உண்மையும் நியாயமும் அவரிடம் இருக்கின்றது

அலங்கார உடையில்லை, மோசடி கண்ணீர் இல்லை, பசப்பு வார்த்தையில்லை, வெற்று சவாலுமில்லை, போலி வாக்குறுதியுமில்லை

தமிழ்நாடு என்றவுடன் ராம்சந்திரன் வாழ்க எனும் கோஷமில்லை, ஜெயலலிதா என்ற பேச்சுமில்லை வீண் விளம்பரமுமில்லை

இவ்வளவிற்கும் அவர் தந்தை சிதறி உயிர்விட்ட இடம் அருகில்தான் இருக்கின்றது, அதை சொல்லி கூட ஒரு அனுதாபம் தேட மனமில்லை

மிக யதார்த்தமான பதில்கள், துளியும் ஆவேசமும் கோபமும் இல்லா ஆணித்தரமான நிதானமான பதில்கள்

எல்லா கேள்விக்கும் அவரிடம் பதில் இருக்கின்றது, காரணம் உண்மையும் நியாயமும் அவரிடம் இருக்கின்றது

அன்றொருநாள் இதே தமிழகத்தில் பாமரரோடு பாமரனாக நடந்தாரே ராஜிவ், அவர் வாகனம் பழுதுபட்டவுடன் அருகிருந்த வீட்டின் திண்ணையில் அமர்ந்து முடிந்தவரை அரைகுறை தமிழில் அந்த கிழவிகளுடன் பேசிகொண்டிருந்தாரே, அந்த காட்சிகள் நினைவுக்கு வருகின்றன‌

ஒரு நல்ல இளந்தலைவன் தேசத்திற்கு கிடைத்துவிட்டான் எனும் மகிழ்ச்சி மேலோங்குகின்றது

இன்னும் ஏராளமான தமிழக இளைஞர்களை ராகுல் சந்திகட்டும், தமிழ்நாடு தேசியம் பக்கம் திரும்பட்டும்

அவரிடம் கேள்வி கேட்க எல்லோருக்கும் விருப்பமே, எல்லோருக்கும் பதில் சொல்ல அவருக்கும் விருப்பமே

ஆனால் திமுகவினர் அவரிடம் மனதில் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான்

“தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வென்றால் எங்களுக்கு எந்த துறை கொடுப்பீர்கள்”

அதற்கு ராகுலிடமும் பதில் இப்படி இருந்தால் நல்லது

“அது தமிழகத்தில் அமைய போகும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் திமுகவுக்கு காங்கிரசுக்கு கொடுக்க போகும் இடங்களை பொறுத்தது”

ஆம் எந்த திமுக காங்கிரசை தமிழகத்திலிருந்து அகற்றியதோ அதே திமுக இனி காங்கிரசை அரியணைக்கு அழைக்கும் நேரம் நெருங்கி கொண்டிருக்கின்றது

உறுதியாக சொல்லலாம் இனி தமிழகத்தில் தனிபெரும் கட்சி ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை

அந்த மாமனிதன் நேருவினை தமிழகம் காமராஜருடன் கொண்டாடியது, அந்த மனிதனும் தமிழகத்திற்கு வைகை அணை முதல் ஏகபட்ட தொழிற்ச்சாலை உருவாக காரணமாயிருந்தான்

இதே கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்தபொழுது நேருவுக்கு கன்னியாகுமரி கொடுத்த வரவேற்பு கொஞ்சமல்ல‌

நேருவும் “இந்த மக்களின் அன்பு குமரிமாவட்ட தேன் மட்டி வாழைபழம் போல இனிப்பாது” என சொன்னதும் மறக்க கூடியதல்ல‌

அந்த மாமனிதன் நேரு தமிழகத்தை மறுபடி தேடிவந்திருக்கும் நேரமிது, அவரை இந்த மாநிலம் அணைத்து கொள்ளட்டும்

தாழ்ந்துவிட்ட இம்மாநிலம் அந்த “கை”களை பற்றிகொண்டு மேலேறி வரட்டும்