இன்று விஜயகாந்திற்கு பிறந்த நாள், வாழ்த்துக்கள் கேப்டன்

Image may contain: 1 person, smiling

தமிழக நடிகர்களில் ஓரளவு பொதுநலனும் தைரியமும் கொண்ட நடிகர் அவர், தமிழை தவிர எந்த மொழிபடத்திலும் அவர் நடித்ததில்லை

கருப்பு நிறம், பெரும் திறமையாளர் என சொல்லமுடியாவிட்டலும் அவர் நடிப்பில் ஒரு உணர்ச்சி இருந்தது. அந்த வேகமும் உணர்ச்சியும்தான் அவரை உச்சிக்கும் கொண்டு சென்றது

உச்ச நடிகராகவும் இல்லாமல் அதே நேரம் காணாமலும் போகாமல் கங்கை ஓடும் நாட்டில் காவேரி போல அவரும் ஓடிகொண்டிருந்தார்

பெரும் சர்ச்சையிலோ ஏதும் முறைகேடுகளிலோ சிக்காத மிக சில நடிகர்களில் அவரும் ஒருவர்.

கலைஞர் தலமையில் திருமணம் செய்யும் அளவிற்கு அவருக்கு தமிழக சூழலும் தெரிந்திருந்தது.

எந்த சர்ச்சையிலும் சிக்காமல் மிக வேகமாக வளர்ந்தார், உணர்ச்சி மிக்க நடிப்பால் புரட்சி கலைஞர் எனவும் அழைக்கபட்டார்

அவர் “புரட்சி கலைஞர்” என அழைக்கபட்டதில் கலைஞருக்கு துளியும் வருத்தமில்லை, அதுதான் கலைஞர்

ஒரு விஷயம் நிச்சயமாக சொல்லமுடியும். நிச்சயம் விஜயகாந்த் நல்ல நிர்வாகி

ராமசந்திரனும் , சிவாஜியும் இது நடக்காது என தூர எறிந்த நடிகர் சங்கத்தை, ரஜினியும் கமலும் ஏற்க தயங்கிய பொறுப்புகளை அவர் ஏற்று நடத்தி சங்கத்தை கடனில் இருந்து மீட்டார்

நடிகர் சங்கம் வித்தியாசனாமது. ராமசந்திரன் வள்ளல் என்பார்கள், பிரபாகரனுக்க்கே 100 கோடி கொடுத்த கொடையாளன் என்பார்கள்

ஆனால் நடிகர் சங்கத்து சில லட்ச கடனை அவர் கட்டவில்லை, இவ்வளவிற்கும் அவரிக்கு ஏணியாக, லிப்டாக இருந்ததே அந்த திரையுலகம், ஏன் வள்ளல் ராமசந்திரன் கொடுக்விலை என நாம் கேட்க கூடாது

சிவாஜி, ஜெமினி என சொத்துக்களை குவித்த நடிகர்களும், ஏன் கன்னடத்தில் சொத்துக்களை குவித்த ரஜினியும், 6 வயதிலே சம்பாதிக்க தொடங்கிய கமலும் முன்வரவில்லை

ஆனால் நடிகர் சங்க பொது நலனுக்காக வந்து அதை செய்தும் காட்டியவர் விஜயகாந்த்

இப்படிபட்ட ஆர்வம்தான் அவரை அரசியலுக்கும் இழுத்தது. 
ஆனானபட்ட மூப்பனாரே அய்யோ என அலறி தன் கட்சியினை காங்கிரசோடு இணைக்கும் அளவிற்கு அவருக்கு மர்ம அடி முதுகில் விழுந்தது அப்படிபட்ட அரசியல் இது

இன்னொரு பக்கம் ஜெயா இரும்பு பெண்மணி, இன்னொரு பக்கம் சிரித்துகொண்டே தந்திர அரசியல் செய்யும் கலைஞர்

இவர்களை எதிர்த்து தைரியமாக கட்சி கண்டது விஜயகாந்த் ஒருவர்தான். அன்று சிஸ்டம் மகா அமைதி தியானம், மய்யம் அடக்கமாகி இருந்தது

அன்றும் திரைதுறையில் இருந்து ஒரு ஆதரவுமில்லை

உண்மையில் விஜயகாந்த் யாரையும் மிரட்ட கட்சி தொடங்கவில்லை, மக்களுக்கு ஏதோ செய்ய நினைத்தார்.

மனதில் பட்டதை பேசியதில் தமிழக அரசியல்வாதிகளில் காமராஜருக்கு அடுத்த ஒருவர் விஜயகாந்த் மட்டும்தான்.

அவரின் மண்டபம் எல்லாம் இடிக்கபட்டிருக்க வேண்டியதே இல்லை, இன்று அதன் அருகே நின்று பார்த்தாலும் குழந்தையே சொல்லும், இந்த சாலை ஏன் இங்கு வளைகின்றது?

நிச்சயம் அந்த தவறை கலைஞர் செய்திருக்கமாட்டார் என்றுதான் கலைஞரை அறிந்தவர்கள் சொல்கின்றார்கள், முதிய வயதில் யாரோ தவறான வழிகாட்ட நடந்த தவறு அது

ஆனால் அந்த தவறுக்கேற்ற தண்டனையும் கிடைத்தது

இப்படி அவருக்கு அடிகொடுத்து பார்த்தார்கள், அந்த அடிதான் பின்னாளில் திமுகவிற்கு சாவு மணி ஆனது, கலைஞர் மறுபடி அரியணை ஏற முடியவில்லை.

அரசியல் என்பது மர்ம சதுரங்கம், அதில் விஜயகாந்த் தடுமாறினார். நடிகராக ஜொலித்த அவர் பின்னாளில் அரசியலில் கலக்கினார், எதிர்கட்சி தலைவராக கூட இருந்தார்

அன்று ஜெயலலிதா முன்னால் தம் கட்டி நின்ற விஜயகாந்தினை மறக்க முடியாது, இன்றைய எதிர்கட்சி தலைவர் எதற்கெடுத்தாலும் ஓடிவந்து நடுரோட்டில் அமரும் பொழுது, அன்று தில்லாக நாக்கை கடித்து நின்ற விஜயகாந்த் நினைவுக்கு வந்துதான் போவார்

அரசியலின் மர்ம நகர்வில் விஜயகாந்த் சிக்கினார், ஒருவித அதீத நம்பிக்கையும் அவருக்கு வந்தது

விளைவு படுதோல்வி அடைந்தார், மீண்டு வந்துவிடலாம் ஆனால் உடல்நலம் ஒத்துழைக்கவில்லை

நோயின் தாக்கத்தை அவர் குடிகாரர் என்றார்கள், ஏன் ரஜினிக்கு இருந்த குடிபழக்கம் ஊர் அறிந்தது, சிங்கப்பூர் சிகிச்சைக்கு அதுதான் காரணம்

ஆனால் யாராவது அவரை சொல்வார்களா? இல்லை

விஜயகாந்த் குடிகாரர் என்பது ஊதிபெருக்கபட்ட பிம்பம், நோயின் தாக்கமே அவரை வீழ்த்தியது

இப்பொழுதும் விஜயகாந்திற்கு வாய்ப்பு இருக்கின்றது, காங்கிரசிலோ அல்லது பிஜேபியிலோ அவர் அடைக்கலம் ஆகலாம், தேசிய நீரோட்டத்தில் கலக்கலாம்

காலம் இருக்கின்றது

உறுதியாக சொல்லலாம் , தமிழகத்திற்கு ஏதாவது செய்ய நினைத்த நபர் அவர். அரசியலுக்கு வந்து அவர் இழந்துதான் மிக அதிகம்

அதில் சொத்துக்கள், நண்பர்கள், உடல்நலம் என ஏகபட்ட இழப்புகள் உண்டு,

வடிவேல் கூட அவருக்கு எதிரியானார்

அவர் எந்த நடிகர் சங்கத்திற்கு உழைத்தாரோ அது கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை

அவரின் 40ம் ஆண்டு விழாவினையும் திரையுலகம் கண்டுகொள்ளவில்லை, நன்றிகெட்டதனத்திற்கு இவ்வுலகில் ஒரு உதாரணம் வேண்டுமென்றால் தமிழக திரையுலகத்தை சொல்லலாம்

அரசியலை விடுத்து முன்னொரு காலத்தில் சங்கத்தினை மீட்டவர் என்ற வகையிலாவது அவரை கொண்டாடியிருக்க வேண்டும்

இந்த பூவுலகில் நன்றி ஒரு மில்லி கிராம், அல்லது அரை மிமீட்டர் கூட இல்லாத ஒன்று தென்னிந்திய நடிகர் சங்கம்

அதற்காக உழைத்த மனிதனை இப்படி மறக்க கூடாது, நிச்சயம் அந்த நன்றி மறந்த சங்கம் உருப்படாது.

அட அவர்களுக்குத்தான் நன்றி இல்லை , இவரால்தான் அதிமுக ஆட்சிக்கு வந்தது அதனால்தான் நாம் அமைச்சராக முதலமைச்சராக இருக்கின்றோம் என்ற நன்றி பழனிச்சாமி கோஷ்டிக்குமா இல்லை?

நன்றி மிக்கவர்கள் என்றால் பழனிச்சாமி அரசு விஜயகாந்தினை இந்த விழாவில் பாராட்டி இருக்க வேண்டும்

விஜயகாந்திற்கும் காமராஜருக்கும் கிட்டதட்ட ஒரே ராசி

அவர்கள் யாருக்கெல்லாம் உழைத்தார்களோ அவர்களே நன்றிமறந்து ஓட அடிப்பார்கள்

சினிமா உலகமும் நன்றி மறந்தது, தமிழகமும் விஜயகாந்தினை புரிந்துகொள்ள தடுமாறியது

இன்று அவரைபோல் எதிர்கட்சி தலைவர் வேண்டும் என தேடுகின்றது. நிச்சயம் சட்டசபையில் அப்படி ஒரு மனிதன் தைரியமாக‌ இனி சீறபோவதில்லை

சினிமாவிலும் அரசியலிலும் எத்தனையோ பேரை கைதூக்கிவிட்டவர் விஜயகாந்த்

ஆக போலிகளுக்காக உழைத்தாலும் தன்னை அறியாமல் நன்றிகுரிய சிலரை சம்பாதித்திருக்கின்றார்

விஜயகாந்த் சம்பாதித்ததிலே மிக உயர்ந்தது இம்மாதிரி ரசிகர்கள்தான்.

இன்று விஜயகாந்திற்கு பிறந்த நாள், வாழ்த்துக்கள் கேப்டன்

1980களில் பிசியாக இருந்தார் விஜயகாந்த், ஈழமக்கள் பால் அவருக்கு அன்பு இருந்தது, ஈழ மக்கள் நிம்மதி பெறும்வரை தன் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என அன்றே சொன்னவர்

அந்த முடிவு எந்த அரசியல்வாதியும், நடிகனும் எடுக்காதது. அவர் ஒருவர்தான் எடுத்தார்

இன்று விஜயகாந்தின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல யாருமில்லை. நிச்சயம் அவர் மட்டும் கலைஞர் பக்கம் வந்திருந்தால் இன்று பழனிச்சாமி முதல்வரில்லை பன்னீர் அவர் அருகில் இல்லை

விஜயகாந்தினை தந்திரமாக முதுகில் குத்திய வைகோ கும்பலையும் காணவில்லை

கலைஞரை எதிர்த்த பெரும்பாலோருக்கு வந்த சோதனைகள் விஜயகாந்திற்கும் வந்தது

ஆம் கலைஞரின் விதி அது , அவரை எதிர்த்தவர்கள் நெடுநாள் வாழமுடியாது, ஏதோ ஒருவகையில் எதனாலோ தாக்கபடுவார்கள்

திடீர் மரணம் அல்லது ஏதாவது நோய் வந்து அவர்களை முடக்கும், அவர் வரலாறு முழுக்க சான்றுகள் ஏராளம் கிடக்கின்றது

அவரை முடக்குவேன் என கிளம்பியவர்கள் எல்லாம் கொஞ்ச நாளில் போய் சேர்ந்தார்களே தவிர அவரோ நிலைத்து நின்றார்

ராமாயணத்து வாலிக்கு பின் அந்த அபூர்வ விதி கலைஞருக்கு இருந்தது, பகுத்தறிவு அல்லதான் ஆனால் அவர் வாழ்வு அதைத்தான் சொல்கின்றது

அவரை எதிர்த்துவிட்டு நீண்டநாள் நலமாக‌ வாழமுடியாது என்பது அவரின் விதி அல்லது வரம்

தாக்குபிடித்தவர்கள் மிக சிலர்,

(சிலர் சாகாவிட்டாலும், நோய்படாவிட்டாலும் வைகோ போல மெண்டலாகி திரியும் நிலையும் உண்டு அதற்கு சாவே பரவாயில்லை)

அந்த நம்பிக்கைக்கு விஜயகாந்தும் தப்பவில்லை, திடீரென உடல் நலம் கெட்டது இன்னும் போராடிகொண்டிருக்கின்றார்

கலைஞருக்காக அவர் வீடியோவில் விட்ட கண்ணீரும், இந்தியா வந்தவுடன் ஓடிசென்று அவன் கலைஞர் சமாதியில் மண்டியிட்டு அழுததும் அவரின் குழந்தை மனதை காட்டிற்று

அவர் மீண்டு வரட்டும், தைரியமும் பொதுநலமும் மிக்க அந்த கேப்டன் மீண்டு வரட்டும்

“நீங்க திரும்பி வரணும், மறுபடியும் வரணும் பழைய விஜயகாந்தாய் வரணும்” என்ற எதிர்பார்ப்புடன் வாழ்த்துவோம்

அரசியலில் நீங்கள் தோற்கவில்லை விஜயகாந்த், தோற்றது தமிழகம். ஒரு அடுத்தகட்ட தலைவனை அடையாளம் காட்ட முடியாத பாவத்திற்கு அது வசமாய் சிக்கிற்று

ஆம் தோல்வி உங்களுடையது அல்ல, தமிழகத்தினுடையது

கொஞ்சமும் சுயநலமின்றி தமிழகத்திற்கு ஏதாவது செய்யமுடியுமா என களமிறங்கி பெரும் நஷ்டபட்டாலும் விலகாமல் இன்று உடல்நலத்தோடு போராடும் அவர் மீண்டு வர பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்

குஷ்பு ரசிகர் சங்கமும் தன் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது

வாழ்த்துக்கள் கேப்டன், உங்களுக்கு இன்னும் வாய்ப்பும் காலமும் இருக்கின்றது, மீண்டு வாருங்கள்

உங்களுக்கான காலமும் களமும் இனிதான் இருக்கின்றது.

அடித்தளித்திலிருந்து பெரும் பதவிக்கு வந்த கோபி அன்னான் இறந்துவிட்டார்

Image may contain: 1 person, close-up

ஒடுக்கபட்ட இனத்திலிருந்து மிக உயரம் பெற்றவர்கள் எல்லாம் விடைபெறும் நேரம் போலிருக்கின்றது

கலைஞர் போலவே அடித்தளித்திலிருந்து பெரும் பதவிக்கு வந்த கோபி அன்னானும் இறந்துவிட்டார்

அவர் ஆப்ரிக்காவின் கானா நாட்டுக்காரர், மிக பின் தங்கிய நாடு அது. அதுவும் கருப்பினம் என்பது உலகில் சந்தித்த போராட்டம் என்பது மிக மிக கொடுமையானது

ஐ.நா சபை எனும் மிகபெரிய பதவிக்கு வந்த ஆப்ரிக்க கருப்பர் அவர் , 1997 முதல் 2006 வரை இருமுறை அப்பதவியில் இருந்தவர் அவர்

நோபல் பரிசும் உலக அமைதிக்காக அவருக்கு கொடுகபட்டது

உண்மையில் உலக அமைதிக்காக அவர் சில காரியங்களை செய்தார் ஆயினும் ஈராக் போர் மற்றும் யுகோஸ்லேவிய சர்ச்சைகளில் அவர் பெயர் இழுபட்டது

ஈராக் போர் அவரின் சக்த்திக்கு அப்பாற்பட்டு நடந்தது, யுகோஸ்லேவிய சர்ச்சை இனவெறி சம்பந்தபட்டது

ஆப்கன் போர் உள்ளிட்ட காலங்களில் சிறப்பாக செயல்பட்டார் அன்னான்

ஏய்ட்ஸ் உலகில் மிக வேகமாக பரவிய காலங்களில் அதை தடுக்க கோபி அன்னானின் சிற்ப்பான பணி அவருக்கு பெரும் பெயரை பெற்று கொடுத்தது, பதவி சென்றபின்பும் சிரியாவில் சிறப்பு தூதராக பணியாற்றினார்

இன்று மரித்துவிட்ட அவருக்கு உலகம் பெரும் அஞ்சலி செலுத்தி வழியனுப்புகின்றது, எல்லா நாட்டு தலைவர்களும் அவருக்கு ஆழ்ந்த அஞ்சலி செலுத்திகொண்டிருக்கின்றனர்

உலக பத்திரிகைகள் இப்படி புகழாரம் சூட்டுகின்றன‌

“உலகில் எங்கெல்லாம் தேவை அல்லது பாதிப்பு ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் பாதிக்கப்பட்ட மக்களின்பால் ஆழ்ந்த இரக்கமும், அனுதாபமும் கொண்டார் அவர், அவர்களின் துயர்துடைக்க பாடுபட்டார். எப்போதும் தன்னை முன்னிறுத்தாமல், மற்றவர்களின் நலனை முன்னிறுத்தி அன்பு மற்றும் பரிவுடன் செயல்பட்டார்”

உண்மையான வரிகள் அவை

மிக ஒடுக்கபட்ட இனத்தில் இருந்து வந்து, பெரும் பதவிகளை வகித்த அந்த மனிதனுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலிகள்.

அலெக்ஸாண்டரின் வரலாறு என்ன சொல்கின்றது

ஒரு சிலர் வரலாறு திரிக்கபட்டது, அலெக்ஸாண்டர் போரஸை வென்றான் நாட்டை திருப்பிகொடுத்தான் என்பதே நிஜம், போரஸ் அவனை வெல்லவில்லை நீ வரலாற்றை திரிகாதே என அறிவுரை சொல்கின்றார்கள்

அலெக்ஸாண்டரின் வரலாறு என்ன சொல்கின்றது

அவன் மிக கடுமையானவன் அதே நேரம் தந்திரசாலி , எதிரியினை கொல்லாமல் அவன் விட்டதே இல்லை

உதாரணம் போரஸை விட அலெக்ஸாண்டருக்கு பெரும் சவால் கொடுத்தவன் தீர் அல்லது டயர் நாட்டு மன்னன், போரஸ் காட்டிய வீரத்தை விட பன்மடங்கு வீரத்தை அவன் காட்டினான்

ஆனால் 10 மாதம் அவனை போராடி வென்ற அலெக்ஸாண்டர் அவனை கொன்ற பின்னே ஓய்ந்தான்

மிக வீரமாக தன்னை எதிர்த்த டாரியஸை ஓட ஓட விரட்டி கொன்று அவன் பாக்தாத் அரண்மனையில் கால் வைத்த பின்பே கொதிப்பதை நிறுத்தினான்

அதே நேரம் டாரியஸின் உறவுகள் தன்னை கொன்றுவிடாமல் இருக்க டாரியஸின் மகளை மணம் செய்யும் தந்திரத்தையும் செய்தான்

போரஸுடன் அவன் மோதும்பொழுது நிலை என்ன?

அவனது கட்டப்பா எனும் பெரும் தோழனான பார்மானியோ போலி குற்றச்சாட்டில அலெக்ஸாண்டராலே கொல்லபட்டான்

பார்மேனியோ இல்லாத அலெக்ஸாண்டர், யுத்தத்தில் வெல்லமுடியா நிலைக்கு தள்ளபட்டான், அந்த புக்கிலேஸ் குதிரையின் சாவும் அலெக்ஸாண்டரை வாட்டிற்று

அவன் இந்தியாவில் திணறுகின்றான், பார்மேனியோ இல்லை என்ற செய்தி கிடைத்தவுடன் மாசிடோனியா, துருக்கி, எகிப்து, பாக்தாத், ஆப்கன் என பரந்த அவனி சாம்ராஜ்யத்தில் ஆங்காங்கு கிளர்ச்சி நடந்தது

அதை அடக்க தன் படையின் பெரும் பிரிவினை அனுப்பினான்

போரஸின் யானைபடையினை அவன் நெருப்புகொண்டு அடக்கபார்த்தாலும் மழைக்காலமும் சேறும் சகதியும் நிறைந்த காலசூழலால் முடியவில்லை

இப்படி பல சிக்கல்களால் சூழபட்டான் அலெக்ஸாண்டர், அவன் வீரர்களோ அதற்கு மேல் யுத்தம் புரிய மறுத்தனர்

அதற்கும் அப்பால் சந்திரகுப்த சாம்ராஜ்யம் அலெக்ஸாண்டைரை மிரட்டியது

எல்லாம் கணக்கிட்டு பார்த்த அலெக்ஸாண்டர் சமாதான ஒப்பந்தம் வரைந்து விட்டு போரஸிடம் இருந்து பின்வாங்கி சென்றுவிட்டான்

அவன் வீரன்மட்டுமல்ல மிக பெரும் தந்திரசாலி

ஐரோப்பியர் ஆசியாவினை வென்ற தங்கள் மாவீரனின் கடைசிகால போர் ஒரு இந்திய மன்னனிடம் தோற்றதாக இருக்க கூடாது என வரலாற்றை மறைத்தனர்

தீர் மன்னனையும், பாக்தாத் மன்னனையும் இன்னும் பெரும் வீரர்களை எல்லாம், அவர்களின் கடும் வீரத்தை எல்லாம் மெச்சாமல் கொன்று தீர்த்த அலெக்ஸாண்டர், போராஸின் வீரத்தை மெச்சினான் என்பதை யார் நம்புவார்கள்?

சிறு குழந்தை கூட நம்பாது, இதற்கு மேலும் அலெக்ஸாண்டர் தோற்கவில்லை என நம்புபவர்கள் நம்பட்டும்

மலேசிய இந்தோனிசிய இந்திய தமிழர் தனவனம்

Image may contain: 1 person, standing

மனிதர்களில் சுவாரஸ்யமானவர்கள் இருக்கின்றார்கள், காலம் வரும்பொழுதுதான் அவர்களை சந்திக்க முடிகின்றது.

அப்படி ஒரு மனிதரை நேற்று சந்திக்க முடிந்தது, பொதுவாக மலேசிய தமிழரில் ஏகபட்ட தும்பிகள் உண்டு அதனால் இவர் அழைக்கும் பொழுதெல்லாம் போனை கூட தவிர்த்தது உண்டு.

ஆயினும் இந்தோனேஷியாவில் இருந்து வந்திருப்பதால் நேற்று சந்தித்தாகிவிட்டது

பெரிய வியாழன் வேறு, செல்லும் பொழுது “பேக்கரி தொடங்கினாலும் தொடங்கினோம், பன் பட்டர்ன்னு டார்ச்சர் பண்றாங்க” என்ற வடிவேலு டயாலாக்கோடுதான் சென்றோம்

அவருடன் பேச தொடங்கினால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி, காரணம் பார்க்க வெகுபாமரன் போல இருந்த அவரின் வாழ்வும், அது திசைமாறி சென்ற விதமும் தூக்கிவாரி போட்டது

இன்று இந்தோனேஷியாவின் மிகபெரும் தொழிலதிபராக இருந்தாலும் மகா எளிமையாக அவர் பேச பேச அசந்துவிட்டேன். டாலர் பரிவர்த்தனை முதல் சர்வதேச அரசியல் , உலக நாட்டு கலாச்சாரம் என பலவற்றையும் விரல் நுனியில் வைத்திருக்கின்றார்

அவர் மலேசிய பிறப்பு , ஆனால் 11 வயதில் 1960களில் சொந்த ஊரான முசிறிக்கு வந்திருக்கின்றார் அங்குதான் படித்திருக்கின்றார், அப்பொழுது அரசியலிலும் குதித்திருக்கின்றார்

அன்பில் தர்மலிங்கம், மன்னை நாராயணசாமி போன்றோருடன் எல்லாம் நெருங்கி பழகி இருக்கின்றார், சுத்தமான திமுக‌

அதுவும் 1970 முதல் 1977 வரையான காலங்களில் கடும் திமுக பிரச்சாரம் எல்லாம் செய்திருக்கின்றார், அவர் இதயம் இப்பொழுதும் கலைஞர் என்றே துடிப்பதை உணரமுடிகின்றது

1980ல் மலேசியா திரும்பினார், அவருக்கு அப்பொழுது அங்கு ஒட்டமுடியவில்லை. தமிழகத்தில் வளர்ந்த பலருக்கு மலேசிய தமிழரோடு எளிதில் ஒட்டமுடியாது அச்சிக்கல் அவருக்கும் வந்ததால் ஹாங்காங் சென்றிருக்கின்றார்

அது பிரிட்டனின் ஹாங்காங் என்பதால் அவருக்கு ஐரோப்பா எளிதாயிற்று, அங்கு ஆஸ்திரியாவில் 4 வருடம் படித்திருக்கின்றார், அதன் பின் ஜெர்மனியில் உலோகவியல் படித்து அமெரிக்காவில் 4 வருட வேலை

இக்காலங்களில் உலகெல்லாம் சுற்றி இருக்கின்றார், அவர் காலடி படாத நாடு இல்லை, பின்பு கார்மென்ட் தொழிலுக்கு தோதான நாடு என இந்தோனேஷியாவினை கண்டு அங்கு தொழிற்சாலை அமைத்து செட்டில் ஆகிவிட்டார்

மனைவி சிங்கபூர்காரர், அந்நாட்டு உள்துறையில் பெரும் பதவி வகிப்பவர்

மனிதரிடம் பேச பேச விஷயங்கள் கொட்டி வந்தன, அபூர்வ தகவல்கள், அட்டகாசமான உண்மைகள். விட்டால் 1 வருடம் தூங்காமல் பேசலாம் அவ்வளவு நுட்பமான தகவல்கள்

அவருடன் பேசியபின் இந்தோனேஷியா பற்றிய அபிமானம் மாறியது, அந்நாடு பிறக்கும் குழந்தைக்கெல்லாம் 1 ஏக்கர் கொடுக்குமாம், இன்னும் சலுகைகள் ஏராளம் உண்டாம்

மிக பெரிய பெட்ரோல் ரிசர்வ் அங்குதான் உண்டு. ஆனால் சர்வதேச அரசியல் அதனை முடக்கி வைத்திருக்கின்றது என்றார், பின்னாளில் இந்தோனேஷியா அரபுநாடுகள் போல் ஆகலாம், இந்தோனேஷியா பின் தங்க அங்கு மக்களின் பேராசை இன்மையும் இன்னொரு காரணம், அமைதியான இயல்பான வாழ்க்கை அவர்களுடையது

கார்மென்ட் தொழிலில் அவர்கள்தான் முண்ணணி

லத்தீன் அமெரிக்கா பற்றி பேச்சு வந்தது, இவருக்கு அங்கும் தொழில்கள் உண்டு, அது ஒருமாதிரி இமேஜ் உள்ள நாடுகள் என்பதால் அதுபற்றி கேட்டால் சொன்னார்

மெக்சிகோ போதை பழக்கமும், குண்டர் கும்பலும் உள்ள நாடு என்பார்கள், ஆனால் எல்லா உணவகங்களிலும் தனி மேஜை இருக்கும், எதற்கு என்றால் உணவில்லாதோர் அங்கு வந்து உண்ணலாம், அதை கவனிக்கும் மற்ற மேஜையில் சாப்பிடும் மக்கள் அவர்களுக்கும் சேர்த்து பணம் கொடுப்பார்கள்

இதனால் அங்கு பிச்சைக்காரர் குறைவு, தாங்கள் சாப்பிடும் உணவை வசதியற்றோரும் சாப்பிடவேண்டும் என்ற உயர்ந்த உள்ளம் அவர்களிடம் உண்டு என்றார்

லத்தீன் அமெரிக்க நாடுகளை சர்வதேச அரசியலும் அவர்கள் ஊடகங்களுமே அப்படி பேச வைக்கின்றன என்பது அவர் கருத்து

சீனா, ஜப்பான் பற்றி அவர் பேச பேச ஆச்சரியாய் இருந்தது. உண்மையில் பெரும் அனுபவம் வாய்ந்த நபர்

ஒருவழியாக பேசிவிடைபெறும் பொழுது கேட்டேன், உலகெல்லாம் சுற்றி இருக்கின்றீர்கள், பல தொழில்களை செய்து சம்பாதித்திருக்கின்றீர்கள், உங்கள் வாழ்வின் மகிழ்வான காலம், துக்கமான காலம் எது?

அவர் சொன்னார், “நான் அன்பில் தர்மலிங்கத்தோடு உழைத்த அந்த 1970களின் திமுக பிரச்சார காலங்கள் என் வாழ்வின் மகிழ்வான காலம்

1977ல் திமுக தோற்றது என் வாழ்வின் மிக சோகமான காலம்” சொல்லும்பொழுதே அவர் குரல் உடைந்தது

மனிதர் மனமார திமுகவினை நேசிக்கின்றார்.

கலைஞரை சந்தித்தீர்களா என்றேன்? “நான் இளைஞனாக திமுக வெறியில் இருந்தபொழுது தள்ளி இருந்து பார்த்தேன், அதன் பின் நானும் வெளியேறிவிட்டேன்”

“ஏன் இனி சந்திக்க கூடாதா?” என்றேன், அவர் மெதுவாக சொன்னார்

“சந்திக்கலாம், ஆனால் பார்த்துவிட்டு உயிரோடு திரும்புவேனா என்ற சந்தேகம் இருக்கின்றது, எப்படி எல்லாம் மாபெரும் நெருப்பை மூட்டிய மனிதன் அவர். உணர்ச்சி கொடுத்த கடவுள் அவர். இக்கோலத்தில் அவரை பார்த்துவிட்டு நெஞ்சு வெடிக்காமல் திரும்ப முடியும் என்கின்றீர்களா?”

கலைஞர் எனும் மனிதர் எத்தனை கோடி மனிதர்களை பாதித்திருக்கின்றார், உலகமெல்லாம் சுற்றிய மனிதனை கூட இளவயதில் பாதித்த தன் நினைவுகளால் கட்டி போட்டிருக்கின்றார்

நிச்சயமாக சொல்லலாம், இம்மாதிரி தொண்டர்கள்தான் திமுகவின் பலம். 1960களில் திமுக எவ்வளவு பெரும் பாதிப்பினை உண்டு பண்ணியிருக்கின்றது என்பது தெளிவாக புரிகின்றது

அவருடன் பேசிகொண்டிருந்த பொழுது அந்த அன்பில் தர்மலிங்கம் காலத்து திமுகவில் வாழ்ந்தது போலவே இருந்தது

நள்ளிரவு வரை நீண்ட சந்திப்பு பிரிய மனமில்லாமல் முடிந்தது, கிளம்பும் பொழுதுதுதான் அவர் காரில் வரவில்லை என்பது புரிந்தது

இந்த கோலாலம்பூரில் எல்லோரும் கார் வைத்திருப்பார்கள், அவர் இந்தோனேஷியாவில் இருந்து இங்கு பிரபல கார் கம்பெனி அழைத்ததால் வந்தவர், ஒரு கார் என்ன? பல கார்கள் கிடைத்திருக்கும்

ஆனால் அவரோ தெருவெல்லாம் என்னோடு நடந்தார், வாடகைக்கு பென்ஸ் கூட கிடைகுக்குமே ஏன் காரில் வரவில்லை என்றேன்?

அவர் சொன்னார் “ஸ்டான்லி ராஜன், இதே கோலாலம்பூரில் சைக்கிள் கூட இல்லாமல் சிறுவயதில் நடந்தேன், பின்பு வேலை தேடி வந்தபொழுதும் நடந்தேன்

இங்கு கார்வோட்டி பழகினால் அந்த நினைவு அற்றுபோகும், அந்த நினைவோடு இங்கு நடந்து திரிவது ஒரு சுகம். அதில் ஒரு திருப்தி உண்டு, அதனால்தான் கோலாலம்பூர் தெருக்களில் காரில் வருவதில்லை, அந்த இளம் நினைவுகளுக்கன மரியாதை அது”

அதற்கு மேல் ஏதும் கேட்க தோன்றவில்லை, யாரோ கன்னத்தில் அடித்தது போல் இருந்தது

மிகபெரும் பண்பாளரை சந்தித்த மகிழ்ச்சியில் திரும்பினேன், எவ்வளவு பெரும் அனுபவசாலி? எவ்வளவு பெரும் தொழிலதிபர்

ஆனால் எவ்வளவு எளிமை, எவ்வளவு அமைதி?

கேட்டால் நான் கலைஞர் தொண்டன் சார், தலைவன் வழி இதுதான் என அமைதியாக சொல்லி கடந்து செல்கின்றார்

கலைஞருக்கு இதனை விட என்ன பெருமை வேண்டும்?

முகநூலில் இப்படிபட்ட நண்பர்களும் கிடைத்தார்களா? என்றால் எனக்கே ஆச்சரியமாக இருக்கின்றது

எழுதி என்ன கிழித்தோம் என அடிக்கடி சலிப்புறும் மனம், இப்படிபட்ட பெரும் மனிதர்கள் நண்பர்களாக கிடைத்தது எழுதியதால்தான் என ஆறுதலும் கொண்டது

காலம் அவருக்கு எல்லா நலமும் வளமும் அருளட்டும், அவரின் மனதிற்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

 
 

ஜார்ஜ் வாஷிங்டன், அமெரிக்கர்களின் மிக பெரும் கவுரவம்

Image may contain: 1 person, close-up

அவர் ஒரு சாதாரண விவசாயி, அமெரிக்க தீவில் பிரிட்டிசாரும் பிரான்சும் மோதிகொண்ட காலத்தில் பிரிட்டன்பக்கமாக நின்று போரிட்டவர்

ஓரளவு அறிவாளி அதனால் களத்தில் பிரிட்டன் பிரான்ஸும் செவ்விந்தியர்களும் இணைந்த படையினை வெல்வது கடினம் என சொன்னவர், பிரிட்டானியருக்கும் அவருக்கும் சரிவரவில்லை, ஆயினும் ராணுவவீரனாக தொடர்ந்தார். பெரும் தோல்வியில் தெய்வாதீனமாக உயிர்தப்பியபின் ராணுவம் எல்லாம் வேண்டாம் என முடிவெடுத்து மறுபடி விவசாயி ஆனார்

அன்று அவரின் விவசாய பண்ணை கிட்டதட்ட 8 ஆயிரம் ஏக்கர் என்கின்றது வரலாறு. அதாவது சசிகலா பாணியில் வளைத்தவர் அல்ல. அமெரிக்கா மிகபெரும் தேசம் என்பதால் நிலம் சிக்கலே இல்லை. மக்கள் தொகை குறைவு என்பதால் உழைப்பதுதான் சிக்கல்

அக்காலத்திலே 8 ஆயிரம் ஏக்கரை பராமரித்திருகின்றார் என்றால் பெரிய விஷயம், முன்னாள் ராணுவத்தார் என்பதால் நல்ல மதிப்பும் இருந்திருக்கின்றது

பின்பு பிரிட்டிசார் வரிவசூல் தொடர்பாக கறாராக நடக்க, அவருக்கும் பிரிட்டிசாருக்கும் மோதிற்று, மோதல் யுத்தமானது உள்நாட்டு போர் வெடித்தது

முன்பே பிரிட்டன் ஆர்மியில் இருந்ததால் அவர்களின் பலகீனத்தை நுனியில் வைத்திருந்தவருக்கு வெற்றி குவிந்தது, உச்சமாக பாஸ்டனில் அமெரிக்க பொருட்கள் எல்லாம் அடித்து நொறுக்கபட்டு புரட்சி வெடித்தது, இதற்கு பிரான்ஸ் ஆசியும் உண்டு

அமெரிக்க மக்களை ஓரணியில் திரட்டி போராட்டத்தை மிக வெற்றிகரமாக முன்னெடுத்த சாதனையினை வாஷிங்டன் செய்தார். அவராக படை திரட்டினார் பயிற்சி அளித்தார், பிரான்சின் உதவினையும் பயன்படுத்திகொண்டார்.

அமெரிக்க எழுச்சி அவர் கொடுத்தது.

ஒரே மொழியாக இருந்தால் ஒற்றுமையாக இருக்கலாம், ஒரே இனமாக இருந்தால் வாழ்வாங்கு வாழலாம் என்பதெலலம் சரிவராது

அமெரிக்கர்கள் பிரிட்டன் எனும் தேசிய இனத்து பிள்ளைகள்தான், ஆங்கிலம் பேசியவர்கள்தான், பின் பிரிவும் போரும் எங்கிருந்து வந்தது? மக்கள் அதிருப்தி அடைந்த பின் தேசிய இனமாவது, மொழியாவது?

அமெரிக்க விடுதலைப்போர் அதனைத்தான் சொன்னது, ஒரே மொழி ஒரே இனம் ஆயினும் ஒற்றுமையாய் வாழ்வது கடினம்.

இனி அமெரிக்காவினை ஆளமுடியாது முடிந்தால் வியாபாரம் செய்யலாம் என அமெரிக்காவிற்கு சுதந்திரம் கொடுத்துவிட்டு கப்பல் எறியது பிரிட்டன்

அதன் பின் புதிய அமெரிக்காவினை உருவாக்கினார் அவர், இன்றைய அமெரிக்காவின் அடித்தளம் அவர் இட்டது

ஜார்ஜ் வாஷிங்டன், அமெரிக்கர்களின் மிக பெரும் கவுரவம்

தேர்தலில் அவரே வென்றார், சர்வாதிகாரியாக வாழும் வாய்ப்புத்தான் ஆனால் ஒருவர் இருமுறைக்கு மேல் ஜனாதிபதியாக இருக்க கூடாது எனும் சட்டத்தை அவர்தான் எழுதினார், இன்றளவும் அது பின்பற்றபடுகின்றது

உலகம் மன்னர் ஆட்சியில் இருந்தபொழுது ஜனநாயக ஆட்சி எப்படி இருக்கவேண்டும் என உருவாக்கி காட்டியவர் அந்த வாஷிங்டன், அவரின் அந்த உருவாக்கமே பின்னர் உலகம் மாறியதற்கு முதல் காரணம்

மனிதர் நல்ல கைராசிக்காரர்

அவர் தொட்டதெல்லாம் துலங்கியிருக்கின்றது. அவர் உருவாக்கிய அமெரிக்கா இன்று மாபெரும் வல்லரசு. அவர் படம் சுமக்கும் டாலர் உலகின் பொருளாதார ரத்தம்

மேலாக அவர் உருவாக்கிய நகரான வாஷிங்டன் இன்று உலக நாடுகளின் தலையெழுத்தை நிர்மானிக்கும் நகரம். ஏறகுறைய ஒவ்வொரு மனிதனின் நிலையினையும் அந்த நகர் நேரடியாக அல்லது மறைமுகமாக தீர்மானிக்கின்றது

அந்த மனிதருக்கு ஜாதகம் அப்படி. அதே நேரம் அவரின் மிக உன்னதமான தியாக உழைப்பும், அவரிடம் இருந்த ஜனநாயகமும் வாழ்த்தபட வேண்டியது

இன்று அவரின் நினைவுநாள் அத்தேசம் அவரை நன்றியோடு நினைத்து வணங்குகின்றது அது வாழும்

இங்கோ ராமசந்திரன் சிலையினை சுற்றி சுற்றி வணங்கி கொண்டிருக்கின்றார்கள், இங்கு எது உருப்படும்?

 

காலத்தினால் வந்தவன், காலத்தை வென்றவன்

Image may contain: one or more people and people sittingகால சூழலுக்கு தக்கவாறே அறிஞர்கள் தோன்றுவார்கள், அக்கால சூழ்நிலைக்கு தக்க அறிவுரைகளை அல்லது போராட்டங்களை நடத்துவார்கள்.

இயேசு கிறிஸ்து இன்று போதித்துகொண்டிருந்தால் நிச்சயம் யூத மதத்தின் காட்டுமிராண்டிதனத்தை சாடமாட்டார், அவர்கள் அதிலிருந்து நிறைய‌ மீண்டு வந்தாயிற்று . ஆனால் பாலஸ்தீன் மீதான அதன் கொடூரத்தை நிச்சயம் அவர் சாடுவார்.

புத்தர் இன்றுவந்தால் மாட்டுகறி தின்னவேண்டாம் எனும் கூட்டத்திலா சேர்வார்? தீண்டாமை போன்ற பாகுபாடுகளை நிச்சயம் கண்டிப்பார், இலங்கையில், பர்மாவில் அட்டகாசம் செய்யும் புத்தமத்தை நிச்சயம் கலைத்தே விட்டு அவர்களை மதமற்றோர் பட்டியலில் சேர்த்துவிடுவார்.

தென் தமிழகத்தை பொறுத்தவரை நாம் கண்ட பெரும் மனித உரிமை போராளி பெரியார்.

ஆயிரம் சர்ச்சைகள் அவர்மேல் இருக்கலாம், ஆனால் மனிதன் மனிதனாக வாழ சாதி கொடுமை தடையானால், அந்த சாதிக்கு மதம்தான் காரணம் என்றால்? ஆண்டவனே வேண்டாம் எனும் தைரியம் அவருக்குத்தான் வந்தது.

அந்தகாலம் விநோதமானது, பிரிட்டிசார் ஆண்டாலும் உண்மையில் இந்தியர்களை நிர்வகித்தது ஒரு உயர்சமூகம், அதுதான் சகல விதங்களில் உயர்ந்தது என்றும், இறைவனின் பிரநிதிகள் நாங்கள் என்பதிலும், அந்த‌ விதத்தில் மற்ற சாதியினர் அறிவுபெற்றுவிட கூடாது என்பதிலும் கவனமாக இருந்தது.

அவர்கள் படிப்பதுதான் கல்வி, அவர்களுக்கு தனி ஆலயம், தனி உணவகம், தனிபாதை, அட்டகாசம், தாளாத அட்டகாசம். கிட்டதட்ட நபிபெருமான் காலத்தில் மற்ற மக்களை யூதர்கள் ஒதுக்கிவைத்த அதே நிலை.

யூதனாவது அவன் மதத்தில் குறுக்கிடும் வரை கொடியவன் அல்ல, ஆனால் இங்கு சாதியின் பெயரால் சக மனிதனை விலங்குகளை விட, அவன் வீட்டில் வளர்க்கும் பசுமாட்டின் சாணத்தைவிட இழிவாக பார்த்த்வர்களை என்ன சொல்வது?

மதத்தை மதத்தால் எதிர்த்தால் அது பெரும் வரலாற்றுபிழை, இன்று உலகில் நடக்கும் மகாகலவரங்களுக்கு காரணம் அதுவே. இதனை அற்புதமாக கண்டுகொண்ட பாமரந்தான் ஈரோட்டு ராமசாமி.

மதத்தை மானுடத்தால் அடிக்கலாம், மனிதன் கல்வி கற்று, மானத்தோடு வாழ்ந்தால் மதத்தின் உண்மை அவனுக்கு தெரியவரும், யாவரும் சமம், மானிட சமூகம் மதத்தால் அல்ல அறிவால் உயரவேண்டியது என்பது அவர்கொள்கை.
கிட்டதட்ட இந்திய எதார்த்தம் அவருக்கு புரிந்தபொழுது வயது 50 நெருங்கிற்று, ஒரு மனிதன் ஒய்வெடுக்கும் வயதில்தான் பெரியார் சமூகத்தை சீர் திருத்த தொடங்கினார்.

இப்பொழுது சமுதாய நலனை 4 அல்லக்கைகளை கொண்டு கூட்டம் போட்டு சொல்லமுடிகின்றது, பலருக்கு முகநூலிலே கணல் தெறிக்க, விரல்கள் தேய தேய‌ புரட்சி செய்ய முடிகின்றது.

பெரியாரின் காலம் அப்படி அல்ல, கடவுளின் பிரதிநிதிகளை எதிர்த்து “கடவுள் இல்லை மனிதம் உண்டு” என முழங்குவது சாமான்யம் அல்ல (இன்றும் தமிழகதில் டிராபிக் ராமசாமி நிலை தெரியும்), அவர் சிங்கமென முழங்கினார்,
பாமரர்களிடம் பாமர தமிழில் விளக்கினார், வாசிக்க தெரிந்தவருக்கு பத்திரிகை நடத்தி விளங்க வைத்தார். அன்றைய சென்னை ராஜதானியில் அய்யர்,அய்யங்கார்,நம்பூதிரி, சாஸ்திரி என ஆட்டம்போட்ட அனைவருக்கும் சாட்டையடி கொடுத்தார்.

இன்றைய வாசிக்கும் பழக்கம் அவர் கொடுத்தது, இன்று முகநூலிலோ அல்லது எதிலோ சில எதிர்குரல்கள் வருகிறது என்றால் அதனை தொடங்கிவைத்த பிதாமகன் அவர்.

பெண்ணடிமைக்கு எதிராக அணலாய் எழுந்த குரல் அவருடையது, செயல் அவருடையது, தேவதாசி கொடுமைக்காக சட்டமன்றத்தில் அதனை ஆதரித்த காங்கிரஸ் பெரியவரை எதிர்த்து “உங்கள் வீட்டுபெண் அப்படி இருக்கட்டும், எமது பெண்ணக் வாழவிடுங்கள்” என சொன்ன குரலின் அடிநாதம் பெரியார்.

சொன்னால் சொல்லிகொண்டே போகலாம், ஆனால் ஆட்சியை மாற்ற(கைபற்ற) விரும்பியர்களிடம் அவர் சொன்னது, ஆட்சி நமது குறிக்கோள் அல்ல, நாம் விரும்புவது சமூக மாற்றம், அதில் இறுதிவரை நின்றார். (சமூகமாவது மண்ணாவது என ஒரு கும்பல் ஆட்சி பிடித்து பெரியார் பெயரினை கெடுத்தது, இன்னும் கெடுத்துகொண்டிருப்பது வேறுவிஷயம்)

ஆனால் அவர் தள்ளாத வயதிலும் மூத்திர சட்டியை சுமந்து, தமிழக மூலை முடுக்கெல்லாம் போதித்துகொண்டுதான் இருந்தார்.

மேல்நாட்டில் ஒரு சபை உண்டு, அவர்கள் கொள்கை விசித்திரமானது

பைபிளின் ஆதிஆகமத்தில் கடவுள் அறிவுகொடுக்கும் பழத்தை தடை செய்வார், அதாவது மனிதன் அறிவுபெறுவது அவருக்கு பிடிக்கவில்லை,
ஆனால் கொடியவன் என்றாலும் மனிதன் அறிவுபெறட்டும் என கனி கொடுத்தவன் அதாவது மனிதன் அறிவுபெற்வேண்டுமென்று அவன் தான் ஆசைபட்டானாம்.

அப்படியே மனிதன் அறிவுபெற்றான், உலகம் மாறிற்று என அவனை கொண்டாடும் மதமே உண்டு.

அதுவேறு விஷயம்.

பொல்லாத சாத்தானையே கொண்டாடும் உலகில், மிக‌கொடிய கட்டுபாடுகளால் மதத்தின் பெயரால் மனிதனை மிருகமாக்கிய மத்தினை கண்டித்து மனிதனுக்கு கல்வியும் சிந்தனையும் தேவை என முழங்கிய பாமர மனிதனை கொண்டாடுவதில் என்ன தவறு காணமுடியும்?

சாக்ரடீசும்,லிங்கனும்,லெனினும்,புத்தனும்,மகாவீரரும், பெரியாரும், வேறு அல்ல. எல்லாமே மனிதனை மனிதனை மனிதனாக நடத்துங்கள் என சொல்லிய மகான்கள்.

இன்று நடக்கும் கூத்துகளோ அல்லது சில கீழ்தரமான பெரியார் எதிர்ப்புக்களோ கண்டு உண்மையான பெரியார் விரும்பிகள் சினமடையமாட்டார்கள், காரணம் அவர் கடந்த அவமானமும்,நெருப்பாறும் அப்படியானவை.
ஒருமுறை பெண்ணுரிமை பற்றியும் கற்பு இன்னபிற பெண்கள் நிலைபற்றி அச்சிலேற்றமுடியாத வார்த்தையை அவரிடம் கேட்டார்கள்.

அமைதியாக சொன்னார் “என் வீட்டுபெண் எனக்கு அடிமை அல்ல, அவள் வாழ்க்கையை சுதந்திரமாய் வாழ அனுமதிப்பேன், அது அவள்விருப்பம்”,
அக்காலத்தில் இந்தவார்த்தை பெரியாரை தவிர யாருக்கும் சாத்தியமில்லை.

உற்சாகமாக சிலர் இன்று அவரை அவமானபடுத்தலாம், இன்று மதத்தின் பெயரால் அவர் படத்தினை இழிவுபடுத்துபவர் ஒன்றை நினைவு கொள்ளவேண்டும்.

அதாவது இந்தியாவில் இவர்கள் நம்பிகொண்டிருப்பது போல ஒரு மதபுரட்சி நடக்கலாம், அப்பொழுது சாதி இல்லா இந்துமதம் அமைப்பீர்களாயின் அது நிச்சயம் பெரியாரின் வெற்றி.

அப்படி அல்லாமல் சாதியோடு இந்துமதம் அமைப்பீராயின் நிச்சயம் இன்னொருவன் பின்னாளில் போராட வருவான், அவன் படிக்கும் மேஜையின் மீது பெரியார் சிரித்துகொண்டிருப்பார்.

பெரியார் என்பது ஒரு தென்னிந்திய மானிடபுரட்சியின் அடையாளம், அவர் சிந்தனையின் இமயம், பல காட்டாறுகள் அதில் உருவாகுமே தவிர அது அசையாது.
இந்துமதம் சாதியை ஒழித்தாலும் அல்லது எழுச்சிபெற்று ஓளிவீசி சாதியால் சரிந்தாலும் அதில் அந்த தாடிக்கார கிழவன் முகம் நிச்சயம் தெரியும்.

அதனால்தான் உறுதியாக சொல்லமுடியும் அவருக்கு ஒருகாலமும் தோல்வியில்லை, இல்லவே இல்லை.
காரணம் அவர் நேசித்தது ம‌தமோ,பதவியோ,இன துவேஷமோ அல்ல‌ மானுடனத்தினை.

மானுடத்தை நேசிப்பவர்கள் வரலாற்றில் அழியா இடம்பிடித்தவர்கள்,பல மகான்களை சுமந்த இந்த உலகவரலாறு இதனை அழுத்தமாக பதிந்துவைத்திருக்கின்றது.

பெரியாரை பழிப்பவர்கள் ஒன்று அவரை புரிந்து கொள்ளோதார இருக்க முடியும் அல்லது அந்த கோஷ்டியாக மடுமே இருக்க முடியும்.

அந்த கலகக்காரன் காலத்தினால் வந்தவன், காலத்தை வென்றவன், எக்காலமும் இங்கு தேவைபடுபவன்.

 

நேதாஜியின் நினைவு நாள்

Image may contain: 1 person

நிச்சயமாக அவர் ஒரு ஒப்பற்ற போராளி, காலத்தை மிக நுட்பமாக கணித்து விடுதலை போராட்டத்தை மாற்றியவர், அவரது திட்டம் மட்டும் வெற்றிபெற்றிருக்குமானால் இன்று இந்தியாவின் தலைவிதி மாறி இருக்கும், ஆனால் ஜப்பானின் அணுகுண்டு தாக்குதலும், ஹிட்லரை வீழ்த்திய ரஷ்ய செஞ்சேனையின் மாபெரும் வெற்றியும் அவரது தலைவிதியினை மாற்றிற்று

அந்தகாலத்திலே கலெக்டருக்கு படித்தவர், ஆனால் பட்டத்தினை தூக்கி எறிந்து விட்டு காங்கிரசில் புகுந்தார். வெள்ளையன் மனதினை மட்டும் அடி, அஹிம்சையால் ஆழ்மனதினை தொடலாம் எனும் காந்தீய இந்திய ஞான மரபெல்லாம் அவருக்கு ஒத்துவரவில்லை, காந்தி வேறுமாதிரியானர். அவர் போராட்ட வடிவம் வேறு.

வெள்ளையன் இப்படி சிந்தித்தான், காந்தியால் நமக்கு பெரும் நெருக்கடி இல்லை, ஏதோ இவர் சொன்னால் மொத்த இந்திய மக்களும் கேட்கின்றார்கள், ஆனால் இவரை முடிந்தவரை சமாளித்துவிடலாம்,

ஆனால் போஸ் அப்படி அல்ல, துடிப்பானவர், விட்டால் சட்டை காலரை பிடித்து உலுக்குவார், ம்ம்ம் தூக்கிபோடு உள்ளே.

எப்படியோ தப்பினார் போஸ், ஆனால் உடனே படை திரட்டி, சயனைடை கழுத்தில் கட்டி, பின் வந்தவன் எல்லோர் மேலும் தற்கொலை குண்டுகட்டி ஏவி விடவில்லை. அப்படி செய்திருந்தால் இந்தியாவின் ஒவ்வொரு நகரமும் ஜாலியன் வாலாபாக் ஆகியிருக்கும்,

அப்படி காந்தியினையும் துரோகி என அறிவித்து கொன்றுவிட்டு, வரிசையாக நேரு, படேல் என எல்லோரையும் மேலே அனுப்ப முயற்சிக்கவில்லை.

அது முட்டாள்களின் வேலை.

காந்தி ஒருபக்கம் போராடட்டும், நாம் ஒரு பக்கம் போராடுவோம் என்பதுதான் அவர் வழி.

பிரிட்டன் பெரும் ராணுவம், இன்னொரு எதிரியுடன் சேர்ந்துதான் அவர்களை விரட்டவேண்டும் எனும் திட்டத்தோடு களமிறங்கினார், ஹிட்லரிடம் உதவி கோரினார். ஹிட்லருக்கு இந்தியா மேல் பெரும் அபிமானமில்லை. இந்தியாவின் சென்பகராமனையே அவர் போட்டு தள்ளிய சர்ச்சை உண்டு, ஹிட்லரை பொறுத்தவரை இந்தியர்கள் தலமைபதவிக்கு தகுதியற்றவர்கள்.

ஆரியர்கள் மட்டும் ஆள பிறந்தவர்கள்

லண்டனை பிடித்தால் இந்தியா எனக்கு, இவர் யார் இடையில் ஆள்வதற்கு என்று கூட ஹிட்லரின் ஆரிய மண்டையில் ஓடியிருக்கலாம், ஆனால் ஒரு கூட்டணிக்காக அவர் சுயநலத்தோடு போஸினை அரவணைத்திருக்கலாம் என்பார்கள், வாய்ப்பு உண்டு, மகா மர்மம் நிறைந்தது வரலாறு.

ஆனாலும் ஹிட்லரின் கூட்டாளியான ஜப்பான் அவருக்கு ஆதரவளித்து, மலேய முற்றுகையின் போது, பயிற்சியும் அளித்து, கிட்டதட்ட வங்கத்தில் போஸ் படையோடு வந்துவிட்ட நிலையில்தான் அணுகுண்டு விழுந்து, ஜப்பான் ஓடிபோயிற்று, போஸும் ராணுவத்தை கலைத்தார், அதோடு இந்திய சுதந்திர நாளும் நெருங்கிற்று, போஸ் தலைமறைவாக இருந்தார்.

சுதந்திர இந்தியா தனக்கு அடைக்கலம் தரும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.

இந்திய சுதந்திர ஒப்பந்தபடி, போஸ் என்பவர் நாசிக்களோடு , ஜப்பானியரோடு சேர்ந்து பிரிட்டனை எதிர்த்த போர் குற்றவாளி, அவரை ஒப்படைக்கவேண்டியது இந்திய கடமை என்ற அறிக்கைகள் வந்த கொஞ்சநாளில் போஸ் தைவானில் விபத்தில் இறந்துவிட்டதாக செய்திகள் வந்ததன, அதிலிருந்து தொடங்கின குழப்பம்.

இனி வல்லரசுகள் தன்னை விடாது என்று அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூட செய்தி உண்டு, உறுதிபடுத்தபடவில்லை.

வங்கத்தை அடுத்து போஸுக்கு மகா ஆதரவு கொடுத்தது தமிழகம், பசும்பொன் திரு.முத்துராமலிங்கம் போன்றவர்கள் அவர் உயிருடன் இருப்பதாகவே மேடைகளில் முழங்கினார்கள். சர்ச்சை தீர்ந்தபாடில்லை.

ஆனால் பல ரகசியங்கள் காக்கபட்டன, அவை வெளியிடபட்டால் உள்நாட்டில் சிக்கல்கள் வருவதை கூட எப்படியாவது சமாளிகலாம், ஆனால் வெளிநாட்டு சிக்கல் வந்தால் எப்படி சமாளிப்பது? எனும் நோக்கில் பல விஷயங்கள் மவுனிக்கபட்டது.

இந்தியாவின் ஒப்பற்ற போராளிதான் மக்கள் தலைவர் நேதாஜி, ஆனால் சேர்ந்த இடம் சரி இல்லை. ஹிட்லர், ஜப்பானிய கூட்டத்தில் அவர் இணைந்தது உலக கண்களை உறுத்தியது. ஹிட்லர் இறந்தாலும் அவர் உடல் சிக்கவே இல்லை. அவர் இருப்பதாகவும் நாசிக்கள் ஒன்று கூடுவதாகவும் அந்த ரகசிய வலைப்பின்னலில் நேதாஜி இருப்பதாகவும் சந்தேகிக்கபட்ட கதைகள் வந்தன‌.

மொத்தத்தில் அவர் விபத்தில் இறந்திருந்தால் இந்தியருக்கு இழப்பு ஆனால் வல்லரசுகளுக்கு கொண்டாட்டம். ஒருவேளை பிழைத்திருந்து இந்தியா வந்தால், மாபெரும் மக்கள் திரள் அவரை ஆட்சியில் அமைய வைக்கும் சாத்தியம் இருந்தது, அவரின் செல்வாக்கு அப்படியானது.

காரணம் அப்பொழுது நேதாஜியின் வயது வெறும் 48.

அப்படி அமரும் பட்சத்தில் அவர் என்ன செய்வார்? ஒரு காலத்தில் தனக்கு உதவிய ஜெர்மானியருக்கும், ஜப்பானியருக்கும் மறைமுகமாக உதவுவார், நிச்சயம் லண்டனை பழிவாங்குவார் என ஏகபட்ட சாத்தியங்களை அவர்களாகவே உருவாக்கினார்கள்.

ஆச்சரியமாக சோவியத் யூனியனும் அதில் சேர்ந்துகொண்டது, காரணம் ஹிட்லரால் அதிகம் பாதிக்கபட்டவர்கள் அவர்கள்தான். ஹிட்லரின் கூட்டாளிகளை தேடிகொண்டே இருந்தனர், சீனா ஜப்பானிடம் பட்ட அடி கொஞ்சமல்ல, அதற்கும் ஜப்பானிய கூட்டாளியான போஸ் எதிரியானார்.

ஆக பல நாடுகளின் எதிரி என அவர் விதி மாறிற்று.

உறுதிபடுத்தபடாத ஆனால் வலுவான ஆதாரம் கொண்ட செய்தி, சீன எல்லையில் சுற்றிய நேதாஜி, ரஷ்ய உளவுதுறை அந்நாளைய கேஜிபி மூலம் கிழக்கு ரஷ்யாவில் வீட்டுசிறையில் வைக்கபட்டார் என்பது.

இந்த செய்தி பல காலமாக தொடர்ந்து வந்தது, ஆனால் உளவுதுறைகள் அவர் இந்த குகை சாமியாராக இருக்கலாம், அதோ அந்த விவசாயி அவர்தான் என்றெல்லாம் கதைகள் கட்டி திசை திருப்பின.

நேதாஜியின் மனைவியும், மகளும் இந்த வாதங்களை ஆணித்தரமாக வைத்துபார்த்தனர், ஆனால் ஒரு முடிவும் கிடைக்கவில்லை.

வங்கத்து மம்தா அரசு சில நேதாஜி ரகசியங்களை மத்திய அரசின் பிண்ணணியில் வெளியிட்டு, அந்த விபத்திற்கு பின்னும் நேதாஜி வாழ்ந்த ஆதாரம் உண்டு என முணுமுணுத்திருக்கின்றது,

மத்திய அரசு இதனை பெரும் செய்தியாக்கிவிட்டு அமைதியாக கண்காணிக்கின்றது, இவ்வளவு சொல்பவர்கள் அப்படியானால் அவர் எங்கு வாழ்ந்தார்? எப்படி இறந்தார் என்று சொல்லவேண்டும் அல்லவா? அது இவர்களால் முடியாது.

காரணம் அது நிச்சயம் சர்வதேச குழப்பங்களை ஏற்படுத்தும், அது எவ்வளவு தூரம் போகுமென்றால், கென்னடி கொலையில் ஆனானபட்ட அமெரிக்கா கையை பிசைந்த நிலை வரை செல்லும்.

அது இவர்களுக்கும் தெரியும், அப்படி உண்மை தெரியவேண்டுமென்றால் இவர்கள் குட்டிகரணம் அடிக்கவேண்டிய இடம் வேறுநாடுகள். உண்மையில் நேதாஜி மீது அக்கறை இருந்தால் அதனை செய்வார்கள், ஆனால் இவர்கள் நோக்கம் என்ன?

அரசியல் எல்லாம் அரசியல்

இவர்கள் சொல்ல வருவது எல்லாம் நேருதான் காரணம், நேரு என்றால் காங்கிரஸ்தான் காரணம், காங்கிரஸ் ஒழிக , இவ்வளவுதான் விஷயம்.

இதுதான் உண்மை, கேட்கவேண்டிய இடத்தில் கேட்கவே மாட்டார்கள்.

சுவிஸ் அரசை மிரட்டி ஆளுக்கு 15 லட்சம் தருவோம் என்றவர்கள், அதன்பின் சுவிஸ் சாக்லேட்டினை கூட இந்தியாவில் தடை செய்யவில்லை, இவர்கள் எப்படி பெரும் வல்லரசுகளை பகைத்து நேதாஜி மர்மத்தை உடைப்பார்கள்?

பின்னர் என்ன? அதே தான் காந்தி ஒழிக,நேரு ஒழிக ஆனால் மிக கவனமாக இந்த கூட்டணியில் ஒருவரான பட்டேல் மட்டும் வாழ்க, எப்படி இருக்கின்றது பார்த்தீர்களா? வரலாற்று திரிபு.

நிச்சயமாக நேதாஜி பெரும் தேச அடையாளம். நாட்டு விடுதலைக்காக சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்த வரலாறு அவருடையது.

காந்தி வழி வேறு, நேதாஜி வழி வேறு. இருவரும் தம் தம் வழியில் போராடினார்கள். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டிருந்தார்கள். நாம் தான் இருவரையும் புரிந்துகொள்ளாமல் விமர்சித்துகொண்டிருக்கின்றோம்.

ஆழ்ந்து நோக்கினால் இருவருக்கும் வேறு வழி தெரியவில்லை, காந்தி மக்களை திரட்டி காலத்திற்காக காத்திருந்தார். நேதாஜி சவாலான திட்டத்தில் உயிரை பணயம் வைத்து நாட்டிற்காய் போரடி அதற்காகவே இறந்தார்.

அவரையும் வைத்து அரசியல் செய்யும் இந்த நாட்டில் மீண்டும் அவர் வராமல் இருந்ததுதான் அவர் காத்துகொண்ட உச்சகட்ட மரியாதை.

மலேசியாவின் சில இடங்களில் அவர் பயிற்சிகொடுத்த இடங்கள் உண்டு, பார்த்திருக்கின்றேன், அன்று இளைஞர்களாக அவரோடு பழகிய இன்றைய முதியவர்கள் உண்டு அவர்களிடம் அவரை பற்றி கேட்டிருக்கின்றேன்.

அவர்களிடம் கதைகேட்டால் நேதாஜியின் நாட்டுபற்று அற்புதமாக விளங்கும், இப்படிபட்ட தேசஅபிமானியா நேதாஜி என மனம் உருகும், அப்படி அற்புதமான தகவல்கள் கொட்டும், ஹிட்லரின் படை மீதும் ஜப்பானிய ராணுவம் மீதும் பெரும் நம்பிக்கை வைத்திருந்தார், ஆனால் விதி மாறிற்று என்பார்கள்.

எப்படி ஆயினும் ஒருவேளை நேதாஜி இந்தியாவினை ஆளும் நிலை வந்திருந்தால் தேசபிரிவினை நடந்திருகாது, இந்த காஷ்மீர் போன்ற சர்ச்சைகள் வந்திருக்காது. ஒரே இந்தியாவினை தவிர ஏதும் விரும்பாத உன்னத தலைவன் அவர், வங்கம் இப்படி உடைய விட்டிருக்கமட்டார் என்பது மட்டும் உண்மை

இந்தியாவினை ஆளும் தகுதிபடைத்த நபர்களில் போஸ் மகா முக்கியமானவர், முதன்மையானவர் , பொதுவாக இந்தியாவிற்கு மட்டுமல்ல தெற்காசியாவிற்கே துணிகரமான தலமை கிடைத்துவிட கூடாது என்பதில் கவனமாக இருக்கும் வல்லரசுகளின் விளையாட்டில் நேதாஜி சிக்கினார் என்பதும் ஆய்வுக்குரியது

எனினும் ஜப்பான் உதவியோடு இந்தியா விடுதலை அடைந்தாலும், வெள்ளையனுக்கு பதில் ஜப்பானியர் தான் ஆண்டுகொண்டிருப்பர், சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேயா, தாய்லாந்து, பர்மா என பல நாடுகளை பிடித்து தன் சாம்ராஜ்யத்தை நிறுவதொடங்கிய ஜப்பான், இந்தியாவிற்கு விடுதலை கொடுத்து நேதாஜி கையில் கொடுக்கும் என எப்படி எதிர்பார்க்கமுடியும்?

அப்படி ஜப்பான் வென்றிருந்தால், கணத்தில் அடுத்த போராட்டத்தை நேதாஜி தொடங்கி இருப்பார் அவருக்கு வேறு வழி இருந்திருக்காது என்பதும் ஒரு வகை யூகம். வாய்பிருக்கின்றது ஜப்பானியர் செய்திருக்கும் உலகப்போர் அழிச்சாட்டியம் கொஞ்சமல்ல, இந்தியா கிடைத்திருந்தால் தாஜ்மகால் முதல் தஞ்சாவூர் கோயில் வரை புரட்டிபோட்டிருப்பார்கள்.

வரலாற்று ஆசிரியர்கள் சொல்வது ஒன்றுதான். பிரிட்டன் ஜெர்மனி என கணிக்க தெரிந்த போஸ், அமெரிக்கா சோவியத் யூனியன் என வருங்கால வல்லரசுகளை கணிக்க தவறினார், அது அவர் தவறேன்றும் சொல்லிவிட முடியாது.

அப்படி ஒரு முகாமில் இருந்திருந்தால் பின்னாளில் லீ குவான் யூ போலவோ, மாவோ போலவோ, ஸ்டாலின் போலவோ பெரும் உலக அடையாளமாய் மாறி இருந்திருக்கலாம், ஆனால் காலம் கடந்துவிட்டது

இன்று ஆகஸ்டு 18, நேதாஜி விபத்தில் இறந்தார் என்ற சர்ச்சை கிளம்பிய நாள்.

அந்த நேதாஜியினையும் ஒரு காலத்திலும் மறக்க முடியாது, நேதாஜி சாகவில்லை பல மர்மம் உண்டு அவர் உயிரோடு இருக்கின்றார் என இறுதிவரை தைரியமாக முழங்கிய ஒரு தேசபக்தனாக திரு, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களும் இந்த விஷயத்தில் மறக்க கூடியவர் அல்ல

நேதாஜியின் டெல்லி சலோ எனும் ஸ்லோகமும், இந்த நாட்டின் மீது அவருக்கு இருந்த பெரும் தேசபற்றும் எந்நாளும் வணங்கதக்கவை

இந்த ஆகஸ்டு 18 நேதாஜியின் நினைவு நாள் மட்டுமல்ல, இந்தியாவிற்கு பலம் பொருந்திய தலமை கிடைத்துவிட கூடாது என அன்றே உலக கருப்பு சக்திகள் திட்டமிட்ட செயல்படுத்திய நாள். இன்னும் அவர்கள் விடுவதாக இல்லை.

அதன் முதல் பலிதான் நேதாஜி, என தொடங்கி காந்தி, இந்திரா, ராஜிவ் காந்தி என வந்து நிற்கின்றது.

இந்தியாவிற்காய் உலகினை எதிர்த்து பெரும் சவாலில் இறங்கிய அந்த வீரமகனுக்கு வீரவணக்கம் செலுத்துவதில் இத்தேசம் பெருமை கொள்கின்றது
முதன் முதலாக இந்தியாவிற்கு பலமிக்க ராணுவம் வேண்டும் என சொல்லி அதனை அமைத்தும் காட்டிய முதல் தலைவன் எமது நேதாஜி

இன்றைய பலமிக்க இந்திய ராணுவத்திற்கு அவரே முன்னோடி, அவ்வகையில் இந்திய ராணுவத்தின் நன்றிக்குரியவர் நேதாஜி

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நமது தேசத்தின் பெரும் வீரமிக்க அடையாளம்

வந்தே மாதரம்..ஜெய் ஹிந்த்

 

பட்டினத்தார்

பட்டினத்தார் என்றொருவர் இருந்தார். நகரத்தார் எனும் பூம்புகார் செட்டியார். பெரும் பணக்காரர். சொத்து இருக்குமிடத்தில் சொந்தம் வரும், அது சுருட்டவும் வரும்.

கிட்டதட்ட எம்.ஏ ராமசாமி செட்டியார் போல மனம் வெறுத்த பட்டினத்தார் துறவியானார். ஞானம் பெற்றார், தத்துவமும் திருவோடுமாக அலைந்தார். ஒரு கட்டத்தில் இந்த திருவோடும் மீதும் எனக்கு ஆசை வந்ததே என சொல்லி தூர எறிந்தார்.

வாழ்வின் தொடக்கம் இனிமை, முடிவு கசப்பு என பொருளில் கரும்பினை கையில் சில நேரம் வைத்து தத்துவம் சொன்னார். பெண்ணாசையால் கெட்ட பத்ருஹரி எனும் மன்னனும் துறவியாகி அவரோடு சேர்ந்தான்

அவனுக்கு அவர் போதித்த பாடலே பட்டினத்தார் பாடல்கள், நன்கு அதனை படித்தால் சிம்புவும், தனுஷும் ஏன் கமலஹாசனே திருந்த வாய்ப்பு உண்டு. அப்படியான பாடல்கள் அவை

சிவனடியாரான அவர் பின் சென்னையில் மரணித்தார். அவர் கல்லறை இன்றும் அங்கு உண்டு

உண்மை இப்படி இருக்க, அவர் வரலாறை கண்டபடி திருத்தி அவர் வீம்புக்கு செத்தவர். உறவினரால் கொல்லபட்டவர். இந்த பிராமணர்கள் அவர் கதையினை திருத்திவிட்டனர் என ஒரு கும்பல் கிளம்பியிருக்க்கின்றது

இது வன்மையாக கண்டிக்கதக்கது.

பட்டினத்தார் சிவனடியார் என்பதற்காக அவர் கதை பிராமணர்களால் திருத்தபட்டது என்பதெல்லாம் அபத்தம். ஏன் பிராமணனை தவிர எவனுக்கு சிவபக்தி வரகூடாதா? எந்த தமிழனுக்கும் இந்து எனும் அடையாளம் இருந்துவிட கூடாதா?

எதற்கெடுத்தாலும் பிராமணன், பிராமணன் என சாடுவது ஒரு மனநோய். தமிழகம் இந்து நாடாகத்தான் இருந்தது, சிவன் அதன் பிராதன கடவுள். சைவம் இங்குதான் செழித்தது.

ஆக எல்லாமே பிராமண சூழ்ச்சி என சொல்லிகொண்டிருப்பது ஒரு வகையான மனநோய், ஒன்றும் செய்ய முடியாது.

ஆனால் அந்த மனநோயாளிகள் பழம் வரலாறுகளை, தத்துவ இதிகாசங்களை குழப்பாமல் இருக்கட்டும்.

மாவீரன் சின்னமலைக்கு வீர வணக்கமும், அஞ்சலிகளும்….

Image may contain: one or more people and outdoorஅவர் பெயர் தீர்த்தகிரி, எல்லா பயிற்சிகளையும் முடித்து பெரும் வீரரானார், முதலில் வேட்டைக்காரர்தான் ஆனால் நல்ல மனதும் இருந்தது

சில ஏழைகளுக்கு உதவ அவரிடம் பணம் இல்லை, அப்பொழுது மைசூர் சாம்ராஜ்யம் திண்டுக்கல் வரை பரவியிருந்தது, அந்த வரிப்பணம் செல்லும் பாதையில் வந்து வீரர்களிடம் பணம் பறித்து, சிவன் மலைக்கும் சென்னிமலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்தான் என சொல் என பொடரியில் அடித்து விரட்டு அந்த ஏழைகளுக்கு உதவினார்.

பின் வரியினை வெள்ளையன் பறிக்கவந்தபொழுதும் பெரும் படைதிரட்டி அவனை அச்சுறுத்தினார், அப்பக்கம் வெள்ளையன் காலூன்ற முடியவில்லை

Image may contain: sky, outdoor and natureபின் காலங்கள் மாறி திப்பு ஆங்கிலேயருக்கு எதிராக பெரும் யுத்தம் தொடங்கியபொழுது அவனுக்கு பக்கபலமாய் இருந்தார், திப்புவின் வெற்றிகளில் சின்னமலைக்கும் பங்கு உண்டு

திப்பு சுல்தானுக்கும் பிரெஞ்ச் மாவீரன் நெப்போலியனுக்கும் நல்ல தொடர்பு இருந்தது, திப்புவின் பெருமையும் மதிநுட்பமும் அவனின் ஏவுகனைகளும் நெப்போலியனை வியப்பில் ஆழ்த்தின, நான் பிரான்ஸ் திப்பு சுல்தான், திப்பு இந்தியாவின் நெப்போலியன் என சொல்லிகொண்டான்.

திப்புவிற்கு பல உதவிகளை செய்ய அவன் முன்வந்தான், அப்படி திப்புவின் பிரதிநிதிகள் மாவீரன் நெப்போலியனை காணசென்றபொழுது சின்னமலையினையும் அழைத்தார்கள் அவரோ தன் தளபதி கருப்பசேர்வை என்பவரை அனுப்பினார்

திப்புவுடன் சேர்ந்தும், திப்புவிற்கு பின்னரும் பெரும் யுத்தம் நடத்தினார் சின்னமலை, ஆங்கிலேயர் அவருக்கு அஞ்சினர்

திப்புவினை முதலி வீழ்த்திவிட்டு சின்னமலையினை குறிவைத்தனர், முந்திகொள்ள நினைத்த சின்னமலை போராளிகளை எல்லாம் திரட்டி, திப்புவின் எஞ்சிய படையினை திரட்டி கோவை முகாமினை தாக்க திட்டமிட்டார்

அதுமட்டும் வெற்றிகரமாக முடிந்திருந்தால் ஆங்கிலேயபடைகளுக்கு அடியாக இருந்திருக்கும், ஆனால் சில தகவல் தொடர்பு சரியில்லா காரணத்தால் சிலர் முந்திகொள்ள அந்த முயற்சி தோற்றது

ஆயினும் அஞ்சவில்லை சின்னமலை, அவரின் கவனெம்ல்லாம் எப்படியாவது நெப்போலியன் உதவிபெற்று ஆங்கிலேயரை ஓட அடிப்பதில் இருந்தது, வெள்ளையர் அதனை முறியடிக்க தீவிரமாய் இறங்கினர்

வீரத்தில் வெல்லமுடியா சின்னமலையினை சமையல்காரனுக்கு லஞ்சம் கொடுத்து சாதித்தனர், மிக நுட்பமாக பிடிக்கபட்டார் சின்னமலை

கொஞ்சம் தாமதித்திருந்தால் அவருக்கு பிரெஞ்ச் படை உதவியிருக்கும், வரலாறு மாறியிருக்கும் ஆனால் விதி அதுவல்ல‌

இதே நாளில் அந்த மாவீரனை தூக்கிலிட்டார்கள். வெள்ளையனுக்கு கோவை பகுதியில் சிம்ம சொப்பணமாக விளாங்கிய அந்த மாவீரன் இந்த நாளில்தான் இறந்தான்

அவன் இறந்தாலும் அவரின் வீரமும், அவர் பெற்ற பல வெற்றியும், கொஞ்சமல்ல, மாவீரன் நெப்போலியனிடம் கவனம் பெற்ற வீர இந்தியர்களில் சின்னமலைக்கு நிச்சயம் இடம் உண்டு

வீரம் வீரத்தை விரும்பும் என்பது அதுதான்

நாட்டிற்காய் போராடிய அம்மாவீரன் இன்று ஒரு சாதி அடையாளமாக சுருங்கிவிட்டதுதான் பெரும் கொடுமை.

அவன் வேறுசாதி, அவன் தளபதி இன்னொரு சாதி, அவனின் படைகளில் நாயக்கன், மராட்டியன், கன்னடன் என எல்லா மக்களும் இருந்தார்கள் , அவன் படை எல்லா சாதிகளையும் கொண்டிருந்தது

அந்த மாவீரனைத்தான் இன்று சாதி அடையாளத்தில் வைத்திருக்கின்றார்கள், பெரும் கொடுமை

அந்த ஓடாநிலை கோட்டை, சங்ககிரி கோட்டை அவனின் மாவீரத்தை சுமந்தபடி இன்றும் நிலைபெற்று நிற்கின்றது

அந்த மாவீரனுக்கு வீர வணக்கமும், அஞ்சலிகளும்.

 
 

‘தமிழ் ஒன் இண்டியா’ – வில் நம் பதிவு …

ஒரு சில தளங்களை போலவே இந்த தளத்தில் நம் பதிவுகள் வருகின்றன, பெரும் வாசகர்களை கொண்ட தளமாக தெரிகின்றது , நம் கலாம் பதிவினையும் பதிந்திருக்கின்றார்கள்.

நம்மையும் ஒருவர் மதிப்பதே பெரும் விஷயம், அதுவும் நம் பதிவுகளையும் மதித்து வெளியிட அபார தன்னம்பிக்கையும், மிக பெரும் பெருந்தன்மையும் வேண்டும்

அவர்கள் யாரென தெரியவில்லை, ஆனால் அந்த நண்பர்களுக்கு உளமார்ந்த நன்றிகளை சொல்லிகொண்டே இருக்கின்றோம்.

இது போன்ற மற்ற தளங்களுக்கும் நன்றிகள் கோடி..

(இப்படி எல்லாம் உதவுபவர்கள், அந்த குஷ்பூ பதிவுகளையும் பதிவிட்டு , அதனை அவரின் கவனத்திற்கு கொண்டு சென்றால் அப்படியே இவர்களுக்கு “அடிமை சாசனம்” எழுதி கொடுத்துவிடலாம்)