ஈழத்து சேகுவேரா : 03

ஈழத்து சேகுவேரா  03

Image may contain: 1 person

 

சென்னையில் கலைஞர் அரசு பாதுகாப்பு கொடுக்காத நிலையிலும் இந்தியாவில் தலைமறைவாக‌ இருந்தாலும் தமிழகம் வந்த அகதிகளுடனும், தமிழக அரசியல்வாதிகளினுடம், நல்ல தொடர்பில் இருந்தார் பத்மநாபா. அகதிகள் பிரச்சினையில் முன்னின்று குறைகேட்டு களைய முயற்சிப்பார்.

கலைஞர் அப்பொழுதுதான் முதல்வராக கிட்டதட்ட 13 ஆண்டுகள் கழித்து அந்த நாற்காலியில் அமர்ந்திருந்த நேரம், ஆனால் பத்மநாபா அவருக்கு நண்பர் என்றாலும், புலிகளை தமிழகத்தில் சுதந்திரமாக உலவவிட்டுருந்தார் அதற்கு அந்த கட்சியில் அப்போது பலமாக இருந்தபலபேர் காரணம்.

புலிகளின் தகவல் தொடர்பு, ஆயுதம்,பெட்ரோல், மருந்து என எல்லாம் டாஸ்மாக் சரக்குபோல மிக சரளமாக நடமாடிய நேரம். மத்திய அரசு புலிகளை முறைத்துகொண்டிருந்தபொழுதே கலைஞர் அரசு இதனை காணாமல்தான் விட்டு இருந்தது. கலைஞர் புலிகளுக்கு செய்த உதவி அப்படி.

வரதராஜபெருமாளுக்கு மத்திய உளவுதுறை கொடுத்தபாதுகாப்பில் கொஞ்சம்கூட பத்மநாபாவிற்கு தமிழகத்தில் கொடுக்கபடவில்லை, பத்மநாபா அதை விரும்பவும் இல்லை.

இந்நிலையில் சிவராசன் அதாவது ரகுவரன் எனும் பெயருடன் வந்த ஒற்றைக்கண் சிவராசனுக்கு பத்மநாபாவை கண்டுபிடிப்பதில் பெரும் சிக்கலை எதிர்கொண்டான், இன்னொரு காலில்லாத புலி உறுப்பினர் செயற்கைகால் பொருந்த ராஜஸ்தானுக்கு வந்ததாக சொல்லிகொண்டு வரதராஜ பெருமாளை தேடிகொண்டிருந்தார்.

சென்னையில் ஒரு இளம்புலி உறுப்பினரை அகதிகள் முகாமில் ஊடுருவ செய்தார் சிவராசன், அந்த புலியும் மிக பிரமாதமாக நடித்தது, அதாவது தான் அகதியாய் வந்ததாகவும், படிப்பை தொடரவிரும்புவதாகவும், கார்ல்மாக்ஸின் பேரனாக மாற இருப்பதாகவும் கண்டவர்கள் முன்னால் எல்லாம் புலம்பிற்று.

மிக பரிதாபகரமான தோற்றத்துடன் இருந்த அவரை சில ஈழ ஆதரவாளர்கள் கண்டு பத்மநாபா உனக்கு உதவுவார் என ஆறுதல் கூறி அழைத்துசென்றனர்.

வந்தவன் கோலத்தை கண்டு உணவிட்டார் நாபா, சென்னையின் மிக முக்கிய கல்லூரியில் செர்த்து படிக்கவும் வைத்து, செலவினை பத்மநாபாவின் இயக்கம் ஏற்றுகொள்ளும் எனவும் அறிவித்தார். அதோடு அந்த சந்திப்பு முடிந்தது.

“எம்மை ஆதரிக்காதவரெல்லாம் எமது எதிரிகள், அவர்களை உயிரோடு விடகூடாது, இரக்கம் கூடாது, கொல்… கொல்” என மனதை இறுக்கும் பயிற்சிபெற்ற புலிக்கு நன்றிஉணர்வு எப்படி இருக்கும்?

இரண்டாம் கட்ட தலைவர்களுடன் நெருங்கி பழகிய புலி, பத்மநாபா நெருங்கிய தோழர்களுடன் நடத்தபோகும் கூட்டம்பற்றி சிவராசனுக்கு சொல்லிவிட்டு பத்மநாபா குழுவினருடனே தேநீர் குடித்துகொண்டிருந்தது.

ஒரிசாவில் தங்கியிருந்த பத்மநாபா, சென்னைக்கு வரும் நேரத்தை அந்த புலிதான் காட்டிகொடுத்தது

மிக துல்லியமாக “துரோக” புலி கணித்துகொடுத்த நேரத்தில் கோடம்பாக்கத்திற்கு வெள்ளை மாருதிவேனில் பயங்கர ஆயுதங்களோடு வந்த சிவராசன் குழு வாட்ச்மேனை (அது அடுக்குமாடி வீடு) கொன்று உள்புகுந்து பத்மநாபா உள்பட 17 பேரை கண நேரத்தில் சுட்டுகொன்று மின்னல்வேகத்தில் வெளியேறியது.

பெரும் கனவுகளோடு லண்டன் உல்லாச வாழ்க்கையை விட்டு ஈழத்திற்கு போராட வந்த அந்த மேதை கோடம்பாக்கத்தில் பிணமானார், அவர் சாம்பல் கூட அவர் நேசித்த ஈழத்தில் பரவ இறைவன் அனுமதிக்கவில்லை.

அவசரமாக வேதாரண்யம் சென்று தப்பிக்க சென்ற சிவராசன் மறித்த‌ 3 போலிசாரை தாக்கி பின் கைதுசெய்யபட்டதும், உயர் அரசியல் அழுத்தங்களால் அவன் விடுவிக்கபட்டதாகவும் அதிகாரபூர்வமில்லா தகவல் உண்டு.

புலிகளின் தமிழ்க நடுமாட்டத்தை கடும் வெறுப்புடன் கண்காணித்த மத்திய அரசு, சட்டம் ஒழுங்கை காப்பாற்றாத தமிழக‌ அரசு என அறிவித்து கலைஞர் அரசை டிஸ்மிஸ் செய்தது.

எம்.ஜி.ஆர் எனும் பெரும் சக்திக்குபின் அப்பொழுதுதான் ஆட்சிக்கு வந்திருந்த கலைஞருக்கு எப்படி இருந்திருக்கும்? மனிதர் அன்றே வெறுத்துவிட்டார், இவ்வளவிற்கு பத்மநாபா படுகொலை வழக்கு என்று ஒன்றோ அல்லது விசாரணை என ஒன்றோ கிடையாது.

அவ்வளவு சலுகை புலிகளுக்கு, வந்தார்கள் சுட்டார்கள், சென்றார்கள். இறந்ததில் 3 சென்னை தமிழரும் உண்டு.
பராரியாய் பாமரகோலத்தில் படிப்பிற்காய் வந்ததாக பத்மநாபாவை காட்டிகொடுத்த புலி பின் புலிகள் இயக்கத்தில் கவுரவிக்கபட்டது, சிவராசன் பெரும் ஹீரோவாக கொண்டாடபட்டார்.

கொன்றவர்கள் புலிகள்தான் என பலர் சொன்னபொழுதும் வழக்கம் போல புலிதலமை சொன்னது “எமது விடுதலையின் தடைகல் அகற்றபட்டது”

ஈழத்தின் படிக்கல்லான பத்மநாபாவை தடைக்கல் என வர்ணித்த புலிகள் அதன் பிறகும் திருந்தவில்லை, மிக சரியாக 11 மாதத்தில் ராஜிவ்காந்தியை வீழ்த்தினார்கள்.
தமிழகம் அவர்கள் விரும்பியவர்களை கொல்லும் காடாக மாறிற்று, பத்மநாபா கொலையோடு தமிழகத்தில் புலிகளை ஓடுக்கியிருந்தால் ராஜிவ் கொல்லபட்டிருப்பதை தடுத்திருக்கலாம் என்பதும் தியரி, என்பது உண்மை.

புலிகள் தமிழக மண்ணில் எந்த கொலையினையும் செய்வார்கள் என தன் உயிர்விட்டு இந்தியாவினை எச்சரித்தவர் பத்மநாபா, அவரின் நன்றிகடன் அப்படி இருந்திருக்கின்றது

பத்மநாபா கொலையில் ஒரு தடையோ கண்டனமோ பெறாத தைரியம்தான் புலிகளை ராஜிவ் வரை நீளச்செய்தது, எக்கொலை செய்தாலும் தமிழக அரசு நம்மை காக்கும் என திமிராக நம்ப செய்தது.

பத்மநாபாவின் இரத்தபழியில் கலைஞருக்கும் பங்கு உண்டு, உரிய பாதுகாவல் அளிக்கபட்டிருக்குமானால் அவர் கொல்லபட்டிருக்க மாட்டார்

ஆனால் பல காரணங்களுக்காக கலைஞர் புலிகளை பகைக்க விரும்பவில்லை, உன்னால் புலிகளை எதிர்கொள்ள முடியாவிட்டால் எங்காவது போ, என்னை தொல்லைபடுத்தாதே என்ற அணுகுமுறைதான் கலைஞரிடம் இருந்தது

அவர்களின் கொடும் இயல்பு அறியாமல் புலிகளுக்காக கலைஞர் செய்த இந்த பாதகம் தான், கலைஞரின் அரசு டிஸ்மிஸ் செய்ய காரணமானது

அன்றே புலிகளை கை கழுவினார் கலைஞர், ஆனால் புலிகளோ வைகோவினை வைத்து நுழையலாம் என தப்புகணக்கு போட்டுகொண்டிருந்தனர், கலைஞரை எல்லாம் ஒரு மனிதனாகவே எண்ணவில்லை

ராஜிவ் கொலை வழக்கு தீவிரமாக விசாரிக்கபடும் பொழுதுதான், பத்மநாபா கொலை உண்மையும் வெளிவந்தது. ஆனால் 1990ல் “ரா” முழு பத்மநாபா கொலை சிவராசன் சரித்திரத்தையே தெரிந்து வைத்திருந்ததை பின்னாளில் சிபிஐ இடம் கூடம் தெரிவிக்கவில்லை, இதுதான் “ரா”.

தெய்வம் நின்று கொல்லும் அல்லவா?

அசட்டு தைரியத்தில், என்ன ஆட்டம் போட்டாலும் தமிழகம் பின்வரும் என்ற திமிரில் சிவராசன் ராஜிவை வீழ்த்த, மத்திய போலிசார் மிக திறமையாக உண்மைய கண்டறிந்தனர், சிவராசனும் தற்கொலை செய்துகொண்டான்,

பெரும் கொலைகாரனான அவன் ராஜிவ்கொலைக்குபின்னும் ராஜஸ்தானில் வரதராஜ பெருமாளை கொல்லும் திட்டத்தோடுதான் வடக்குநோக்கி நகர்ந்தான், அவ்வளவு வெறி.

நளியின் வாழ்க்கை, பேரரிவாளனின் பரிதாபம், அன்னை லூர்தம்மாளின் தீரா சோகம், தமிழக முழுக்க தி.க பிரமுகர்களுக்கு இன்றும் மறைமுக கண்காணிப்பு என எல்லா சோகங்களுக்கும் காரணகர்த்தா இந்த சிவராசன்.

ராஜிவ் கொலையோடு கொல்லபட்ட ஹரிபாபு, நெல்லை மாவட்ட‌ ஆ.திருமலாபுரத்துக்காரர் இன்ஸ்பெக்டர் ராஜகுரு குடும்பம் வரை இவனால் பாதிக்கபட்டது, பெங்களூரில் தனக்கு இடமளித்த ரங்கநாத்தின் குடும்பம் நாசமானது வரை இவரது சாதனை அல்லது “போராட்டம்” நீளும்.

சிவராசனாலோ அல்லது அந்த இயக்கத்தாலோ யாராவது ஒருவர் வாழ்ந்தார்களா? அல்லது வாழவைக்கபட்டார்களா? (தமிழக அரசியல்வாதிகள் திடீர் தமிழ்போராளிகளை விடுங்கள்) என்றால் இல்லை, நிச்சயம் இல்லை. ஆதரித்த அனைவரும் காலி, இதுதான் அவர்கள் சித்தாந்தம்.

அவர்களுக்கு ஆக்க தெரியாது, அழிக்கமட்டும் தெரியும்.

ஒவ்வொரு படுகொலையின் பொழுதும் “தடைகல் அகற்றம்” என சொல்லும் புலிகள், ராஜிவ் கொலைக்கு அதுவும் சொல்லவில்லை. இறுதிவரை கனத்த மவுனம்.

இப்படியாக யாரும் எமக்கு வேண்டாம், சகலரையும் எதிர்த்து ஈழநாடு அடைவோம் என சகட்டுமேனிக்கு கொலைகளை புலிகள் புரிந்தனர்.

முன்பு உயிர்காத்த பத்மநாபா, வடமராட்சியில் உயிர்காத்த ராஜிவ், மணலாற்றில் உயிர்காத்த பிரேமதாசா என வரிசைகட்டி துரோகதனமாக கொன்றுவிட்டு அவர்களுக்கு இவர்கள் வைத்தபெயர் “துரோகிகள்”.

சபாரத்தினம், ராஜிவ்,பத்மநாபா,பிரேமதாசா என எல்லோரையும் வரிசைகட்டி கொன்றுவிட்ட பின்னும் புலிகளுக்கு 20 ஆண்டுகள் காலம் இருந்தது? என்ன சாதித்தார்கள்? ஒன்றுமில்லை.

“நீங்கள் ஒரு முடிவிற்கும் வரமாட்டீர்கள், நாட்டை உருவாக்கி துப்பாக்கி குழுவிடம் கொடுப்பது எவ்வளவு பெரும் விபரீதம், உலகம் இதனை ஒப்பாது, அரசியலுக்கு திரும்புங்கள்” என்று 23 வருடங்களுக்கு முன்பே இந்தியா சொன்னதன் விளைவு பத்மநாபா,ராஜிவ் படுகொலை.

காலசூழல் மாறுவதை கூட கணிக்காமல் முள்ளிவாய்க்காலில் முடங்கி கடைசி நொடியில் ஆயுதங்களை மவுனித்து சிங்களரிடம் சரணடைய சென்றார்கள்.

இவர்கள் தந்திரமாக பத்மநாபாவை சாய்த்ததை போல சிங்களம் அவர்களை நயவஞ்சகமாக சரித்து இயக்க கதையை முடித்தது,

ஆனால் பத்மநாபா கொலையில் அதாவது அவருக்கு பாதுகாப்பு கொடுக்காமல், கொலை குற்றவாளிகளை கண்டும் காணாமல் விட்டு செய்த பாவம் பின்னாளில் முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் கலைஞர் மீது பெரும் பழிச்சுமையாக விழுந்து கிடக்கின்றது, இதுதான் விசித்திரம்.

பத்மநாபாவின் நினைவுநாள் இன்று உண்மையான மானிடநேயமிக்க தமிழுணர்வாளருக்கு “ஈழதியாகிகள்” தினம். அந்தோ பரிதாபம் இந்த உண்மையான போராளிக்கு யாரும் அஞ்சலி செலுத்தமாட்டார்கள், கடல்கரையில் மெழுகுவர்த்தி பிடிக்கமாட்டார்கள், ஊர்வலம் செல்லமாட்டார்கள்,

அவர் கொல்லபட்ட வீடு சென்னையில்தானே இருக்கின்றது அந்த திசையை நோக்கி ஒரு ஊதுபத்திகூட கொழுத்தமாட்டார்கள்.

சமீபத்தில் தமிழனத்திற்கு வழிகாட்டி என ஹிட்லர் முதல் திப்புசுல்தான் வரை சம்பந்தமே இல்லாமல் சகட்டுமேனிக்கு பேனர் வைத்திருந்தார்கள்.

ஒருவேளை தமிழர்களுக்கு வழிகாட்டியருக்கு ஒரு பேனர் வைக்கவேண்டுமென்றால் நிச்சயம் பத்மநாபாவிற்குத்தான் வைத்திருக்கவேண்டும்.

அவர் எப்படி புலிகளோடு சேர்ந்து தற்கொலைகுண்டு, சயனைடு கடிக்காமல் அல்லது வெள்ளைகொடி பிடிக்காமல் மனிதநேயம், மக்கள் வாழ்வு என பேசி மக்களை திரட்டலாம்.

துப்பாக்கி,சயனைடு,கன்னிவெடி,தற்கொலை பெல்ட் இறுதியாக வெள்ளைகொடி .

இவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவர்கள் எப்படி தமிழரின் வழிகாட்டியாக இருக்கமுடியும்? முடியவே முடியாது. சிந்திக்க தெரிந்த தமிழன், சாகதீர்கள் அல்லது கொல்லாதீர்கள் என சொல்லும் தமிழன் எல்லாம் “துரோகி”.

அப்படி ஒரு போராளி இருந்தான், ஒருங்கிணைந்த ஈழமாநிலத்தை 1 வருடம் ஜனநாயக “மக்கள் முதல்வராக” ஆண்டான் என்பது கூட நினைவு கூற ஆளில்லாத இனமான தமிழகமாக இது ஆகிவிட்டது.

பத்மநாபா கொல்லபட்டபொழுது தனக்கும் நாள்குறிக்கபட்டதை அறியா ராஜிவ்காந்தி இப்படி சொன்னார் “பத்மநாபாவும் எனது தாயார் இந்திராகாந்தியும் ஒரே நாளில் அதாவது நவம்பர் 19ம் தேதி பிறந்தவர்கள், இருவரும் ஈழமக்கள் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தவர்கள், அவர்களை வாழவைக்க எண்ணியவர்கள்”

மிக நிதர்சனமான உண்மை இது.

போராளிகளில் பத்மநாபாவையும் தவிர உண்மையாக ஈழமக்களை நேசித்தவர்கள் யாருமில்லை.

அப்படி நேசித்திருந்தால் முள்ளிவாய்க்கால், இனப்படுகொலை, கடலில் ஈழதமிழர் படகு, வடக்கில் ராணுவ குவியல் போன்ற வார்த்தைகளுக்கும் அது கொடுத்த கொடுத்துகொண்டிருக்கும் எண்ணற்ற வலிகளுக்கு இடமிருந்திருக்காது.

தன்னலம் துறந்த மானுடநேயமிக்க போராளிகள் ஒருநாளும் மறைவதில்லை. உறுதியாக சொல்லலாம் அவர் “ஈழத்து சேகுவாரா”.

இந்த தியாகிகள் நாளில் அவருக்கான வீரவணக்கத்தை சிந்தனையும், மானிட நேயமுள்ள தமிழர்கள் உலகெல்லாம் தெரிவித்துகொண்டிருக்கின்றார்கள்

பத்மநாபாவிற்கு அழிவே இல்லை, அவர் இருந்திருந்தால் முள்ளிவாய்க்காலில் பிரபாகரனை காக்க ஓடியிருப்பார் அவர் இயல்பு அப்படி

கடைசி நொடியில் தான் செய்த தவறுகளை பிரபாகரன் நினைத்திருந்தால் நிச்சயம் பத்மநாபாவின் முகமும் அவனுக்கு வந்து போயிருக்கும்.

பிரபாகரன் பாதை ஒருநாளும் வெற்றிபெறாது, ஆனால் பத்மநாமாபாவின் பாதையில் தான் ஈழவிடிவு இருக்கின்றது

என்றாவது ஒருநாள் அது நடக்கும், பத்மநாபாவின் ரத்தம் வீணாகாது

சென்னை மெரீனாவில் ஈழத்தில் செத்த 1500 அமைதிபடை வீரர்களுக்கு நினைவுசின்னம் அமைக்கும் நாளில், சென்னை சூளமேட்டில் பத்மநாபா கொல்லபட்ட இடத்தில் அவருக்கும் ஒரு நினைவு சின்னம் அமைக்கபட வேண்டும்

காலம் அதனை நிச்சயம் அமைக்கும்…

முற்றும்

 

ஈழத்து சேகுவேரா : 02

ஈழத்து சேகுவேரா 02

Image may contain: 4 people, people smiling, people standing and beard

அப்பொழுதெல்லாம் புலிகளின் பலம் குறைவு, எல்லா குழுக்களும் இலங்கை ராணுவத்தை எதிர்த்து போராடின‌

ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு முகாமை தாக்க சிங்கள ராணுவம் திணறியது, இந்நிலையில்தான் நாங்கள் பெரியவர்கள் என சொல்ல தொடங்கினார்கள் புலிகள், சபாரத்னம் அவர்கள் எதிரியானார்

அவரை கொல்லதேடும் பொழுது காப்பாற்ற நினைத்தவர் பத்மநாபா, வைக்க்கோல் லாரியில் அவரை காப்பாற்றி இந்தியா அனுப்பும் திட்டம் அவருக்கு இருந்தது, அதற்குள் சபாரத்தினத்தை கொன்றனர் புலிகள்

பத்மநாபாவினையும் புலிகள் கொல்லதேட அவர் மோதலை விரும்பாமல் தலைமறைவானார், இந்நிலையில்தான் புலிகளை வடமராட்சியில் மக்களோடு சுற்றிவளைத்தது இலங்கை ராணுவம், அன்றைய முள்ளிவாய்க்கால் அது

இந்தியா அனுப்பிய உதவிபொருள் கப்பலை சிங்களம் திருப்பி அனுப்பி அவமானபடுத்தியபின்புதான், இந்தியா விமானம் மூலம் உணவுபொருளை வீசியது, அதற்கு பாதுகாப்பாக இந்திய ராணுவ விமானமும் அங்கு பறந்தது

இதன்பின்புதான் இலங்கை முற்றுகையினை தளர்த்தி ஓடியது, மீண்டும் அந்தவொரு நிலை வராமலிருக்கத்தான் அமைதிபடை அனுப்பபட்டது

இந்திய அமைதிபடை ஆக்கிரமிக்கவோ அல்லது கற்பழிப்பதையோ நோக்கமாக கொண்டு ஈழத்தில் காலடி எடுத்துவைக்கவில்லை, பலவிதமான உலக நெருக்கல்கள், ஐ.நா அமைதிபடையோ அல்லது அமெரிக்க படையோ இலங்கையில் காலூன்றுவதை தடுக்க அவசர அவசரமாக செய்யபட்ட ஏற்பாடு.

இலங்கையில் அமைதி திரும்புவதை பெரிதும் விரும்பிய பத்மநாபா, இந்திய படையினரோடு அமைதி திரும்ப கடும் ஒத்துழைப்பு கொடுத்தார்.

இந்திய இலங்கை ஒப்பந்தபடி இலங்கையின் 4 மாகாணங்களில் வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் தாயக நிலமென்றும், அது இரண்டையும் இணைத்து ஒரே மாகாணமாக்கி ஒரு முதல்வரையும், அதாவது “தமிழ்” முதல்வரையும் வைக்கவேண்டும் என ஏற்பாடாகி இருந்தது.
இப்படியாக வடக்கும் கிழக்கும் இணைந்த ஈழமாநிலம் உண்டாயிற்று.

அதாவது இந்தியாவில் தமிழ்நாடுபோல இலங்கையில் ஈழம், அதுவரை கிடைக்காத ஈழமாநில அந்தஸ்து, இந்தியாவால் அந்நேரம் உதவகூடிய ஆக உச்சகட்ட‌ உதவி அவ்வளவுதான், காரணம் உலக காலநிலை அப்படி, அதே நேரம் இந்திய பிண்ணணியில் அவர்கள் போராட இந்தியா உதவும் வாக்குறுதியும் உண்டு

வங்கம் பிரிந்த்தால் அடிபட்ட பாம்பாக உறுமிய பாகிஸ்தான், அப்பாம்ம்பிற்கு பால்வார்க்கும் அமெரிக்கா எல்லாம் எப்படியாவது காஷ்மீரை பிரித்தெடுக்க கங்கணம் கட்டிகொட்டு விரதமிருந்தன இப்படி ஏகபட்ட காரணத்தால் ஈழ மகாண அரசு, 13ம் சட்டதிருத்தம் என இந்தியா திட்டங்களை முன் வைத்தது

ஆனால் புலிகளுக்கு பிடிக்கவில்லை, மக்களில் ஒரு பிரிவினருக்கும் பிடிக்கவில்லை, ஆண்டவனுக்கும் அவர்களுக்கும் மட்டுமே காரணம் தெரியும்.

இன்றும் தமிழ்தேசியம் பேசுவோர், குதிரைக்கு அடியில் சிலைவைப்போர், முஷ்டி முழக்குவோர், கடற்கரையில் மெழ்கு பிடிப்போர் அண்ணே…… என கதறுவோர் இவர்கள் யாரிடமாவது ஏன் ஈழத்தில் வடக்கு தமிழரையும், கிழக்கு தமிழரையும் இணைக்ககூடாது என கேளுங்கள், பதிலிருக்காது.

யாரிடமும் இருக்காது, இவர்கள் புரிந்துகொண்டது யாழ்பாணம், ஈழம்,பிரபாகரன், இந்தியா,சோனியா, கலைஞர் துரோகம் அவ்வளவுதான், அதனை தாண்டி யோசிக்கமாட்டார்கள்.

வடக்கும் தமிழர்கள், கிழக்கும் தமிழர்கள் இரண்டையும் இணைத்தால்தான் என்ன? அது கூடாதாம். தனி ஈழம் வேண்டுமாம் அதில் இரண்டு மாநிலமும் தனி தனியாக இருக்குமாம்.

டெல்லிக்கு இது மிகவித்தியாசமாக தெரிந்தது, வாய்விட்டு கேட்டார்கள், “நாளை ஈழம் அமையும் பட்சத்தில் இரண்டு ஈழமாக அமைப்பீர்களா?” யாரிடமும் பதில் இல்லை.
ஈழம்தானே, தனி தமீழீழம் தானே, அதில் என்ன கிழக்கு வடக்கு பிரிவினை? என கேட்டால் யாரிடமும் பதில் இல்லை.
புலிகள் இதனை ஏற்க மறுத்தார்கள்,

மக்களில் ஒரு ஆதிக்கபிரிவும் அவர்களோடு இணைந்தது, விளைவு ஈழம் இந்தியாவின் வியட்நாம் ஆயிற்று. புலிகள் இந்தியராணுவம் மோதல் தொடங்கியது.

புலிகளை ஒரு தீவிரவாத இயக்கமாக நினைத்துத்தான் இந்திய ராணுவம் களத்தில் சும்மா குதித்தது, அதன்பின் புரிந்துகொண்டது இந்திய ராணுவத்தை விட புலிகளிடம் இருக்கும் தொலைதொடர்பு வசதியும், சில வெடிமருந்துகளும் மிக நவீனமானவை. ஒரு பெரிய அரசாங்க ராணுவ தயாரிப்பு, அந்த அரசின் அனுமதி இல்லாமல் இவை புலிகளுக்கு கிடைத்திருக்காது, ஆனால் அந்த நாடு ஜெயவர்த்தனேவின் இலங்கை அல்ல.

சுதாரிப்பதற்குள் இந்திய ராணுவம் அடிமேல் அடிவாங்க ஆரம்பித்தது, கழுகு வழிகாட்ட புலி பாய்ந்தது, ஒரு பக்கம் உலகெல்லாம் ஊடகங்கள் இந்தியராணுவம் கற்பழிப்பில் ஈடுபடவே வாத்சாயனர் புத்தகங்களை எல்லாம் கொண்டு சென்றார்கள் எனும் அளவிற்கு உலகெல்லாம் போட்டுதாக்கின.

ஒரு செய்தி 10 ஆக்கபட்டது, களநிலமை இந்திய ராணுவத்திற்கு புதிது. ராணுவ யுத்தம் தெரியுமே தவிர கொரில்லா யுத்தம் பழக்கபடாதது. ரோந்துவரும் இந்திய கவசவாகனத்திற்கு சந்தோஷாக கைகாட்டும் பாட்டி, வாகனம் கடந்தபின் சுருக்குபையில் இருக்கும் ரிமோட்டை இயக்கி கன்னிவெடியை இயக்கி வாகனத்தை தூள் தூளாக்கினால்..

பள்ளிக்கு செல்லும் சிறுமிகள் அல்லது சிறுவர் (100 பேரில் ஒருவர்) எங்கு ஆயுதம் வைத்திருப்பார்கள் என தெரியாது, திடீரென சாலை சோதனையில் ஈடுபடும் இந்தியராணும் மீது கை குண்டு விழும்.

இப்படியாக பாதிக்கபடும் இந்திய‌ ராணுவம் அந்தபாட்டி கூட்டத்தையும், மாணவி கூட்டத்தையும் விசாரித்தால், அய்யகோ கற்பழிக்கும் கொடுமை பாரீர் என உலகெல்லாம் மீடியாக்கள் அலறும்.

5000பேர் தங்கும் மருத்துமனையில் ஒரு புலி சென்று படுத்துகொள்வார், சாலையில் செல்லும் இந்தியராணுவத்தை தாக்குவார். இந்தியராணுவம் மருத்துவமனையில் நுழையும், எங்கிருந்தோ குண்டு விழும், சகலமும் பஸ்பம்.

யாழில் மருத்துவமனை தகர்ப்பு, இந்தியபடை அட்டூழியம் என செய்திவரும், எல்லா ஊடகங்களும் அப்படித்தான் எழுதி தள்ளின, உண்மை வெகு தூரத்தில் இருந்தது.
சதாம் உசேனையும், மூமர் கடாபியையும் உலக வில்லன்கள் ஆக்கினார்கள் அல்லவா?

போராளி யாசர் அராபத்தை தீவிரவாதி ஆக்கினார்கள் அல்லவா அப்படி.

இந்தியராணுவம் அடிவாங்க, புலிகளுக்கும் பாதிப்பு இருக்க, தமிழர்களும் மகா சிக்கலில் மாட்ட அப்பொழுது மிக பாதுகாப்பாக இருந்துகொண்டு செத்தவர் கணக்ககை குறித்துகொண்டிருந்தது இலங்கைராணுவம்,

அவர்களுக்கென்ன யார் செத்தாலும் சரி, இந்திய வீரனோ புலிகளோ இல்லை அப்பாவி தமிழரோ யார் செத்தாலும் மகிழ்ச்சி. அப்படித்தான் இருந்தது நிலை.

ஆனாலும் அவமானத்தோடு போராடிய இந்தியா, வடக்கு கிழக்கு இணைந்த மாநிலத்திற்கு முதல்வருக்கு தேர்தல் நடத்தியது, புலிகள் தேர்தலில் நிற்கவில்லை (என்றுதான் அவர்கள் மக்கள்முன் நின்றார்கள்?), புலிகளுக்கு பயந்தும் யாரும் நிற்கவில்லை.

ஆனால் பத்மநாபா துணிந்து நின்றார், அந்த தேர்தலில் மகத்தான வெற்றியும் பெற்றார், மக்களின் ஆதரவு அப்படி. ஆனாலும் பதவியை தனது கட்சிக்காரர் வரதராஜ பெருமாளிடம் ஒப்படைத்துவிட்டு மக்கள் பணியிலே இருந்தார்.

பத்மநாபாவும், வரதராஜபெருமாளும் அழிக்கவேண்டிய அசுரர்களாக புலிகள் குறித்துகொண்டனர்.

30 ஆண்டுகாலம் தனிபோராட்டம் நடத்திய அராபத் இப்படித்தான் பாலஸ்தீன் சுயாட்சிக்கு ஒப்புகொண்டார், பெரும் அதிகாரம் இல்லைதான். ஆனால் வகுத்து வைத்த எல்லைகோடு இருக்கின்றது. காசாவும் மேற்குகரையும் பாலஸ்தீனருக்கு எனும் அடையாளம் இருக்கின்றது. இஸ்ரேல் எப்படியெல்லாம் நாடகமாடினாலும் அதனை அழிக்கமுடியவில்லை, முடியவும் முடியாது.

நாளை பாலஸ்தீனம் மலரும் பட்சத்தில் சிக்கல் இல்லை, இதனைத்தான் அன்றே ஈழத்தில் பத்மநாபா சொன்னார். இதுதான் தொலைநோக்கு,சாதுர்யம், வாய்பினை பயன்படுத்திகொள்ளும் சூட்சுமம்.

இன்று பர்மாவில் ரோஹிங்கியா முஸ்லீம்களை போட்டு விரட்டுகின்றனர்? எந்த உலகநாடு உள்நுழைத்திருக்கின்றது?

சிரியா பற்றி, ஏமன் மக்களை பற்றி கவலைபடுவோர் யாருமுண்டா? ஒருவருமில்லை, இப்படித்தான் ஈழநிலையும் இருந்தது, ஆனால் இந்தியா நுழைந்தது. அதனை விரட்டினார்கள் இந்தியா ஒதுங்கி கொண்டது.

இந்திய வழிகாட்டலில் ஈழமாகாணத்தை முன்னேற்றும் திட்டத்தில் கடுமையாக பத்மநாபா உழைத்துகொண்டிருக்கும் பொழுதுதான், பிரேமதாச அதிபர் ஆனார்.

எந்த சிங்கள ராணுவத்தை எதிர்த்து புலிகள் துப்பாக்கி தூக்கினார்களோ அந்த ராணுவத்தோடு இணைந்துகொண்டார்கள். (இதுதான் மேதகு தேசியதலைவரின் வழிகாட்டல்)

தனக்கு ஆகாதவர்கள் யாராயினும் ஒழித்துகட்டும் புலிகள், பத்மநாபாவிற்கு தற்கொலை போராளியை குண்டைகட்டி அனுப்பினார்கள். பத்மநாபாவை சந்திக்கும் முன் அவர் அகப்பட்டுகொண்டார், அவரை கொல்லும் நோக்குடன் துப்பாக்கி தூக்கியவர்களை தடுத்து சொன்னார் நாபா.

“நாம் உன்னை கொல்லமாட்டோம், நீனும் தமிழர்,நானும் தமிழர். உங்கள் தலைவரை போல எமக்கு தலமை ஆசையோ, உயிர்பயமோ இல்லை. சிங்களனுடனான போரில் என் உயிர் போகட்டும், தமிழன் கையால் இருக்க கூடாது” என மன்னித்து உயிரோடு திருப்பி அனுப்பினார் நாபா.

புலிகளுக்கு மனசாட்சி என ஒன்று இருந்தால் இந்த இடத்தில் எப்படி சிந்தித்து இருப்பார்கள்?, ஒரு பெரும் தூக்கு தண்டனை கைதி கூட சிந்தித்து பார்க்கும் இடம் இது, பத்மநாபா இவ்வளவு மகத்தானவரா? என்று ,

புலிகளிடம் அதனை எதிர்பார்த்து என்ன செய்ய? சகதோழனின் கொலையில் தொடங்கிய இயக்கம் அது.
பத்மநாபாவோ மனிதர்களை நேசித்த மானிடநேயமிக்க போராளி

(இதே புலிதலமை என்ன செய்தது? 15 ஆண்டுகாலம் தன்னோடு இருந்த, தனக்கு அடுத்த தலமையான மாத்தையா மீது பொய்யான குற்றசாட்டு சொல்லபட்டபொழுது ஒப்பற்ற அர்பணிப்பான போராளியான மாத்தையாவை 500 போராளிகளோடு சுட்டுகொன்று எரித்தது)

தமக்கு பயிற்சியும்,பணமும்,உணவும்,இடமும் தந்த இந்தியாவினை புலிகள் மூர்க்கமாக எதிர்க்க ஆரம்பித்தார்கள், உலக நிலையும் மாற (ரஷ்யா சிதற்), இந்திய அரசியலும் மாற (விபி சிங்), தமிழகத்து அழுத்தமும் (திராவிட கழகங்கள், இன்று தமிழ்தேசியம் பேசுவோர் அன்று புலிகளுக்கு திராவிட இயக்கங்கள் செய்த உதவிகளை எல்லாம் மறந்துவிட்டார்கள்) கூட, இந்திய ராணுவம் வாபசானது.

இந்திய உடன்படிக்கை செல்லாது என பிரேமதாசா அறிவித்தார், இணைந்த வடக்கு கிழக்கு மறுபடியும் இரு மாகாணமாக பிரிக்கபட்டது. புலிகளும் அந்த ஆளும் தமிழ் வர்க்கமும் ஒப்பற்றமகிழ்ச்சி அடைந்தது.

இந்திய ராணுவம் 1500வீரர்களை இழந்து அவமானத்தோடு வெளியேறிய இந்தியா பத்மநாபாவோடு சென்னை வந்தது, எதிர்காலம் தெரியாத நிலையிலும், கம்யூனிச தாய்வீடான ரஷ்யா சிதறிய நிலையிலும் சொன்னார்.

“உண்மை சாகாது, வன்முறை வெல்லாது, ஒருகாலம் நிச்சயம் ஈழமக்கள் அமைதியாக வாழ்வார்கள்”
வரதராஜபெருமாளை ராஜஸ்தானில் தங்கவைத்த இந்தியா, பத்மநாபாவை வடஇந்தியாவில் தங்குமாறோ அல்லது வெளிநாட்டுக்கு செல்லுமாறோ கேட்க சென்னையிலே வாழதுணிந்தார்.

பாதுகாப்பான வாழ்க்கைத்தான் வாழ்ந்துகொண்டிருந்தார். ஆனால் 1500 இந்தியவீரர்களை இழந்தும் புலிகளுக்கு இந்தியாவில் தடை இல்லா காலமது.

அன்னை இந்திரா டெல்லியில் ஒரு அரசுவிழாவில் தன் அருகில் அமிர்தலிங்கத்தை அமரவைத்து “ஏதோ” சொல்லவந்ததை குறித்துகொண்டபுலிகள் பின்னாளில் அவரை கொன்றார்கள், அதுவும் அவர் வீட்டிற்கு சென்று, அவர் மனைவி கொடுத்த தேநீரை குடித்துவிட்டு அப்பெண்மணியின் தாலியை அறுத்தார்கள்,

அவர்கள் பயிற்சி அப்படி.

ஈழதேர்தலில் வெற்றிபெற்ற பத்மநாபாவை விடுவார்களா? ஈழம் என்றால் புலிகள், ஆட்சி என்றால் புலிகள், மக்களாவது? தேர்தலாவது? ஜனநாயகமாவது?

பிரபாகரனே சொன்னார் ஒரு பத்திரிகையாளரின் இப்படியான கேள்விக்கு “சுதந்திர தமிழ்ஈழத்தில் எம்மாதிரியான அரசு அமையும் என சொல்லமுடியுமா?”
மேதகு சொன்னார் “நிச்சயமாக சர்வாதிகார ஆட்சிதான்”
பின்னர் எப்படி பத்மநாபாவை விடுவார்கள்? ப‌லமுறை முயற்சித்தார்கள். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இறுதியாக பின்லேடனுக்கு கிடைத்த மூர்க்கமான மனிதாபிமானமே இல்லாத ரம்ஸி யூசுப் எனும் கோடூரமனம் படைத்தவரைபோல (பின்னாளில் பின்லேடன் ஒழிக்கபட்டதிற்கும் இவனே காரணம்) புலிகளுக்கும் ஒருவர் கிடைத்தார்.

இயக்கபெயர் பாக்கியநாதன், பத்மநாபாவை ஒழித்துகட்ட அவருக்கு இட்டபெயர் ரகுவரன். இரண்டு பெயர் உண்டே தவிர கண் ஒன்றே ஒன்றுதான்.

அவரேதான் அவர் பெயர் சாகும்பொழுது “ஒற்றைகண் சிவராசன்”.

எவ்வளவு தந்திரமாக பத்மநாபாவை கொன்றோழித்தார்கள் என்பது தனிபதிவாக காணவேண்டியது, அவ்வளவு தந்திரமும்,நன்றிகெட்ட தனமும் நிறைந்த கொலை அது, ஜூன் 19 1990ல் நடந்த கொலை அது.

(தொடரும்..)

 

 ஈழத்து சேகுவேரா : 01

 ஈழத்து சேகுவேரா 01

Image may contain: 1 person, outdoor

பிரபாகரனுக்காகவும் புலிகளுக்காகவும் செத்தவர்களை மாவீரர்கள் என சொல்லி ஒப்பாரி வைக்கும் கூட்டம் உண்டு, ஆனால் புலிகளால் கொல்லபட்ட தமிழ் போராளிகளுக்கு தியாகிகள் தினம் என அனுசரிக்கபடும் இந்நாளும் உண்டு

அப்படியும் ஒரு நாள் அனுசரிக்கபடும், தமிழகத்தில் இதெல்லாம் தெரிவதில்லை, நாம் அனுசரிப்போம்

ஜூன் 19ம் நாள் ஒப்பற்ற ஈழபோராளி பத்மநாபாவின் நினைவுநாள், கோடம்பாக்கத்தில் அவர் 1990ல் மரித்தபொழுதே ஈழம் இனி மலராது என அடித்து சொன்ன அனுபவஸ்தவர்கள் உண்டு, தமிழர்களின் பெரும் சிந்தனை செல்வம் அழிக்கபட்டுவிட்டது, இனி ஈழதமிழருக்கு மிஞ்சுவது கண்ணீரும்,ரத்த ஆறும் என்பது அன்றே குறிக்கபட்டது.

பத்மநாபாவின் மரணம் தமிழகத்தை பெரும் சுடுகாடாக்கும் திட்டத்தின் முதல்புள்ளி, இனி என்னவெல்லாம் நடக்குமோ என மனிதநேயம் கொண்டோர்கள் எல்லாம் அஞ்சி புலம்ப அதற்கு விடை மறுவருடம் மே 21 1991ல் கிடைத்தது.
மிகசிறிய வயதிலே பெரும் பக்குவமான பெரும்பணியினை செய்து அழியாபுகழ்பெற்றவர் பத்மநாபா.

ஈழம் என்றால் புலிகள், தமிழர் என்றால் புலிகள், புலிகளை ஆதரிக்காவிட்டால் தமிழரில்லை என்பதெல்லாம் அவரவர் விருப்பம். ஆனால் அழிவுகளை குறைத்து சர்வதேச நகர்வுக்கு ஏற்பபோராடி ஈழமக்களை வாழவைக்கமுடியும் என்ற யதார்த்த உண்மையையில் போராடிய “தமிழர்”தான் பத்மநாபா.

ஈழத்தில் எத்தனையோ போராளிகள் உண்டு, தற்கொலை போராளிகளுண்டு, அவர்களில் செட்டிதனபாலசிங்கம் போன்ற வயிறுவளர்ர்பு போராளிகளும் உண்டு. ஆனால் தொட்டுவிடும் தூரத்தில் இவரால் ஈழத்திற்கு விடிவு உண்டு என உலகம் நம்பிய, அதாவது சர்வதேச நிபுணர்கள் மரியாதையாக பார்த்த ஒரு போராளி உண்டென்றால் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம் அது பத்மநாபா.

காரணம் அவரின் ஆற்றல் அப்படி, தொலைநோக்கு சிந்தனையாளர் என்பதனை விட, சர்வதேச நிலைப்பாடு அறிந்து போராட்டத்தினை நடத்தியவர், எந்த தலைவருடனும் எதைபற்றியும் மணிகணக்கில் விவாதிக்கும் அறிவு அவருக்கு இருந்தது, சீரிய திட்டமும், துல்லியமான செயலும் அவருக்கு வாய்த்திருந்தது

(இந்த இடத்தில் 2002 கிளிநொச்சிமாநாட்டில் பத்திரிகையாளர்கள் அள்ளி வீசிய ஒவ்வொரு கேள்விக்கும் ஆண்டன் பாலசிங்கத்தினை பரிதாபமாக பார்த்த அந்த முகம் நினைவுக்கு வரகூடாது)

பெரும் அறிவாளி நாபா அதனை விட மிக முக்கியமானது அவரது மனிதநேயம்.

ஈழம் காங்கேசன் துறையில் பிறந்தவர், 1975 தரபடுத்துதல் சட்டத்தால் மாணவர்கள் பாதிக்கபட்டபொழுது போராடகிளம்பியவர். அக்கால யாழ்ப்பாண வழக்கபடி வலுகட்டாயமாக லண்டனுக்கு அனுப்பபட்டவர். அங்கு படித்து பட்டமும் பெற்றவர்.

லண்டனில் எல்லா போராளி குழுக்களுக்கும் அலுவலகம் இருக்கும் (பின்னாடியே ஓசைபடாமல் உளவுதுறைகள் பின் தொடரும்), அங்கு பாலஸ்தீன போராளிகளுடன் பழகியவர். உலக அனுபவம் அவருக்கு நிரம்ப கிடைத்தது.

இதுவரை உலகில் சேகுவாரேக்கு அடுத்த அராபத் எனும் ஒப்பற்ற போராளி ஏன் இலக்கினை அடையமுடியவில்லை என்பது அவருக்கு அன்றே விளங்கிற்று. மகா திறமைசாலி அராபத், இனி யாரும் அவர்போல போராடமுடியாது,

இஸ்ரேல் மட்டும் எதிரி என்றால் ஜெயித்திருப்பார், ஆனால் எதிரி இஸ்ரேல் மட்டும் அல்ல என்பது எதார்த்தம், இப்படியாக உலக அரசியலை கரைத்துகுடித்துவிட்டுத்தான் ஈழத்திற்கு போராட யாழ்ப்பாணம் திரும்பினார்.

1980களில் அவரின் போராட்டம் வித்தியாசமானது, புயலோ அல்லது மழையோ பாதிக்கபட்ட கிராமங்களுக்கு ஓடிசென்று குழுவோடு உதவுவார். கிராமம் கிராமாக பயணித்தார், அதாவது மக்களை திரட்டினார்.

இன்றும் நமது தமிழகத்தில் தாழ்த்தபட்ட மக்களுக்க்காக போராடிய அம்பேத்கர் பக்கத்தில் பிரபாகரன் படமும் இருக்கும், அரசியலாக கூட இருக்கலாம். ஆனால் தாழ்த்தபட்ட மக்களுக்காக அமைப்புமூலம் போராடிய உன்னத தலைவன் பத்மநாபா என்பது வரலாறு.

ஆனால் தமிழக சங்கங்கள் அவரை எல்லாம் கண்டுகொள்ளாது.ஈழம் என்பது மலையக இந்தியரும், மூர்ஸ் எனப்படும் தமிழ்பேசும் முஸ்லீம்களும் இணைந்த சமுதாயமாக அமையவேண்டும் என்பதுதான் அவரின் கோட்பாடு, தன்னை கம்யூனிஸ்ட்டாக அறிவித்துகொண்டு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முண்ணனி எனும் போராளிகுழுவினை தொடங்கினார்.

அதாவது மக்களை திரட்டாமல் போராளிகள் வெல்லவே முடியாது எனும் லெனின்,மாவோ போன்றோரை அப்படியே பின்பற்றினார்.

(ஒருவகையில் அது பின்னாளில் உண்மையாகி கூட போனது, முள்ளிவாய்க்கால் கொடுமை நடந்தபொழுது யாழ்பாணத்தில் ஒரு எதிர்ப்புமில்லை, மட்டகிளப்பு மட்டையாகி கிடந்தது. கொழும்பு கோலாகலமாக இருந்தது, மலையகம் தேயிலை கூலி கூட்டி கேட்டது, ஆனால் முள்ளிவாய்க்கால் கதறிகொண்டிருந்தது)

அவருக்கு ஏழைமக்கள்,பின் தங்கிய மக்களிடம் செல்வாக்கு கூடிற்று, அவ்வப்போது சிங்களபடைகளை தாக்கவோ அல்லது சிங்களரால் பாதிக்கபட்ட மக்களை காப்பற்றவோ அவர் தவறினதே இல்லை.

இப்படியாக மலையகம்,ஈழம் என்று ஒடுக்கபட்ட மக்களை எல்லாம் தேடி தேடி சென்று இயக்கம் வளர்த்தார். “போராளிகளுக்கு போராடும் கடமை மட்டுமல்ல, ஈழம் மலர்ந்தால் அது எப்படி சமத்துவ பூமியாக மலரும் எனும் நம்பிக்கையை மக்களிடம் விளக்கி நம்பிக்கையை பெறவேண்டும்” என்பது அவரின் பெரும்கோட்பாடு.
ஒரு கட்டத்தில் ஏழை எளிய மக்கள் மட்டுமல்ல,

பலதரப்பாலும் ஏற்றுகொள்ளகூடிய தலைவர் எனும் நிலைய மிக சிறியவயதில் 29 வயதிலே பெற்றார், ஈழத்தின் எதிர்காலம் என்றே அவர் பார்க்கபட்டார், பலமொழிகளில் பேசும் ஆற்றல் பெற்றவர். எல்லா நாட்டு அரசியலும் அவருக்கு அத்துபடி.

1983 கலவரத்தினை தொடர்ந்து, போராளிகள் இந்தியாவில் தஞ்சம் புகுந்தவுடன் இந்தியா தனது விளையாட்டை தொடங்கினாலும், அதற்கு முன்பே சிலகுறிப்புகளை தயாரித்திருந்தது.

அதாவது இந்தியா உதவும் பட்சத்தில் உலகினை சமாளித்து அதே நேரம் இந்தியாவிற்கும் ஆபத்தில்லா போராட்டத்தினை நடத்தும் ஆற்றல் யாருக்கு உண்டு என்று அறிக்கை தயாரித்தார்கள்.

டெலோவின் சபாரத்தினமும், பத்மநாபாவும் அதில் முதலிடம் பிடித்தார்கள், அப்படியே தமிழகமும் வந்தார்கள்.
இந்திய பயிற்சி தொடங்கும் முன்னமே லெபனானில் பெற்றபயிற்சியுடன் ஷெல்குண்டுகளை தயாரித்து இலங்கையை முதலில் அச்சுறுத்தியது பத்மநாபாவின் இயக்கம் .

தமிழகத்து கம்பூனிஸ்டுகள் மட்டுமல்ல, எல்லா அரசியல்வாதிகளிடமும் அவருக்கு நட்பு இருந்தது, ஈழத்தில் அதிதீவிரமாக இல்லாமல் மிக திட்டமிட்டு மக்களுக்கு பாதிப்பில்லா வகையில் அவரின் இயக்கம் தாக்குதல் நடத்திகொண்டிருந்தது.

ஈழத்து போராட்ட ஒரே ஏகபோகமாக உரிமை கொண்டாடிய புலிகளும், பத்மநாபாவும் இங்குதான் கருத்துவேறுபாடு தொடங்கிற்று.

எதனையும் கணக்கில்கொள்ளாமல் படுதீவிரமாக தாக்கிவிட்டு பின்னர் மக்களை சிங்களராணுவம் தாக்கினால், தாக்கபடும் மக்கள் தம்மை ஆதரிக்கவேண்டும் அல்லது விரும்புவார்கள் என்பது அவர்கள் கணக்கு,அதாவது “நாங்கள் போராடுகின்றோம் நீங்கள் மட்டும் எப்படி சும்மா இருக்கலாம், வந்துபோராடியே தீர்க்கவேண்டும், போராட்டம் என்றால் துப்பாக்கி, தற்கொலை அவ்வளவுதான், அப்படியானால் சிங்களன் தானாக நாட்டை போட்டுவிட்டு ஓடிவிடுவான்”

“பணமிருந்தால் பணம், சொத்து இருந்தால் சொத்து, பிள்ளைகள் இருந்தால் வீட்டிற்கு ஒன்று எமக்கு, அதாவது எமது போராட்டத்தை மக்கள் ஏற்றுகொள்ளவே வேண்டும்” என்பது அவர்கள் சித்தாந்தம்.

ஆனால் பத்மநாபா இப்படி சிந்தித்தார் “மக்களிடம் ஒரு சித்தாந்த எழுச்சியை ஏற்படுத்தவேண்டும் மக்களை அரசியலாக்க வேண்டும், ஆயுத போராட்டம் என்பது கூடுதலாக ஒரு போராட்டமே தவிர, அது மட்டுமே போராட்டமல்ல, அதி தீவிரத்துடன் அரசபடைகளை தாக்கி, அவர்கள் மக்களை பூண்டோடு அழித்தால் என்னவாகும்?” என்பதை தனது புகழ்மிக்க வார்த்தையால் சொன்னார்.

“எமது மக்களுக்காகத்தான் இம்மண்ணை நேசிக்கின்றோம், மண்ணுக்காக மக்களை நேசிக்கவில்லை” அதாவது வாழ்வு முக்கியம், மக்கள் பாதுகாப்பு முக்கியம், ஒவ்வொரு மக்களின் உயிரும் முக்கியம்.

இந்திய அரசு அவர்மேல் பெரு மரியாதை வைத்திருந்தது, பின்னாளில் இந்தியாவினால் அங்கீகரிக்கபட்ட 4 ஈழபோராட்ட இயக்கங்களில் (புலிகள் உள்பட) அவர் முக்கியமானவர்.

ஈழ மக்களின் மீது அனுதாபம் கொண்டிருந்த ஒரே இந்தியதலைவர் இந்திராகாந்தி, அவர் ஏன் போராளிகளை ஆதரித்தார்? அவருக்கு என்ன திட்டம் இருந்தது? அது தனி ஈழமா? அல்லது ஈழ மாகாணமா? என யாருக்கும் புரியவில்லை, அது இந்திராவிற்கு மட்டும் புரிந்த ரகசியம்.

அந்த ஈழதிட்டத்தினை மனதிற்குள்ளே வைத்துகொண்டு இறந்தும் போய்விட்டார், அதோடு பலரின் வாழ்க்கையில் சனி சம்மணம் போட்டு அமர்ந்தார்.

பிடல் காஸ்ட்ரோ போலவோ அல்லது சேகுவாரா போலவோ பெரும் பெயரினை பெற்றிருக்கவேண்டிய பத்மநாபாவின் தலைவிதியை மிக அவசரமாக இறைவன் மாற்றி எழுதிகொண்டிருந்தான்.

(தொடரும்..)

 
%d bloggers like this: