’96’ – திரைப்படம்

96 படம் இன்னும் பார்க்கவில்லை
ஆனால் 96 என்றவுடன் அந்த 11ம் வகுப்பு கணக்கு வாத்தியாரும் அவர் நிகழ்த்திய கலவரமும்தான் கண்ணுக்கு வருகின்றது
எப்பொழுதுமே தமிழக மாணவனுக்கு 10ம் வகுப்பு வரை ஒரு குழப்பமும் இல்லை, அதனை தாண்டிய பின்னர்தான் உலகம் அவனை குழப்போ குழப்பு என்று குழம்பும்,
பிஞ்சாகவும் இல்லாமல் முழு பழமாகவும் இல்லாமல் , உலகினை புரிந்தும் புரியாமல், மலர்ந்தும் மலராதா ஒரு பருவம் அது.
அப்பொழுதுதான் பலபேரும் வந்து ஆலோசனை சொல்கிறோம், வழிகாட்டுகிறோம் என மாணவனின் தோள்மீது ஏறி கண்ணை பொத்துவார்கள், காதினை திருகுவார்கள், இன்னும் பல அழிச்சாட்டியம் நடக்கும், அவனை சுயமாக யோசிக்க விடவே மாட்டார்கள், உதாரணம் காட்டியே பயமுறுத்துவார்கள்.
இக்காலத்தில் 10ம் பொதுதேர்வில் 495 எல்லாம் அனாசியமாக அள்ளுகின்றார்கள், அக்காலத்தில் 440 கூட இமாலய சாதனை. அதுவும் திக்கி திணறி 400ஐ நெருங்கிவிடால் அவனது காதில் பல குரல்கள் கேட்கும்
“11ம் வகுப்பில் முதல் வகுப்பு எடுக்காவிட்டால் உன்னை மதிக்க மாட்டார்கள்”, என்ன மதிப்பு என்று மட்டும் யாரும் சொல்லவே மட்டார்கள், யார் மதிக்கமாட்டார்? இந்திய பிரதமரா அல்லது உள்ளூர் கவுன்சிலரா என்றேல்லாம் சொல்லமாட்டார்கள், மதிப்பில்லை அவ்வளவுதான்.
இதை போல நிறைய அனுமானங்கள், இந்தியாவில் ஒரு மாணவன் படிப்பதே பெற்றோருக்கும் மற்றவருக்கும் தான், அவனுக்காக அல்லவே அல்ல, வேறு வழியின்றி மாணவனும் முதல் வகுப்பு பற்றி விசாரிப்பான்.
1980களில் வள்ளியூர் பகுதி பள்ளிகளில் கள்ளிகுளம் பள்ளியும் குறிப்பிடத்தக்க ஒன்று, வள்ளியூர் முதல் பலபகுதி மாணவர்களும் அங்கு படிப்பார்கள், ஒரு மாணவன் அப்படி அப்பாவியாய் அப்பள்ளியின் முதல்வகுப்பினை பற்றி விசாரித்தால், அவனுக்கு வியர்த்து வழியும்,
வியர்வை தவிர வேறு வகையிலும் உடல் நனையும். அப்படித்தான் அந்த ஆசிரியரை சொல்லி பயமுறுத்துவார்கள், அம்புலிமாமா கதையில் வரும் பிரம்மராட்சரை போல மனம் கற்பனை எல்லாம் செய்யும், அப்பெயருக்கு சொந்தகாரர் கணித ஆசிரியர் திரு.அந்தோணி செல்வன்.
படிக்கும் பொழுது அவரது பெயரை கேட்டாலே அலறும், இப்போது படித்து முடித்து இப்பொழுது பணியிலிருப்போரிடம் பெயரை சொல்லுங்கள், கேட்ட உடனே புன்ன்கை பூக்க சிரிப்பார்கள்.
அவரது சுவராஸ்யம் அப்படி, அதிரடிகள் அப்படி, மிக இயல்பாக சொல்லி செல்லும் வார்த்தைகள் அப்படி.
ஒருவழியாக வகுப்பும் தொடங்கிற்று, பாடம் நடத்துவார், கணிதமல்லவா புரியும் ஆனால் புரியாது, அவரோ மிக சுருக்கமாக ஆனால் கருத்தாக விளக்குவார், அவ்வளவுதான் பாடம் இனி நீங்கள் மீதியினை செய்யுங்கள் என சொல்லிவிட்டு அமர்ந்து கொள்வார்.
சோறினை பிசைந்து ஊட்டிவிட்டு, அம்மாவே வாயையும் துடைத்து விட்டு பழக்கபட்டவன் தமிழக‌ மாணவன், ஆசிரியரே சகலமும் கற்பித்து முடிக்கவேண்டும், நாம் கொஞ்சம் புரிந்தோ அல்லது + குறிவரை மனப்பாடம் செய்தோ தேர்வில் தேறவேண்டும் என்பதே அவனுக்கு தெரிந்த “படிப்பு”, அவரோ நீ சுயமாக முடித்துகாட்டு என்கிறார், எப்படி நடக்கும்?
பின்னர் அதுதான் நடக்கும், அங்கும் ஆரம்பித்தது “இதால ஆன்சர் சாவு கிராக்கி, ஒழுங்கா போடுல, கேட்டா 10ம் கிளாஸ் கணக்குல 95 மார்க்..” என்று முதல் அதிர்ச்சி கொடுத்தார். “சாவு கிராக்கி” எனும் வார்த்தை அப்ப‌பகுதி வார்த்தை அல்ல, டிக்சினரியில் தேடும் முன் சென்னைதமிழ படங்களை பார்க்கமுடிந்ததால் அர்த்தம் விளங்கிற்று.
அடுத்த அடுத்த வகுப்புகளில் இன்னமும் முன்னேற்றம், கணக்கினை முடிக்க சொல்லி ஒவ்வொருவராக பார்த்துகொண்டே வருவார், ஒரு மாணவன் ஏதோ ஒரு கணித குறியினை மறந்திருப்பான், அவர் கவனித்து மெதுவாக கேட்பார் “படித்து என்ன ஆக போறா..”, மாணவன் மகிழ்ந்து சொல்லுவான் “டாக்டர் சார்”, அப்பொழுதுதான் கருத்தை பிடிப்பார் “அது இருக்கட்டும்ல இதுல ஒரு ஸ்குவர் வரணும எங்க?”, மாணவன் “மறந்துட்டேன் சார்” என்பான்
அப்பொழுதுதான் உரக்க சொல்லுவார் “இப்படித்தாம்ல நாளைக்கு ஆப்பரஷன் பண்ணிட்டு கத்திரிகோல உள்ளவச்சி தச்சிட்டு மறந்துட்டும்பா..உனக்கெல்லாம் டாக்டர் ஆச..” சொல்லிவிட்டு முதுகில் டிரம்ஸ் சிவமணி வேலையை தொடங்குவார்.
இன்னொரு மாணவன் கணக்கிற்கும், விடைக்கும் சம்பந்தமில்லாமல் ஏதோ செய்திருப்பான், அவனிடம் கேட்பார் உனக்கென்ன ஆசை அவன் இன்சீனியர் என்பான், திடீரென அவனை குனியவைத்து கும்முவார், கும்மிகொண்டே சொல்லுவார் “உன்ன இன்சினீயர் ஆக்குறதுக்கு பதிலா ஒரு குரங்க ஆக்கலாம், 2ம் ஒரே வேலைதான் செய்யும்”, பாம்பின் வாய் தவளையாக அவனும் கத்துவான், “சார் மறுபடி செய்றேன்” சார், அவர் விடமாட்டார்
“ஓ.. ஒரு பாலம் கட்ட சொன்னா இடிச்சி இடிச்சி 10 பாலம் கட்டுவியோல உன்ன விடகூடாதுல…”
அன்றிலிருந்து எல்லா மாணவனும் டாக்டர்,பொறியியல் கனவுகளை மனதோடு மட்டும் வைத்துகொண்டனர்.
ஒரு நாள் மேட்ரிக்ஸ் நடத்திகொண்டிருந்தார், வழக்கமான சோதனை, ஒரு மாணவனிடம் விடை கேட்டார் அவன் சீரோ என்றான், “உன் மார்க்க கேக்கல, ஆன்சர் சொல்லு என்றார், அவன் மறுபடியும் சீரோ என்றான், அவனது நோட்டையே பார்த்துகொண்டு அமைதியாக சொன்னார் “நீ கவனிக்கப்டவேண்டியவன் கணித உலகிற்கே இது புதுசு”,
அவனோ ராமனுஜத்தை கற்பனையில் நெருங்கிகொண்டிருந்தான், சத்தமாக சொன்னார்,”இதுண்ணு இல்ல உன்கிட்ட எந்த கணக்கை கொடுத்தாலும் நீ சீரோ தான் ஆன்சரா கொண்டு வருவா..” சொல்லிகொண்டிருக்கும் பொழுதே நோட்டிற்கு சிறகு முளைத்து பறந்தது, காதில் மத்தள இசை கேட்டது.
மாணவர்களுக்கு கவலை அதிகம், அதில் முதலிடத்தினை கணித வகுப்பு பிடித்துகொண்டது, ஆனால் அவர் திட்டும் விதத்தினை ரசிக்கலாம்.அடி மட்டும் தான் வில்லங்கம்.
அவரை புரிந்துகொள்ளவில்லை அதுதான் பிரச்சினை.
அவரின் ஆசிரிய மனநிலை இதுதான், இவர்கள் எல்லாம் நன்கு படிப்பவர்கள், வடிகட்டி எடுக்கபட்ட மாணவர்கள், கணிதம் சிக்கல்தான் ஆனால் இவர்களால் முடியும், நாளை மருத்துவம்,பொறியியல் என எவ்வளவு சிக்கலான படிப்புக்களை தாங்களாக படிக்கவேண்டும், ஒரு கட்டத்திற்கு மேல் மாணவன் தானாக படிக்கவேண்டும்,
ஆசிரியர் வழிகாட்டுவார் அல்லது தெளிவு கொடுப்பார். அப்படியும் தெளியமாட்டேன், முழுகணக்கையும் ஆசிரியர்தான் செய்யவேண்டும் என்றால் எப்படி? சொல்லியாகிவிட்டது கேட்கவில்லை, திட்டினாலும் சிரிக்கிறான்,
வேறு என்ன செய்வது டிரம்ஸ் இசைதான்.
ஆனால் அட்டகாசமாய் வகுப்பினை கொண்டு செல்வார், பெரும் அறிவாளிகள் வரை அறிமுகபடுத்துவார், தனிபட்ட முறையில் ஆலோசனைகளை வழங்குவார், ஒரு கணக்கினை நடத்திவிட்டு அதற்கும் கணிப்பொறி மொழிக்கும் இருக்கும் தொடர்பினை சொல்லுவார், ஆர்வகோளாறிலோ அல்லது பயந்தோ உயிரியல் மாணவன் “ஆமாம் சார் அப்படித்தான் என்றால் அதிரடியாக சொல்லுவார் ” நா சொல்றது கம்பியூட்டர் சயின்ஸ்க்கு.. நீ தவளை ஓணான வெட்டிக்கிட்டு கிடப்பா..போல”
சரியாக மணி ஒலித்ததும் வகுப்பிற்குள் வருவார், மணி மறுபடி ஒலிக்கும் பொழுது அப்படியே நிறுத்துவார். மறுநாள் வந்து அட்டகாசமாக விட்ட இடத்திலிருந்து தொடங்குவார், நாளொரு கணக்கும் பொழுதொரு வார்த்தையும் நொடிக்கொரு முதுகு சாத்தலுமாய் வகுப்பு சென்றது.
பள்ளிக்கு வெளியே எந்த மாணவனையும் கண்டுகொள்ள மாட்டார், வகுப்பில் அடிக்கும் பொழுது கூட அவன் கிரிக்கெட் ஆடியதை கண்டிக்கமாட்டார், கணித முயற்சி செய்யவில்லை அதற்குதான் அடி,
காலை பள்ளிக்கு நமக்கு எதிரில்தான் வருவார், ஒன்றாக நுழைவார், நுழைந்ததும் முன்னால் வந்து நின்று கேட்பார் “ஏம்ல லேட்.உங்க ஊர் என்னல‌ 7 கடலுக்கு அங்கயாயல இருக்கு..ஆளும் மண்டையும்…”
தனிபட்ட முறையில் மாணவர்களுக்கு அவர் வழங்கும் ஆலோசனைகள் அதிகம், கணித ஆசிரியர்தான் ஆனால் பங்குவர்த்தகம் மற்றும் வருமானவரி பற்றி துல்லியமாக பேசுவார், அவரிடம் பங்குவர்த்தக கதைகளை கேட்ட மாணவர் இன்று திறமையான பங்குசந்தை வித்தகர், இவ்வளவிற்கும் அவர் கணிதபாடத்தில் பெயில். ஒருமுறை சொன்னார்
“என்னல டாக்டர், இன்சீனியரு, அவனவன் ஓணான் கூட இல்லாத காட்டுக்குள்ள இஞ்சினியரிங்காலேஜ் கட்டிட்டு இருக்கான், இன்னும் கொஞ்சகாலத்துல ஆடுமேய்க்கவும் கூட இஞ்சினியர் வருவான்..வருமான வரி ஆபீசர் ஆனா அள்ளலாம்ல, அங்க குமாஸ்தாவா இருந்தாலும் போதும் டாக்டரவிட அதிகமா வரும்ல அதான் இப்போ இந்தியா”
இன்று அதெல்லாம் உண்மையாகிவிட்ட காலங்கள்.
ஒருவழியாக 12ம் வகுப்பும் வந்தது, மாணவர்கள் கணிப்பொறி வேகத்தில் படித்து, ரோலர் கோஸ்டர் வேகத்தில் தேர்வெழுதவேண்டும், மாணவனுக்கு சினிமா,கிரிக்கெட்,திருவிழா,கல்யாணம்,ஊர்சுற்றல் என எல்லாம் தடை, பார்ப்பவர்கள் கூட கவனமா படிப்பா என்று சொல்லியே பயம்காட்டுவார்கள், ஆப்பரேஷனுக்கு காத்திருக்கும் நோயாளி போலவே சமூகம் அவர்களை பரிதாபமாக பார்க்கும்.
ஆனால் அந்த ஆசிரியரோ ராணுவ அதிகாரி போல +2 யுத்தத்திற்கு தயார் படுத்த ஆரம்பித்தார், முதல்நாளிலே கட்டளை பிறந்தது “எலேய் நீ டாக்டராவு, இஞ்சீனியராவு இல்ல ஏதும் ஆவு அது பிரச்சினை இல்ல..என்ன பொருத்தவரைக்கும் நீ பாஸ் ஆகி போ..அவ்வளவு போதும் 4 மாசம்தான் பாடம், அப்புறம் நீ பாடம் நடத்தணும் அதான் ரிவிசன்”
அவ்வளவுதான் மாணவர்கள் மாற்றுவழி தேடினர், எல்லா டியூசன் வீடுகளும் நிரம்பி வழிந்தன‌, சில தைரியமான மாணவர்கள் அவரிடமே டியூசன் சேர்ந்தனர், அங்கும் அவர் அதே இயல்புடனே தான் இருந்தார்,
அதுதான் “முயற்சி செய், உன்னால் முடியும், ஆசிரியன் ஒரு வழிகாட்டி, தவறானால் திருத்துவான் அவ்வளவுதான், நீ ஒருவனே உன் அறிவினை வளர்த்துகொள்ள முடியும், காப்பாற்றிகொள்ளவும் முடியும்”
அவரது ஆசிரிய பணியின் தத்துவம் இதுதான் ஆனால் இயற்பியல், வேதியல்,உயிரியல்,கணிதம் ஒவ்வொன்றிற்கும் இரு புத்தகம் வேறு இதற்கிடையில் ஆங்கில இலக்கணமும், தமிழ் செய்யுள்களும் வேறு தாங்குமா?
மாணவர்கள் தங்கள் பெயரைகூட மறந்து படித்துகொண்டிருந்த பொழுது, ஒரு நாள் அவர் சொன்ன கணிதத்தினை மறந்தும் விட்டார்கள், அது என்னமோ சம்பந்தபட்டது
மாணவிகளை பார்த்துகொண்டே இருந்ததில் எமக்கும் அது மறந்துவிட்டது, அவர்களை நாம் கண்டுகொண்ட மகிழ்ச்சியில் தாவணி கோஷ்டியும் மறந்தது
அவரோ மறுநாள் வகுப்புக்கு வந்தவுடன் கேட்டார், யாரும் கண்டுகொள்ளவில்லை , அன்றுதான் அவர் தனது யுத்த திட்டத்தில் ஒரு பெரிய முடிவுக்கு வந்தார்
அன்று மாணவர்களுக்கு 12 கட்டத்திலும் சனி, அவருக்கோ செவ்வாயோ சூரியனோ அல்லது இரண்டுமோ மகா உச்சம்.
முதல் மாணவன் நோட்டை பார்க்கும் பொழுதே அக்னி தெரித்தது, அப்படியே முதுகில் முஷ்டியை இறக்கினார், தலையில் கொட்டினார், நிமிர்ந்தால் முகத்திலும் அடி, வெளியே ஓடினான் மாணவன், அவனே அன்று பிள்ளையார் சுழி அல்ல பிள்ளையார் குத்து.
பின்னர் உள்ளே டம்டம், டப்டப், அம்மா……, டும்ம்ம்ம்ம்ம்ம்ம் என சத்தம் கேட்டு கொண்டே இருந்தது , மாணவன் முதலில் வெளியே விழுவான், பின்னர் நோட்டு, கடைசியாக பாடபுத்தக பை.
அடிவாங்குபவனை மற்ற மாணவர்கள் கவனமாக குறித்துகொண்டார்கள், ஓ முதுகில் 2 குத்து, காலில் மிதி,நோட்டால் மண்டையில் 2 அடி அவ்வளவுதான், முகத்தை மட்டும் காட்ட கூடாது,
ஒகே.சார் நான் ரெடி மனதிற்குள் சொல்லிகொண்டார்கள்.
வெளியே செல்லும் மாணவன் முணுமுணுத்தால் இன்னொரு பொருள் பறந்து வந்து தலையில் விழும், ஒரு குரலும் அசிரீரியாய் ஒலிக்கும் “மார்க்க கேளு 10ம்கிளாஸ்ல 100, ஒரு சாதாரண சுருக்கல் தெரில, குற்றாலத்தில இருக்கவேண்டியதெல்லம் இங்க..ஹெட்மாஸ்டர் வேற அவனுக எல்லாம் அறிவாளி சார் கவனிசுக்கோங்கணு சொல்றார்..கவனிக்கேம்ல உங்கள நல்லா கவனிக்கேன்”
ஒரு வழியாக மாணவர் நொறுக்கல் முடிந்து மாணவியர் வரிசை, பெண்கள் விவரமானவர்கள், அடிக்கும் முன்னமே அழுது ஓடி வந்தார்கள்,
அவரா விடுவார்? கூப்பிட்டு தலையில் கொட்டி,நோட்டுகளை கிழித்து வீசி தலையை பிடித்து தள்ளுவார், அவர்களும் கொடையில் ஆடும் பெண்களை போல குலவையிட்டபடியே வந்து விழுவர்.
ஒரு வழியாக எல்லோரும் தட்டு தடுமாறி எழுந்தனர், சிலர் அன்றே தீவிரவாதியாகும் முடிவு, சிலருக்கோ தற்கொலை போராளி ஆகும் அளவு கண்களில் வெறி,சிலரோ சந்திரமுகி வடிவேலு போல சிலையாக நின்றனர். நல்லவேளையாக மணி ஒலித்தது, அவர் உடனே சென்றுவிட்டார்,
ஆனால் குறைந்தது 2 வருடத்திற்காவது அவருக்கு கொலஸ்ட்ரால்,சுகர் பிரச்சினை வராது, அவ்வளவு உடல்பயிற்சி அல்லது உழைப்பு அன்று அப்படி.
வகுப்பு கலவரம் நடந்த தெருபோல சிதறிகிடந்தது, பென்ஞ், டெஸ்க்,பென்சில்பாக்ஸ் செருப்பு, தலையில் இருந்த மல்லிகை என சகலமும் சிதறிகிடந்தது, சிலர் முகமும் வீங்கி கிடந்தது.
அங்கு என்ன கைரேகை நிபுணரா வருவார் அப்படியே வைக்க?, அடுத்த இயற்பியல் வகுப்பிற்காய் ஆசிரியர்தான் வருவார், அழுதழுது ஒழுங்கு செய்தார்கள்.
மறுநாள் கணிதவகுப்பிற்கு வந்தார், ஒன்றுமே நடக்காதவர் போல பாடம் நடத்தினார், மாணவ சமூகம் மனதிற்குள் பொங்கியது, அவர் அலட்டிக்காமல் சொன்னார், “நேற்று நடந்தது சும்மா டிரைலர், மெயின் பிக்சர் ரிவிசன்ல தொடங்கும், அது டிசம்பரில், அன்று நேற்றுமாதிரி அமைதியான ஆசிரியராக என்னை பார்க்கமுடியாது”
அது அமைதியா? ஆளாளுக்கு அலற தொடங்கினார்கள், சமய வேறுபாடில்லாமல் எல்லா ஆலயத்திலும் வணங்கி முறையிட தொடங்கினார்கள், இந்து மாணவர்கள் கிறிஸ்தவ ஆலயங்களுக்கு கடாவும் , கிறிஸ்தவ மாணவர்கள் இந்து ஆலயங்களுக்கு பொங்கலும் நேர்ந்துகொண்டனர், இஸ்லாமிய மாணவர்கள் இடைவிடாமல் பிரார்த்தினர், இன்னும் என்னவெல்லாமோ நடந்தது.
அவரோ அப்பொழுதெல்லாம் அடிக்கவுமில்லை,மிரட்டவுமில்லை, ஆனால் செமினார் நடத்த சொல்ல‌ ஆரம்பித்தார், (பின்னாளி கல்லூரியில் எடுத்த செமினாருக்கு எல்லாம் அதுதான் தொடக்கபுள்ளி) தவறு செய்தால் சொல்லுவார், எல்லாம் டிசம்பரில் தெரியும் அதுவரை சிரித்துகொள் என சொல்லிவிட்டு செல்வார், ஒவ்வொரு நாளும் தேதி கிழிக்கும் பொழுது மனம் சொல்லும் பாவி டிசம்பர் ஒரு 10 வருஷம் கழிச்சி வரக்கூடாதா?
டிசம்பரும் வந்தது, கூட்டுபிரார்த்தனைக்கு எவ்வளவு வலிமை என அன்றுதான் உணர்ந்த நாள், நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ அவருக்கு மிக சரியாக ரிவிசன் தொடங்கும் நாளைக்கு முன்னால் மஞ்சள்காமலை கண்டு பாதிக்கபட்டார், மாணவர்களுக்கு +2 தேர்வு முடிந்தது போல மகிழ்ச்சி, கோஷங்கள் மட்டும் போடவில்லை
தற்காலிகமாக ஒரு ஆசிரியையை நியமித்தார்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் முன்னால் அன்னா ஹாசரே போல செய்வதறியாது புதியவர் திகைத்தார், எப்படியோ சமாளித்தார், பொதுதேர்வுக்கு 1 வாரத்திற்கு முன்புதான் திரு.செல்வன் மறுபடி வந்தார். மெலிந்திருந்தார், கொஞ்சம் தாடி வளர்ந்திருந்தது, தனது கடமை செய்யமுடியாமல் போன ஒரு வருத்தம் முகத்தில் தெரிந்தது, தப்பித்த பெருமை மாணவர்களிடம் தெரிந்தது.
இதெல்லாம்தான் 96 என்றால் நினைவுக்கு வருகின்றது
ஒரு சில காட்சிகளை பார்க்க முடிந்தது, பல வருடங்களுக்கு பின் சந்திக்கும் திரிஷா விஜய் சேதுபதி நெஞ்சில் கை வைக்கின்றார்
நமது 96 மாணவிகளை சந்திக்க நேர்ந்தால் அவர்கள் நம் முதுகில் கை வைத்து கேட்பார்கள் , “அவர் அடித்த அடி இன்னும் வலிக்கின்றதா?..”
நமது 96 கதைகள் இப்படித்தான் [ October 18, 2018 ]

============================================================================

ஒரு வழியாக 96 படத்தை பார்த்து நம் சினிமா கடமையினை செலுத்தியாயிற்று, சும்மா சொல்ல கூடாது அட்டகாசமான படம்
பசுமையான வயல் வழியே குளிர்ந்த சாரல் அடிக்கும்பொழுது நடந்த ஒரு வித ஏகாந்த சுகம் அந்த படம். அற்புதமான கவிதையினோ நாவலையோ படித்த திருப்தியினை படம் கொடுக்கின்றது
படத்திற்கு செலவோ இல்லை வேறு விளம்பரமோ ஏதுமில்லை, நெஞ்சில் ஓர் ஆலயம், சில பாக்யராஜ் படங்களின் சாயல் தெரிகின்றது, கதை படத்தை தாங்குகின்றது
எல்லோர் மனதிலும் இருக்கும் சொல்லபடாத வலியினை படம் சொல்கின்றது, முதல்காதல் கொடுக்கும் வடு அப்படியானது
படம் பள்ளி காலங்களுக்கு இப்போதைய வாழ்விற்கும் இடையே அப்படியே ஊசலாட வைக்கின்றது அல்லவா அதுதான் வெற்றி
பள்ளி காலங்களுக்கு அழைத்து செல்கின்றது, அந்த சுகமான காலங்களின் நினைவுகளை கீறிவிடுகின்றது
நல்ல படம் என்பது பார்த்து சில நாட்களுக்கு மனதில் நின்று வலிக்க வேண்டும், ஒரு விதமான உற்சாகமும் குழப்பமும் நிறைந்த‌ மன நிலைக்கு தள்ள வேண்டும், இப்படம் அதனை செய்கின்றது
படத்தை பார்த்தவுடன் நாமும் இதே போல பள்ளி நண்பர்களை அழைத்து கெட் டுகதெர் ஒன்று ஏற்பாடு செய்ய வேண்டுமென திட்டம் உதயமாயிற்று
இடம், காலம் எல்லாம் மட மடவென வந்தாயிற்று, அழைக்க வேண்டியதுதான் பாக்கி
ஆனால் ஆழ்மனது எச்சரித்தது
இந்த திரிஷா என்பவருக்கு வயதே ஆகாது, கிட்டதட்ட 20 வருடமாக இப்படியே இருக்கின்றார், ஆனால் நம் வகுப்பு தோழிகள் அப்படியா?
அதனால் உள்மனம் சொல்லிற்று, “வேண்டாம் இந்த விபரீத முயற்சி வேண்டாம், அவர்களை அழைக்காதே, நீ கடைசியாக பார்த்த உருவம் வேறு இனி பார்க்க போகும் உருவம் வேறு
அதை பார்த்தால் தாங்க மாட்டாய், அவளை என்று நீ கடைசியாக 96களில் தேவதை கோலத்தில் கண்டாயோ அப்படியே நினைவில் வாழட்டும், கடைசி வரை அப்படியே நினைவில் நிற்கட்டும், சந்திக்க முயற்சியே செய்யாதே அதுதான் எல்லோருக்கும் நல்லது
சில விஷயங்கள் மனதோடு இருப்பதுதான் சுகம், சில விஷயங்கள் வெளியே சொல்லாமல் இருப்பதுதான் ஏகாந்தம். வாழ்நாள் எல்லாம் மனதோடு மட்டும் பேச வேண்டிய விஷயங்கள் சில உண்டு
பொத்தி பொத்தி பாதுகாக்க வேண்டிய அற்புத நினைவுகளை நேரில் பார்த்து கெடுத்துவிடாதே…”
ஆம் யாரையும் பார்க்க போவதில்லை, அவர்கள் எல்லாம் அந்த அழகிய காலத்து பசுமையான‌ நினைவிலே மட்டும் இருக்க வேண்டியவர்கள்
[ October 27, 2018 ]

============================================================================

விஸ்வரூபம் 2 : பெரும் குழப்பு குழப்பியிருக்கின்றார் கமலஹாசன்

இந்த கமலஹாசனில் விஸ்வரூபம் 2 எப்படி இருக்கின்றது என படம்பார்த்த நண்பர்களிடம் கேட்டால் சிலர் முறைத்துவிட்டு சென்றுவிடுகின்றார்கள், சிலர் படம் பார்த்த வருத்தத்தில் 2 பாட்டில் குடித்துவிட்டு கமலை திட்டிகொண்டிருக்கின்றார்கள்

சிலர் சந்திரமுடி வடிவேலு கடும் அதிர்ச்சியில் சிலைபோல நின்றுகொண்டிருகின்றார்கள், என்ன கதை என கேட்டால் தெரியாமலே படம் முடிந்துவிட்டதாக சொல்லிகொள்கின்றார்கள்

இன்னும் சிலர் கமல் இயக்கும் படத்திற்கு இனி செல்ல கூடாது என சத்தியமே செய்கின்றார்கள்

அப்படி பெரும் குழப்பு குழப்பியிருக்கின்றார் கமலஹாசன்

கொஞ்ச காலமாகவே அவர் கடும் மனகுழப்பத்திலும் உளறலிலும் இருப்பது தெரிகின்றது, அவரை இயக்கவிட்டால் என்னாகும்? மய்யம் போலத்தான் ஆகும்

உண்மையில் கமல் நல்ல நடிகர், நல்ல இயக்குநர் கையில் இருந்தால் இன்றும் கலக்கலான நடிப்பினை அவரால் கொடுக்க முடியும்

ஆனால் இயக்குகின்றேன் என வந்து அவரின் அதிமேதாவிதனத்தில் எல்லோரையும் குழப்புவது அவருக்கு புதிதல்ல‌

திரைக்கு பின்னால் இருக்க வேண்டிய டி.ராஜேந்ந்த்ரும், திரைக்கு பின்னால் செல்லவே கூடாத கமலஹாசனும் இங்கு இடம் மாறி இம்சை கொடுப்பது தமிழக சாபம்

அப்படி இம்முறையும் திரைபடம் பார்க்க வந்த ரசிகர்கள் தலையில் ஏறி உட்கார்ந்து தலையினை பிராண்டி, காதை திருகி கமல் என்னவெல்லாமோ செய்திருக்கின்றார்

ஒருவன் கூட தியேட்டர் விட்டு சந்தோஷமாக வரவில்லை, கலைஞருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வரும் திமுகவினர் போல ஒரு மாதிரி வருகின்றார்கள்

ஒரு நண்பர் சொன்னார்

“அண்ணே, விஸ்வரூபம் முதல் பாகம் பிரச்சினையிலே நாட்டை விட்டு போய்ருவேன்னு சொன்னாருண்ணே, அப்படி போயிருந்தால் ஒரு சிக்கலும் இருந்திருக்காது

இனியும் ஒண்ணும் பிரச்சினை இல்லண்ணே, இங்க இருந்தா இனி நம்மை எல்லாம் கொலைகாரான ஆக்கிருவாரு, பிடித்து வலுகட்டாயமாக அனுப்பலாம்

ஆனால் வயசில பெரியவரு அவரா கவுரவமா போயிட்டா நல்லது”

டிக் டிக் டிக்

Image may contain: 1 person

ஜேம்ஸ் கேமருனின் டைட்டானிக்கை பார்த்துவிட்டு குளத்தில் பரிசல் கவிழ்ந்து காதலனும் காதலியும் தவிப்பதை படமாக எடுத்தால் எப்படி இருக்கும்?

அப்படித்தான் டிக்.டிக்.டிக் என்றொரு படம் வந்திருக்கின்றது, ஹாலிவுட் படங்களுக்கே உரிய விண்கல் படம். ஆர்கமகெடான் முதல் கிராவிட்டி வரை பல காட்சிகளை அப்படியே சுட்டு அதனுடன் கமலஹாசனின் விக்ரம் படத்தையும் கலந்து என்னவோ எடுத்திருக்கின்றார்கள்

ஹாலிவுட்டில் இப்படி ஏராள படங்கள் வந்துவிட்டதால், தமிழ்படம் தவிர எதுவும் பார்க்காதவர்களுக்கு இப்படம் வித்தியாசமாக தெரியலாம், உலக சினிமா புரிந்தால் படம் ரசிக்காது

காரணம் இத்தகைய கதைகளை ஹாலிவுட்டில் எடுக்கும் ஸ்டைலே வேறு, அவர்கள் கற்பனையும் காட்சி அமைப்பும் விஞ்ஞானிகளுக்கே ஆர்வத்தை தூண்ட கூடியவை

இங்கு அப்படி எல்லாம் சாத்தியம் அல்ல என்றாலும் இம்மாதிரி கதைகளுக்கு தமிழ்சினிமா திரும்புவது வாழ்த்துகுரியது

இப்படிபட்ட கதைகள் வந்தால் வரவேற்கலாம்

படத்தை பார்த்தால் சிந்தனையில் சுஜாதா வந்து போகின்றார், அவர் மட்டும் இப்படத்தில் இருந்தால் படம் நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும், சந்தேகமில்லை

அப்படிபட்ட தமிழக பல்துறை எழுத்தாளர்கள் இன்று இல்லை, இருப்பவர்களிடம் சுவாரஸ்யமும் விரல்நுனி தகவலும் இல்லை

சுஜாதா போன்று இன்னும் பலர் வரும்பொழுது இம்மாதிரி படங்கள் தமிழில் நிச்சயம் வெற்றிபெறும் சந்தேகமில்லை

ஆயினும் இப்படம் தமிழ் சினிமாவினை புதிய வழிக்கு திருப்பும் முயற்சி இது, அந்த முயற்சிக்கு வாழ்த்துக்களை சொல்லியே தீரவேண்டும்

படத்தில் அந்தரத்தில் பெரும் சாகசங்களை ஜெயம் ரவி செய்யும்பொழுது, பழனிச்சாமிதான் தமிழகத்தை அனாசயமாக ஆளுகின்றார் என்ற நினைப்பும் மின்னல் வேகத்தில் வந்து போகின்றது

 

மைக்கேல் மதன காம ராஜன்

Image may contain: 1 person

மைக்கேல் மதன காமராஜன் படம் பார்க்க அமர்ந்தாயிற்று

அது குஷ்பூ படம், கமலாஹாசனும் இன்னும் பலரும் நடித்திருந்தார்கள்

ஆனால் மாணிக்க சிலையாக, மலைக்கோவில் தீபமாக, மல்லிகை ஊஞ்சலாக வந்த‌ குஷ்புவின் முன்னால் கமலஹாசனால் நிற்க முடியவில்லை, அவரும் 4 வேடங்களில் வந்து நின்று பார்த்த்தார், நன்றாகத்தான் நடித்திருந்தார்

ஆனால் குஷ்புவின் ஒரு சிரிப்பு முன்னால் அந்த 4 வேடமும் நிற்க முடியவில்லை

இந்த படம் இன்னும் சிறப்பாக வந்திருக்க தலைவியினை 4 வேடத்தில் நடிக்க வைத்து கமலஹாசன் ஒரு வேடத்தில் நடித்திருந்தால் சிவாஜியின் நவராத்திரி படத்திற்கு கடும் சவாலாக அமைந்திருக்கும்

ஆனால் சொந்தபடம் என்பதால் அச்சத்தில் கமலஹாசன் அதனை செய்யவில்லை

எனினும் 4 வேடம் போட்டும் தலைவியின் முடி அசைவிற்கு கூட கமலஹாசன் வரவில்லை என்பதுதான் காமெடி

தலைவியின் அந்த சிரிப்பும், அந்த கம்பீரமும், அந்த ஸ்டைலும்.. அட அட அட‌

 

காலா படத்தை உன்னிப்பாக பார்த்துவிட்டு நல்ல விமர்சர்கள் சொல்வது இதுதான்

காலா படத்தை உன்னிப்பாக பார்த்துவிட்டு நல்ல விமர்சர்கள் சொல்வது இதுதான்

அதாவது மாமனாருக்கும் அவர் மருமகன் தனுஷுக்கும் நெருடல் இருந்திருக்கலாம், ரஜினியினை பழிவாங்க துடித்த தனுஷ் ரஞ்சித் மூலம் அதை நிறைவேற்றி இருக்கின்றார்.

ஏற்கனவே விஐபி படத்தில் வில்லனுக்கு ரஜினியின் இளைய மருகமகன் பெயரை வைத்து குடும்பத்தில் புயல் வீச வைத்தவர் தனுஷ் என்பது கூடுதல் செய்தி

இப்பொழுதும் ரஜினியினை ரஞ்சித்தை வைத்து , பாரிசாலனை வேலூரில் சிலர் தாக்கியதை போல் ஊமைகுத்தாக குத்தியிருக்கின்றார் என்கின்றார்கள்

சம்பளம் கொடுப்பவர் தனுஷ் என்பதால் ரஞ்சித்தும் வாங்கிய சம்பளத்திற்கு வகையாக குத்தியிருக்கின்றார்.

“நாயகன்” வேலுநாயக்கர், “பாஷா” ரஜினி என டான் கதைகளில் இருக்கும் நாயகனுக்குள்ள மரியாதை காலாவில் கொஞ்சமும் இல்லையாம்

போற வாரவன் எல்லாம் காலாவினை காதை பிடித்து இழுக்கின்றானாம்.

இந்த ஜிகர்தண்டா படத்தில் பாபி சிம்ஹா எனும் பெரும் ரவுடியினை காமெடியனாக்கி அலைய வைத்தது போல ரஜினியினையும் ஆக்கி இருகின்றார்களாம்

போதாகுறைக்கு ரஜினியே எதிர்பாரா வண்ணம் அவரை பாஜகவிடம் வசமாக கட்டி கொடுத்து இருக்கின்றார்களாம்

நெடுநாள் கோபத்தை தனுஷ் ரஞ்சித் மூலமாக தீர்த்துகொண்டார் என்பதே கோடம்பாக்கத்தின் நிஜ விமர்சனம்


வார இறுதி என்பதால் கோலாலம்பூரின் திரையங்கு பக்கம் தமிழ்பட விரும்பிகளை காணமுடிகின்றது

படம் பார்த்த ரஜினியின் அதி தீவிர ரசிகர்களிடம் கேட்டால் அது “காலா இல்ல லா கீலா” என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள்

காலாவாது கீலாவாவது என சொல்லிவிட்டு நகர்வதல்ல விஷயம்

கீலா என்றால் மலாய் மொழியில் பைத்தியம் என பொருள்படும்

இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை

ஆனால் தமிழகத்தை நினைத்தால்தான் வித்தியாசமாய் இருக்கின்றது

உழைப்பாளி படத்தின் சமயத்தில் ரோஜா ஏதோ சொல்லிவிட்டார் என்பதற்காக அவரை சூழ்ந்து அடிக்க பாய்ந்தனர் ரஜினிபடை

அருணாசலம் படத்தில் ரஜினியினை எதிர்த்து வசனம் பேசினார் என்பதற்காக வடிவுக்கரசி மேல் செருப்பு வீசபட்டது

ரஜினிக்கு ஒரு சிறு அவமானம் என்றாலும் அக்கால ரஜினி ரசிகர்கள் அப்படி பாய்ந்தார்கள்

இப்பொழுது ரஞ்சித் ரஜினியினை கதற கதற அடித்திருந்தாலும் அவர்களிடம் இருந்து சத்தமில்லை

திமுகவின் தொண்டர்களிடம் போர்குணம் விடைபெற்றது போல ரஜினி ரசிகர்களிடமிருந்தும் அந்த பழைய வேகம் காணாமல் போயிவிட்டது

 

கமலஹாசன் ஏதோ சொன்னதற்காக ராமனை பழிப்பதா, கண்ணனை பழிப்பதா என பொங்கியவர்கள்..

கலைஞர் ராமனனை ஏதும் சொல்லிவிட்டால் உடனே நாக்கறுப்போம் என கிளம்புவர்கள்..

ராமயணத்தை படுபயங்கரமாக ரஜினி கலாய்த்திருக்கும் பொழுது மகா அமைதி

ஏன் என்றால் இதுதான் அரசியல்..

கலைருக்கும் கமலுக்கும் வைரமுத்துக்கும் ஒரு நீதி. ரஜினி எனும் ஆன்மீகவாதிக்கு தனி நீதி


சாவித்திரி படத்தில் ஜெமினியை கொச்சைபடுத்தியதை ஏற்க முடியாது

Image may contain: 3 people, people smiling, close-up

நடிகையர் திலகம் படத்தில் ஜெமினிகணேசனை தவறாக சித்தரித்திருப்பதாக எதிர்ப்பு

இதைத்தான் நாம் அப்பொழுதே சொன்னோம், சாவித்திரி திசைமாறி சென்றது ஜெமினியால் அல்ல, சொந்தபடமே காரணம்

குடிபழக்கத்தை கூட ஜெமினி கற்றுகொடுக்கவில்லை, முதன் முதலாக இந்தோனேசிய அதிபர் சுகர்னோ கொடுத்த விருந்தில்தான் அதை குடித்ததாக சாவித்திரியே சொன்னார்

பின் அப்பழக்கம் ஒட்டிகொண்டது, குடி அப்படித்தான் தொடங்கிவிட்டால் கழுத்தில் ஏறி அமர்ந்துவிடும்

குடி இன்னும் சாத்தான் சில குட்டி சாத்தான்களையும் குட்கா போல அழைத்துவரும், சாவித்திரிக்கும் அது வந்தது

இதெல்லாம் அவரை சூழ்ந்திருந்த அந்த அடையாளம் தெரியா மாபியா கும்பலின் வேலை

ஜெமினி மீது ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் மறுக்க முடியாத உண்மை அவரின் பண விஷயம், எத்தனையோ பெண்களோடு சுற்றினாலும் ஒருவருக்கும் ஒரு பைசா செலவழித்தவர் அல்ல‌

ஜெமினியிடம் நாம் கற்றுகொள்ள வேண்டிய உயர்ந்தபாடம் அதுதான், சந்தேகமில்லை

இன்றும் ஜெமினி காலத்து நடிகர்கள் சொத்துகணக்கை பார்த்தால் சிவாஜிகணேசன் கூட நெருங்க முடியாது

சாவித்திரியின் பண விரயத்தை அவர் கண்டிக்க தொடங்கி எழுந்த மோதலே விரிசலாகி சாவித்திர் வாழ்க்கை வீணாணது

மற்றபடி ஜெமினி எப்படி வாழ்வை பைசா செலவழிக்காமல் ரசிக்க வேண்டுமோ அப்படி ரசித்து வாழ்ந்தார்

“பெண்ணுக்கு பத்து பைசாவும் செலவழிக்காதே, அவர்களுக்கு செலவழித்தால் ஆண்டியாவாய் , செலவழிக்காமல் பெண்களோடு சுற்றுவது தனி சமார்த்தியம் முடிந்தால் செய் இல்லை என்றால் சும்மா இரு” என்ற அரிய தத்துவத்தை சொல்லி சென்ற ஜெமினியினை மறக்க முடியாது

ஆண்களுக்கு எக்காலமும் தேவைபடும் தத்துவம் அது, பிறவி கடலை கடந்து உய்ய பெரும் படகு அந்த தத்துவம்

சாவித்திரி படத்தில் அவரை கொச்சைபடுத்தியதை ஏற்க முடியாது

 

நடிகையர் திலகம் : திரை விமர்சனம்

download

சாவித்திரி படம் பார்த்தவர்கள் ஜெமினி கணேசனை திட்டி தீர்க்கின்றார்கள்

ஜெமினியிடம் சாவித்திரி அடைக்கலமாகவே வந்தார், அவரை சுற்றி இருந்த சுயநல கூட்டம் அவரை வைத்து சம்பாதிக்க துடிக்க, உண்மையான அன்பை தேடி வந்தார்

ஜெமினி சாவித்திரியிடம் எதனையும் மறைக்கவில்லை , சாவித்திரியினை ஆரத்தி எடுத்து வரவேற்றவர் ஜெமினியின் முதல் மனைவி

ஆனால் சாவித்திரி புகழின் உச்சிக்கு செல்ல செல்ல அவரை படம் எடுக்கும் ஆசையினை ஒரு கும்பல் தூண்டிவிட்டது, ஜெமினி அதனை தடுத்தார்

ஜெமினியினை மீறி சாவித்திரி சொந்தபடம் எடுத்ததும் அப்பொழுது எழுந்த சிறிய பிரிவினை ஒரு கூட்டம் பெரிதாக்கி இருவரையும் பிரித்ததே வரலாறு

ஜெயாவினை சசிகலா சூழ்ந்தது போல சாவித்திரியினையும் மர்ம கும்பல் சூழ்ந்த சோகம் உண்டு

போதையினையும் சில குட்கா வகையாறாவினையும் அக்கும்பலே சாவித்திரிக்கு பழக்கிற்று

ஜெமினிக்கு இதெல்லாம் கொஞ்சமும் பிடிக்காதவை

ஜெமினிக்கு திரைப்பட உலகம் அத்துபடி, சினிமாவில் நடித்த நடிகர்களில் ஜெமினிக்கே சொத்து அதிகம் ஆனால் ஒரு சொந்தபடம் கூட எடுத்ததில்லை, அதன் சிக்கல் அப்படி

சொந்தபடம் எடுத்து ஜெயித்த நடிகர் இன்றுவரை இல்லை என்பதால் ஜெமினி அதனை முடிந்தவரை தடுத்துபார்த்தார், என் சம்பாத்யம் என சாவித்திரி சீற அவரால் அதற்கு மேல் பேசமுடியவில்லை

அதனை மீறி சாவித்திரி சென்று படுகுழியில் வீழ்ந்ததுதான் விதி

ஜெமினியினை முழுக்கவும் பழிக்க முடியாது, ஒரு கட்டத்தில் ஓடிவந்தார் அதற்குள் சாவித்திரி தீரா நோயில் விழுந்தார்

இருவருக்குமிடையில் காதல் இருந்தது, ஊடல் வரும்பொழுது ஒரு கும்பல் பெரிதாக்கிற்று

படத்தில் ஜெமினி வில்லன் ஆகிவிட்டாராம்

சீனபோரில் சாவித்திரி ஆளுநரிடம் கழற்றிகொடுத்த பல லட்ச ரூபாய் பெறுமான நகை பற்றி ஒரு காட்சியும் இல்லை என்கின்றார்கள்

சந்திரபாபு எனும் மாபெரும் பாத்திரம் வரவில்லையாம், கடைசி காலத்தில் அவரை மதித்து அவர் இல்லம் சென்ற ஒரே நடிகர் அவர்தான்

இம்மாதிரி பல குறைகள் இருக்கின்றது என்கின்றார்கள், படம் இங்கு வெளிவரவில்லை. இம்மாதிரி படம் வராது

தமிழ் ராக்கர்ஸ் போன்றோரை மலைபோல் நம்பி இருக்கின்றோம் அவர்களோ எஸ்வீ சேகர் போல் ஆகிவிட்டார்கள்

 
 

நெஞ்சில் ஓர் ஆலயம்

Image may contain: 2 people, text

பழைய படங்களில் சில படங்கள் காவியம், அந்த தமிழும் அக்கால நடிகர்களும் கவிஞர்களும் அப்படத்தை அழியா கல்வெட்டாக ஆக்கிவிட்டார்கள்

அவற்றில் ஒன்று “நெஞ்சில் ஒரு ஆலயம்”

ஒரு மருத்துவமனை செட் மட்டுமே செலவு, முழு கதையும் அதற்குள்ளே நடகின்றது, ஸ்ரீதர் புது பாடத்தையே திரையுலகிற்கு சொல்லி இருகின்றார்

வலுவான கதையும் நடிகர்களும் இருந்தால் போதும் என அடித்து சொன்ன படம் அது

உச்சமாக கண்ணதாசன், தன் ஞானத்தில் உச்சியில் எழுதிய பாடல் , எங்கிருந்தாலும் வாழ்க என அண்ணாவினை நினைத்து எழுதிய பாடலை போல இறுதியில் காமராஜரை நினைத்து “ஒன்றே நினைத்திருந்து ஊருக்கே வாழ்ந்திருந்து” என எழுதி படம் முடியும் பொழுது கதற வைக்கின்றார்

இந்த படத்தின் சாயல் பல படங்களில் சத்தமின்றி காப்பியடிக்கபட்டது

“லேசா லேசா” எனும் படத்தின் கதை கூட இதுதான், ஆனால் கொஞ்சம் மாறுதலை செய்து புதுகதை என சொல்லிவிட்டார்கள்.

ஆக இப்பொழுதுள்ள எல்லா பயலும் ஏதோ பழைய படத்து கருவினை திருடி டெஸ்ட் டியூப் பேபி செய்கின்றான் என்பது புரிகின்றது

படத்தின் கிளாசிக் தேவிகா, சந்தேகமே இன்றி சொல்லலாம் குஷ்புவிற்கு அவர்தான் முன்னோடி

தேவிகா அக்கால குஷ்பு

இந்த படத்தை ரீமேக் செய்யும்பொழுது நிச்சயம் குஷ்புதான் ஹீரோயின்

வாய்பிருந்தால் சங்கம் குஷ்பு நாயகியாகவும் விஜய்சேதுபதியினை டாக்டர் வேடத்திலும், அஜித்குமாரை முத்துராமன் பாத்திரத்தில் வைத்தும் இப்படத்தை ரீமேக் செய்யும்.

 
 

சமூக சிந்தனை படம் “வேலைக்காரன்”

Image may contain: 1 person

தமிழ் திரைப்பட உலகில் நீண்ட காலத்திற்கு பின் வந்த உருப்படியான சமூக சிந்தனை படம் “வேலைக்காரன்”

இந்த உலகில் கார்பரேட்டுகள் எப்படி எல்லாம் நம்மை பைத்தியமாக்கி , அடிமைகளாக வைத்திருக்கின்றது என்பதற்கு அதைவிட நல்ல படம் இல்லை

தொழிலாளரின் பலம் என்ன என்பதை அசாத்தியமாக சொன்னபடம். சோவியத் யூனியன் அல்லது காஸ்ட்ரோ இருந்தால் கூட நிச்சயம் கொண்டாடியிருப்பார்கள்

அருமையான அர்த்தமுள்ள படம்.நல்ல அரசு என்றால் அப்படத்திற்கும் அந்த இயக்குநருக்கும் தேசிய விருது வழங்கி இருக்க வேண்டும்

படம் பெரும் வெற்றிபெறவில்லை என்கின்றார்கள். அப்படியானால் மிக சிறந்தபடம் என்றே பொருள்

தமிழகத்தில் ஒருபடம் ஓடினால்தான் அதை சந்தேகிக்க வேண்டும், ஓடாவிட்டால் நிச்சயம் நல்ல படம் என்றே பொருள்

இந்த மே தினத்தில் வேலைக்காரன் படம் பார்க்க முடிவாயிற்று,

இந்த படம் முடிந்தவுடனே விடுமுறை சிறப்பான தங்க தலைவி குஷ்பு நடித்த பொற்கால திரைபடங்கள் பக்கம் செல்ல வேண்டும்

முள்ளும் மலரும்

Image may contain: 2 people, people smiling

முள்ளும் மலரும் படம் ஓடிகொண்டிருக்கின்றது

மிக மிக அற்புதமான படம், படத்தில் ரஜினி அட்டகாசமாக நடித்திருந்தார, நல்ல வேளையாக அவர் சூப்பர் ஸ்டார் ஆவதற்கு முன்பு வந்த படம் அது

இந்த படம் 1990க்கு பின்பு வந்திருந்தால் ரஜினி பட முடிவில் அந்த ஊருக்கே ஜமீன் வாரிசாக இருந்த உண்மை புரியும் அல்லது அந்த மலையினையே விலைக்கு வாங்கும் அளவு உழைத்து பணக்காரர் ஆகியிருப்பார், அந்த வின்சையும் ஊரையும் மொத்தமாக சரத்பாபுவிற்கு கொடுத்துவிட்டு இமயமலை நோக்கி நடந்திருப்பார்

நல்ல வேளையாக இந்த இம்சை எல்லாம் அப்பொழுது இல்லை என்பதால் மிக மிக உருக்கமான காவியம் கிடைத்தது

இந்த படத்தின் பல காட்சிகளை பல பிற்கால தமிழக சினிமாக்களில் காப்பியடித்திருக்கின்றார்கள்

இந்த படத்து கிளைமேக்ஸ் தான் கேரளாவுக்கு சென்று “அன்னியத்த பிறவு” என்றாகி தமிழில் “காதலுக்கு மரியாதை” என திரும்ப வந்தது

ரஜினி அந்த தவில் கோஷ்டியினை தடுத்து இசைக்க சொல்லி ஆடும் காட்சிதான் பருத்தி வீரனில் “ஊரோரம் புளியமரம்” பாடலானது

இன்னும் எத்தனைபேர் சுட்டிருக்கின்றார்களோ தெரியாது, ஆனால் நடந்திருக்கும்

எப்படிபட்ட நடிகன் ரஜினி? உண்மையில் பாலசந்தர் அற்புதமான நடிகனைத்தான் அடையாளம் கண்டிருக்கின்ற்றார், ஆனால் வியாபார தமிழ் சினிமா அவரை ஒரே கோணத்தில் நட்சத்திர அந்தஸ்திலே நிறுத்தி அந்த சிறந்த நடிகனின் ஒரே நடிப்பு மட்டும் தெரியுமாறு பெரும் கொடுமை செய்துவிட்டது

இனி அப்படி படங்களும் வராது, ரஜினியும் அப்படி இனி நடிக்க மாட்டார்

படத்தில் ரஜினியினை விட நடிப்பில் பின்னி எடுத்தவர் ஷோபா, அப்பாவியான பாசமிகு தங்கையாக அப்படி ஒரு வெகுளி நடிப்பு

எப்படிபட்ட மகா அற்புத நடிகை ஷோபா?

அப்படம் நடிக்கும்பொழுது அவருக்கு 16 வயது என்பதை நம்ப முடியவில்லை ஆனால் நம்பித்தான் ஆக வேண்டி இருக்கின்றது

மகேந்திரன் நிச்சயம் தமிழ் சினிமாவின் தனிபெரும் இயக்குநர், சந்தேகமில்லை

படம் சொல்வது இதுதான்

ஷோபாவின் மிக இளவயது மரணமும், ரஜினிக்கு கிடைத்த அந்த சூப்பர் ஸ்டார் அந்தஸ்தும் அதனால் திசை மாறி சென்ற ரஜினியின் சினிமா வாழ்வும் தமிழ் சினிமாவின் சாபங்கள்.