தேசபிதா மகாத்மா காந்தி

அந்த மோகன்தாஸ் புரிந்துகொள்ள கொஞ்சம் சிரமான மனிதர், உணர்ச்சிவசபடாமல் அமைதியான மனதோடு சிந்தித்தால் அவர் ஒரு அற்புதமான பிறவி, அதனால்தான் உலகம் அந்த மனிதனை மனிதருள் சிறந்தவர் என கொண்டாடிகொண்டிருக்கின்றது.
அவர்தான் தேசபிதா மகாத்மா காந்தி,
உண்மையில் காந்தி என்பது அவரின் குடும்பபெயர், பின்னாளில் பாரத பெயராக நிலைத்துவிட்டது.
கொஞ்சம் வளமான பிண்ணனி கொண்ட குஜராத்தி குடும்பம் அது, மாணவன் காந்தி ஒன்றும் படிப்பில் சூரர் அல்ல, சராசரிதான். பின்னாளில் 18ம் வயதில் லண்டனுக்கு வழக்கறிஞருக்கு படிக்க சென்றார், சுருக்கமாக சொன்னால் அன்றைய இந்தியாவின் பெரும் சிக்கல் அவருக்கு தெரியவில்லை, வளமான குஜராத் வணிக வாழ்வும், சொர்க்கபுரியான லண்டனுமே அவர் அறிந்திருத்த உலகம் அல்லது மானிடம்.
வக்கீல் தொழிலுக்காக சிங்கப்பூருக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ சென்றிந்தால் கூட இன்று இந்திய லஞ்ச,கருப்பு,டாஸ்மாக் பணங்களில் சிரிக்கும் அவமானம் அவருக்கு வந்திருக்காது, ஆனால் தென்னாப்ரிக்கா அவரின் விதியினை மாற்றிற்று.
அந்த காலத்திலிருந்தே இனவெறிக்கு பெரும் எடுத்துகாட்டு தென்னாபிர்க்கா, மிக சமீபம் வரை இனவெறி சிக்கல் உண்டு என்றால் அந்தகாலம் எப்படி இருந்திருக்கும்?. அங்குதான் இனவெறியின், அடிமைதனத்தின் கோரமுகத்தினை நேருக்கு நேர் காண்கிறார், புத்தனுக்கு வந்த ஞானம்போல காந்திக்கும் வந்தது, களத்தில் குதித்தார்.
காந்தி பெரும் திறமையான வக்கீலோ அல்லது பெரும் அறிவுஜீவியோ அல்ல, ஆனால் அடுத்தவர் படும் வதைகளை காண சகிக்காமல் தானே அவர்களுக்காக போராட வந்த மனித நேய மிக்க சாதாரண மனிதர்.
தென்னாபிரிக்காவில் பல போராட்டங்களை முன்னெடுத்து அவற்றில் குறிப்பிடதக்க வெற்றியும் பெற்றார், வெற்றி என்றால் வெள்ளையனை விரட்டினார் என்பதல்ல, சில உரிமைகளை அங்கு சுரங்க அடிமைகளாய் இருந்த இந்தியருக்கு பெற்றுகொடுத்தார், இன்று அங்குள்ள சிறுபான்மை இந்தியருக்கு வோட்டு உரிமையாவது உள்ளதென்றால் அதற்கு காரணம் காந்தியே.
அப்படியே இந்தியாவிற்கு அவர் வந்தபின், இந்திய போராட்டகளம் வேறுமாதிரி திரும்பியது, ஒட்டுமொத்த 30 கோடி மக்களும் அவரை தலைவராக ஏற்றுகொண்டனர், அவர் சொன்ன திசையினை நோக்கி மொத்த இந்தியா ஓடியது, அவர் சுட்டுவிரலுக்கு கட்டுபட்டது, அதுவரை துப்பாக்கி முனையில் இந்தியாவினை அடக்கிய வெள்ளையனுக்கு இது மகா குழப்பமாக தோன்றிற்று.
காரணம் பிரித்தாளும் கொள்கை, மதவாதம்,சாதி என பல பிரிவினை மூலம் இந்தியாவினை ஆண்டுகொண்டிருந்த வெள்ளையனுக்கு முதல் முதலாக ஜாதி,மதம்,மொழி கடந்த ஒரே இந்திய தலைவனாக காந்தி உருவானதே அவர்களுக்கு அச்சம் கொடுத்தது.
காந்தியின் போராட்ட வடிவம் மகா வித்தியாசமானது, எதிர்யினை பயமுறுத்தி ஓடவிடுவது அல்ல அவர்பாணி. எதிராளியினை சிந்திக்க வைப்பது, அவன் மனதினை உருகவைப்பது, எல்லாவற்றிற்கும் மேலாக மக்களை ஒற்றைபுள்ளியில் குவித்து உரிமைகுரல் எழுப்ப வைப்பது.
அவரின் சித்தாந்தம் மகா எளிது, 30 கோடிமக்களை ஆள்வது வெறும் 1 லட்சம் பிரிட்டானியர், இந்த பொன்கொழிக்கும் நாட்டை அவர்களின் வியாபார தலமாக பார்க்கின்றனர், அந்த வியாபாரத்தில் அடித்தால் ஓடிவிடுவார்கள். மொத்தத்தில் நாம் அவர்களுக்கு ஒத்துழைப்பதுதான் தவறு. அவர்கள் பொருளை வாங்குவதுதான் தவறு, அவர்களின் சட்ட திட்டங்களை மதிப்பதுதான் தவறு.
அதன் அடிப்படையில் ஒத்துழையாமை இயக்கம், அந்நிய பொருள் பகிஷ்கரிப்பு, சட்ட மறுப்பு, என ஒவ்வொன்றாக நடத்தினார். இந்தியாவில் விளையும் உப்பிற்கு உங்களுக்கு வரியா? என அவர் சிந்திக்க சொன்னபொழுது மொத்த தேசமும் சிலிர்த்து எழுந்தது.
அதாவது அடிமைமட்ட மக்களுக்கு வெறியூட்டுவதற்கு பதிலாக அறிவூட்டினார். அதனை பொறுமையாக ஊட்டினார். துப்பாக்கி என்றால் வெள்ளையன் எளிதில் வென்றுவிடுவான், 300 ஆண்டு போராட்டம் அதனைத்தன் சொன்னது. ஆனால் அஹிம்சையினை எப்படி வெல்வது என்பதில் அவன் தடுமாறினான்.
நீங்கள் கொடுமை செய்தால் எங்களை நாங்கள் வதைத்துகொள்வோம், சாவோம். பிணங்களின் மீது ஆட்சிசெய்தால் இங்கிலாந்து அரசுக்கு என்ன வருமானம்? என்ற நுட்பத்தில்தான் வெள்ளையன் சிக்கினான்.
அப்படி அவர் புகழ்பெற்ற போராட்டங்களை நடத்தி பின் விடுதலையும் பெற்று கொடுத்து, பின் வரலாற்றில் அழியா இடம் பிடித்ததெல்லாம் வரலாறு. இந்தியாவில் அவர் மறக்கபடிக்கபடலாம், ஆனால் உலகெல்லாம் வாழும் மனிதர்கள் அவரை மறக்கமாட்டார்கள்.
உண்மையில் வெள்ளையன் காந்தியிடம் தோற்றான், உள்மனதில் பழிவாங்க திட்டமிட்டான். என்று அவர்கள் அரசியல் கொலையினை நேரடியாக செய்வார்கள்? சில சர்ச்சைகளை பயன்படுத்தி பாகிஸ்தானை பிரிக்கும் நிலைக்கு தந்திரமாக கொண்டு சென்றார்கள்.
எவ்வளவோ காந்தி மன்றாடியும், ஜின்னாவினை அவரால் சமாதானபடுத்த முடியவில்லை, விளைவு இந்திய பிரிவும், ரத்த ஆறும் ஓடவைத்து தந்திரமாக அவரை பழிவாங்கினான் வெள்ளையன்.
காந்தி ஒரு இந்து, ஆனால் உன்னதமான இந்து. பாகிஸ்தான் பிரிந்து சென்றபொழுதும் அதற்கு கொடுக்கவேண்டிய பணத்தை கொடுக்க சொன்னர். இந்தியாவிலே தங்கவிரும்பும் இஸ்லாமியருக்கு இது தாய்நாடு என அறிக்கையும் விட்டார், இதுதான் அவருக்கு “இந்து எதிரி” எனும் பெயரினை கொடுத்து உயிரையும் பறித்தது.
அந்த சூழ்நிலை அவருக்கு மகா சிக்கலனாது, அவர் பாகிஸ்தான் பிரிந்ததில் மனம் நொந்துகிடந்தார், அந்த பணத்தை தாமதம் செய்தாலோ அல்லது கலவரங்களுக்கு காரணம் பாகிஸ்தான் என அறிக்கை இட்டாலோ அவர் இந்துமத வெறியராக அறிவிக்கபட்டிருப்பார்.
அப்படி ஒரு நிலை வந்திருந்தால் இந்தியாவில் மீதமிருந்த சிறுபான்மை இஸ்லாமியரின் நிலை இன்னும் படுமோசமாக மாறி இருக்கும். உண்மையில் மதவெறியர்கள் அதனைத்தான் எதிர்பார்த்தார்கள், நடக்கவில்லை வெறுப்பில் துப்பாக்கியால் பழிவாங்கினார்கள் அதுவும் பல முயற்சிகளுக்கு பின்னால்.
50 ஆண்டுகாலம் வெள்ளையன் பாதுகாத்த காந்தியினை வெறும் 1 ஆண்டுக்குள் கொன்றது அவரது கனவான சுதந்திர இந்தியா, காரணம் மதவெறி.
காந்திமேல் சர்ச்சைகளும் உண்டு, அதாவது பகத்சிங்கினை காப்பாற்றவில்லை, அல்லது நேதாஜியினை அவர் பகைத்தார் என ஏராளம் உண்டு.
இது பகத்சிங்கையோ, அல்லது நேதாஜியினையோ அல்லது காந்தியினையோ புரிந்துகொள்ளா வகையில் பரப்பபடும் செய்தி. அதாவது மூவரும் வேறுவேறு வழி. தன்னை விடுவிக்க பிரிட்டிசாரிடம் முறையிட்ட‌ தனது தந்தையினையே கடுமையாக எதிர்த்தவன் பகத்சிங், காந்தி முறையிட்டாலும் அதனையேத்தான் சொல்லி இருப்பார். நேதாஜி வெளிநாட்டவர் உதவியுடன் ராணுவவழி சாத்தியம் என எண்ணியவர், இந்தியாவிற்குள் ஒரு குண்டு கூட அவரால் வெடித்தது இல்லை. காந்தியினை துரோகி என்றெல்லாம் அறிவித்தவரில்லை.
வன்முறைக்கு காந்தி எதிரி, வன்முறையால் அமைக்கபடும் எந்த அமைப்பும்,விடுதலையும் நிலைக்காது என்றவர், சோவியத் யூனியனை அப்படித்தான் சொன்னார், அது உடைந்தும் போயிற்று. இன்னொன்று தீவிரவாதிகளை காந்தி ஆதரித்தால் எண்ணற்ற இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவார்கள், பெரும் ரத்தகளறி ஏற்பட்டிருக்கும்.
மொத்தத்தில் இந்திய இளைஞர்களை துப்பாக்கி ஏந்தவிடாமல் அவர்களை காமராஜர்,நேரு,சாஸ்திரி என வருங்கால தலைவர்களாக மாற்றி காட்டிவர் காந்தி. ஒரு தலைவன் தன்னை நம்பிய மக்களை ஒரு சிராய்ப்பும் இன்றி காப்பாற்ற வேண்டும். காந்தி அதனைத்தான் செய்தார்.
இதுதான் காந்தியின் வெற்றி மாபெரும் வெற்றி.
உலகில் அகிம்சையால் சாதித்த நெல்சன் மண்டேலா, மார்டின் லுத்தர் கிங் போன்றவர்கள் அவர் வழியில் போராடியதால்தான் இன்றளவும் வரலாற்றில் நிலைத்திருக்கின்றார்கள். அவ்வகையில் லுத்தரின் புகழ்மிக்க போராட்டத்தின் பலனில் வந்த ஒபாமா. இன்று அமெரிக்க அதிபராக காந்தியை புகழ்கின்றார் என்றால் அது காரணமில்லாமல் இல்லை.
எந்த லண்டன் ஏகாதிபத்தியம் அவரை எள்ளி நகையாடி பின் அங்கிகரீத்ததோ அதே லண்டன் பாராளுமன்றம் அவருக்கு சிலைவைத்து வணங்குகின்றது.
ரத்தகளறிகள் மிகுந்த இவ்வுலகில் மகாத்மாவின் வழிதான் சிறந்தது என ஐ.நாவில் பான் கீ மூன் மேற்கோள் காட்டுகின்றார், இவை எல்லாம் காந்தியின் வெற்றி, உலகம் உணர்ந்துகொண்ட உத்தமனின் வெற்றி.
ஆனால் பாரத திருநாட்டில் நடப்பது என்ன?
மதவெறியின் உச்சத்தில், அதுவும் பெரும் ரத்தகளறி ஏற்படும் நோக்கில் இஸ்மாயில் என பச்சை குத்திகொண்ட கோட்சே, அவரை கொன்ற கோட்சே தியாகி ஆக்கபட்டுகொண்டிருக்கின்றார், இதை எல்லாம் குஜராத்தில் பிறந்தவராக அல்ல, இந்திய பிரதமராக கண்டிக்கவேண்டிய உச்சம் இங்கு அமைதி காத்துவிட்டு, ஐ.நாவில் “ஆமாம் காந்தி உத்தமர்” என கேமரா நோக்கி தலையாட்டுகின்றது.
காந்தி என்ன தலைமைக்கு ஆசைபட்டாரா? இல்லை தன் பிள்ளைகள் எல்லாம் இந்தியாவினை ஆளவேண்டும் என ஆசைபட்டாரா? தான் வெள்ளையனை எதிர்ப்பதால் தன் மகனின் லண்டன் படிப்பினையே தடுத்து தீரா குடும்பழி சுமந்தவர்.
( என்ன தலைவர் இவர்? 4 பிள்ளைகளை பெற்றாரே ஒருவரையாவது “நமக்கு நாமே”, “நமது இந்தியா” என தெருவோடு அனுப்பி இருக்க வேண்டாமா?)
உலக சரித்திரத்தில் சுதந்திர போராட்ட தலைமேற்று, அதில் வெற்றியும் பெற்று ஆனால் அதிகாரம் வேண்டாம் என ஒதுங்கிய ஒரு தலைவனை காட்டமுடியுமா? அமெரிக்காவின் வாஷிங்டன், ரஷ்யாவின் லெனின், சீனத்து மாசேதுங், மலேசியாவின் துங்கு என யார் போராட்ட‌ தலைவரோ அவர்கள் அதிபர் ஆனார்கள்.
ஆனால் பெரும் வெற்றிபெற்ற பின்னும் அரசியல் வேண்டாம், இந்திய மக்களுக்கு உழைக்க இன்னொரு வழி இருக்கின்றது என சொல்லிகாட்டிய உத்தமர் காந்தி.
காந்திக்கும் தமிழகத்திற்கும் உள்ள உறவு மகத்தானது, தென்னாபிரிகாவில் 16 வயதில் கடும் மனவுறுதியுடன் போராடி உயிர்நீத்த தமிழ்ப்பெண் தில்லையாடி வள்ளியம்மைதான் என்னை போராட தூண்டியவர் என சொன்னவர் காந்தி.
மதுரை பக்கம் தமிழ் விவசாயிகள் மேலாடை இன்றி உழைப்பதை கண்ட காந்தி எனது சகோதரர்கள் போலவே நானும் என மேலாடை துறந்தார் (அதன்பின் கோர்ட் என்ன? சட்டை கூட அணியவில்லை), புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு அழைத்தபொழுது, எனது சகோதரர்களான தாழ்த்தபட்ட மக்களை அனுமதிகாத ஆலயத்திற்குள் நுழையமாட்டேன் என சொல்லிய இடமும் தமிழகமே.
கள்ளுகடை எதிர்ப்பு என்றவுடன், பெரியார் போன்றவர்கள் தென்னந்தோப்பையே அளிக்கும் அளவிற்கு காந்திபாசம் இருந்த மண்ணில்தான் இன்று டாஸ்மாகை அடைக்கமாட்டோம் என ஆட்சியும் நடக்கின்றது.
அப்படியே காந்தி நினைவு மியூசியம் மதுரையில் அமைக்கபட்டது, புதிதாக ஒரு கட்டடம் கட்டினால்தான் என்ன? அதனை செய்யாமல் புகழ்பெற்ற ராணி மங்கம்மாளின் மாளிகை காந்தி மியூசியம் ஆயிற்று.
கன்னியாகுமரியிலே அவருக்கு மண்டபம் கட்டபட்டது, அதை மட்டும் உருப்படியாக செய்தார்கள் இல்லாவிட்டால் நிச்சயம் விவேகானந்தர் பாறை போல வேறு சர்ச்சைகள் அங்கு எழும்பி இருக்கும்.
இன்று காந்தி பிறந்த தினம், இந்தியாவினை சுற்றி பார்த்து மக்களின் மனதினை இந்தியாவின் உண்மையினை கண்டறிந்து சில கருத்துக்களை சொன்னவர் காந்தி, அது இக்காலமும் பொருந்தும்.
இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் அதன் விவசாயம் முக்கியம். பெண் சுதந்திரமே இந்தியாவின் வளமான எதிர்காலத்து ஆதாரம் (காவல்துறை உயர்பதவி பெண் அதிகாரிகளே வாழமுடிவதில்லை). அந்நிய பொருளை விரட்டுவது மட்டுமே இந்திய பொருளாதாரத்தினை காக்கும் பெரும் ஆயுதம்.
முக்கியமான ஒன்று, மதவெறி எக்காலமும் இந்த மண்ணின் பெரும் நோய். சமத்துவ மதநோக்கம் கொண்ட இந்தியாவே உலக அரங்கில் ஒளிவீசமுடியும்.
இன்று இந்த தேசத்தை வளப்படுத்துவதாக சொல்லிகொண்டு உலகெல்லாம் ஓடுபவர்கள் நிச்சயம் செல்லவேண்டியது அந்நிய தேசம் அல்ல.
மாறாக சென்று ஞானம் பெறவேண்டிய இடம் சபர்மதி ஆசிரமம், காரணம் இந்தியாவினை ஒளிர செய்யும் ஒளியின் தீப்பொறி அங்குதான் இருக்கின்றது.
இந்தியாவில் இன்று காந்தி பிறந்த நாள் எப்படி அரசு சிறப்பிக்கின்றது என தெரியாது, கொஞ்சம் அவசரபட்டு இந்திரா காந்தி பிறந்த நாளை மிக சரியாக கழிப்பறை தினம் என கொண்டாடியதால் இப்பொழுது யோசனையில் இருப்பார்கள்.
ஆனால் உலகம் பெருமையாக நினைவு கூர்கின்றது, உலகெல்லாம் சிலை அமைக்கபட்டிருக்கும் ஒரே இந்திய தலைவர் எனும் வகையில் அவர் உலகத்தாரார் எல்லோராலும் நினைவு கூற படுகின்றார்.
காரணம் அவர் இந்து மத நெறியாளர்தான், ஆனால் சாதி இல்லை என சொன்ன புத்தன், தன்னை வதைத்துகொண்டு அகிம்சையாக போராடிய யேசு கிறிஸ்து என‌ எல்லா மதங்களின் உயர்ந்த தாக்கங்களும் அவரிடம் இருந்தது,
“வையகத்து வாழ்வாங்கு வாழ்ந்தவர் வானுறை
தெய்வத்துள் வைக்க படும்”
அதனால்தான் மகா ஆத்மா எனும் பட்டமும் அவருக்கு தேடி வந்தது.
அவரை மனமார நேசித்து இறுதிவரை ஒரு இந்திய காந்தியவாதியாக வாழ்ந்த காமராஜரும், இந்நாளில்தான் காலமானார்.
காந்தியும், கருப்பு காந்தியும், லால்பகதூர் சாஸ்திரியும் இந்திய வரலாற்றின் தூய அர்ப்பணிப்பு பக்கங்களின் கல்வெட்டுக்கள்
[ October 2, 2018 ]
Image may contain: 1 person