எம்.ஆர் ராதா

ஒரு நடிகனுக்கான எல்லை எது? அவன் எப்படி இருக்க வேண்டும்? சமூகம் உற்று நோக்கும் ஒரு நடிகன் மிக உன்னதமான அரசியல் பற்றி என்ன நிலைப்பாடு கொண்டிருக்க வேண்டும் அதே நேரம் சமூக பொறுப்பும் இச்சமூகத்தை பாதிக்கும் விஷயங்களை தைரியமாக சொல்லும் அசாத்திய குணமும் இருக்க வேண்டும் என வாழ்ந்து காட்டியவர்கள் மிக சிலபேர்

சார்லி சாப்ளின் போன்ற ஒரு கை விரல்விட்டு எண்ண கூடிய அந்த வரிசையில் வருபவரே தமிழகம் கண்ட அசாத்திய நடிகன் எம்.ஆர் ராதா எனும் மெட்ராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன்

ஆச்சரியமான நடிகர் அவர். மிக சிறுவயதிலே நாடக உலகில் நுழைந்தவர். தைரியமும் மதிநுட்பமும் அதிரடி கிண்டல் குணமும் அவரிடம் இயல்பாக இருந்தது

எழுதபடிக்க தெரியாது ஆனால் வசனங்களை கேட்டுவிட்டால் அப்படியே திருப்பி சொல்லும் அபூர்வ ஆற்றல் இருந்தது

நாடக உலகில் கொண்டாடபட்டார், ராமசந்திரன் முதல் சிவாஜி வரை எல்லோருக்கும் அவர்தான் குருநாதர்

நாடகம் என்பது பக்தி, காதல், அரச கதை, புராணம் என்றிருந்த காலத்திலே அதில் பகுத்தறிவு,சீர்திருத்தம் என்ற திடீர் திருப்பத்தை முதலில் கலந்தது ராதா

சினிமா வந்து நாடகநடிகர்கள் எல்லாம் நட்சத்திரங்களாக மாறியபொழுதும் ராதா நாடகங்களையே நேசித்தார், ரத்த கண்ணீர் போன்ற படங்கள் மகா அசாத்திய நடிகனை தேடியபொழுது வேறு நடிகர்கள் இல்லா நிலை அல்லது நடிக்க தயங்கிய நிலையிலேதான் அந்த கதையின் நாடக நடிகரான‌ அவரே நடித்தார்

அதுவும் கேமரா பார்த்து அவர் திரும்பவில்லை, மேக் அப் போடவில்ல்லை, அவர் பாட்டுக்கு நடித்தார், அவர் நடித்ததை பதிந்தார்கள், இன்றுவரை ரத்த கண்ணீர் கிளாசிக் படம். அதனை இன்றுவரை ரீமேக் செய்யமுடியா காரணம், அப்படி ஒரு நடிகன் இன்று இல்லை. ஹீரோவும் அவரே வில்லனும் அவரே காமெடியனும் அவரே

ராதாவின் இயல்பும் பெரியாரின் இயல்பும் ஒரேமாதிரியானது, பெரியாரின் போர்வாளாக மாறினார்.

இந்தி எதிர்ப்பு, மிசா சட்டத்தில் கைதான ஒரே நடிகன் ராதா

ஆனால் அதனையெல்லாம் வைத்து அவர் அனுதாப அரசியல் எல்லாம் தேடவே இல்லை.

அவர் நாடகமோ, சினிமாவோ அணல் பறந்தது. வம்பும் வழக்குமாகவே அவர் நாடகம் நடந்தது வாழ்வும் நகர்ந்தது

ஆனால் ஏதோ ஒரு சக்தி ராதாவினை காத்துகொண்டே வந்தது, எப்பொழுதோ முடிந்திருக்க வேண்டிய வாழ்வு நீதிபதி கிருஷ்ணய்யர் போன்றோரால் நீட்டிக்கபட்டது

தர்மமும் சட்டமும் கலந்து சிந்தித்து தீர்பெழுதிய அக்கால நீதிபதிகளால் ராதா எனும் கலைஞன் தொடர்ந்து நின்றான்

பெரியாரை விட்டு காலம் பார்த்து எல்லோரும் பறந்தபொழுது கடைசிவரை அவரோடு இருந்த ஒரே கலைஞன் ராதா, அவர் ஒருவரே

“சில பேர் கேக்குறான், பெரியார் என்ன கிழிச்சார்னு. நாங்க சின்னபையனா இருக்குறப்போ உயர்சாதிகாரன் ஹோட்டல்கிட்ட போக முடியாது, பெரியார் பேச ஆரம்பிச்சார் முதல்ல 10 அடி தள்ளி நில்லுண்ணான் , பெரியார் அடிக்க ஆரம்பிச்சார், 5 அடி தள்ளி நின்னு நீண்ட குச்சில கட்டின கப்பில் டீ காபி தாரேன்ன்னான், பெரியார் எழுதி பேசி அடிச்சி நொறுக்கினாரு

இன்னைக்கு நாம கடைக்குள்ள போய் சாப்பிட முடியுது”

இது வெறும் ஹோட்டல் என்றல்ல அரசு, பெரும் பணி உட்பட எல்லா துறைகளையும் குறிப்பிட்டு சொன்ன வார்த்தை, இதனை விட பெரியார் சாதனையினை சொல்ல முடியாது.

பகுத்தறிவு கொள்கைகளை அவர் பேசிய பாணியிலும், மூட நம்பிக்கைகளை அவர் கலாய்த்த வடிவிலும் இன்னொருவன் கலாய்க்க முடியாது

அவ்வளவும் அவரின் சொந்த சரக்கு, யாரும் சொல்லி நடித்ததல்ல‌

போலி பக்தியினை கண்டித்த அவர், அரசியலுக்காக கிளம்பிய போலி தமிழுணர்வு, போலி பாட்டாளி கோஷம் இவை எல்லாவற்றையும் கண்டிக்க தவறவில்லை

பணக்காரர்களின் பந்தா, பக்தர்களின் அதிதீவிர பக்தி, வெளிநாட்டில் படித்துவிட்டோம் என அழிச்சாட்டியம் செய்தவர்களின் ஓவர் அலட்டல் இவற்றை எல்லாம் தன் வசனத்திலே கிழித்தெறிந்த நடிகன் ராதா

“நாங்க வெளிநாட்டில படிச்சிட்டு வந்த நீதான் கவுன் மாட்டிகணும், அதுதான் நாகரீகம்..” என்ற ரத்தகண்ணீரின் ஒற்றை வசனம் போதும், ஆயிரம் போலி முகங்களை கிழித்த வசனம் அது.

அண்ணாவினை தளபதி என திமுகவினர் சொல்ல “என்னடா தளபதி? எந்த போருக்கு போனான் அந்த தளதி? எவ்வளவு நாட்டை பிடிச்சான், சும்மா தளபதி களபதின்னு போங்கடா டேய்” என பகிரங்கமாக கலைஞரிடம் கேட்டவர் ராதா.

ராதாவிடம் இருந்த பெருந்தன்மை தன் துறை ஆயினும் சினிமாதுறைக்கு என்ன இடமோ அதனை மிக தைரியமாக சொன்னவர், சமூகத்திற்கு எது சரியோ அதனை நெற்றில் அடித்து சொன்னவர்

ராதா எனும் கலைஞன் சினிமா அரசியலில் கலப்பதை கண்டித்த மாபெரும் சமூக சிந்தனையாளன், அந்த வார்த்தை தோட்டாக்கள் இன்றுவரை சுடகூடியவை. அந்த தீ தமிழ் திரையுலகிலிருந்து அரசியலுக்கு வரும் எல்லோரையும் இன்றும் சுட்டுகொண்டிருப்பது

அன்று அரசியல் தூய்மையாக இருந்தது, அதனை எதிர்த்து நல்லவர்களும், தூய்மையானவர்களுமே வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெரியார் முதல் எல்லோருக்கும் இருந்தது

ஆனால் அண்ணா சினிமா கலைஞர்களை முன்னிறுத்தியது பெரியார், சம்பத், என பெருந்தலைகள் யாருக்கும் பிடிக்கவில்லை, நடிகர்கள் என்பது அவ்வளவு கீழான பார்வையாக இருந்தது, கூத்தாடிகளை வைத்தால் எல்லாம் நாசமாகும் என எச்சரித்தார்கள்.

இன்று அது நடந்தும் விட்டது

பல சிந்தனையாளர்கள் கண்டித்தார்கள், ஆனால் சினிமா உலகில் இருந்து அதனை கண்டித்த ஒரே குரல் ராதாவுடையது, மற்ற எல்லோரும் சினிமா எதிர்காலம் கண்டு அஞ்சினர். ராதா சினிமாவினை மதித்தவரே அல்ல, அவரின் மூச்சு நாடகம், “அதுவும் இல்லாவிட்டால் சாவேன் போடா..” எனும் தைரியமும் இருந்தது

அந்த தைரியத்தில்தான் “டேய் ராமசந்திரா உனக்கு எதுக்கு அரசியல், நாம கூத்தாடி கூத்துமட்டும்தான் செய்யணும், அரசியல் வேற லெவல் அதுல கூத்தடிச்சா நாடு நாசமாயிரும்” என அவரால் ராமசந்திரனிடமே சொல்ல முடிந்தது

“சினிமாகாரர்களை கூட்டி திரியும் அண்ணா பின்னால் செல்லமாட்டேன் ,அதன் அழிவு பின்னால் தெரியும் அந்த பாவத்தில் நான் பங்குபெறமாட்டேன்” என மிக பகிரங்கமாக சொன்னவர் ராதா

அக்கால திரையுலகமே அண்ணாவின் பார்வைக்காய் ஏங்கி நிற்க, அந்த அண்ணாவினை அசால்ட்டாக கடந்து சென்றவர் ராதா

ராமசந்திரன் திமுகவின் முக்கிய முகமாக உருவான பொழுது , சினிமா நாயகர்கள் அரசியலுக்கு வர முயன்றபொழுதே பகிரங்கமாக சாடியவர் ராதா

“டேய்.கூத்தாடி பய உலகம் அறிவில்லாதது , எல்லாம் நடிப்பு, பழகி பார்த்ததுல சொல்றேன் பூரா முட்டாப்பயலுக, சுயநலம் பிடிச்சவனுக, அறிவு சுத்தமா கிடையாது.

நீ ஏன் அதுல போய் மேதைகளும், சிந்தனையாளர்களும், வழிகாட்டிகளும் இருக்கின்றார்கள் என தேடலாம்?

நல்லவர்கள், பொதுநலவாதிகள், கற்றவர்கள் எல்லாம் வேறு இடத்தில் இருக்கின்றார்கள், அங்கே போய் தேடு

அவங்க எல்லாம் இந்தமாதிரி இடத்துக்கு வரமாட்டங்க, கவுரவமானவர்கள், சுய அறிவு உள்ளவர்கள், கண்ணியவான்கள். அவங்க இருக்கிற இடம் வேற அங்க போய் தேடு

இந்த கூத்தாடி உலகத்தில..அதுவும் நாங்கல்லாம் நாடகம் போட்ட காலத்துல சீ சீ வேணாம் , பொது இடத்தில பேசினா நல்லாருக்காது

நல்லவங்கள, சிந்தனையாளர்கள அங்க தேடாத, அங்க எல்லாம் பஞ்சமா அயோக்கிய பயலுக, அவனுக உலகம் வேற‌

பார்த்தியா, ரசிச்சியா அதோட கூத்தாடிய விட்டு போய்ட்டே இரு, அவன் அடுதத கூத்துக்கு ரெடியாகிட்டே இருப்பான், அவன் உலகத்துக்குள்ள நுழைஞ்சி பாக்காத, அது பெரும் அசிங்கம், அவன் விதி அப்படி, அவன அரசியல்ல கூப்பிட்டு அழிஞ்சி போகாத

நீ அவனுக்கு காசு கொடுக்குற, அவன் நடிக்கிறான் அவ்வளவுதான். உன் வேலைக்காரன் அவன் அந்த வேலைக்காரனை தலைவன்னு கொண்டாடாத அசிங்கம் அவமானம்”

இன்று ராதாவின் பிறந்த நாள், கமலஹாசனும் ரஜினியும் அரசியலுக்கு வரும் இந்நாட்களில் காதில் ஒலிக்க வேண்டிய வார்த்தை ராதாவுடையது

மறக்க கூடிய நடிகனா ராதா? அவர் நாடகம் என்ன? அவரின் படத்து வசனங்கள் என்ன?

மூடநம்பிக்கை, அரசியல், கருப்பு பணம், வரி ஏய்ப்பு, போலி சாமியார், போலி தமிழர், போலி கம்யூனிஸ்ட் என எல்லாவற்றையும் அன்றே சாடி சென்ற அறிவாளி அவன். அதனால்தான் இன்றளவும் அவன் வசனங்கள் நிற்கின்றன‌

“எனக்கு எம்ஜிஆர்னு எவனையும் தெரியாது, ராமசந்திரன்னு என்னோட நடிச்ச ஒரு சின்ன பயலை மட்டும் தெரியும்” என பத்திரிகையில் சொன்ன ராதா

“என்னடா புரட்சி தலைவன், நான் செய்யபோறேன் பார் அது புரட்சி” என எச்சரித்த அந்த ராதா

திரையுலகில் ராமசந்திரன் கொடுமை எல்லை மீறிய பொழுது, அவரிடம் பேசசென்று துப்பாக்கி சண்டையில் முடித்த அந்த ராதா

“என்னாச்சி..” என எல்லோரும் ஓடிவந்தபொழுது “சுட்டாச்சி” என அசால்ட்டாக சொன்ன அந்த ராதா

நீதிமன்றத்தில் வக்கீல்கள் வாதாடும்பொழுது, “அங்க இருந்தது நாங்க 2 பேரு ஆனா பார்த்தமாதிரி இங்க கத்துறது இவனுக” என கலாய்த்த அந்த ராதா

தீர்ப்பு வந்ததும் “வக்கீல் பொய் சொல்றது எல்லோரும் ஒத்துக்குவாங்களாம், ஆனால் அதே வக்கீல் நீதிபதி ஆனா மட்டும் உண்மைய பேசுறத நாம நம்பணுமாம்” என முணுமுணுத்த அந்த ராதா ஒரு நாளும் மறக்க முடியாதவர்

“கூத்தாடி பயலுகளுக்கு மன்றம் வைக்காத, அவன தலைவன் ஆக்காத. அந்த கூத்தாடிக்கு காசு கொடுத்து நடிக்கவைக்கிற‌

கொடுக்குற காசுக்கு நடிப்பை கேளு, நாட்டை கொடுக்க நினைக்காத அது அழிவு ஆபத்து, அவன் நொடிக்கொரு வேஷம் போடுற பய அவன்கிட்ட ஏது சுய அறிவு, சிந்தனை சமூக நோக்கம், வெட்கம், அவமானம் எல்லாம்?” என அவர் முழங்கியது மறக்க முடியாது

இந்த நாம் தமிழரில் சிலர் தமிழினம் காக்க பிரபாகரன்,வீரப்பன் எல்லாம் துப்பாக்கி தூக்கினர் என உளறிகொண்டிருப்பான்

உண்மையில் தமிழினம் காக்க துப்பாக்கி தூக்கி சிறை கண்டது “தியாக தலைவன்” “மக்கட் செல்வன்” “மேதகு” எம்.ஆர் ராதா ஒருவர்தான்

சினிமா மோகத்தில் சிக்கிய தமிழகத்திற்கு அதிரடி புரட்சி காட்டிய “புரட்சி தலைவன்” அவர்தான்.

ஊழலில் புரையோடி போன சமூகத்தில் இந்தியன் தாத்தா குத்தியது சரி என தியேட்டரில் கைதட்டிவிட்டு வெளியே வந்து ராதா சுட்டது தவறு என சொல்லமுடியாது

முட்டாள் தலைவனை வெட்டினால் அந்த கூமுட்டை மந்தை சிதறுமே தவிர, கூமுட்டைகளிடம் சொல்லி ஒன்றும் ஆகாது

அந்த புனிதமான காரியத்திற்காக தன் உயிரை கொடுத்து தமிழகத்தை சினிமா எனும் கொடும் தீயில் இருந்து காக்க துணிந்த மாபெரும் தியாகி எம்.ஆர் ராதா.

அந்த மாபெரும் தலைவனுக்கு இன்று பிறந்த நாள்

கூத்தாடி பயலுகள அரசியலுக்கு விடாதே என சினிமாக்காரர்களின் ஒருவரான அந்த மனிதன் பிறந்தாளில்தான் ஒரு நடிகன் ராமேஸ்வரத்தில் சென்று கட்சி தொடங்குவாராம்

இதே கமலஹாசன் ராமேஸ்வரம் மீணவர் பிரச்சினை பற்றி என்றாவது பேசினாரா? மீணவர் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி அவருக்கு ஏதாவது திட்டம் உண்டா? ஒருநாளாவது சூட்டிங் தவிர மீணவரோடு பழகியிருப்பாரா?

ஆனால் ஆச்சரியமாக ஒரு குரலும் அப்படி வரவில்லை. ஒரு பயலும் கேட்கவில்லை கேட்கவும் மாட்டார்கள்

ஆனால் ராதா இருந்திருந்தால் நிச்சயம் கேட்டிருப்பார், “ஏம்பா கமல்ஹாசா, என்னைக்காவது ராமேஸ்வரம் மீணவர் பிரச்சினை பற்றி பேசியிருக்கியா

பாம்பன் பாலம் சீரமைக்க அவங்க போராடும்பொழுது நீ எங்க இருந்த?
அவ்வளவு மீணவர் சாகும்பொழுது அந்த பக்கம் போனியா சொல்லு? உன் பாட்டுக்கு சினிமாவுல இருந்த‌

அப்துல்கலாமை கும்ம்பிடு நல்லது, ஆனா அப்படியே அவரமாதிரி ராக்கெட் செய்ய போ, அத வுட்டுட்டு அரசியலுக்கு வர அந்த நல்லவன ஏன் கும்பிட போற?

உன்னோடு நாடகத்துல நடிச்சவன், சினிமாவுல நடிச்சவன் கல்லறை எல்லாம் இருக்கு அங்க போ, உன் ஏரியா அதுதான்

ஏதோ புதுசா 4 ராக்கெட் செய்யபோற மாதிரி, ரஷ்யாவுக்கும் அமெரிகாவுக்கும் பாடம் நடத்தபோற மாதிரி கலாம் கல்லறைக்கு போற நீ,

போகாத அது அவருக்கு அவமானம்

எத்தனையோ அயோக்கியன் கல்லறை இருக்க்கு அங்க போ, சினிமாவில் இருந்து வந்து நாட்டை கெடுத்தவன் கல்லறை இருக்கு அங்க போ.

அத வுட்டுட்டு அப்துல் கலாம், பெரியார் பக்கம் எல்லாம் வந்தண்ணு வை, சுட்டுருவேன். முன்னமாதிரி இல்ல கரெக்டா சுடுவேன்”

அம்மனிதன் இன்று இருந்தால் அப்படித்தான் எச்சரித்திருப்பான், ரஜினி எல்லாம் அவர் இருந்திருந்தால் கேட்கும் கேள்விக்கு இமய மலைக்கே ஓடியிருப்பார்

காலத்தை மீறி அந்த கலககார நடிகன் நிலைத்திருக்கின்றான் என்றால் அவரின் சமூக அக்கறையும், இச்சமூகத்தின்பால் அவன் அக்கறைகொண்டு சிந்தித்த சிந்தனையும், பேசிய பேச்சுக்களுமே

இனி அப்படி ஒரு நடிகன் வரபோவதில்லை, ஆனால் எக்காலமும் அவனின் வசனமும், பேச்சும் இங்கு பேசபட்டுகொண்டே இருக்கும் அதுதான் ராதாவின் வெற்றி, அசைக்க முடியா வெற்றி

அந்த நாயகன் எம்.ஆர் ராதாவின் பிறந்த நாளில் அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள், மனமார்ந்த அறிவார்ந்த அஞ்சலி

தமிழகம் காக்க துப்பாக்கி தூக்கி சிறை சென்ற “மேதகு” எம்.ஆர் ராதா அவர்களின் புகழ் ஒருநாளும் அழியாது

சினிமாதுறையில் இருந்துகொண்டே சினிமாகாரர்களின் அயோக்கியத்னத்தை தோலுரித்த தைரியம் ராதாவினை தவிர இன்னொருவருக்கு வரபோவதே இல்லை

ஆம் ராதாவிடம் சுயநலமில்லை பொதுநலமிருந்தது, பொய் இல்லை உண்மை இருந்தது

அந்த பொதுநலமும் உண்மையும் அவருக்கு மகா தைரியத்தை கொடுத்திருந்தது.