காலங்கள் மாறலாம், காட்சிகள் மாறுவதே இல்லை..

“சிறிய கள் பெறினே எமக்கு ஈயும் மன்னே,
பெரிய கள் பெறினே
யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே,
சிறு சோற்றானும் நனி பல கலத்தன் மன்னே,
பெருஞ் சோற்றானும் நனி பல கலத்தன் மன்னே, 
என்பொடு தடி படு வழி எல்லாம் எமக்கு ஈயும் மன்னே,
அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும் மன்னே,
நரந்தம் நாறும் தன் கையால்
புலவு நாறும் என் தலை தைவரும் மன்னே,
அருந்தலை இரும் பாணர் அகன் மண்டைத் துளை உரீஇ 
இரப்போர் கையுளும் போகி
புரப்போர் புன் கண் பாவை சோர
அம் சொல் நுண் தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்று வீழ்ந்தன்று அவன்
அரு நிறத்து இயங்கிய வேலே, 
ஆசாகு எந்தை யாண்டு உளன் கொல்லோ,
இனிப் பாடுநரும் இல்லை, பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை,
பனித் துறைப் பகன்றை நறைக் கொள் மா மலர்
சூடாது வைகியாங்குப் பிறர்க்கு ஒன்று
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே.”

அதாவது சிறிதளவு கள்ளைப் பெற்றால் எங்களுக்குத் தருவான். நிறையக் கள்ளைப் பெற்றால் எங்களுக்கு அளித்து நாங்கள் பாட அதைக் கேட்டு மகிழ்ந்து அவனும் உண்பான்.

(இந்த ஜெயமுருகன் , ஜெகத்ரட்சகன் பீர் தொழிற்சாலையினை நினைத்து கொள்ளுங்கள், அவர்கள் நடத்திய கவியரங்கம் எல்லாம் நினைவுக்கு வரவேண்டும்)

சிறிதளவு சோறு இருந்தாலும் அதைப் பலருடன் பகிர்ந்து உண்ணுவான். பெருமளவு சோறு கிடைத்தாலும் அதைப் பலரோடு பகிர்ந்து உண்ணுவான். எலும்புடன் கூடிய தசைக் கிடைத்தால் அதை எங்களுக்கு அளிப்பான்.

(இந்த இடத்தில் உள்ளாட்சி தேர்தல் முதல் டெல்லி மந்திரிசபை வரை மனதில் வரவேண்டும்)

அம்புடன் வேல் உடைய போர்க்களமானால் தானே அங்குச் சென்று நிற்பான். நரந்த நறுமணமிக்கத் தன் கையால் புலவு நாற்றமுடைய என் தலையை அன்புடன் தடவுவான்.

(அவர் நடத்திய போராட்டங்களும் இன்னும் வெற்றிகொண்டான் போன்ற பேச்சாளர்களை ரகசியமாக ரசித்தததும் நினைவுகு வருகின்றது)

அவனுடைய மார்பைத் துளைத்த வேல், அரிய தலைமையையுடைய பெரிய கூட்டமாக உள்ள பாணர்களின் அகன்ற பாத்திரங்களைத் துளைத்து, இரப்போர்க் கைகளையும் துளைத்து, அவனால் பாதுகாக்கப்படுபவர்களின்கண்களில் ஒளி மழுங்கச் செய்து, அழகிய சொற்களும் ஆராய்ந்த அறிவையுமுடைய புலவர்கள் நாவில் சென்று விழுந்தது.

(கலைஞர் இல்லா திமுகவில் வைரமுத்து முதல் பா.விஜய் வரை பல புலவர்களை காணவே இல்லை)

எங்களுக்குப் பற்றுக்கோடாக இருந்தவன் எங்கு உளனோ? இனி பாடுபவர்கள் இல்லை.

பாடுபவர்களுக்குக் கொடுப்போரும் இல்லை.

ஆக பாடலை கூர்ந்து கவனியுங்கள் அதியமான் மன்னனுக்கு பின் அவனை அண்டியிருந்தோரின் புலம்பலாக அவ்வை இப்படி பாடுகின்றார்

இது கலைஞரை நம்பி இருந்த கவிஞர் கூட்டம், அரசியல் அடிப்பொடிகள் முதல் பலருக்கு பொருந்தும்

ராமசந்திரன் இறந்தபின் அங்கும் இதே காட்சிகள் வந்து போயின, அவரை பாடிபிழைத்த பலர் விரட்டி அடிக்கபட்டனர்

அவர்கள் புலம்பலும் இப்படித்தான் இருந்தது

காலங்கள் மாறலாம், காட்சிகள் மாறுவதே இல்லை..