மனித இடப்பெயர்வு

உலகில் தற்காலிகமாக நடைபெறும் மனித இடப்பெயர்வில் எது மிகபெரியது என்ற ஆய்வில் சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக நகரங்களிலிருந்து கிராமங்களை நோக்கி மக்கள் ஓடி பின் திரும்புவது என அறியபட்டது

அந்த அளவு ஏராளமான மக்கள் கிராமங்களை விட்டு நகரங்களில் இருக்கின்றார்கள், அப்பண்டிகைக்காக கிராமங்களுக்கு செல்ல அத்தனை கோடி பேர் தயாராவார்கள், புல்லட் ரயில் உட்பட பல விஷயங்களை செய்திருந்தாலும் அந்நேரத்தில் சீனா திணறத்தான் செய்யும்

பொது பேருந்து என்றால், கார் வைத்திருப்பவர்கள் எல்லாம் சாலையில் அணிவகுத்தால் என்ன செய்ய முடியும்?

இப்படியாக பண்டிகை காலங்கள் உலகம் முழுக்க சிக்கலாகிவிட்டன, நிம்மதியாக நேரத்திற்கு போய்வந்தவர்கள் யாருமில்லை, பெரும் குழப்பம் திகைப்பு, டிக்கெட் கிடைக்கவில்லை அல்லது கிடைத்தாலும் பிரயோசனமில்லை

இந்த உலகளாவிய‌ சிக்கலில் சென்னையும் சிக்கிவிட்டது என்கின்றார்கள், 1970க்கு பின் வெடித்து பெருத்திருக்கின்றது சென்னை. தமிழக கிராமங்கள் எல்லாம் காலியாகி அங்குதான் குடியேறியிருக்கின்றன‌

உறுதியாக சொல்லலாம், வெள்ளையன் காலத்தின் வசதிகள் 1970வரைதான் தாங்கின, அதன் பின் ஆட்சியாளர்கள் கடும் திட்டம் இயற்றி இருக்க வேண்டும், இவர்கள் உள்ளூருக்குள்தான் முண்டிய்டித்தார்களே தவிர புறநகர் பக்கம் செல்லவில்லை

மிகபெரிய பஸ்நிலையங்கள் சென்னை புறநகரில் வடக்கில் ஒன்றும், தெற்கில் ஒன்றுமாக‌ அமைக்கபட்டிருக்க வேண்டும், அப்படி இருந்தால் நகரில் நெருக்கடி குறைந்திருக்கும், வெளியூர் வந்து போகின்றவர்களால் ஊருக்குள் நெருக்கடி இருந்திருக்காது

வெள்ளையன் காலத்திற்கு பின் புதிய பெரும் ரயில் நிலையங்கள் கட்டபட்டதாகவும் தெரியவில்லை,அதே சென்ட்ரல் அதே எக்மோர் இரண்டிற்கும் இணைப்பு கூட இன்னுமில்லை வரவும் வராது

இதில் வாஜ்பாய் அரசின் சாலை திட்டம் வரவேற்க தக்கது, சென்னையில்தான் நெருக்கடியே தவிர, தங்க நாற்கர சாலைக்கு வந்துவிட்டால் பறக்கலாம், பயண நேரம் மிக குறைந்திருக்கின்றது, இப்போதைய ஆறுதல் அதுதான்

உண்மையில் இது மிகபெரும் சாதனை, பாஜகவினர் முன்னெடுக்க வேண்டிய விஷயம் அது, ஆனால் எச்.ராசாவும் தமிழிசையும் இதை தவிர வேறு எல்லாம் பேசி டெப்பாசிட் பறிபோவதை கவனமாக பார்த்துகொள்கின்றார்கள்.

உண்மையில் பல விஷயங்களை சென்னையிலும் தமிழகத்திலும் செய்யாமல் அன்று விட்ட தவறு இன்று எதிரொலிக்கின்றது, ஏதும் சொன்னால் திராவிட சாதனையினை பார்க்கின்றாயா? உபி தெரியுமா? மபி தெரியுமா? பீகார் தெரியுமா அதனை விட தமிழகம் சிறக்க திராவிடம் காரணம் என்பார்கள்

இந்த இந்து கோஷ்டிகள் எதற்கெடுத்தாலும் பாகிஸ்தானை ஒப்பிடும், மாறாக முன்னேறிய நாடுகளை ஒப்பிட்டு பார்க்காது. அது போல தமிழக திராவிட கும்பல் எதற்கெடுத்தாலும் பீகார், மபி என நாசமாய் போன மாநிலங்களை ஒப்பிடுமே தவிர ஐதரபாத், அமராவதி, பெங்களூர் பற்றி எல்லாம் பேசாது உலகின் இன்னபிற நகரங்களை, நாடுகளை பற்றி எல்லாம் மூச் விடாது

காலத்திற்கு ஏற்ப மாற தொலைதூர திட்டங்கள் வேண்டும், இங்கு அதெல்லாம் சாத்தியமில்லை ஆளாளுக்கு குற்றம் சொல்லி வோட்டு சுருட்டல் அப்படியே கிடைத்ததை சுருட்டல் போன்ற விஷயங்கள் மட்டும் நடக்கும் நாடு இது

சீனா போன்ற நாடுகள் இதில் பரவாயில்லை திட்டமிட்டு சமாளிக்கின்றார்கள், பேருந்து நிலையமோ, விமான நிலையமோ நகரத்தில் இருந்து 70 தள்ளி அமைக்கின்றார்கள், அதனை நகரோடு இணைக்க ரயில் , பஸ் விட்டால் போதும் முடிந்தது விஷயம்

அந்த 70 இடைபட்ட தூரம் கொஞ்ச கொஞ்சமாக குடியிருப்பாக மாறி நகரோடு இணைய 30 40 வருடம் ஆகலாம், நிறைய இடம் இருப்பதால் திட்டமிட்டு குடியிருப்புகளை அமைக்கலாம்

வெளிநாட்டு நகரங்கள் விஸ்தாரமாய் அமைய இந்த அணுகுமுறைதான் காரணம், நெரிசல் குறைய இதுதான் காரணம் தீர்வும் அதுதான்

இவைகளை 1980ல் செய்திருக்கவேண்டிய சென்னை, அன்று ராமசந்திரன் கலைஞர் எனும் இழுபறியில் செய்யதவறி இன்று வருங்கால சந்ததி பாதிப்பில் வந்து நிற்கின்றது

இப்பொழுது உள்ளவர்கள் செய்வார்கள் என நினைத்துபார்ப்பது இமயமலையின தூக்கி கடலில் போட முடியுமா என்பதற்கு சமம், நடக்காது

தமிழகம் மட்டுமல்ல உலகெல்லாம் விவசாயம் பொய்த்து அல்லது அதில் பிழைக்க முடியாமல் நகரத்தை நோக்கி நகரும் கூட்டம் பெருத்துவிட்டது, தொழில்வளத்திற்கு மாறும் நாடுகளுக்கு உண்டான சிக்கல் இது

ஐரோப்பிய நாடுகள் மானியங்களை அள்ளிவிட்டு விவசாயிகளை பெரும் பண்ணை முறையில் கிராமங்களில் இருக்க வைக்கின்றனர், அங்கு மக்களும் குறைவு

சீனா இந்தியா போன்ற நாடுகளில் இச்சிக்கல் அதிகம். இதெல்லாம் காலம் ஏற்படுத்தும் மாற்றங்கள், மாறியே தீரும்

ஆனால் அரசு மக்களுக்கான வசதிகளை காலத்திற்கேற்ப செய்ய வேண்டும் அல்லவா? சீனா அதில் முண்ணணியில் இருக்கின்றது, நிலையான ஆட்சி, நிரந்தரமான கொள்கை என்பதால் அதனால் செய்ய முடிகின்றது

பொங்கல் பண்டிகையினை விட 20 மடங்கு பெரிய பண்டிகையான அந்த சீனபுத்தாண்டு இடப்பெயர்வினை அவர்கள் சமாளிப்பது அப்படித்தான்

தமிழக அரசு இனியாவது விழித்து செய்யவேண்டியவற்றை செய்ய வேண்டும், இல்லாவிட்டால் வரும் காலங்களில் பெரும் சிக்கலை சந்திக்க வேண்டும்

மக்களின் ஒத்துழைப்பும் வேண்டும், சீனா இரும்பு நாடு அரசு கேட்டால் கொடுத்துவிட்டு செல்வதை தவிர மறுவார்த்தை பேசமுடியாது, இந்தியாவில் உரிமைகள் அதிகம்

சாலையினை விரிவு படுத்துவதோ, அல்லது நிலம் கையகபடுத்துவதோ முடியாத விஷயம் சாதி, இனம், மொழி, வோட்டு என ஏகபட்ட விஷயங்கள் இருப்பதால் இப்படி நாசமாகிகொண்டே செல்கின்றோம், அதீத சுதந்தமும் ஆபத்தே

என்ன இருந்தாலும் சென்னை குடியேற்ற நகரம், அங்கிருக்கும் மக்களின் வேர் கிராமங்களில்தான் இருக்கின்றது. பிழைக்க சென்றார்களே அன்றி அவர்கள் மனமும் அதன் ஈர்ப்பும் அங்குதான் இருக்கும்

பொங்கல், தீபாவளி என பல காரணங்களுக்காக இது நடந்துகொண்டேதான் இருக்கும், போக போக மக்கள் தொகை கூடிகொண்டே செல்லுமே தவிர நிச்சயம் குறையாது

இம்மாதிரி வசதிகளை செய்துவைப்பதும் நல்லது, பண்டிகைகளை விடுங்கள் யுத்தம் அல்லது வேறுவகை மிரட்டல் என்றால் திடீரென சென்னை மொத்தமும் அவசரமாக காலி செய்ய‌ முடியுமா?

சென்னைக்கு மிக அவசரமான தேவை புறநகர் பகுதியில் பெரும் போக்குவரத்து நிலையங்களை ஏற்படுத்தி நெருக்கடிகளை குறைப்பது

இந்த கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு ராமசந்திரன் பெயரை வைத்து இம்சை செய்வதை விட,புற நகரில் பெரும் பேருந்து நிலையம் அமைத்து அங்கு யார் பெயரினையும் சூட்டட்டும் ஏன் ஜெயக்குமார் பெயரை கூட சூட்ட்ட்டும்

உடனே செய்ய வேண்டியது அதுதான் , இல்லாவிட்டால் வருங்காலம் இன்னும் மோசமாக இருக்கும்

[ November 3, 2018 ]

============================================================================