பிரித்வி : 01

யுத்தத்திற்கான ஒத்திகையினை நடத்துகின்றது இந்தியா, பாகிஸ்தானோ கோரி ஏவுகனையின் பலம் தெரியுமா என்பது போல் சில விஷயங்களை கசியவிடுகின்றது

பாகிஸ்தானிய‌ ஏவுகனை என்பது சீனாவிடமிருந்து அது புறவாசல் வழியாக வாங்கியது ஆனால் கோரி ஏன் அதற்கு அது பெயர்சூட்டியது?

அதில் ஒளிந்திருக்கின்றது இந்தியாவின் வீரமான வரலாறும், இங்கு நிலைத்துவிட்ட அந்த வீர காவியமும், காதல் காவியமும்

இன்றும் கண்ணனுக்கு அடுத்தபடி கொண்டாடபடும் வீரவரலாறு அது

அன்று கங்கையாலும் சிந்துவாலும் செல்வ செழிப்பில் மிதந்த இந்தியா மேல் ஆப்கானிய கொள்ளையர்களுக்கு கண் இருந்தது, அடிக்கடி கொள்ளையிட வருவர், கொள்ளை அடித்துவிட்டு ஓடிவிடுவர்

இங்கு இருந்து ஆளும் தைரியமும் ஆசையும் அவர்களுக்கு இல்லை, ராஜ்புத் வீர இனமும் இன்னும் பல இந்திய குழுக்களும் அவர்களுக்கான பதிலடியினை கொடுத்து கொண்டே இருந்தன‌

கஸ்னி அல்லது கஜினி ஊரின் மன்னன் முகமது எனும் கஜினி முகமது கூட அப்படி கொள்ளை அடித்துவிட்டு ஓடியவனே தவிர மாவீரன் அல்ல‌

17 முறையில் சிலமுறை வென்ற கஜினி தன் நாட்டில் மிகபெரும் அரசை ஸ்தாபித்தான் அவன் வம்சத்தை பின்னாளில் விரட்டி ஆட்சியினை கைபற்றினான் கோரி முகமது

அதாவது அந்த ஊரில் ஏகபட்ட முகமதுகள், கஜினியினை ஆண்டவன் கஜினி முகமது, கோரி எனும் ஊரினை ஆண்டவன் கோரி முகமது

கோரி என்பது கோவ்ரி, காவ்ரி, காவேரி என பொருள்படும், ஆப்கனில் ஏகபட்ட தமிழ்பெயர் உண்டு, காவேரிதான் கோரி ஆனது. விஷயம் அது அல்ல இப்போதைய விஷயம் கோரி முகமது

அவன் கஜினி பாணியில் இந்தியாவினை தாக்க திட்டமிட்ட பொழுது இங்கு அவனுக்கு பெரும் சவால் இருந்தது

அந்த சவாலின் பெயர் பிரித்வி ராஜன், இன்றைய டெல்லி, ஆஜ்மீர் பகுதிகளின் ராஜா அவன், 20 வயதிலே அரியணை ஏறினான், மாவீரனும் அழகனுமாய் இருந்தான் கூடவே அரசனுக்குள்ள அறிவும் ஏராளம் இருந்தது

இதெல்லாம் இருந்ததால் கொஞ்சம் திமிரும் இருந்தது, ஆனால் வட இந்தியா முழுக்க அவனுக்கு பெரும் செல்வாக்கும் இருந்தது

அப்பொழுது கன்னோசி நாடு அதாவது இன்றைய உபி பகுதியில் ஜெயசந்திரன் என்றொரு அரசன் இருந்தான், அவன் ஒரு யாகம் நடத்தினான் , தன்னை தலைவராக ஏற்கும் படி பலருக்கு ஓலை அனுப்பினான் எல்லோரும் வந்து வணங்கி யாகத்தில் கலந்து கொண்டனர்

ஆனால் பிரித்விராஜன் வரவில்லை, தன்னை அவன் அவமதித்ததாக மனதில் புழுங்கிகொண்டிருந்தான் ஜெய்சந்திரன் என்றாலும் மோதிபார்க்கும் ஆசை எல்லாம் இல்லை

எனினும் அரண்மனையில் பிரித்விராஜன் பற்றி அவன் விவாதிப்பதும் அதை நாலுபேர் மறுத்து பிரித்வியின் பெருமைகளையும் அவனின் மாவீரத்தையும் பற்றி பேசுவதும் வழக்கமானது

அதை அவ்வப்போது கேட்டுகொண்டிருந்த ஜெயசந்திரன் மகள் சம்யுத்தாவிற்கு பிரித்வி மேல் காதலே வந்தது

ஆம் பார்க்காமலே வந்த காதல் அது, பிரித்விராஜன் பற்றிய செய்திகளை கேட்டே அவள் காதலில் விழுந்தாள்

என்ன இருந்தாலும் அரச குடும்பம் அல்லவா? உரிய முறையில் யாரையோ பிடித்து அனுப்பி தன் காதலை பிரித்விராஜனிடம் சொல்ல சொல்லிவிட்டாள்

அவனுக்கும் ஆச்சரியம், சம்யுக்தா பற்றி கேள்விபட்ட அவனும் அவள் காதலை ஏற்றுகொண்டான், ஆனால் சந்திப்போ டேட்டிங்கோ இல்லை, எல்லாம் கனவில் மட்டுமே

வீரனை காதலித்த பின் சம்யுக்தா சும்மா இருப்பாளா? அவளுக்கும் தைரியம் வந்தது, மிக தைரியமாக ஜெயசந்திரனிடமே தன் காதலை சொன்னாள், “மணந்தால் பிரித்வியினை மணப்பேன் இல்லை என்றால் கண்ணனே வந்தாலும் மணக்க மாட்டேன்”

ஆத்திரத்தில் பொங்கினான் ஜெயசந்திரன், பிரித்வி என் அரண்மனைக்கு வரவே தகுதியற்றவன், அவன் என் அரண்மனை காவலாளி வேலைக்கே சரி என சொல்லி பிரித்வி போலவே ஒரு சிலை செய்து வாசலில் வைத்தான்

அதை அடிக்கடி மிதித்தானா, காரி உமிழ்ந்தானா, செருப்பு மாலை இட்டானா? யானை கொண்டு சாணமிட செய்தானா என்ற தகவல் இல்லை, ஆனால் பிரித்விராஜன் தகுதி இதுதான் என சொல்லிகொண்டிருந்தான்

சம்யுக்தையோ அச்சிலைக்கு மாலையிடுவதும் திலகமிடுவதும் அதை சுற்றி ஆடுவதுமாக இருந்தாள்

பொறுத்து பார்த்த மன்னன் ஒரு நாள் சுயம்வரம் நடத்தினான், மகளிடம் சொன்னான் ” பிரித்விராஜனை தவிர எல்லா ராஜகுமாரரும் சுயம்வரத்திற்கு வருவார்கள், ஒருவனுக்கு மாலையிடு, என்னை மீறி அவனும் வரமுடியாது, நீனும் செல்லமுடியாது”

சம்யுக்தாவிற்கு வேறுவழியில்லை, ஆனாலும் பிரித்வி ராஜனை நம்பினாள்

சுயம்வர நாளும் வந்தது, ராஜகுமாரர் எல்லாம் கூடி இருந்தனர், சம்யுக்தா கையில் மாலை கொடுக்கபட்டது, விரும்பியவன் கழுத்தில் மாலையிட உரிமையும் கொடுக்கபட்டது

சம்யுக்தா நல்ல அழகி என்பதால் ராஜகுமாரர் எல்லாம் பல்லை மட்டுமல்ல‌ கழுத்தையும் காட்டியபடி நின்றனர்

எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தாள் சம்யுக்தா தேசமே, ஏன் தேசங்களே திரண்டிருந்தது, தன் காதலை காட்ட மிக சரியான சந்தர்ப்பம் இது என எண்ணிய சம்யுக்தா சட்டென ஓடி சென்று பிரித்வி சிலைக்கு மாலையிட்டாள்

சபை அதிர்ந்தது, சிலையினை இடித்துவிட்டு அவளை இழுத்துவர ஜெயசந்திரன் அடியெடுத்து வைத்தபொழுது அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது

சட்டனெ சிலைக்கு உயிர்வந்து சம்யுக்தாவினை அள்ளி குதிரையில் வைத்து பறந்தது

ஆம் நடக்கும் விஷயங்களை மிக துல்லியமாக கண்காணித்த பிரித்விராஜன் சுயம்வரம் அன்று சிலைக்கு பதிலாக அவனே நின்றிருந்தான், சிலை போலவே நின்றிருந்தான்

யாருக்கும் சந்தேகம் வராதாடி நின்றிருந்தது அவனின் சாமார்த்தியம்

துள்ளியோடிய குதிரை இருவரையும் சுமந்து ஓடியது, பெரும் படையுடன் பின் தொடர்ந்தான் ஜெயசந்திரன், தொலைவில் தன் படையினை நிறுத்தி வைத்திருந்தான் பிருத்வி, அந்த இடத்தை அடைந்ததும் யுத்தம் தொடங்கிற்று

யுத்தம் நடக்கும் சாக்கில் சம்யுக்தாவோடு டெல்லிக்கு வந்தான் பிரித்வி,ஜெயசந்திரனால் அவன் படைகளை தாண்டி வரமுடியவில்லை

காதலர்கள் சந்தித்ததும், காந்தர்வ மணம் புரிந்ததும் ஒரே நாளிலே

அவர்கள் வாழ்வு ஆனந்தமாக சென்றுகொண்டிருந்தது, இருமுறை தன்னை அவமானபடுத்திய பிரித்வி ராஜனை ஒழிக்க தூக்கமின்றி வழிதேடினான் ஜெய்சந்திரன்

(தொடரும்..)