நாட்டிய பேரோளி பத்மினி

அந்த கேரள‌ சகோதரிகள் மூவருமே பரதநாட்டியத்தை கசடற ஆட கற்றவர்கள், கேரளம் அன்று திருவிதாங்கூர் சமஸ்தானம், அந்த திருவனந்தபுரத்தில் மன்னரின் மாளிகை உட்பட பல முக்கிய இடங்களில் அவர்கள் நடனம் அரங்கேறியது
அதில் பத்மினி செல்லமாக பப்பி,
அவரின் மாமா ஒருவர் அவரை தத்தெடுத்திருந்தார், அவர் பெரும் பணக்காரர் என்பதால் அன்றே மும்பை சென்னை என அவர்கள் சுற்றி கொண்டிருந்ததால் மும்பையில் 
14 வயதில் இந்தி சினிமாவிலும் அந்த பெண் நடித்திருந்தாள்
அந்த சகோதரிகளின் நடன நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் நடந்த பொழுது அதை காண சென்றிருந்தார் என்.எஸ் கிருஷ்ணன் , அது சினிமாவிற்கு பெண்கள் வர ஒருவித தயக்கம் இருந்த காலம் எனினும் அவர்தான் அவர்களை சினிமாவிற்கு கொண்டுவந்தார்
சென்னையில் அக்குடும்பம் இன்னொரு புகழ்பெற்ற நடன குடும்பத்தின் வீட்டில் தங்கியது, இன்றைய நடன கலைஞர் பத்மா சுப்பிரமணியம் பிறந்த காலமது.
பத்மா சுப்பிரமணியத்திற்கு அரங்கேற்ற நிகழ்வின்பொழுது சலங்கை எடுத்து கொடுத்தது பத்மினியின் தாயார், அவ்வளவு நெருக்கம்
என்.எஸ் கிருஷ்ணனின் மண‌மகள் படமே அவருக்கு முதல் படம் எனினும் அதில் அவர் கவனம் பெறவில்லை, மாறாக பராசக்தி வெற்றிக்கு பின் சிவாஜியுடன் அவர் பணம் படத்தில் ஜோடியானார், வசனம் கலைஞர் கருணாநிதி
(இந்த படத்தின் வெற்றியில்தான் கலைஞருக்கு அன்றே கார் பரிசளித்தார் என்.எஸ்.கே, அன்றே கலைஞரின் சம்பளம் 10 ஆயிரம், 1950களில் ஒரு சவரன் தங்கம் என்ன விலை என விசாரித்தால் இந்த மதிப்பு புரியும்)
படம் வெற்றிக்கு பின் அதுவரை பண்டரிபாய், பானுமதி என்றிருந்த சிவாஜியின் ஜோடி இடத்தை அனுசயமாக தட்டிபறித்தார் பத்மினி. சிவாஜிக்கேற்ற ஜோடி என பத்மினியே கொண்டாடபட்டார்
லலிதா, ராகினி என இவரின் மற்ற சகோதரிகளும் நடிக்க வந்தாலும், ஏன் மூவருமே சேர்ந்து நடித்தாலும் காற்று பத்மினி பக்கமே வீசிற்று
அக்காலத்தில் வந்த சாவித்திரியினை ஜெமினி களவாடி போக, சரோஜா தேவி, ஜெயலலிதா எல்லாம் ராமசந்திரனின் கண் அசைவில் கட்டுபட்டிருக்க சிவாஜிக்கேற்ற ஜோடி பத்மினி என்றானது
அது தில்லானா மோகனப்பாள், வியட்நாம் வீடு என ஏராளமான படங்களில் தெரிந்து , இறுதியில் தாய்கொரு தாலாட்டு என்ற அளவில் முதுமைகாலத்தில் முடிந்தது
இருவருக்கும் காதல் என்றார்கள், திருமணம் செய்ய முடிவு என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால் சிவாஜி கணேசனுக்கு அப்பொழுதே திருமணம் ஆகி இருந்தது
ஆனால் இருவருமே காதல் செய்தியினை மறுக்கவில்லை, பின்னாளில் பத்மினி மட்டும் ஒப்புகொண்டார்.
சிவாஜி தனக்கே உரித்தான தொனியோடு “எத்தனைபேரு எனக்கு சோடியா நடிச்சாலும், எனக்கு ஈடா பொருத்தமா நடிச்சது பப்பி மட்டும்தான்” என குறீயீடாக சொல்லி இருந்தார்.
பத்மினியும் வைஜெயந்திமாலாவும் பிறவி நடன கலைஞர்கள், அந்த வஞ்சிகோட்டை வாலிபன் நடனம் மறக்க முடியாதது
நாட்டிய பேரோளி என போற்றபட்ட பத்மினி மன்னாதி மன்னனில் ராமசந்திரனோடு ஆட வேண்டிய கொடுமையும் நடந்தது, அதில் தலைவெட்டபட்ட ஆடு போல குதித்த ராமசந்திரன் வென்றும் தொலைப்பார்
அந்த அவமானத்தை தவிர ஒரு அசம்பாவிதமும் பத்மினிக்கு தமிழ் திரையுலகில் இல்லை
அவரின் சகோதரிகளில் லலிதா வில்லியாகவும், ராகினி காமெடி நடிகையாகவும் மாறிப்போக பத்மினி அட்டகாச நாயகியாக அப்படியே தொடர்ந்தார்
பரத நாட்டியம் என்பது உணர்ச்சிகளை முகத்திலும் அசைவிலும் கொண்டுவரும் விஷயம் , பரத கலையின் அடிநாதம் அதுதான்
அந்த வித்தை பத்மினிக்கு நடனத்தில் வந்தது போலவே, நடிப்பிலும் வந்தது. ஒரிரு இடத்தில் அது மிகை என்பார்கள் மற்றபடி இயல்பான நடிப்பு
1961லே மருத்துவரை திருமணம் செய்து அமெரிக்கா சென்ற பத்மினி அதன் பின் வெகுவிரைவிலே திரும்பிவிட்டார்
பொதுவாக திருமணமான பின் ஒரு நடிகைக்கு நாயகி வாய்ப்பு கிடைக்காது, கிடைத்தாலும் நிலைக்காது
ஆனால் பத்மினி அதன்பின்பே உச்சம் தொட்டார் அவரின் தில்லானா மோகனம்பாள் போன்ற படங்கள் அதன் பின்பே வந்தன‌
சிவாஜி, ராமசந்திரன், ஜெமினி என மூன்று நடிகர்களோடும் மாறி மாறி நடித்த நடிகை அவர், அல்லது அவர்கள் மூவரும் பத்மினியோடு நடிக்க வரிசையில் நின்றனர்
சந்திரபாபு தனியாக அவர் படத்தை வைத்து உனக்காக எல்லாம் உனக்காக என ஆடிகொண்டிருந்தது தனிக்கதை
அப்படி கொண்டாடபட்டார் பத்மினி, அவருக்கு நாட்டிய பேரோளி எனும் பட்டம் அண்ணாமலை பல்கலைகழகம் கொடுத்தது
பத்மினி வரலாற்றில் குறிப்பிடதக்க சம்பவம் உண்டு, அது மறக்கமுடியாதது
1971ல் அமெரிக்க இந்திய தூதரகம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் பத்மினி அப்பொழுது அமெரிக்காவில் இந்துகோவில் இல்லை என டாக்டர் அழகேசன் என்பவர் சொல்லி அதனை கட்ட நிதி திரட்டுகின்றார்
பத்மினி தன் நடன நிகழ்ச்சி மூலம் நிதி திரட்டி தருவதாக சொல்லி கிட்டதட்ட 55 நிகழ்ச்சிகள் மூலம் திரட்டி கொடுத்தார், அந்த மகாபல்லவ கணபதி கோவில் அப்படித்தான் உருவாக்க பட்டது
அதில் பத்மினி பங்கு அதிகம், கடவுள் கொடுத்த கலையினை கடவுளுக்கே திருப்பிகொடுத்தார், அன்னை வேளாங்கண்ணி படத்து சம்பளத்தை கணபதி கோவிலுக்கு அவர் கொடுத்த வினோதம் அன்று நடந்தது
அந்த நிகழ்ச்சி கொடுத்த யோசனையே அவரை அமெரிக்காவில் நடனபள்ளி தொடங்க வைத்தது, அதை தொடங்கி நடத்திகொண்டிருந்தார்
அவர் மனதில் பெரும் ஆசை இருந்தது, மனோரமா போல கடைசி வரை நடித்துகொண்டே இருக்கவிரும்பினார், அவரே வாய்விட்டு சொன்ன விஷயம் அது
அப்படித்தான் பூவே பூச்சுடவா பாட்டியாக திரும்பி வந்தார், எப்படி வஞ்சிகோட்டை வாலிபன் பத்மினி, வியட்நாம் வீடு பத்மினியினை மறக்க முடியாதோ அப்படி பூவே பூச்சுடவா பத்மினி பாட்டியினை மறக்கவே முடியாது
அதன் பின் அப்படியான படங்கள் வரவில்லை, அவரும் அமெரிக்காவில் ஒதுங்கினார்
ஆச்சரியமான சம்பவங்கள் சிவாஜிக்கும் பத்மினிக்கும் உண்டு, இருவருமே சம காலத்தில் அறிமுகமானார்கள், இருவருமே ஒரே நேரத்தில் உச்சம் தொட்டார்கள், அப்படியே ஒரே நேரத்தில் ஓய்வும் பெற்றார்கள்
இருவருமே அப்பல்லோ மருத்துவமனையில் மரித்தும் போனார்கள்
பத்மினிக்கு ஒரு மகன் உண்டு எனினும் அவரின் உறவுபெண் ஷோபனா, உறவுக்கார வாரிசு வீனீத் என அவரின் குடும்பம் இன்றும் தமிழ்சினிமாவில் உண்டு
ஆயிரம் பேர் ஆடினாலும் தமிழ்திரையின் பரத நாட்டியம் இன்றும் ஷோபனா வடிவில் பத்மினி குடும்பத்திடமே இருக்கின்றது, இன்னும் அவர்கள் குடும்பமே அந்த நாட்டியத்தை ஆள்கின்றது
இன்று நாட்டிய பேரோளி பத்மினிக்கு நினைவு நாள்
அற்புதமான பரத நடனம் எப்படி இருக்கும் என தன் மிகசிறந்த நடனத்தால் நிரூபிக்கபிறந்தவர் அவர், மிக சிறந்த நடிகையும் கூட‌
1950 முதல் 1970 வரையான காலங்கள் அவருக்கானவை
“என் சலங்கைக்கு பதில் சொல்லடி; ’மன்னவன் வந்தானடி’, ’மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன’ ’நலம் தானா உடலும் உள்ளமும் நலந்தானா’ பாடல்கள் எல்லாம் பத்மினி கொடுத்த நடன கல்வெட்டுக்கள்
அந்த காலங்கள் அப்படி அருமையானவை, ரஷ்ய அழைப்பின் பேரில் சென்ற கலைகுழுவில் பத்மினி ஆடிய ஆட்டம் கண்டு சோவியத் அரசாங்கம் பெரும் கவுரவம் கொடுத்தது
பத்மினி எப்படி எல்லாம் செய்திகளில் அடிபட்டார் என்றால் இப்படியும் கூட‌
அது ராமசந்திரனுக்கும், எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கும் பிணக்கு வந்திருந்த நேரம். உண்மையில் எஸ்.எஸ் ராஜேந்திரன் நல்ல நடிகர் ஆனால் திமுக மகா உத்தமான இயக்கம் என எண்ணி லட்சிய வேடத்தில் நடிப்பேன், கட்சி கொள்கை அது என பேசி நாசமாய் போனவர்
பிற்காலத்தில் கலைஞர் கருணாநிதி ராமானுஜருக்கு வசனம் எழுதுவார் என எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்?
அப்பொழுது ராமசந்திரனை தாக்கி அடிக்கடி பேசிகொண்டிருந்த ராஜேந்திரன் ஒருநாள் “ராஜா தேசிங்கு படத்தில் என்னுடன் திருமதி பத்மினி அவர்கள் நெருங்கி நடிக்கக்கூடாது என்பதற்காக எம்ஜியார் செய்த சூழ்ச்சிகளை நாடு மறக்குமா?” என சொல்லிவிட்டார்
சோ ராமசாமி தனக்கே உரித்தான ஸ்டைலில் சொன்னார்
“எஸ் எஸ் ஆர் சார் ! கேட்கவே பதறுகிறதே.நெஞ்சு கொதிக்கிறது. இப்படியெல்லாம் அநியாயமா ? எப்பேர்ப்பட்ட அநீதி இது? இதையெல்லாம் இந்த நாடு மறந்தால் இந்த நாட்டிற்கு விமோசனம் ஏது?
இந்த நாடு, நன்றி கொன்ற நாடு 
ஆகிவிடாதா ?”
தமிழ் திரையுலகம் ஆணாதிக்கமிக்கது, ஆண்கள் வேடமே பிரதானம்
ஆனால் பத்மினியின் மிகசிறந்த படங்களை பாருங்கள், நடிப்பினாலும் நாட்டியத்தாலும் அப்படத்தை அவர்தாங்கி நிற்பார். அவர் அல்லாது அப்படங்கள் அமைந்திருக்காது, நின்றிருக்காது
பத்மினி எனும் பெரும் நடிகையினை தவிர யாருக்கும் அது சாத்தியமில்லை, அவரின் மிகபெரும் பலம் அது
தமிழ் திரையுலகில் தவிர்க்கவே முடியாத தனி இடம்பெற்ற நாட்டிய தாரகைக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
Image may contain: 1 person, closeup