ஜாதி ஒடுக்குமுறையும் அதில் பாதிக்கபட்டவனுக்குத்தான் தெரியும்

தலைவலியும்,காய்ச்சலும் மட்டுமல்ல ஜாதி ஒடுக்குமுறையும் அதில் பாதிக்கபட்டவனுக்குத்தான் தெரியும்

இந்தியாவின் ஜாதிய கொடுமைகள் தெரியவேண்டுமானால் அம்பேத்கரின் வாழ்க்கையினை ஒருமுறை படியுங்கள், காந்திக்கு சற்றும் குறையாத மாமனிதன் அவர் என்றான் ஒரு மேல்நாட்டு அறிஞர்

“உங்கள் கோயிலுக்குள் நாங்கள் நுழையமுடியாது, உங்கள் வீதிகளில் நாங்கள் நடக்கமுடியாது, உங்கள் உடைகளை போல நாங்கள் அணியமுடியாது, உங்கள் கிணறு எமக்கு நீர் தராது, காரணம் எங்களை தீண்டினாலே பாவம் எனும் நிலையில் எப்படி வாழ்வது?” அவர் பல போராட்டங்களை நடத்தினார்

அதில் ஒன்றுதான் மகத் சத்தியாகிரகம் இதே மார்ச் 20ம் நாள், 1927ல் நடந்தது

அதற்கு காரணம் பெரியாரின் வைக்கம் போராட்டம், அதுதான் அம்பேத்கருக்கு வழிகாட்டியது

மக்களை திரட்டினார்

“நாமும் மற்றவர்களைப் போல் மனிதர்கள் தாம் என்பதை நிரூபிப்பதற்காக மட்டுமே நாம் அந்த குளத்திற்கு போக விரும்புகிறோம் , ” என சொல்லிவிட்டு கிளம்பினார்

தடையினை மீறி அந்த பம்பாய் மகத் பகுதி ஆலயகுளத்திற்கு சென்று நீராடினார், அது பெரும் புரட்சியாயிற்று

வட இந்தியாவில் நடந்த முதல் தலித் உரிமை போராட்டம் அதுவே, உலகம் அதை உற்று பார்த்தது, அம்மக்களின் உரிமை போராட்டத்தை அது ஆணித்தரமாக சொல்லிற்று

மேல் வர்க்கத்திற்கு சர்ச்சையுமாயிற்று

தீண்டாமை கொடுமை நடந்துவிட்டதாகவும், அபச்சாரம் நிகழ்ந்ததாகவும் பூஜைகள் ஆகமவிதிபடி நடந்தன‌

அம்பேத்கர் பின்னாளில் சாதியற்ற புத்தமதத்திற்கு திரும்ப இதுதான் முதல் காரணம்

அது பெரும் சட்ட திருத்தம் இல்லா காலம் என்பதால் அம்பேத்கருக்கு அது தோல்வியே

ஆனால் 10 ஆண்டுகளில் அக்குளம் எல்லா மக்களும் பயன்படுத்தலாம் என தீர்ப்புபெற அச்சம்பவம் காரணமாயிற்று

தலித்துகளின் விடுதலை அதிலிருந்துதான் தொடங்கிற்று

இதெல்லாம் பிராமண கொடுமை என சொன்னாலும் இதன் எதிரொலி தென்னகத்திலும் இருந்தது

ஆம் வடக்கே அம்பேத்கர் செய்த மகத் புரட்சி மதுரை ஆலய நுழைவு போராட்டமாகவும் வெடித்தது

அதை செய்தவர் வைத்தியநாதய்யர் எனும் பிராமணர், அவருக்கு உதவியவர் முத்துராமலிங்க தேவர்

கவனித்து பாருங்கள்

அந்த கொடுமையான காலகட்டத்தில் முழுக்க வைதீக கட்டுபாடுகளில் இருந்த காலத்தில் நல்ல பிராமணர்களும் இருந்திருக்கின்றார்கள்

அப்படித்தான் பசவண்ணா கன்னடத்தில் பெரும் புரட்சி செய்திருக்கின்றார் அதுவும் 12ம் நூற்றாண்டிலே

அம்பேத்கரின் மகத் புரட்சியினை தொடர்ந்து இங்கு மதுரையில் பிராமண வைத்தியநாதய்யர் கடும் எதிர்ப்புகளையும் மீறி தாழ்த்தபட்ட மக்களை ஆலயத்திற்கு அழைத்து சென்றிருக்கின்றார்

நல்லோர்கள் எல்லோரும் ஒரே வரிசை என்பதே இது

“பொன்னும், துகிரும், முத்தும், மன்னிய
மா மலை பயந்த காமரு மணியும்,
இடை படச் சேய ஆயினும் தொடை புணர்ந்து
அரு விலை நன் கலம் அமைக்கும் காலை
ஒரு வழித் தோன்றியாங்கு, என்றும் சான்றோர் 
சான்றோர் பாலர் ஆப,
சாலார் சாலார் பாலர் ஆகுபவே..”

அதாவது பொன், பவளம், முத்து, நிலைபெற்ற பெரிய மலை தரும் விரும்பத்தக்க நீலமணி, ஆகியவை ஒன்றுக்கொன்று தொலைவான இடத்தில் தோன்றினாலும், பெருமதிப்புடைய நல்ல அணிகலன்களில் தொடுக்கும் பொழுது, ஒரே இடத்தில் சேர்ந்திருக்கின்றன.

அதைப் போல், எப்பொழுதும் சான்றோர்கள் சான்றோருடன் சேர்வர். சான்றாண்மை இல்லாதவர்கள், சான்றாண்மை இல்லாதவர்களையே சேர்ந்திருப்பர் என்பது கண்ணகனார் பாடல்

அவ்வாறே பெரியார், அம்பேத்கர், வைத்தியநாத அய்யர் எல்லோரும் ஒரே வரிசையே

அந்த தலித் மக்கள் என்ன கேட்டார்கள்? தங்களை மனிதர்களாக அங்கீகரிக்க சொன்னார்கள்

நாங்கள் ஆடுமாடுகளல்ல, இதயமுள்ள மனிதர்கள் எங்களை மன்னர்களாக நடத்த வேண்டாம் மனிதர்களாக நடத்த வேண்டும் என கதறினார்கள்

ஆப்ரிக்க அடிமைகள் வெள்ளையனிடம் கதறிய கதறல் அது

அந்த கதறலுக்கு நியாயம் கேட்ட பசவண்ணா முதல் பெரியார், அம்பேத்கர், வைத்தியநாதர், பாரதி என எல்லோரும் ஒரே வரிசையே

இன்று அந்த மகத் புரட்சியின் நினைவுநாள், அந்த கொடுங்காலங்கள் இனி திரும்பாது , திரும்பவே திரும்பாது திரும்பவும் கூடாது

ஒரு கொடூர காலம் எப்படி இருந்தது என்பதும் அதை எப்படி எல்லாம் அம்பேத்கர் போன்றவர்கள் கடந்தார்கள் என்பதுமே இன்று நோக்க வேண்டியவை

வரலாற்றில் பெரும் திருப்பம் கொடுத்த நாள் இது, அம்மக்களின் பெரும் வலிகளை உலகிற்கு சொன்ன நாள் இது