தமிழக நிலை என்ன?

இந்த ரயில்வே வேலை வடமாநில இளைஞனுக்கு செல்கின்றது, ஏராளமான வேலை வாய்ப்புகளை தமிழரை புறக்கணித்து வடமாநிலத்தவனுக்கு கொடுக்கின்றார்கள் என்ற குரல் வலுத்து வருகின்றது

இங்கு கட்டடம் கட்ட, பெயின்ட் அடிக்க, ரெஸ்டாரண்டுகள், மில்கள் எல்லாம் வடநாட்டு தொழிலாளரால் ஏற்கனவே நிரம்பியாயிற்று அதை யாராவது பேசுவார்களா என்றால் இல்லை

ஆம் இங்கு ஒருமாதிரி சமூகம் பெருகி வருகின்றது, ஒரு காலத்தில் உழைப்பிற்கு பெயர்பெற்ற தமிழன் இப்பொழுதெல்லாம் அந்த பெயரை தக்க வைக்க ஆர்வம் காட்டுவதில்லை

டாஸ்மாக் கடையிலும் இன்னும் எங்கெல்லாமோ குவியும் தமிழனுக்கு வேலை செய்ய வடமாநிலத்தானே வரவேண்டியதாயிற்று

இப்பொழுது மத்திய அரசு பணி எல்லாம் வடமாநிலமா என பொங்குகின்றார்கள், ஆனால் டெல்லி மும்பை கல்கத்தா பாட்னா என வடமாநிலங்களில் தமிழர்கள் நல்ல வேலை பார்ப்பதையும் வசமாக மறுக்கின்றார்கள்

ஆய்வு சொல்வது இதுதான்

வடமாநில இளைஞர்கள் முன்னேற துடிக்கின்றார்கள், பள்ளியிலே எதெல்லாம் வேலை வாய்ப்போ அதெற்கெல்லாம் முயற்சிக்கின்றார்கள்

முன்பு அதிகம் படிக்காதவர்கள் இப்பொழுது எல்லா தேர்வுக்கும் தயாராக வருகின்றார்கள்

அதுவும் மக்கள் தொகை மிகுந்த மாநிலங்களில் அவர்கள் கடும் தயாரிப்போடு வருகின்றார்கள்

தமிழக நிலை என்ன?

விஜய்படம் ,அஜித்படம் வரும்பொழுதும் நிலமை உங்களுக்கே தெரியும்

இந்த டிவி மீடியாக்கள் ஆக்கிவைத்திருக்கும் கூத்தாடும் குத்தாட்ட தலைமுறை பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை

மற்ற மாநிலங்கள் எல்லாம் இளைய தலைமுறையினை காத்துகொண்டிருக்க இங்கு சினிமா, அரசியல்,சாதி, டிவி, டாஸ்மாக் குடி குத்தாட்டம் என ஒரு தலைமுறை வீழ்ந்துகொண்டிருக்கின்றது

வடமாநிலத்தவன் கற்று தேர்வு எழுதினால் இவனும் எழுதலாம் யார் தடுத்தார்கள்?

ரயில்வே மட்டும்தான் உண்டா? வேறு தேர்வுகளே இல்லையா?

1960களில் தமிழர் வடக்கெல்லாம் சென்றார்கள்

ராணுவ உச்சம் முதல் ரயில்வே உச்சம்வரை பெற்றார்கள், வடக்கத்தியவன் எவனும் அய்யகோ தமிழர் அதிகாரம் என பொங்கவில்லை

மும்பை, டெல்லி என ஏராளமான தமிழர் குடிபுகுந்தார்கள் அவர்கள் வரவேற்றார்கள்

ஆனால் அவர்கள் இங்குவந்தால் விடமாட்டார்களாம்

“வடக்கு வாழ்கின்றது தெற்கு தேய்கின்றது” என்பது அண்ணா கும்பல் மனமறிந்து சொன்ன பொய்

ஆம் அன்று தெற்குதான் வாழ்ந்தது, வடக்கு வாழதொடங்கவே இல்லை

இன்றுதான் அவர்கள் ஓரளவு வளர ஆரம்பிக்கின்றார்கள், அவர்களும் வளரட்டும்

என்றுமே தமிழகம் இந்தியாவோடு ஒட்ட கூடாது என சொல்லும் கும்பல் ஏதாவது ஒன்றை சொல்லிகொண்டே இருக்கும்

இந்தி எதிர்ப்பு, இந்து எதிர்ப்பு, ஈழபிரச்சினை என எதையாவது சொல்லிகொண்டே இருப்பார்கள்

அதில் சிக்கித்தான் தமிழகம் இவ்வளவு நாசமாகிவிட்டது

மொத்த இந்தியாவினையும் சுற்றிவாருங்கள், இப்படி நடிகனையும் , டாஸ்மாக்கையும் , சாதியினையும் கொண்டாடும் இளையதலைமுறை போல எந்த மாநிலத்திலுமில்லை

அவர்கள் எல்லாம் தெளிவாக இருக்கின்றார்கள், வீழ்ந்து போனது நாமே

நம்மை நாமேதான் பார்த்து வெட்கபட வெண்டுமே தவிர, அய்யகோ தமிழனுக்கு ரயில்வேயில் இடமில்லை என மறுபடியும் தண்டவாளத்தில் தலைவைத்து படுக்கும் போராட்டத்திற்கு பலர் கிளம்புகின்றார்கள்

இவர்களிடம் தமிழர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது, இவர்களால் ஒருகாலமும் நல்லதை தமிழகத்திற்கு செய்யவே முடியாது

இவர்கள் மனம் முழுக்க முழுக்க அரசியலை யோசிக்குமே அன்றி தமிழக நலம் என்பதைபற்றி கொஞ்சமும் யோசிக்காது

இவர்கள் சொல்வதெல்லாம் செய்வதெல்லாம் தமிழரை பயமுறுத்தி செய்யும் அரசியல் அதில் ஒருகாலமும் உண்மை இல்லை, சுயநலம் மட்டுமே உண்டு என்பதுதான் வரலாறு முழுக்க காணபடுகின்றது

இனியாவது தமிழகம் இவர்களிடம் விழிப்பாக இருக்கட்டும்

ஏற்கனவே ரயில் தண்டவாளத்தில் அழிச்சாட்டியம் செய்து ஆட்சியினை பிடித்தவர்கள் இருந்த தமிழ்நாடு இது, அதனால் ரயில் என்றாலே பல தமிழக‌ அரசியல்வாதிகளுக்கு தனி சந்தோஷம் வந்துவிடுகின்றது.

உண்மையினை சொல்கின்றோம், இப்போதுள்ள இளைய தலைமுறை உழைக்க தயங்குகின்றது, பைக்கும் போனுமாக ஒருமாதிரி அலைகின்றது

கடின உழைப்பிற்கோ படிப்பிற்கோ அது தயாராக இல்லை, வெறும் வீண் ஆரவாரம் , பொழுதுபோக்கு, ஆட்டம் பாட்டம் என தறிகெட்டு திரிகின்றது

அந்த இளைஞர்களைத்தான் இந்த அரசியல்வாதிகள் குறிவைத்து தவறாக நடத்துகின்றார்கள்

கெட்டுகொண்டிருக்கும் நாம் உருப்பட்டு கொண்டிருக்கும் வடமாநில இளைஞர்களை பார்த்து இங்கே வராதே என்பதெல்லாம் சரியே அல்ல‌

// இதில் கவனிக்கவேண்டிய விஷயம் வருங்காலத்தில் ரயில்வே முழுக்க எந்திரமயம் ஆகிவிடும், மனிதவள மிக சுருங்கிவிடும்

முழுக்க முழுக்க தானியங்கி முறையே வரும், ஆட்கள் தேவை அவ்வளவு இருக்காது

வெட்டி அலுவலர்களை வீணாக வைத்திருக்கமாட்டார்கள்

அப்பொழுது தொழில்நுட்பமே ஆதிக்கம் செலுத்தும், தானியங்கி நுட்பத்தின் பின்னால் அதை கற்றவர்கள் பணியாற்றுவார்கள்

அதற்கான‌ நல்ல படிப்பினை படியுங்கள், வேலை தேடிவரும் //