனே, கண்ணனின் வியப்புக்குரிய இந்த புண்ய சம்பாஷணையை நினைத்து நினைத்து நான், மீட்டு மீட்டும் களிப்பெய்துகிறேன்.

அரசனே (திருஷ்டிராசனே), பரமாத்வாவின் மிகவும் அற்புதமான அந்த ரூபத்தை நினைத்து நினைத்து எனக்குப் பெரிய ஆச்சரியமுண்டாகிறது; மீட்டு மீட்டும் களிப்படைகிறேன்.

கண்ணன் யோகக் கடவுள், எங்குளன், வில்லினை யேந்திய விஜயன் தன்னோடும்? அங்கு திருவும் ஆக்கமும் வெற்றியும் நிலை தவறாத நீதியும் நிற்கும்..”

கீதையின் நிறைவு பகுதி இது, அதன் சுருக்கம் இதுதான்

அர்ஜூனா என்னில் உன் முழு நம்பிக்கையும் வைத்து கர்மத்தை செய், நான் எல்லாம் விளக்கியாயிற்று, போர் வேண்டாம் என்று நீ விலகினாலும் அடிப்படையில் நீ வீரன், தர்மனோ இல்லை பீமனோ தாக்கபட்டால் உன் இயல்பு உன்னை போருக்கு அழைக்கும் , உன் இயல்பினை நீ மீற முடியாது.

எல்லா உயிரிலும் பரம்பொருள் இருக்கின்றான், அவன் விருப்பம் இருக்கின்றது, கண்ணுக்கு தெரியாமல் உலகை இயக்குபவன் அவனே, நீ அவனை உணர்ந்து அவனை அடைவாய்

அர்ஜூனா இந்த ரகசியத்தை நான் உனக்கு உரைத்தேன், நீ இனி முடிவெடு. உன் மனதால் என்னை அறி, உன் மனதை எனக்கு கொடு. உன் எல்லா பாவங்களில் இருந்தும் நான் உன்னை விடுவிப்பேன்

உனக்கு சொன்ன இந்த போதனையினை நம்பிக்கை இல்லாதவன், மடையன், அறிவில்லா முட்டாள், கேட்க விரும்பாதவனுக்கு சொல்லாதே

இதை என்னை நம்பியவரிடம் சொல் , அப்படி சொல்பவனை நான் நேசிப்பேன், அவனின் எல்லா ஞான காரியங்களிலும் நான் துணையிருப்பேன். இதை சொல்பவன் மட்டுமல்ல காது கொடுத்து கேட்பவனும் புண்ணிய உலகை எய்துவான்

இத்தோடு கீதையினை முடிக்கின்றான் பகவான், தெளிந்த அர்ஜூனன் முக மலர்ச்சியுடன் உற்சாகமாய் காண்டீபத்தை கையில் எடுக்க, பாஞ்சன்ய சங்கை எடுக்கின்றான் கண்ணன்

தூரத்தில் இதை மனதால் உணர்ந்து மகிழும் சஞ்சயன் மகிழ்ச்சியாலும் பூரிப்பாலும் நிறைகின்றான், கண்ணன் யோக கடவுள் என்பதை உணர்ந்து, கண்ணனும் அர்ஜூனனும் இருக்குமிடம் வெற்றி என சொல்கின்றான்

இத்தோடு அத்தியாயம் நிறைவுறுகின்றது

இந்த நீண்ட அத்தியாயம் கிட்டதட்ட கீதையின் சுருக்கமாகின்றது, இதில் கவனிக்க வேண்டிய சில வரிகள் உண்டு

அர்ஜூனா உன் மனதை எனக்கு கொடு, என்னில் நிலைத்திரு என்பதும் உன் பாவங்களை நான் விடுவிக்கின்றேன் என்பதும் பைபிளில் அப்படியே வரும் வசனம்

“ஒருவன் என்னுள்ளும் நான் அவனுள்ளும் நிலைத்து நின்றால் அவன் நித்திய வாழ்வடைவான்” என்றும் “கடவுள் ஒருவரே பாவங்களை மன்னிக்க வல்லவர்” என்பதும் அப்படியே வருகின்றது.

தன் ஞான போதனையினை முட்டாள்களிடமும், அசட்டை செய்யும் மூடர்களிடமும் , நம்பிக்கை இல்லாதோரிடமும் சொல்லவேண்டாம் என்கின்றான் கண்ணன்

“பன்றிகள் முன் முத்தை எறிய வேண்டாம், உங்களை ஏற்றுகோள்ளாவிட்டால் காலில் தூசி என தட்டிவிடுங்கள்” என்கின்றார் இயேசு

எவன் மனதால் என்னை நேசிக்கின்றானோ அவனை நான் நேசிப்பேன் என்கின்றார் பகவான், அர்ஜூனனின் மயக்கம் இந்த அத்தியாத்தில் அவரால் தெளியவைக்க‌படுகின்றது

அப்படியாக நாமும் மயக்கம் தெளிவோம்

தொலைவில் இருந்து கேட்ட சஞ்சயன் மகிழ்ந்தது போல நாமும் இன்று கீதையினை கேட்டு மகிழ்ந்திருக்கின்றோம், சஞ்சயன் சொல்கின்றான் கண்ணனு அர்ஜூனனும் இருக்குமிடம் வெற்றியாகும்

அது போர் வெற்றி மட்டுமல்ல, கண்ணன் என்பது பரமாத்மா, அர்ஜூனன் என்பது நம்மை போல் ஜீவாத்மா. ஆம் பரம்பொருளும் ஜீவாத்மாவும் கலந்திருக்கும் இடம் வெற்றி நிச்சயம், அங்கு ஒரு ஆபத்தும் வராது.

கீதையின் இறுதியில கண்ணன் தெளிவாக சொல்கின்றார் , கீதையினை சொல்பவனும் கேட்பவனும் நல்லுலகம் அடைவான் இது சத்தியம்

ஆக நாமும் 18 அத்தியாயங்களையும் கேட்டோம் உங்களுக்கும் சொன்னோம்.

பகவான் நம் எல்லோருக்கும் நற்கிரியைகளையும் தெளிந்த புத்தியினையும் நல் மனதையும் அருளட்டும்.

பகவத் கீதை 18ம் அத்தியாயம் ‍ – மோட்ச சந்நியாச யோகம் : 02/03

Image may contain: 1 person, standing

பகவத் கீதை 18ம் அத்தியாயம் ‍ – மோட்ச சந்நியாச யோகம் : 02/03

அர்ஜூனா, ஆசை நீங்கியவன், அஹங்காரமற்றவன், உறுதியும் ஊக்கமும் உடையவன் வெற்றி தோல்வியில் வேறுபடாதவன் இத்தகையவன் குணம் உடையோன் சாத்விகமானவன்.

ஆசையுள்ளவன், வினைப்பயனை விரும்புபவன், பிறர்பொருளை விரும்புபவன், துன்புறுத்தும் தன்மையுடையவன், சுத்தமில்லாதவன், மகிழ்வும் சோர்வும் கொள்பவன், அத்தகைய குணம் உடையோன் ராஜஸன்.

யோகத்திற்கு ஒவ்வாத மனமுடையவன், அறிவு வளரப்பெறாதவன், முரடன்,வஞ்சகன், பழிகாரன், சோம்பேரி, துயருறுபவன், காலம் நீட்டிப்பவன், இத்தகைய குணமுடையோன் தாம்சன்.

அர்ஜூனா, புத்தியினுடையவும், அங்ஙனமேயுள்ள உறுதியினுடையவும் குணங்களுக்கேற்ற மூன்றுவிதமான பேதத்தை தனித்தனியாய் பாக்கியில்லாமல் சொல்கிறேன் கேள்

ஈடுபாட்டையும், நிவிர்த்தியையும், செய்யத்தகுந்த காரியத்தையும் செய்யக்கூடாத காரியத்தையும், பயத்தையும், பயமின்மையையும், பந்தத்தையும், மோக்ஷத்தையும் எது அறிகிறதோ அந்த புத்தி சாத்திவிகமானது

தர்மத்தையும், அதர்மத்தையும் செய்யக்கூடிய காரியத்தையும், செய்யக்கூடாத காரியத்தையும் சரியாக அறியாத புத்தி ராஜஸமானது

அக்ஞான இருளால் மூடப்பெற்ற எந்த அறிவானது அதர்மத்தை தர்மமாகவும், பொருட்களையெல்லாம் விபரீதமாகவும்(அதர்மமாகவும்) நினைக்கிறதோ அது தாமஸமானது

ஒருமைபட்ட‌ மனத்தைக்கொண்டு பிறழாத எந்த உறுதியால் மனம்,பிராணன்,இந்திரியங்களின் செயல்களை ஒருவன் நெறிப்படுத்துகிறானோ, அந்த ஊறுதியானது சாத்வீகமானது

எந்த உறுதியினால், அறம்,இன்பம்,பொருள் ஆகியவைகளை காக்கிறானோ, பெரும் பற்றுதலால் பயனை விரும்புபவனாகிறானோ. அந்த உறுதியானது ராஜஸமானது

தூக்கத்தையும், பயத்தையும், துயரத்தையும், மனக்கலக்கத்தையும், செருக்கையும் விடாமல் பிடிக்கும் அறிவிலியின் உறுதியானது தாமஸமானது

அர்ஜூனா, எந்த பயிற்சியால், இன்பமடைகிறானோ, துக்கத்தின் முடிவை அடைகிறானோ,அந்த மூன்றுவிதமான சுகத்தை சொல்கிறேன் கேள்

எது முதலில் விஷம் போலவும் முடிவில் அமிர்தத்திற்கு ஒப்பானதும் ஆகிறதோ அந்த சுகம் சாத்விகம். ஆத்மநிஷ்டையில் தெளிவடைந்த புத்தியில் அது தோன்றுகிறது

இந்திரியங்கள் மூலம் இந்திரியார்த்தங்களை அனுபவிப்பதால் முதலில் அமிர்தம் போலவும் முடிவில் விஷம் போலவும் வரும் சுகம் எதுவோ அது ராஜஸம் என சொல்லப்படுகிறது

எந்த சுகம் துவக்கத்திலும் முடிவிலும் தனக்கு மயக்கத்தை உண்டுபண்ணுகிறதோ, சோம்பல்,தடுமாற்றம் இவற்றிலிருந்து பிறக்கும் அது தாமஸம் என்று சொல்லப்படுகிறது

இயற்கையில் இருந்து உதித்த இந்த மூன்று குணங்களிலிருந்து விடுதலையடைந்த, அந்த சுத்த ஸத்துவம் பூவுலகிலோ அல்லது தேவலோகத்தில் தேவர்களுக்கிடையிலோ இல்லை

அர்ஜூனா, பிராம்மண, சத்திரிய, வைசிய, சூத்திரர்களுடைய கர்மங்கள் ஸ்வபாவத்திலிருந்து பிறந்த குணங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டிருக்கிறது

அந்தக்கரணங்களை அடக்குதல், புறக்கரணங்களை அடக்குதல், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை,சாஸ்திரஞானம், விக்ஞானம், கடவுள் நம்பிக்கை இவையாவும் பிராமணனுக்கு ஸ்வபாவத்தில் உண்டான கர்மங்களாகும்

சூரத்தன்மை, துணிவு, உறுதி, சாதுர்யம், போரில் புறங்காட்டமை,தானம், ஈஸ்வரத்தன்மை இவைகள் சத்திரியங்களுக்கு ஸ்வபாவத்தில் உண்டான கர்மங்களாகும்

உழவும், கால்நடை காத்தலும், வண்கமும் இயல்பாயுண்டாகிய வைசிய கர்மங்கள். உலகம் இயங்க‌ பணியை செய்வது சூத்திரனுக்கு இயல்பாய் உண்டான கர்மம்

அவனவனுக்குரிய கர்மத்தில் இன்புறுகின்ற மனிதன் நிறைநிலையை அடைகிறான். தன் கர்மத்தில் கருத்து வைப்பவன் எப்படி பரிபூரணத் தன்மையை அடைகிறான் அதைக்கேள்

யாரிடத்திலிருந்து உயிர்கள் உற்பத்தியாயினவோ, யாரால் இவ்வையகம் எல்லாம் வியாபிக்கப்பட்டுள்ளதோ அவரை மனிதன் தனக்குரிய கர்மத்தால் அவரை வணங்கி சித்தியடைகிறான்

குறையில்லாத பிறருடைய தர்மத்தைவிட குறையுள்ளதாக இருந்தாலும், தன்னுடைய தர்மம் சிறந்தது. சுவபாவத்தில் அமைந்த கர்மத்தை செய்பவன் கேடு அடைவதில்லை

அர்ஜூனா, குறை உடையதாக இருந்தாலும். தன்னுடன் பிறந்த கர்மத்தை விடக்கூடாது. ஏனென்றால் தீ புகையால் சூழப்பட்டிருப்பதுபோல் எல்லா கர்மங்களும் குறைகளால் சூழப்பட்டிருக்கிறது

எங்கும் பற்றற்ற புத்தியுடையவனாய், சிந்தையை அடக்கியவனாய், ஆசையற்றவனாய், சந்நியாசத்தால் உயர்ந்த கர்மமற்ற நிலையை அடைகிறான்

செயலற்ற நிலையை அடைந்தவன் எப்படி ஞானத்தின் மேலான வடிவாகிய பிரம்மத்தை அடைகிறானோ, அதை சுருக்கமாக சொல்கிறேன் கேள்

பரிசுத்தமான புத்தியுடன் கூடியவனாய், உறுதியுடன், உடலையும், உள்ளத்தையும் அடக்கி, சப்தம் முதலிய இந்திரிய விஷயங்களை துறந்து விருப்பு, வெறுப்பை துறந்து

தனித்திருப்பவனாய், குறைவாக உண்பவனாய், வாக்கையும், உடலையும் மனத்தையும் அடக்கியவனாய், எப்பொழுதும் தியான யோகத்தில் விருப்பமுள்ளவனாய், வைராக்கியத்தை அடைந்தவனாய்,

அகங்காரம், வன்மை, செருக்கு, காமம், குரோதம்,தனக்கென்று எதுவும் இல்லாமல், நான் செய்கிறேன் என்ற எண்ணமின்றி, சாந்தமாக இருப்பவன் பிரம்மமாவதற்கு தகுந்தவனாகிறான்

பிரம்மஞானத்தில் உறுதிபெற்று தெளிந்த மனமுடையவன் துயருறுவதில்லை, ஆசைப்படுவதில்லை, எல்லா உயிர்களிடத்தும் ஸமமாக இருப்பவன் என்னிடத்தில் மேலான பக்தியை அடைகிறான்

நான் எத்தன்மையுடையவனாக இருக்கிறேன் என்று பக்தியினால் உள்ளபடி அறிகிறான். அதன்பிறகு என்னை உள்ளபடி அறிந்து, விரைவில் என்னிடம் ஐக்கியமாகிறான்

எப்பொழுதும் எல்லா கர்மங்களையும் செய்தபோதிலும், என்னை சரணடைகிறவன் எனது அருளால் நித்தியமாயிருப்பதும், அவ்யயம் ஆகிய நிலையை அடைகிறான்

விவேகத்தால் கர்மங்களையெல்லாம் என்னிடம் ஒப்படைத்து, என்னை குறிக்கோளாகக்கொண்டு, புத்தியோகத்தை சார்ந்திருந்து எப்பொழுதும் சித்தத்தை என்னிடம் வைத்தவனாக இரு

கவனியுங்கள் மூவகை குணங்களுக்கான இயல்பினரை கண்ணன் சொல்கின்றான்

ஆசை வென்றவன், எல்லா நிலையிலும் சமநிலை கொண்டவன், உறுதி கொண்ட மனம் கொண்டவன் சாத்வீகத்தான். பேராசை கொண்டவனும், பழிபாவங்களுக்கு அஞ்சாத சுயநல வெறியன் ரஜோ குணம் கொண்ட ரஜோஸன். முரடனும் அறிவில்லாதவனும் சோம்பேரியுமாக இருப்பவன் தாம்ஸன்.

முதல் குணத்துக்கு தவமுனிகளை சொல்லலாம், இரண்டாம் உதாரணம் ராவணன், மூன்றாம் உதாரணம் கும்ப கர்ணன்.

புத்திகளில் மூவகை உண்டு , செய்வதை அறிந்து நிதானத்துடனும் விளைவுகளை அறியும் சிந்தையுடனும் செய்வது சாத்வீகம் , தர்ம நியாயம் பிரித்தரியாமல் சுயநலனை முன்னிறுத்தும் புத்தி ராஜோசம், குழப்பத்திலே சிக்கியிருப்பது தாமோசம்

இதில் விதுரனையும், துரியோதனையும், கிருபரையும் உதாரணமாக கொள்ளலாம்.

உறுதி எனப்படும் வைராக்கியத்திலும் மூவகை உண்டு. என்ன நடப்பினும் தன்னிலை தவறாதவன் சத்வ ஞானி, எப்பாடு பட்டேனும் தன் சொத்துக்களையும் சுகத்தையும் அதிகாரத்தையும் காக்க விரும்பும் குணம் ரஜோ குணம். அச்சமும் கலக்கமும் கொண்டு துயரத்திலும் துக்கத்திலும் மூழ்கியிருப்பது தாம்ஸ குணம்

இதற்கு பீஷ்மர், துரியோதனன், திருஷ்டிராசனை சொல்லலாம்

ஒருமனிதனின் செயலின் விளைவு எனப்படும் மூவகைபடும். முதலவாது தொடக்கம் கசப்பு முடிவு இனிப்பானது அது சத்வ சுகம். இரண்டாவது தொடக்கம் இனிமை முடிவு கசப்பு அது ரஜோ குணம், மூன்றாவது முடிவிலும் மயக்கம் கடைசியிலும் மயக்கம் அது தாம்ஸ குணம்

முதலவாது ஞானிகள் சுகம். தவமும் கட்டுப்பாடும் கடினமே ஆனால் அவர்களுக்கு பின்னாளில் ஞானம் கிடைத்து பூரண சுகம்

இரண்டாவது போதை, பெண், பதவி போன்ற சுகம், அதிலே மூழ்கி வலுவிழந்து அழிவில் முடியும் சுகம்

மூன்றாவது என்ன செய்கின்றோம் என தெரியாமலே மூழ்கி அதிலே சிக்கி அப்படியே வீழ்வது, இது அரசியல் கட்சி தொண்டனின் தமஸ் குணம்

இந்த மூன்று குணங்களிலும் இருந்து விடுபடுபவன் தேவர்களும் அனுபவிக்காத பேரின்ப சுகத்தை அடைகின்றான், ஆம் அளவற்ற‌ ஞானமும் ஒரு சுக போதையே அதையும் கடக்க வேண்டும்

4 வகை வர்ணத்தாரின் குணங்களும் அவர்கள் ஆற்றும் தொழில்படியே இருக்கின்றன, குணமே தொழிலுக்கு அடிப்படை

மனதடக்கம், தவம், கடவுள் பக்தி, மிகுந்த கட்டுபாடான வாழ்க்கை, வேதங்களை அதற்குரிய புண்ணியத்துடன் பின்பற்றுதல் ஆகியவை அந்தணன் குணம், அதுவே அவன் தொழில்

உறுதி , வீரம், தைரியம், விவேகம், வேகம் ஆகியவை சத்திரிய தர்மம், அவர்களுக்கு காவலும் பாதுகாப்பு கொடுப்பதுமே தொழில்

உழவும் கால்நடையும் வியாபாரமும் வைசிய கடமைகள், உலகம் இயங்க உழைக்கும் குணம் சூத்திரனுடையது

(கவனியுங்கள், பிறப்பு அடிப்படையில் இவை சொல்லபடவில்லை, குணங்களின் மற்றும் சிந்தனையின் அடிப்படையிலே இது சொல்லபடுகின்றது

வீரமுள்ள பிராமணன் தளபதியாகலாம், சூத்திர குலத்தவர்கள் வால்மிகி வியாசர் போல பெரும் அந்தண கடமை செய்யலாம், சூத்திர குலத்தில் உதித்த கண்ணன் அரசனும் ஆகலாம்

ஆம் சிந்தையும் மன உறுதியும் புத்தியும் சீர்தூக்கி பார்த்து, வர்ண அடிப்படையில் தொழில் செய்ய சொன்னதே அன்றி பிறப்பால் அல்ல..)

எந்த வர்ணத்தான் எனினும் எந்த பரம்பொருளிடம் இருந்து எல்லாம் வருகின்றதோ, எது எல்லா இயகத்துக்கும் மூலமோ அந்த பரம்பொருளிடம் மனதை வைத்தல் வேண்டும்.

பிறப்பின் கர்மத்தை அதாவது எந்த தொழிலில் ஈடுபட உலக வாழ்வு நிர்ணயிக்கின்றதோ அது எத்தகைதாயினும் ஏற்றல் வேண்டும், தொழில் கடமையில் ஏற்றதாழ்வு என்பது இல்லை, தீயினை சுற்றி புகை இருப்பதை போல கர்மங்களிலும் குறை உண்டு

புகை நீக்கினால் தீ தெரிவது போல, பரம்பொருளை நினைத்து சிந்தித்தால் உண்மை விளங்கும். ஆசையினை அடக்கி , புலன்களை அடக்கி, பரம்பொருளில் சிந்தனையினை நிறுத்தினால் அது புரியும்

எல்லாம் கடந்த ஒருவன் எப்படி ஞானத்தை அடைந்து அதையும் தாண்டி பிரம்மத்தை நெருங்குகின்றான்?

நற்குணத்தால் நிறைந்து, வைராக்கியத்தில் நிறைந்து அதில் ஆசைகளை அடக்கி, புலன்களை வென்று, குறைவாக உண்டு, குறைவாக தூங்கி, தியானத்தில் நிலைத்து, எல்லா சிந்தைகளையும் பரம்பொருளில் நிறுத்தி, எல்லாம் அவனால் செய்யபடுகின்றது என்பதை முழுக்க உணர்ந்து, அவன் இயல்பிலே நிலைத்து கலந்திருப்பவனே அவன்

அவனை நன்மை மகிழ்விக்காது, தீமை அவனை கலங்கடிக்காது எந்நிலையிலும் சூரியன் போல அவன் தன் போக்கில் இருப்பான் அவனை எதுவும் பாதிக்காது

என்னை சரணடைந்த ஒருவன் எல்லா நிலையினையும் அடைகின்றான்

அர்ஜூனா, கர்மங்களை எல்லாம் என்னிடம் ஒப்படைத்துவிட்டு , என்னை சார்ந்திருந்து, என்னில் உன் சித்தத்தை வை, அதைவிட மேலானது ஏதுமில்லை

ஆம், “வருத்தபட்டு பாரம் சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் …” என்பது இயேசுவின் வாக்கு

புத்தனும், இயேசுவும் சொன்ன அதே வார்த்தைகள்தான், ஆம் கீதையின் வரிகளே எங்கு திரும்பினாலும் எதிரொலிக்கின்றது

அந்த பெரும் தத்துவ‌ நதியில் இருந்து ஆளாளுக்கு ஒரு பாத்திரத்தில் அந்த ஞான நீரை எடுத்து புது பெயர் இட்டார்களே தவிர, அந்த தத்துவமும் தூய்மையும் கீதையிலிருந்தே வந்தது.

பகவத் கீதை‍ 18- மோட்ச சந்நியாச யோகம் : 01

கீதையின் கடைசி அத்தியாயமான‌ இந்த மோட்ச சந்நியாச யோகம் 18ம் அத்தியாயம், ஆனால் மிகபெரிய அத்தியாயம் என்பதால் மூன்றாக பிரிக்கலாம், சந்ந்தியாசத்திற்கும், தியாகத்துக்கும் இடையிலான வித்தியாசத்தை சொல்கின்றது இந்த அத்தியாயம்

அர்ஜுனன் கூறினான் “கண்ணா, நான் சந்நியாசத்துவத்தையும் தியாக தத்துவத்தையும் தனித்தனியே தெரிந்துகொள்ள விரும்புகிறேன்

கண்ணன் சொல்கின்றார் “அர்ஜூனா, ஜட ஆசைகளை அடிப்படையாகக் கொண்ட செயல்களைத் துறத்தல், சந்நியாசம் என்று சான்றோர்களால் அழைக்கப்படுகின்றது. மேலும், எல்லாச் செயல்களின் பலன்களைத் துறப்பதை தியாகம் என்ற அறிஞர்கள் அழைக்கின்றனர்.

எல்லாவிதமான பலன்நோக்குச் செயல்களையும் தோஷமாக எண்ணி, அவற்றை துறக்க வேண்டும் என்று சில அறிஞர்கள் அறிவிக்கின்றனர்; இருப்பினும் யாகம், தானம், மற்றும் தவத்தின் செயல்களை என்றுமே கைவிடக் கூடாது என்று சில சாதுக்கள் கூறுகின்றனர்.

தியாகத்தைப் பற்றிய எனது முடிவை தற்பொழுது கேள். சாஸ்திரங்களில் மூன்று விதமான தியாகம் அறிவிக்கப்பட்டுள்ளன.

யாகம், தானம், மற்றும் தவத்தின் செயல்களை என்றுமே துறக்கக் கூடாது; அவற்றை செய்ய வேண்டியது அவசியம். உண்மையில் யாகம், தானம், தவம் ஆகியவை மிகச்சிறந்த ஆத்மாக்களையும்கூட தூய்மைப்படுத்துகின்றன.

இத்தகு செயல்கள் அனைத்தும், பற்றுதலின்றி, எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் செய்யப்படவேண்டும். இவற்றை ஒரு கடமையாகச் செய்ய வேண்டும், இதுவே எனது முடிவான அபிப்பிராயம்.

விதிக்கப்பட்ட கடமைகளை என்றுமே துறக்கக் கூடாது. ஆனால், மயக்கத்தினால் ஒருவன் தன்னுடைய கடமைகளைத் துறந்தால், அத்தகு துறவு தமோ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது

தொல்லை நிறைந்தவை என்று கருதியோ, உடல் அசெளகரியத்திற்கான பயத்தினாலோ, விதிக்கப்பட்ட கடமைகளைத் துறப்பவன், ரஜோ குணத்தில் துறப்பதாக கூறப்படுகின்றது. அத்தகு செயல், துறவின் பலனை ஒருபோதும் வழங்க இயலாது.

அர்ஜுனா, ஒருவன் தனது விதிக்கப்பட்ட கடமையை செய்யப்பட வேண்டும் என்பதற்காகச் செய்து, பெளதிக சங்கத்தையும் பலனுக்கான பற்றுதலையும் முழுமையாக துறக்கும்போது, அவனது துறவு ஸத்வ குணத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது.

ஸத்வ குணத்தில் நிலைபெற்றிருக்கும் புத்திசாலி துறவிகள், அமங்களமான செயல்களை வெறுப்பதில்லை, மங்களமான செயல்களில் பற்றுக் கொள்வதும் இல்லை, செயலைப் பற்றிய ஐயங்களும் அவர்களிடம் இல்லை.

உடலை உடையவன் எல்லாச் செயல்களையும் துறப்பது என்பது உண்மையில் அசாத்தியம். ஆனால் செயலின் பலன்களைத் துறப்பவன் உண்மையான துறவி என்று கூறப்படுகின்றான்

இவ்வாறு தியாகம் செய்யாதவர்கள் தங்களது மரணத்திற்குப் பின், விரும்புவை, விரும்பாதவை, இரண்டும் கலந்தவை என மூன்று விதமான கர்ம விளைவுகளை சேகரித்துக் கொள்கின்றனர். ஆனால் அத்தகு இன்ப துன்பத்திற்கான பலன்கள் சந்நியாசிகளுக்குக் கிடையாது.

பலம் பொருந்திய புயங்களையுடைய அர்ஜுனா, செயல்கள் அனைத்தும் நிறைவேற்றுவதற்கு வேதாந்தத்தின்படி ஐந்து காரணங்கள் உள்ளன. அவற்றை தற்போது என்னிடமிருந்து அறிந்துகொள்

செயலுக்கான இடம் (உடல்), செய்பவன், பல்வேறு புலன்கள், பலதரப்பட்ட முயற்சிகள், இறுதியாக பரமாத்மா இவையே செயலுக்கான ஐந்து காரணங்களாகும்

மனிதன் தன்னுடைய உடல், மனம், அல்லது வார்த்தைகளால் நல்லதோ கெட்டதோ, எந்தவொரு செயலைச் செய்தாலும் அதற்கு இந்த ஐந்தும் காரணங்களாகும்

எனவே, இந்த ஐந்து காரணங்களைக் கருதாமல், தன்னை மட்டுமே செயலாற்றுபவனாகக் கருதுபவன் விஷயங்களை உள்ளபடி காண முடியாது, அவன் நிச்சயமாக அறிவுடையவன் அல்ல.

எவனுடைய நோக்கம் அஹங்காரமின்றி உள்ளதோ, எவனுடைய புத்தி பற்றுதலிலிருந்து விடுபட்டுள்ளதோ, அவன் இவ்வுலகிலுள்ள மனிதர்களைக் கொல்ல செய்தாலும் கொல்பவன் அல்ல. தனது செயல்களால் அவன் பந்தப்படுவதும் இல்லை.

அறிவு, அறியப்படும் பொருள், அறிபவன் ஆகிய மூன்றும் செயலைத் தூண்டுபவை; புலன்கள், செயல், செய்பவன் ஆகிய மூன்றம் செயலை உண்டாக்குபவை.

ஜட இயற்கையின் மூன்று வேறுபட்ட குணங்களுக்கு ஏற்ப, அறிவு, செயல், செய்பவன் ஆகியவற்றிலும் மூன்று வகைகள் உள்ளன. தற்போது அவற்றை என்னிடமிருந்து கேட்பாயாக.

உயிர்கள் எண்ணற்ற உருவமாக பிரிக்கப்பட்டிருந்தாலும், அவர்களை பிரிக்கப்படாத ஆன்மீக இயற்கையாக, எந்த அறிவின் மூலம் ஒருவன் காண்கின்றானோ, அந்த அறிவு ஸத்வ குணத்தில் இருக்கும் அறிவாகும்.

எந்த அறிவின் மூலம், வெவ்வேறு உடல்களில் வெவ்வேறுவிதமான உயிர்கள் இருப்பதாக ஒருவன் காண்கின்றானோ, அந்த அறிவு ரஜோ குணத்தில் இருப்பதாக புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

எந்த அறிவின் மூலம், உண்மையைப் பற்றிய அறிவின்றி, ஒரே விதமான செயலில் பற்றுதல் கொண்டு அதையே எல்லாமாக அறிகின்றானோ, அந்த அற்பமான அறிவு தமோ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது

எந்தவொரு செயல், ஒழங்குபடுத்தப்பட்டு, பற்றின்றி, விருப்பு வெறுப்பின்றி, பலனை எதிர்பார்க்காமல் செய்யப்படுகின்றதோ, அது ஸத்வ குணத்தின் செயல் எனப்படுகிறது.

ஆனால், எந்தவொரு செயல், ஆசைகளைத் திருப்தி செய்வதற்காக பெரும் முயற்சியுடனும் அஹங்காரத்துடனும் செய்யப்படுகின்றதோ, அந்தச் செயல் ரஜோ குணத்தின் செயல் என்று கூறப்படுகின்றது

எந்தவொரு செயல், எதிர்கால பந்தத்தையும் மற்றவர்களுக்கு இழைக்கப்படும் துன்பத்தையும் கருத்தில் கொள்ளாமல், சாஸ்திர விதிகளைப் புறக்கணித்து, மயக்கத்தில் செய்யப்படுகின்றதோ, அந்தச் செயல் தமோ குணத்தின் செயலாகக் கூறப்படுகின்றது

எவனொருவன், இயற்கை குணங்களின் தொடர்பின்றி, அஹங்காரமின்றி, உற்சாகம் மற்றும் மனவுறுதியுடன், வெற்றி தோல்விகளைப் பொருட்படுத்தாது தனது கடமைகளைச் செய்கின்றானோ, அத்தகு செயலாளி ஸத்வ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கவனியுங்கள், சந்நியாசம் என்பது ஆசைகளை துறப்பது, தியகாம் என்பது கிடைக்க வேண்டிய பலன்களை துறப்பது என உணர்ந்து துறப்பது

பெண் ஆசையினை துறந்தால் சந்நியாசம், இல்லறத்தை நல்லறமாக நடத்தி பிள்ளைகளை பிரதிபலன் பாராமல் வளர்த்தால் அது தியாகம்

பொருளாசையினை துறப்பது சந்நியாசம், தொழிலை கர்மமாக செய்து லாபத்தை பலன் எதிர்பாராமல் அர்பணித்தால் அது தியாகம்

தியாகத்திலும் 3 வகை உண்டு, எவ்வகையாயினும் வழிபாடு, தானம், தவம் என இந்த மூன்றையும் ஒரு மனிதன் எக்காரணம் கொண்டும் விலக்க கூடாது

தாய் தகப்பனை ஆதரிக்க வேண்டியது கடமை, அதை புறக்கணித்து தாய் தந்தையினை தியாகம் செய்தேன் என்பது தமோ குணம், அது கடமையில் இருந்து தவறுவது. லஞ்சம் வாங்குவது இவ்வகை

தொல்லை, மற்றும் உடல்நிலை காரணம் காட்டி அஞ்சி கடமையில் இருந்து ஒதுங்குவது ரஜோ குணம், இது தியாகமாகது, இது ரஜோ குணத்து தியாகம். தொல்லை பிடித்த சொத்துக்களை கோவிலுக்கு எழுதுவது வாரிசில்லா சொத்துக்களை தானம் செய்வது இவ்வகை

சத்வ குண துறவிகள் எந்நிலையிலும் கலங்குவதில்லை, நன்மையோ தீமையோ அவர்களை பாதிப்பதில்லை, விளைவினை பற்றிய சிந்தனையும் அவர்களுக்கு இல்லை

செயல்களை துறப்பது சிரமமே ஆயினும் கடமைக்காக செயலை ஏற்று விளைவினை துறப்பது உண்மையான துறவு, ராணுவ வீரன் களத்துக்கு செல்வதும் கொரோனா காலத்தில் டாக்டர்கள் மருத்துவமனைக்கு செல்வதும் அப்படியே

இதனால் கடமையில் இருந்து ஒதுங்கி அல்லது தவறி தானம் செய்தவர்கள் அடுத்த பிறவியில் நற்பிறப்பு அடையமாட்டார்கள், இதுவே அவர்கள் கர்மா. ஆனால் துறவிகளுக்கு இந்த பலன்கள் கிடையாது

அர்ஜூனா ஒரு செயலை செய்ய 5 விஷயங்கள் தேவை, அவை ஒருங்கிணைந்தாலே செயல் செய்யபடும், அது அவனின் உடல், ஆத்மா, உறுப்புகள், புத்தி எனும் சிந்தனை , அதை கொடுக்கும் பரம்பொருள்

ஆம் பரம்பொருளின் சித்தபடியே ஒருவன் புத்தி சிந்திக்கின்றது அது உறுப்புகளை செயல்படுத்துகின்றது , ஆன்மா அதை அங்கீகரிக்கின்றது , உடல் அந்த காரியத்தை செய்கின்றது

ஆக அது பரம்பொருளின் செயலே அன்றி மானிடனின் செயல் அல்ல, இதை கவனமாக பார்த்தால் புரிந்து கொள்ளமுடியும், அறிவற்ற பதர்களே செயல்களை நான் செய்தது என சொல்லிதிரியும். உண்மையில் செய்வதெல்லாம் பரம்பொருளே

மூவகை குணங்களுக்கும் செயல், செய்பவன், அறிவு என்ற மூன்றும் வேறுபடுகின்றன, ஒவ்வொரு உயிரும் வேறு வேறானது அதாவது மானிட உயிர் மேலானது விலங்கின் உயிர் கீழானது, மானிடரிலும் மன்னன் உயிர் மேலானது மக்கள் உயிர் கீழானது என நினைப்பது ரஜோ குணம்

உண்மையினை அறியாமல் மாய அறிவில் சிக்கி அதையே உண்மை என நம்பும் அறிவிடையவன் தமோ குணத்தான் , அது அற்பமான அறிவு

எல்லா உயிரும் சமம் என எவன் கருதுவானோ அவன் சத்வ அறிவில் இருப்பான்

செயல்களை பொறுத்தவரை, அகங்காரமும் ஆடம்பரமும் சுயநலமும் கொண்டு தன் ஆசைக்கு செய்யபடுமோ அது ரஜோ குண செயல்

எந்த செயல் விதிகளுக்கு அடங்காமல் அறியாமையாலும் மயக்கத்தாலும் செய்யபடுகின்றதோ அது தமோ குணம், கொரோனா காலத்தில் ஊர் சுற்றல் அப்படித்தான்

விளைவுகளை எண்ணாது, கடமையினை உறுதியாகவும் உற்சாகமாகவும் கர்மமாக ஏற்று செய்பவன், மாடு உழசொன்னால் உழுவது போலவும், வண்டி இழுக்க சொன்னால் அது போக்கில் இழுப்பவன் எவனோ அவனின் செயல் சத்வ குண செயலாகும்

(தொடரும்..)

பகவத் கீதை‍ 17

Image may contain: 2 people, people standing

சிரத்தாத்ர விபாக யோகம் என்றால் ஒருவனின் சிரத்தை பற்றி, ஆர்வத்தை பற்றி தெய்வத்தை அடைய அவன் செய்யும் முயற்சிகள் அது தவம் தானம் யாகம் போன்றவற்றை பற்றியும் அதன் பலன்களையும் பற்றி சொல்வது

கீதையின் 17ம் அத்தியாயமான இந்த அத்தியாயம், கடவுளை அடையும் சிரத்தை எனும் முயற்சிகளை பற்றி சொல்கின்றது

அர்ஜுனன் சொல்கின்றார் “கிருஷ்ணா, யார் சாஸ்திர விதியைமீறி ஆனால் சிரத்தையோடு கூடியவர்களாய் ஆராதிக்கிறார்களோ, அவர்களுடைய நிலை எத்தகையது? சத்துவமா? ராஜஸமா? அல்லது தாமஸமா?

ஸ்ரீபகவான் சொன்னது, தேகிகளுக்கு இயல்பாக உண்டான அந்த சிரத்தையானது,சாத்விகம்,ராஜஸம், தாமஸம் என மூன்றுவிதமாக இருக்கிறது.அதைக்கேள்

பரதகுலத்தில் உதித்தவனே, ஒவ்வொருவருடைய சிரத்தையானது,அந்தக்கரணத்தில் ஏற்பட்ட சம்ஸ்காரத்தை அனுசரித்தாக இருக்கிறது. இந்த ஜீவன் சிரத்தைமயமானவன். யார் எப்படிப்பட்ட சிரத்தையுடையனோ, அவன் அந்த சிரத்தைகேற்றவனாகிறான்

சாத்துவிகர்கள் தேவர்களை வணங்குகிறார்கள்.ரஜோகுணமுடையவர்கள் யக்ஷர்களையும்,ராக்ஷசர்களையும் வணங்குகிறார்கள்.தாமஸமுடையவர்கள் பிரேதங்களையும்,பூத கணங்களையும் வணங்குகிறார்கள்

வீம்பும்,அகங்காரமும் உடையவர்களாய், காமமும் பற்றுதலும் உடையவர்களாய், எந்த அறிவற்றவர்கள் உடலிலுள்ள இந்திரியங்களையும், சரீரத்தில் வீற்றிருக்கும் என்னையும் துன்புறுத்தி, சாஸ்திரத்தில் விதிக்கப்படாத கோரமான தபசை செய்கிறார்களோ அவர்களை அசுரவழியில் செல்பவர்கள் என்று அறி

ஒவ்வொருவருக்கும் விருப்பமான உணவும் மூன்றுவிதமாக இருக்கிறது. அங்ஙனமே யாகமும்ம்,தபசும்,தானமும் மூன்று விதமாக உள்ளன.அவைகளை கேள்

ஆயுள்,அறிவு.பலம்,ஆரோக்கியம்,சுகம்,விருப்பம் ஆகியவைகளை உண்டுபண்ணுபவை, ரசமுள்ளவைகள்,பசையுள்ளவைகள்,வலிவு தருபவைகள்,இன்பமானவைகள் ஆகிய ஆகாரங்கள் சாத்விகர்களுக்கு பிரியமானவைகள்.

கசப்பு,புளிப்பு,உவர்ப்பு,அதிக உஷ்ணம்,காரம், உலர்ந்தவை, எரிச்சலூட்டுபவை,துக்கத்தையும்,சோகத்தையும்,நோயையும் உண்டுபண்ணுபவையான ஆகாரங்கள் ரஜோகுணமுடையவர்களுக்கு பிடித்தமானவை

பொழுது கழிந்த, சுவையிழந்த, நுர்நாற்றமெடுத்த,பழைய,எச்சிலான, தூய்மையற்ற உணவு தமோகுணத்தினருக்கு பிரியமானது

வினைப்பயனை விரும்பாதவர்களாய், வழிபாடாக செய்தேயாக வேண்டும் என்று மனதை ஸ்திரப்படுத்திக்கொண்டு, சாஸ்திர ஆணைப்படி எந்த யக்ஞம் செய்யப்படுகிறதோ அது ஸாத்விகமானது

பரதகுலத்தில் சிறந்தவனே, பயனை விரும்பியோ, ஆடம்பரத்துக்காகவோ எது செய்யப்படுகிறதோ அந்த யக்ஞத்தை ராஜஸமானதென்று அறிந்துகொள்

வேதநெறி வழுவி,அன்னதானமில்லாது,மந்திரமில்லாது,தக்ஷிணையிலில்லாமல்,சிரத்தையில்லாமல் செய்யப்படும் யக்ஞம் தாமஸம் என்று சொல்லப்படுகிறது

தேவர்,பிராமணர்,குருமார்,ஞானிகள் ஆகியவர்களைப் போற்றுவதும்,தூய்மையும், நேர்மையும், பிரம்மச்சர்யமும், அஹிம்சையும் தேகத்தால் செய்யும் தவம் என சொல்லப்படுகிறது

துன்புறுத்தாத உண்மையும், இனிமையும், நலனுடன்கூடிய வார்த்தை மற்றும் வேதம் ஓதுதல்,இது வாக்குமயமான தபம் என்று சொல்லப்படுகிறது

மனஅமைதி, அன்புடைமை, மௌனம், தன்னடக்கம், தூயநோக்கம் இது மானஸ தபசு என்று சொல்லப்படுகிறது

பயனை விரும்பாதவரும்,யோகத்தில் உறுதிபெற்றவருமான மனிதர்களால் பெருமுயற்சியுடன் செய்யப்படும் இம்மூன்றுவித தபசு சாத்வீகமானதென்று சொல்லப்படுகிறது

பாராட்டுதலையும், பெருமையையும், போற்றுதலையும் முன்னிட்டு, ஆடம்பரத்தோடு எந்த தபம் செய்யப்படுகிறதோ, தற்காலிகமானதும், உறுதியற்றதுமான அது ராஜஸமானதென்று சொல்லப்படுகிறது

மூடக்கொள்கையால் தன்னையே துன்புறுத்தியோ அல்லது பிறரை அழிக்கும் நோக்கத்தில் செய்யப்படுகின்ற தபம் தாமஸம் என்று சொல்லப்படுகிறது

தக்க இடத்தில், தகுந்த வேளையில், பிரதியுபகாரம் செய்யமாட்டார்கள் என தெரிந்தும் , தகுந்த தகுதியுள்ளவர்களுக்கு,கடமை என கருதி, கொடுக்கும் தானம் சாத்வீகமானது

பிரதிபலனை எதிர்பார்த்து, பலனை கருதி, மேலும் வருத்தத்தோடு தரப்படுகின்ற தானம் ராஜஸம் என சொல்லப்படுகிறது

தகாத இடத்திலும்,காலத்திலும்,தகுதியற்றவர்களுக்கு வணகக்மின்றி,இகழ்ச்சியுடன் செய்யப்படும் தானம் எதுவோ அது தாமஸமெனப்படுகிறது

“ஓம் தத் ஸத்” (பிரம்மம் அதுஒன்றே நிலைத்திருப்பது) என்று பிரம்மம் மூன்றுவிதமாய் கூறப்பட்டிருக்கிறது. அதிலிருந்து பிராமணர்களும்,வேதங்களும்,யாகங்களும் பண்டைய காலத்தில் வகுக்கப்பட்டது

ஆகையால் வேதமறிந்தவர்கள் வேதவிதிப்படி செய்யம் யக்ஞம்,தானம்,தபம் போன்றவைகள் துவங்கும் போது” ஓம் “என்று உச்சரிக்கின்றனர்.

“தத்” (தத் என்றால் அது,அது என்பது பிரம்மம்) என்று உசச்ரித்து பலனை விரும்பாது மோக்ஷத்தை நாடுபவர்களால் பலவிதமான,யக்ஞம்,தபமும், தானமும் செய்யப்படுகின்றன

அர்ஜுனா, உண்மையென்ற கருத்திலும்,நன்மையென்ற கருத்திலும் “ஸத்” என்ற சொல் வழங்கப்படுகிறது. மங்கல கர்மங்களில் “ஸத்” என்ற சொல் உபயோகிக்கப்படுகிறது

யக்ஞத்திலும்,தவத்திலும்,தானத்திலும் நிலைத்திருப்பது “ஸத்” என்று சொல்லப்படுகிறது. இன்னும் பிரம்மத்தின் பொருட்டு செய்யப்படும் கர்மமும் “ஸத்” என்றே சொல்லப்படுகிறது

சிரத்தையின்றிச் செய்யும் யாகமும்,தானமும்,தபமும் மற்ற கர்மமும் “அஸத்” எனப்படும். அர்ஜுனா,அது மறுமைக்கும் உதவாது.இம்மைக்கும் உதவாது..”

இதன் சுருக்கம் எளிதானது, சிங்கம் மாமிசத்தை தேடுவது போல மான் புல்லை தேடுவது போல அவனவன் குணத்துக்கு ஏற்ப கடவுளை தேடுகின்றான். சாத்வீகிகள் தேவர்களை தேடுகின்றார்கள், ரஜோ குணமுள்ளோர் ராட்சசர்களையும், தமோ குணமுள்ளோர் சுடுகாட்டையும் பூதங்களையும் தேடுகின்றார்கள்.

இதில் மற்ற இரண்டு குணமுடையோர் அடுத்தவரை துன்பபடுத்துவதற்கே பலம் பெறுகின்றனர். அந்த பலத்தின் மூலம் அடுத்திருப்பவன் உடலில் வீற்றிருக்கும் கடவுளின் சாயலை துன்புறுத்துகின்றனர்.

உடலை அடுத்தவரை அடிக்கவே பலபடுத்துதல், ராட்சசன் அருள் பெறுதல், பில்லி சூனியம் எல்லாம் இவ்வகையே. இவர்கள் உண்மை பரம்பொருளை தேடமாட்டார்கள், சாஸ்திர வழி செல்லாமல் அசுர வழி சென்று அழிவார்கள்

இவர்களின் குணம்படியே உணவும், தானமும், தவமும் மூன்று வகையாக உள்ளது

சாத்வீக குணம் படைத்தோர் இனிப்பான, பசிதாங்கும் கொழுப்புள்ள, அறிவும் ஆயுளும் தரும் உணவுகளை உண்ணுவார்கள் . ரஜோ குணம் படைத்தோர் காரமும் புளிப்பும் கசப்புமாக உண்பார்கள் அது குணமாறுபாடும் ஆயுள் குறைவினையும் கொண்டுவரும். தமோ குணமுடையவர் நாள்பட்டதும் கெட்டு போனதும் அசுத்தமான உணவுகளில் ஆசை கொண்டோராய் இருப்பர்

யாகத்தை பொறுத்தவரையில் பலன் எதிர்பாரா யாகம் நல்லது, பலன்கருதி பெயர் கருதி , தன் பெருமைக்காக செய்யபடும் யாகம் பலனில்லாதது. சாஸ்திரபடி இல்லாமல் மன பற்று இல்லா யாகம் வெறுக்கபடும்

தானத்தை பொறுத்தவரையிலும் அதுவே, தானத்தை பொறுத்ததும் அதுவே

தவமும் தானமும் எதிர்பார்ப்பின்றி கடவுளை நினைந்தே இருத்தல் வேண்டும், அல்லாது சுயநலத்துடன் செய்யும் தவம் எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும் அவனை அழிக்கும்

அகங்காரத்துக்கும் ஆடம்பரத்துக்கும் வறட்டு கவுரவத்துக்கும் வழங்கபடும் தானம் பலனளிக்காது

எதை செய்தாலும் கடவுளின் விருப்படி நடக்கட்டும் எனும் ஓம் தத் சத் என்பதுடன் செய்தால் நன்று

ஆம், ரஜோ குணம், தமோ குணம், தமோ குணத்தாரின் இயல்புகளையும் அவர்கள் செய்யும் தானம், தவம், உணவு இவற்றை மிக அழகாக சொல்கின்றது இந்த அத்தியாயம்

உணவுக்கும் வாழ்வுக்கும் தொடர்பு உண்டு, மனிதர் உணவுக்கு அடிமையாக கூடாது என்கின்றது அத்தியாயம், கொரோனா காலத்திலும் மீன்கடை , கறிக்கடையில் கூடும் கூட்டம் பல விஷயங்களை சொல்கின்றது

ஆம் உணவுக்கு அடிமையாவதும் ஒரு பாவமே, உடல் மனதை ஆட்டிவைக்க அனுமதித்தல் கூடாது

தானமும் அப்படியே. துரியனும் தானம் செய்தார்கள், தர்மனும் தானம் செய்தார்கள் ஆனால் தானத்தின் பெயராக கர்ணன் நின்றானே எப்படி? அவன் பலன் கருதாமல் செய்தவன்

இதனாலே விஸ்வரூப தரிசனம் எனும் பெரும் பேற்றினை அவன் பெற்றான். அடுத்தவருக்கு பலன் எதிர்பார்ப்பின்றி செய்யும் தானம் கடவுளால் திருப்பி தரப்படும் காரணம் அது பரம்பொருளுக்கு உவப்பானது எனும் தத்துவமே அது

தவமும் அப்படியே. அசுரர்களும் தவம் செய்தார்கள் அதில் பலனும் பெற்றார்கள். அது பத்மாசுரன் முதல் நரகாசுரன் ராவணன் வரை ஏராளம் உண்டு. ஆனால் அந்த தவத்தை அடுத்தவரை அழிக்க பயன்பட்ட பொழுது தானாய் அழிந்தார்கள்

தவத்தின் பலனால் அடுத்திருப்பவரை துன்புறுத்தினால் அவனில் உறையும் பரம்பொருளையே துன்புறுத்துவதற்கு சமம், அதனாலே தெய்வமே வந்து அவர்களை அழித்தது

யாகம் நடத்துவதும் அப்படியே, தட்சன் போன்ற அகங்காரிகள் நடத்திய யாகம் கடவுளுக்கே பொறுக்கவில்லை என்கின்றது புராணம்

17ம் அத்தியாய சுருக்கம் இதுதான், சாத்வீகமாக அளவோடு உண், அளவோடு உறங்கு எல்லாவற்றையும் அளவோடு செய், அறிவும் ஆயுளும் கூடும்

தவமோ தானமோ யாகமோ எது செய்தாலும் பரம்பொருளின் விருப்படி நடக்கட்டும் எனும் “ஓம் தத் சத்” என்பதை சொல்லி செய், அது கடவுளுக்கு உவப்பானது

ஆம், பைபிளில் எல்லாம் கடவுளின் சித்தம் என சொன்ன மரியாள் அழியா புகழடைகின்றாள், தானமும் தவமும் கடவுளை முன்னிட்டு செய்தோர் எல்லாம் பெரும் இடம் அடைகின்றனர்

பைபிளில் “இறைவனே எல்லாம் உன் சித்தமே, அப்படியே ஆகட்டும்” என சொல்லும் ஆமேன் எனும் வார்த்தை “ஓம் தத் சத்” என்பதில் அடங்கிவிடுகின்றது

17ம் அத்தியாயம் இயேசு சொன்ன “பரலோகத்தில் இருக்கும் கடவுளின் சித்தபடி ஆகட்டும்” எனும் அந்த வசனமும் “காணிக்கையும், பலியும் எனக்கு உவப்பானது அல்ல, மனதால் என்னை உணர்தலே எனக்கு சரியானது” என சொல்லும் பைபிளின் வசனமும் இந்த 17ம் அத்தியாயத்தில் அடங்குகின்றது

சமணத்தையும், பவுத்ததையும் ஆழ கவனித்தால் இதன் தாக்கமே, அவர்கள் பலியினை நிறுத்தி, யாகங்களை நிறுத்தி, தன்னலமற்ற தவம் ஒன்றாலும், அடுத்திருப்பவருக்கு தொண்டு செய்து கடவுளை மகிழ்விக்க கிளம்பியதும் இந்த 17ம் அத்தியாயமே

“மனதால் செலுத்துவதே பக்தி, பரம்பொருள் அதையே விரும்புகின்றான்” என என்றோ சொன்ன கீதையின் இந்த அத்தியாயம் மகா சிறப்பும் உயர்வுமானது

பகவத் கீதை‍ 16

Image may contain: 4 people

கீதையின் 16ம் அத்தியாயம் “தெய்வாசுர சம்பத் விபாக யோகம்” , இது தெய்வ குணம் அசுர குணத்த்தின் தொடர்புகளை விளக்கி கூறும் அத்தியாயம்

தெய்வகுணம் எனும் சாத்வீக கொண்டவன் எப்படி இருப்பான், அசுர குணம் எனும் பேராசை தீ கொண்டவன் எப்படி இருப்பான் என்பதை விளக்கும் அத்தியாயம் இது

கண்ணன் சொல்கின்றான் ” அஞ்சாமை, உள்ளத்தூய்மை, ஞானத்திலும் யோகத்திலும் நிலைத்திருத்தல்,தானம், சாஸ்திரங்களை படிப்பது,தவம்,நேர்மை

கொல்லாமை, வாய்மை, சினவாமை, துறவு, ஆறுதல், வண்மை, ஜீவதயை, அவாவின்மை, மென்மை, நாணுடைமை, சலியாமை

ஒளி, பொறை, உறுதி, சுத்தம், துரோகமின்மை இவை தெய்வ சம்பத்தை எய்தியவனிடம் காணப்படுகின்றன, அர்ஜூனா.

த‌ம்பம், இறுமாப்பு, கர்வம், சினம், கடுமை, அஞ்ஞானம் இவை அசுர சம்பத்தை எய்தியவனிடம் காணப்படுகின்றன பார்த்தா

தேவ சம்பத்தால் விடுதலையுண்டாம். அசுர சம்பத்தால் சிக்கல்கள் வரும். அர்ஜூனா நீ தேவ சம்பத்தை எய்திவிட்டாய், துயரப்படாதே.

இவ்வுலகத்தில் உயிர்ப் படைப்பு இரண்டு வகைப்படும்; தேவ சாயல்பு கொண்டது, அசுர இயல்பு கொண்டது. தேவ இயல்பு கொண்டதை விரித்துச் சொன்னேன். அர்ஜூனா அசுர இயல்பு கொண்டதைச் சொல்லுகிறேன், கேள்.

அசுரத் தன்மை கொண்டோர், தொழிலியல்பையும் வீட்டியல்பையும் அறியார். தூய்மையேனும், ஒழுக்கமேனும், வாய்மையேனும் அவர்களிடம் காணப்படுவதில்லை.

அவர்கள் இவ்வுலகம் உண்மையற்றதென்றும், நிலையற்றதென்றும், கடவுளற்றதென்றும் சொல்லுகிறார்கள். இது தொடர்பின்றிப் பிறந்த தென்றும், வெறுமே காமத்தை (ஆசையினை) ஏதுவாக உடையது என்றும் சொல்லுகிறார்கள்.

இந்தக் காட்சியில் நிலைபெற்று, அற்ப புத்தியுடைய அந்த நஷ்டாத்மாக்கள் உலகத்துக்குத் தீங்கு சூழ்வோராய், அதன் நாசத்துக்காகக் கொடிய தொழில் செய்கின்றனர்.

தீரவே தீரா ஆசையினை காமத்தைச் சார்ந்து, த‌ம்பமும், கர்வமும், மதமும் பொருந்தியவராய், மயக்கத்தால் பொய்க் கொள்கைகளைக் கொண்டு அசுத்த நிச்சயங்களுடையோராய்த் தொழில் புரிகிறார்கள்.

பிரளயமட்டும் தீராத எண்ணற்ற கவலைகளிற் பொருந்தி, விருப்பங்களைத் தீர்த்துக் கொள்வதில் ஈடுபட்டோராய், ‘உண்மையே இவ்வளவுதான்’ எற நிச்சயமுடையோராய்,

நூற்றுக்கணக்கான ஆசைக் கயிறுகளால் கட்டுண்டு, காமத்துக்கும், சினத்துக்கும் ஆட்பட்டோராய்க் காம போகத்துக்காக அநியாயஞ் செய்து பொருட் குவியல் சேர்க்க விரும்புகிறார்கள்.

“இன்று இன்ன லாபமடைந்தேன்; இன்ன மாபெரும் அதிகார‌ இனி எய்துவேன், இனி பெரும் பொருள் குவிப்பேன் சர்வமும் என்னிடம் குவியும்

இன்ன பகைவரைக் கொன்று விட்டேன்; இனி மற்றவர்களைக் கொல்வேன், நான் ஆள்வோன், நான் போகி, நான் பலவான், நான் சுக புருஷன்

நான் செல்வன், இனப்பெருக்க முடையான், எனக்கு நிகர் யாருளர்? வேட்கிறேன்; கொடுப்பேன்; களிப்பேன்” என்று அஞ்ஞானங்களால் மயங்கினோர்,

பல நினைவுகளால் மயங்கியோர், மோகவலையிலகப்பட்டோர், காம போகங்களில் பற்றுண்டோர் இவர்கள் அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள்.

இவர்கள் தற்புகழ்ச்சியுடையோர், முரடர், செல்வச் செருக்கும் மதமுடையோர், த‌ம்பத்துக்காக விதி தவறிப் பெயர் மாத்திரமான வேள்வி செய்கின்றனர்.

அகங்காரத்தையும், பலத்தையும், செருக்கையும், விருப்பத்தையும், இனத்தையும் பற்றியவர்களாகிய இன்னோர் தம் உடம்புகளிலும் பிற உடம்புகளிலும் உள்ள என்னைப் பகைக்கிறார்கள்.

இங்ஙனம் பகைக்கும் கொடியோரை உலகத்தில் எல்லாரிலும் கடைப்பட்ட இந்த அசுப மனிதரை, நான் எப்போதும் அசுரப் பிறப்புக்களில் எறிகிறேன்.

பிறப்புத் தோறும் அசுரக் கருக்களில் தோன்றும் இம்மூடர், என்னை யெய்தாமலே மிகவும் கீழான வாழ்வினை சேர்கிறார்கள்

ஆத்ம நாசத்துக்கிடமான இம்மூன்று வாயில்களுடையது நரகம்; (அவையாவன) காமம், சினம், அவா, ஆதலால் இம்மூன்றையும் விடுக.

இந்த மூன்று இருள் வாயில்களினின்றும் விடுபட்டோன் தனக்குத் தான் நலந் தேடிக் கொள்கிறான்; அதனால் பரகதி அடைகிறான்.

சாஸ்திர விதியை மீறி, விருப்பத்தால் தொழில் புரிவோன் சித்தி பெறான்; அவன் இன்பமெய்தான்; பரகதி அடையான்.

ஆதலால், எது செய்யத் தக்கது, எது செய்யத் தகாதது என்று நிச்சயிப்பதில் நீ சாஸ்திரத்தைப் பிரமாணமாகக் கொள். அதை யறிந்து சாஸ்திர் விதியால் கூறப்பட்ட தொழிலைச் செய்யக் கடவாய்”

இந்த அத்தியாயத்தில் எதெல்லாம் தெய்வ இயல்பு என்பதையும் எதெல்லாம் அசுர இயல்பு என்பதையும் தெளிவாக சொல்கின்றார் பகவான்.

சுருக்கமாக கவனித்தால் எல்லா உயிரையும் தன் உயிராக கருதி தன்னலம் துறப்பதும் சக உயிரை காப்பதும் தெய்வத்தின் சுடரில் எரிந்து கொண்டே இருப்பது தெய்வ குணம்.

தான் வாழ பலரை அழிப்பதும், தன்னலம் மட்டும் மிகுந்து பாவங்கள் செய்து பொருளை குவித்து இன்னும் பலவற்றை குவித்து பேராசை தீயில் எரிந்து கொண்டே இருப்பதும் அசுர குணம்

நல்லோரின் இயல்பு எனவும், ஒரு மனிதன் பின்பற்ற வேண்டும் என சொல்லும் அந்த தெய்வ குணமுமே திருகுறளில் வரும் சில அதிகாரங்கள்

நாலடியார், திரிகடுகம், ஏலாதி என சமண நூல்களில் வரும் கருத்துக்களும் இதுவே

பைபிளில் இயேசு சொல்லும் புகழ்பெற்ற மலைபொழிவும் இதுவே, இம்மக்கள் சொக்கம் பெறுவர் என இயேசு உறுதியாய் சொல்கின்றார்

ஆம் நல்லோர் இயல்பு, தெய்வசாயல் கொண்டோரின் இயல்பு எப்படி இருக்கும் என்பதை முதலில் சொன்ன நூல் கீதையே

இங்கு சமணம், பவுத்தம், கிறிஸ்தவம் என பல கொள்கைகளை கொண்டதால் திருகுறள் இந்துநூல் அல்ல என்பது சுத்த மடத்தனம்

ஒரே காவிரி கல்லணை தாண்டி வெண்ணாறு, குடமுருட்டி , கல்லணை கால்வாய் என பிரிவது போல கீதையின் “தெய்வாசுர சம்பத் விபாக யோகம்” அத்தியாயமே திருகுறள், சமண இலக்கியம், கிறிஸ்துவின் போதனை என பிரிந்தது

இன்னும் அசுரரின் இயல்பை சொல்லி அது எப்படி வரும், வந்தோர் எப்படி இருப்பர் அவர்கள் முடிவென்ன என்பதையும் தெளிவாக சொல்கின்றார் பகவான்

“அசுரத் தன்மை கொண்டோர், தொழிலியல்பையும் வீட்டியல்பையும் அறியார். தூய்மையேனும், ஒழுக்கமேனும், வாய்மையேனும் அவர்களிடம் காணப்படுவதில்லை.

அவர்கள் இவ்வுலகம் உண்மையற்றதென்றும், நிலையற்றதென்றும், கடவுளற்றதென்றும் சொல்லுகிறார்கள். இது தொடர்பின்றிப் பிறந்த தென்றும், வெறுமே காமத்தை (ஆசையினை) ஏதுவாக உடையது என்றும் சொல்லுகிறார்கள்.

இந்தக் காட்சியில் நிலைபெற்று, அற்ப புத்தியுடைய அந்த நஷ்டாத்மாக்கள் உலகத்துக்குத் தீங்கு சூழ்வோராய், அதன் நாசத்துக்காகக் கொடிய தொழில் செய்கின்றனர்.”

ஆம் தமிழக புரட்சியாளர்களை அப்படியே படம் பிடித்து காட்டும் வரிகள், அசுர கூட்டத்தின் இயல்பு அது

இன்னும் பழிபாவத்துக்கு அஞ்சாமல், இரக்கமில்லமால் மகா கொடுமையான மனதை கொண்டு வஞ்சக திட்டங்களுடன் 100 தலைமுறைக்கு சொத்து சேர்த்துவைக்கும் அசுர இயல்பையும் சொல்கின்றார்

கவனியுங்கள் “இன்று இன்ன லாபமடைந்தேன்; இன்ன மாபெரும் அதிகார‌ இனி எய்துவேன், இனி பெரும் பொருள் குவிப்பேன் சர்வமும் என்னிடம் குவியும்

இன்ன பகைவரைக் கொன்று விட்டேன்; இனி மற்றவர்களைக் கொல்வேன், நான் ஆள்வோன், நான் போகி, நான் பலவான், நான் சுக புருஷன்

நான் செல்வன், இனப்பெருக்க முடையான், எனக்கு நிகர் யாருளர்? வேட்கிறேன்; கொடுப்பேன்; களிப்பேன்” என்று அஞ்ஞானங்களால் மயங்கினோர்,

பல நினைவுகளால் மயங்கியோர், மோகவலையிலகப்பட்டோர், காம போகங்களில் பற்றுண்டோர் இவர்கள் அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள்.

இந்த வரிகள் என்ன தெரியுமா? “மூடனே இன்றிரவு உன் உயிர் எடுக்கபட இருக்க நீயோ களஞ்சியத்தை நிரப்புவேன், உண்டு களிப்பேன் என கனவு கண்டு கொண்டிருக்கின்றாயே?” என இயேசு தன் போதனையில் சொன்ன அந்த கதையின் சுருக்கம்

தெய்வ இயல்பு மனதை அடக்கி ஒவ்வொரு பொருளிலும் கடவுளை தேடும் அது கடவுளை அடையும், ஆனால் அசுர குணம் 3 குணங்களில் ஒன்றில் சிக்கி பேராசை பட்டு அழியும்

காமம், கோபம், பேராசை எனும் மூவகை அடிப்படை குணத்தில் சிக்கியே அசுரகுணம் வளர்ந்து எல்லோரும் அழிவினை தேடுகின்றார்கள்

ஆம் புராணம் இதை தெளிவாக சொல்கின்றது, புராணங்கள் நடந்த காரணமே இந்த ஆசைகளின் விளைவினை சொல்வதே

காமத்தால் அழிந்தான் ராவணன்,பெண்ணை கண்டதும் மயங்கி அழிந்தான் பத்மாசுரன், கோபத்தால் அழிந்தான் இரணியன், மண்ணாசை எனும் பேராசையால் அழிந்தான் துரியோதனன், மூவுலகமும் காணாது எனும் பெரும் ஆசையால் அழிந்தான் மகாபலி

ஆம் ஒருவன் எவ்வளவுதான் பெரும் பலசாலி,பாராக்கிரமசாலி ஏன் கடவுளையே உருக வைத்த பக்திமான் எனினும் ஆசைகளில் ஒன்று கூடினாலும் அவன் நிலைக்க முடியாது

யானை முதலையிடம் சிக்கியது போல, செந்நாய் கூட்டத்திடம் பிடிகொடுத்த சிம்மம் போல அவன் வீழ்வான்

நெருப்புக்கு எவ்வளவு போட்டாலும் போதாது, கழுகுக்கு எவ்வளவு உயரம் பறந்தாலும் போதாது , பேராசையும் பெரும் காமமும் அப்படியே, ஒருவன் எவ்வளவு பலமானாயினும் வீழ்த்திவிடும்

புராணங்களை கவனியுங்கள் ராமனும் கண்ணனும் எதிலும் சிக்காமல் வந்தார்களே எப்படி?

பற்றற்றதும், ஆசையில்லாததும், தன் கடமையினை மட்டும் செய்யும் பண்பும், எல்லா நிலைகளையும் பக்குவமாக கடந்து செல்லும் அந்த தன்மையுமே அவர்களை தெய்வம் என காட்டிற்று

பேராசையும், பெரும் காமமும் , அடங்கா கோபமும் சாபங்கள், அவைகளை கொண்டவனை அவை எரித்துவிடும், அவன் பேயாகிவிடுவான், ஆடி அட்டகாசம் செய்து தானாக‌ அழிந்து விடுவான்

அன்பும், அகிம்சையும், நல்லொழுக்கமும், தானமும், தவமும், பொறுமையும் இன்னும் பல நல்ல குணங்களும் ஒருவனை தெய்வமாக்கிவிடும்.

கீதையின் இந்த வரிகளே திருகுறளாயின, பவுத்தமாயின, சமணமாயின, கிறிஸ்துவிடமும் வந்தன‌

16ம் அத்தியாயத்தின் சுருக்கம் இதுதான்..

நல்லவனாக இரு, நல்ல குணங்களோடு இரு, மூவகை ஆசைகளையும் ஒழித்து கடமையினை செய், அதை தெய்வத்தினை முன்னிறுத்தி செய். நீ வாழ்வாய்

அப்படி நல்லனாய் இருந்தும் அசுரன் மூலம் சோதனை வந்தால் கலங்காதே, பொல்லாத அசுரனை எதிர்க்கும் நிலை வந்தால் அஞ்சாதே, தெய்வத்தை துணைக்கு அழைத்து கொள், தர்மத்தின் வழி நிற்பவனுக்கு அத்தெய்வம் தானாய் வந்து துணை நிற்கும்

அர்ஜூனனுக்கு கண்ணன் வந்து நின்றது போல, விசுவாமித்திரருக்கு ராமன் வந்தது போல, பிரகலாதனுக்கு நரசிம்மன் வந்தது போல ஏதோ ஒரு உருவில் தர்மத்தை காக்க பரம்பொருள் நல்லோரிடம் வந்தே தீருவான்..

கீதையின் 15ம் அத்தியாயம் புருஷோத்தம யோகம்.

Image may contain: 2 people

கீதையின் 15ம் அத்தியாயம் புருஷோத்தம யோகம், புருஷன் என்றால் தலையாயவன் , மூலமானவன் என பொருள் வரும், புருஷ + உத்தமன் புருஷோத்தமன் என்றானது.

மகா உயர்ந்தவன் என பொருளில் வரும் அதுதான் பரம்பொருள் என்பது. பதினைந்தாம் அத்தியாயமான இந்த அத்தியாயம் இப்படி சொல்கின்றது

“அர்ஜூனா, இயற்கை, ஆத்மா இவ்விரண்டையும் தன் வசப்படுத்திக் கொண்டு நிற்கும் கடவுள் எவ்விதத்திலும் இந்த இரண்டையும் விட மகா மேலானவர்

ஒரு ஆத்மா எப்படி பிறப்பின் கர்மங்களை அறுத்து பரம்பொருளான புருஷோத்தமனை அடைவது எப்படி என விளக்குகின்றது இந்த அத்தியாயம்

அர்ஜூனா “மேலே வேறுள்ளதும் கீழே கிளைகள் உள்ளதும் ஆகிய ஆலமரத்தை அழிவற்றது என்று சொல்கிறார்கள். வேதங்கள் அதனுடைய இலைகள். அதை யார் அறிகிறானோ அவன் வேதத்தை அறிபவன் ஆகிறான்.

அந்த மரத்தினுடைய கிளைகள், குணங்களால் செழிப்படைந்து, விஷயங்கள் என்னும் தளிர்விட்டு,கீழும் மேலும் படர்ந்திருக்கின்றன. மனித உலகத்தில் வேர்கள் கர்மத்தை விளைவிப்பனவாய் கீழ்நோக்கி பரவியிருக்கின்றன..

இகத்தில் அந்த மரத்தினுடைய ரூபம் அவ்வாறு புலப்படுவதில்லை. அதற்கு முடிவில்லை. ஆதியில்லை, இருப்புமில்லை. இந்த வலுத்து வேரூன்றிய அசுவத்த மரத்தை திடமான பற்றின்மை என்னும் கோடரியால் வெட்டவேண்டும்.

எங்கு போய் திரும்பவும் திரும்பி வருவதில்லையோ, யாரிடத்திலிருந்து பண்டைய பிரவிருத்தி பிரபவித்ததோ அதே ஆதிபுருஷனை சரணடைகிறேன்.அந்த மேலானநிலை தேடத்தக்கது

அகங்காரத்தையும்.பகுத்தறிவிமையும் நீங்கியவர்களாய், பற்று என்னும் குற்றத்தை வென்றவர்களாய் ,அத்யாத்ம நிஷ்டர்களாய், காமத்தை போக்கியவர்களாய், சுகதுக்கம் எனப்படும் இருமைகளிலிருந்து விடுபட்டவர்களாய் மடமையை தவிர்த்தவர்கள், அந்த அழிவில்லாத நிலையை அடைகிறார்கள்

எங்கு சென்றவர்கள் திரும்பி வருவதில்லையோ, அதை சூரியன் விளக்குவதில்லை.சந்திரனும் விளக்குவதில்லை.தீயும் விளக்குவதில்லை. அது என்னுடைய பரமபதம்

என்றென்னும் எனது அம்சமே ஜீவனாகத்தோன்றி, ஜீவலோகத்தில் பிரகிருதியிலேயே நிற்கின்ற மனதை ஆறாவதாகவுடைய இந்திரியங்களை (போகத்தை நோக்கி) கவர்கிறது

மலர்களிலிருந்து மணங்களை காற்று எடுத்துக்கொண்டு செல்வதுபோன்று, உடலை ஆள்பவன்(ஆன்மா) உடல் எடுக்கும்போதும்,விடும்போதும்.இந்திரியங்களை பற்றிக்கொண்டு போகிறான்

அவன் செவி.கண்,தோல்,நாக்கு.மூக்கு,மனம் ஆகியவைகளை தனதாக்கிக்கொண்டு விஷயங்களை அனுபவிக்கிறான்

ஓர் உடலில் இருந்து இன்னோர் உடலுக்கு செல்லும்போதும், ஓர் உடலில் இருக்கும்போதும் அனுபவிப்பவனை(ஆ்னமாவை), குணத்தோடு கூடியிருப்பவனை,மூடர்கள் காண்பதில்லை.

ஆனால் ஞானக்கண்களை உடையவர்கள் பார்க்கிறார்கள்

யோகியாவதற்கு முயல்பவர்கள், அதை(அனுபவிப்பவனை) தங்களுக்குள் வீற்றிருப்பவனாய் பார்க்கின்றனர். முயற்சியுடையவர்களாக இருந்தாலும் பக்குவப்படாதவர்கள், அறிவற்றவர்கள் அதை பார்ப்பதில்லை

எந்த சூரியனிடத்திலுள்ள வெளிச்சம் உலகம் முழுவதையும் பிரகாசிக்கச் செய்கிறதோ. சந்திரனிலும்,அக்கினியிலும் எந்த வெளிச்சம் உள்ளதோ அந்த பிரகாசம் என்னுடையதென்று அறிக(இறைவனுடையது)

நான் என் வீரியத்தால் பூமியினுள் பிரவேசித்து உயிர்களை தாங்குகிறேன். இனிமையான சந்திரனாகவும் ஆகி எல்லா பயிர்களையும் வளர்க்கிறேன்

நான் வைச்வானரன் ஆகி (வயிற்றில் உணவை செரிக்கும் சக்தி) பிராணிகளுடைய தேகத்தில் இருந்துகொண்டு, பிராணனுடனும் அபானனுடனும் கூடி நான்குவிதமான அன்னத்தை ஜீரணம் செய்கிறேன்(நக்கி உண்ணும் உணவு,குடிக்கும் உணவு.கடித்து உண்ணும் உணவு,மென்னுதின்னும் உணவு)

நான் எல்லோருடைய ஹிருதயத்தில் தங்கியிருக்கிறேன். மேலும் என்னிடமிருந்து நினைவும்,மறதியும்,ஞானமும் உண்டாகின்றன. எல்லா வேதங்களாலும் அறியப்படும் பொருள் நானே. வேதாந்தத்தை(வேதத்தின்சாரம்) செய்தவனும்,வேதத்தை அறிந்தவனும் நானே

சுரன் என்றும் அசுரன் என்றும் இந்த இரண்டே புருஷர்கள் உலகில் உண்டு(அழியக்கூடியவன் சுரன்.அழிவில்லாதவன் அசுரன்) . எல்லா உயிர்களும் சுர‌ன். கூடஸ்தன் (அதாவது பல்வேறு மாயகாட்சியை காட்டவல்லவன்) அசுரன் என்று சொல்லப்படுகிறான்

மற்றும் அக்ஷரத்திற்கும் அன்னியமாக உத்தம புருஷனாக எப்பொழுதும் பரமாத்மா என்று அழைக்கப்படுபவர் யாரோ அவர் உயிர்களின் தலைவர், மாறுபடாதவர் மூவுலகத்திலும் பிரவேசித்து தாங்குகிறார்.(மாயையை தனதாக்கிக்கொண்டு பிரபஞ்சத்தை படைக்கும்போது அது அக்ஷரன்.மாயை இல்லாமல் இருக்கும்போது பிரம்மம் அல்லது பரமாத்மா அல்லது புருஷன்)

நான் சுரத்தை கடந்தவனாக, அசுரத்திற்கும் மேலானவனாக இருப்பதால் உலகத்திலும், வேதத்திலும், புருஷோத்தமன் என்று புகழ்பெற்றவனாக இருக்கிறேன்

யார் இங்ஙனம் மயக்கமற்றவனாய் புருஷோத்தமன் என்று என்னை அறிகிறானோ அவன் முழுவதும் அறிந்தவனாய் முழுமனதோடு என்னை வணங்குகிறான்

இங்ஙனம் ஆழ்ந்த இந்த சாஸ்திரம் என்னால் உரைக்கப்பட்டது. இதை அறிபவன் புத்திமானாகவும், கிருதார்த்தனும்(செய்ய வேண்டிய கர்மங்களை செய்து முடித்தவனும்) ஆகிறான்.”

இதுதான் 15ம் அத்தியாயத்தின் வரிகள்

இதை கவனிக்கலாம் வாருங்கள்,

“மேலே வேர் உள்ளதும், பூமியில் கிளைகளும் உள்ள மரம்..” என்பது மானிடனை குறிக்கின்றது. ஆலமரத்திற்கு வேர்கள் பூமிக்கு கீழே இருக்கும்.ஆனால் மனிதனின் வேர்கள் அதாவது மூளை மேலே இருக்கிறது.இந்த அடிப்படையில் மனிதனையும், பிரபஞ்சத்தையும் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.

ஆலமரத்துக்கு எல்லா ஆதாரமும் அடியில் இருந்து வரும், மானிடனுக்கு எல்லாமே மூளையில் இருந்துதான் உதிக்கும்

அப்படியே இன்னொரு ஆலமரம் உருவகபடுத்தபடுகின்றது, அது தலைகீழாக அல்ல இயல்பான மரம், அது உலக பிரபஞ்சம் என்பதை குறிக்கின்றது. அதன் விதையும் வேறும் சக்தியானவன் பரம்பொருள், அதன் கிளைகள் பிரஞ்சமும், இன்னபிற விஷயங்களும், அதன் இலைகள் வேதங்கள்

ஆம் மனிதன் எனும் மரம் தலைகீழாக நின்று தலைகீழான காரியங்களை மண்ணில் தேடுகின்றது. பரம்பொருள் எனும் மறை பொருள் பிரபஞ்சம் முதலானவற்றை மறைந்திருந்து தாங்குகின்றது, இதை ஞானத்தால் அறிய வேண்டும்.

மானிட மரம் கிளை பரப்பும், அது ஆசை , கோபம், காமம், அகங்காரம், உலக விஷயம் என கிளை பரப்பி கொண்டே செல்லும், கண் காது மூக்கு வாய் இந்திரிய விருப்ப வழி என அது பல வகை கிளைபரப்பி செல்லும்

அதை எல்லாம் பற்றின்மை, தவம் எனும் கோடரியால் வெட்ட வேண்டும்

(சில பிள்ளையார் கரங்களில் கோடரியினை பார்த்திருக்கலாம், அந்த காட்சி இந்த வரிகளின் தத்துவ காட்சியன்றி வேறல்ல..)

உலக ஆசை நீங்கி, புலன்களின் வழி நீங்கி சுகதுக்கத்தை நீங்கி, எல்லாவற்றிலும் சமநிலை கண்டவர்கள் அழிவில்லா நிலையினை அடைகின்றார்கள்.

எங்கு சென்றவர்கள் திரும்பமுடியாதவர்கள் என்பதை உலகில் யாரும் விளக்க முடியாது, அது என் திருவடி என்பதே நிஜம். அதை தவிர சொர்க்கமோ வேறு உலகமோ சென்றவர்கள் மறுபடி கர்மம் தீர்க்க பிறப்பார்கள்

எனது அம்சமே ஆத்மா, அதுவே ஆறாவது அறிவாக நின்று உலகை நோக்குகின்றது

சாவு என்பதென்ன? பூவின் நறுமணத்தை காற்று சுமந்து செல்வது போல ஒரு ஆத்மாவினை ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்கு கடத்துவது அன்றி வேறல்ல‌

அவன் ஒரு உடலில் என்னென்ன அனுபவித்தானோ தேடினானோ அதை இன்னொரு உடல் எடுத்தபின்பும் ஐம்புலன்கள் மூலம் தேடுகின்றான். இது ஞானக்கண்ணால் பார்த்தால் மட்டுமே அறியபடும் விஷயம்

யோகியாக முயல்பவர்கள் தனக்குள் அதை தேடுகின்றார்கள், அறிவிலிகளுக்கு அது தெரிவதில்லை

பரம்பொருளே உலகை தாங்குகின்றான், அவனே விளைவிக்கின்றான், அவனே மானிட உழைப்பாகின்றான், அவனே உணவு செரிக்கும் சக்தியும் ஆகின்றான்

எல்லா மனிதரின் மனதிலும் பரம்பொருள் அம்சம் உண்டு, அதுதான் மனிதனின் நினைவு, சொல் , செயல் என எல்லாவற்றையும் செய்கின்றது

இவ்வுலகில் இருவகையான விஷயம் உண்டு, அழிய கூடியது அழிவில்லாதது என்பது அது சுரன் என்பது மானிட மனம். அசுரன் என்பது மாயை

ஆம் அசுரன் என்பது மாயை, மாயையே அசுரன், மாயையே சாத்தான். அதை வென்றால் அழிவில்லா நிலையினினை அடையலாம், கடவுளின் திருவடியினை காணலாம்

அசுரன் என்பது கொம்பு முளைத்த சக்தியோ, பெரும் வடிவமோ, பெரும் பூதகணமோ அல்ல. அசுரன் என்றால் மாயை , இல்லா ஒன்றை , நிலையற்ற ஒன்றை நிலையானது என உணர்ந்து இழுக்கும் மாயை

அது பணம், அழகு, செல்வாக்கு, வாழ்வு, அகங்காரம், பலம் என எல்லா வடிவிலும் வரும்

அந்த அசுரனை கொன்றால், மாயையினை வென்றால் அதன் பின் இருக்கும் வெற்றிடத்தில் உண்மை தெரியும் அது பரம்பொருளின் காலடிக்கு வழிகாட்டும், அங்கே அழைத்து செல்லும்

பரம்பொருள் என்பது அழிய கூடிய உலகிலும் இல்லை, மாய காட்சிகளிலும் இல்லை அது அதனை எல்லாம் கடந்த, நன்மை தீமைக்கு அப்பாற்பட்ட பெரும் சக்தி

அறியாமை நீங்கியவன். முளைத்து கொண்டே இருக்கும் ஆசைகளை வெட்டி எறிந்து, ஆசைகளின் மூலமான மனதை அறிந்து அடக்கி, பற்றற்ற நிலையில் நிலைத்து பரம்பொருளை புருஷோத்தமன் என வணங்குகின்றானோ அவன் எல்லாம் உணர்ந்தவனாகின்றான்

அப்படி உணர்ந்தவன் ஞானியும், தன் கடமைகளை உணர்ந்து செய்து முடித்த நிலையினையும் அடைகின்றான்.

ஆம் கீதையின் இந்த வரிகளே “ஆசையே துன்பத்துக்கு காரணம்” என புத்தன் வாயால் பொன்மொழி போதனை என வந்தது

“பற்றற்ற வாழ்க்கை” என சமண துறவிகள் வழியாய் வந்தது

“உன் கண் உனக்கு இடறலாய் இருந்தால் கண்ணை பிடுங்கிவிடு” அதாவது புலன்களை கட்டுபடுத்து என்றும், “பணக்காரன் சொர்க்கத்தில் நுழைய முடியாது” என்றும் “ஒருவன் தன் வீடு, மனைவி , சொந்தம் பந்தம் தாய் தந்தையினை பிரிந்து என்னை பின்செல்ல கடவன்” என்றும், “ஒன்று பூலோக வாழ்க்கையில் கால்பதி இல்லை எல்லாவற்றையும் துறந்து என்பின்னால் வா, இரண்டு வழி என்பது சாத்தியமில்லை” என இயேசுவின் வாயாலும் போதனையாக வந்தது

“நானே உலகின் ஒளி, நானே உலகின் ஜீவனும் வழியுமாயிருக்கின்றேன்” எனும் இயேசுவின் தத்துவம் இங்கிருந்தே வந்தது

“அவரிடம் இருந்தே அனைத்தும் உண்டானது” என்ற பைபிளின் வரியும் கீதையில் இருந்தே வந்தது

சூரிய வெளிச்சம் உலகின் எல்லா பாகத்திலும் படுவது போல, கீதையின் வெளிச்சம் எல்லா நூல்களையும் என்றோ தொட்டுவிட்டது.

அதுவே ஞானத்தின் ஊற்று, அதுவே ஞானத்தின் ஆறு. அந்த ஆறு ஒவ்வொரு மனிதனையும் பரம்பொருள் எனும் கடலுக்குள் இழுக்க எக்காலமும் ஓடிகொண்டே இருக்கின்றது..

இந்துக்களின் தெய்வ வடிவும், அவைகள் காட்டும் குறியீடு வடிவும் சாதாரணமானது அல்ல‌

நாம் முன்பே சொன்னபடி முளைக்கும் ஆசையினை , கிளைகளை கோடாரியால் வெட்டுவது போன்று வெட்டி எறி என்பதே பிள்ளையார் கையில் இருக்கும் கோடாரி தத்துவம்

சரி, வெட்ட வெட்ட முளைக்கத்தானே செய்யும். மூலத்தை தோண்டி வேரினை எடுத்தெறியாவிட்டால் எப்படி மரத்தின் வளர்ச்சியினை தடுக்க முடியும்? வேர் இருக்கும் வரை அது துளிர்த்து கொண்டேதானே இருக்கும்?

காடே எரிந்தாலும் ஒரு மழையில் முளைவிடும் மரமோ புல்லோ எப்படி துளிர்க்கின்றது, ஆம் வேர் அவ்வளவு வலுவானது

ஆம், ஆசைகளை செயல்படுத்தும் கிளைகளை வெட்டினால் முழு பலனில்லை கிளைகளை உயிரோடு வைத்திருக்கும், வளர வைக்கும் வேரினை பிடுங்கி எறிதலே சரி

ஆம் பன்றி மரத்தின் வேர்வரை தோண்டுதல் போல தோண்டி எறிதல் வேண்டும்

இந்த தத்துவமே வராக அவதாரம் என்றும், வராகி என்றும் இந்துக்களிடம் நிலைபெற்றது. பன்றி எனும் விலங்குமுகம் தத்துவ தெய்வமானது இப்படித்தான்

வராகம் ஒன்றே கீழ்நோக்கி தோண்டி கிழங்கினை எடுத்து எறியும் தன்மை கொண்டது.

ஆம் மனதின் ஆழம் வரை தோண்டு, வேர் கிழங்கு இருக்கும் வரை தோண்டி எறி அதன் பின் ஆசை முளைக்காது என்பதே வராக தத்துவம்.

அப்படி வராகம் போல் என் ஆசைகளை ஒழி பகவானே என சரணடைய வேண்டும்

வராக அவதாரம் என்பதும், வராகி அம்மன் என்பதும் ஆசையினை மட்டுமல்ல ஆசை உருவாகி கொண்டே குடியிருக்கும் மனதையும் ஒழி எனும் தத்துவமே அன்றி வேறல்ல‌

வராஹி அம்மன் வரலாறு, புராணத்தில் அசுரனின் குணங்கள் அதை பகவான் ஒழித்த கதை எல்லாம் உற்று நோக்குங்கள்

அதைத்தான் 15ம் அத்தியாயம் விளக்குகின்றது..

பகவத் கீதை‍ 14

Image may contain: 2 people

கீதையின் 14ம் அத்தியாயம் குணத்ரிய யோகம்..

குணம் + திரிய என்றால் மூன்றுவகை குணங்கள் என பொருள். மூவகை குணங்களையும் எப்படி ஒருமனிதன் கையாண்டு கர்மத்தை கடந்து கடவுளை அடைய வேண்டும் என்பதை இது விளக்குகின்றது.

வாருங்கள் பார்க்கலாம்

கண்ணன் சொல்கின்றான் “எல்லா ஞானங்களிலும் உயர்ந்ததான இந்த பரம ஞானத்தை நான் உனக்கு மீண்டும் கூறுகின்றேன். இதனை அறிந்த முனிவர்கள் அனைவரும் தெய்வீகமான பக்குவ நிலையை அடைந்துள்ளனர்.

இந்த ஞானத்தில் நிலைபெறுவதால், ஒருவன் என்னைப் போன்ற தெய்வீக இயற்கையை அடைய முடியும். இவ்வாறு நிலைபெற்றபின், அவன் படைப்பின்போது பிறப்பதோ, பிரளயத்தின்போது தொல்லையுறுவதோ இல்லை.

(பிறந்திருந்தாலும் இந்த ஞானம் அடைந்தால் அவன் அழிவில்லா இடம்பெறுவான்)

அர்ஜூனா, பிரம்மம் எனப்படும் மொத்த ஜட வஸ்துக்களும் ஒரு கருவறையாகும். அந்த பிரம்மனை படைக்க சொல்லி அனைத்து ஜீவாத்மாக்களின் பிறப்பினையும் நானே சாத்தியமாக்குகின்றேன்.

எல்லா உயிரினங்களும் இவ்வுலகில் பிறப்பினால் சாத்தியமாக்கப்படுகின்றன. மேலும், நானே பிறப்பின் மூலம் என்பதும் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

இயற்கையானது, ஸத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் ஆகிய முக்குணங்களால் ஆனது. அர்ஜுனா, ஒரு உயிர், இயற்கையின் தொடர்பில் வரும்போது, இந்த குணங்களினால் கட்டுப்படுத்தப் படுகின்றான்.

மற்றவற்றைவிட தூய்மையானதான ஸத்வ குணம், பிரகாசப்படுத்துவதாகவும் எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் விடுவிப்பதாகவும் அமைகின்றது. இந்த குணத்தில் நிலைபெற்றவர்கள் இன்பத்தின் தொடர்பினாலும் ஞானத்தின் தொடர்பினாலும் தொடர்புள்ளவர்கள்.

எல்லையற்ற ஆசையாலும் ஏக்கத்தாலும் பிறந்த ரஜோ குணத்தின் காரணத்தினால், உடலையுடைய உயிர், லவுகீக பலனை எதிர்பார்த்து செயல்களால் தொடர்புள்ளவனாகின்றான்

அறியாமையினால் பிறந்த தமோ குணம் உடலையுடைய எல்லா உயிர்களையும் மயக்குகின்றது. கட்டுண்ண ஆத்மாவை தொடர்புபடுத்த கூடிய‌, பைத்தியக்காரத்தனம், சோம்பல், உறக்கம் ஆகியவை இந்த குணத்தின் விளைவுகளாகும்.

ஸத்வ குணம் இன்பத்தினாலும், ரஜோ குணம் செயல்களின் பலன்களினாலும் கட்டுப்படுத்துகின்றன; ஞானத்தை மறைக்கும் தமோ குணம், பைத்தியக்காரத்தனத்தினால் பந்தப்படுத்துகின்றது.

ஸத்வ குணம், சில சமயஙகளில் ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் தோற்கடித்து மேலோங்குகின்றது. சில சமயங்களில் ரஜோ குணம், ஸத்வ குணத்தையும் தமோ குணத்தையும் தோற்றகடிக்கின்றது. மேலும் இதர சமயங்களில் தமோ குணம், ஸத்வ குணத்தையும் ரஜோ குணத்தையும் தோற்கடிக்கின்றது. இவ்வாறு உயர்நிலைக்கான போட்டி எப்போதும் நிலவுகின்றது

உடலின் எல்லாக் கதவுகளும் ஞானத்தால் பிரகாசிக்கும்போது ஸத்வ குணத்தின் தோற்றத்தை அனுபவிக்க முடியும்.

ரஜோ குணம் அதிகரிக்கும்போது, பெரும் பற்றுதல், பலன்நோக்குச் செயல்கள், தீவிர முயற்சி, கட்டுப்பாடற்ற ஆசை, மற்றும் ஏக்கத்தின் அறிகுறிகள் வளர்கின்றன.

தமோ குணம் அதிகரிக்கும்போது, இருள், செயலற்ற தன்மை, பைத்தியக்காரத்தனம், மற்றும் மயக்கமும் தோன்றுகின்றன

ஸத்வ குணத்தில் மரணமடையும்போது, ஒருவன் உன்னத சாதுக்கள் வசிக்கும் தூய்மையான உயர் லோகங்களை அடைகின்றான்.

ரஜோ குணத்தில் மரணமடையும் போது, ஒருவன் பலன்நோக்குச் செயல்களில் ஈடுபட்டிருப்பவர்களின் மத்தியில் பிறக்கின்றான். தமோ குணத்தில் மரணமடையும் போதோ, அவன் மிருக இனத்தில் பிறவியெடுக்கின்றான்.

புண்ணியச் செயல்களின் விளைவுகள் தூய்மையானவை, அவை ஸத்வ குணத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால் ரஜோ குணத்தில் செய்யப்படும் செயல்கள் துக்கத்திலும், தமோ குணத்தில் செய்யப்படும் செயல்கள் முட்டாள்தனத்திலும் முடிகின்றன.

ஸத்வ குணத்திலிருந்து உண்மை ஞானம் விருத்தியாகின்றது; ரஜோ குணத்திலிருந்து பேராசை விருத்தியாகின்றது; மேலும் தமோ குணத்திருந்தோ முட்டாள்தனம், பைத்தியக்காரத் தனம், மற்றும் மயக்கமும் விருத்தியாகின்றன

ஸத்வ குணத்தில் நிலைபெற்றவர்கள் படிப்படியாக உயர் லோகங்களுக்கு மேல்நோக்கிச் செல்கின்றனர்; ரஜோ குணத்தில் இருப்பவர்கள் பூவுலகங்களில் வாழ்கின்றனர்; மேலும், வெறுக்கத்தக்கதான தமோ குணத்தில் இருப்பவர்கள் நரக லோகங்களுக்குக் கீழ்நோக்கிச் செல்கின்றனர்.

எல்லாச் செயல்களிலும், இயற்கையின் குணங்களைத் தவிர வேறு கர்த்தா யாரும் இல்லை என்பதையும், தெய்வ நிலையினர் இந்த இயற்கை குணங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதையும் அறிந்து முறையாகக் காண்பவன், எனது ஆன்மீக இயற்கையை அடைகின்றான்.

உடலை உடையவன், உடலுடன் தொடர்புடைய இந்த மூன்று குணங்களிலிரந்து உயர்வு பெற முயலும்போது, பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் இவற்றின் துன்பங்களிலிருந்து விடுதலை பெற்று, இந்த வாழ்விலேயே ஞானத்தை சுவைக்க முடியும்.

அர்ஜுனன் வினவினான்: எம்பெருமானே, இந்த மூன்று குணங்களைக் கடந்தவனை அறிவதற்கான அறிகுறிகள் யாவை? அவனது நடத்தைகள் யாவை? இயற்கை குணங்களிலிருந்து அவன் உயர்வு பெறுவது எவ்வாறு?

கண்ணன் சொல்கின்றான் “பிரகாசம், பற்றுதல், மயக்கம் ஆகியவை தோன்றியிருக்கும்போது அவற்றை வெறுக்காதவனும், அவை மறைந்திருக்கும்போது அவற்றிற்காக ஏக்கமடையாதவனும்; இயற்கை குணங்களின் விளைவுகளுக்கு மத்தியில் ஸ்திரமாக, சஞ்சலமின்றி, நடுநிலையில், அப்பாற்பட்டு இருப்பவனும், குணங்களே செயல்படுகின்றன என்பதை அறிபவனும்; தன்னில் நிலைபெற்று இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகக் கருதுபவனும்; மண்ணையும் கல்லையும் பொன்னையும் சமமாகக் காண்பவனும்; பிரியமானவற்றிலும் பிரியமற்றவற்றிலும் சமநிலை உடையவனம்;

திடமானவனும், புகழ்ச்சி இகழ்ச்சி, மானம் அவமானம் ஆகியவற்றில் சமமாக நிலை பெற்றவனும், நண்பனையும் எதிரியையும் சமமாக நடத்துபவனும்; எல்லா பலன்நோக்குச் செயல்களையும் துறந்தவனுமான மனிதன் இயற்கை குணங்களைக் கடந்தவனாகக் கூறப்படுகின்றான்

புறக்கணித்தான் போலேயிருப்பான், குணங்களால் சலிப்படையான், “குணங்கள் சுழல்கின்றன” என்றெண்ணி அசைவற்று நிற்பான்.

துன்பத்தையும் இன்பத்தையும் நிகராகக் கொண்டோன், தன்னிலையில் நிற்பான், ஓட்டையும் கல்லையும் பொன்னையும் நிகராகக் காண்பான், இனியவரிடத்தும் இன்னாதவரிடத்தும் சமானமாக நடக்குந் தீரன், இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் நிகராகக் கணிப்பான்;

மானத்தையும் அவமானத்தையும் நிகராகக் கருதுவான், நண்பரிடத்தும் பகைவரிடத்தும் நடுநிலைமை பூண்டான், எல்லாவிதத் தொழிலெடுப்புக்களையுந் துறந்தான் அவனே குணங்களைக் கடந்தவனென்றும் சொல்லப்படுகிறான்.

எந்தச் சூழ்நிலையிலும் தவறாமல், எனது பூரண பக்தித் தொண்டில் ஈடுபடுபவன், ஜட இயற்கையின் குணங்களை உடனடியாகக் கடந்து, பிரம்மன் நிலைக்கு வந்தடைகின்றான்.

மேலும், மரணமற்றதும், அழிவற்றதும், நித்தியமானதும், இறுதி இன்பத்தின் தர்மமுமான அருவ பிரம்மனின் ஆதாரம் நானே..”

கண்ணன் இதில் சொல்வது என்ன?

இந்த பூமியில் ஒவ்வொரு மானிட பிறப்புக்கும் மூவகை குணம் இயல்பாக உண்டு. ஒவ்வொரு ஆத்துமாவிலும் அது கலந்திருக்கின்றது. அந்த மூன்றையும் கடந்து ஒருவன் கடந்தால் மட்டுமே பரபிரம்மனை அடைவது சாத்தியம்

ரஜோ குணம், தமோ குணம், சத்வ குணம்

ரஜோ குணம் என்பது பேராசையும் அகங்காரமும் திமிரும் நெருப்பு போன்று அடுத்தவனை விழுங்கும் குணமும் கொண்ட மிக கொடிய குணம். அடுத்திருப்பவனை வாழவிடாத பெரும் கொடிய அந்த குணம் இன்னொருவனுக்கு ஆபத்தானது

தமோ குணம் என்பது சோம்பல், மயக்கம், தூக்கம், அறியாமை என எருமை சேற்றில் கிடப்பதை போல் கிடப்பது இது தனக்கே ஆபத்தான குணம்

சத்வ குணம் என்பது மனசாட்சி அல்லது சாத்வீக ஞான குணம், கடவ்ளை தேடி உண்மையினை அறிய சொல்ல தூண்டும் உன்னத குணம்

இந்த அத்தியாயத்தில் அந்த மூன்று குணங்களையும் கண்ணன் விளக்குகின்றான், விளக்கிவிட்டு ரஜோ குணத்தில் செத்தால் அவன் அப்படியே பிறப்பான், தமோ குணத்தில் சாவை எய்துகின்றவனும் அப்படியே பிறப்பான்

சத்வ குணத்தில் இறப்பவன் யோகிகள் இருக்குமிடம் எய்துவான் என்கின்றான் கண்ணன்

சாகும் முன் ஒரு மனிதன் பாவங்களை உணர்ந்து தன்னை உணர்ந்து திருந்த வேண்டும் என்பது இதுதான், எல்லா மதமும் சொல்லும் அந்த தத்துவம் இதேதான்

இந்த மூன்று குணங்களையும் கடந்த ஒருவனை எப்படி அடையாளம் காண்பது என அர்ஜூனன் கேட்க அதற்கும் விளக்கம் சொல்கின்றான் கண்ணன்

அவன் ஆசைகளை கடந்து, இன்ப துன்பங்களை சரியாக உணர்ந்து, பற்றற்று , கர்வமற்று எந்நிலையிலும் ஒரே போல இருப்பான். எந்த இன்பமும் துன்பமும் அவனை நெருங்காது. அவன் சிரிப்பதுமில்லை அழுவதுமில்லை பூரண அமைதியில் நிலைத்திருப்பான், அந்த ஆத்மா பரம்பொருளில் கலந்திருக்கும்

இந்த அத்தியாயம் சொல்வது இதுதான்

மூவகை குணத்தையும் கொண்ட மனிதன் ரஜோ குணம் எனும் கொடும் குணத்தையும், தமோ எனும் மாய சோம்பேறி குணத்தையும் தன் சத்வம் எனும் அறிவு ஞானத்தால் ஒடுக்கி அழிக்க வேண்டும்

பின் ஞானம் அடைந்து , தான் ஞானி எனும் கர்வத்தையும் ஒழிக்க வேண்டும்

விறகினை எரிக்க தொடங்கும் தீக்குச்சி நெருப்பில் வீழ்ந்து எரிவது போல் , இரு குணங்களையும் எரிக்கும் சத்வ குணம் பின் தானும் அழிய வேண்டும்

காரணம் அவன் ஞானி எனும் பெருமையில் இறந்தால் அந்த புண்ணிய கர்மாவினை கழிக்க இன்னொரு பிறவி எடுப்பான், அங்கு அவன் பாவம் செய்ய வாய்ப்பு உண்டு, அவன் பிறவி சக்கரம் சுழலும்

இதனால் எந்த குணத்தில் ஓங்குதலுமின்றி ஒருவன் வாழ்வு முடிய வேண்டும், அதுதான் ஞானத்தின் உச்ச நிலை, இல்லையேல் எந்த குணத்தில் முடிவில் இறந்தாலும் சக்கர சுழல்வில் தப்ப முடியாது

ரஜோ குணமும் தமோ குணமும் சத்வ குணத்தால் அடக்கபடட்டும், பின் சத்வ குணம் தானாய் அகலட்டும்

இந்த சித்தர்களின் ஜீவ சமாதி என நெருப்பில் நீரில் பூமியில் இறங்குதல் எனும் தத்துவம் இதுதான்

உள்மனதை வென்றுவிட்டேன், நான் எனும் ஆங்காரத்தையும் அதாவது நான் என்னை வென்றவன் புலன்களை வென்றவன் எனும் அந்த அகங்காரத்தையும் துறந்துவிட்டேன் இனி வாழ அவசியமில்லை என கரையேறும் நிகழ்வு அது

அந்த மகா உன்னத ஞானத்தைத்தான் இந்த அத்தியாயம் போதிக்கின்றது

ஒரு மனிதனுக்குள் இந்த மூவகை குணமும் உண்டு, சத்வ குணத்தால் மற்ற இரண்டையும் வென்று கடைசியில் சத்வ குணத்தையும் துறந்து வாழ்வினை முடிப்பவன் பிறவி அடையமாட்டான், நித்திய பிரம்மத்துடன் அவன் இணைந்துவிடுவான்

தான் ஞானி, சித்தன், மகான், பற்றை துறந்தவன் என்பது கூட ஒரு ஆசையே, பற்றே, அகங்காரமே என்பதுதான் இதன் உட்பொருள்

“எல்லாம் துறந்த பட்டினத்தாரே, துறவி என்பதற்காக திருவோட்டினை ஏந்துவதை பெருமையாக கருதுகின்றாயே, இந்த திருவோடு உன் துறவின் பெருமை அல்லவா?” என்ற குரல் கேட்டவுடன் திருவோட்டை தூர எறிந்து தான் ஞானி என நினைப்பதும் ஒரு அகங்காரமே கர்வமே ஆசையே என உணர்ந்து நின்றார் அல்லவா பட்டினத்து ஞானி

அவரின் மன நிலையினை, அதாவது ஆசையினை வென்ற‌ ஞானிக்கு கூட கர்வம் இருந்தால் ஆபத்து அப்படி ஒரு நினைப்பு இருக்குமாயின் அதுவும் பாவம் என சொல்கின்றது இந்த அத்தியாயம்

இது உண்மையில் மாபெரும் தத்துவம், இதை கீதையினை தவிர வேறெங்கும் பார்க்க முடியாது, ஆனால் ஒரு ஞானிக்கும் துறவிக்கும் இருக்க வேண்டிய மகான் உன்னத குணம் இது.

பகவத் கீதை‍ 13

Image may contain: 2 people

கீதையின் 13ம் அத்தியாயம் க்ஷேத்ர-க்ஷேத்ரக்ஞ விபாக யோகம் அதாவது உடலுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள தொடர்பினை பற்றி சொல்வது, பிரபஞ்சம் பரம்பொருள் பூமி மனித உடல் அதில் இருக்கும் ஆத்மா பற்றிய தொடர்புகளை சொல்வது இந்த அத்தியாயம்

அர்ஜுனன் கேட்கின்றாய் , “எனதன்புகுரிய கிருஷ்ணரே, இயற்கை (பிரக்ருதி), அனுபவிப்பவன் (புருஷ), களம் (க்ஷேத்ர), களத்தை அறிபவன் (க்ஷேத்ரக்ஞ), அறிவு (ஞானம்), அறியப்படும் பொருள் (ஞேயம்) ஆகியவற்றைப் பற்றி நான் தெரிந்து கொள்ள விரும்புகின்றேன், எனக்கு போதிப்பாயாக”

கண்ணன் கூறுகின்றார் ” அர்ஜூனா, இந்த உடல், களம் (க்ஷேத்ர) என்று அழைக்கப்படுகின்றது. இவ்வுடலை அறிபவன், களத்தை அறிபவன் (க்ஷேத்ரக்ஞ) என்று அழைக்கப்படுகிறான்.

அர்ஜூனா , நானும் எல்லா உடல்களிலும் அறிபவனாக உள்ளேன் என்பதை புரிந்துகொள். உடலையும் அதனை அறிபவனையும் புரிந்துகொள்வதே ஞானம் என்று அழைக்கப்படுகின்றது. இதுவே எனது அபிப்பிராயம்.

செயல்களின் களம் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது, அதன் மாற்றங்கள் யாவை, அஃது எப்போது உண்டாக்கப்படுகின்றது, செயல்களின் களத்தை அறிபவன் யார், அவனது செல்வாக்குகள் யாவை, என்பதைப் பற்றிய எனது சுருக்கமான உரையை இனிக் கேட்பாயாக.

செயல்களின் களம் மற்றும் செயல்களை அறிபவனைப் பற்றிய அறிவு, பற்பல முனிவர்களினால் பல்வேறு வேத நூல்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வேதாந்த சூத்திரத்தின் பதங்களில், காரணம் மற்றும் விளைவுகளுடன் இவை மிகவும் நுணுக்கமாக விளக்கப்பட்டுள்ளன

பஞ்சபூதம், அஹங்காரம், புத்தி, அவ்யக்தம், பத்து புலன்கள், மனம், ஐந்து புலன் பொருள்கள், விருப்பு, வெறுப்பு, இன்பம், துன்பம், உயிரின் அறிகுறிகள், திட நம்பிக்கை இவையெல்லாம் சுருக்கமாக செயல்களின் களம் மற்றும் அதன் மாறுபாடுகள் என்று கருப்படுகின்றன.

அடக்கம், கர்வமின்மை, அகிம்சை, பொறுமை, எளிமை, அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவை அணுகுதல்; தூய்மை தளராமை சுயக்கட்டுப்பாடு, புலனுகர்ச்சிப் பொருள்களைத் துறத்தல், பொய் அஹங்காரம் இல்லாதிருத்தல், பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகியவற்றின் துன்பத்தினை கவனித்தல்,

குழந்தைகள், மனைவி, வீடு மற்றும் இதர பந்தத்திலிருந்து விடுபட்டு இருத்தல், விருப்பு வெறுப்புகளில் சமநிலை, என் மீதான நித்தியமான களங்கமற்ற பக்தி; தனிமையான இடங்களில் வாழ விரும்புதல்; பொதுமக்களிடமிருந்து விலகியிருத்தல், ஆத்ம ஞானத்தின் முக்கியத்துவத்தை ஏற்றல்; பரம சத்தியத்தை அறிவதற்கான தத்துவ ஆய்வு இவையனைத்தையும் நான் ஞானமாக அறிவிக்கின்றேன், இவற்றைத் தவிர மற்றவை அனைத்தும் அறியாமையே ஆகும்.

தற்போது, எதை அறிவதால் நீ அமிர்தத்தை சுவைப்பாயோ, அந்த அறியப்படும் பொருளை நான் உனக்கு விளக்குகின்றேன். ஆரம்பம் இல்லாததும், எனக்குக் கீழ்ப்பட்டதும், பிரம்மன், ஆத்மா என்று அழைக்கப்படுவதுமான இது, ஜடவுலகின் காரணம் மற்றும் விளைவுகளுக்கு அப்பாற்பட்டு விளங்குகின்றது.

அவரது கரங்கள், கால்கள், கண்கள், மற்றும் முகங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. எல்லா இடங்களிலும் அவரது காதுகளும் உள்ளன. இவ்வாறாக எங்கும் வீற்றிருப்பவராக பரமாத்மா விளங்குகின்றார்.

எல்லா புலன்களுக்கும் மூல காரணம் பரமாத்மாவே, இருப்பினும் அவரிடம் புலன்கள் கிடையாது. அவரே எல்லா உயிர்வாழிகளையும் பராமரிப்பவர், இருப்பினும் அவர் பற்றற்றவராக உள்ளார். அவர் இயற்கையின் குணங்களுக்கு அப்பாற்பட்டவர், அதே சமயத்தில், ஜட இயற்கையின் எல்லா குணங்களுக்கும் அவரே எஜமானர்

பரம உண்மை, எல்லா உயிர்வாழிகளின் உள்ளும் புறமும் உள்ளார், அசைவன மற்றும் அசையாதவற்றிலும் உள்ளார். அவர் சூட்சுமமானவர் என்பதால், ஜடப் புலன்களின் வலிமையால் காண்பதற்கோ அறிவதற்கோ அப்பாற்பட்டவர். மிக மிகத் தொலைவில் இருப்பினும், அவர் அனைவரின் அருகிலும் உள்ளார்

எல்லா உயிர்களுக்குமிடையே பரமாத்மா பிரிந்திருப்பதாகத் தோன்றினாலும், அவர் ஒருபோதும் பிரிக்கப்பட முடியாதவர். அவர் ஒருவராகவே இருக்கின்றார். அவரே எல்லா உயிர்வாழிகளையும் காப்பவர் என்றபோதிலும், அழிப்பவரும் விருத்தி செய்பவரும் அவரே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

பிரகாசிக்கும் பொருள்கள் எல்லாவற்றிற்கும் மூலம் அவரே. அவர் ஜடத்தின் இருட்டிற்கு அப்பாற்பட்டவராகவும் தோன்றாதவராகவும் உள்ளார். அவரே அறிவாகவும், அறியப்படும் பொருளாகவும், அறிவின் இலக்காகவும் உள்ளார். அவர் ஒவ்வொருவருடைய இதயத்திலும் வீற்றுள்ளார்.

இவ்வாறாக, செயல்களின் களம் (உடல், க்ஷேத்ர), அறிவு (க்ஞானம்), அறியப்படும் பொருள் (க்ஞேயம்), ஆகியவை சுருக்கமாக என்னால் விவரிக்கப்பட்டன. எனது பக்தர்கள் மட்டுமே இவற்றை முழுமையாகப் புரிந்து கொண்டு, எனது இயற்கையை அடைய முடியும்.

ஜட இயற்கையும் உயிர்வாழிகளும் ஆரம்பமற்றவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களது மாற்றங்களும் ஜடத்தின் குணங்களும், ஜட இயற்கையின் உற்பத்திப் பொருள்களே.

எல்லா செயல்களுக்கும் விளைவுகளுக்கும் இயற்கையே காரணமாகக் கூறப்படுகிறது; இருப்பினும் இவ்வுலகின் பல்வேறு இன்ப துன்பங்களுக்கு உயிர்வாழியே காரணமாகக் கூறப்படுகின்றது

இவ்வாறாக, ஜட இயற்கையிலுள்ள உயிர்வாழி, இயற்கையின் முக்குணங்களை அனுபவித்துக் கொண்டு, வாழ்வின் வழிகளை பின்பற்றுகின்றான். இவை ஜட இயற்கையின் தொடர்பினால் ஏற்படுபவை. இவ்வாறு பல்வேறு இனங்களில் அவன் நன்மை தீமைகளைச் சந்திக்கின்றான்

இருப்பினும், இவ்வுடலில் மற்றொருவரும் இருக்கின்றார், அவர் தெய்வீக அனுபவிப்பாளர். அவரே இறைவன், பரம உரிமையாளர். மேற்பார்வையிட்டு அனுமதி வழங்குபவரும், பரமாத்மா என்று அறியப்படுபவரும் அவரே.

ஜட இயற்கை, உயிர்வாழி, குணங்களுடனான இவற்றின் உறவு ஆகியவற்றைப் பற்றிய இந்த தத்துவத்தைப் புரிந்து கொள்பவன், நிச்சயமாக முக்தி அடைகின்றான். அவனது தற்போதைய நிலை எவ்வாறு இருந்தாலும் சரி, அவன் மீண்டும் இங்கே பிறவியெடுக்கப் போவதில்லை.

தங்களுக்குள் இருக்கும் பரமாத்மாவினை, சிலர் தியானத்தினாலும், சிலர் ஞானத்தை வளர்ப்பதாலும், வேறு சிலர் பலனை எதிர்பாராது செயல்படுவதாலும் காண்கின்றனர்.

வேறு சிலர், ஆன்மீக ஞானத்தில் ஆழ்ந்த அனுபவம் இல்லாத போதிலும், பிறரிடமிருந்து முழுமுதற் கடவுளைப் பற்றி கேட்டதன் அடிப்படையில் அவரை வழிபடத் தொடங்குகின்றனர். அதிகாரிகளிடமிருந்து கேட்பதற்கான தங்களது இயல்பின் காரணத்தால் அவர்களும் பிறப்பு இறப்பின் வழியினைக் கடந்து செல்கின்றனர்.

அர்ஜூனா, அசைவன, அசையாதவை என எதையெல்லாம் நீ காண்கின்றாயோ, அவையெல்லாம் செயல்களின் களமும் களத்தை அறிபவனும் இணைந்த கலவையேயாகும்

எல்லா உடல்களிலும் ஜீவாத்மாவுடன் இணைந்து பரமாத்மாவைக் காண்பவனும், அழியக்கூடிய உடலினுள் இருக்கும் ஆத்மாவும் பரமாத்மாவும் அழிவடைவதில்லை என்பதைப் புரிந்துகொள்பவனுமே, உண்மையில் காண்பவனாவான்

பரமாத்மா, எல்லா இடங்களிலும், எல்லா உயிர்வாழியிலும் சமமாக வீற்றிருப்பதைக் காண்பவன், தனது மனதால் தன்னை இழிவுபடுத்திக் கொள்வதில்லை. இவ்வாறு அவன் தெய்வீக இலக்கை அணுகுகின்றான்

எவனொருவன், ஜட இயற்கையினால் படைக்கப்பட்ட உடலே எல்லாச் செயல்களையும் செய்கின்றது என்பதையும், ஆத்மா எதையும் செய்வதில்லை என்பதையும் காண்கின்றானோ, அவனே உண்மையில் காண்கின்றான்.

அறிவுள்ள மனிதன், பல்வேறு ஜட உடல்களில் பல்வேறு தோற்றங்களைக் காண்பதை நிறுத்தி, உயிர்வாழிகள் எவ்வாறு எங்கும் பரிந்துள்ளனர் என்பதை எப்போது காண்கின்றானோ, அப்போது அவன் பிரம்மன் உணர்வை அடைகின்றான்.

நித்தியத்தின் பார்வையை உடையவர்கள், அழிவற்ற ஆத்மா தெய்வீகமானது, நித்தியமானது, இயற்கையின் குணங்களுக்கு அப்பாற்பட்டது என்பதைக் காண முடியும். ஜடவுடலின் தொடர்பில் இருந்தாலும் கூட, அர்ஜூனா, ஆத்மா எதையும் செய்வதோ பந்தப்படுவதோ இல்லை.

எங்கும் நிறைந்திருந்தாலும் தனது நுண்ணிய இயற்கையினால், ஆகாயம் எதனுடனும் கலக்காமல் இருக்கின்றது. அதுபோல, பிரம்மனின் பார்வையில் நிலைபெற்றுள்ள ஆத்மா, உடலில் அமைந்திருந்தாலும் உடலுடன் கலப்பதில்லை.

பரதனின்ன மைந்தனே, ஒரே ஒரு சூரியன் இந்த பிபங்கம் முழுவதையும் பிரகாசமாக்குவதைப்போல, உடலினுள் இருக்கும் ஆத்மா, தனது உணர்வினால் உடல் முழுவதையும் பிரகாசப்படுத்துகின்றான்.

உடலுக்கும் உடலின் உரிமையாளனுக்கும் இடையிலான இந்த வேறுபாட்டை ஞானக் கண்களைக் கொண்டு அறிந்து, ஜட இயற்கையின் பந்தத்திலிருந்து முக்தி பெறுவதற்கான வழிமுறையையும் புரிந்துகொண்டவர்கள், பரம இலக்கினை அடைகின்றனர்..”

அதாவது மிக சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் கடவுள் எனும் மூல பரம்பொருளின் தன்னைகள் படியே இந்த பிரபஞ்சமும் உலகமும் பூமியும் படைக்கபட்டிருக்கின்றது

பூமி அப்படியே படைக்கபட்டு பஞ்சபூதங்களால் கரங்களில் அது ஒப்படைக்கபட்டிருக்கின்றது , பஞ்ச பூதம் என்பது கடவுளின் வடிவே, அவரின் தன்மையே

கவனியுங்கள் பஞ்ச பூதங்கள் தன் கடமையினை செய்யும், அனால் அவை எதோடும் ஒட்டாது அதன் இயல்பிலே இருக்கும்

சூரிய ஒளி எல்லோர் மேலும் படும், எல்லா உயிர்மேலும் நிலம்மேலும் படும் ஆனால் ஒட்டாது, காற்று எல்லா இடமும் வீசும், அதை அடைத்து வைப்பவன் யார்? அது தன் போக்கில் செல்லும்

பஞ்ச பூதமெங்கும் இறைவன் பரவியிருக்கின்றான், இறை தன்மை பரவியிருக்கின்றது, அது எதையும் எதிர்பார்க்காமல் தன் கடமையினை செய்கின்றது. யாரும் அதற்கு தேவையில்லை ஆனால் அது எல்லோருக்கும் தேவையான கடமையினை சரியாக செய்கின்றது

அதற்கு சக்தி கொடுப்பார் யாருமில்லை, அது தன் சக்தியில் எல்லோருக்கும் பலனளிக்கின்றது

அந்த சக்திகள் இயக்கும் பூமியில் மானிடன் ஒரு கூடு, அவனுக்குள் இருந்து இயக்குவது ஒரு சக்தி அந்த சக்திதான் ஆத்மா, அந்த ஆத்மாவின் கருவி புத்தி

அது வழியாககே மனிதன் உலகை பார்க்கின்றான், கேட்கின்றான், தொடுகின்றான், உணர்கின்றான், வாசனை, சுவை என எல்லாமுமாக அவனை உணர வைப்பது அந்த உள்சக்தியே

அது வெளியேறும் வரையே மானிடனின் இயக்கம், அது வெளியேறிய பின் கண்,காது, செவி எல்லாமும் இருந்தாலும் அதனால் பலனே இல்லை, அதன் பெயரே மரணம்

ஆக உடல் என்பது ஆன்மா தங்கும் கூடு, புத்தி என்பது ஆன்மா உடலை இயக்கும் கருவி, அது அந்த கூட்டில் தங்கியிருக்கும் காலமே மானிட வாழ்வு

இந்த மானிடனும் இயற்கையினை உணரும் படி அவனுக்கு ஞான உறுப்புகள் எனப்படும் கண் காது செவி வாய் ஆகியவை செயல்படுகின்றன, அவன் கர்மத்தை செய்ய கை கால் உட்பட சில உறுப்புகள் உண்டு

ஆம் மானிட உறுப்புகளில் கடவுளை உணர உண்டான உறுப்புகள், கர்மத்தை செய்ய சில உறுப்புகள் என பிரிவுகள் உண்டு

இதில் இன்னும் நுட்பமாக சப்தம், சொரூபம், வாசனை, சுகம், நிறைவு என மனம் அறியும் விஷயம் உண்டு.

இன்னும் ஆழமாக நோக்கினால் வாழ்வின் தத்துவம் புரிபடும்

அதாவது இந்த உடல் கூட்டில் ஆன்மா தங்கியிருகின்றது, அது பார்வையாளனாக அமர்ந்திருக்கின்றது. அந்த ஆன்மா கடவுளின் சாயல், பரமாத்மா எனும் மூலபொருளில் வந்திருக்கும் ஆன்மா அது

அதே உடலில் புத்தி உடலை நகர்த்துகின்றது, புலன்கள் மூலமும் பந்த பாசம் எனும் சில மாயைகள் மூலமும் அவன் உடலை நகர்த்துகின்றது, இந்த புத்தியில் மூவகை குணங்களும் கலக்கின்றன..

இதனை பொறுத்தே நன்மை தீமைகள் ஒவ்வொருவன் வாழ்விலும் நடக்கின்றன, ஜீவாத்மா இதை கவனித்து கொண்டே இருக்கின்றது

அந்த ஆத்மா ஞானம் பெற்று, தன்னை உணர்ந்து மூவகை குணங்களை ஒழித்து ஞானத்தின் மூலம் புலன்களை அடக்கி இந்த பூலோக காரியங்களில் கடவுளை உணர்ந்தால் அது நல்ல பலன்களை பெறுகின்றது

அது கூடு நீங்கியபின் தான் அந்த உடலில் தங்கி இருந்த பொழுது பார்த்த நல்ல கணக்குகளை பரம்பொருளிடம் சமப்ர்பிக்கின்றது, அதன் கணக்குக்கு ஏற்ப அதற்கு பிறவிகள், சொர்க்கம் ,நரகம் வழங்கபடுகின்றது

அந்த கணக்கு 100% பரம்பொருளுக்கு உகந்ததாக இருந்தால் பரமாத்மா அந்த ஜீவாத்வினை தன்னோடு சேர்த்து பிறவியற்ற நிலையினை அடைகின்றது

தன்னை தேடி உணர்ந்து உடல் கூட்டில் அடங்கியிருந்து வாழ்ந்து முடித்த ஆன்மாவுக்கு பரமாத்மா தன்னில் கலக்க அனுமதி கொடுக்கின்றது, வாழ்நாளிலே அதை சிலருக்கு தன்னில் கலந்த நிலையினை சில ஜீவாத்மாக்களுக்கு வழங்குகின்றது, அவர்கள்தான் மிக பெரும் ஞானிகள்

சில ஆத்மாக்களை அது தன் இயல்பில் பிறக்க வைக்கின்றது, அவர்களே அவதாரங்கள்

இந்த பூமி என்பதிலும் பரம்பொருள் உண்டு , உடலின் இயகத்தில் உண்டு, புலன்கள் இழுத்து போகும் இன்ப துன்பங்களில் உண்டு

மனிதன் என்பவன் வெறும் கூடு, ஆத்மா அவனை இயக்குகின்றது. அந்த ஆத்மா தங்கும் கூடு நல்லபடியா இயங்க பஞ்ச பூதங்கள் ஒத்துழைக்கின்றன‌

மழை பொழிவதும் பயிர்கள் விளைவதும் அப்படியே, விலங்குகள் முதல் வைரஸ்கள் வரை உலகில் சூழ்ந்திருப்பது அப்படியே

மானிடன் பெரும அறிவிலோ வீரத்திலும் விளங்கட்டும், கலைகள் அறிவியலில் அவன் சிறக்கெட்டும் வானத்தில் பறக்கட்டும், சுக வாழ்வு வாழட்டும் , விஞ்ஞானத்தில் மிளிரட்டும், மருத்துவத்தில் அசத்தட்டும்

ஆனால் மூலம் எங்கே உண்டு? விஞ்ஞான கருவியின் மூலபொருள் முதல் மருத்துவ மூலம் வரை இந்த பூமியும் பிரபஞ்சமும் கொடுத்தது

காலம் தோறும் பரம்பொருளின் சக்தியில் உலாவும் ஜீவாத்மா கடவுளின் தன்மையில் அவனை இங்கிருக்கும் பொருட்களில் படைப்பு தத்துவத்தை போதிதது அவன் பல விஷயங்களை உருவாக்கினான்

ஆனால் எல்லாவற்றுக்கும் மூலம் இங்கேதான், அதை நெருப்பு குளிர் கலப்பு என பல விஷயங்களுக்கு உட்படுத்தி மனிதன் தனக்கு தேவையானதை செய்தான், எல்லாமே இங்கு இருந்த சக்தி , மூல சக்தியின் பிரிந்த சக்தி, அதில் இருந்து தனக்கு தேவையானதை மானிடன் பிரித்தெடுக்க ஞானம் உதவிற்று

அது பரமாத்மாவின் ஞானம், பரமாத்மா கொடுத்த ஜீவாத்மாவின் ஞானம்

அதனால்தான் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகையாக சிந்தித்தான், பலர் உருவாக்கினான், சில ஆக்க சக்திகள் வந்தன, பல மானிட அழிவு சக்திகளும் வந்தன‌

எல்லாமும் பரம்பொருளின் விளையாட்டு

இதைத்தான் கண்ணன் சொல்கின்றான், காணும் காணாத பொருளெல்லாம் நானே, இந்த உலகின் இயக்கம் நானே, பரமாத்வாவும் நானே, ஜீவாத்மாவும் நானே

அவனே பிறக்க வைக்கின்றான், அவனே நடத்துகின்றான், நன்மை தீமை அறியவும் வைக்கின்றான், அதில் கடவுளை அறியும் ஆத்மா அவனை அடைகின்றது

அறியாத ஆத்மா மறுபடி மறுபடி பிறக்கவைக்கபட்டு ஞானத்தை அடைய வைக்கபடுகின்றது, அல்லாவிடில் சுற்ற வைக்கபடுகின்றது..

சரி அவன் ஏன் ஜீவாத்மாவினை உருவாக்கினான் ஏன் அலைய விட்டான்? அந்த ஆத்மா ஏன் ஞானம் பெற்று அவனை அடையவேண்டும் என்பதில் என்ன இருக்கின்றது என்றால் உலக இயக்கம் இருக்கின்றது

இதெல்லாம் மறைபொருளின் ஒரு பகுதி

இந்த 13ம் அத்தியாயம் சொல்வது இந்த மேற்கண்ட சுருக்கத்தைத்தான், இதை அறிந்தவன் ஞானி. அசையும் அசையா பொருள் எல்லாம் அவனே என சரண்டைபவன் யோகி

இந்த பரமாத்மா எனும் பேரோளியில் இருந்து ஜீவாத்மா வந்து மானிட உடலில் தங்கும் என்பதுதான் பைபிளின் தொடக்கமே

“மனிதனை மண்ணால் படைத்து கடவுள் தன் மூச்சை ஊதினார்” என்பது மானிடன் உடலில் இருக்கும் ஜீவாத்மா பரமாத்வாவில் இருந்து வந்தது என்பதன் சுருக்கம்

எல்லாமும் நானே , பிரபஞ்சம் நானே என்பதையே கடவுள் எல்லாவற்றையும் படைத்து மனிதனை படைத்தார் என்கின்றது பைபிள்

கடவுள் எதையும் படைக்கவில்லை எல்லாமும் அவனே, இருப்பதும் இல்லாததும் அவனே அதில் ஒட்டியும் ஒட்டாமல் இயக்குபவன் அவனே, அந்த உலகில் வரும் மானிட இயல்பில் இருப்பவன் அவனே, அவனுள் இருந்து இயக்கும் சக்தியும் அவனே

சர்வமும் அவனே, உள்ளிருந்து பார்க்கும் மன்சாட்சியான ஆத்மாவும் அவனே, வாழும் பொழுது வாய்ப்பு கொடுப்பபவன் அவனே, வாழ்ந்தபின் ஆத்மாவுக்கான பலன்களை கொடுப்பவனும் அவனே

இந்த அத்தியாயத்தில் இருந்து நிர்வாகவியல் கற்றது என்ன? ராணுவம் கற்றது என்ன?

“எவனை பணிக்கு அமர்த்துகின்றாயோ அவனின் எல்லா தேவைக்கும் நீனே பொறுப்பு, என்னென்ன தேவையோ அதை அவனுக்கு முதலில் செய், அதன் பின் அவனுக்கு கட்டளை இடு, நீயும் அதிலே கலந்து எல்லாம் கவனி

அதே நேரம் பணியாளனோடு நெருக்கமாகாதே, உறவு கொண்டாடாதே, அவன் நீங்கினால் அழாதே, அவனுக்கு அடிமையாகாதே

அவனுக்கு கொடுக்க வேண்டிய பலன்களில் கவனமாய் இரு, அவனை முழுக்க நம்பி அவனின்றி நீயில்லை என்ற நிலைக்கு ஆளாகாதே, ஓட்டியும் ஒட்டாமல் இரு.

உன் அலுவலகம் தொடர்ந்து இயங்க பணியாளன் மேல் பற்று வைக்காதே,

கடமையினை செய், செய்து கொண்டே இரு, உனக்கு விதிக்கபட்ட மானிட சேவை எனும் தொழிலை செய்”

நல்ல நிர்வாகத்தை கவனியுங்கள் இந்த அடிப்படையில்தான் இயங்கும், ஒரு நல்ல முதலாளி கடவுளின் தன்மையில் எப்படி இருக்க வேண்டும் என சொல்வதுதான் 13ம் அத்தியாயம்

நீங்கள் தொழிலதிபரோ முதலாளியோ இல்லை ஊழியனோ கொஞ்சம் ஆழமாக சிந்தியுங்கள் இந்த 13ம் அத்தியாயம் உங்களுக்கு பல உண்மைகளை வைடூரியம் போல் காட்டும்

சேத்திர ‍ க்ஷேத்ரக்ஞ யோகம் எனும் இந்த அத்தியாயதில் அதாவது இடம்- இடத்தை ஆள்வோன் எனும் இடத்தில் ..

முதலாளி- தொழிலாளி, கம்பெனி -தொழிலாளி, அரசன்- நாடு தளபதி- ராணுவம் தலைவன்- குடும்பம் என பல விஷயங்களை பொருத்தி பாருங்கள், ஆச்சரியமாய் பொருந்தும்

மிக பெரும் தத்துவம் இதனில் உண்டு குடும்ப தலைவன் முதல் அரச , அலுவலக நிர்வாகி, ராணுவ தளபதி வரை கற்றுகொள்ள ஏராளம் உண்டு

அதை எக்காலத்துக்கும் பொருந்துமாறு அன்றே சொல்லிவைத்தது கீதை, மானிட இயல்புக்க்கு ஏற்ற விஷயங்களை சொல்லி வைத்த கடவுளின் தத்துவ தொகுப்பு, அதிலும் 13ம் அத்தியாயம் எல்லா காலத்துக்கும் பொருந்தி வரும்