நிச்சயம் இந்த உலகம் நமக்கானது மட்டுமல்ல

வறட்சி ஒருபுறமும், அவைகளின் வாழ்விடங்களில் மனிதர்கள் ஊடுருவி ஆக்கிரமித்து அவைகளை விரட்டுவதாலும் இப்பொழுதெல்லாம் யானை உட்பட காட்டுமிருகங்கள் அடிக்கடி வெளிவந்து சாவது அதிகரித்துவிட்டது

நிச்சயம் இந்த உலகம் நமக்கானது மட்டுமல்ல, அவைகளுக்கும் இவ்வுலகில் சரிபங்கு உண்டு. நம் எல்லைக்குள் அவை வருவதே இல்லை, நாமே அதன் எல்லைக்குள் சென்று அவைகளின் வாழ்வினை சாகடிக்கின்றோம்

நாம் அறிவில் உயர்ந்துவிட்டோம் என்பதை தவிர என்ன இறுமாப்பு இருக்க முடியும்? அவைகளுக்கு நம் அளவு சிந்திக்க தெரியாது ஆனால் அவைகளும் உயிர், அவைகளும் வாழவேண்டும் அல்லவா?

அவைகளை விரட்டி அடிப்பதும், காட்சி பொருளாக்குவதும் இன்னும் ஏராளமான அட்டகாசங்கள் செய்வதும் நிச்சயம் பாவம்

இந்த பாவம் எதில் முடியும்?

அதைத்தான் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் சொன்னார்

“இந்த பிரபஞ்சத்தில் மனிதனை போல பல உயிர்கள் இன்னொரு கிரகத்தில் இருக்கலாம், அவை மனிதனை விட அதிக புத்திசாலிகளாக இருக்கலாம்

அவை மனித வடிவில் இருக்க வேண்டிய அவசியமில்லை ஏன் பூச்சி புழுவாக கூட இருக்கலாம் ஆனால் அறிவில் மனிதனை மிஞ்சி இருக்கலாம்

மிக சிறிய மனிதன் மிகபெரும் கப்பல்களை கட்டுவது போல, அந்த சிறிய புத்திசாலி இனமும் மாபெரும் ஓடங்களை கட்டி இங்கு வரலாம், ஏன் வந்தே இருக்கலாம்

நம் தொழில்நுட்பங்களை விட மேலான நுட்பங்கள் அவர்களுக்கு இருக்கலாம், நம்மை பார்த்து கேலி செய்யலாம், மனிதர்களை காட்சி பொருளாக அங்கே கொண்டு சென்றிருக்கலாம், சிலரை கடத்தியும் இருக்கலாம்

நாம் விலங்கு கண்காட்சி நடத்துவது போல அவர்கள் அந்த கிரகத்தில் இப்பொழுது செய்யலாம்

ஒரு காலத்தில் இங்கே அவர்கள் குடியேற வரலாம், நமக்கும் அவர்களுக்கும் யுத்தம் நடக்கலாம், நம் பூமியினை அவர்கள் ஆக்கிரமிக்கலாம்..” என அன்றே சொன்னார் ஹாக்கின்ஸ்..

இந்த காட்டு விலங்குகளை மனிதன் பாடாய் படுத்தும்பொழுது அந்த ஸ்டீபன் ஹாக்கின்ஸ் சொன்னது நினைவுக்கு வருகின்றது

அதுவும் அவர் நினைவுநாளன்று அதிகமாகவே வருகின்றது

ஆம் காட்டுவிலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பூமியில் மானிடன் தான் அறிவாளி என செய்யும் ஒவ்வொரு பாவத்திற்கும் நிச்சயம் அவனை விட ஒரு அறிவாளி இனத்திடம் கணக்கு கொடுத்தே தீரவேண்டும்

காட்டுமிருகம் இந்த காட்டை வைத்து என்ன செய்யபோகின்றது, மனிதனிடம் இருந்தால் பலருக்கு பயனாகும் என சிந்திக்க தெரிந்த இருமாப்பில் மனித குலம் இன்று அதை விரட்டலாம்

நாளை இந்த அழகான பூமி இந்த அவலமான மனிதனிடமிருந்து என்னாக போகின்றது, எங்களிடமிருந்தால் எப்ப்படி இருக்கும் தெரியுமா? சனியன்களே ஒழிந்து போங்கள் என இன்னொரு அறிவார்ந்த உயிரினம் வரலாம், வரும்

ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு, ஒவ்வொரு சக்திக்கும் மேலான ஒரு சக்தி உண்டு

தர்மத்தின் விதி அது..