பக்கிங்காம் அரண்மனையினை விட சொகுசானவை

புழல் சிறை நவீனமான கட்டபட்டது, அதன் திறப்பு விழாவில் கலைஞர் சொன்னது இன்னும் நினைவில் இருக்கின்றது

“இந்த சிறை சகல வசதிகளும் நிரம்பியது என்பதற்காக குற்றவாளிகள் இங்கேயே தங்க நினைக்க கூடாது..” என தனக்கே உரித்தான ஸ்டைலில் முடித்திருந்தார்

திமுக ஆட்சி முடிந்து கிட்டதட்ட 8 ஆண்டுகளில் அதிமுக அரசு அந்த வசதிகளை பன்மடங்கு பெருக்கி இருக்கின்றது

அதாவது கிட்டதட்ட தாஜ் ஹோட்டல் அளவிற்கு வசதிகள் நிரம்பி இருக்கின்றன, சொகுசுஅறைகளாக பல படங்கள் வருகின்றன‌

அரசு சிறையினை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் பெரும் விஷயம் நடந்திருக்கின்றது, டிஜிபி மீதே குட்கா ஊழல் என்றால் சிறைதுறை எப்படி இருக்கும்?

இதில் பணத்திற்கு ஏற்ப வசதிகள் கிடைத்திருக்கின்றன, “அன்பே வா” படத்தில் நாகேஷ் சுருட்டுவது போல சுருட்டி இருக்கின்றார்கள்

இவ்வளவு வசதியுள்ள சிறையிலிருந்து அரசு வாகனத்தில் இன்ப சுற்றுலா அடிக்கடி கூட்டி சென்றிருக்கமாட்டார்களா என்ற சந்தேகம் வலுக்கின்றது

புழலில் தமிழக குற்றவாளிகள் மட்டுமல்ல , பன்னாட்டு குற்றவாளிகளும் அடக்கம், அவர்களும் வாழ்வாங்கு வாழ்ந்திருகின்றார்கள், பாகிஸ்தான் தீவிரவாதி பாகிஸ்தானில் ஸ்கைபில் எல்லாம் பேசி மகிழ்ந்திருக்கின்றான்

டென்னிஸ் கோர்ட் எல்லாம் இருந்திருக்கின்றது, பார் நீச்சல் குளம் எல்லாம் இருந்திருக்கலாம்

எப்படி இவ்வளவு வசதிகள் பெருகின? சசிகலாவிற்காக தயார் செய்துவிட்டு மற்றவர்களுக்கு வாடகைக்கு விட்டுவிட்டார்களோ என்னமோ?

அரசு நிர்வாகம் எவ்வளவு சீரழிந்திருக்கின்றது என்பதற்கு இது எடுத்துகாட்டு

இந்த விஜய் மல்லையா என்பவர் வசமாக சிக்கி கொண்டார், இனி லண்டன் கோர்ட்டில் இந்தியாவில் புழல் சிறை எல்லாம் பக்கிங்காம் அரண்மனையினை விட சொகுசானவை என்றால், படங்களை கொடுத்தால் லண்டன் கோர்ட் என்ன செய்யமுடியும்?

பிரிட்டனிலே இனி சிறைகள் புழல் சாயலில் இருக்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் வெடிக்கும்

இந்த படங்களை பார்த்தால் இனி கோர்ட்டில் நீதிபதிகளுக்கு கனத்த சிக்கல் வரும் போல் தோன்றுகின்றது, இனி அவர்கள் தீர்ப்பு எழுதியவுடன் குற்றவாளி எல்லாம் “எசமான் என்னை புழலுக்கு அனுப்புங்கள்..” என கதறி கதறி அழப்போகின்றார்கள்