வ.உ.சிதம்பரம்

தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் பல சிதம்பரங்கள் உண்டு, தில்லை சிதம்பரம், விஞ்ஞானி சிதம்பரம், முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் என வரிசை பெரிது,

அவற்றில் முக்கியமானவர் வ.உ.சிதம்பரம்.
அந்த காலத்திலே படித்தவர், அதுவும் வழக்கறிஞருக்கு படித்தவர். தொழிலை சுத்தமாக செய்தவர், வசதி குறைந்தவருக்கு இலவசமாக வாதாடினார் என்றெல்லாம் அவருக்கு அப்பொழுதே பெருமை உண்டு.

ஆனாலும் சுதந்திர தாகமெடுத்தது, அது அவருக்கு மட்டுமல்ல, அந்நாளைய பொதுநலவிரும்பிகள் மற்றும் பலருக்கும் எடுத்தது, நாடு சுதந்திரம் அடையவேண்டும் என்பது அவர்கள் ஆசை, அவர்கள் நாசமாய் போகவேண்டும் என்பது வெள்ளையன் ஆசை.
பாரதியாரின் நட்பு இவரின் பாதையை மாற்றின,

பாரதியாரின் கனவுகளுக்கு வடிவம் கொடுக்க நினைத்தார். அதாவது மேலைகடல் முழுதும் கப்பல் விடுவோம் எனும் பாரதியின் கனவை கீழ் கடலில் இருந்து ஆரம்பித்தார்,

சுதேசி கப்பல் போக்குவரத்து கழகம் தொடங்கினார், வெள்ளையனின் தொழில் எல்லாம் நாம் ஏற்று நடத்தினால் அவர்கள் தானாக அடங்குவார்கள் என்பது சிதம்பரனாரின் கொள்கை, அதில் சில உண்மையும் இருந்தது.

கொழும்பிற்கு கப்பல் விட்டார், காகித கப்பலே ஒரு காகிதத்தை கிழித்தால் தான் உருவாகும். நிஜ கப்பலுக்கு அப்படி பெரும் கரன்சி நோட்டுகள் தேவை அல்லவா?, சம்பாதித்ததும் மேலும் பரம்பரை சொத்துக்களும் கப்பலாய் மாறின, ஒரு கட்டத்தில் வெள்ளையன் கப்பலை விட சுதேசி கப்பல் பெரும் லாபம் ஈட்டியது.

தென் தமிழகமெங்கும் அவரின் புகழ் பரவியது, பல சங்கங்கள் , தொழிற்சாலை என அவரின் செல்வாக்கும் பரவியது. சொல்லப்போனால் தென்மாவட்டங்களை கையில் வைத்திருந்தவர். அவர் சொல்லுக்கு தீராத பிரச்சினைகள் இல்லை, மக்கள் செல்வாக்கு அப்படி.

வெள்ளை அரசாங்கம் அவரை குறிவைத்தது, சுப்பிரமணிய சிவா எனும் அறிஞனுக்கு அடைக்கலம் கொடுத்தார் என பல குற்றச்சாட்டுக்களில் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டு, மறைமுக தொந்தரவில் கப்பல் கம்பெனியை முடக்கியது.

சிறையில் செக் இழுக்க வைத்து அவரை பழிதீர்த்தனர் ஆங்கிலேயர், பல வகையான கொடுமைகள், அதில் தனி சிறையும் உண்டு. உடல்நலம் குன்றி அவர் வெளியே வந்த பொழுது, கப்பல் கம்பெனி பெரும் நஷ்டம், விளைவு கப்பல் கம்பெனி ஆங்கிலேயர் வசம் சென்றது.
மார்கெட் இழந்த நட்சத்திரம் சினிமாவில் தூக்கி வீசபடுவதை போல, சிறை மீண்ட சிதம்பரனார் கிட்டதட்ட கைவிடபட்டார்,

காங்கிரஸ் காந்தி வசம் சென்றது, இவரோ திலகர் வழி, சில காந்திய கொள்கைகள் அவருக்கு விருப்பமானது அல்ல, சுருக்கமாக சொன்னால் அவர் சிறைவாசத்தின் பொழுது என்னவெல்லாமோ நடந்து, போராட்ட முறை மாறியது, தானாக ஒதுங்கிகொண்டார் வ.உ.சி

தமிழுக்கு வ.உ.சி செய்த தொண்டு கொஞ்சமல்ல, ஏராளமான புத்தகங்களும் எழுதியிருக்கின்றார்.

வறுமை அவரை விரட்டியது, வெள்ளையரிலும் சில ஈரமுள்ளோர் இருந்தனர், வாலேஸ் எனும் அதிகாரி அவர் மீண்டும் வழக்கறிஞராக உதவினார், நன்றிகடனாக தனது கடைசிமகனுக்கு “வாலேஸ்வரன்” என பெயரிட்டார் வ.உ.சி.

ஒரு வெள்ளையனுக்கு இருந்த மனப்பான்மை பல இந்தியருக்கு அன்று இல்லவே இல்லை.
பின்னர் பத்திரிகை,வழக்கறிஞர் என பாதையை மாற்றினார், காரணம் கப்பல் கம்பெனி அவரின் வாழ்க்கையை புரட்டி போட்டது, கடமைக்கு வாழ்ந்து இந்தியா சுதந்திரம் வாங்கும் முன்பாக இறந்தார்.

இது கிட்டதட்ட 100 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சுதந்திர போராட்ட போராளியின் வரலாறு.

சமீபத்தில் ஒரு மனு கொடுப்பதற்காக ஒரு பாமர தொழிலாளி, சுவருக்கு வண்ணம் பூசும் சாதாரண தினக்கூலி ஒரு மனு கொடுக்க கலெக்டர் அலுவலகம் வருகின்றார், அந்த கலெக்டர் ஒரு வரம்,

பழைய நியாய தர்மங்களின் ஒரே நம்பிக்கை. அவர் இவரை பற்றி விசாரிக்கும் பொழுதே கண்கலங்குகின்றார்.

அந்த சாமான்ய தொழிலாளி வ.உ.சி பேரன், சொத்துக்களை எல்லாம் நாட்டிற்காக கொடுத்து தன் சந்ததியை மிகசரியாக நடுத்தெருவில் விட்டுவிட்ட அதே வ.உ.சியின் பேரன்.

இன்று சொந்த கப்பல்கள் இல்லாத அரசியல்வாதிகள் குறைவு,

தொழிற்சாலைகள் இல்லாத அரசியல்வாதிகள் இல்லை. இவர்களில் பெரும்பாலானோர் எல்லாம் கைவீசி கொண்டுதான் அரசியல் சந்தைக்கு வந்தவர்கள் என்பது ஒன்றும் சிதம்பர ரகசியம் அல்ல.

இவர்கள் கப்பல் வாங்குவதற்குதான், தன் சொந்த சொத்துக்களை இழந்து வ.உ.சி போன்றவர்கள் கப்பல் விட்டு போராடி, செக் இழுத்திருக்கின்றனர்.

இன்றுவ.உ.சி பிறந்தநாள் நாள் , கப்பல் விட்டு அவர் போராடிய அதே கடல்வழியில் தான், இன்று பல வளங்கள் கப்பல் கப்பலாக அனுப்பபட்டு கொண்டிருக்கின்றது.

அதில் பரிதாபத்துகுரிய வ.உ.சியின் கொள்கையும், போராட்டமும் அடக்கம்.