உலகில் பரிதாபத்திற்குரிய மாணவர்கள்

பெரும்பாலான நாடுகளில் மதியம் வரைதான் பள்ளி, அதன் பின் மாணவர்கள் அவர்கள் போக்கில் விடபடுகின்றார்கள்

மதிய உணவும் ஓய்வும் அதன் பின்னான நேரத்தில் வீட்டுபாடமும் முடித்துவிட்டு ஹாயாக மாலையில் விளையாடுகின்றார்கள்

கொஞ்சமும் நெருக்குதல் இல்லை, மன உளைச்சல் இல்லை. நெருக்கடி இல்லை, இம்சைகள் இல்லை

உலகில் பரிதாபத்திற்குரிய மாணவர்கள் இந்திய குறிப்பாக தமிழக மாணவர்களே

காலை முதல் மாலை வரை பள்ளி, அது முடிந்ததும் டியூசன் அதுவும் முடிந்ததும் வீட்டுபாடம் என பிழியபடுகின்றார்கள் இன்னும் தேர்வு நேரம் என்றால் இன்னும் மகா மோசம்

மாணவர்களை கரும்பு சக்கையாக பிழிகின்றது அச்சமூகம், இவ்வளவு கஷ்டபட்டு படித்து உள்நாட்டில் சரியான வேலை பலருக்கு அமைகின்றதா என்றால் அதுவுமில்லை

மிக ஹாயாக படித்துவந்த வெளிநாட்டுகாரன் அருகில்தான் இவ்வளவு சிரமபட்டு படித்தவனும் வந்து அமர்கின்றான், இந்தியாவில் தேவை இல்லா சமாச்சாரங்கள் பாடத்திட்டத்தில் அதிகம்

மதியம் வரை படிக்க வைத்துவிட்டு, மதியத்திற்கு பின் அவர்களை சுதந்திரமாக விடுவதே அவர்களின் மனநிலையினையும், சிந்தனை திறனையும் அதிகரிக்க செய்யும்ம் என்கின்றது ஆய்வு

ராஜாஜி இதனைத்தான் தமிழகத்தில் அன்றே செய்தார், மதியம் வரை பள்ளிகள் போதும் என்றார், அவர் சொற்படி கேட்ட்டிருந்தால் மாணவ சமூகமும் இப்பொழுது நன்றாயிருக்கும்

இந்த மதிய உணவு திட்டமும் தேவைபட்டிருக்காது

அந்த அருமையான திட்டத்தைதான் குலகல்வி என இல்லா பெயர் சூட்டி அழிச்சாட்டியம் செய்து அவரை விரட்டி அவர் திட்டத்தையும் முடக்கினார்கள்

இன்று ஒவ்வொரு தமிழக மாணவர்களும் படாதபாடு படுகின்றார்கள்

நல்லவேளையாக பள்ளி மாணவர்களுக்கு வோட்டு இல்லை, இருந்தால் திராவிட கட்சிகளுக்கு ஒரு வோட்டும் விழாது

கோனார் தமிழ் உரை

தமிழக பள்ளிகளில் படித்தவர்கள் அந்த பெயரை மறக்க முடியாது, தமிழை நாம் அதன் மூலமே கற்று கொண்டோம்

தமிழ்மொழியின் இனிமையினை அப்படி புத்தகமாக கொடுத்து மாபெரும் தமிழ் பணியினை செய்தவர் அவர்

ஆம், கோனார் தமிழ் உரையினை படிக்காமல் ஒரு மாணவன் தமிழ்நாட்டில் பெயில் கூட ஆகியிருக்க முடியாது, அவ்வளவு முக்கியமான புத்தகம் அது

அதை எழுதியவர் ஐயம் பெருமாள் கோனார்

இந்த தாழ்த்தபட்டவன் அக்காலத்தில் படிக்க முடியாது, பார்ப்பான் விடமாட்டான், அய்யகோ அது ஒடுக்கிய காலம் இடுக்கிய காலம், திராவிட கட்சிதான் கல்வி கொடுத்தது பேனா கொடுத்தது , திமுகவே தமிழ் வளர்த்தது என சொல்பவன் சொல்லிகொண்டேதான் இருப்பான் அவனையும் திருத்த முடியாது அவனை நம்புவனையும் திருத்தவே முடியாது

உண்மையில் அன்றே சைவ சித்தாந்த கழகம் , மதுரை தமிழ்சங்கம் இன்னபிற கிறிஸ்தவ கல்லூரிகள் எல்லாம் கல்வி பணி செய்தன தமிழ் வளர்த்தன‌

அதில் மதுரை தமிழ்சங்கம் ஐயம் பெருமாள் கோனாரை அவரின் தமிழுக்காக அரவணைத்தது, திருச்சி ஜோசப் கல்லூரி அவரை தமிழ் பேராசிரியர் ஆக்கியது

கோனார் பேராசிரியரானது 1933ம் வருடம் அப்பொழுது திகவும் கிடையாது, திமுகவும் கிடையாது ஆனால் கோனார் ஒருவர் தமிழ்பேராசிரியர் ஆக முடிந்தது

சமூக நீதி எல்லாம் இருக்கத்தான் செய்தது, திறமை உள்ளவனை அது அரவணைத்தது, அக்காலம் அப்படித்தான் இருந்தது

ஆயர்குலம் என்பதற்காக கோனாருக்கு கல்வி மறுக்கபடவில்லை

ஏகபட்ட தமிழ் நூல்களை எழுதினார் கோனார், அவரின் பெரும் பணியினை தமிழுக்காக அவர் படும் பாட்டினை பார்த்து மனமுருகி அவரின் உரை நூல்களை மாணவருக்காக தானே வெளியிடும் பணியினை ஏற்றார் பழனியப்ப செட்டியார்

பின் கோனார் பப்ளிகேஷன் உருவானது, அதில் தான் மாணவர்களுக்காக கோனார் எழுதிய அத்தனை உரைகளும் தமிழ் உரைநடைகளும் வந்தன, எல்லோரும் படித்தார்கள்

ஆதீனங்களும், காஞ்சி மடமும் அவரை போட்டி போட்டு ஆதரித்தன, பட்டமும் பரிசும் அள்ளி கொடுத்தன‌

ஆரிய சமஸ்கிருதம் தமிழை அழிக்கும் என்பதெல்லாம் கட்டுகதை உண்மையில் அன்றைய ஆன்மீக மடங்கள் தமிழுக்கும் தமிழறிஞருக்கும் அப்படி உதவின‌

மறைக்கவே முடியாத வரலாறு அது

தமிழின் உரைநடைக்கும், இந்து மதத்திற்கும் பெரும் நூல்களை எழுதியவர் கோனார்

மார்கழி மாதமென்றால் அவர் திருப்பாவைக்கு விளக்கம் கொடுத்து பேசும்ப்பொழுது வானொலிமுன்னால் பெரும் கூட்டம் காத்திருந்தது

தமிழுக்கும், மாணவர்களுக்கும் , சமயத்திற்கும் பல அழியா அடையாளங்களை கொடுத்தவர் ஐயம்பெருமாள் கோனார்

தமிழை யாரின் புத்தகம் மூலம் பள்ளியில் படித்தோமோ அவருக்கு தமிழனாய் அஞ்சலி செலுத்தவேண்டியது கடமை

இன்று அவருக்கு பிறந்த நாள்

அந்த தமிழறிஞர் ஐயம்பெருமாள் கோனாருக்கு தமிழஞ்சலி

ஜெர்மன், பிரான்ஸ், இங்கிலாந்தில் இருந்து ஆசிரியர்களை கொண்டு வருவோம் : செங்கோட்டையன்

தமிழக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆங்கில பயிற்சி அளிக்க ஜெர்மன், பிரான்ஸ், இங்கிலாந்தில் இருந்து ஆசிரியர்களை கொண்டு வருவோம் : செங்கோட்டையன்

அப்படியானால் இங்கிருக்கும் ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என அன்னார் ஒப்புகொள்கின்றாரா?

இங்கிலாந்தில் இருந்து சரி, பிரான்ஸ் ஜெர்மனில் இருந்து எப்படி ஆங்கில ஆசிரியர் வருவார்கள்? நல்ல வேளையாக சைனா, ஜப்பான் என சொல்லவில்லை

ஆங்கிலத்தை இங்கு சுத்தமாக ஆக்க போகின்றார்களாம் நல்லது

இதெல்லாம் இருக்கட்டும், இப்படியே டாஸ்மாக்கிலும் பிரெஞ்ச் ஒயின், ஜெர்மன் சரக்கு,ஸ்பானிஷ் விஸ்கி எல்லாம் ஒரிஜினல் சரக்காக கிடைக்க இந்த அரசு ஏற்பாடு செய்யுமா என யாரிடம் கேட்பது

ஆங்கிலத்தை திருத்தும்பொழுது ஆங்கிலேயென் சரக்கையும் சீர்படுத்தினால்தான் சரி

 
 

நீட் தேர்வு போல சட்டப்படிப்புக்கும் தேர்வு வேண்டும்

நீட் தேர்வு தமிழக மாணவர்கள் மருத்துவராவதை அழித்துவிடும், இது சமூக நீதிக்கு எதிரானது என்றெல்லாம் கடந்த ஆண்டு கட்சிகள் கடுமையாக குதித்தன‌

ஆனால் கொஞ்சமும் தயக்கமின்றி மாணவ சமூகம் அந்த தேர்வுக்கு அலைமோதியிருக்கின்றது, நாங்கள் எழுதுவோம் தகுதி இருந்தால் கிடைக்கட்டும் உங்களுக்கென்ன என அவர்கள் குவிந்திருக்கின்றார்கள்

இந்த தேர்வில் வென்றால் குறைந்த செலவில் மருத்துவராகலாம் என்பது அவர்களின் ஆர்வத்திற்கு இன்னொரு காரணம்

நீட் விவகாரத்தில் தமிழக கட்சிகளின் முகமூடி கிழிந்துவிட்டது, அவர்களை சட்டை செய்ய மாணவர் சமூகம் தயாரில்லை

இது வேகமான உலகம், ஆளாளுக்கு ஓடிகொண்டிருக்கின்றார்கள். எங்கே வாய்பிருக்கின்றதோ அதை ஓங்கி தட்ட முண்டியடிக்கின்றார்கள் . இதோ தட்டிவிட்டார்கள்

தமிழகம் நீட் எழுதிய மாணவர் வரிசையில் 4ம் இடத்தில் இருகின்றது

எப்படி ஆயினும் மாணவர்கள் நீட்டை ஏற்க தயாராகிவிட்டதும், மருத்துவ கல்லூரிகளுக்கு கடிவாளம் இடபட்டுவிட்டதும் தெரிகின்றது

இந்நிலை பொறியியல் கல்லூரிக்கும் வரட்டும், தரம் இழந்திருக்கும் அந்த படிப்பும் தரம்பெறட்டும். சுயநல கல்லூரிகளின் அட்டகாசம் ஒழியட்டும்

இதே நிலை இன்னொரு படிப்பிற்கும் வரவேண்டும் என்றால் அது சட்டபடிப்பு

மருத்துவம், பொறியியல் போலவே வழக்கறிஞர் தரமும் இங்கே சொல்லும்படி இல்லை

ஏகபட்ட மருத்துவர்கள் இருக்கும் நாட்டில் ஜெயலலிதாவிற்கு லண்டன் மருத்துவரே வந்தார், இன்னும் பலருக்கு வெளிநாட்டு மருத்துவரே வருகின்றார்கள்

பல கட்டங்கள் கட்ட வெளிநாட்டு பொறியலாளர்கள் வருகின்றார்கள், மெக்கானிக்கல் , கணிணி என எல்லா துறையிலும் நிலை இதுதான்

சட்டபடிப்பு கேட்கவே வேண்டாம், காவேரிக்கு கூட வழக்காட தமிழகத்தில் நல்ல வழககறிஞர் இல்லை. இந்த எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கில் கூட வாதாட நல்ல வக்கீல் இல்லை

இந்தியா இன்னும் பிரிட்டன் அடிமையாக நீடித்தால் இந்நேரம் லண்டனில் இருந்துதான் வக்கீல்களும் வந்திருப்பார்கள்

உண்மை இதுதான்

பல விஷயங்களில் சமரசம் செய்கின்றோம் என கல்வியின் தரத்தை இழந்து நிற்கின்றோம்

திறமை இருப்பவனுக்கு வடிகட்டி வாய்ப்பு கொடுப்போம், திறமை இருப்பவனை ஒரு நாளும் இத்தேசம் கைவிடாது

அம்பேத்கரும், கலாமும் இன்னும் பலரும் அதற்கு பெரும் உதாரணங்கள்

அரசியலில் சினிமா புகுந்தது போலவே இங்கு நடந்த பெரும் சீரழிவு கல்வியில் அரசியல் புகுந்தது

இரண்டும் இப்பொழுது களையெடுக்கபடுகின்றது, இன்னும் சுத்தமாக அகற்றபடட்டும்

 

விஞ்ஞான வசதிகளை நீட் தேர்வு வளாகத்தில் பயன்படுத்தினால் என்ன?

தேர்தல் காலங்களில் கட்டிலில் கிடக்கும் கிழவிக்கு கையில் ஆயிரம் ரூபாய் கொடுத்து வாக்குசாவடிக்கு தூக்கி சென்று வாக்கு வாங்குவார்கள் தொண்டர்கள். எவ்வளவு தூரம் என்றாலும் சளைக்காமல் ஓடுவார்கள்

தலைவர்களும் ரகசிய கூட்டம் என்ற பெயரில் அவர்களை உசுப்பிவிடுவார்கள்

வீடு வீடாக சென்று அவர்கள் வாக்காள முதியவர்களை தூக்கி வரும் அழகை காண்பதற்கு அவ்வளவு ஆனந்தமாக இருக்கும், எவ்வளவு கருணை, எவ்வளவு கவனிப்பு?

யாரும் கேட்காமல் அவர்களாக வந்து அப்படி உதவுவார்கள், வாகனம் முதல் எல்லாம் இலவசம்

நீட்டுக்கு செல்லும் மாணவர்களுக்கு எந்த கட்சியும் அதன் தொண்டனும் தேர்தல் கால அவசரத்தில் உதவவே இல்லை. எல்லாம் கண்துடைப்பு

ஆனால் மக்கள் முந்திகொண்டு உதவி ஜனநாயகத்தை காத்துகொண்டிருக்கின்றார்கள்.

வாழ்க மக்கள் நாயகம்

இந்த நீட் தேர்வு மையங்களில் ஏகபட்ட சோதனை அலப்பறைகள், ஹிட்லர் காலத்தில் வதை முகாமுக்கு கொண்டு செல்லபடும் யூதர்களை சோதனை செய்வது போல் கடும் சொதனை

பூனூல் முதல் தலையில் இருக்கும் பூ வரை பிடுங்குகின்றார்களாம், ரத்தம் கசிந்தாலும் கண்டுகொள்ளவில்லையாம்

எதற்கு இதெல்லாம்?

இன்று விஞ்ஞானம் உச்சத்தில் இருக்கும் காலம். சில கருவிகளை பொருத்தினால் எந்த எலக்ட்ரானிஸ் சிக்னலும் வேலை செய்யாத அளவு தடுத்துவிடலாம்

எவ்வளவோ விஞ்ஞான வளர்ச்சிகள் உள்ள காலத்தில், கிரிக்கெட் வீரர் நடு மைதானத்தில் சிறிய தாளை எடுத்தாலே கண்டுபிடிக்க கூடிய காலங்களில் இன்னும் ஹிட்லர் காலத்து கெடுபிடிகள் ஏன்?

உளவுதுறையும், பாதுகாப்பு துறையும் பயன்படுத்தும் சமாச்சாரங்கள் ஏராளம். அதில் ஒன்றை பயன்படுத்தினாலே போதும் , சத்தமின்றி கண்காணிக்கலாம் முறைகேடுகளை தடுக்கலாம்

விஞ்ஞான வசதிகளை நீட் தேர்வு வளாகத்தில் பயன்படுத்தினால் என்ன? இந்த நெருக்கடிகள் குறையும்

அவர்களே மிகுந்த பதற்றத்துடன் எழுத வரும் மாணவர்கள். அவர்களை ஊர் ஊராக அலைகழித்து அதன் பின்னும் இப்படியான கெடுபிடிகள் மனதளவில் அவர்களை பாதிக்கும்

பின் எப்படி தேர்வு எழுதுவார்கள்?

வருங்காலங்களிலாவது இதனை தவிர்க்கட்டும், உலகெல்லாம் சுற்றும் மோடி இனியாவது நல்ல நாட்டில் தேர்வு அறை வரை சென்றுவிட்டு வரட்டும்

 
 

தமிழக கல்வி முறை : 2

நான் தேடிய என் ஆசிரியர்

அன்று மாணவர்களுக்கு 12 கட்டத்திலும் சனி, அவருக்கோ செவ்வாயோ சூரியனோ அல்லது இரண்டுமோ மகா உச்சம்.

முதல் மாணவன் நோட்டை பார்க்கும் பொழுதே அக்னி தெரித்தது, அப்படியே முதுகில் முஷ்டியை இறக்கினார், தலையில் கொட்டினார், நிமிர்ந்தால் முகத்திலும் அடி, வெளியே ஓடினான் மாணவன், அவனே அன்று பிள்ளையார் சுழி அல்ல பிள்ளையார் குத்து.

பின்னர் உள்ளே டம்டம், டப்டப், அம்மா……, டும்ம்ம்ம்ம்ம்ம்ம் என சத்தம் கேட்டு கொண்டே இருந்தது , மாணவன் முதலில் வெளியே விழுவான், பின்னர் நோட்டு, கடைசியாக பாடபுத்தக பை.

அடிவாங்குபவனை மற்ற மாணவர்கள் கவனமாக குறித்துகொண்டார்கள், ஓ முதுகில் 2 குத்து, காலில் மிதி,நோட்டால் மண்டையில் 2 அடி அவ்வளவுதான், முகத்தை மட்டும் காட்ட கூடாது,

ஒகே.சார் நான் ரெடி மனதிற்குள் சொல்லிகொண்டார்கள்.

வெளியே செல்லும் மாணவன் முணுமுணுத்தால் இன்னொரு பொருள் பறந்து வந்து தலையில் விழும், ஒரு குரலும் அசிரீரியாய் ஒலிக்கும் “மார்க்க கேளு 10ம்கிளாஸ்ல 100, ஒரு சாதாரண சுருக்கல் தெரில, குற்றாலத்தில இருக்கவேண்டியதெல்லம் இங்க..ஹெட்மாஸ்டர் வேற அவனுக எல்லாம் அறிவாளி சார் கவனிசுக்கோங்கணு சொல்றார்..கவனிக்கேம்ல உங்கள நல்லா கவனிக்கேன்”

ஒரு வழியாக மாணவர் நொறுக்கல் முடிந்து மாணவியர் வரிசை, பெண்கள் விவரமானவர்கள், அடிக்கும் முன்னமே அழுது ஓடி வந்தார்கள், அவரா விடுவார்? கூப்பிட்டு தலையில் கொட்டி,நோட்டுகளை கிழித்து வீசி தலையை பிடித்து தள்ளுவார், அவர்களும் கொடையில் ஆடும் பெண்களை போல குலவையிட்டபடியே வந்து விழுவர்.

ஒரு வழியாக எல்லோரும் தட்டு தடுமாறி எழுந்தனர், சிலர் அன்றே தீவிரவாதியாகும் முடிவு, சிலருக்கோ தற்கொலை போராளி ஆகும் அளவு கண்களில் வெறி,சிலரோ சந்திரமுகி வடிவேலு போல சிலையாக நின்றனர். நல்லவேளையாக மணி ஒலித்தது, அவர் உடனே சென்றுவிட்டார்,

ஆனால் குறைந்தது 2 வருடத்திற்காவது அவருக்கு கொலஸ்ட்ரால்,சுகர் பிரச்சினை வராது, அவ்வளவு உடல்பயிற்சி அல்லது உழைப்பு அன்று அப்படி.
வகுப்பு கலவரம் நடந்த தெருபோல சிதறிகிடந்தது, பென்ஞ், டெஸ்க்,பென்சில்பாக்ஸ் செருப்பு, தலையில் இருந்த மல்லிகை என சகலமும் சிதறிகிடந்தது, சிலர் முகமும் வீங்கி கிடந்தது.

அங்கு என்ன கைரேகை நிபுணரா வருவார் அப்படியே வைக்க?, அடுத்த இயற்பியல் வகுப்பிற்காய் ஆசிரியர்தான் வருவார், அழுதழுது ஒழுங்கு செய்தார்கள்.

மறுநாள் கணிதவகுப்பிற்கு வந்தார், ஒன்றுமே நடக்காதவர் போல பாடம் நடத்தினார், மாணவ சமூகம் மனதிற்குள் பொங்கியது, அவர் அலட்டிக்காமல் சொன்னார், “நேற்று நடந்தது சும்மா டிரைலர், மெயின் பிக்சர் ரிவிசன்ல தொடங்கும், அது டிசம்பரில், அன்று நேற்றுமாதிரி அமைதியான ஆசிரியராக என்னை பார்க்கமுடியாது”

அது அமைதியா? ஆளாளுக்கு அலற தொடங்கினார்கள், சமய வேறுபாடில்லாமல் எல்லா ஆலயத்திலும் வணங்கி முறையிட தொடங்கினார்கள், இந்து மாணவர்கள் கிறிஸ்தவ ஆலயங்களுக்கு கடாவும் , கிறிஸ்தவ மாணவர்கள் இந்து ஆலயங்களுக்கு பொங்கலும் நேர்ந்துகொண்டனர், இஸ்லாமிய மாணவர்கள் இடைவிடாமல் பிரார்த்தினர், இன்னும் என்னவெல்லாமோ நடந்தது.

அவரோ அப்பொழுதெல்லாம் அடிக்கவுமில்லை,மிரட்டவுமில்லை, ஆனால் செமினார் நடத்த சொல்ல‌ ஆரம்பித்தார், (பின்னாளி கல்லூரியில் எடுத்த செமினாருக்கு எல்லாம் அதுதான் தொடக்கபுள்ளி) தவறு செய்தால் சொல்லுவார், எல்லாம் டிசம்பரில் தெரியும் அதுவரை சிரித்துகொள் என சொல்லிவிட்டு செல்வார், ஒவ்வொரு நாளும் தேதி கிழிக்கும் பொழுது மனம் சொல்லும் பாவி டிசம்பர் ஒரு 10 வருஷம் கழிச்சி வரக்கூடாதா?

டிசம்பரும் வந்தது, கூட்டுபிரார்த்தனைக்கு எவ்வளவு வலிமை என அன்றுதான் உணர்ந்த நாள், நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ அவருக்கு மிக சரியாக ரிவிசன் தொடங்கும் நாளைக்கு முன்னால் மஞ்சள்காமலை கண்டு பாதிக்கபட்டார், மாணவர்களுக்கு +2 தேர்வு முடிந்தது போல மகிழ்ச்சி, கோஷங்கள் மட்டும் போடவில்லை

தற்காலிகமாக ஒரு ஆசிரியையை நியமித்தார்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் முன்னால் அன்னா ஹாசரே போல செய்வதறியாது புதியவர் திகைத்தார், எப்படியோ சமாளித்தார், பொதுதேர்வுக்கு 1 வாரத்திற்கு முன்புதான் திரு.செல்வன் மறுபடி வந்தார். மெலிந்திருந்தார், கொஞ்சம் தாடி வளர்ந்திருந்தது, தனது கடமை செய்யமுடியாமல் போன ஒரு வருத்தம் முகத்தில் தெரிந்தது, தப்பித்த பெருமை மாணவர்களிடம் தெரிந்தது.

அதன் பின் அவரை பார்க்கமுடியவில்லை, படித்துமுடித்து ஒரு கல்லூரியில் கல்லீரல் கரைய பாடம் நடத்தும்பொழுதுதான் அவரின் மனநிலை முழுதுமாக தெரிந்தது, இவர்கள் கணிப்பொறி மாணவர்கள், தானாக முயற்சி செய்தால் நிச்சயமாக அவர்களால் நன்கு படிக்க முடியும், ஆனால் பிராக்டிக்கல் மார்க் அல்லது வேறு மிரட்டல்கள் காட்டித்தான் படிக்க வைக்க முடிகிறது,

ஒரு மிரட்டலுக்கும் வழி இல்லாத திரு.செல்வன் அவர்கள் எப்படித்தான் கணிதத்தினை பயிற்றுவிக்கமுடியும்? அதுவும் +2 பொதுதேர்வு, நிறைய பெயில் என‌ நேர்ந்தால் மேலிடத்திடம் அவர் என்னதான் சொல்லமுடியும், அவர் அன்று மனதில் மாபெரும் உயரத்தில் தெரிந்தார்,

அவரென்று அல்ல ஜென்ம எதிரிகள் என மனதிற்கு அறியபட்ட அனைத்து ஆசிரியர்களும் தேவதூதர்களாக தெரிந்தார்கள்.

ஒரு ஆசிரியனாக அனுபவபட்டபின் அத்தொழிலின் சிரமம் புரிந்தது,

களர்நிலத்தை திருத்தி கழனியாக்கலாம் சிரமம்தான், ஆனால் ஒரு உழைப்பில் முடிந்தது பிரச்சினை. ஆனால் வருடம் வருடம் களர்நிலத்தை கழனியாக்கும் உழைப்பு எவ்வளவு கடினம், அதனைத்தான் ஆசிரியர்கள் செய்கின்றார்கள்.

அவரது கோபத்திற்கும்,மத்தள இசைக்கும் பின்னாளில்தான் அர்த்தம்புரிந்தது.

கல்லூரியில் வேலை பார்க்கும்பொழுது தற்செயலாக அவரை சந்தித்தேன் முகத்தில் சந்தோஷம் மிளிர ஒரு குழந்தையை போல கேட்டார் “எல என்ன படிச்சா நீ. இப்பொ என்ன செய்றா..”

“எம்.சி.ஏ படிச்சேன் சார் இப்போ ஒரு காலேஜில லெக்சரரா இருக்கேன்”

கிட்டதட்ட 7 ஆண்டுகள் கழித்து காது குளிர்ந்தது, அதேதான்

“சாவு கிராக்கி..கிறுக்கால பிடிச்சிருக்கு எம்.சி.ஏ முடிச்சிட்டு எவனாது இந்த பக்கம் கிடப்பானா, ராத்திரி பஸ் ஏறுனா காலைல பெங்களூரு..போய் வேலைய தேடுல..ஆளும் மண்டையும்..உனக்கெல்லாம் எவம்ல எம்.சி.ஏ டிகிரி குடுத்தான்..” நீண்ட அர்ச்சனை.

இதுதான் ஆசிரிய குணம், தனது மாணவன் வழிதவறி போய்விடுவானோ என்ற அச்சமும் பரிதவிப்பும், இந்த அக்கரைதான் ஆசிரியரின் ஆணிவேர். ஒவ்வொரு ஆசிரியரின் கோபத்திற்கும்,கண்டிபிற்கும் பின்னால் இதுதான் ஒளிந்திருக்கின்றது.

ஒருவழியாக கல்லூரியை விட்டு ஓடிவிட்டேன், இன்று கணிப்பொறி மென்பொருள் தொடர்பான பணிதான், ஆனால் பார்த்தால் என்ன சொல்லுவார் தெரியுமா?

“சாவு கிராக்கி.. மலேசியாவுல என்னத்த புடுங்குறா?..அங்க எவம்ல போவான்..ரப்பர் தோட்டத்துக்கு பால்வெட்டயா?.இல்ல பாம்யில் எடுக்கயா?., அமெரிக்கா போல ..ஆளும் மண்டையும்..” இதுதான் அவர் பாணி.

மறைமுக ஆசீர்வாதம், உள்ளுக்குள் நிறைவு.

பின்னாளில் பள்ளியை பார்க்கசென்றேன், அவரை தேடினேன், அவர் ஓய்வுபெற்றதாக சொன்னார்கள், அவர் இல்லாத பள்ளியை பார்க்க மனதிற்கு ஏனோ பிடிக்கவில்லை திரும்பிவிட்டேன்.

தமிழக கல்வி முறை : 1

எப்பொழுதுமே தமிழக மாணவனுக்கு 10ம் வகுப்பு வரை ஒரு குழப்பமும் இல்லை, அதனை தாண்டிய பின்னர்தான் உலகம் அவனை குழப்போ குழப்பு என்று குழம்பும், பிஞ்சாகவும் இல்லாமல் முழு பழமாகவும் இல்லாமல் , உலகினை புரிந்தும் புரியாமல், மலர்ந்தும் மலராதா ஒரு பருவம் அது.

அப்பொழுதுதான் பலபேரும் வந்து ஆலோசனை சொல்கிறோம், வழிகாட்டுகிறோம் என மாணவனின் தோள்மீது ஏறி கண்ணை பொத்துவார்கள், காதினை திருகுவார்கள், இன்னும் பல அழிச்சாட்டியம் நடக்கும், அவனை சுயமாக யோசிக்க விடவே மாட்டார்கள், உதாரணம் காட்டியே பயமுறுத்துவார்கள்.

இக்காலத்தில் 10ம் பொதுதேர்வில் 495 எல்லாம் அனாசியமாக அள்ளுகின்றார்கள், அக்காலத்தில் 440 கூட இமாலய சாதனை. அதுவும் திக்கி திணறி 400ஐ நெருங்கிவிடால் அவனது காதில் பல குரல்கள் கேட்கும்
“11ம் வகுப்பில் முதல் வகுப்பு எடுக்காவிட்டால் உன்னை மதிக்க மாட்டார்கள்”, என்ன மதிப்பு என்று மட்டும் யாரும் சொல்லவே மட்டார்கள், யார் மதிக்கமாட்டார்? இந்திய பிரதமரா அல்லது உள்ளூர் கவுன்சிலரா என்றேல்லாம் சொல்லமாட்டார்கள், மதிப்பில்லை அவ்வளவுதான்.

இதை போல நிறைய அனுமானங்கள், இந்தியாவில் ஒரு மாணவன் படிப்பதே பெற்றோருக்கும் மற்றவருக்கும் தான், அவனுக்காக அல்லவே அல்ல, வேறு வழியின்றி மாணவனும் முதல் வகுப்பு பற்றி விசாரிப்பான்.

1980களில் வள்ளியூர் பகுதி பள்ளிகளில் கள்ளிகுளம் பள்ளியும் குறிப்பிடத்தக்க ஒன்று, வள்ளியூர் முதல் பலபகுதி மாணவர்களும் அங்கு படிப்பார்கள், ஒரு மாணவன் அப்படி அப்பாவியாய் அப்பள்ளியின் முதல்வகுப்பினை பற்றி விசாரித்தால், அவனுக்கு வியர்த்து வழியும், வியர்வை தவிர வேறு வகையிலும் உடல் நனையும். அப்படித்தான் அந்த ஆசிரியரை சொல்லி பயமுறுத்துவார்கள், அம்புலிமாமா கதையில் வரும் பிரம்மராட்சரை போல மனம் கற்பனை எல்லாம் செய்யும், அப்பெயருக்கு சொந்தகாரர் கணித ஆசிரியர் திரு.அந்தோணி செல்வன்.

படிக்கும் பொழுது அவரது பெயரை கேட்டாலே அலறும், இப்போது படித்து முடித்து இப்பொழுது பணியிலிருப்போரிடம் பெயரை சொல்லுங்கள், கேட்ட உடனே புன்ன்கை பூக்க சிரிப்பார்கள்.

அவரது சுவராஸ்யம் அப்படி, அதிரடிகள் அப்படி, மிக இயல்பாக சொல்லி செல்லும் வார்த்தைகள் அப்படி.
ஒருவழியாக வகுப்பும் தொடங்கிற்று, பாடம் நடத்துவார், கணிதமல்லவா புரியும் ஆனால் புரியாது, அவரோ மிக சுருக்கமாக ஆனால் கருத்தாக விளக்குவார், அவ்வளவுதான் பாடம் இனி நீங்கள் மீதியினை செய்யுங்கள் என சொல்லிவிட்டு அமர்ந்து கொள்வார்.

சோறினை பிசைந்து ஊட்டிவிட்டு, அம்மாவே வாயையும் துடைத்து விட்டு பழக்கபட்டவன் தமிழக‌ மாணவன், ஆசிரியரே சகலமும் கற்பித்து முடிக்கவேண்டும், நாம் கொஞ்சம் புரிந்தோ அல்லது + குறிவரை மனப்பாடம் செய்தோ தேர்வில் தேறவேண்டும் என்பதே அவனுக்கு தெரிந்த “படிப்பு”, அவரோ நீ சுயமாக முடித்துகாட்டு என்கிறார், எப்படி நடக்கும்?

பின்னர் அதுதான் நடக்கும், அங்கும் ஆரம்பித்தது “இதால ஆன்சர் சாவு கிராக்கி, ஒழுங்கா போடுல, கேட்டா 10ம் கிளாஸ் கணக்குல 95 மார்க்..” என்று முதல் அதிர்ச்சி கொடுத்தார். “சாவு கிராக்கி” எனும் வார்த்தை அப்ப‌பகுதி வார்த்தை அல்ல, டிக்சினரியில் தேடும் முன் சென்னைதமிழ படங்களை பார்க்கமுடிந்ததால் அர்த்தம் விளங்கிற்று.

அடுத்த அடுத்த வகுப்புகளில் இன்னமும் முன்னேற்றம், கணக்கினை முடிக்க சொல்லி ஒவ்வொருவராக பார்த்துகொண்டே வருவார், ஒரு மாணவன் ஏதோ ஒரு கணித குறியினை மறந்திருப்பான், அவர் கவனித்து மெதுவாக கேட்பார் “படித்து என்ன ஆக போறா..”, மாணவன் மகிழ்ந்து சொல்லுவான் “டாக்டர் சார்”, அப்பொழுதுதான் கருத்தை பிடிப்பார் “அது இருக்கட்டும்ல இதுல ஒரு ஸ்குவர் வரணும எங்க?”, மாணவன் “மறந்துட்டேன் சார்” என்பான்

அப்பொழுதுதான் உரக்க சொல்லுவார் “இப்படித்தாம்ல நாளைக்கு ஆப்பரஷன் பண்ணிட்டு கத்திரிகோல உள்ளவச்சி தச்சிட்டு மறந்துட்டும்பா..உனக்கெல்லாம் டாக்டர் ஆச..” சொல்லிவிட்டு முதுகில் டிரம்ஸ் சிவமணி வேலையை தொடங்குவார்.

இன்னொரு மாணவன் கணக்கிற்கும், விடைக்கும் சம்பந்தமில்லாமல் ஏதோ செய்திருப்பான், அவனிடம் கேட்பார் உனக்கென்ன ஆசை அவன் இன்சீனியர் என்பான், திடீரென அவனை குனியவைத்து கும்முவார், கும்மிகொண்டே சொல்லுவார் “உன்ன இன்சினீயர் ஆக்குறதுக்கு பதிலா ஒரு குரங்க ஆக்கலாம், 2ம் ஒரே வேலைதான் செய்யும்”, பாம்பின் வாய் தவளையாக அவனும் கத்துவான், “சார் மறுபடி செய்றேன்” சார், அவர் விடமாட்டார்

“ஓ.. ஒரு பாலம் கட்ட சொன்னா இடிச்சி இடிச்சி 10 பாலம் கட்டுவியோல உன்ன விடகூடாதுல…”

அன்றிலிருந்து எல்லா மாணவனும் டாக்டர்,பொறியியல் கனவுகளை மனதோடு மட்டும் வைத்துகொண்டனர்.
ஒரு நாள் மேட்ரிக்ஸ் நடத்திகொண்டிருந்தார், வழக்கமான சோதனை, ஒரு மாணவனிடம் விடை கேட்டார் அவன் சீரோ என்றான், “உன் மார்க்க கேக்கல, ஆன்சர் சொல்லு என்றார், அவன் மறுபடியும் சீரோ என்றான், அவனது நோட்டையே பார்த்துகொண்டு அமைதியாக சொன்னார் “நீ கவனிக்கப்டவேண்டியவன் கணித உலகிற்கே இது புதுசு”,

அவனோ ராமனுஜத்தை கற்பனையில் நெருங்கிகொண்டிருந்தான், சத்தமாக சொன்னார்,”இதுண்ணு இல்ல உன்கிட்ட எந்த கணக்கை கொடுத்தாலும் நீ சீரோ தான் ஆன்சரா கொண்டு வருவா..” சொல்லிகொண்டிருக்கும் பொழுதே நோட்டிற்கு சிறகு முளைத்து பறந்தது, காதில் மத்தள இசை கேட்டது.

மாணவர்களுக்கு கவலை அதிகம், அதில் முதலிடத்தினை கணித வகுப்பு பிடித்துகொண்டது, ஆனால் அவர் திட்டும் விதத்தினை ரசிக்கலாம்.அடி மட்டும் தான் வில்லங்கம்.
அவரை புரிந்துகொள்ளவில்லை அதுதான் பிரச்சினை.

அவரின் ஆசிரிய மனநிலை இதுதான், இவர்கள் எல்லாம் நன்கு படிப்பவர்கள், வடிகட்டி எடுக்கபட்ட மாணவர்கள், கணிதம் சிக்கல்தான் ஆனால் இவர்களால் முடியும், நாளை மருத்துவம்,பொறியியல் என எவ்வளவு சிக்கலான படிப்புக்களை தாங்களாக படிக்கவேண்டும், ஒரு கட்டத்திற்கு மேல் மாணவன் தானாக படிக்கவேண்டும், ஆசிரியர் வழிகாட்டுவார் அல்லது தெளிவு கொடுப்பார். அப்படியும் தெளியமாட்டேன், முழுகணக்கையும் ஆசிரியர்தான் செய்யவேண்டும் என்றால் எப்படி? சொல்லியாகிவிட்டது கேட்கவில்லை, திட்டினாலும் சிரிக்கிறான், வேறு என்ன செய்வது டிரம்ஸ் இசைதான்.

ஆனால் அட்டகாசமாய் வகுப்பினை கொண்டு செல்வார், மடப்புரம் கார்த்தீசன் முதல் பெரும் அறிவாளிகள் வரை அறிமுகபடுத்துவார், தனிபட்ட முறையில் ஆலோசனைகளை வழங்குவார், ஒரு கணக்கினை நடத்திவிட்டு அதற்கும் கணிப்பொறி மொழிக்கும் இருக்கும் தொடர்பினை சொல்லுவார், ஆர்வகோளாறிலோ அல்லது பயந்தோ உயிரியல் மாணவன் “ஆமாம் சார் அப்படித்தான் என்றால் அதிரடியாக சொல்லுவார் ” நா சொல்றது கம்பியூட்டர் சயின்ஸ்க்கு.. நீ தவளை ஓணான வெட்டிக்கிட்டு கிடப்பா..போல”

சரியாக மணி ஒலித்ததும் வகுப்பிற்குள் வருவார், மணி மறுபடி ஒலிக்கும் பொழுது அப்படியே நிறுத்துவார். மறுநாள் வந்து அட்டகாசமாக விட்ட இடத்திலிருந்து தொடங்குவார், நாளொரு கணக்கும் பொழுதொரு வார்த்தையும் நொடிக்கொரு முதுகு சாத்தலுமாய் வகுப்பு சென்றது.

அவர்தான் தேசிய மாணவர் படையின் இயக்குநரும் கூட, ஒரு முறை ஒரு மாணவனுடன் அமைதியாக 4 நிமிடம் பேசிக்கொண்டிருந்தார், அவர் சென்றபின்னால் அவன் மிகுந்த அதிர்ச்சியாய் இருந்தான், ஒன்றுமில்லை அவன் சில பயிற்சிகளுக்காக அகமதாபாத் செல்லவேண்டும், அவனுக்கு வழியும் குறிப்புகளும் கொடுத்திருக்கிறார் 3 நிமிடத்தில், வள்ளியூர் ஆஸ்பத்திரிக்கு வழிசொல்வது போல, கடைசியாக சொன்னாராம் “தைரியமாய் போல”.

அவனும் சென்றான், அதற்கு முன்பு அவன் நெல்லையை தாண்டியதில்லை, இன்று போல செல்போன்களும் இல்லை, கொஞ்சம் தைரியம் , துல்லியமான குறிப்புகள் அவ்வளவு போதும் பயணத்திற்கு அவர் அதைதான் கொடுத்தார், அவன் இன்று இந்திய ராணுவத்தில் மேஜர்.

பள்ளிக்கு வெளியே எந்த மாணவனையும் கண்டுகொள்ள மாட்டார், வகுப்பில் அடிக்கும் பொழுது கூட அவன் கிரிக்கெட் ஆடியதை கண்டிக்கமாட்டார், கணித முயற்சி செய்யவில்லை அதற்குதான் அடி, காலை பள்ளிக்கு நமக்கு எதிரில்தான் வருவார், ஒன்றாக நுழைவார், நுழைந்ததும் முன்னால் வந்து நின்று கேட்பார் “ஏம்ல லேட்.உங்க ஊர் என்னல‌ 7 கடலுக்கு அங்கயாயல இருக்கு..ஆளும் மண்டையும்…”

தனிபட்ட முறையில் மாணவர்களுக்கு அவர் வழங்கும் ஆலோசனைகள் அதிகம், கணித ஆசிரியர்தான் ஆனால் பங்குவர்த்தகம் மற்றும் வருமானவரி பற்றி துல்லியமாக பேசுவார், அவரிடம் பங்குவர்த்தக கதைகளை கேட்ட மாணவர் இன்று திறமையான பங்குசந்தை வித்தகர், இவ்வளவிற்கும் அவர் கணிதபாடத்தில் பெயில். ஒருமுறை சொன்னார்

“என்னல டாக்டர், இன்சீனியரு, அவனவன் ஓணான் கூட இல்லாத காட்டுக்குள்ள இஞ்சினியரிங்காலேஜ் கட்டிட்டு இருக்கான், இன்னும் கொஞ்சகாலத்துல ஆடுமேய்க்கவும் கூட இஞ்சினியர் வருவான்..வருமான வரி ஆபீசர் ஆனா அள்ளலாம்ல, அங்க குமாஸ்தாவா இருந்தாலும் போதும் டாக்டரவிட அதிகமா வரும்ல அதான் இப்போ இந்தியா”

இன்று அதெல்லாம் உண்மையாகிவிட்ட காலங்கள்.

ஒருவழியாக 12ம் வகுப்பும் வந்தது, மாணவர்கள் கணிப்பொறி வேகத்தில் படித்து, ரோலர் கோஸ்டர் வேகத்தில் தேர்வெழுதவேண்டும், மாணவனுக்கு சினிமா,கிரிக்கெட்,திருவிழா,கல்யாணம்,ஊர்சுற்றல் என எல்லாம் தடை, பார்ப்பவர்கள் கூட கவனமா படிப்பா என்று சொல்லியே பயம்காட்டுவார்கள், ஆப்பரேஷனுக்கு காத்திருக்கும் நோயாளி போலவே சமூகம் அவர்களை பரிதாபமாக பார்க்கும்.

ஆனால் அந்த ஆசிரியரோ ராணுவ அதிகாரி போல +2 யுத்தத்திற்கு தயார் படுத்த ஆரம்பித்தார், முதல்நாளிலே கட்டளை பிறந்தது “எலேய் நீ டாக்டராவு, இஞ்சீனியராவு இல்ல ஏதும் ஆவு அது பிரச்சினை இல்ல..என்ன பொருத்தவரைக்கும் நீ பாஸ் ஆகி போ..அவ்வளவு போதும் 4 மாசம்தான் பாடம், அப்புறம் நீ பாடம் நடத்தணும் அதான் ரிவிசன்”

அவ்வளவுதான் மாணவர்கள் மாற்றுவழி தேடினர், எல்லா டியூசன் வீடுகளும் நிரம்பி வழிந்தன‌, சில தைரியமான மாணவர்கள் திரு.செல்வன் அவர்களிடமே டியூசன் சேர்ந்தனர், அங்கும் அவர் அதே இயல்புடனே தான் இருந்தார்,

அதுதான் “முயற்சி செய், உன்னால் முடியும், ஆசிரியன் ஒரு வழிகாட்டி, தவறானால் திருத்துவான் அவ்வளவுதான், நீ ஒருவனே உன் அறிவினை வளர்த்துகொள்ள முடியும், காப்பாற்றிகொள்ளவும் முடியும்”

அவரது ஆசிரிய பணியின் தத்துவம் இதுதான் ஆனால் இயற்பியல், வேதியல்,உயிரியல்,கணிதம் ஒவ்வொன்றிற்கும் இரு புத்தகம் வேறு இதற்கிடையில் ஆங்கில இலக்கணமும், தமிழ் செய்யுள்களும் வேறு தாங்குமா?

மாணவர்கள் தங்கள் பெயரைகூட மறந்து படித்துகொண்டிருந்த பொழுது, ஒரு நாள் அவர் சொன்ன கணிதத்தினை மறந்தும் விட்டார்கள், அன்றுதான் அவர் தனது யுத்த திட்டத்தில் ஒரு பெரிய முடிவுக்கு வந்தார்

வருவார்..