இந்தியாவின் “இன்சினியர் தினம்”

இன்று புகழ்பெற்ற பொறியாளர் சர்.விஸ்வேசரய்யாவின் பிறந்தநாள்.

இவரின் பிறந்த நாள்தான் இன்றுவரை இந்தியாவின் “இன்சினியர் தினம்”, வருங்காலத்தில் ராமேஸ்வரத்தில் ராமர்பாலம் கட்ட தொடங்கிய நாள் தெரிந்தால் இந்த நாள் மாற்றபடலாம்.

நல்லவேளையாக வால்மீகி அந்த நாள்,நட்சத்திரத்தினை குறித்துவைக்காமல் விட்டதால், இனி விஸ்வேசரயாவின் பிறந்தநாளுக்கு ஆபத்து இல்லை. ஆனால் இந்தியாவின் புகழ்மிக்க அணைகள்,தொழிற்சாலைகள் என சகலமும் கட்டியவர்.

காவேரி பிரச்சினைக்கு மிக அபாயகரமான திருப்பம் இவர் கொடுத்தது, அதாவது அது அருமையான திட்டம்தான், ஆனால் தமிழக போலி அரசியல்வாதிகளால் அது இன்று குப்புறகிடப்பது வேறுவிஷயம்.

பெரும் சிக்கல்கள் போராட்டம் என்றாலும் இன்னும் காவேரி சிக்கல் தீர்ந்தபாடில்லை , தமிழகத்திற்கு இது 
மாபெரும் அநீதி, பெரும் அக்கிரமம். ஆனால் இது ஒரு நாளில் தொடங்கிய பிரச்சினை அல்ல, வரலாறு பெரிது.

அகத்தியர் முனிவர் காலத்திலிருந்தே தமிழ்நாட்டை வளப்படுத்தியது காவேரி, சந்தேகமே இல்லாமல் சொல்லலாம், தென்னிந்தியாவின் மிக முக்கியமான நதி, அதுவும் தமிழகத்திற்கு 4000 ஆண்டுகளாக தாங்கி நிற்கும் ஆணிவேர்.

தமிழரும் கல்லணை என மிக அற்புதமான அமைப்பினை அமைத்து டெல்டா பகுதிகளை உருவாக்கினர், கல்லணை அமையாவிட்டால் தஞ்சாவூரும் இல்லை (மீத்தேனுக்கு பிரச்சினையே இல்லை), அது ராமநாதபுரத்தின் தொடர்ச்சியாக வறண்ட பகுதியாய் அமைந்திருக்கும், அப்பக்கம் வீராணம் ஏரியுமில்லை (ஊழலுமில்லை),

மொத்ததில் கல்லணை அமையாவிட்டால் டெல்டா ஒரு நேர்கோடு இருந்திருக்கும்.

இவ்வாறாக தமிழகத்தை செழிக்க செய்த காவேரியில் முதல் பிரச்சினை சாளுக்கிய மன்னர்கள் வடிவில் வந்தது, அதுவும் சோழர்களுக்கும் அவர்களுக்கும் வந்த தகறாறு, ஆனாலும் சோழர்கள் உச்சத்தில் இருந்த நேரம், சாளுக்கியரை அடக்கி காவேரியை மீட்டார்கள்.

அதன்பின் 700 வருடங்களுக்கு பிரச்சினை இல்லை, அங்கு விஜயநகரபேரரசு உதயமாகி, மொகலாயரையே விரட்டும் அளவிற்கு வலுவானபோதும் காவேரியில் கைவைக்கவில்லை, காரணம் எந்த அவசியமும் இல்லை.

பின்னாளில் நாயக்கர் தமிழகம் வர அதில் பிரச்சினை வர வாய்ப்பே இல்லாமல் ஆயிற்று. வைகை கரை,காவேரிகரை எல்லாமே நாயகர்கள்.மைசூரிலும் நாயக்கர்கள் ஒரு பிரச்சினையும் இல்லை.

கவனியுங்கள், மைசூரிலிருந்து வந்து மதுரையிலும், தஞ்சாவூரிலும் சம்மணம் போட்டு அமர்ந்துகொண்டார்கள் என்றால், நாம் இங்கு உருவாக்கி வைத்திருந்த நன்செய் நிலங்கள் அப்படி, மைசூர் பக்கம் அன்றெல்லாம் ஒன்றுமில்லை.

மதுரை நாயக்கருக்கும், தஞ்சாவூர் நாயக்கருக்கும் வாரிசுசண்டை ஆரம்பித்தபொழுது, தஞ்சாவூர் நாயக்கர்களுக்கு ஆதரவாய் சிவசேனை வந்தது, சிவசேனா என்பது பால்தாக்கரே அல்ல, மாமன்னன் சிவாஜியின் உறவினர் படை. காரணம் அவர்கள் வராவிட்டால் பிஜப்பூர் சுல்தான் தஞ்சாவூரில் அமர்ந்திருப்பார்.

இப்படியாக மராட்டியர் தஞ்சையை பிடித்ததும் , கொஞ்சம் உரசல் உருவாயிற்று. அது பின்னாளில் மைசூர் சமஸ்தானம் (அது திண்டுக்கல் வரை இருந்தது) சோழமண்டல மராட்டியர் பிரச்சினை என உருவாயிற்று.

விளைந்தால் பிரச்சினை இல்லை, ஆனால் வெள்ளத்தால் அழிந்தால் அதற்கு மைசூர் அரசு தண்ணீரை அழிப்பதற்காகவே அனுப்புகின்றது என சில சர்ச்சைகள் எழுந்தன, ஆடிமழையில் அந்த தண்ணீரை எங்கு வைப்பது என அவர்களுக்கும் தெரியவில்லை, இவ்வளவிற்கும் கொஞ்சம் விவசாயம் தொடங்கி மைசூர் சமஸ்தானம் பொருளாதாரம் உயர்ந்த நேரம்.

எப்படியோ இனி தஞ்சையில் வெள்ளத்தில் பயிர்கள் அழிந்தால் அதற்கு மைசூர் சமஸ்தானம் பொறுப்பு என ஒரு கருத்து உருவானது, மைசூர் மன்னர் நஷ்டஈடு தரவேண்டும் என்றெல்லாம் குரல்கள் வந்தன, அக்கால மைசூர் உடையார்களும் சில நேரங்களில் நெல்லாகவோ, விதை நெல்லாகவோ,பணமாகவோ கொடுக்க ஆரம்பித்தார்கள்.
இந்நிலையில் ஆங்கிலேயர் தஞ்சையை ஆளுகைக்குள் கொண்டுவந்தனர், மைசூர் சமஸ்தானம் அடங்க மறுத்தது, பழைய பிரச்சினையை பெரும் பிரச்சினையாக உருவாக்கினர் ஆங்கிலேயர்.

தஞ்சாவூரில் வெள்ளத்திற்கு மைசூர் அரசு நஷ்ட ஈடுகொடுக்கவேண்டும் என வாங்கியே கொடுத்தனர், தஞ்சை மக்களுக்கும் பொம்மை சாம்போஜிக்கும் ஏக மகிழ்ச்சி, விட்டால் பிரகதீஸ்வரர் ஆலயம் பக்கம் வெள்ளையருக்க்கு ஆலயமே எழுப்பியிருப்பர், ஏனோ செய்யவில்லை.

ஹைதர் அலி இதனை கண்டித்தார், திப்பு சுல்தான் இந்த இழப்பீட்டை கொடுக்க மறுத்தார். காவேரி பொதுவான நதி, வெள்ளம் என்பதை நாங்கள் என்ன செய்யமுடியும்? என மறுத்தார். ஆனாலும் திப்பு நஷட ஈடு கொடுத்தே ஆகவேண்டும் என பொங்கியபொழுது ஆத்திரபட்ட திப்பு படையினர் சில இடங்களில் தமிழக மதகுகளை சேதபடுத்தினர்.

அது இந்துகிராமங்களை திப்பு தாக்குகின்றார் என வெள்ளையரால் விபரீதமாக பரப்பபட்டன, திப்பு சுல்தான் ஒரு பெருந்தன்மையான மாவீரன், மைசூரின் ஒப்பற்ற புலி. வரலாற்று பெருந்தகையாளன்.

இப்படி இல்லாத பொய் எல்லாம் கூறி திப்புவை இந்து எதிரியாக்கி தனிமையாக்கி அழித்தனர் பிரிட்டிசார், பின் மைசூருக்கு உடையார் அரசன் ஆனார். யார் ஆண்டால் என்ன?, பின்புலம் பிரிட்டிசார்.

அப்பொழுதும் தஞ்சையில் வெள்ளமென்றால் மைசூர் பணம் கொடுக்கவேண்டும், இது மைசூர் மன்னருக்கு பெரும் தலைவலியாயிற்று.

“இது காவேரி ஆறு, அதுவும் 4 ஆறுகள் கூட சேர்ந்து தமிழ்கம் செல்கிறது, அங்கும் பவானி,அமராவதி,நொய்யல் என எல்லாம் கலந்துதான் திருச்சி வருகின்றது, அங்கு அழிவென்றால் நான் பணம் கொடுக்கவேண்டுமாம்?

முப்போகம் விளைந்தால் நமக்கா தருகின்றார்கள்?”
செயலற்ற நிலையில் கேட்டதை கொடுத்துவிட்டு அந்தபுரத்தில் அழுதுகொண்டிருந்த மன்னருக்கு, 1895ல் ஒரு இளைஞன் வேலைக்கு வந்தான்.

அப்பொழுதே சிவில் இன்சினியரிங் முடித்திருந்த பிராமண இளைஞன், பெரும் அறிவாளி, கட்டடகலை நிபுணர், எல்லாவற்றிற்கும் மேல் பெரும் நிர்வாகி.

“தனது வேலையில் கருத்தாக இருப்பவன், அரசனோடு பந்திக்கு அமர்வான்” என்பது யூதமொழி, அவனும் அப்படித்தான் விரைவில் திவான் ஆனார்.

மைசூர் சமஸ்தானம் தஞ்சாவூருக்கு வெள்ளநிவாரண நிதிகொடுத்து அழுதுகொண்டிருக்கும் பொழுது அவன் நிதானமாக திட்டமிட்டான்.

வீணாக செல்லும் நீருக்கு தஞ்சை மக்களுக்கு கப்பம் கட்டுவதை விட, நாமே அணைகட்டி விவசாயத்தை பெருக்கினால் என்ன?, அதுவரை அப்படி ஒரு திட்டம் மைசூருக்கு இல்லை, அவரை வினோதமான பார்த்தமன்னன் கேட்டார்? அது சாத்தியமா?

எனக்கு சாத்தியம் இல்லை என்றால் எவனுக்கும் சாத்தியமில்லை என்றான் அந்த இளைஞன்.

காவேரி பெரும் ஆறு ஆனால் அதோடு ஹேமாவதி,சிம்சா,அக்ராவதி,கபினி என பல சிற்றாறுகள் (நம்பியாறு போல) கலந்துதான் வெள்ளம் தமிழகம் செல்லும், முதலில் நாம் காவேரி குறுக்கே அணைகட்டினால் பாதிவெள்ளம் குறையும், அதாவது நஷ்டஈடு குறையும்.

அற்புதமான யோசனை சொன்ன இளைஞனை நம்பிக்கையாய் பார்த்தது மைசூர், அந்த இளைஞர் விஸ்வேசுவர அய்யர்.

கன்னடத்தின் அப்துல்கலாம் அல்லது லி குவான் யூ அவரின் அறிவுகூர்மையும், செயல்திறனும் அப்படி.

அற்புதமாக கட்டிகொடுத்த அணை கிருஷ்ணராஜ சாகர், மீதி நீர் தஞ்சை மக்களை அழிக்காமல் இருக்க வெள்ளையர் கட்டியது மேட்டூர் அணை.

அணைகட்டிவிட்டால் போதுமா? அந்த நீரை எப்படி விவசாயமாக்குவது, எப்படி தடுப்பணை கட்டுவது, உற்பத்தியை பெருக்குவது எப்படி என பெரும் அகராதி வகுத்தார் விஸ்வேசரையர்.

அவர் கொடுத்த அடித்தளத்தில்தான் மைசூர் விவசாயத்தில் செழித்தது, கர்நாடக பொன்னி, மைசூர் பருப்பு , இன்று தமிழகத்தை தாங்கும் காய்கறிகள் என கன்னடம் கொட்டி முழக்குகின்றது என்றால் அதற்கு காரணம் அவர்தான்.
முத்துபடத்தில் ரஜினி குதிரைவண்டியோடு பசுமைவயல்கள் வழியே மணிக்கணக்கில் செல்வாரல்லவா? அந்த பசும் வயல்கள் அவரின் உருவாக்கம்.

இன்று கன்னடத்தில் சிறிதும் பெரிதுமாக காணப்படும் 28 அணைகளுக்கும் அவரே முன்னோடி. கட்டடகலை அவருக்கு கைவந்தது,

கன்னட அடையாளமான விதான சவுதா, இன்னும் பல ஆலைகள் எல்லாம அவரின் டிசைன்.

அன்று மிகசிறிய ஊரான பெங்களூர் இன்று உலகின் முன்னனி நகரம் என்றால் அதற்கு அய்யரும் ஒரு காரணம். இந்தியாவின் ஒப்பற்ற இன்சினியரான அவரின் பிறந்தநாள்தான் இந்தியாவில் “இஞ்சினியர் தினம்”

இந்தியாவின் மிக சிறந்த கட்டட பொறியாளரில் அவரும் ஒருவர், ஐதரபாத் வெள்ளதடுப்பிற்கு அவர் போட்டு கொடுத்த திட்டம் இன்றும் பயன்படுகின்றது

பெரும் தொழிற்சாலைகளுக்கான நிர்மாணத்தை எல்லாம் அவர்தான் இந்தியாவில் செய்தார். மறக்க முடியா மாமனிதர் அந்த விஸ்வேசரய்யர்.

கிருஷ்ணராஜ சாகருக்கு முன்பே பிரிட்டிசாரோடு சேர்ந்து நிறைய அணைகட்டிய சாதனைகளை அவர் செய்திருக்கின்றார். நவீன‌ இந்திய அணைகட்டுகளின் பிதா மகன் அவர்.

அந்த அறிவாளியினை மிக சரியாக பயன்படுத்திகொண்டது கர்நாடகம், பின்னாளைய கன்னட எழுச்சிக்கு அவர் மிக பெரும் அடித்தளம் அமைத்தும் கொடுத்தார்.

தமிழகத்திற்கு அப்படி யாரும் கிடைக்காமலே போனதுதான் பெரும் சோகம், அதுவும் பின்னாளில் அய்யர்களுக்கு ஆகாத மாநிலமாகவே அறியபட்டது தமிழகம், பின் எங்கிருந்து வருவார்கள்?

ஆனால் அப்படி ஒரு அறிவாளி வராமல் இனி உருப்படாது தமிழகம்.

பொறியியல் கல்லூரி நிறைந்திருக்கும் தமிழகத்தில் இப்படி ஒரு தினம் இருப்பது தெரியுமா? கொண்டாடுவார்களா என்றால் கொண்டாட மாட்டார்கள்.

அதற்கு ஆயிரம் காரணங்கள். எப்படியாயினும் விஸ்வேஸரய்யர் இந்திய வரலாற்றில் முக்கியமான ஒருவர் என்பதில் சந்தேகமேயில்லை.

Image may contain: 1 person