வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா

அந்த போர்த்துகீசிய கப்பல் , இலங்கையில் இருந்து கிளம்பி மலாக்கா நோக்கி சென்றுகொண்டிருந்தது. வங்ககடலில் வழக்கமாக உருவாகும் புயல் அப்பொழுது உருவாகியிருந்தது , கடும் புயலில் சிக்கியது அக்கப்பல்.

எத்தனையோ கடற்பயணங்களை செய்தவர்கள் அவர்கள், எத்தனையோ புயல்களை அனாசயமாக கடந்துதான் கப்பல் வாழ்வு வாழ்ந்துகொண்டிருந்தார்கள். ஆனால் அந்த புயல் மகா வித்தியாசமானது, அவர்களால் சமாளிக்க முடியவில்லை

போர்த்துகீசியர்கள் கத்தோலிக்கர்கள், கப்பலில் கதறினார்கள். மாதாவே நாங்கள் இப்புயலில் தப்பி கரை சேர்ந்தால் உங்களுக்கொரு கோவில் கட்டுவோம் என கதறினார்கள், அடித்த புயல் அந்த பாய்மர கப்பலின் கொடிமரத்தை சரித்துவிட்டு அவர்களை பத்திரமாக கரைசேர்த்தது

அவர்கள் கரை சேர்ந்த நாள் செப்டம்பர் 8.

அன்றுதான் தேவமாதாவிற்கு பிறந்தநாள் என்பது குறிப்பிடதக்கது. அவர்களுக்கு உடல் சிலிர்த்தது. மாதாவிடம் வேண்டியபடி அவருக்கு கோவில் எழுப்பலாம் என எண்ணியபொழுது மேலும் ஒரு அதிசயம் காத்திருந்தது.

ஒரு குளத்தின் கரையில் ஏற்கனவே ஒரு ஓலைகோவில் இருந்தது. அதனை மிக பயபக்த்தியாக அம்மக்கள் வணங்கிகொண்டிருந்தனர்

போர்த்துகீசியரோ வியப்பின் உச்சத்தில் இருந்தனர், நாங்கள் கோவில் கட்ட வந்தோம், இங்கு ஏற்கனவே மாதா கோவில் இருக்கின்றதே எப்படி? என விசாரித்தார்கள்

பல முன்பே மாதா ஒரு பால்கார சிறுவனுக்கு காட்சியளித்ததும், ஒரு ஊனமுற்ற சிறுவனை நடக்க வைத்ததையும், எல்லாவற்றிற்கும் மேல் நாகபட்டினத்தை சேர்ந்த பண்ணையாரை பணித்து இந்த ஆலயத்தை அமைத்திருப்பதையும் அறிந்து அதிசயித்தார்கள்.

தன்னை நாடிவரும் மக்களுக்கு எல்லாம் ஆரோக்கியத்தை அருளியதால் அவரை ஆரோக்கியமாதா என மக்கள் அழைத்துகொண்டிருந்தார்கள்.

அதே நாளில் கரைஒதுங்கிய அந்த கப்பலின் கொடிமரத்தை கோவில் அருகே நட்டு அதில் மாதாவி கொடியேற்றி திருவிழா தொடங்கினார்கள். அதுதான் அங்கு நடந்த முதல் திருவிழா

அதன் பின் 1771ல் அது முறையான ஆலயமாகி , பங்கு தந்தைகள் எல்லாம் அமர்ந்தார்கள். போர்த்துகீசியரும் தங்கள் நேர்ந்துகொண்டபடி ஆலயம் அமைத்தார்கள். அந்த பழம் ஆலயத்தின் டூம் அவர்கள் அமைத்தது பின் கொஞ்சம் கொஞ்சமாக கட்டினார்கள்.

பழம் ஆலயம் மிக அழகானது, குறிப்பாக அந்த பீடம். அதனை சீனாவிலிருந்து கொண்டுவந்த பீங்கான் தகடுகள் மூலம் அன்றே அழகுபடுத்தியிருந்தார் போர்த்துகீசியர், அவை இன்றும் உண்டு

பின்பு ஆலயத்தை விஸ்தாரபடுத்தினார்கள், ஒரு கட்டத்தில் புதுபுது ஆலயமாக கட்டினார்கள், இன்னும் கட்டிகொண்டே இருக்கின்றார்கள்.

உறுதியாக சொல்லலாம், அங்கு கூடும் மக்கள் எண்ணிக்கைக்கும், கொட்டபடும் காணிக்கைக்கும் அது நிச்சயம் உலகில் மிக வருமானம் வரும் இடங்களில் ஒன்று, இந்தியாவில் கிட்டதட்ட திருப்பதிக்கு நிகரான காணிக்கை அதில் வரலாம், ஆனால் சில கட்டுபாடுகள் காரணமாக அந்த கணக்கு வெளிவராது.

அப்படிபட்ட உரிமை இத்தேசத்தில் கொடுக்கபட்டிருக்கின்றது, நிச்சயம் கிறிஸ்தவர் சிறுபான்மையினர்தான், ஆனால் அவர்கள் ஆலய விவகாரங்களிலோ அவர்கள் கணக்கு வழக்கிலோ இந்த நாடு தலையிடாது.

அந்த காணிக்கைக்கு என்ன வரி? என்று கூட கேட்காது. இந்த அற்புத நாட்டில் இருந்துகொண்டுதான் இந்துவா ஒழிக, கிறிஸ்தவர்களை கொடுமைபடுத்துகின்றார்கள் என்றேல்லாம் பல பதர்கள் பேசிகொண்டிருக்கின்றன‌

இதோ வேளாங்கண்ணியே சாட்சி, இங்கு சென்று கிறிஸ்தவர்கள் கொண்டாட என்ன தடை? ஒன்றுமே இல்லை.

எத்தனையோ சலுகைகள் இந்நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு வழங்கபட்டிருக்கின்றது. சில உண்மைகளை ஒப்புகொண்டுதான் ஆகவேண்டும்

காணிக்கை கணக்குத்தான் வெளிவராதே தவிர, தன்னை நம்பிவரும் பக்தர்களுக்கு மாதா செய்யும் புதுமைகளும் நன்மைகளும் வெளிவந்துகொண்டே இருக்கும்

அந்த கடல் அலை போல திரளும் கூட்டம் அதனைத்தான் சொல்கின்றது, அனுதினமும் பெரும் மக்கள் திரளால் 24 மணிநேரமும் நிரம்பி வழியும் கூட்டம் அதனைத்தான் சொல்கின்றது.

ஆலயம் எதிரே அமைந்திருக்கும் மியூசியத்தில் மாதா புதுமைக்கு சாட்சியாக பக்தர்கள் வைத்த காணிக்கையும், சாட்சி சாசனமும் மிக ஏராளம்.

வேளாங்கண்ணி ஆலயத்தில் காணும் மிக அற்புதமான காட்சி ஒன்று உண்டு, உலகின் எந்த ஆலயத்திலும் காண கிடைக்கா காட்சி அது.

எல்லா மதத்தாரும் வந்து வணங்குகின்றார்கள், ஆச்சரியமாக இஸ்லாமியரும் வந்து அன்னையிடம் வேண்டுகின்றனர். அந்த அன்னையினை எங்கள் தாய் என மிக உரிமையோடு அழைக்கின்றனர் அப்பகுதி இஸ்லாமியர்கள்.

மிகபெரும் மத நல்லிணக்கத்தை அங்கே காணமுடியும்.

இதோ இன்று அங்கு திருவிழா கொண்டாடுகின்றார்கள், இந்தியாவில் மிக அதிகமாக மக்கள் கூடும் திருவிழாவில் அதுவும் ஒன்று, பெரும் கூட்டமாக கூடியிருக்கின்றார்கள்.

அவர்கள் மரியே வாழ்க என எழுப்பும் ஓசையில் கடல் அலை தோற்கின்றது

தன்னை நம்பிய மக்களுக்கு, தன்னை முழுமையாக நம்பி வந்த மக்களுக்கு அன்னை என்றுமே முழு ஆறுதலை வழங்கிகொண்டிருக்கின்றாள் என்பதற்கு அதுவே சாட்சி

தமிழக கத்தோலிக்க வீடுகள் எல்லாவற்றிலும் இருக்கும் படம், வேளாங்கண்ணி ஆலயமும் அந்த மாதாவின் திருவுருவமும்

அதன் முன் கண்ணீரோடு வேண்டும் மக்கள், தங்கள் வேண்டுதல் பலித்தபின் வேளாங்கண்ணி சென்று வழிபடுவது அவர்கள் குலவழக்கம்.

அன்றைய வேளாங்கண்ணி காவேரியின் கடைமடை பகுதி, கல்லணை வெள்ளம் அந்த குளம் வரை சென்றிருக்கின்றது, அந்த குளகரைதான் மாதா தனக்காக தேர்ந்தெடுத்த பகுதி

இன்று காவேரி இல்லை, அக்குளமில்லை , அந்த செழுமை இல்லை. ஆனால் அந்த ஆலயம் மட்டும் நின்றுகொண்டிருக்கின்றது.

அந்த ஆலயத்தில் வேண்டும்பொழுதெல்லாம், அக்காவேரி மறுபடிவரவேண்டும் அப்பகுதி மறுபடி செழிக்கவேண்டும் என்ற எண்ணமெல்லாம் வரும், வரத்தான் செய்யும்

இன்று அந்த மாதா குளத்தையே ஒரு கிணறாக்கிவிட்டார்கள், நிச்சயம் அது பெரும் தவறு. அந்த குளம் குளமாகவே இருந்திருக்கவேண்டும், அது குளமாகவும், புண்ணிய தீர்த்தமாகவும் இருந்திருந்தால் பக்தர்கள் ஏன் கடலுக்கு செல்லபோகின்றார்கள், அத்தனை பேர் சுனாமி உட்பட பல அலையில் சாக போகின்றார்கள்?

பழம் அடையாளங்களை கண்மூடிதனமாக ஒழித்துகட்டுவதில் தமிழருக்கு இணை கிடையாது, வேளாங்கண்ணியும் அதற்கு தப்பவில்லை

எவ்வளவு அழகான புண்ணியஸ்தலம் அது. அதன் அழகினை இன்னும் அற்புதமாக பராமரிக்கலாம் ஆனால் அது வியாபார கூட நடுவில் சிக்கிவிட்டதும் தவறு.

வேளாங்கண்ணியில் மாதா பிரசித்தம், அதே மாதா கோவில் எதிரில் திராவிட இயக்கம் கட்டியிருக்கும் தங்கும் விடுதியும் பிரசித்தம்.

இப்பக்கம் மாதா கோவில் மணியடித்தால் அப்பக்கம் திராவிட சுவரில் கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி என்ற வசனத்தோடு பெரியார் அமர்ந்திருக்கின்றார்.

கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி என்றால் அந்த காட்டுமிராண்டிகளுக்கு விடுதி அமைத்து சம்பாதிப்பவன் எப்படிபட்ட காட்டுமிராண்டியாக இருப்பான் என யாரும் கேட்பதில்லை.

கோவிலுக்கு உள்ளே பூசாரி காசுவாங்கினால் தப்பாம், ஆனால் கோவிலுக்கு வெளியே ஹோட்டல் நடத்தினால் அது பகுத்தறிவாம்

அவர்கள் அப்படித்தான்

நம்பியவர்கள் மாதாவின் புண்ணிய ஸ்தலமாக அதனை காணலாம், நம்பாதவர்கள் மிக சிறந்த வரலாற்று இடமாகவும், பெரும் மத நல்லிணக்கம் நடக்குமிடமாகவும அதனை காணலாம்

இன்று அந்த புகழ்பெற்ற ஆலயத்தின் திருவிழா, அந்த ஆலயத்தின் பக்தர்களுக்கு வாழ்த்துக்கள்.

உண்மையில் மனமார நம்பி அவர் பாதம் பணிந்தால், அவர்களுக்கு மிக நல்லமாற்றங்களை அவர் கொடுத்துகொண்டுதான் இருக்கின்றார், இல்லாவிட்டால் இவ்வளவு பெரும் கூட்டமும் கொண்டாட்டமும் சாத்தியமில்லை

சோதனைகள் அனுப்பி தன்னை தேட சொல்பவள் அத்தாய், பால்கார சிறுவனும், நொண்டி சிறுவனும், அந்த சூறாவளியில் சிக்கிய போர்த்துகீசியரும் அவரை தேடினார்கள், எங்களை காப்பாற்று என கதறினார்கள்.

உடனே ஓடிவந்து காப்பாற்றி அணைத்துகொண்டவள் அவள். அந்த சாட்சியின அடையாளமே அந்த கோவில்.

இன்னமும் காப்பாற்றிகொண்டிருப்பதற்கு சாட்சிதான் அந்த மாபெரும் மக்கள் கூட்டம், உலகெல்லாம் இருந்து சென்று குவிந்து மரியே வாழ்க என சொல்லிகொண்டிருக்கும் அந்த கூட்டம்.

சோதனையில் இருப்பர்கள் அன்னையினை அழைக்கலாம், எங்கிருந்தாலும் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அழைக்கலாம் ஓடிவந்து தாங்குவாள்

அந்த ஆலயம் அதனைத்தான் சொல்கின்றது

அந்த ஆலயத்தின் எல்லா பொருளுக்கும் வரலாறு உண்டு, ஆனால் அந்த அழகிய திருச்சொரூபத்திற்கு மட்டும் வரலாறு இல்லை

அது எப்படி அங்கு வந்தது என்பது இன்றுவரை ரகசியமானது மர்மமானது, மாதா ஏன் அந்த ஊரை தேர்தெடுத்தார் என்பது போல யாருக்கும் தெரியா ரகசியமது

அந்த திருச்சொரூப மாதா, எல்லோருக்கும் எல்லா வளமும் அருளட்டும்