மருதுபாண்டியர்

சுதந்திர போராட்டத்தை இந்தியாவில் தொடங்கிய வீரர்களில் முக்கியமானோர் மருது சகோதரரர்கள் அவர்களின் வீரமும் தியாகமும் பெரிது .

சாதரண குடும்பத்து சகோதரர்கள், ஆனால் தங்கள் வீரத்தாலும் விசுவாசத்தாலும் சிவகங்கை அரசின் தளபதிகளாயினர், முத்துவடுகநாதரின் நம்பிக்கைகுரியவர்களாயினர்.

இருவருமே மருதநாயகம் போல பலசாலிகளாகத்தான் இருந்தார்கள், பீரங்கிகளை அனசாயமாக‌ தூக்கி திருப்பும் அளவிற்கு உடல்கட்டு இருந்திருக்கின்றது

மருதநாயகம் எனும் கான்சாகிப்பின் நாடு என அறியபட்ட அப்பகுதி நாட்டின் காடும், கான் நாடு என்றே அறியபட்டது. அந்த கான் நாட்டின் புலிகள் கூட அவர்களுக்கு அஞ்சி இருக்கின்றன.

முத்துவடுகநாதர் காலத்திற்கு பின் வேலுநாச்சியார் பதவியிழந்து அலையும் பொழுது அவரை காடுகளிலும் பின் ஹைதர் அலி பாதுகாவலிலும் வைத்திருந்தவர்கள் அவர்களே

பின் போர்தொடுத்து வெள்ளையனை விரட்டி மறுபடியும் வேலுநாச்சியாரை அரசி ஆக்கியதும் அவர்களே

வேலுநாச்சியார் வீழ்த்தபட்டபின்னும் சிவகங்கை மன்னர்களாக வெள்ளையனை எதிர்த்து நின்றதும் அவர்களே

கட்டபொம்மனுக்கு பின் ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததும், பாஞ்சாலங்குறிச்சியில் ஊமைதுரை பெரும் போர் நடத்தவும் காரணம் அவர்கள்.

தென்னகத்தாரை எல்லாம் திரட்டி திருச்சி கோட்டையில் தென்னகம் சுதந்திர நாடு என ஜம்புதீவு அல்லது ஜம்வீத்யூத் பிரகடனம் என சுதந்திர நாட்டினை அறிவித்ததும் அவர்களே

த‌மிழ் இலக்கியங்களில் நாவலன் தீவு என தமிழகத்தினை சொல்வார்கள் அல்லவா, அந்த நாவலந்தீவுதான் சமஸ்கிருதத்தில் ஜம்பு தீவு

எப்படியோ இந்நாட்டு சுதந்திர பிரகடன உரையினை வாசித்த மாவீரர்கள் முதலில் அவர்கள்தான், இந்திய வரலாற்றில் அவர்கள்தான்.

அதன் பின்பு 1947ல் நேருதான் வாசித்தார்.

பின் ஹைதரும் திப்புவும் கொல்லபட, மருதுபாண்டியருடன் இருந்த பலர் உள்நாட்டு காட்டிகொடுப்பால் கொல்லபட, குறிப்பாக இந்த புதுகோட்டை மன்னன் தொண்டைமான் போன்றோரின் சதிசெயல்களால் மருதுபாண்டியர் தோற்றனர்

பின்னும் அகபடவில்லை, ஆனால் கோவில்களுக்கு அள்ளி கொடுத்தவர்கள் மருதுபாண்டியர். அதுவும் காளையார் கோவில் கோபுரம் அவர்களால் கட்டபட்டது.

மருதுபாண்டியரை அவர்களால் பிடிக்க முடியவில்லை. சில விஷேஷ ஆயுதங்களில் அவர்கள் பாதுகாப்பாய் இருந்தனர், குறிப்பாக வளறி (வளை எறி) போன்ற ஆயுதம் அது

தாக்கிவிட்டு திரும்ப கைக்கே வரும் பூமராங் வகையது, தமிழரின் சிறப்பான ஆயுதம். மருதிருவர் அதில் கைதேர்ந்திருந்தனர்

ஆங்கிலேயர் அதில் தடுமாறினர், அப்படியான பல வகை சாகசங்களால் வெள்ளையரை அடித்திருந்ததால் அவர்களுக்கு அச்சம் இருந்தது.

மருதுபாண்டியர் இருக்கும் வரை தென்னகம் தங்களுக்கு இல்லை என்பதில் அஞ்சி இருந்தனர் ஆங்கிலேயர்

அதனால் மருதுகளின் பலவீனத்தில் அடித்தனர், மருதிருவரின் பலஹீனம் பக்தி

மருதுபாண்டியர் சரணடையாவிட்டால் காளையார் கோவில் கோபுரத்தை தகர்ப்போம் என் அறிக்கையிட்டனர் வெள்ளையர்.

அது பொறுக்காது, தம்மை விட ஆலயமே முக்கியம் என சரண்டைந்து, தங்கள் உடலை அந்த ஆலயத்திற்கு முன்பே புதைக்குமாறும், இதுகாரும் ஆலயங்களுக்கு தாங்கள் செய்த உதவிகள் தொடர்ந்து நடக்குமாறும் வெள்ளையனிடம் உறுதிபெற்றுகொண்டே தூக்கு மேடை ஏறினர் அவர்கள்

“தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள்” என்ற பசும்பொன் தேவரின் புகழ்மிக்க வாசகம் இவர்களிடமிருந்தே பிறந்தது.

மருது சகோதர்கள் முடிவுக்கு பின் வெள்ளையன் செய்த காரியம் வளறி எனும் ஆயுத தடை. அது செய்யவும் கற்பிக்கவும் தடை விதிக்கபட்டது

இன்று வழக்கிலே இல்லாமல் ஒழிக்கபட்டது, வெள்ளையனின் சதி அப்படி இருந்திருக்கின்றது.

(இம்மாதிரியான தமிழக அடையாளம் எல்லாம் மீட்டெடுக்கபட வேண்டும், ஆனால் கீழடியிலே நம்மால் ஒன்றும் செய்யமுடியாத பொழுது இதெல்லாம் எப்படி)

இன்று அந்த மாவீரர்கள் தூக்கிலடபட்ட நாள், இந்த தேதியில் ரகசியமாக கொல்லபட்டாலும், மக்களுக்கு அஞ்சி அவர்களின் உடலை வெள்ளையன் உடனே கொடுக்கவில்லை

27ம் தேதிதான் அவர்கள் உடல் காளையார் கோவில் எதிரில் புதைக்கபட்டது

மண்ணும், மதமும் உயிரைவிட மேலானது என வாழ்ந்த அந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது நம் கடமை

இத்தேசம் கண்ட மாபெரும் வீரர்களில் என்றுமே மருதுபாண்டியருக்கு உயர்ந்த இடம் உண்டு, தமிழரின் வீரம் அது

அந்த வீர வேங்கைகளுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

பெரிய மருதுவின் மகனை வெள்ளையர் பினாங்கு தீவிற்கு நாடு கடத்தினர், மலேசிய பினாங்கு நகருக்கு செல்லும் பொழுதெல்லாம் மருதுபாண்டியர் நினைவும் வரும்.

மறக்க முடியா வீரமும் தியாகமும் அவர்களுடையது.

அவர்கள் உடல் கொல்லபட்டிருக்கலாம்,

ஆனால் இந்நாட்டு விடுதலையிலும் அவர்கள் அள்ளிகொடுத்த ஆலயங்களும் அவர்கள் செய்வித்த தேர்களும், அவர்களால் கட்டி காக்கபட்ட காளையார் கோவில் கோபுரமும் உள்ளவரை அவர்கள் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்.

[ October 24, 2018 ]

Image may contain: one or more people