காமராஜரை மனதால் சாகடித்தவர்கள்

காமராஜரை கொல்ல முயற்சித்தது பாஜக அதாவது அந்நாளைய ஜனசங்கம் என சொல்லிகொண்டிருகின்றது ஒரு கோஷ்டி, யாரென உற்றுபார்த்தால் பல திமுக முகம்

உண்மையில் காமராஜரை மனதால் சாகடித்தவர்கள் அன்றைய திமுகவினர், ஒன்றா இரண்டா? அம்மனிதனை படாதபாடு படுத்தினார்கள்

ஆம் அவரை வீழ்த்திவிட்டால் தமிழ்நாடு தங்களது என கணக்கிட்டார்கள், அந்த காவல் தெய்வத்தை விரட்டிவிட்டால் அரசு கஜானா சுரங்கம் தங்களது என களமிறங்கினார்கள்

அம்மனிதன் அப்பொழுதெல்லாம் அமைதியாக கடந்து சென்றானே தவிர ஒருவரையும் பழித்ததில்லை

இப்பக்கம் நேருவுக்கு பின் அதுவும் சாஸ்திரிக்கு பின் காமராஜரை காங்கிரஸே விரட்டியது, அதுவும் இந்திரா படிக்காத கிழவன் என விரட்டிகொண்டிருந்தார்

தான் தூக்கிவளர்த்த குழந்தை என காமராஜர் உரிமையில் சொன்னதெல்லாம் இந்திராவுக்கு கவுரவ பிரச்சினையானது

ஒரு பக்கம் திமுக, இன்னொரு பக்கம் இந்திரா, இன்னொரு பக்கம் காமராஜர் இருக்கும் வரை கமிஷன் வாங்கமுடியாது சம்பாதிக்க முடியாது என்றிருந்த அன்றைய காங்கிரசார்

இந்த நெருக்கடியில்தான் டெல்லியில் அவர்மேல் கொலை முயற்சி நடந்தது

அது ஒன்றும் திட்டமிட்ட கொலை முயற்சி அல்ல , அன்று டெல்லியில் பசுமாட்டு காவல் பேரணி டெல்லியில் நடந்தது, அந்த பசுமாட்டு ராமராஜன் போன்ற டவுசர் பார்ட்டிகளுக்கு இன்றுவரை அதுதான் அரசியல், அன்றும் அதுதான் அரசியல்

ஒரு கட்டத்தில் அவர்கள் பேரணி வன்முறையாக மாறி பல இடங்களுக்கு தீவைக்கபடடது , அதில் காமராஜர் இருந்த வீடும் சிக்கியது அவர் தப்பினார்

அது பற்றி அவர் அதிகம் அலட்டவில்லை ஒரே ஒரு இடத்தில் சொன்னார் “அவனுக காந்தியினையே கொன்ன கூட்டம்ணேன், நான் மதவாதி இல்லங்கிறதுக்காக, நாங்கெல்லாம் இருக்கும்வரை மதவாதம் வளராதுண்ணேணேன், அந்ந்த கோவத்துல அவனுக‌ என்ன கொல்ல வந்திருக்கலாம்ணேன்..”

அத்தோடு நிறுத்திகொண்டார் மற்ற இடங்களில் அனுதாப அரசியல் தேடவே இல்லை

கடைசியாக போராட்டம் நிறைந்த மனதில் இருந்தாலும் இந்திரா ஒரு பிரதமர், கருணாநிதி ஒரு முதல்வர் என்ற அளவில் அவரின் நாவு மரியாதையாகவே வார்த்தைகளை வெளியிட்டது

அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவர்கள், அதனால அவர்களை குறை சொல்ல ஒன்றுமில்லை என்ற மிக கண்ணியத்தோடு இருந்தார் காமராஜர்

கடமை..கண்ணியம் ..கட்டுப்பாடு என்பது அவரிடம்தான் இருந்தது

அதனால்தான் தன்னை தோற்கடித்த சீனிவாசனின் திருமணத்தில் கூட முதல் ஆளாக கலந்து கொண்டார், “மக்களுக்கு அவரத்தான் பிடிச்சிருக்குண்ணேன், இது மக்கள் தீர்ப்புண்ணேன் அத மதிக்கணும்ணா இந்த சீனிவாசன மதிக்கணும்ணேன்” என அவர் சொன்னதெல்லாம் கண்ணீர் வரவழைக்கும் காட்சிகள்

அப்படியும் ஒரு மனிதன் இருந்திருக்கின்றான், பரிதாபம்

ஒரு மகா நல்லவன், துளியும் குற்றம் சொல்லமுடியா உத்தமன் சொந்த கட்சியிலும் எதிர்கட்சியிலும் எவ்வளவு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டுமோ அவ்வளவையும் கொஞ்சமும் குறைவின்றி பெற்றவர் காமராஜர்

இதைத்தான் சோ சொன்னார், அவர் இறந்த அன்று இந்திரா, கருணாநிதி எல்லாம் அஞ்சலி செலுத்தும் பொழுது மிக தைரியமாக சொன்னார்

“யாரெல்லாம் அந்த மனிதனை மனதால் சாகடித்தார்களோ இன்று அவர்களே அவருக்கு அஞ்சலியும் செலுத்த வருகின்றார்கள்”

ஆம் சொந்த கட்சியும், எதிர்கட்சியும் அம்மனிதனை கொத்தி விரட்டியதை விட, தீ வைத்த சம்பவம் நடந்த பின் தவறுதலாக நடந்தது என சொன்ன ஜனசங்கம் ஒன்றும் மோசமானது அல்ல‌

அந்த மாபெரும் கொடுமையினை அவருக்கு செய்தார்கள்

பொதுவாக எதையும் மனம்விட்டு சொல்லாதவர் காமராஜர், அவர் வீட்டு வேலைக்காரர் சொல்வார், “காமராஜர் கடவுளை வணங்காதவர் ஆனால் வீட்டில் ஒரு நடராஜர் சிலை அன்பளிப்பாக கிடைத்தது ஒன்று உண்டு, அதையே சில நேரம் எங்காவது கிளம்பும் பொழுதும் வந்த பின்பும் உற்று பார்ப்பார், சில நேரம் கண்கள் கலங்கியிருக்கும்”

காமராஜரின் மனதினை அந்த நடராஜர் சிலைமட்டும் அறிந்திருக்கலாம்

அப்படி காமராஜர் மனம் என்ன சொல்லியிருக்கும், அவரை படித்தவர்களுக்கு அதை யூகிப்பது சிரமம் அல்ல‌

“காந்தியோடே நான் செத்திருக்க வேண்டும், அல்லது நேரு சாஸ்திரியோடு என் காலமும் முடிந்திருக்க வேண்டும். இந்த தராதரம் தெரியாதவர்களோடு அவமானபடவா இன்னும் என் காலம் மிச்சமிருக்கின்றது??”

Advertisements