புத்தமதம் – ஒரு பார்வை

ஒரு கோஷ்டி கிளம்பி இருக்கின்றது, புத்தமதம் சாதி இல்லாதது புத்தமதம் சமத்துவமானது, அம்பேத்கர் அதனை தழுவினார், அது இது என ஒரே புத்தம் சரணம் கச்சாமி கோஷம்..

இந்தியாவில் இருந்த புத்தமதம் எங்கே? அம்பேத்கரோடு புத்தமததிற்கு போனவர்கள் எங்கே? பல்லாயிரம் பேரோடு புத்தமதம் சென்று சாதியினை ஒழித்த அம்பேத்கரின் அந்த மக்கள் எங்கே புத்தனை கொண்டாடுகின்றார்கள் என கேட்டால் பதிலே வராது

புத்தமும் சமணமும் நல்ல மதம் சந்தேகமில்லை ஆனால் பின்பற்றுவதற்கு இயல்பான மதமா என்றால் நிச்சயம் இல்லை

அங்கேயும் சிக்கல் உண்டு. அசைவம் கூடாது, ஆசை கூடாது, இன்னபிற கூடாது என ஏக சிக்கல்

சமணம் இன்னும் ஒரு படிமேல், நடக்கும்பொழுது எறும்பை மிதிப்பாய் அதனால் மயிலறகால் கூட்டிகொண்டே நட எனும் அளவு ஜீவகாருண்யம்

புத்தமும் சமணமும் இந்நாட்டில் விடைபெற ஆரிய சூழ்ச்சி என்றொரு கோஷ்டி கிளம்பி இருக்கின்றது, சுத்த பொய்

புத்தமும் சமணமும் அதன் மிக கடுமையான கட்டுபாடுகளாலும், வாழ்விற்கு ஒத்துவரா தத்துவங்களாலும் வீழ்ச்சியுற்றன‌

கம்யூனிச வீழ்ச்சி போல, வாழ்க்கைக்கும் மானிட சிந்தனைக்கும் ஒத்துவராத சிந்தனையால் வீழ்ந்தன‌

இந்துமதம் அதன் மிகபெரும் சுதந்திரமான அணுகுமுறையால் மீண்டெழுந்து நிற்கின்றது

திருமணம், துறவு, உணவு என பல்வேறு விஷயங்களில் கடும் கட்டுபாட்டை விதித்தது புத்தமும் சமணமும்

ஆனால் வாழ்வினை மிக சுதந்திரமாக வாழ சொன்னது இந்துமதம், வாழ்விலே இறைவனை காண சொன்னது

முடியினை ஒவ்வொன்றாக ரத்தம் வர வர‌ பிடுங்கி புத்தமதம் மொட்டை அடிக்க சொன்னபொழுது, நீண்ட மயிரை வளர்க்கலாம் அதிலும் துறவு இருக்கலாமென்றது இந்துமதம்

ராமனை போற்றியது ஆனால் தசரதனை திட்டவில்லை

காடு சென்ற முனிவருக்கும் மனைவியர் இருக்க சம்மதித்தது இந்துமதம்

பன்றியினை உண்டாலும் கொழுப்பு ஏறாமல் பார்த்துகொள் என கனிவாக போதித்தது இந்துமதம்

அது மீண்டெழுந்தது இந்த மிக மென்மையான அணுகுமுறையிலே அன்றி ஆரிய சூழ்ச்சியில் அல்ல‌

புத்தமதம் சாதியினை ஒழிக்கும் என இங்கு கத்தும் பலர், அம்பேத்கர் என கொடிபிடிக்கும் பலர் எத்தனைபேர் பூரண புத்தமதத்துகாரனாக, ஆசையினை ஒழித்து அசைவத்தை வெறுத்து புத்தன் காட்டிய வழியில் பிச்சை எடுத்து வாழ தயார்?

ஒருவனுமில்லை

சும்மா புத்தன் வழி சாதியினை ஒழிக்கும் என சொல்லிகொள்வது. அம்பேத்கார் அவ்வழியில் ஒழித்தாரா? இல்லை இவர்கள் மொட்டை அடித்து பிச்சைகார கோலம் பூண்டு புத்தன் வழியில் சாதியினை ஒழிக்க தயாரா என்றால் ஒருபதிலும் ஒருவனிடம் இருந்தும் வராது [ October 17, 2018 ]

Image may contain: 2 people, people smiling
Advertisements

அற்புத மனிதர் வள்ளலார்

தமிழகத்தில் எப்பொழுதாவது அற்புதமான மகான்கள் தோன்றுவார்கள், அப்படி தோன்றிய அற்புத மனிதர் வள்ளலார்

தத்துவத்தில் அவர் புத்தர், போதனையில் இயேசு கிறிஸ்து, வாழ்க்கையில் அவர் விவேகானந்தர், பசித்தவருக்கு உணவழிப்பதில் அவர் குருநாணக் என எல்லோர் கலவையும் அந்த மகானிடம் இருந்தது

சுருக்கமாக சொன்னால் எல்லா மதத்தின் மிக உயர்ந்த கருத்துக்களும் கலந்து பிறந்த அவதாரம் அவர்

இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது.

உலகின் எல்லா உத்தம போதனைகளும் அதில் அடக்கம்

இன்று உலகம் மாறிவிட்டது, உலகில் எங்கோ ஒரு மூலையில் விளையும் உணவுபயிர் நொடிப்பொழுதில் எங்கும் சென்று சேர்கின்றது

ரசாயாணமோ எதுவோ கொட்டி விளையவைத்துவிடுகின்றோம்

அக்காலம் அப்படி அல்ல, கொஞ்சம் தான் விளையும் , அரைவயிறுதான் நிறையும், அதுவும் பொய்த்துவிட்டால் ஊரை விட்டு கிளம்ப வேண்டியதுதான்.

பசியில் உணவுக்காக அலைவது கொடுமையிலும் பெரும் கொடுமை, அக்காலத்தின் மிக பெரும் அவலம் அது.

பிறர்நலனுக்காகவும், மானிடரை நேசிக்கும் அற்புத பிறவிகள் இதனால்தான் உணவுசாலைகளை உண்டாக்கினார்கள்

இயேசு தன் மக்களுக்கு எல்லாம் உணவளித்த சம்பவம் பைபிளில் உண்டு

பஞ்சாபில் அப்படித்தான் குருநாணக் உருவாக்கினார், இன்றளவும் குருத்வாராக்கள் பசி போக்குவது அப்படித்தான்.

தமிழகத்தில் அந்த பசிபோக்கும் திட்டத்தை வள்ளலார் 
தொடங்கினார், அது இன்றளவும் நடக்கின்றது

பெரும் ஆண்மீக வாதிதான் ஆனால் முற்போக்காளர், இவர் காலத்தில் யாழ்பாணத்தில் ஆறுமுக நாவலர் என்றொருவர் இருந்தார், இன்றளவும் அவருக்கு அங்கு பெரும் பெயருண்டு

மதம் தொடர்பாக வள்ளலார் மீது வழக்கே தொடர்ந்தார் நாவலர், பின் அது தள்ளுபடியாயிற்று

இப்படி மதத்திற்குள்ளே எதிர்ப்பிருந்தாலும் தன் வழியில் நின்றவர்.

பெரும் புரட்சிவாதியும், அவதாரம் என நம்ப்படும் அய்ய வைகுண்டரும் இவரும் சமகாலத்தவர்கள், இருவரின் போதனையும் உருவமில்ல்லா கடவுளை சொன்னது, மனித நேயத்தை சொன்னது, பசி போக்க சொன்னது.

தமிழக ஆண்மீக உலகிலும், மானிட நேயத்திலும் மிக உயர்ந்து நின்ற பேரோளி வள்ளலார், மற்ற மகான்களை விட ஒருபடி மேலே நின்று “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என சொன்னவர்.

வாழ்த்தி சொல்லவேண்டுமென்றால் “மகா மகா ஆத்மா” அவர்.

அந்த அற்புத மகானுக்கு இன்று பிறந்த நாள்.

இந்துக்கள் எப்படி வாழவேண்டும் என இவர் சொன்ன வழியினைத்தான் பின்பு விவேகானந்தரும் சொன்னார். ஆனால் விவேகானந்தரை கொண்டாடும் அளவிற்கு வள்ளலாரை இந்தியா முழுக்க தெரியாது.

அய்யா வைகுண்டவரையும் தெரியாது.

வடக்கே உள்ளவர்களை இங்கே பிரபலபடுத்தும் அளவிற்கு தேற்கே உதித்த மகான்களை வடக்கே கொண்டு சேர்க்கமாட்டார்கள் அல்லது விடமாட்டார்கள்.

இவை எல்லாம் களையபட வேண்டும், களையபடாமல் இந்து எனும் வார்த்தையாலும் இந்தியாவில் பெரும் ஒற்றுமை கொண்டுவர முடியாது.

இந்து மதத்தின் மிக உன்னத கொள்கைகளை தன் வாழ்வாக கொண்டு உயர்ந்து நின்ற மகான் வள்ளலார்

அவருக்கு இன்று பிறந்த நாள், அவரை போற்றி வணங்குவோம்

தமிழகம் விடுமுறை விட்டு கொண்டாடவேண்டிய தினம், அடுத்தவர் பசிபோக்கி மானிட நேயம் வளர்க்கவேண்டிய தினம்

மக்கள் மறந்துவிட்ட அவரை வானம் மறக்கவில்லை, இன்று மழைக்காக தமிழகத்தில் விடுமுறை தினமாம்

“வாடும் பயிரை கண்டபொழுதெல்லாம் வாடிய” அந்த மகானை மிக சரியாக நினைவு வைத்து அவர் பிறந்தநாளில் எல்லா பயிருக்கும் நீர் இறைக்க மேகம் கறுத்து நிற்பது ஒன்றும் சாதாரண விஷயமல்ல‌

பசிபோக்க வந்த அந்த மகானுக்கு ஆழ்ந்த அஞ்சலி. [ October 5, 2018 ]

Image may contain: one or more people

சபரிமலை கோவிலுக்குள் பெண்களுக்கு அனுமதி – உச்சநீதிமன்றம்

சபரிமலை கோவிலுக்குள் பெண்களுக்கு அனுமதி – உச்சநீதிமன்றம்

தீர்ப்பு சொல்லிவிட்டால் மட்டும் நல்ல இந்துபெண்மணிகள் செல்ல போகின்றார்களா என்ன? நிச்சயம் மாட்டார்கள்

மக்களின் தலைமுறை தலைமுறையான நம்பிக்கை என்பதை சட்டம் போட்டு உடைக்க முடியாது. [ September 28, 2018 ]


அய்யா உச்சநீதிமன்ற ஜட்ஜ் அய்யா,

இந்த கத்தோலிக்க திருப்பலியின் திவ்ய நற்கருணையினை கிறிஸ்தவர் அல்லோதார் எல்லாம் பெற்றுகொள்ள முடியாதாம்

இந்த வேளாங்கண்ணி ஆலயங்களில் கூட அப்படித்தானாம், மாற்று மதத்தினருக்கு வழங்கமாட்டார்களாம்

எங்கே, அது இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமானது , எல்லோருக்கும் நற்கருணை வழங்க வேண்டும் என ஒரு தீர்ப்பு சொல்லுங்கள் பார்க்கலாம்

[ September 28, 2018 ]

============================================================================

இந்த பத்மநாபசாமி கோவிலின் கோடான கோடி தங்க நகைகளின் நிலை என்ன? என்ன ஆனது என உச்சநீதிமன்றம் கேட்காது

வேளாங்கண்ணி ஆலயத்தின் வருமானம் என்ன என கேட்கவே கேட்காது

இன்னும் பல இடங்களில் மத விஷயங்களில் சட்டம் தலையிடாது என சொல்லி ஒதுங்கி கொள்ளும்

கன்ன்டன் காவேரியில் “போய்யா நீயும் உன் தீர்ப்பும்..” என்றால் கூட உச்சநீதிமன்றம் முகத்தை துடைத்துகொண்டு அமர்ந்துவிடும்.

ஆனால் சபரிமலை அய்யபன் கோவிலில் மட்டும் அது நுழைந்து நீதி சொல்கின்றது

சொல்லட்டும், அப்படியே இந்த ராமர் பாலம் என்பது இல்லவே இல்லை, அதை தோண்டி கப்பல் விடலாம் என அதிரடி அறிவிப்பைனையும் செய்யட்டும்

செய்யுமா உச்சநீதிமன்றம்

நாட்டின் முன்னேற்றத்தை ராமர்பாலம் காட்டி தடுப்பது இந்திய சட்டத்திற்கு முரணானது என சொல்வார்களா நீதிபதிகள்?

சொன்னால் வாழ்த்தலாம் [ September 28, 2018 ]

No automatic alt text available.
===========================================================================

மீள் பதிவு, இதுதான் சபரிமலை விவகாரத்தில் எம் நிலைப்பாடு

பெண்களுக்கு கிறிஸ்துவத்திலும், இஸ்லாத்திலும் முண்ணணி பதவிகள் வழங்க உச்ச நீதிமன்றம் முதலில் உத்தரவிடட்டும்

பெண்கள் கத்தோலிக்க கிறிஸ்துவ பாதிரியாராக, திருப்பலி நிறைவேற்ற தடை இல்லை என முதலில் உத்தரவிடட்டும்

அதன் பின் சபரிமலை விவகாரத்திற்கு வரலாம்

சபரிமலை இந்து மத நண்பர்களின் மத அடிப்படை நம்பிக்கை. அதில் அவர்களின் ஆதார நம்பிக்கைகளை நொறுக்கும் வண்ணமோ, மனம் புண்படும்படியோ கருத்து சொல்ல யாருக்கும் உரிமையில்லை. அவர்கள் சமய ஆன்றோர்கள் முடிவுபடி செயல்படலாம், காலமாற்றம் எனின் அது நடைபெறலாம்.

அய்யப்பன் மலைமீது இருக்கும் சுவாமி, தன் பக்தர்கள் தன்னை காண எவ்வளவு இடர்களை தாண்டி வருவார்கள் என சோதித்து அறிய காத்திருப்பவர், எதனை எல்லாம் தியாகம் செய்கிறார்கள் என பார்த்து அருள் வழங்குவதில் அவருக்கொரு ஆனந்தம்

அதனால் அங்கு செல்ல கடும் விரதங்கள் உண்டு, விரத காலங்களில் உறக்கம், உணவு, உறவு என சகலத்தையும் தியாகம் செய்ய வேண்டும், உச்சமாக ஒரு மனிதனால் விடவே முடியா பெண் நினைவு,

அது மனிதனின் சுபாவங்களில் ஒன்று. ஏதோ ஒரு பெண் மாய சக்தியாக அவன் மனதினை ஆண்டுகொண்டே இருப்பாள் (நம் மனதில் குஷ்பூ போல), மனித மனம் அப்படித்தான் படைக்கபட்டிருக்கின்றது

அந்த நினைவுகளையும் தூக்கி போட்டுவிட்டு பகவான் அய்யபனுக்காக விரதம் இருந்து அங்கு வந்து நிற்கவேண்டும் என்பது அவர்கள் மதத்தின் விதி,

இதில் அங்கும் 4 பக்தைகள் மல்லிகை சரம் சூடி வந்து சபரிமலை வாசலில் நின்றால் பக்தன் மனம் என்னாகும்? 100 பேரில் 99 நல்ல பக்தர்களை விடுங்கள், ஒரு பக்தர் பல்லிளித்துவிட்டால்

அந்த விரதங்களும் கட்டுபாடுகளும் அர்த்தமின்றி போகும் என்பது இந்து மதம் சபரிமலை ஸ்தலத்தினை பற்றி சொல்லும் மத நம்பிக்கையும் தத்துவமும்.

சுவாமியியாக நான் இங்கு வீற்றிருக்கின்றேன், எல்லா சுகத்தையும் துறந்து, நினைவுகளிலும் என்னை மட்டுமே சுமந்து என்னை வந்து காண்பாயாக என அவர்களின் தெய்வம் ஆண்களை அழைக்கின்றது, அவர்கள் செல்கின்றார்கள்

அம்மனாகிய நான் ஆற்றுகாலில் இருக்கின்றேன் பெண்களே விரதமிருந்து வந்து எனக்கு பொங்கல் வையுங்கள் என அந்த பெண்களை அழைக்கின்றது.

அய்யப்பன் ஏன் பெண்களை அனுமதிக்கவில்லை, ஆற்றுக்கால் அம்மன் ஏன் ஆண்களை அனுமதிப்பதில்லை என்று கேட்டு குழப்ப கூடாது

சபரி மலை பெண் அடிமைதன அடையாளமுமல்ல, பகவதி ஆலயம் பெண் உரிமை தலமும் அல்ல‌

ஆலயத்தின் தன்மைகள் அப்படி. அன்றே பெண்களுக்கு மட்டுமான ஆலயத்தை அமைத்து இந்துமதம் உலகில் முன் அடையாளமாக உயர்ந்தே இருந்திருக்கின்றது, மகா உண்மை.

ஏன்? என கேட்க முடியுமா? அது அப்படித்தான். சூரியன் ஏன் உதிக்கின்றது, நிலா ஏன் இருக்கின்றது? இந்த மலை ஏன் இவ்வளவு நீளம் இருக்கின்றது, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் என்ன நடக்கின்றது? என ஏராள விஷயங்கள் நமக்கு புரியாது

அப்படித்தான் மத நம்பிக்கைகளும், ஆனால் நிச்சயம் அர்த்தம் இருக்கும்

இது அவர்கள் பிரச்சினை, பெண்ணுரிமை என்பதனை அய்யப்பன் கோயிலில் நுழைந்துதான் நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை. மத நம்பிக்கை வேறு, சமூக சமத்துவம் வேறு.

இஸ்லாமிற்கு இது விலக்கானது என சில உண்டு, யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் விலக்கானது என சில விஷயங்கள் உண்டு அப்படி சபரிமலை அய்யப்பனுக்கும் சில விஷயங்கள் விலக்கம் உண்டு என்றால் அதனை ஏற்றுகொள்ளவேண்டுமே தவிர தர்க்கம் செய்வது நிச்சயம் நியாமில்லை.

சைவ உணவு மட்டும் வழங்கபடும் ஆலயங்களில் விடா பிடியாக கிடா வெட்டுவோம் , கோழி அறுப்போம் என கிளம்பமுடியுமா?

அந்த தனித்துவமே அதில் பிராதனம்.

எல்லா மதத்திலும் அதன் பிரிவுகளிலும் பல சம்பிரதாயங்களும் கட்டுபாடுகளும் உண்டு, அந்த கட்டுபாட்டில்தான் அம்மதங்கள் கால காலமாக வருகின்றன, இல்லையேல் என்றோ காணாமல் போயிருக்கும்.

சில ஆலயங்களின் அல்லது மார்க்கத்தின் தனித்துவம் அதில்தான் இருக்கின்றது, இல்லாவிட்டால் அவைகளுக்கும் மற்றவைகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்?

சபரிமலையில் பெண்கள் நுழையலாம் என சொன்னவுடன் பெண்ணுரிமை வாழ்க என கத்துபவர்கள், இஸ்லாமிய பர்தா பற்றி, சில பெண்ணுரிமை கட்டுபாடு பற்றி பேசுவார்களா என்றால் ம்ஹூம்…

தலாக் எங்களின் தனிபட்ட உரிமை என நமக்கு புரியாத‌ அரேபிய மொழியிலும், உருதிலும் குதித்தவர்கள் எல்லாம் இப்பொழுது சபரிமலையில் பெண்கள் நுழையலாம் எனும் செய்தி மகிழ்ச்சி என்பதுதான் உச்சகட்ட முரண்..

கிறிஸ்தவர் நிலை மகா மோசம், இன்னும் பெண்கள் திருப்பலி நிறைவேற்றவோ அல்லது வழிபாடுகளை தலமையேற்று அனுமதிக்காத மதம் அது. கத்தோலிக்கம் மட்டும் அல்ல மாறாக எல்லா சபைகளின் நிலையும் அதுவே.

இது இனி என்னாகும்?

கேரளாவில் ஆண்களுக்கான சபரிமலை போலவே, பெண்களுக்கான சில ஆலயங்கள் உண்டு. அங்கு பெண்கள் மட்டுமே சென்று வழிபட பொங்கல் வைக்க முடியும் என கட்டுப்பாடும் உண்டு, ஆற்றுக்கால் பகவதி அம்மன் போன்றவை அதில் பிரசித்தி

இனி அங்கே எங்களை விடுங்கள் என ஆண்கள் கூட்டம் அலைமோதலாம்,

கவுரி விரதம், வரலட்ட்சுமி நோன்பு போன்ற பெண்களுக்கான வழிபாட்டில் நாங்களும் பங்கெடுப்போம் என பலர் கிளம்பலாம்

இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ தெரியவில்லை

யாருக்கும் பிரச்சினை இல்லாத, மிக அமைதியாக இயங்கிகொண்டிருக்கும் மத நம்பிக்கைகளை அப்படியே விட்டுவிடுவதுதான் நல்லது

இந்த கட்டுபாட்டில்தான் சபரிமலை தனித்து நிற்கின்றது அதனையும் தகர்த்துவிட்டால் அது சபரிமலையாக எப்படி நீடிக்கும்?

எம்மை பொறுத்தவரை அது ஆண்டாண்டு காலமாக உள்ளபடி, அப்படியே இருக்கட்டும், ஆண்டாண்டு காலமாக உள்ள நம்பிக்கையினை ஏன் அசைக்க வேண்டும்?

இந்துமத பெண்கள், அதனை மனமார நேசிக்கும் பெண்கள் எந்த அரசு சட்டம் போட்டாலும் சபரிமலைக்கு செல்வார்கள் என்றா கருதுகின்றீர்கள்??

செல்வார்களா பாருங்கள்?

அப்படி ஒரு பெண் செல்வதாக இருந்தால் அது நடிகை ஜெயமாலா போன்றவர்களாக இருப்பார்களே தவிர, தூய இந்துபெண்ணாக இருக்கவே மாட்டாள். [ September 28, 2018 ]

Image may contain: one or more people, crowd and outdoor
============================================================================

இனி ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கலில் ஆண்களும் சரிநிகர் சமானமாக செல்லலாம் இல்லையா யுவர் ஆணர்?

எத்தனையோ பண்டிகைகளில் பெண்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் , அதிலெல்லாம் இனி ஆண்களுக்கு சரிநிகர் உரிமை உண்டா இல்லையா?

“பெண்ணுக்கு ஆண் இங்கு இளைப்பு இல்லை காண்” என்று கும்மியடி என பொங்கல் வைக்க இனி கிளம்ப வேண்டியதுதான் [ September 28, 2018 ]

Image may contain: one or more people, people standing, crowd and outdoor
Image may contain: one or more people

மொகரம்

உலகெல்லாம் வாழும் கலாச்சார பிண்ணனி கொண்ட இனங்களுக்கு எல்லாம் நாள்காட்டிகள் உண்டு, அதில் தமிழகம் தமிழ்வருடம் பிறப்பது சித்திரையா அல்லது தையா என தைதை என குதிப்பதும் உண்டு.

இஸ்லாமிய காலண்டர் படி மொகரம் ஆண்டின் முதல் மாதம் , அந்த 1ம் தேதியே இஸ்லாமிய பெருமக்கள் பின்பற்றும் நாள்காட்டியின் வருடபிறப்பு.

அதாவது நபிபெருமகனாரின் போதனைகளுக்கு பின்னராக கால கட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கான நாள்காட்டி வகுக்கபட்டது, அதன் படி ஹிஜ்ரி வருடகணக்கினை அவர்கள் பின்பற்றி வருகின்றார்கள்.

எப்படி போப் கிரகோரி அறிவித்த காலண்டர் (ஜனவரி ‍டிசம்பர்) ஐரோப்பாவில் நடைமுறைபடுத்தபட்டதோ( பின் உலகம் முழுக்க பரவிவிட்டது) , அவ்வாறே இது அக்கால இஸ்லாமிய தலமையால் அவர்களுக்கென கொடுக்கபட்டது.

வருடத்தின் முதல்மாதம் மட்டுமல்ல, அது இஸ்லாமியருக்கு மாதங்களுள் ரமலானை போல மிக சிறந்த மாதம். அதன் சிறப்புக்கள் மகா உயர்வானவை.

அதாவது யூத மத பூர்வீகமும், இஸ்லாமிய வேர்களும் ஒரே மாதிரியானவை. முதல் மனிதன் ஆதாம் படைக்கபட்டது , அவரில் இருந்து ஏவாள் படைக்கபட்டது . பின் ஊழிவெள்ளத்தில் நூஹ் (நோவா) அவர்கள் அந்த கப்பலிருந்து வெள்ளம் வடிந்தபின் பூமியில் இறங்கியது எல்லாம் இம்மாதத்தில் என்பது அவர்கள் நம்பிக்கை

எகிபதிலிருந்து மூசா (பைபிளின் மோசஸ்) அடிமை மக்களை மீட்டது, அதனை தடுத்த பார்வோன் மன்னன் படைகளோடு செங்கடலில் மூழ்கியது, இப்ராஹிம் அவர்களுக்கு சில அதிசயங்கள் நடந்தது, மாமனன்ன தாவூத் (தாவீது அல்லது டேவிட்) பாவத்தை கடவுள் மன்னித்தது, மாமன்னன் சுலைமான் (சாலமோன்) இடையில் தவறவிட்ட ஆட்சியை கடவுள் மறுபடியும் கொடுத்தது என பட்டியல் நீண்டது.

உச்சமாக ஈசா நபி (இயேசு கிறிஸ்து) பரலோகம் சென்றதும் இம்மாதம் என்பதும் இம்மாதத்தின் மகா சிறப்புகள். கவனியுங்கள் எகிப்திலிருந்து அடிமை மக்களை மீட்ட யூத பண்டிகை பாஸ்கா, அன்றுதான் கிறிஸ்து சிலுவையில் அறையபட்டார் என்பது பைபிளின் அடிப்படை ஆதாரம்.

ஆனால் யூத மதம் சொல்லும் மாதம் வேறு, எனவே புனிதவெள்ளி மார்ச் மாதம் வரும்.

இப்படி பெரும் ஆச்சரியங்களை இறைவன் நிகழ்த்திய மொகரம் மாதம் நிச்சயம் மகா புனிதமானது, அதன்படி வருடபிறப்போடு இம்மாதத்தின் புனிதத்துவதை இஸ்லாமிய பெருமக்கள் நினைவுகூர்வார்கள், குறிப்பாக 9 மற்றும் 10ம் நாள் மகா சிறப்பு வாய்ந்தவை. எகிப்தில் கடவுள் செய்த கருணைக்காக நோன்பு இருப்பார்கள், மூசா நபி காலத்தில் தொடங்கபட்ட நோன்பு அது.

இப்படியான மொகரம் இஸ்லாமியரின் ஒரு பிரிவிற்கு, அதாவது ஷியா பிரிவினருக்கு மகாதுயரம் ஆகியும் போனது.

நபிகள் நாயகம் போதிக்க தொடங்கிய காலத்தில் அவருக்கு எதிர்ப்புகள் அதிகம், ஆனால் போகபோக அவரின் போதனையினை ஏற்று இனிய மார்க்க பூமியாக அரேபியா மாறிற்று, ஆனால் பின்னரான காலதில் சில சர்சைகள் தோன்றின.

சர்சைகள் உலகின் எல்லா மதத்திலும் உண்டு, ஒரே இந்துமதம்தான் ஆனால் சைவ வைணவ மோதலில் ஓடிய ரத்த ஆறு மிக பெரிது, ஒரே புத்தமதம்தான் ஆனால் ஹீனயானம் மகாயாணம் பிரிவுகளின் மோதல்கள் அதிகம். சமண மதத்தில் திகேம்பரர், சுவேதம்பர மோதல் பிரசித்தி பெற்றது,

யூதரில் கூட இன்றும் உட்கட்சி பூசல்கள் அதிகம் (ஆனால் வெளிகாட்டமாட்டார்கள்), இயேசு காலத்தில் அவரே கண்டித்த யூத பிரிவினைகள் உண்டு.

கிறிஸ்தவம் கத்தோலிக்கம் மற்றும் பிரிவினை சபைகளுக்கான‌ மோதல், அதிலும் பிரிவினை சபைகளுக்குள் சிரிய யுத்தம்போல மகா குழப்பம், யார் யாருடன் மோதுகின்றர்கள் என தெரியாது ஆனால் கிறிஸ்தவர்கள்.

அப்படி சன்னி மற்றும் ஷியா என இஸ்லாமிலும் சர்ச்சைகள் வந்தன, வலுத்தன. முகமது நபிபெருமான் பேரன் ஹூசைன் அவர்கள் சில காரியங்களுக்காக ஒரு ஊருக்கு செல்லும்பொழுது வழியில் கர்பாலா எனும் பட்டிணத்தில் போரை சந்தித்தார்.

கரோ என்றால் அம்மொழியில் செங்கல் சூளை என பொருள். பாபில் எனும் பெரும் ஊரின்(இன்றைய பழைய பாக்தாத்) அருகில் இருந்ததால் கரோ+பாபில் என அழைக்கபட்டு பின் கர்பாலா ஆகிற்று,

பைபிளை கையிலும், கண்களை வானத்திலும் வைத்துகொண்டிருக்கும் கிறிஸ்தவர்களுக்கு தெரியும், ஆதியில் மனிதர்கள் செங்கற்களால் கோபுரம் கட்டி வானகம் ஏற முயன்ற இடம் ஒன்று உண்டு. அக்கால கடவுள் கொஞ்சம் பொல்லாதவர், மனிதன் அறிவுபழம் தின்றால் பொறுக்காது, கோபுரம் கட்டி தன்னிடம் வரமுயன்றாலும் பொறுக்காது, அவர் அப்படித்தான்.

உடனே மொழிகளை உருவாக்கி மனிதனை அந்த இடத்தில் குழப்பினார், மனிதர் ஒருவர் பேசுவது ஒருவருக்கு புரியாமல் விழித்தனர், அதாவது தமிழக அரசியல்வாதிகள் போல் பேசிக்கொண்டிருந்தனர்.

அந்த கோபுர திட்டம் தோல்விஅடைந்து, மனிதர் கூட்டம் கூட்டமாக சிதறினர் என்கிறது பைபிள், அந்த இடம் இதுவாக இருக்கலாம் என்பது சில ஆராய்சியாளர்கள் கருத்து.

அந்த கர்பாலா நகரில் நடந்த யுத்தத்தில் நபிபெருமானின் பேரன் அவர்கள் கொடூரமாக கொல்லபட்டார், அப்பெருமகானாரின் சமாதி இன்றும் அங்கு உண்டு, ஷியா இஸ்லாமியரின் மிகபுனிதமான இடம் அது. சுருக்கமாக சொன்னால் ஷியாவினருக்கு மெக்காவிற்கு அடுத்த புனித இடம் கர்பாலா.

எத்தனை சன்னி அரசுகள் ஈராக்கினை ஆண்டாலும்,கர்பாலா நகருக்கு கொடுக்கபடும் முக்கியத்துவம் மிகபெரிது, இன்றும் அப்படியே. உலகெல்லாம் இருந்து ஷியா இஸ்லாமியர் ஓடிவரும் தலம் அது.

அந்த பெருமகனார் இறந்த மொகரம் 10ம் நாள், உலகெங்கும் ஷியாக்கள் தங்களை காயபடுத்தி ஊர்வலம் செல்வார்கள், தமிழகத்தின் சில இடங்களில் கூட அது உண்டு. இது இஸ்லாமியரின் ஷியா தவிர வேறுயாரும் செய்வதில்லை.

ஆனாலும் ஒரு வினோதம் என்னவென்றால், கிறிஸ்தவம் என்பது யூதர் அறவே விரும்பாத‌ மத தொடர்ச்சி, கிறிதவர்கள் பழைய ஏற்பாடினை படிப்பார்கள், அந்த வசனங்கள கார்,பைக்,வீட்டு சுவர் முதல் கண்ணில் படும் மண்கட்டை சுவர் வரை எழுதிவைப்பார்கள்.

ஆனால் ஆபிரகாமை கடவுள் அழைத்த நாள், கடவுள் கொடுத்த மற்ற சட்டங்கள், மற்ற உணவு கட்டளைகள், சமூக கட்டளைகள் (10 கட்டளை தவிர) மோசே செங்கடலை கடந்தநாள், அந்த மகா முக்கியமான‌ பாஸ்கா பண்டிகை, முதல் சாலமோன் ஆலய நாள், என ஒன்றையும் நினைத்து பார்க்கமாட்டார்கள், நிச்சயம் அந்த பாஸ்கா மகா முக்கியமானது, இப்படி எல்லாவற்றையும் விட்டுவிடுவார்கள்.

ஆனால் பழைய ஏற்பாடு படி போதகருக்கு அல்லது சபைக்கு பத்தில் ஒரு பாகம் காணிக்கை என்பதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

பாஸ்கா என்றால் இயேசு நினைவுக்கு வருவார், அழுவார்கள். அதாவது பெரும் பழைய ஏற்பாடு வரலாற்று நிகழ்வுகளை இயேசுவின் மரணம் என்ற ஒற்றை துயரம் அந்நாளில் மூழ்கடித்துவிடுகின்றது.

அப்படியே ஷியா பிரிவினருக்கு இஸ்லாம் முறைப்படி மொகரம் மாதம் பெரும் சிறப்பு மிக்கது என்றாலும், மொகரம் 10ம் நாள் அவர்கள் மிகவும் நேசித்த ஹூசன் அவர்களின் மரணத்தின் துயரமே மிஞ்சி நிற்கின்றது.

ஆனால் வருடபிறப்பு எல்லா இஸ்லாமியருக்கும் பொதுவானது.

சகல இஸ்லாமிய நண்பர்களுக்கும் இனிய வருடபிறப்பு நல்வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

வல்ல இறைவன் எல்லோருக்கும் அமைதியும்,வளமும்,ஆரோக்கியமும் அருளட்டும். உலகம் அமைதியில் செழிக்கட்டும்.

Image may contain: night and sky

வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா

அந்த போர்த்துகீசிய கப்பல் , இலங்கையில் இருந்து கிளம்பி மலாக்கா நோக்கி சென்றுகொண்டிருந்தது. வங்ககடலில் வழக்கமாக உருவாகும் புயல் அப்பொழுது உருவாகியிருந்தது , கடும் புயலில் சிக்கியது அக்கப்பல்.

எத்தனையோ கடற்பயணங்களை செய்தவர்கள் அவர்கள், எத்தனையோ புயல்களை அனாசயமாக கடந்துதான் கப்பல் வாழ்வு வாழ்ந்துகொண்டிருந்தார்கள். ஆனால் அந்த புயல் மகா வித்தியாசமானது, அவர்களால் சமாளிக்க முடியவில்லை

போர்த்துகீசியர்கள் கத்தோலிக்கர்கள், கப்பலில் கதறினார்கள். மாதாவே நாங்கள் இப்புயலில் தப்பி கரை சேர்ந்தால் உங்களுக்கொரு கோவில் கட்டுவோம் என கதறினார்கள், அடித்த புயல் அந்த பாய்மர கப்பலின் கொடிமரத்தை சரித்துவிட்டு அவர்களை பத்திரமாக கரைசேர்த்தது

அவர்கள் கரை சேர்ந்த நாள் செப்டம்பர் 8.

அன்றுதான் தேவமாதாவிற்கு பிறந்தநாள் என்பது குறிப்பிடதக்கது. அவர்களுக்கு உடல் சிலிர்த்தது. மாதாவிடம் வேண்டியபடி அவருக்கு கோவில் எழுப்பலாம் என எண்ணியபொழுது மேலும் ஒரு அதிசயம் காத்திருந்தது.

ஒரு குளத்தின் கரையில் ஏற்கனவே ஒரு ஓலைகோவில் இருந்தது. அதனை மிக பயபக்த்தியாக அம்மக்கள் வணங்கிகொண்டிருந்தனர்

போர்த்துகீசியரோ வியப்பின் உச்சத்தில் இருந்தனர், நாங்கள் கோவில் கட்ட வந்தோம், இங்கு ஏற்கனவே மாதா கோவில் இருக்கின்றதே எப்படி? என விசாரித்தார்கள்

பல முன்பே மாதா ஒரு பால்கார சிறுவனுக்கு காட்சியளித்ததும், ஒரு ஊனமுற்ற சிறுவனை நடக்க வைத்ததையும், எல்லாவற்றிற்கும் மேல் நாகபட்டினத்தை சேர்ந்த பண்ணையாரை பணித்து இந்த ஆலயத்தை அமைத்திருப்பதையும் அறிந்து அதிசயித்தார்கள்.

தன்னை நாடிவரும் மக்களுக்கு எல்லாம் ஆரோக்கியத்தை அருளியதால் அவரை ஆரோக்கியமாதா என மக்கள் அழைத்துகொண்டிருந்தார்கள்.

அதே நாளில் கரைஒதுங்கிய அந்த கப்பலின் கொடிமரத்தை கோவில் அருகே நட்டு அதில் மாதாவி கொடியேற்றி திருவிழா தொடங்கினார்கள். அதுதான் அங்கு நடந்த முதல் திருவிழா

அதன் பின் 1771ல் அது முறையான ஆலயமாகி , பங்கு தந்தைகள் எல்லாம் அமர்ந்தார்கள். போர்த்துகீசியரும் தங்கள் நேர்ந்துகொண்டபடி ஆலயம் அமைத்தார்கள். அந்த பழம் ஆலயத்தின் டூம் அவர்கள் அமைத்தது பின் கொஞ்சம் கொஞ்சமாக கட்டினார்கள்.

பழம் ஆலயம் மிக அழகானது, குறிப்பாக அந்த பீடம். அதனை சீனாவிலிருந்து கொண்டுவந்த பீங்கான் தகடுகள் மூலம் அன்றே அழகுபடுத்தியிருந்தார் போர்த்துகீசியர், அவை இன்றும் உண்டு

பின்பு ஆலயத்தை விஸ்தாரபடுத்தினார்கள், ஒரு கட்டத்தில் புதுபுது ஆலயமாக கட்டினார்கள், இன்னும் கட்டிகொண்டே இருக்கின்றார்கள்.

உறுதியாக சொல்லலாம், அங்கு கூடும் மக்கள் எண்ணிக்கைக்கும், கொட்டபடும் காணிக்கைக்கும் அது நிச்சயம் உலகில் மிக வருமானம் வரும் இடங்களில் ஒன்று, இந்தியாவில் கிட்டதட்ட திருப்பதிக்கு நிகரான காணிக்கை அதில் வரலாம், ஆனால் சில கட்டுபாடுகள் காரணமாக அந்த கணக்கு வெளிவராது.

அப்படிபட்ட உரிமை இத்தேசத்தில் கொடுக்கபட்டிருக்கின்றது, நிச்சயம் கிறிஸ்தவர் சிறுபான்மையினர்தான், ஆனால் அவர்கள் ஆலய விவகாரங்களிலோ அவர்கள் கணக்கு வழக்கிலோ இந்த நாடு தலையிடாது.

அந்த காணிக்கைக்கு என்ன வரி? என்று கூட கேட்காது. இந்த அற்புத நாட்டில் இருந்துகொண்டுதான் இந்துவா ஒழிக, கிறிஸ்தவர்களை கொடுமைபடுத்துகின்றார்கள் என்றேல்லாம் பல பதர்கள் பேசிகொண்டிருக்கின்றன‌

இதோ வேளாங்கண்ணியே சாட்சி, இங்கு சென்று கிறிஸ்தவர்கள் கொண்டாட என்ன தடை? ஒன்றுமே இல்லை.

எத்தனையோ சலுகைகள் இந்நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு வழங்கபட்டிருக்கின்றது. சில உண்மைகளை ஒப்புகொண்டுதான் ஆகவேண்டும்

காணிக்கை கணக்குத்தான் வெளிவராதே தவிர, தன்னை நம்பிவரும் பக்தர்களுக்கு மாதா செய்யும் புதுமைகளும் நன்மைகளும் வெளிவந்துகொண்டே இருக்கும்

அந்த கடல் அலை போல திரளும் கூட்டம் அதனைத்தான் சொல்கின்றது, அனுதினமும் பெரும் மக்கள் திரளால் 24 மணிநேரமும் நிரம்பி வழியும் கூட்டம் அதனைத்தான் சொல்கின்றது.

ஆலயம் எதிரே அமைந்திருக்கும் மியூசியத்தில் மாதா புதுமைக்கு சாட்சியாக பக்தர்கள் வைத்த காணிக்கையும், சாட்சி சாசனமும் மிக ஏராளம்.

வேளாங்கண்ணி ஆலயத்தில் காணும் மிக அற்புதமான காட்சி ஒன்று உண்டு, உலகின் எந்த ஆலயத்திலும் காண கிடைக்கா காட்சி அது.

எல்லா மதத்தாரும் வந்து வணங்குகின்றார்கள், ஆச்சரியமாக இஸ்லாமியரும் வந்து அன்னையிடம் வேண்டுகின்றனர். அந்த அன்னையினை எங்கள் தாய் என மிக உரிமையோடு அழைக்கின்றனர் அப்பகுதி இஸ்லாமியர்கள்.

மிகபெரும் மத நல்லிணக்கத்தை அங்கே காணமுடியும்.

இதோ இன்று அங்கு திருவிழா கொண்டாடுகின்றார்கள், இந்தியாவில் மிக அதிகமாக மக்கள் கூடும் திருவிழாவில் அதுவும் ஒன்று, பெரும் கூட்டமாக கூடியிருக்கின்றார்கள்.

அவர்கள் மரியே வாழ்க என எழுப்பும் ஓசையில் கடல் அலை தோற்கின்றது

தன்னை நம்பிய மக்களுக்கு, தன்னை முழுமையாக நம்பி வந்த மக்களுக்கு அன்னை என்றுமே முழு ஆறுதலை வழங்கிகொண்டிருக்கின்றாள் என்பதற்கு அதுவே சாட்சி

தமிழக கத்தோலிக்க வீடுகள் எல்லாவற்றிலும் இருக்கும் படம், வேளாங்கண்ணி ஆலயமும் அந்த மாதாவின் திருவுருவமும்

அதன் முன் கண்ணீரோடு வேண்டும் மக்கள், தங்கள் வேண்டுதல் பலித்தபின் வேளாங்கண்ணி சென்று வழிபடுவது அவர்கள் குலவழக்கம்.

அன்றைய வேளாங்கண்ணி காவேரியின் கடைமடை பகுதி, கல்லணை வெள்ளம் அந்த குளம் வரை சென்றிருக்கின்றது, அந்த குளகரைதான் மாதா தனக்காக தேர்ந்தெடுத்த பகுதி

இன்று காவேரி இல்லை, அக்குளமில்லை , அந்த செழுமை இல்லை. ஆனால் அந்த ஆலயம் மட்டும் நின்றுகொண்டிருக்கின்றது.

அந்த ஆலயத்தில் வேண்டும்பொழுதெல்லாம், அக்காவேரி மறுபடிவரவேண்டும் அப்பகுதி மறுபடி செழிக்கவேண்டும் என்ற எண்ணமெல்லாம் வரும், வரத்தான் செய்யும்

இன்று அந்த மாதா குளத்தையே ஒரு கிணறாக்கிவிட்டார்கள், நிச்சயம் அது பெரும் தவறு. அந்த குளம் குளமாகவே இருந்திருக்கவேண்டும், அது குளமாகவும், புண்ணிய தீர்த்தமாகவும் இருந்திருந்தால் பக்தர்கள் ஏன் கடலுக்கு செல்லபோகின்றார்கள், அத்தனை பேர் சுனாமி உட்பட பல அலையில் சாக போகின்றார்கள்?

பழம் அடையாளங்களை கண்மூடிதனமாக ஒழித்துகட்டுவதில் தமிழருக்கு இணை கிடையாது, வேளாங்கண்ணியும் அதற்கு தப்பவில்லை

எவ்வளவு அழகான புண்ணியஸ்தலம் அது. அதன் அழகினை இன்னும் அற்புதமாக பராமரிக்கலாம் ஆனால் அது வியாபார கூட நடுவில் சிக்கிவிட்டதும் தவறு.

வேளாங்கண்ணியில் மாதா பிரசித்தம், அதே மாதா கோவில் எதிரில் திராவிட இயக்கம் கட்டியிருக்கும் தங்கும் விடுதியும் பிரசித்தம்.

இப்பக்கம் மாதா கோவில் மணியடித்தால் அப்பக்கம் திராவிட சுவரில் கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி என்ற வசனத்தோடு பெரியார் அமர்ந்திருக்கின்றார்.

கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி என்றால் அந்த காட்டுமிராண்டிகளுக்கு விடுதி அமைத்து சம்பாதிப்பவன் எப்படிபட்ட காட்டுமிராண்டியாக இருப்பான் என யாரும் கேட்பதில்லை.

கோவிலுக்கு உள்ளே பூசாரி காசுவாங்கினால் தப்பாம், ஆனால் கோவிலுக்கு வெளியே ஹோட்டல் நடத்தினால் அது பகுத்தறிவாம்

அவர்கள் அப்படித்தான்

நம்பியவர்கள் மாதாவின் புண்ணிய ஸ்தலமாக அதனை காணலாம், நம்பாதவர்கள் மிக சிறந்த வரலாற்று இடமாகவும், பெரும் மத நல்லிணக்கம் நடக்குமிடமாகவும அதனை காணலாம்

இன்று அந்த புகழ்பெற்ற ஆலயத்தின் திருவிழா, அந்த ஆலயத்தின் பக்தர்களுக்கு வாழ்த்துக்கள்.

உண்மையில் மனமார நம்பி அவர் பாதம் பணிந்தால், அவர்களுக்கு மிக நல்லமாற்றங்களை அவர் கொடுத்துகொண்டுதான் இருக்கின்றார், இல்லாவிட்டால் இவ்வளவு பெரும் கூட்டமும் கொண்டாட்டமும் சாத்தியமில்லை

சோதனைகள் அனுப்பி தன்னை தேட சொல்பவள் அத்தாய், பால்கார சிறுவனும், நொண்டி சிறுவனும், அந்த சூறாவளியில் சிக்கிய போர்த்துகீசியரும் அவரை தேடினார்கள், எங்களை காப்பாற்று என கதறினார்கள்.

உடனே ஓடிவந்து காப்பாற்றி அணைத்துகொண்டவள் அவள். அந்த சாட்சியின அடையாளமே அந்த கோவில்.

இன்னமும் காப்பாற்றிகொண்டிருப்பதற்கு சாட்சிதான் அந்த மாபெரும் மக்கள் கூட்டம், உலகெல்லாம் இருந்து சென்று குவிந்து மரியே வாழ்க என சொல்லிகொண்டிருக்கும் அந்த கூட்டம்.

சோதனையில் இருப்பர்கள் அன்னையினை அழைக்கலாம், எங்கிருந்தாலும் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அழைக்கலாம் ஓடிவந்து தாங்குவாள்

அந்த ஆலயம் அதனைத்தான் சொல்கின்றது

அந்த ஆலயத்தின் எல்லா பொருளுக்கும் வரலாறு உண்டு, ஆனால் அந்த அழகிய திருச்சொரூபத்திற்கு மட்டும் வரலாறு இல்லை

அது எப்படி அங்கு வந்தது என்பது இன்றுவரை ரகசியமானது மர்மமானது, மாதா ஏன் அந்த ஊரை தேர்தெடுத்தார் என்பது போல யாருக்கும் தெரியா ரகசியமது

அந்த திருச்சொரூப மாதா, எல்லோருக்கும் எல்லா வளமும் அருளட்டும்

இளம் துறவியினை ஏன் கொண்டாடுகின்றார்கள்

இந்த இளம் துறவியினை ஏன் கொண்டாடுகின்றார்கள், இப்படி வரவேற்கின்றார்கள்? அவர் என்ன விவேகானந்தர் போல சிகாவில் பேசினாரா? இல்லை அபிராமபட்டர் போல் நிலவினை மறைத்தாரா?

ஒன்றுமில்லை அதைவிட மகத்தான காரியத்தை செய்திருக்கின்றார்

என்ன செய்தார்?

இந்துக்களுக்கு திருப்பதி போல, கிறிஸ்தவருக்கு வேளாங்கணி போல இஸ்லாமியருக்கு முக்கியமானது ஆஜ்மீர் தர்கா

அங்கு இஸ்லாமியர் பெரும் கூட்டமாய் குவிவர், சுற்றுபயணிகளும் உண்டு

இந்த மாபெரும் மகான் என்ன செய்தார் என்றால் அந்த ஆஜ்மீர் தர்காவில் குண்டுவைத்து சிலரை கொன்றார், விஷயம் நடந்தது 2007ம் ஆண்டு,

கொஞ்சமும் ஏற்கமுடியாத பாபர் மசூதி நிகழ்வுக்கு ஒப்பான கொடூரம் இது, புனிதமான மசூதியில் தாக்குதல் நடத்துபவன் ஆப்கானிய தாலிபன் ரகத்தைவிட மோசம்

அப்படிபட்ட மதமிருகமான இவனுக்கு தண்டனை விதிக்கபட்டது, அவன் ஜாமீனில் வெளிவருவதை இப்படி கொண்டாடுகின்றார்கள்

இந்தியா மிக மோசமான கட்டத்தினை கடந்து கொண்டிருக்கின்றது என்பதற்கு இதை தவிர சாட்சி இல்லை

இதெல்லாம் யாரின் தைரியம் என்றால் பாஜக எனும் கட்சி ஆள்கின்றது என்பதை தவிர ஏதுமே இல்லை

நாடு பொருளாதாரத்தில் சீரழிந்து , ரூபாயின் மதிப்பு எட்டிபார்த்தாலும் தெரியாத அளவு கீழே கிடக்கும்பொழுது இம்மாதிரி கொடூர சிந்தனைகளை கொண்டிருப்பவர்கள் இந்தியர்களே அல்ல‌

உண்மையில் துப்பாக்கி சூடு இங்குதான் நடந்திருக்க வேண்டும், ஆனால் தூத்துகுடியில் மட்டும்தான் சுடுவார்கள்

மோடி இந்த நாட்டுக்கு ஏதாவது செய்வதாக இருந்தால் ராஜினாமா செய்யட்டும், அமித்ஷா ஏதும் செய்வதாக இருந்தால் கட்சியினை கலைக்கட்டும்

இன்னொருமுறை பிஜேபி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவினை காக்க ஆப்கனில் இருப்பது போல் பன்னாட்டு அமைதிபடைதான் வரும், அந்த நிலைக்கு சென்றுகொண்டிருக்கின்றது மதவெறி இந்தியா.

இந்த இந்து தாலிபானிசம், இந்து ஐ.எஸ் இயக்கம் எல்லாம் உடனே நசுக்கபடாமல் இத்தேசத்திற்கு விமோசனம் இல்லை


 

ராமர் அங்கு பிறந்தாரா?

சரி அடுத்த கட்ட சண்டை இந்த சங்கிகளோடு தொடங்கும் போலிருக்கின்றது

ராமர்கோவிலை இடித்து பாபர் மசூதி கட்டினான் என தொடங்கிவிட்டார்கள்

ராமர் அங்கு பிறந்தாரா? அவருக்கு கோவில் இருந்ததா என்பதெல்லாம் இல்லை விஷயம்

இந்த நாடு புத்த நாடாகவும் இருந்தது, பின் சமண நாடானது இதில் எதெல்லாம் அழிந்தது என்றே தெரியாது

பின்பு ஆதிசங்கரரின் எழுச்சிக்கு பின்பே இன்று காணும் இந்து ஆலயங்கள் வந்தன, எந்த இந்து ஆலயமும் இங்கே 2500 முதல் 3000 ஆண்டு பழமையானது அல்லவே அல்ல‌

இதில் எங்கிருந்து பல லட்சம் ஆண்டுக்கு முன்பிருந்த ராமர் கோவிலை தேடுவது?

அதுவும் பாபர் முதலில் வந்த இஸ்லாமியன் அல்ல, கோரி முகமதுவிற்கு பின் எத்தனையோ இஸ்லாமிய மன்னர்கள் இங்கு ஆண்டனர். அதில் எவன் கட்டிய மசூதியினை பாபர் சீரமைத்தானோ தெரியாது

ராமர்கோவில் விவகாரம் எல்லாம் வெள்ளையன் தூண்டிவிட்டது, சுதந்திரம் நெருங்க நெருங்க அதை ஊதிபெருதாக்கினான், பின்னாளில் அத்வாணி அதை பிடித்து தொங்கி இடித்தும் விட்டார்

தேசம் ரத்தகளறி ஆகி ஓய்ந்தது, மற்றபடி ராமருக்கு இங்குதான் ஆலயம் என்பதை ராமரே விரும்பமாட்டார். எல்லாம் அரசியல் கணக்கு தவிர ஒன்றுமில்லை

இந்து, புத்தம், சமணம், இஸ்லாம் என மாறிவந்த காலத்தில் டூப்ளேயின் திட்டம் சரியாக இருந்தால் பாபர் மசூதி இருந்த இடம் மாதா கோவிலாக கூட மாறி இருக்கும் ஆனால் கிளைவ் அதை முறியடித்தான்

ஆக இதுதான் ராமர் பிறந்த இடம் என சொல்ல ஒன்றும் பெரும் ஆதாரமில்லை, இல்லை இல்லை இருக்கும் மசூதிகள் இன்னபிற விஷயங்களை இடித்து தோண்டி இந்தியா முழுக்க தோண்டி தோண்டி தேடுவோம் என்றால் தோண்டுங்கள்

உழுத நிலம் போல ஆக்கி போடுங்கள், இல்லை சாலையோரத்தில் கேபிள் பதிக்க தோண்டுவது போல் தேடுங்கள், தேடிகொண்டே இருங்கள்

அதன் பின் மோடியால் பாழ்பட்ட பொருளாதாரம் போல தலைகீழாக கிடக்கும் இத்தேசம்

அதைத்தான் விரும்புகின்றார்கள் போல

தும்பிகள், திமுக இப்பொழுது சங்கிகள் என அடுத்தகட்ட யுத்தம் தொடர்கின்றது

மரங்கள் ஓய்வினை விரும்பினாலும் காற்று விடுவதில்லை என்பது இதுதான் போலிருக்கின்றது

கோகுலாஷ்டமி கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Image may contain: 1 person

பாரத புராண காவியங்களில் கடவுளின் அவதாரங்கள் நிறைய உண்டு, அனைத்து அவதாரங்களும் தீமையை அழித்து தர்மத்தை நிலைநாட்டும். அதனிலும் ஒரு சில அவதாரங்கள் மிக மிக பிரசித்து பெற்றது, ஞானதத்துவம் மிக்கது அவற்றில் ஒன்றுதான் கிருஷ்ணவதாரம்.

படிக்க ஆரம்பித்தால் மிக மிக ஆச்சரியத்தின் உச்சிக்கு கொண்டு செல்வது கிருஷ்ணனின் மாயவேலைகள், சில இடங்களில் விசிலடித்து கொண்டாடலாம், சில இடங்களில் புருவத்தினை சுருக்கி வியக்கலாம்,பல இடங்களில் கண்களில் குறுகுறுப்பும், உதட்டில் புன்னகையும் கொண்டு ரசிக்கலாம். சில இடங்களில் அவரை கண்டு கட்டி தழுவலாம்.

பொதுவாக மற்றவர்களை விட அதிக ரசனையும், இளகிய மனமும் கொண்டவர்களே சிறந்த கவிஞர்களாக முடியும், அந்த வகையில் அதிகபடியான தமிழ்கவிஞர்கள் பாடியிருப்பது கண்ணனை மட்டுமே, காரணம் படிப்பவர்கள் மனதில் சட்டென்று ஒட்டிகொண்டு, நினைத்து நினைத்து ரசிக்கவைப்பது கண்ணனின் மாய விளையாட்டுக்கள்.

சங்ககாலத்தினை விடுங்கள், மகாகவி பாரதியும், கவியரசர் கண்ணதாசனும் பாடாத கண்ணன் பாடலா?, இன்று கூட‌ வானொலியை திறங்கள், “”விஷம கண்ணணே வாடா வா” என்றுதான் ஒலிக்கின்றது, இதுதான் கண்ணனின் அசைக்கவே முடியாத வெற்றி.

காரணம் அவர் சாதித்த காரியங்கள் அப்படி, கருவாகும் முன்னமே தாய்மாமன் எமன், பிறந்த அன்றே தொடங்கியது போராட்டம், 6 வயதிற்குள் சிறியதும் பெரியதுமாக ஆயிரம் பூதங்களையும், ஏராளமான ஆபத்துக்களையும் கடந்தார்.
அன்று உலகம் சிறிதும் மதிக்காத இடையர்கள் குலத்தில்தான் ஓர் மாடுமேய்ப்பவனாகத்தான் வளர்ந்தார்.

சிறு வயதிலே வேடிக்கையும், விளையாடுமாக பெரும் ஆபத்துக்களை எதிர்கொள்வதும்,த்த்துவத்தை போதிப்பதும், சிரித்து கொண்டே தர்மத்தினை நிலைநாட்டுவதும் அவருக்கு மனம் வந்த கலை. அவரது வாழ்வில் எங்காவது கண்ணன் கவலையுற்றார், அல்லது கண்ணீர் விட்டார் என்று பார்க்க முடியுமா?

தானும் மகிழ்ந்து மற்றவரையும் மகிழ்வித்தார், பாதுகாத்தார்

ஏராளமான தீயவர்கள் பெருகியிருந்த காலகட்டத்தில் ஆயர்பாடி மக்களுக்கு சிறுவயதிலிருந்தே அவர் பாதுகாப்பு, பெரும் பூதங்கள்,படைகள் என சகலத்தையும் அடக்கிய அவர் அன்று பெரும் நாயகன், அதுவரை அடிவாங்கிய ஆயர்பாடி கூட்டம் அவர்தலமையில் திருப்பி அடித்தது, அதுவும் காளிங்கனை அடக்கியபின் அன்றைய ஆயர்பாடியில் அவர்தான் டாப் நாயகன்.

ராமசந்திரனுக்கே மயங்கிய பெண்கள் உள்ள இந்தியாவில், கண்ணனுக்கும் ஏராளமான பெண் ரசிகைகள் இருக்கமாட்டார்களா? இருந்தார்கள், மயங்கினார்கள். மாவீரன் மட்டும் என்பதல்ல, சிரித்த முகமும், இனிமையான குழலிசையும் , எந்த ஆபத்தையும் அசால்ட்டாக தாண்டும் அவருக்கு பெரும் ரசிகைகள் இருந்தது வியப்பே இல்லை.

எல்லாம் கொஞ்சகாலம்தான், ஒரு கட்டத்தில் தன்னை உணர்ந்து கொண்டு, அவதார கடமைகளை ஒவ்வொன்றாக‌ நிறைவேற்றினார். கம்சனை கொன்றார், ஆயினும் மன்னராகும் ஆசை இல்லை, தாத்தாவிடம் ஆட்சியை கொடுத்து மறுபடியும் ஆயர்பாடிக்கு காவலானார்.

ஆயிரம் கம்சன் உண்டல்லவா?, பல்வேறு தொந்தரவுகள் கொடுத்தார்கள், ஒரு கட்டத்தில் ஆயர்பாடி மக்களுக்காக துவாரகையை சொர்க்கத்திற்கு நிகராக உருவாக்கி, உலகிலே முதன் முதலாக அதுவரை ஒடுக்கபட்ட, விரட்டபட்ட, கடுமையாக புறக்கணிக்கப்ட்ட அப்பாவி மக்களுக்கு ஒரு நாடு கொடுத்து வாழச்செய்தார்.

போரிட்ட இடமெல்லாம் வெற்றி கிட்டின, அவர் சென்ற இடமெல்லாம் நியாயங்கள் அரங்கேறின, தர்ம நீதிகள் கிடைக்காத இடங்களில் அவரே தர்மத்தினை ஏற்றி வைத்தார்,

சக்கர ஆயுதம் எடுத்து சாதித்தவர், அரைபிளேடு கூட எடுக்காமல் அமைதியாய் சாதித்து காட்டியதுதான் மகாபாரத போர், கண்ணனின் வெற்றி அடையாளங்களில் அதுதான் “மாஸ்டர் பிளான்”

பாண்டவர்களும்,கௌரவரும் உறவினர்தான், ஒன்றாய் பிறந்து வளர்ந்தவர்கள் தான், ஆனால் துரியோதனுக்கு கொஞ்சம் பொறாமை அதிகம், சிறுவயதிலே காதை பிடித்து திருகியிருந்தால் திருந்தியிருப்பான், அதற்கு ஆளில்லை தந்தையும் குருடர், தாயும் கண்ணை கட்டிகொண்டவர். துரியன் அப்படியே வளர்ந்தான்,

அவன் வளர,வளர அவனின் பொறாமையும் வளர்ந்தது.
அவன் மனதின் வன்மம் கல்லாய் இறுகியது, உலகில் யாரும் வாழலாம்,ஆளலாம்.

ஆனால் பாண்டவர்கள் மட்டும் ஆளவே கூடாது முடிந்தால் வாழலாம் அதுவும் கண்காணாத இடத்தில் அல்லது கவுரவர்களுக்கு அடிமையாய் வாழ்லாம். இதனை போதித்தவன் சகுனி.

அன்று அஸ்தினாபுர பேரர‌சினை “இம்சை அரசன்” நாசரை போல‌ இயக்கியவன் சகுனி, அவனே அன்று நாட்டினை ஆண்டவன், துரியோதனன் முகமூடி, துரியோதனின் முடிவுகளை எடுப்பது எல்லாம் சகுனியே.

பாண்டவரின் நாடு பல சிறப்பு பெற்றதை தாங்க முடியவில்லை, தீவைத்து கொல்லபார்த்தான் துரியோதனன் தப்பினார்கள், மறுபடி எழுந்தார்கள் வாழ்ந்தார்கள் பாண்டவர்கள், வஞ்சகமாய் சூதாடி நாட்டை பறித்து வனவாசம் செய்ய விரட்டினான்.

அதோடும் விடவில்லை, பாண்டவர்கள் இருக்கும் வரை பிரச்சினை செய்வார்கள வனவாச காலம் முடியும் பொழுது போருக்கு இழுத்து மொத்தமாக பாண்டவர்களை அழிப்பதுதான் சகுனியின் திட்டம், அதற்கு வடிவம் கொடுத்தான் துரியோதனன்.

பாஞ்சாலியை காக்கும் பொழுதே கண்ணனுக்கு விளங்கிற்று, போர் தவிர்க்கமுடியாதது, பெரும் ராஜ தந்திர திட்டத்தினை முன்னடுத்தான்.

வனவாச காலத்தில் பாண்டவர்களை கண்ணன் சும்மா இருக்கவிடவில்லை, தொலைதூரத்தில் சில கொடிய மன்னர்கள் இருந்தார்கள். பாண்டவரோடு இணைந்து அவர்களை அழித்தான், காரணம் நாளை சண்டை என வந்தால் அவர்கள் நிச்சயம் துரியோதனுக்கு உதவ வருவார்கள், இனம் இனத்தோடு சேருமல்லவா?

ஜெராசந்தனும்,சிசுபாலனும் இன்னும் பலரும் இவ்வாறே அழிந்தனர்.

வனவாச காலத்திற்குள் பாண்டவர்களை போருக்கு தயார் படுத்தினான், நினைத்திருந்தால் துவாரகையிலே அவர்களை தங்க வைத்திருக்கலாம், வைக்கவில்லை காரணம் நாடு நாடாக அலைந்தால் தான் நிறைய அரசுகளின் நட்பு கிடைக்கும் எனும் தந்திரம், அப்படியே கிடைத்தது, பல அரசர்கள் பாண்டவருக்கு துணைநின்றனர்.

பெரும் போருக்கு பாண்டவர்களையும்,நண்பர்களையும், பாசுபதகனை போன்ற ஆயுதங்களையும் தயார் படுத்திவிட்டுத்தான், ஒன்றும் அறியாத அப்பாவியாக துரியோதனிடம் தூது சென்றான். நிச்சயம் துரியோதனன் சொத்து கொடுக்கமாட்டான் என கண்ணனுக்கும் தெரியும்,

தெரிந்தும் ஏன் சென்றான் என்றால் கௌரவர் கூட்டணியில் குழப்பத்தினை ஏற்படுத்த, அதுதான் திட்டம்.

பாண்டவரும்,கௌரவரும் அப்படியே மோதிக்கொண்டால் 18 நொடிக்குள் பாண்டவர் சாம்பல் கூட மிஞ்சியிருக்காது. துரியனின் கூட்டனி அப்படி, அரை குண்டூசி கூட கையில் இருந்தாலும் கொல்லமுடியாத துரோணர், நினைத்த போது மட்டும் மரணம் பெரும் பீஷ்மர், உலகை அழிக்கும் விதுரர், இன்னும் வெல்ல முடியாத கர்ணன், கிருபர், அஸ்வத்தாமர் என மிக நீண்ட வரிசை அது.

அவர்களுக்குள்ளும் துரியன் மீது கோபமிருந்தது, ஆனால் குலப்பெருமைக்காக பாகுபலி கட்டப்பா போல கூட இருந்தார்கள். தூது சென்ற கண்ணன் நிகழ்த்திய நாடகத்தில் விதுரர் வெளியேறினார், அஸ்வத்தாமன் மேல் துரியோதனனுக்கு சந்தேகம், இதற்கு மேல் பீஷ்மருக்கும், கர்ணனுக்கும் ஈகோ பிரச்சினை, விளைவு பலமிக்க கூட்டணி சிதறியது.

போதாக்குறைக்கு கர்ணனிடம் குந்தியை அனுப்பி அவனையும் காலம் பார்த்து குழப்பியாகிவிட்டது.

பாரத போரும் தொடங்கியது உறுதியாக சொல்லலாம் அது முதன் முதல் உலகப்போர், எல்லா நாட்டு அரசும் பங்கெடுத்தன, கண்ணனோ அப்பாவியாக தேரோட்டியாக வந்தார். ஆனால் அவரே சூத்திரதாரி.

பல்லாண்டுகள் கழித்து ஆசிரியரையும், உறவினரையும் கண்ட அர்ச்சுணன் தசை ஆடியது, உணர்ச்சியில் சண்டையிட மறுத்தான், அரசே வேண்டாமென்றான், அர்ச்சுணன் இல்லாவிட்டால் பாண்டவர் ஏது?
மாபெரும் உபதேசம் கொடுத்தான் கண்ணன், தெளிந்தான் அர்ச்சுணன், அது அர்ச்சுணனுக்கு மட்டுமல்ல அல்ல மொத்த உலகிற்கு, அதுவே புனிதமான பகவத் கீதை.

18 நாள் பெரும்போரில் கண்ணனால் குழப்பபட்ட கௌரவர் படை கூட்டணி வீரர்கள் மொத்தமாக வராமல் ஒவ்வொன்றாக வந்தனர், பெரும் பலசாலிகள், வரம்பெற்றவர்கள். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருந்தது, அதில் சரியாக இடம்பார்த்து அடிக்க சொன்னார், பாண்டவர்கள் அடித்தார்கள், நியாயம் வென்றது.

கடவுளாக நம்புபவர்களுக்கு அவன் கடவுள், நம்பாதவர்கள் அவன் நிச்சயம் பெரும் ராஜதந்திரி என்பதை மட்டும் மறுக்கவே முடியாது. பெரும் ராஜ தந்திரமும், மேலாண்மை நுட்பத்தினையும் உலகிற்கு கொடுத்தது கிருஷ்ணன்.
மதிநுட்பத்திலும், ராஜ தந்திரத்திலும் உலகில் முத்திரை பதித்தவர்கள் உண்டு, பாரதவரலாற்றை நன்கு கற்ற சாணக்கியனே அதில் முதலிடம்,

கண்ணனின் மகாபாரத மாய வித்தைகளை சுருக்கமாக சொன்னால், அதற்கு இன்னொரு பெயர்தான் அரசியலும்,உளவுதுறையும் உலகம் இந்தியாவின் பொக்கிஷம் என கொண்டாடும் “அர்த்த சாஸ்திரம்”.

பழம் காலத்தினை விடுங்கள், தற்போது உலகினை கலக்கிகொண்டிருக்கும் இஸ்ரேலின் புகழ்பெற்ற தளபதி மோஷே தயான், மொசாத்தின் பெரும் அடையாளம் டேவிட் கீம்சி, இந்தியாவின் வலிமையான இந்திரா காந்திக்கு வங்கபோரினை வெற்றியாக முடித்து கொடுத்த “ரா”வின் சில அதிகாரிகள் என ஆயிரம் ராஜ தந்திரிகள் வந்தாலும், என்றும் அவர்களுக்கெல்லாம் முன்னோடியாக வழிகாட்டுதலாக இருப்பது கண்ணணே.

கண்ணனின் வாழ்வும், மாய வேலைகளும் குறிப்பிடுவது ஒன்றே ஒன்றுதான் “தீயவர்களின் கூடாரம் மிக பலமானதாகத்தான் இருக்கும், ஆனால் அந்த பலத்தில் ஒரு சிறிய பலவீனம் இருக்கும், தர்மத்தினை நிலை நாட்டுவதற்காக அது இறைவனால் அனுமதிக்கபட்டது, அந்த பலவீனத்தினை அறிந்து நிதானமாய் இறைவன் துணையோடு போரிடுபவனுக்கு என்றுமே தோல்வி இல்லை, அதர்மம் நிச்சயம் வீழும்”

பாரத்தினை விடுங்கள், எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு சோதனை காலங்கள் இருக்கும், சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ கம்சனையோ,காளிங்கனையோ அல்லது துரியோதனன் போல அறவே நியாயம் இல்லாத 200% கொடுமையாளரின் சித்திரவதைகள‌ நீங்கள் அனுபவத்திருக்கலாம், அப்பொழுது தர்மத்தினை காக்கும் பொருட்டு , உங்களை பாதுகாத்து கைதூக்க நிச்சயம் ஒருவர் வந்திருப்பார் அல்லது வருவார்.

அப்படி உதவ வருபவர்களின் உருவத்தில் எல்லாம் எக்காலமும் பகவான் கிருஷ்ணன் வாழ்ந்து கொண்டே இருப்பார்.

கண்ணன் உண்டு என நம்புவர்களுக்கு அவன் உண்டு எக்காலமும் உண்டு, இல்லை என சொல்பவர்களும் அவன் ராஜதந்திரத்தை வியக்காமல் இருக்க முடியாது, அது கதை என்றால் கூட அப்படி ஒரு கதையினை நிச்சயம் மானிடரால் எழுதவே முடியாது

பாரத ஞானதர்மத்தின் அடையாளம் பகவான் கிருஷ்ணன்

கோகுலாஷ்டமி கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்.