நவராத்திரி

பாரதத்தின் பெரும் கொண்டாட்டகாலங்களில் ஒன்றான பூஜை திருவிழாக்கள் உச்ச காலம் இது. துர்கா பூசை,சரஸ்வதி பூசை,ராம்லீலா என சமயம் சார்ந்த சடங்குகளுக்கு ஒருபுறம், தாண்டியா ஆட்டம், தசரா கோலாகல ஊர்வலம் என கொண்டாட்டங்கள் மறுபுறம் பாரதம் கொண்டாடுகின்றது.
நான் கொஞ்சகாலமாக இந்தியன் அதற்கு முன்னால் தமிழன், அதற்கு முன்னால் காட்டுமிராண்டி, அதற்கு முன்னால் மனிதனே இல்லை, தமிழனுக்கு மதமே இல்லை என சொல்பவன் எக்காலமும் உண்டு.
இதோ வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாடபடும்பொழுது தமிழகத்திலும் விழா கொண்டாடபடுகின்றது, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே நாளில் விழா கொண்டாடபடுகின்றது என்றால் தமிழரின் மதம் இந்து என்பதன்றி வேறென்ன?
அரக்கன் மகிசனை அன்னை பராசக்த்தி மைசூர் (மகிசூர்) பக்கமாக‌ அழித்தார்,(மைசூர் தான் வேறு ஊர் அல்ல). ராவணனை ராமர் வீழ்த்தினார் என பல விஷயங்கள் நடந்ததாக சமயம் சார்ந்த நம்பிக்கைகள் ஏராளம், அதாவது தீமைகள் அழிந்து நன்மைகள் கிடைத்த நாள்,அந்த நம்பிக்கையின் படியே மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர், மக்கள் நன்றாக மகிழட்டும் வாழ்த்துவோம்.
நவராத்திரியில் தமிழகத்தில் குறிப்பிட்டு சொல்லகூடிய நிகழ்வுகள் சரஸ்வதி பூஜை,ஆயுத பூஜை, விஜய தசமி, தசரா பண்டிகைகள். தமிழகத்தில் சில இடங்களில் சரஸ்வதிக்கென்றே தனி ஆலயமும் உண்டு அங்கெல்லாம் சிறப்பு பூஜைகள் நடக்கும்.
கவிசக்கரவர்த்தி கம்பன் வணங்கிய ஆலயமும் அதில் உண்டு.
பண்டைய நாள்களில் ஓலை சுவடிகளை பூஜித்து வணங்குவார்கள், இந்நாளில் பள்ளிக்கு செல்வோர் எல்லாம் தங்களது பாட புத்தகங்களை வணங்குவார்கள், (வருங்காலத்தில் அது டிஸ்க் அல்லது பென்டிரைவாக மாறலாம்).
தசரா வட இந்தியாவில்,நேபாளத்தில், சில சீன பகுதிகளில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடபடும், மைசூரில் அது மிக பிரசித்தி பெற்றது, இடையில் களையிழந்த விழாவினை பின்பு இந்துக்களின் பெரும் சக்தியாக எழும்பிய நாயக்கமன்னர்கள் உற்சாகமாக தொடங்கினர்.
தமிழக‌ குலசேகரபட்டனத்தில் அது வெகு பிரபலமாயிற்று. அன்னை சாமுண்டீஸ்வரியின் சாயலாக அந்த ஆலயத்தின் அம்மனை நாயக்கர்கள் கொண்டாட அது வெகுபிரசித்தியாயிற்று
இதே பூஜை விழாதான் சிலப்பதிகார காலத்தில் இந்திர விழா என்றும் கொண்டாடபட்டிருக்கின்றது.
வி என்றால் மேலான, ஜய என்றால் வெற்றி, தசமி என்றால் பத்தாம் நாள், வெற்றி தரும் பத்தாம் நாள் என பொருள், அது வெற்றியான நாள் அல்லது ஆசீர்வாதம் மிக்க நாள் என்பது ஐதீகம், எல்லா கலைகளின் பயிற்சியும் அன்றுதான் தொடங்கும்.
அக்காலத்தில் விஜயதசமி அன்றே மாணவருக்கு முதல்நாள் வகுப்பு,நெல்லை பரப்பி, குரு மாணவன் விரலைபிடித்து எழுத சொல்லி கொடுப்பதை தொடங்குவார், எல்லா கல்விகளும், போர் பயிற்சிகளும் அன்றுதான் தொடங்கும்.
பண்டைய தமிழகத்தில் பூந்தொடை விழா என குறிப்பது இதுதான்.
(பூந்தொடை என்றவுடன் தமிழனுக்கு ரம்பா நினைவு வரலாம்), பூந்தொடு அல்லது பூந்தொடை விழா என்றால் வாழை மரத்தை கட்டி வைத்து அதில் அம்பு தொடுத்து பழகுவார்கள், அதாவது வில்பயிற்சி தொடங்கும் நாள், அகநானூறும் இன்னும் ஏராளமான பாடல்களும் அதற்கு சான்றாகிறது.
சுருக்கமாக சொன்னால் நவராத்திரி காலம் முழுதும் மூன்று தேவியரிருக்கான விரத வழிபாடு, 10ம் நாள் மூன்று தேவியரின் பெரும் ஆசியோடு வாழ்வின் முக்கிய காரியங்களை தொடங்குகின்றார்கள், இது தான் பாரத கண்டம் கொண்டாடும் நவராத்திரி தத்துவம், நிச்சயமாக சமய நம்பிக்கை சார்ந்தது.
இந்த கொண்டாட்டங்களில் ஆயுத பூஜை என்று ஒரு நாளை குறித்து வைத்திருக்கின்றார்கள் அல்லவா? அது தான் மிக மிக கவனிக்கபடவேண்டியது.
மகாபாரத காலத்திலே ஆயுத பூஜை உண்டு, காலம் காலமாக உலகிலே இந்தியாவில் மட்டும் ஆயுதங்களை பூஜிக்கின்றார்களே ஏன்? அவ்வளவு அப்பாவிகளா? வெறும் இரும்பையும், இயந்திரத்தையும் பூஜிக்க வேண்டுமா? ஏன்? என பலதரப்பட்ட கேள்விகளை எதிர்கொள்ளும் நாள் இது.
இதில் தான் பெரும் தத்துவம் அடங்கி இருக்கின்றது,
ஒருவனை எது பாதுகாக்கின்றதோ அது தான் அவனுக்கு ஆயுதம்.
அது கத்தி அல்லது துப்பாக்கி,வெடிகுண்டு என்று மட்டும் அடங்காது, உலகில் ஒருவன் வாழ அவனின் தொழிலுக்கு பயன்படும் எல்லா கருவிகளுமே ஆயுதம்தான்.
டாக்டருக்கு ஸ்டெதஸ்கோப்பும், ஊசியும் ஆயுதம், பத்திரிகை காரனுக்கு பேனாவும், அச்சு எந்திரமும் தான் ஆயுதம், ஆட்டோகாரனுக்கு அந்த ஆட்டோதான் ஆயுதம், கடைகாரனுக்கு தராசுதான் ஆயுதம், சிகை அலங்கார தொழிலாளிக்கு கத்திரிகோலும் சீப்பும்தான் ஆயுதம், ஓளிப்பதிவாளருக்கு அந்த படபெட்டிதான் ஆயுதம்.
இப்படி உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆயுதங்கள்,
அரசியல்வாதிக்கு எது ஆயுதம் என்பது உங்களுக்கே தெரியும்
இங்கே தான் பாரத முன்னோர்கள் சிந்தனை மேலோங்கியது,கடமையினை செய்வதன் மூலமே மனிதன் இவ்வுலகில் வாழும் தகுதி அடைகிறான், ஒரு மனிதனின் தொழில் மூலமே இறைவன் அவனை காக்கிறார், அந்த தொழிலுக்கு தேவையான கருவியின் வடிவிலே அவன் நம்மோடு இருக்கின்றான்,
செய்யும் தொழில்தான் தெய்வம், தொழில் செய்ய தேவையான கருவி தெய்வத்தின் கரம்.
அந்த கருவியிலே இறைவனை கண்டார்கள், அந்த கருவிக்கு செய்யபடும் பூஜையில் இறைவனுக்கே நன்றி சொன்னார்கள், இது நிச்சயமாக சமயம் கடந்தது, எல்லா மனிதரும் பின்பற்ற கூடிய தத்துவமே.
அதனையே வெள்ளைக்காரன் “இன்ஸ்ட்ருமெண்ட் டே” என அறிவிக்கட்டும், உலகம் களை கட்டி கொண்டாடும், கற்பனைக்கு எட்டாதபடி கொண்டாடி தீர்ப்பார்கள், நைசாக அதிலும் மில்லியன் கணக்கில் சம்பாதிப்பார்கள்.
அமெரிக்காவில் நவம்பர் கடைசி வாரம் “நன்றி அறிவிப்பு” என கொண்டாடுவார்கள், பெரும் விடுமுறை உண்டு. நமது பூசை திருவிழா,ஆயுத பூஜையின் சாயலை ஒட்டிய கொண்ட்டாட்டம் அது, அவர்களுக்குள்ளாக கொண்டாடி கொண்டிருக்கின்றனர், அது வரை பரபரப்பில்லை. அதாவது தங்கள் வாழ்வில் உதவும் எல்லோருக்கும் நன்றி சொல்லவேண்டுமாம்.
உயர்ந்த சிந்தனை தான், அதோடு கூட நாம் வாழ தேவையான கருவிகளுக்கும் சேர்த்து நன்றி சொல்லி இறைவனை வணங்குகின்றோம்.யார் உயர்ந்து சிந்த்திதிருக்கின்றார் பார்த்தீர்களா? இது தான் பாரதம்.
ஆனால் பாரதத்தின் உயர்ந்த தத்துவம் அவர்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம், உண்மை உணர்ந்தவர்களுக்கு தெரியும் ஆயுத பூஜையும் இறைவனை நினைக்கும் விழாவே தவிர வேறல்ல.
இந்து சகோதரர்கள் சமய நம்பிக்கை படி சரஸ்வதி பூசை,தசரா கொண்டாடட்டும், பூந்தொடை விழா கொண்டாடிய தமிழக மரபுபடி விஜயதசமி அல்லது 10ம்நாள் பெருவிழாவினை தமிழர் சிறப்பிக்கலாம்.
ஆனால் ஆயுத பூஜை எல்லா மக்களும் பொதுவானது, தங்கள் கையிலிருக்கும் அல்லது தங்களை வாழவைக்கும் தொழிலுக்கு காரணமான கருவியின் வடிவிலே இறைவனை காணலாம்.
அவ்வகையில் சிதறிய நெல்லிக்காயாக உலகெங்கும் கிடக்கும் நம்மையெல்லாம், இன்று இணைத்து வைத்திருக்கும் தொழில்நுட்பமான இந்த இணையமும், அதனை பயன்படுத்தும் உங்களது கணிப்பொறியோ அல்லது கைபேசியோ கூட நவீன வாழ்வின் ஆயுதம் தான், ஆயுத பூஜையன்றாவது அதனை நன்றியோடு நோக்கலாம், அந்த நன்றியை இறைவனுக்கும் தெரிவிக்கலாம்.
மனிதன் படைத்த கருவியே இந்த கருவியே இவ்வளவு மகத்தானது என்றால், இறைவன் எவ்வளவு பெரியவன். இந்த சிந்தனைதான் ஆயுத பூஜையின் மதங்களை கடந்த உண்மை.
எல்லா சகல பூஜை வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்வோம்.[ October 18, 2018 ]
Image may contain: 1 person, text