பறையர் மகாசன சபை – இரட்டைமலை சீனிவாசன்

பெரியாருக்கும் நீதிகட்சிக்கும் முன்னாலே 1900களுக்கு முன்னாலே ஒருவர் தாழ்த்தபட்டவருக்காக பேசினார்

முதன் முதலில் பறையர் மகாசன சபையினை தொடங்கினார், முதன் முதலில் பறையர் என்ற இதழை அந்த மக்களுக்காக நடத்தினார்

அன்று அச்சு ஊடகங்களே அதிகம் இல்லா நிலையில் அவரின் இந்த முயற்சி நிச்சயம் அதிசயமானது, தாழ்த்தபட்டோருக்கான இந்தியாவின் முதல் குரல் அவருடையது

அன்றே கல்வி கற்றிருந்தார், சிந்தித்தார். தென்னாப்ரிக்கா எல்லாம் சென்று மக்களின் அடிமை நிலையினை உணர்ந்தார்

தாழ்த்தபட்ட மக்களின் குரலாக அவர் ஒலிக்க ஒலிக்க வெள்ளை அரசு அவரை கவனித்து, கை தூக்கியது

லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டுக்கெல்லாம் அவரை அழைத்தது, அவரும் சென்று தலித்மக்களின் நல்வாழ்விற்காக பல திட்டங்களை எடுத்துரைத்தார்

தேர்தலில் சொத்து உள்ளோர்தான் வாக்களிக்க வேண்டும் என்ற அந்த காலகட்டத்திலே அதற்கு எதிராக போராடியவர் அவர்

அவரின் சமூக போராட்டத்தின் தொடர்ச்சிதான் பின்பு நீதிகட்சி, சுயமரியாதை கழகம், திராவிட கழகம், திமுக என வந்து நின்றது

தொடக்க பிதாமகன் சத்தியமாக அவர்தான்

அவர் இரட்டைமலை சீனிவாசன். பெரியார் அம்பேத்கருடன் இணைந்து சொல்லவேண்டிய பெயர். தலித் வரலாற்றில் மறக்கமுடியாத பெயர்

பிரிட்டன் மன்னரை பார்த்து அவரிடம் இந்தியாவின் தீண்டாமை கொடுமையினை சொல்லி அவரை கண்ணீர்விட வைத்தவர் சீனிவாசன், நிச்சயம் அதெல்லாம் வரலாறு

வெள்ளையன் அவரின் சமூக அக்கறைக்காகவும், அடிமைபட்ட மக்களுக்கு அவர் ஆற்றிய சேவைக்காகவும் அவருக்கு ராவ் பகதூர், திவான் பகதூர் போன்ற பட்டங்களை எல்லாம் அளித்து கவுரவித்தான்

அவரின் கோரிக்கையே இன்று தாழ்த்தபட்டோர் ஆதிதிராவிடர் என்று அழைக்கபடுகின்றனர், சாதி வன்கொடுமை சட்டத்தின் மூல காரணகர்த்தா இவரே

ஆலயங்களில் தாழ்த்தபட்டவரை அனுமதிக்க வேண்டும் என்ற முதல்குரல் கொடுத்தவரும் அவரே

இட ஒதுக்கீட்டினை முதன் முதலில் கேட்டவரும் அவரே

சுருக்கமாக சொன்னால் இவரின் சிந்தனைகளே பின்பு கோரிக்கையாயின, இவரின் சிந்தனையே பின்பு திராவிட சிந்தனையாக பெரியாரிடம் வெளிபட்டது

ஆனால் பெரியாரை கொண்டாடும் அளவுக்கு, அம்பேத்கரை கொண்டாடும் அளவிற்கு இவரை நினைப்பார்களா என்றால் இல்லை

பெரியாரை கொண்டாடுவதிலும் , அம்பேத்கரை கொண்டாடுவதிலும் அரசியல் இருகின்றது

ஆனால் இரட்டைமலை சீனிவாசன் 1945லே இறந்துவிட்டதால் அவர் அரசியலுக்கு தேவையின்றி போனார், அப்படியே மறக்கபட்டார்

இன்று காணும் தலித் அரசியலுக்கு அவர்தான் முன்னோடி, ஆனால் எந்த மக்களை பறையர் என அழைக்க கூடாது என சொல்லி அவர்களை ஆதிதிராவிடர் என மாற்றினாரோ அவரை அந்த மக்களே நினைக்கவில்லை

அவர்களுக்கு தெரிந்தெல்லாம் அம்பேத்கர், இம்மானுவேல், திருமா அப்படியே பா.ரஞ்சித்

அந்த மாமனிதனுக்கு இங்கு பெரும் கொடுமை நிகழ்த்தபட்டது

அந்த மனிதனின் போராட்டமும், வாழ்வும் அவரின் பெரும் சிந்தனையும், எப்படியாவது பிரிட்டிஷ் இந்தியாவில் அந்த மக்களுக்கு ஒரு விடிவு ஏற்பட வேண்டுமென்றும் அவர் போராடியதும் மாபெரும் வரலாறு

தயக்கமின்றி சொல்லலாம், பெரியாருக்கும் நீதிகட்சிக்கும் அவர்தான் முன்னோடி

ஆனால் திமுகவின் முப்பெரும் விழாவில் கூட அவரை நினைப்பதில்லை, கலைஞர் இருக்கும்வரை அவ்வப்போது தொட்டுகாட்டுவார் இப்போது அதற்கும் ஆளில்லை

பெரியார் என்றால் உருகி கண்ணீர் விடுபவர்களுக்கு ரெட்டைமலை சீனிவாசன் நினைவுக்கு வருவதில்லை

காரணம் அவர் ஏழை, ஏழைகளுக்கு போராடி ஏழையாகவே செத்தவர். பெரியார் போல கோடிகணக்கான சொத்துக்களை விட்டு செல்லவில்லை

அம்பேத்கர் போல சட்டம் இயற்ற அவருக்கு காலமுமில்லை. ஆனால் 1945ல் சாகாமல் இருந்திருந்தால் நிச்சயம் சுதந்திர இந்தியாவில் மாபெரும் இடம் பெற்றிருப்பார். சந்தேகமில்லை

யார் நினைத்தால் என்ன நினைக்காவிட்டால் என்ன? நல்லோர் யாராயினும் அவருக்கு நாம் அஞ்சலி செலுத்தலாம்

தமிழகத்தின் சமூகநீதி காக்க வந்த பிதாமகனுக்கு, பெரும் புரட்சிகளை எல்லாம் சத்தமின்றி செய்தவருக்கு, தாழகிடந்த மக்களின் வாழ்விற்காக உழைத்து அவர்களுக்கு பெரும் பணி செய்திட்ட அந்த உத்தமனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

இன்று அவரின் நினைவு நாள்

இன்று காணும் பகுத்தறிவு, சாதிஒழிப்பு, இட ஒதுக்கீடு என எல்லாவற்றிற்கும் அஸ்திவாரமான , வெளிதெரியா ஆணிவேரான அந்த மாபெரும் போராளிக்கு தலை சாய்த்து வணக்கங்கள்.

Image may contain: 1 person