விஞ்ஞானி எடிசன்

எடிசன்

இந்த உலகில் எத்தனையோ விஞ்ஞானிகள் வந்தாலும் எடிசனுக்கு தனி இடம் உண்டு
அவர் அளவு சோதனையினை சந்தித்தவனுமில்லை, அவர் அளவு சாதித்தவருமில்லை. அப்படிபட்ட வாழ்வு அவருடையது
சிறுவயதில் நோயாளி, பள்ளி செல்லவே 8 வயது ஆனது. அங்கு சென்றாலும் காது கேட்காது, கூடவே படிப்பில் மந்தம் ஆனால் ஏகபட்ட கேள்விகள் எழுப்பினார், பூராவும் படிப்பிற்கு சம்பந்தமில்லா விஷயம்
ஆசிரியர் இவன் மூளை கோளாறு பிடித்தவன் என கழுத்தை பிடித்து தள்ள, எடிசனின் அம்மா ஆசிரியர் ஆனார், அவருக்கு வாசிக்க கற்றுகொடுத்தார், அப்பா மரவியாபாரி கணக்கு பார்க்க கற்றுகொடுத்தார் இவ்வளவுதான் படிப்பு
அவர் வாசித்ததெல்லாம் நியூட்டனும், பாரடேயும்
ஆயினும் பிழைக்க வேண்டுமே ரயில் நினையத்தில் தந்தி அடிக்கும் வேலைக்கு சென்றார், அங்கும் ஆய்வு செய்கின்றேன் என எதனையோ அமிலத்தை கொட்டிவிட அந்த வேலையும் போனது
பின் அதேரயில் நிலையத்தில் நொறுக்கு தீனி விற்றார்
அதன் பின் காய்கறி விற்றார், பன்றி வெட்டினார், சலூன் கூட நடத்தினார் என்கின்றார்கள். அந்த எடிசன் பிற்காலத்தில் உலகை மாற்றுவான் என கடவுளே நம்பி இருக்கமாட்டார்
பல வேலைகளை செய்த எடிசன் பின்பு பங்கு சந்தை அலுவலகத்தில் வந்தபொழுதுதான் அவர் வாழ்க்கை மாறியது, பங்கு தகவல்களை அனுப்பும் தந்தி முறையில் வேலைக்கு சேர்ந்தார்
ஏன் என்றால் காது கேட்காதவன் நிலைக்கு அதுதான் சரி, தந்தி புள்ளிகளாக வரும், கோடுகளாக வரும் அதை வைத்து சிலவற்றை எழுத வேண்டும், இதற்கு காது கேட்கும் அவசியமில்லை
இதனால் அப்பணி எளிதாக கிடைத்தது, அதில் இருந்த எடிசன் அதன் சிக்கல்களை கண்டு எளிதாக்க எண்ணிணான்
எடிசன் எனும் விஞ்ஞானி இங்குதான் உருவானான், கோடுகளாக வரும் தந்தியினை அதுவரை மனிதன் மொழிபெயர்க்க வேண்டும், எடிசன் அந்த கோடுகளை எந்திரமே எழுதினால் என்ன என யோசித்தார், அதை செயல்படுத்த முனைந்தார்
அதுவரை ஒற்றை வழியாக இருந்த தந்திமுறையினை இருவழியாக்கினார், ஒற்றை வழி என்றால் தந்தி அனுப்பவும் திரும்ப பெறவும் ஒரே வழிதான் கிட்டதட்ட ஒன்வே. ஆனால் இருவழி சாலை அமைத்தது போல வழிசெய்தார் எடிசன்
இந்த ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டு உருவாக்கியதுதான் கிராம்போன் எனும் கருவி, இன்றைய நவீன கருவிகளுக்கும் தொலைதொடர்பு சாதனங்களுக்கும் முன்னோடி
ஆய்வு என்பது அபின் போன்றது, உள்ளே இழுத்துவிட்டால் விடாது, எடிசனும் தொடர்ந்து கருவிகளை உருவாக்கி கொண்டே இருந்தார்
அதில் மாபெரும் வெற்றிதான் மின்விளக்கு, பாரடேயினை விரும்பி வாசித்த எடிசன் அந்த மின்சக்தியினை ஓளியாக மாற்றலாம் என நம்பினார், கடும் ஆய்வுகளை செய்தார்
பின் கடும் உழைப்பு பெரும் தோல்விக்கு பின் மின் விளக்கினை கண்டுபிடித்தார், மானிட குலத்திற்கு அவர் காட்டிய மாபெரும் ஒளி அது
நியூயார்க் நகரம் இரவில் விளக்கு பெற்றதும் அது உலக நாடுகளுக்கு அதிசயமாக விளங்கி வழிகாட்டியதும் எடிசன் என்பவராலே
இருட்டில் இருந்த உலகம் எடிசனால் இன்று இரவு நாம் காணும் வர்ண ஜாலத்திற்கு மாறியது
எப்படியப்பா இப்படி எல்லாம் மனிதனால் முடிகின்றது என உலகம் வியக்கும் பொழுது மின்மோட்டாரை உருவாக்கினார் எடிசன்
ஆம் இன்று பம்புசெட், கார் முதல் வீட்டு பேன், தொழிற்சாலை வரை இயங்கும் மோட்டார், அது அன்றி அமையாது தொழில் உலகு
அதுதான் இன்றைய கிரைண்டர், மிக்ஸிக்கும் அடிப்படை அவை இன்றி இன்றைய சமையல் கூடங்களும் இல்லை, அதற்கு அடிப்படை கொடுத்தது எடிசன்
அதன் பின்னும் மனிதர் சும்மா இருந்தாரா? இன்றைய சிடி, டிவிடி வகையாறாகளுக்கு முன்னோடியான கிராம்போனை கண்டுபிடித்தார்
அதாவது ஒலியினை பதிவு செய்யும் கருவி அது, பாடல்கள் இப்படித்தான் முதலில் பதிவு செய்யபட்டது, மனிதன் பாடியதை எந்திரம் திருப்பி பாடும் அதிசயத்தை செய்து காட்டினார் எடிசன்
ஒலியினை பதிந்து காட்டியாயிற்று இதை போல ஒளிபடங்களை உருவாக்கினால் என்ன எனும் அவரின் சிந்தனையில் உதித்ததுதான் திரைப்பட படபிடிப்பு கருவி
ஆம் அவரின் அந்த கண்டுபிடிப்புதான் சினிமா எனும் உலகினை தொடங்கி வைத்தது, உலகில் பெரும் மாற்றத்தை அது கொடுத்தது
இந்த மானிட வாழ்விற்கு தலைகீழ் திருப்பம் கொடுத்த விஞ்ஞானி எனும் வகையில் எடிசன் வரலாற்றில் நிலைபெற்றுவிட்டார்
இன்று காணும் ஒளிவிளக்கு, தகவல் தொடர்பு, பிரிண்டர், சிடி, டிவிடி, சினிமா கேமரா என பல விஷயங்களை தொடங்கி வைத்தவர் எடிசன் என்பவரே
அவரின் இறந்த நாள் இந்நாள், அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
நாம் அனுபவிக்கும் இந்த விஞ்ஞான வசதிகளுக்கெல்லாம் காரணம் அவரே, மறுக்க மறைக்க முடியாது
இரவில் விளக்கிற்கு சுவிட்சை தட்டும்பொழுதும், பேனை ஓடவிடும்பொழுதும், மோட்டாரில் நீர் கொட்டும்பொழுதும், இன்னும் பல விஷயங்களில் அவர் வாழ்ந்து கொண்டே இருப்பார்.
கிட்டதட்ட 1400 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை வாங்கி இருந்தார், வாங்காமல் விட்டவை இன்னும் ஏராளம்
எப்படி அம்மனிதனால் இப்படி சாதிக்க முடிந்ததென்றால், அவனின் சுயநலத்திலே பொதுநலமும் கலந்திருந்தது
மக்களின் வசதிக்காக, அவர்களின் வாழ்க்கை முறையினை எளிதாக்க என்ன செய்யலாம் என சிந்தித்தான், இறைவன் அவனுக்கு அந்த அளவு ஞானத்தையும் கொடுத்தான்
இந்த உலகமே எடிசனால் மாறிப்போனது சந்தேகமில்லை
மற்றவர்களுக்காகவே தன் வாழ்வினை செலவழித்து பெரும் விஷயங்களை கொடுத்த எடிசனின் ஜெனரல் எலக்ட்ரிக்கல்ஸ் (GE) நிறுவணம் இன்றும் உலகில் நம்பர் 1 நிறுவணமாக தன் கடமையினை செய்து கொண்டே இருக்கின்றது
புது புது எந்திரமும் பல விஷயங்களும் அந்நிறுவணத்தால் உருவாக்கபட்டு கொண்டே இருக்கின்றது
எடிசன் அதில் வாழ்ந்துகொண்டே இருக்கின்றார், மற்றவர்களுக்காக வாழ நினைப்பவனுக்கு, அவர்கள் சிரமத்தை தன் கண்டுபிடிப்பு மூலம் சரிசெய்ய வாழ்வினை கொடுத்தவனுக்கு ஒரு நாளும் அழிவில்லை என்பதே எடிசன் வாழ்வு சொல்லும் தத்துவம்
அவர் இறந்தது அக்டோபர் 18 எனினும் அவரின் உடல் அடக்கம் செய்யபட்டது அக்டோபர் 21
அன்று முதல் இன்றுவரை அமெரிக்காவில் அக்டோபர் 21ல் நள்ளிரவில் எல்லா விளக்கையும் சில நிமிடம் அணைப்பார்கள்
ஆம் , எடிசன் விளக்கினை கண்டுபிடிக்காவிட்டால் உலகம் இப்படித்தான் இருக்கும் என மக்களுக்கு சொல்வார்கள், மக்களும் நன்றியோடு நினைத்து கொள்வார்கள்
அருமை இந்தியா காந்தியினை, நேருவினை எல்லாம் மறந்துவிட்டபொழுது எடிசனை எப்படி நினைவு கூறும்?
அந்த மாமனிதனை நாம் நினைவு கூர்வோம், அந்த விஞ்ஞான பிதாமகனுக்கு இருட்டை விரட்டிய ஒளிநாயகனுக்கு ஆழ்ந்த நன்றியும் அஞ்சலிகளும்
அதற்காக மட்டுமா அஞ்சலி
குஷ்பு எனும் தேவதை எல்லாம் சினிமா மூலமே நமக்கு காண‌ கிடைத்தது, எப்படிபட்ட வரம் அது?
எடிசன் சினிமா கேமராவினை உருவாக்காமல் போயிருந்தால் இந்த அற்புத வாய்ப்பு மானிட பிறவியில் நமக்கு வாய்த்திருக்குமா?
அதனால் சங்கம் தாமஸ் ஆல்வா எடிசனுக்கு தன் மிக நன்றிகளை தெரிவித்து கொண்டு அவருக்கு உலகெங்கும் அஞ்சலி செலுத்துகின்றது [ October 18, 2018 ]
Image may contain: 1 person
Image may contain: 2 people, people standing, camera and text