நடிகை ஶ்ரீவித்யா

நடிகை ஶ்ரீவித்யா

தமிழகத்தில் எத்தனையோ நடிகைகள் வந்தார்கள், சிலர் தடம் பதித்தார்கள், சிலர் கோபுரம் ஏறினார்கள், சிலர் ஆறா வடுக்களை ரசிகர்கள் மனதில் விட்டு சென்றார்கள்
அந்த ஆறா வடுக்களில் ஒன்றுதான் நடிகை ஶ்ரீவித்யா
அமைதியான முகம், அதில் துருவென்று வரும் அந்த அற்புத கண்கள், புன்னகை சிந்தும் உதடு என மிக அற்புதமான அழகு அவர். குறிப்பாக அந்த கண்கள், அது மட்டுமே ஆயிரம் கதைகளை அட்டகாசமாக பேசும்
சினிமாவில் வாயினை விட கண்களால் அதிகம் பேசியவர் அந்த ஶ்ரீவித்யா
அவரின் தாய் வசந்தகுமாரி மிகபெரும் பாடகி, ஶ்ரீவித்யாயும் பாடகியாகத்தான் வாய்ப்பு இருந்தது, ஆனால் விதி அவரை நடனம் பயில வைத்து அப்படியே நடிகையாகவும் ஆக்கிற்று
நடிக்க வந்தபொழுது அவருக்கு 20 வயதுதான், ஆனால் அந்த வயதிலும் எந்த நடிகையும் எடுக்காத சவாலை எடுத்தார். ஆம் அன்றே ஏறக்குறைய சரிவயதுதுள்ள கமலஹாசனுக்கு தாயாக அன்றே நடித்தார்
அந்த தைரியம் யாருக்கும் இல்லை, ஆனால் அதுதான் அவர் தனிபெரும் கதாநாயாகியாக வரமுடியாமல் கடைசி வரை தாய் , அக்கா, அண்ணி என வர காரணமும் ஆயிற்று
நாமும் அவரை நாயகியாக நிறைய படங்களில் பார்க்க முடியாமல் போயிற்று, நிச்சயம் தமிழ்திரையுலகிற்கு இழப்புத்தான்
அந்த அழகிய கோலத்தின் புள்ளிகள் அப்படி வைக்கபட்டு அப்படியே வரைந்தும் முடித்தாயிற்று
இல்லாவிட்டால் அவரின் தனிபெரும் அழகிற்கு மிக பெரும் கதாநாயகியின் இடத்தை அவரால் பெற்றிருக்க முடியும்.
எப்படிபட்ட அபூர்வ நடிகை அவர், குறிப்பாக அந்த கண்கள் அதில் எப்படிபட்ட உணர்வினையும் அவரால் காட்ட முடிந்தது, அன்பு பாசம் பரவசம் எல்லாவற்றையும் காட்டிய அந்த அழகிய கண்கள் அதிகம் காட்டியது சோகம் தான்
ஒரு கவிஞன் சொன்னான் “அவரின் விழிகள், சமுத்திர ரகசியங்கள் ததும்பும் அகன்ற விழிகள்”” என வர்ணித்திருந்தான், மிக அற்புதமான வரிகள் அவை
இரக்கமில்லாத கடவுள் அக்கண்கள் சோகமாகவே இருக்கவேண்டுமென்று படைத்தானோ என்னமோ, திரையில் சோகத்தை காட்டிய அக்கண்கள் நிஜத்திலும் சோகத்தையுமே காட்டியது
தமிழகம் அவரை அம்மா, அக்கா என வேடம் கொடுத்தே வைத்திருந்தது, சிவாஜி கணேசன் எனும் மாநடிகனையே அழபிறந்தவன் என காட்டிய தமிழகம் , ஶ்ரீவித்யா எனும் அற்புத கண்ணிலே நடிப்பை காட்டும் நடிகையினையும் அழபிறந்தவளாகவே காட்டிற்று
அழகு மயில் ஒன்றை அடைத்து வைத்து கண்ணீர் மட்டும் விடு என்றால் என்னாகும், அவருக்கு அக்கொடுமைதான் நடந்தது
ஆனால் மலையாளம் அவரின் நடிப்பிற்கு சவால் கொடுத்தது, அதுவும் ரஸ்னா போன்ற படத்தின் சவாலான படங்களில் பின்னி எடுத்திருந்தார்
கேரளம் அவரை எவ்வளவு கொண்டாடியிருந்தது என்பதற்கு அவருக்கு அரசு மரியாதையுடன் அச்சுதானந்த மேனன் செய்த இறுதி மரியாதையும், உம்மன் சாண்டி போன்றோர் நேரில் சென்று செய்த அஞ்சலியும் சாட்சி
ஆம், தமிழகத்தில் அவர் இறந்திருந்தால் இங்கு அப்படியொரு மரியாதை கிடைத்திருக்காது, கேரளம் அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையினை கொடுத்திருந்தது
அந்த அற்புதமான அழகிய நடிகையின் கடைசி காலத்தை நினைத்தால் கண்கள் பனிக்கின்றது
அவ்வளவு சிரமபட்டிருக்கின்றார், கலங்கியிருக்கின்றார் என்கின்றார்கள்
அதாவது கவிஞனுக்கு அவன் கவிதை திறனே பலம், சிற்பிக்கு அவன் செதுக்கும் வித்தையே பலம், இசை கலைஞனுக்கு அவனின் இசைதான் பலம்
அந்த கலைதிறனை இழந்துவிட்டால் அது கிட்டதட்ட மரண கொடுமை, எழுத‌ முடியா நிலையில் கலைஞரின் மனமும் மரணவலியில்தான் இருந்திருக்கும்
தலைசிறந்த ஓவியன் கைநடுங்கும் வியாதியில் சிக்கினால் என்னாகும்?
முதுமையால் வந்தால் கூட தெரியாது, கலைஞரை போல சமாதானம் சொல்லிகொள்ளலாம், ஆனால் இளமையில் வந்தால்..
ஆம் நடிகைக்கு அவள் அழகு முகம் தான் மூலதனம். அந்த அழகு அழிந்து தான் மூலையில் முடக்கபடுவது ஒரு நடிகைக்கு பெரும் வலி, உயிர் போகும் வலி
புற்றுநோயால் பாதிக்கபட்ட ஶ்ரீவித்யா அந்நிலையில்தான் தன் அழகினை இழந்து யாரையும் சந்திக்காமல் இருந்தார் என்கின்றது கடைசிகால செய்திகள்
ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும் ஜெயாவும் இம்மாதிரி சிக்கலில்தான் அப்பல்லோ படங்களை தடுத்திருக்கலாம் , அவரும் நடிகையாக இருந்து தன் முகத்தாலே மக்களிடம் அபிமானம் பெற்றவர். அழகில்லா தன் முகத்தை காட்ட அவர் விரும்பியிருக்க முடியாது
ஜெயா போகட்டும், ஶ்ரீவித்யாவினை பார்க்கலாம்
ஶ்ரீவித்யா வாழ்வு போராட்ட வாழ்வு, அவர் நடிகையானதில் தாய்க்கு விருப்பமில்லை ஆனாலும் போராடி நடிகையானார், பின் காதல் தோல்வி, பின் திருமண தோல்வி , சொத்துக்கள் கணவனின் கைக்கு சென்று சல்லி பைசா இல்லாமல் மறுபடியும் அவர் மலையாள திரையுலகிற்கு சென்று போரடிகொண்டுதான் இருந்தார்
எத்தனையோ போராட்டங்களில் வென்ற ஶ்ரீவித்யா, புற்றுநோயுடனான போராட்டத்தில் தோற்றுகொண்டே இருந்தார்
தன் சொத்துக்களை எல்லாம் ஒரு அறக்கட்டளைக்கு மாற்றியிருந்தா, பின் அவர் நோயுற்ற பொழுது , அவரின் அழகினை பாதிக்கா வகையில் செலுத்தபடும் ஒரு ஊசியின் விலை 1 லட்சம் என்றபொழுது அந்த அறக்கட்டளையின் உறுப்பினர்க்ளே அதை அனுமதிக்கவில்லை
ஶ்ரீவித்யா மனதை பாதித்த மிகபெரும் சம்பவம் என அதனைத்தான் சொல்கின்றார்கள்
ஒரு கட்டத்தில் யாரையும் அவர் பார்க்க விரும்பவில்லை, தன் களையிழந்த நோயுற்ற முகம் பத்திரிகையில் வருவதை கூட அவர் விரும்பவில்லை
அதே நேரம் தமிழகத்திலிருந்து யாரும் வலியசென்று பார்க்கவுமில்லை, கமலஹாசன் மட்டும் சென்றிருந்தார்.
யாரையும் பார்க்காத கமல், ஏன் அப்துல்கலாமிற்கே அஞ்சலி செலுத்தாத கமல் ஏன் ஶ்ரீவித்யாவினை மட்டும் பார்க்க சென்றார் என்பதும், யாரையும் பார்க்க விரும்பாத ஶ்ரீவித்யா கமலை மட்டும் ஏன் அனுமதித்தார் என்பதும் அவர்கள் மனம் மட்டுமே உணர்ந்த ரகசியங்கள்.
(ஆனால் ஶ்ரீவித்யா சாயலில் கமலின் உத்தம வில்லன் படத்தில் அவரின் பழைய காதல் வந்தது, அந்த பாத்திரம் முகம் காட்டபடவே இல்லை எனினும் ஶ்ரீவித்யா நினைவு வந்து போனது.)
ஶ்ரீவித்யாவினை புற்றுநோய் எனும் அரக்கன் ஒடுக்கி உருமாற்றி வைத்திருந்த அந்த கோலத்தை கண்ட மிக சிலரில் கமலஹாசனும் ஒருவர்
அந்த ஶ்ரீவித்யா இறந்த நாள் இதே அக்டோபர் 19
தமிழகம் கிட்டதட்ட அவரை மறந்திருக்கலாம், ஆனால் தமிழ் சினிமாவின் ரசிகர்கள் ஶ்ரீவித்யாவினை மறக்க மாட்டார்கள்
குறிப்பாக அந்த கண்கள் யாராலும் மறக்க முடியாதவை
விதி அவரை நடிகையாக்கினாலும் தன் தாயின் சாயலில் “கற்பூர முல்லை” படத்தில் பாடகியாக நடித்திருப்பார்
அது சினிமா என்றாலும், அதில் வருவது போல பெரும் பாடகியாக வாழ்ந்திருக்க வேண்டிய ஶ்ரீவித்யா, நடிகையாகி பின் திருவனந்தபுரத்தில் மரித்ததெல்லாம் விதி
அவர் வந்த ஒவ்வொரு காட்சியிலும் அந்த கண்கள் ஏதோ ஒரு சோக ராகத்தை இசைத்து கொண்டே இருந்தது.
புன்னகை மன்னன் படத்தில் ஏதோ ஒரு காட்சியில் தேங்க்ஸ் என சொல்லி , கண்களிலும் உதட்டிலும் ஒரு அற்புதமான புன்னகை காட்டியிருப்பார்.
அவர் நடிப்பின் உச்சகட்ட காட்சி அது.
அப்படிபட்ட கண்களால் காட்டிய காட்சிகள் மூலம் எந்நாளும் தமிழ் ரசிகர்கள் மனதில் வாழ்ந்துகொண்டே இருப்பார்
அந்த விழியால் மொழி சொன்ன அற்புத நடிகைக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
[ October 19, 2018 ]
Image may contain: 1 person, closeup