தேர்தல் துளி – 20 பெப்ரவரி 2019

ஒரு காலத்தில் காங்கிரஸை கழுவி ஊற்றிய கட்சி திமுக, சேற்றினை அப்படி வாரி இறைத்தார்கள், இந்திராவுடன் யுத்தமே நடத்தினார்கள்

ஆனால் இப்படி ஒரு பாராளுமன்ற தேர்தலில் நாடு முக்கியம் என அவர்களோடு சேர்ந்து கொண்டார்கள்

பாஜகவினை “பண்டார கட்சி”, “ஆண்டி பரதேசிகள் கட்சி” என்றெல்லாம் விமர்சித்தார்கள், பின்பு நாடு முக்கியம் அதை விட திமுகவுக்கு பதவி முக்கியம் என பாஜகவோடும் திமுகவினர் தயக்கமின்றி சேர்ந்து கொண்டார்கள்

அதைத்தான் இன்று பாமகவும் பாஜகவோடு செய்திருக்கின்றது

திமுக செய்தால் நாட்டுபற்று, ராஜதந்திரம் அதையே பாமக செய்தால் தமிழர் விரோதம், சந்தர்ப்பவாதம் இன்னபல‌

திமுகவினை மிக கேவலமாக திட்டிய வைகோ அங்கு சேரலாம் ஆனால் எடப்பாடியினை திட்டிய பாமக அங்கு சேரகூடாதாம்

பாமக செய்தது சரியா தவறா என்பது விஷயமே அல்ல, அவர்களை விமர்சிக்க திமுகவுக்கு என்ன தகுதி இருக்கின்றது என்பதுதான் விஷயம்

கலைஞர் இம்மாதிரி சிக்கலை எப்படி கடந்தார்?

“நான் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டால் எனக்கு மானமில்லை, வெட்கமில்லை என்கின்றார்கள், இதோ காங்கிரசாரும் உதயசூரியனுக்கு வாக்கு கேட்கின்றார்கள்”

ஆம், அன்றே அரசியலில் யாருக்கும் வெட்கமில்லை என அட்டகாசமாக சொன்னவர் கலைஞர்

இனி ராமதாசும் எடப்பாடியாரே மாம்பழத்திற்கு வோட்டு கேட்டு வரும்பொழுது திமுகவுக்கு என்ன சிக்கல் என கேட்டால் நிச்சயம் திமுகவிடம் பதிலே இல்லை

*****

இந்த தேர்தல் பல விசித்திரங்களை காட்டுகின்றது

பொதுவாக கூட்டணி என்றால் கலைஞரே முந்திகொள்வார், பல சந்திப்புகளை நடத்துவார் அல்லது யாரையாவது பேச வைப்பார்

வரமறுப்பவர்களை தன் பேச்சினாலும் எழுத்தினாலும் இன்னும் பல தந்திரங்களினாலும் அழைத்து வருவார்

முதல் கூட்டணியினை அவரே அறிவிப்பார், அது வலுவான கூட்டணியாக அமையும்

அவர் அரசியல் வாழ்விலே பாராளுமன்ற தேர்தல் முடிவு எப்பொழுதும் அவருக்கு மிக சாதகமாகவே முடியும் கடந்த தேர்தல் தவிர‌

ஆம் காமராஜர், இந்திரா, எம்ஜிஆர் காலங்களில் கூட பாராளுமன்ற தேர்தலில் தனிவெற்றி கண்டவர் கலைஞர்

கடந்த தேர்தலில் ஏன் திமுக “0” பெற்றது என்றால் அப்பொழுது கட்சி நடத்தியவர் கலைஞர் அல்ல என்பதுதான் விஷயம்

இப்பொழுது பாருங்கள் அதிமுக ஒரே நாளில் ஜாலம் காட்டுகின்றது, அட்டகாசமாக கூட்டணியினை முடிவு செய்து களமிறங்குகின்றார்கள்

பாமகவினை இழுத்து வந்தது அவர்களின் நல்ல மூவ்

ஆனால் திமுக இன்னும் தூங்குகின்றது, உண்மையில் தூக்கமில்ல்லை காங்கிரசுடனான சிக்கல்

என்ன சிக்கல் வேண்டியிருக்கின்றது? கடந்த தேர்தலில் இரு கட்சியும் தனி தனியே நின்றது, விளைவு இருவருமே நடுதெருவுக்கு வந்தார்கள்

இப்பொழுது தனித்து நின்றாலும் அப்படித்தான் வருவார்கள்

ஆக பாமக இல்லா நிலையில் வடக்கே காங்கிரஸ் வெற்றிபெற்றிருக்கும் சூழலில் காங்கிரசுக்கு இரட்டை இலக்க தொகுதி கொடுப்பதே திமுகவுக்கு சிறந்தது

மாறாக பகல் கனவு கண்டுகொண்டு ஒற்றை இலக்க தொகுதி கொடுப்பார்களானால் அதை காங்கிரஸ் மறுக்குமானால் விஷயம் திமுகவுக்கு சாதகமாய் வராது

விட்டுகொடுக்காமல் அரசியல் ஒருகாலமும் இல்லை

திமுக நெருப்பாற்றை தாண்ட வேண்டிய நேரமிது வெறும் கனவுகளும் வெற்று கணக்கீடுகளும் ஒருநாளும் பலன் தராது

காங்கிரஸை விட்டால் இனி தெரிவே இல்லை எனும்பொழுது இன்னும் திமுக தயங்குவதோ அல்லது உயரத்தில் இருந்து கொண்டு காலாட்டுவதோ நிச்சயம் சரியல்ல