சிங்கப்பூர் : 02

சிங்கப்பூர் : 02

Image may contain: one or more people, skyscraper, sky, cloud, shoes and outdoor

1965ல் இருந்து தீவிரமாக உழைக்க ஆரம்பித்தார் லீ குவான் யூ

சுத்தம் அவர்களுக்கு பிரிட்டிசார் சொல்லிகொடுத்தது, அமைதியான வாழ்க்கை முறை அவர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று.

எப்படி அந்த நாட்டு மக்கள் அப்படி இருந்தார்கள் என்றால், வெகு எளிதான உண்மை. இந்தியாவிலிருந்தோ அல்லது சீனாவிலிருந்தோ சென்று, உழைக்க மட்டுமே சென்ற கூட்டம் அது, உழைக்க வேண்டும் எஜமான் பிரிட்டிசார் சொன்னபடி உழைக்கவேண்டும், பிள்ளைகள் படிக்கவேண்டும், அக்கம் பக்கம் அமைதியாக வாழவேண்டும், நாடு சுத்தமாக இருக்கவேண்டும்.

உழைத்தால்தான் வாழ்முடியும் என நம்பும் மக்களின் சந்ததி அது. உழைப்பை தவிர ஏதும் தெரிவதில்லை.

அதனால்தான் இன்றுவரை அந்நாடுகளில் மிக சொற்பமான நிகழ்வுகளை தவிர ஒரு கலவரங்களையும் கேள்விபட்டிருக்க முடியாது.,

நமது கலாச்சாரத்தில் ஒன்றான ஊர்வலம்,பேரணி டீக்கடை அரசியல், விளையாட்டில் தோற்றால் கூட மறியல்,போராட்டம், பேருந்தை கொளுத்துதல் என ஜனநாயக சம்பிரதாயங்கள் எல்லாம் அங்கு இல்லை.

அமைதியான, ஆனால் உழைக்க தயாரான கூட்டம் அது, அவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டி கிடைத்துவிட்டால் அந்நாடு எப்படி ஆகும்.

சிங்கப்பூர் அப்படிபட்ட மக்களை கொண்ட நாடு, நல்லதலைவர் லீ அப்படித்தான் அமையபெற்றார்.

ஒரு வளமும் இல்லா நாடு, யாரும் நமக்காக கைகட்டமாட்டார்கள். ஒரே வழி அந்நிய முதலீடுகளை ஈர்ப்பது, அதை செய்ய அந்நாடுகளின் முழுநம்பிக்கையை பெறுவது? நல்ல அரசாங்கமும் பாதுகாப்பான சூழலும் இல்லாமல், யார் முதலீடு செய்ய வருவர்?

இன்று ஆப்கானுக்கும் அல்லது ஈராக்கில் தொழில்தொடங்க யாராவது தயாரா? அவர்களை விடுங்கள் இந்தியாவிலே குறிப்பாக தமிழகத்திலே தொழில் தொடங்க பலவாறு உலகம் யோசிக்கின்றது

நல்ல அமைதியும், தோற்றமுமே ஒரு நாட்டின் முதலீட்டுக்கு அடிப்படை, நல்ல பெயரும் பாதுகாப்பும் முக்கியம். ஒரு அந்நிய முதலீட்டாளர் சென்னைக்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்து (ஆம் அதில் பயணித்தால் தெரியும்) வந்து சுற்றிபார்ப்பதை விடுங்கள், ஏர்போர்ட்டில் இறங்கும் பொழுதே கூரை இடிந்து விழுவதையும் அதனை யாரும் பொருட்படுத்தாமல் ஒரு ஊழியர் சுவற்றில்100ம் முறை என கோடு போடுவதயும் கண்டால்?? அப்படியே ஓடிவிடமாட்டாரா?

அப்படியே தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களையும், போஸ்டர் பேனர்களையும் வெற்று ஆர்ப்பாட்ட சவுடால்களையும் கண்டால் ஓடிவிடமாட்டாரா

விமான நிலையமும் , நகர அமைதியும் அவ்வளவு முக்கியம்

லீ அதனைத்தான் முதலில் செய்தார். விமானத்தையும், விமான நிலையத்தையும், சிங்கப்பூர் துறைமுகத்தையும் ஒரு தரத்திற்கு உயர்த்தினார்.

கடந்த 50 ஆண்டுகளாக ஐரோப்பிய விமானதுறை தரத்திற்கு சவால்விடும் நிறுவணம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ். மிக சிறந்த நிலையங்களில் ஒன்று சாங்கி நிலையம்.

வரவேற்பிலே அசத்திவிடும் சாமார்த்தியம் கொண்டவை அவை.

குறைவான வரி, தொல்லைகள் இல்லாமல் தொழில் செய்யும் உரிமை, எல்லாவற்றிற்கும் மேல் உழைக்க மக்கள், முழு பாதுகாப்பிற்கு அரசு உத்திரவாதம், மத,இன,யூனியன் என எந்த தொந்தரவு இல்லை.

லீ உலக முதலீட்டாளருக்கு சொன்னது இதுதான், யாரும் வாருங்கள் தொழில் செய்யங்கள், எமது மக்களுக்கு வேலைகொடுங்கள். நீங்களும் வாழுங்கள், நாங்களும் வாழ்கின்றோம், என மன்றாடி நின்றார்.

அடுத்த கட்டம், வெறும் உற்பத்திமட்டுமல்ல. உலகின் எல்லா நாட்டுபொருளும் கிடைக்கும் பெரும் சந்தையாக சிங்கப்பூரை மாற்றினார். அதனால்தான் இன்று உலகின் எல்லா முண்ணனி பொருள்களின் சந்தையாக சிங்கப்பூர் உயர நிற்கின்றது.

அது அவருக்கு கை கொடுத்தது, தொழில்கள் வளர்ந்தன. கொஞ்சம் நிமிர்ந்த லீ கிழக்கின் முக்கிய பங்குசந்தைகளில் ஒன்றாக சிங்கப்பூரை மாற்றினார்.

பணம் இருந்தாலும் ராணுவம்,அணுகுண்டு என உலகை பகைத்துகொள்ளவே இல்லை. ஒரு ராணுவத்தை திரட்டி எம்மை அவமதித்த மலேசியரை என்ன செய்கிறேன் பார் என கிளம்பவுமில்லை.

நம்மைபோல வரிபணத்தில் 80% அண்டைநாடுகளின் ராணுவ அச்சுறுத்தலுக்கு செலவழிக்கும் தேவையும் அவர்களுக்கு இல்லை. அமைதி, உழைப்பு,வளர்ச்சி

1970களில் அதன் வளர்ச்சி தெரிய ஆரம்பித்தது, உலகம் கவனிக்க ஆரம்பித்தது, “உலகம் சுற்றும் வாலிபனுக்காக” எம்.ஜி.ஆர் சென்று லதா,மஞ்சுளாவோடு ஆடிபாடும் பொழுது நாமெல்லாம் அழகான சிங்கப்பூர் என்றோம்.

1980களில் வெளிநாட்டு படப்பிடிப்பு என்றால் சிங்கப்பூர் முக்கிய இடம் பிடித்தது,

இப்படியாக நாமெல்லாம் திரைப்படத்தில் சிங்கப்பூரை கண்டு மகிழ, லீ என்ன செய்துகொண்டிருந்தார்.

ஆச்சரியம்தான் ஆனால் செய்தார், அப்பொழுதே நாடு கணிணியமாகி கொண்டிருந்தது. அதாவது உலகவோட்டத்திற்கு ஒரு வினாடி கூட தாமதிக்காமல் சிங்கப்பூரை முண்ணனியில் வைத்துகொண்டே இருந்தார்.

பாரீஸ்டர் படித்தவர் என்பதால், ஒரு வக்கீல் எப்படி எல்லாம் மக்களை ஜமாய்க்கமுடியும் என்பதனை உணர்ந்தவர். சட்டதிட்டம் எப்படி மக்களை கோர்டுக்கு அலையவிடகூடாது என்பதை அற்புதமான சட்டங்களாக உருவாக்கினார்.

அதாவது மக்கள் வீடு வாங்குவது விற்பது எல்லாம் அரசின் ஒரு இலாகா. தனிநபர் சொத்து வாங்குவது விற்பது எல்லாம் அங்கீகரிட்டபட்ட சட்ட இலாகா அதிகாரி முன் மிக முறையாக நடைபெறுவதால் வீண் வழக்குகள் குறைவு

வாய்க்கால் தகறாறு, முடுக்கு தகறாறு, பாதை இல்லா சண்டைகள் எல்லாம் வாய்பே இல்லாத நாடு அது.

சாலைகளில் கார்கள் பெருக பெருக, சில கட்டுபாடுகளை கொண்டுவந்தார். காரின் விலையை, சாலைவரியை உயர்த்தி மறைமுகமாக அவர்களை பொது போக்குவரத்திற்கு கொண்டுவருவது.

அப்படியே காரில் சென்றுதான் தீருவேன் என அடம்பிடித்தால், பெரும் தொகை வசூலித்து இலகுரயில் போன்ற அமைப்புக்களை அற்புதமாக அமைப்பது.

இன்று பலநாடுகளில் மின்காந்த தானியங்கி ரயில்சேவைகள் இருந்தாலும், அவர்களின் தரம் மிக உயர்வானது.

மக்கள் உழைக்கவேண்டும், அதன் வாய்ப்புக்களை அரசாங்கம் ஏற்படுத்தரவேண்டும், எல்லா வசதிகளும் எல்லா மக்களுக்கும் கிடைக்கவேண்டும், இதுதான் லீயின் தத்துவம்.

இன,மத ரீதியான அமைப்புக்களையும்,பேரணிகளையும் தடை செய்தார். சிங்கப்பூரின் வளர்ச்சியில் தமிழர்கள் செய்த தியாகத்தை நினைவு கூர்ந்து அதனை ஆட்சிமொழிகளில் ஒன்றாகவும் அங்கிகரீத்தார்.

அதாவது நல்ல அரசாங்கம் எதனை செய்யவேண்டுமோ அதனை செய்தார், எதனை செய்யகூடாதோ அதனை அனுமதிக்ககூட இல்லை.

அதனால்தான் கொழும்பு,திரிகோணமலை அளவிற்கு பிரமாதமில்லாத சிங்கப்பூர் துறைமுகம் கப்பல்களால் நிரம்பி வழிகிறது, அதன்மூலம் வருமானம் கொட்டி முழக்குகின்றது.

இது சிங்கள பவுத்த பூமி என மார்தட்டும் இலங்கை இன,மத கொள்கையால் சீரழிந்து கையேந்திகொண்டு அலைகின்றது. அதேபோல‌உலகிற்கே சோறுபோடும் வளமுள்ள மியான்மார், உலகின் மோசமான நாடுகளில் ஒன்றாயிற்று.

காரணம் நல்ல அரசு இல்லை. மக்களின் முன்னேற்றத்தை விட, வாழ்க்கையை விட மதவெறி முக்கியமென்றால் அப்படித்தான் ஆகும். 3 வற்றா நதிகள் பாயும் பாகிஸ்தானும் அப்படி ஆயிற்று.

அருமை பாரதத்தை அப்படி ஆக்குவதில் சிலருக்கு அலாதி பிரியம்.

ஆனால் மக்களை லீ வாழவைத்தார், வாழ மட்டும் அல்ல, உலகின் கொடுத்துவைத்த மக்கள் என பெயர் பெறவும் வைத்தார், இன்று எத்தனைநாட்டு மக்களுக்கு அவர்கள் வேலைகொடுக்கின்றனர். வேலையை விடுங்கள், இதுதான் சொர்க்கம் என சொத்துபத்தோடு வந்து செட்டில் ஆன ஐரோப்பியர் ஏராளம்.

இப்படியாக மக்களை நேசித்து, அவர்களின் அபிமானத்திற்குரிய தலைவருக்கு ஏகபட்ட வசைகளும் உண்டு. சர்வாதிகாரி, உரிமை மறுப்பவர், எதிர்கட்சிகளை மதிக்க தெரியாதவர் என எண்ணற்ற குற்றசாட்டு உண்டு.

அதற்கெல்லாம் லீ சொன்னபதில் ஒன்றே ஒன்றுதான், ” நாம் உலகின் போட்டியில் ஓடிகொண்டிருப்பவர்கள், நிதானமாக அமர்ந்து விவாதிப்பதில் என்ன அர்த்தம் இருக்கின்றது, இன்னும் ஓடவேண்டும், வெற்றிபெற்றபின் அதைபற்றி பேசலாம்”

சந்தேகமே இல்லாமல் அவர் வெற்றிபெற்றார், தேசமே வெற்றிபெற்றது. இன்னும் 100 ஆண்டுகளுக்கு அசைக்கமுடியாத சிங்கப்பூரை அவர் நிர்மானித்துவிட்டார்.

இனி கேள்வி கேட்கவேண்டிய நேரம்தான், ஆனால் எதனை கேட்கமுடியும்?, எது தவறேன்று சொல்லமுடியும்? எது நாட்டிற்கு தோல்வியில் முடிந்தது? எதனை அவர் தவறாக செய்தார்?

கச்சா எண்ணெயில் குளிக்கும் நாடுகளின் மக்களை விட ஒன்றும் இல்லா சிங்கப்பூர் மக்கள் வசதியாய் வாழ்கின்றனர்.

எந்த ஐரோப்பிய நாட்டிற்கும் குறையாத வசதியுடன் ஜம்மென்று ஒளிர்கிறது சிங்கபூர்.

இன்று சிங்கப்பூர் தன் தேசிய நாளை உற்சாகமாக கொண்டடுகின்றது, வெறும் மீணவ தீவான அந்த சிங்கப்பூர் வெள்ளையனின் அஸ்திவாரத்தாலும் லீ குவான் பின்னால் திரண்ட மக்களாலும் இன்று உலகில் முக்கிய நாடுகளில் ஒன்றாய் இருக்கின்றது சிங்கப்பூர்.

பலஇன மக்கள் வாழும் நாட்டு அரசு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு சிங்கப்பூட் அரிச்சுவடி, இந்தியா போன்ற நாடுகளுக்கு அவரை படிக்கவேண்டியது அவசியதேவை.

ஆனால் நமது அரசியல்வாதிகள் நிச்சயம் படிக்கபோவது இல்லை.

சிங்கப்பூரை வளர்த்த லீக்கு அவருக்கு அங்கு சிலையோ, நினைவிடமோ, பல்லாயிரம் கோடியில் மணிமண்டபம் எல்லாம் இல்லை, காரணம் லீ அப்படி சொன்னார், இதெல்லாம் வேண்டாம், நான் என் கடமையினை செய்தேன் அவ்வளவுதான்

நல்ல தலைவிதி உள்ள நாட்டிற்கு நல்ல தலைவர் வந்தார், நல்ல மக்களும் ஒத்துழைத்தனர் நாடு வாழ்கின்றது

அருமை இந்தியாவிற்கு அப்படி ஒன்றுமே அமையவில்லை.

சிங்கப்பூர் மக்களுக்கு தேசிய தின வாழ்த்துக்கள்

(சிங்கப்பூரின் லீ போல இங்கே மோடி வந்திருக்கின்றார், இந்தியா சிங்கப்பூராக மாறும் என சிலர் வருவார்கள், அவர்களை எல்லாம் கடலிலே தூக்கி போட வேண்டும்)

சிங்கப்பூர் : 01

சிங்கப்பூர் : 01

Image may contain: one or more people, people walking and outdoor

இன்று சிங்கப்பூர் தனிநாடாக ஆன நாள் என அந்நாடு கொண்டாடிகொண்டிருக்கின்றது, நாமும் வாழ்த்துவோம்

அது மலேயநாட்டின் தென்கரை தீவு, புரியும்படி சொன்னால் ராமேஸ்வரம் கன்னியாகுமரிக்கு அடுத்து இருந்தால் எப்படி இருக்கும்?, அதே தான். அதனைவிட கொஞ்சம் பெரிய தீவு அவ்வளவுதான்.

சிங்கப்பூர் தீவுதான், ஆனால் அற்புதமான துறைமுகம் இயற்கையாய் அமைந்திருந்தது. அதன் அருமையையை உணர்ந்த பிரிட்டிசார் துரிதமாய் வளர்க்கஆரம்பித்தனர்.

இயற்கையாக கிடைக்கும் வாய்ப்புக்களை வசதியாக முன்னேற்றுவதில் பிரிட்டிசாரை அடிக்கமுடியாது, அவர்களின் தொலைநோக்கு பார்வை அப்படி, இந்தியாவின் பம்பாய் தீவினை அப்படித்தான் உருவாக்கினார்கள், இன்று இந்தியாவின் நம்பர் 1 பணம் கொழிக்கும் இடம் அது.

மலேயாவில் மழை உண்டு,மலையும் உண்டு. அரிசி விளையாது. தேயிலை விளைவிக்க பனிவேண்டும், அது கிடையாது. பின்னர் என்னதான் செய்ய? ரப்பர் அவர்களுக்கு கைகொடுத்தது.

ரப்பர் எஸ்டேட் என்றால் அதிகாலையில் சென்று பாலெடுக்கவேண்டும், அந்நாளைய மலேயமக்கள் இயற்கைவாழ்வு வாழ்ந்தவர்கள், சூரியன் வந்து சுட்டால்தான் பணிக்கு வருவார்கள், இன்னொன்று மக்கள்தொகையும் குறைவு.

தமிழக மக்களோ ஏக சிக்கலில் இருந்தார்கள், நாயக்க மன்னர் வீழ்ச்சி, ஜாதிகொடுமை, வறட்சி என எங்காவது ஓடவேண்டிய நிலை (இன்றும் அப்படித்தான் என்பது வேறுகதை)அப்படி தமிழர் கூட்டம் ரப்பர் காடுவேலைக்கும் வந்து குடியேறிற்று.

அடுத்தவளமாக தாதுமணல் மலேயாவில் உண்டு, சுரங்கத்தில் வேலை செய்ய பணியாளர் வேண்டும். ஏற்கனவே ஆப்ரிக்க அடிமைகளை வெஸ்ட் இன்டீஸ்,அமெரிக்கா என கொண்டுபோய் விற்றாகிவிட்டது, இனி ஆப்ரிக்காவில் யானைதான் உண்டு.

வேறு ஆப்ரிக்க கண்டமும் இல்லை.

அவர்களை வேறு அமெரிக்காவில் மனிதர்களாக லிங்கன் அறிவித்துவிட்டார், இனி ஆப்ரிக்க அடிமை கிடைக்கமாட்டான்.

அந்த சூழ்நிலையில் சீன அரசு உள்நாட்டு குழப்பத்தில் இருந்தது, அபினிபோர் காலங்கள். உங்கள் சீன அரசனுக்கு அடிமையாய் இருப்பதை விட மலேய வந்து தாதுமணல் சுரங்கத்தை பிரிட்டிஷ் குடிமக்களாய் சுதந்திரமாய் தோண்டுங்கள் என அறிவித்தது பிரிட்டன்.

பெரும் கூட்டம் மலேயாவிற்குள் வந்தது, அதில் நான்காவது தலைமுறையில் சிங்கபூரில் பிறந்தவர்தான் லீ குவான் யூ.

மலேயாவின் ரப்பரும் தாதுமணலும் ஏற்றுமதி செய்யும் முக்கியதுறைமுகமாக சிங்கப்பூரினை மாற்றினார்கள் வெள்ளையர்கள். வேகமாக வளர ஆரம்பித்தது சிங்கப்பூர்,

இப்படியாக வளர்ந்துகொண்டிருந்த சிங்கப்பூரின் தலைவிதி இரண்டாம் உலகபோரில் மாறியது, அதாவது ஜப்பான் மொத்த மலேயாவையும் பிடித்து ஆட்டம் போட்டது, சிங்கப்பூர் துறைமுகம் எவ்வளவு கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்தது என அப்பொழுதுதான் உலகிற்கு விளங்கிற்று.

ஹிட்லரின் விக்கெட்டை வீழ்த்தியபின்னரும் அடங்காத ஜப்பான், அணுகுண்டால் தோற்கடிக்கபட்டபின் கண்ணீரை துடைத்துகொண்டு சிங்கப்பூரை விட்டு வெளியேறிற்று.

மறுபடியும் சிங்கப்பூரை பிடித்த பிரிட்டன் அதனை தந்திரமாக தன்னாட்சி பகுதி என அறிவித்து வைத்துகொண்டது, அதாவது 1957ல் மலேசியாவிற்கு சுதந்திரம் வழங்கபட்டாலும், சிங்கப்பூர் பிரிட்டனின் காலணிநாடு.

அப்பொழுது சிங்கப்பூர் மக்களுக்களின் நலனுக்காக ஒரு கட்சி இருந்தது, அதன் தலைவராக அப்பொழுது லண்டனில் பாரிஸ்டர் படிப்பு முடித்திருந்த அவர் தேர்ந்தெடுக்கபட்டார், மிகவும் சுறுசுறுப்பனவர், கறாரானாவர் என்றெல்லாம் அறியபட்டிருந்தாலும் அவரை மிகவும் கவனிக்கவைத்தது அவரின் இனநல்லிணக்கமும், மலேயாவுடன் இணைந்திருக்க அவர்காட்டிய அக்கறையும்.

1960களில் பிரிட்டன் சாம்ராஜ்யம் அஸ்தமனமாகி விடியாத இரவினை நெருங்கியது, சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் சுக்குநூறனானது. உலகவல்லரசு போட்டியில் அமெரிக்காவும் ரஷ்யாவும் பிரிட்டனை காலில்போட்டு மிதித்தன,

அவ்வளவு ஏன்? சூயஸ் கால்வாய் பிரச்சினையில் அரபுகளின் தலைவர் கர்ணல்நாசரே பிரிட்டனை பார்த்து நமது ஊர் ஸ்டைலில் சொன்னார் “ஒழுங்கா சோலிய பாரு”

ஒன்றும் செய்யமுடியாமல் வாயில் துண்டுவைத்து அழுத‌ பிரிட்டன், உலக அரசியலில் இருந்து ஒதுங்கதொடங்கி, சிங்கபூருக்கும் விடுதலை வழங்கிற்று.

மொத்த சிங்கபூரின் நம்பிக்கையாக லீ குவான் யூவினை மக்கள் நம்பதொடங்கினர். மலேயாவோடு இணைவோம் என்ற கோஷமே அவருக்கு வெற்றிகொடுத்தது.

அவர் உலகினை அறிந்தவர், மத‌ துவேஷத்தால் இந்திய பிரிவினை எல்லாம் கண்டவர், பிரிவினை மக்களை முன்னேற்றாது என்பது அவரின் நம்பிக்கை. ஓடிசென்று தாய்நாடான மலேயாவோடு சிங்கப்பூரை இணைத்தார்.

ஆனால் நிலமை சுமூகமாக இருந்தாலும் சில சிக்கல்கள் எழுந்தன, மலேயா பின் மலேசியா என மாறி இருந்தது, இஸ்லாமிய பெருமக்கள் வாழும் நாடு, அது பிரச்சினை அல்ல. அவர்கள் மிக மிக மென்மையானவர்கள், வன்முறையில் நம்பிக்கை அற்றவர்கள், புன்னகை முகத்திற்கும் களங்கமில்லா மனதிற்கும் சொந்தக்காரர்கள்.

மலேசிய மக்களை போல அமைதியானவர்களை பார்க்கமுடியாது, ஆனால் மத நெறியாளர்கள். வெறியாளர்கள் அல்லவே அல்ல.

ஒரு மதபண்டிகையில் சிங்கப்பூரில் கலவரம் வெடிக்க, அது பலவதந்திகளுடன் இன,மத கலவரமாக மாறிற்று.

மலேசிய மேல்மட்டம் கொஞ்சம் வருத்தமுற்றது, சிங்கப்பூரை மறுபடியும் தனிநாடாக விட்டுவிடலாம் என முடிவெடுத்தார்கள், அதனை அறிவித்தும் விட்டார்கள்.

உலக சரித்திரத்திலே ஒரேமுறையாக, ஒரு நாட்டிற்கு சுதந்திரம் கதற கதற திணிக்கப்ட்ட விசித்திரம் அன்றுதான் நடந்தது. இதுதான் மலேசிய மனநிலை,

பிடிக்கவில்லை சரி இனி பிரிந்துவாழலாம். வீண் பிடிவாதம்,போராட்டம்,மான பிரச்சினை, கவுரவம்,வந்தேறி பிரச்சினை,ஆண்டவம்சம் போன்ற கோஷங்கள் இருவருக்கும் நல்லதல்ல. மக்கள் அமைதியாக வாழவேண்டும்.

மலேசியா சிங்கப்பூரை வெளியே தள்ளிற்று (ஆனாலும் இனதுவேஷமில்லை, மலேசிய சீனர் மீது எந்த நெருக்கடியுமில்லை). நொடிந்துபோனார் லீ, கிட்டதட்ட காந்தி பாகிஸ்தான் பிரிவினையில் உடைந்தது போல. கவலையால் படுக்கையில் வீழ்ந்தார் லீ.

“நாங்கள் போகத்தான் வேண்டுமா?, கொஞ்சம் யோசிக்ககூடாதா?” என அவரின் கெஞ்சல்கள் எடுபடவில்லை,

அவர் என்ன? மொத்த சிங்கப்பூரும் அப்படித்தான் சொல்லிகொண்டிருந்தது, “எங்களை விரட்டாதீர்கள்…நாங்களும் உங்கள் சகோதரர்களே..”

மொத்த சிங்கப்பூரும் கதிகலங்கிய நேரம், அண்டைநாடு என எதுவுமில்லை, கொஞ்சம் தள்ளி இந்தோணேசியா. அதுவும் சிக்கலான நாடு. செயலற்ற நிலையில் நின்றது மக்கள் கூட்டம், கிட்டதட்ட நிராதரவான நிலை.

காரணம் மின்சாரமட்டுமல்ல, குடிக்கும் நீருக்கும் மலேசியாவை நம்பித்தான் இருந்தார்கள்.

படுக்கையில் இருந்து மீண்டார் லீ, சிங்கப்பூர் தனிநாடு என அறிவித்தார். உடனே சில அச்சுறுத்தல் வந்தது. இந்தோணேஷியா அல்லது சீனா அதனை விழுங்கும் அபாயம் இருந்தது.

அதற்காக ஐ.நாவில் உறுப்புநாடானார், கொஞ்சம் சுதாரித்தார்.

மக்களுக்கு சொன்னார், ஆனந்தம் படத்தில் மம்முட்டி சொல்லும் வசனம் அதுதான்

“யாரும் அழவேண்டாம், எல்லாரும் இருக்க ஒரு வீடு, பிழைக்க ஒருவேலை, உலகம் மதிக்குமளவு காசுபணம், இதுக்கு அப்புறம்தான் மனித உரிமை, மத உரிமை, பத்திரிகை உரிமை, மண்ணாங்கட்டி எல்லாம், அதுவரை உழைப்பு மட்டுமே நமது இலக்கு”

சொல்லிவிட்டு செயலில் இறங்கினார், போரினால் சீரழிந்த ஜெர்மனும், ஜப்பானும் வாழும்பொழுது நாம் ஏன் வாழமுடியாது, என உலகை எல்லாம் கணக்கிட்டார், ஒரு உண்மை புலபட்டது.

ஜப்பானோ, ஜெர்மனோ,இஸ்ரேலோ ஒரே இனமக்களின் நாடு, ஆனால் சிங்கப்பூர் பல இனமக்களின் நாடு. அற்புதமான முடிவெடுத்தார், அது இன சமத்துவமும், மத கட்டுபாடும் கண்டிப்பாக இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமில்லை.

அதனை அறிவித்துவிட்டு சொன்னார், “அந்த நாட்டைபார்த்தீர்களா பலஇனமக்கள் எப்படி ஒற்றுமையாக வாழ்ந்து நாட்டை சொர்க்கமாக வைத்திருக்கின்றார்கள், அதுவே இனி நமது கனவுநாடு”.

அது அமெரிக்காவோ கனடாவோ அல்ல, அது இலங்கை (இந்தியாவின் நட்புநாடான அதே இலங்கை).

அன்றைய இலங்கை அப்படித்தான் இருந்தது, அப்படியே தொடர்ந்திருந்தால் இன்று ஹாங்காங் அளவிற்லிகு வளர்ந்திருப்பர், புத்தமத வெறியும், இனவெறியும் நாட்டை நாசமாக்கிற்று.

இலங்கையில் மேற்கண்ட வெறிகள் அதிகமாகி நாசமாய் போக, அந்த புகையினை கூட உள்ளே விடாமல் விடாமல் அடக்கி வைத்த லீயின் சிங்கப்பூர் கொஞ்சம் கொஞ்சமாக எழ ஆரம்பித்தது.

ஆனால் லீ கண்டது பெரும் கனவு, அதாவது புலிக்கு கழுகின் சிறகுகளை பொருந்தி பறக்கவைக்கும் கனவு.

அப்படித்தான் சிங்கப்பூர் எனும் புலி பாயவில்லை, பறக்க ஆரம்பித்தது.

தொடரும்..