சார்லஸ் சாப்ளின்.

Image may contain: 1 person, standing, shoes and suit

ஆயிரம் புத்தகங்களை எழுதுவதை விட பல்லாயிரம் வார்த்தைளைவிட வலிமையானதும் நிலைத்து நிற்பதும் காட்சி படுத்துதல் எனும் அழுத்தம்.

அது கொடுக்கும் அழுத்தத்தை வேறு எதுவாலும் கொடுக்க முடியாது

அந்த மனிதன் இடத்தில் யார் இருந்தாலும் ஒன்று சமுக விரோதி ஆகியிருப்பார்கள் இல்லை அழிந்து போயிருப்பார்கள்

ஆனால் வலி எல்லாம் தாங்கி வளர்ந்து நின்றான் அவன். வளர்ச்சி என்றால் அபார வளர்ச்சி, இன்றும் மனிததன்மையுள்ள மானிடநேயமிக்க கலைஞனுக்கு அவனே எடுத்துகாட்டு. ஆயிரம் எழுத்தாளர்கள் எழுதவேண்டிய காரியத்தை , தொழிலாளி வலியினை , ஏழையின் கதறலை தன் ஒற்றை காட்சியில் நடித்தவன்

சார்லஸ் சாப்ளின், கடந்த நூற்றாண்டின் ஒப்பற்ற கலைஞன்

அவன் பிறக்கும்பொழுது அக்குடும்பம் நன்றாக இருந்திருக்கின்றது, அவனுக்கு 4 வயது ஆனபொழுது தடுமாறிற்று

அவனுக்கு விவரம் தெரிந்தபொழுது அவன் கண்டது மனநோயாளி தாய், குடிகார தந்தை, அவர்களிடையே தவித்த சகோதரி

ஒரு சிறுவனாய் அவன் என்னபாடு பட்டிருப்பான்? அவனுக்கு வீடுமில்லை, அரவணைப்புமில்லை. குடிகார தந்தையின் அட்டகாசம் பொறுக்கமுடியாமல் பல வீடுகள் மாற அவனோ தெருக்களிலும் பூங்காக்களில் உறங்கினான்

அவன் வறுமை தவிர ஏழ்மை தவிர ஏதும் படிக்கவில்லை. அவனின் மனம் உண்மையில் சந்தோஷத்திற்கு ஏங்கியது, தன் வீட்டில் கிடைக்காத மகிழ்ச்சியினை அவன் தெருக்களில் தேடினான், அவனின் கோணங்கி நடனத்திற்கு காசு கிடைத்தது

தெருவில்தான் ஆடினான், இடையில் கவனமாக விழும் காசுகளை பொறுக்கிவிட்டு மறுபடியும் ஆடினான்

அதில்தான் மனநோயாளியான தாய்க்கு சோறு ஊட்டினான், அவனின் பரிதாபம் கண்ட சிலர் அன்னையினை மனநோய் சிகிச்சை மையத்திற்கும் அவனை அனாதை இல்லத்திற்கும் அனுப்பினர்

அங்கிருந்து அடிக்கடி காணாமல் போன அவன் நாடக கொட்டைகளில் ஆடினான், ஏழைகளோடு தெருவில் உறங்கினான், அடித்தள மக்களின் வலி அவனுக்கு அங்குதான் புரிந்தது

ஓரளவு காமெடி நடிகன் என அறியபட்ட காலத்தில் அமெரிக்கா சென்றான், அமெரிக்கா அவனை மிகபெரும் நடிகனாக்கியது, அவனின் படங்கள் ஓட தொடங்கின சொந்தமாக ஸ்டூடியோ கட்டுமளவு வளர்ந்தார்

அது என்னமோ தெரியவில்லை தாயின் பாசம் கிடைக்காமல் போனது போலவே மனைவியின் பாசமும் அவனுக்கு கிடைக்கவில்லை, அவள் பிரிந்து சென்றாள்

பொதுவாக பெரும் அறிவாளிகளும் சராசரி பெண்களும் சேர்ந்து வாழமுடியாது என்பது விஞ்ஞானிகள், மேதைகள் வாழ்வில் நடந்த உண்மைகள்

மிகசிறிய வயதிலே சோகத்தை தூக்கிபோட்டு வளர்ந்த சாப்பிளினுக்கு அந்த சோகமும் பெரிதாக தெரியவில்லை தாங்கினார்

எந்த லண்டனின் பிச்சைகாரனாக அலைந்தாரோ அதே லண்டனில் மிகபிரபல நடிகராக வந்து இறங்கினார், உலகம் கொண்டாடியது

ஆனால் அவரின் அன்னைக்கு அதை புரிந்துகொள்ள முடியவில்லை, அம்மா நான் மிகபெரும் நடிகனாகிவிட்டேன் என அவர் சொல்லும்பொழுது அந்த தாயால் புரிந்துகொள்ளமுடியவில்லை

கண்ணீர் விட்டு அழுதார் சாப்ளின், அவரின் விதி அப்படி இருந்திருக்கின்றது

அதன்பின் சாப்ளின் விஸ்வரூபமெடுத்தார், தொழிலாளரின் வலிகளை அவர் அளவு சொன்னது யாருமில்லை,ஹாலிவுட் சினிமாக்கள் மிட்ட மிராசுகள் கதைகளை காட்டிகொண்டிருந்த நேரத்தில் தெருவில் அலையும் தொழிலாளி கதையினை சொன்னது சாப்ளின்

எதற்கும் அவர் அஞ்சவில்லை, அவருக்கு பொதுவுடமை மீது ஒரு அபிமானம் இருந்தது

ஹிட்லரை அன்றைய தேதியில் மிக தைரியமாக விமர்சித்து நடித்தவர் சாப்ளின். அவர் போலவே வேடமிட்டு அவர் நடித்த தி டிக்டேட்டர் படம் ஹிட்லரை படு மட்டமாக கலாய்த்திருந்தது

அன்றைய நாளில் அந்த தைரியம் எவனுக்குமில்லை. உலகமெல்லாம் போர் சூழல் என்றாலும் சாப்ளினின் படங்கள் வந்துகொண்டே இருந்தன‌

ஹிட்லருக்கு பின் முதலாளித்துவத்தை சாடி படமெடுத்தார், பேசும் படங்கள் வந்தாலும் பேசா வேடங்களில் பின்னி எடுத்தார்

அமெரிக்க கொள்கைகளுக்கு எதிரான படங்கள் என்பதால் அவர் அமெரிக்கா வர தடை விதித்தது அமெரிக்கா, மனிதர் அஞ்சவில்லை அவர் போக்கில் தன் படங்களை எடுத்தார்

சாப்ளினின் பெருந்தன்மையும், இம்மானிடத்தையும் ஏழை தொழிலாரை அவர் நேசித்த விதமும் . மக்களை சிரிக்க வைத்தே சிந்தனையில் அழவைத்த விதமும் உலகெல்லாம் அவருக்கு பெருமதிப்பு ஈட்டிகொடுத்தன‌

அமெரிக்கா அவருக்கு சிறப்பு ஆஸ்கர் கொடுத்து அழைத்தது

நான் புரட்சியாளன் இல்லை, வெறும் கலைஞன். கலையில் கருத்து சொன்னேன். இனி ஏசுவே அழைத்தாலும் அமெரிக்கா போகமாட்டேன் என சொல்லிவிட்டு சுவிட்சர்லாந்திலே தங்கிவிட்டார்

சாப்ளினின் பாதிப்பு உலகெல்லாம் எல்லா திரையுலகிலும் இருந்தது

இங்கும் நாகேஷின் எதிர்நீச்சல் முதல் சர்வர் சுந்தரம் வரை சாப்ளினின் பாதிப்பில் படங்கள் வந்தன. சந்திரபாபு முதல் கமலஹாசன் வரை அவரைபோல் முயற்சித்தனர்.

ஆனால் ஒரு நடிகனும் சாப்ளினுக்கு பின் ஏன் அந்த இடத்தை எட்டமுடியவில்லை என்றால் சிறுவயதில் இருந்தே சாப்ளின் பெற்ற வலியும், உருண்ட புழுதியும் அப்படி.

எத்தனையோ சோகங்களை தன்னுள் கொண்ட அந்த சாப்ளின் எல்லோரையும் சிரிக்க வைத்து கண்ணீரை தன்னோடு வைத்துகொண்டவர்.

“நான் அழுவதாக இருந்தால் மழையில்தான் அழுவேன், என் கண்ணீர் யாருக்கும் தெரிய கூடாது” என சொன்னவர் சாப்ளின், அவர் வாழ்வில் அப்படித்தான் அழுதார்.

அவர் மட்டும் சினிமாவில் அனுசரித்து போயிருந்தால் அவருக்கு இருந்த வரவேற்புக்கு பெரும் ஹாலிவுட் நிறுவணங்களை உருவாக்கி இருக்கலாம், சினிமா உலகை ஆட்டியிருக்கலாம்

ஆனால் கலைஞனுக்கு மக்கள் நலனும், சமூக பொறுப்பும் மகா முக்கியம் என நின்றிருந்தவர் அவர்

“கலைஞன் என்பவன் மக்களின் பணத்தில் நடிப்பவன், மக்களின் மனவோட்டத்தையும் அவர்களின் துயரத்தையும் தன் கலையில் எடுத்து சொல்லா எந்த கலைஞனும் பெரும் பாவம் செய்கின்றான்..” என்ற அந்த பெரும் கலைஞனின் வார்த்தைகள் சாகா வரம் பெற்றவை.

இன்று அந்த மாபெரும் கலைஞனுக்கு பிறந்தநாள், அவனுக்கு ஆழ்ந்த அஞ்சலி

உலகம் அவனை காமெடியனாக பார்க்கலாம், சிலர் சிந்தனையாளனாக பார்க்கலாம், நாம் அவனை தீர்க்கதரியாகவும், மாபெரும் மகானாகவும், காலம் காலத்துக்கான மானிட சிந்தனையினை சொன்ன சித்தனாகவும் பார்க்கின்றோம்

ஆம் ஹிட்லர் போர்வெறியுடன் அலைந்த காலத்தில் அவன் வேடமிட்டு சாப்ளின் பேசிய வார்த்தைகள் அப்படி

“நாம் போரிடுவோம், ஆனால் நாம் நடத்துவது வறுமைக்கு எதிரான போர், நாம் நடத்துவது நோய்களுக்கு எதிரான போர், நாம் நடத்துவது மானிடம் வாழ்வதற்கான போர்

நமக்கு தேவை துப்பாக்கி அல்ல, பறக்கும் குண்டுகள் அல்ல, போர்விமானமும் பீரங்கியும், பெரும் வெடிமருந்தும் அல்ல‌

நமக்கு தேவை மானிட கண்ணீரை துடைக்கும் கரங்கள், நமக்கு தேவை மக்களுக்கு தேவையான மருந்துகள், நமக்கு தேவை மானிடருக்கான உடையும் உணவும்

நமக்கு தேவையானது மானிடம் வாழ உழைக்கும் படை, உலகில் எந்த மூலையில் எந்த மனிதன் நோயில் தவித்தாலும் நாம் மருந்து அனுப்ப வேண்டும் , எந்த மானிடன் அழுதாலும் நாம் துடைத்து ஆறுதல் சொல்ல வேண்டும்

பசியென உலகில் எந்த மனிதன் அழுதாலும் ஓடி சென்று ஊட்ட வேண்டும். நம் படைகளும் எந்திரங்களும் அதற்குத்தான் பயன்பட வேண்டும், நம் முழு நோக்கமும் அதற்காகத்தான் உழைப்பதில் இருக்க வேண்டும்

எமக்கு யாரையும் ஆளும் எண்ணமில்லை, யாரையும் அடிமைபடுத்தும் எண்ணமுமில்லை மதம் பரப்பும் நோக்கமுமில்லை. யாரும் ஆளவேண்டாம் மானிடம் வாழட்டும், யாரும் அடிமையாக வேண்டாம் எல்லோரும் வாழட்டும்

மதங்கள் வேண்டாம் மானிடம் வாழட்டும், குழந்தைகள் சிரிக்கட்டும் அது ஆயிரம் மதங்களுக்கு சமம். அச்சமினிறி வலியின்றி காயமின்றி பசியின்றி நோயின்றி மானிடம் வாழட்டும்

அணுகுண்டுகளை கடலில் எறிவோம், பீரங்கி முனையில் குழந்தைக்கு ஊஞ்சல் கட்டுவோம், விமானங்கள் உணவுகளையும் அன்பையும் சுமக்கட்டும், கப்பல்கள் என்பது பசியாற்றும் வாகனமாகட்டும், துப்பாக்கி என்பதை உருக்கி விவசாய கருவி செய்வோம்

நோயினை ஒழிக்கும் மருத்துவர் நமக்கு தேவையே தவிர, போர் வெறி விஞ்ஞானிகள் அல்ல. அந்த ஆய்வுகளும் அல்ல‌

பணம் மக்களின் பசியும் நோயும் போக்கும் ஆயுதமாக வேண்டும் தவிர, ஆசைகாட்டி பயமுறுத்தும் எஜமானின் வாள் போல ஆகிவிட கூடாது

சிரிப்போம் சிரிக்க வைப்போம், உழைப்போம் உழைக்க வைப்போம் , வாழ்வோம் வாழவைப்போம்”

ஆம் அவன் மகான், மாபெரும் மகான்

அமெரிக்கா தன் ஏதேச்சதிர்காரத்தால் உலகை ஆயுதங்களால் முற்றுகையிட்ட பொழுது, ஹிட்லர் தன் பாசிச நாஜி சிந்தனையால் உலகை ஆயுத முனையில் ஆட்டியபொழுது அவன் சொன்ன வார்த்தைகள் இவை

கவனியுங்கள், இன்று அதே ஜெர்மனுக்கும் அமெரிக்காவுக்கும் அவன் சொன்ன வார்த்தைகள் அப்படியே பொருந்துகின்றன, 75 ஆண்டுகளுக்கு முன் அவன் சொன்ன வார்த்தைகளின் அழுத்தமான உண்மையினை அத்தேசங்கள் உணர்ந்து கொண்டிருக்கின்றன‌

நிச்சயம் அவன் ஞானி, அவன் சித்தன். தன் கோமாளிதனத்தால் மக்களை கவர்ந்து அவர்களின் பார்வையினை பெற்று பெரும் சிந்தனைகளை அவர்களுக்குள் விதைத்து சென்ற பெரும் மானிட நேய மகான் அவன்

தன் கோணங்கி சேட்டை ஒன்றுதான் தன் பலம் என அறிந்து அந்த பலத்தால் உச்சம் பெற்று, உச்ச நிலையில் இருந்து பெரும் மானிடநேயம் பேசிய அவன் தன் கர்மத்தை மிக நன்றாக உறுதியாக செய்த கர்மயோகி..

அவன் வாழும்பொழுது அவனை கோமாளி என விரட்டிய அமெரிக்காவும் ஜெர்மனியும் இன்று அவன் வார்த்தைகளின் வீரியத்தையும் தீர்க்கதரிசனத்தையும் உணர்ந்து மனதுக்குள் அழுகின்றன, கொரொனா காலத்தில் அவன் வார்த்தைகள் மறுபடியும் விஸ்வரூபமெடுகின்றன, அதில் அந்த சித்தன் சிரிக்கின்றான்

ரூஸ்வெல்ட் பூமியும், ஹிட்லரின் பூமியும், ராணி விக்டோரியாவின் அரண்மனையும் அவனை குனிந்து வணங்கிகொண்டிருக்கின்றன..

ஆம் பணமும் ஆயுதமும் அவர்களை காக்கவில்லை காக்க முடியவில்லை, சக மனிதர்களின் அன்பும் உதவியும் அக்கறையுமே அமெரிக்காவுக்கும் ஜெர்மனுக்கும் பிரிட்டனுக்கும் இன்று ஆறுதலாய் இருக்கின்றன‌..

பல எழுத்தாளார்களை வாசிக்கின்றேன்.

பல எழுத்தாளார்களை வாசிக்கின்றேன், சிலர் முழுநேர எழுத்தாளர்கள் அது கடலில் மழை பெய்வதற்கு சமம், பாக்கெட் நாவல்கள் போன்றவை அந்த ரகம், ரயிலில் வரும் குடிநீர் பாட்டில் போன்றவை அவை

அவர்களால் சமூகத்துக்கு ஆகபோவது ஒன்றுமில்லை, எழுத்து என்பது வரலாற்றை, சமூகத்தை,அரசியலை அல்லது விஞ்ஞானம் போன்ற பயனுள்ள விஷயத்தை சொல்லவேண்டும், குறைந்தபட்சம் சிந்திக்க அல்லது சிரிக்கவாவது வைக்க வேண்டும், அப்படி எழுதியவர்களே வரலாற்றில் நின்றார்கள்

அரசியலுக்காக எழுதாமல் எழுத்தால் தனித்து நின்றவர் சிலர் அதில் சுஜாதாவும் , ஜெயகாந்தனும் தனித்து நின்றார்கள்

சோ ராமசாமி அரசியலை விமர்சித்தாரே தவிர அரசியல்வாதி ஆனது இல்லை.

கண்ணதாசன் எடுப்பார் கைகளில் பிள்ளை, மனிதர் அருமையான எழுத்தாளன் , திராவிட இயககத்தில் இருந்ததற்காக அவன் எழுதிய பாவமன்னிப்பு “அர்த்தமுள்ள இந்துமதம்” எந்நாளும் இந்துக்கள் வீட்டில் இருக்க வேண்டியது

ஆனால் இந்துமதத்தோடு நின்றிருப்பானா என்றால் இல்லை, காலம் இருந்தால் அவன் கிறிஸ்தவனாக மாறியிருக்கும் வாய்ப்பும் உண்டு, அதனால்தான் காலம் அவனுக்கு கணக்கை முடித்ததோ என்னமோ?

மிக சிறந்த எழுத்தாளரான பாலகுமாரன் பின் முழு ஆன்மீகம் மற்றும் வரலாற்று எழுத்தாளரானார், பிராமணரான அவருக்கு சுஜாதாவுக்கு இருந்த அதே நெருக்கடி இருந்தது

ஆனால் என் வழி ஆன்மீகமும் அன்பும் என மிக தெளிவாக இருந்தார் அவர்

மிக பெரிய சித்தனின வாரிசு நான் என அவர் எழுத்தாளன் வரிசையில் இருந்து ஆன்மீக சித்தர் வரிசைக்கு தாவினார், பின்னர் அவர் கொடுத்ததெல்லாம் அவர் மூலம் பழைய ரிஷிகள் கொடுத்த எழுத்து, அவருடையது அல்லவே அல்ல..

இந்த மூவரில் சுஜாதா பெரும் அறிவாளி சந்தேகமில்லை, ஆனால் பல விஷயங்களை பட்டும் படாமல் கடந்து செல்வார். திராவிட கொள்கையினை தொட்டு பார்ப்பதோ இல்லை கடவுள் உண்டு என கூட தெளிவாக சொல்வதோ அவருக்கு அச்சமான விஷயம்

தனிபட்ட வகையில் அவர் கடும் பக்திமான், ஆனால் தன் எழுத்தில் அதை சொல்ல தயங்கினார், ஒருமாதிரி பட்டும் படாமல் எழுதினார். நமக்கேன் வம்பு என அவர் பல விஷயங்களை தவிர்த்திருக்கலாம்

அல்லது பிராமணனாக இருந்து பிராமண எதிர்ப்பினை எதிர்கொண்டால் சாதி பெருமையாகிவிடும் என அஞ்சியிருக்கலாம்.

ஆனால் கண்ணுக்கு தெரியாத செருப்பு ஒன்றால் முற்போக்கு பெரியாரிஸ்ட் பெண் உரிமைக்காரர்களை அடித்திருந்தார், ஆம் கடைசி வரை மனைவி பெயரிலே எழுதி அவர் பெயராலே அறியவும் பட்டார்

அந்த பெண்ணுரிமையினை அவரை தவிர எவனும் கொடுக்கவில்லை

பாலகுமாரன் முழு சித்தராகிவிட்ட மனநிலையில் இருந்தார், சிவம் தவிர ஏதும் சிந்திக்கவில்லை

ஜெயகாந்தன் பெரும் அடையாளம், கடைசி வரை போலி திராவிட கும்பலை அவர் கிழித்தது போல் இன்னொருவன் கிழிக்க முடியாது, ஈரோட்டு ராம்சாமி இருந்த மேடையிலே “பிராமண எதிர்ப்பு என்பது கடைந்தெடுத்த அயோக்கியதனம், அதை பேசி அரசியல் செய்பவன் நல்ல தலைவனாக சிந்தனையாளானாக இருக்க முடியாது” என பேசிய அந்த தைரியம் வாழ்த்துகுரியது

அவரின் எழுத்து ஒவ்வொன்றாய் தேடி படிக்கின்றேன், அவனே உண்மையான கம்யூனிஸ்ட், அவனே உண்மையான தேசியவாதி

அவன் கம்யூனிஸ்ட் சந்தேகமில்லை, ஆனால் பாரதியினை அவன் கொண்டாடியதை போல் இன்னொருவன் கொண்டாட முடியாது, தேசபக்தியினை அவன் காட்டிய அளவு இன்னொருவன் காட்டியிருக்க முடியாது

சமஸ்கிருத அவசியத்தை, இந்து மதத்தின் அடிநாத தாத்பரியத்தை அவன் பேசியது போல் இன்னொருவன் பேசிவிட முடியாது

ஆனால் ஜெயகாந்தன் பிராமணன் இல்லை அவன் அளவு திராவிட இம்சையின் போலி பிராமண எதிர்ப்பை கிழித்தவன் எவனுமில்லை

ஜெயகாந்தனிடம் உண்மையான கம்யூனிசம் இருந்தது, அது சோவியத் யூனியன் வரலாற்றை வாசிக்க சொன்னது, அந்த வாசிப்பில் கிறிஸ்துவ மிஷனரிகள் பின்னால் இருக்கும் வியாபாரம் புரிந்தது

அதில்தான் தமிழக மிஷனரிகள் இந்த திராவிட இம்சைகளை முன்னுறுத்தி இங்கு செய்யும் பிராமண எதிர்ப்பு, இதுமத எதிர்ப்பினை மிக சரியாக உணார்ந்தான், அதை மிக மிக தைரியமாகவும் எழுதினான்

அந்த ஜெயகாந்தன் பிராமணன் இல்லை

சுஜாதா பிராமணனாய் பிறந்ததும், ஜெயகாந்தன் பிராமணன் இல்லாமல் போனதும் தமிழக அரசியலின் பாவங்கள் எனினும் ஜெயகாந்தன் அளவு உண்மையினை எழுதியவன் எவனுமில்லை

அந்த எழுத்தாளன் காலம் கொடுத்த கொடை, இன்று இருந்தால் அவன் சங்கி, அட அவன் இல்லாவிட்டாலும் என்றோ அவன் எழுதிய எழுத்து “சங்கி” என்பதின் உண்மை பொருளை சொல்லி கொண்டே இருக்கும்.

எழுத்து ஒரு வரம், அது சுஜாதாவுக்கும் ஜெயகாந்தனுக்கும் நிரம்ப கிடைத்தது

ஆனால் சுஜாதா சமரசம் செய்து கொண்டார், சினிமா இலக்கியம் பேட்டி என எல்லா இடங்களிலும் சமரசம் செய்தார், ஆனால் ஜெயகாந்தன் கடைசி வரை சமரசமே செய்யவில்லை

இதனால் அவனால் அரசியல் முதல் சினிமா வரை வெல்லமுடியவில்லை, அதன் பொருள் அவன் தன் கொள்கையில் விட்டு கொடுக்காமல் வாழ்ந்திருக்கின்றான் என்பதே அன்றி வேறல்ல‌

தமிழகத்தில் நாம் அறிந்த எழுத்தாளரில் பாரதிக்கு பின் ஒரு தேச அக்கறை இருந்தான் என்றால் அது ஜெயகாந்தன் ஒருவனே, பாரதிதாசன் எனும் பட்டம் அவன் ஒருவனுக்கே பொருத்தமானது

இதில் ஒரு வேதனை எக்காலமும் உண்டு

உண்மையாய் எழுதி அதில் போலி பிராமண எதிர்ப்பினை உடைத்து, இந்துமத அடிப்படை நம்பிக்கைகளை கடைசி வரை போராடி காத்தவன் ஜெயகாந்தன்

ஆனால் அவனின் கடைசி அஞ்சலிலிக்கு வந்தது 4 பேர், அதில் பிராமணரும் இல்லை ஹிந்து அமைப்புகளும் இல்லை

பாரதியினை தலைவனாக குருவாக கொண்டவனின் கடைசி காலம் எப்படி முடிந்ததோ அப்படி அவன் சீடனான ஜெயகாந்தனுக்கும் முடிந்தது,

தமிழக சாபத்தின் வலிமை அப்படி

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலிகள்!

ஆட ஒரு காலம் உண்டு என்றால் அடங்கவும் ஒரு காலம் உண்டு , சிரிக்க ஒரு காலம் உண்டென்றால் அழவும் ஒரு காலம் உண்டு,

அழ ஒரு காலம் உண்டென்றால் சிரிக்க ஒரு காலம் உண்டு

ஆம் ஆடிய நாடுககளெல்லாம் அடங்கி கிடக்கின்றது, சகல நாடுகளின் நிம்மதியினை கெடுத்த பூமிகள் நிம்மதியின்றி தவிக்கின்றன, இருந்த இடத்தில் இருந்து கொண்டு உலகின் எந்த மூலையிலும் ரத்தம் சிந்த வைத்த , அழிவுகளை கொடுத்த மண், காரணம் தெரியா சிக்கலில் கலங்கி நிற்கின்றது

அமெரிக்க செவ்விந்தியரில் தொடங்கி..சிலுவைபபோர்… நம்ம ஊர் கட்டபொம்மன், அரேபிய சதாம், கடாபி வரை, ஆப்கன் சிரியா வரை.. வேண்டாம் சில விஷயங்களை சொல்ல இது நேரமில்லை

இது அரணைத்து நாமும் அழுது ஆறுதல் சொல்ல வேண்டிய காலம்

காலதேவன் மெல்ல நகைத்துவிட்டு கடக்கின்றான், தர்மதேவதை கண்ணீர் விட்டபடியே கடக்கின்றாள், அவற்றின் காரணத்தின் ஒரு பகுதி அவளுக்கு புரிகின்றது, பரம்பொருளின் ஆலயங்களும் பூமியில் அடைத்து கிடக்கின்றது, எல்லா மதத்து தர்மசாலைகளும் மூடிகிடக்கின்றன‌

பூமிக்கு இது புதிது, அதன் 4 யுகங்களிலும் இது புதிது. எவ்வளவோ அழிவுகளிலும் நெருக்கடிகளிலும் ஏதாவது ஒரு மத ஆலயம் திறந்தே இருக்கும், எல்லா ஆலயங்களும் பூட்டபட்டு செயலற்று கிடந்தது ஊழிகாலத்தில் மட்டுமே.

ஏன் மானிட குலத்தின் முதன்முறையாக பூமியின் எல்லா ஆலயங்களும் பூட்டி கிடக்கின்றன, பரம்பொருள் சொல்லவரும் எச்சரிக்கை என்ன? செய்தி என்ன?

காரியமின்றி காரணங்கள் வாரா, அவன் அனுமதியின்றி இவை எல்லாம் நடக்காது

ஆம், பரம்பொருள் தொலைந்துபோன எதையோ இங்கு தேட சொல்கின்றான், அது தொலைந்து கிடப்பது மானிட மனதின் அடியாளத்தில் என்பதால் தனித்திருந்து சிந்திக்க சொல்கின்றான்

மானிடன் எப்பொழுது தனித்து அடங்குவான்? மிகபெரும் சீற்றங்கள் நடக்கும் பொழுது அஞ்சி ஒடுங்கி வளையில் எலிபோல் பதைத்து தனித்திருப்பான்

அப்படி இப்பொழுது அவன் தனித்திருக்கின்றான், அடக்கி ஒடுக்கி காலதேவன் அவனை அமரவைத்திருகின்றான்

இவ்வளவு விஞ்ஞான வசதிகளையும் டிவி இணையம் மீடியா என வளரவிட்டு ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஏன் ஒவ்வொரு கையிலும் புகுத்தியிருக்கின்றானே காலதேவன் எதற்காக?

ஆம் தனித்த நிலையிலும் அவன் சிந்திக்க வேண்டும், தொலைந்து போனதை தேடவேண்டும் என்பதற்காக‌

தொலைந்துவிட்ட விஷயம் எது தெரியுமா? சக மனிதனுக்கான கண்ணீர், சக மனிதன் சாகும் பொழுது அவனுக்கான துக்கத்துக்கும் அவனின் ஆத்ம சாந்திக்கும் பிரார்த்திப்பது.

மானிட குலத்தை நெல் வயலில் கொத்தாக அறுப்பது போல் ஐரோப்பாவில் அறுத்தெடுக்கின்றான் எமன், துள்ள துடிக்க பிடிபடும் மீன் கூட்டம் போல வலை வீசி அள்ளுகின்றான் அவன்

அவர்கள் யாராகவும் இருக்கட்டும் எத்தேசம் எந்த இனம் மதம் மொழியாகவும் இருக்கட்டும், ஆனால் மனிதர்கள் கடவுளிடம் செல்ல வேண்டிய ஆன்மாவினை சுமக்கும் மானிடர்கள்

வாழைதோப்பில் கூட ஒருவாழை சரியும்பொழுது இன்னொரு வாழை தாங்கும், பறவைகளில் கூட ஒரு பறவை இறந்தால் கூட்டமே கத்தும்

ஒரு ஆடு செத்துகிடந்தால் மொத்த மந்தையுமே அலறும்

நாமோ மானிடர்கள், ஆனால் மனிதத்தை தொலைத்துவிட்ட மானிடர்கள். தொழில் பணம் அந்தஸ்து கவுரவம் என போலி முகமூடிகள் ஏராளம் போட்டு பணத்தை தேடி மனிதம் தொலைத்த மானிடர்கள்

இயேசுவின் உடலில் கடைசி சொட்டு இரத்தம் இருக்கின்றதா என சோதித்த அந்த காவலனை போல மனிதனின் உள்ளத்தில் கடைசி சொட்டு தர்மம் இருக்கின்றதா என சோதிக்கின்றது காலம்

எல்லா நாட்டு மக்களின் நிலையினையும் ஒரு கண்ணாடியில் காட்டும் விஞ்ஞான வித்தையினை அது கொடுத்த காரணமும் இதுதான்

எக்காலமும் எல்லா நாட்டிலும் நோய்களும் சாவும் இருப்பதுதான், ஆனால் அறிந்து கொள்ளவோ தெரிந்து கொள்ளவோ வாய்பில்லா காலம் அவை

காரணம் ஒவ்வொரு மனிதனிடமும் அவன் ஆத்மாவில் தெய்வம் வாழ்ந்தது, அவன் உணரவோ அழவோ அவசியமில்லை. மனிதம் வாழ்ந்தது

ஆனால் இன்று சகமனிதனை கூட ஏன் பெற்றோர் உற்றாரை கூட மிதித்துதள்ளும் அளவு நோயுற்று போன மானிட மனத்தை சோதிக்க உலகின் மொத்த சோகத்தையும் காட்டுகின்றான் கடவுள்

கொரோனா செய்தியும் அதன் கொடுமையினையும் ஒவ்வொரு மனிதன் பார்க்கும் பொழுதும் ராமாயணத்து கடைசி காட்சி நினைவுக்கு வரவேண்டும்

அக்காட்சியில் “இன்று போய் நாளைவா” என ராவணனுக்கு சொன்னான் ராமன், ஏன்?

இந்த இரவுக்குள்ளாவது அவன் திருந்திவிடமாட்டானா? தர்மத்தை உணரமாட்டானா என கடைசி வாய்ப்பை கொடுத்தான் ராமன்

களத்தில் வீழ்ந்து கிடந்தான் துரியன் ஆனால் சாகவில்லை, கண்ணா 14 ஆண்டுகள் கொடுத்தாய் இன்னும் ஏன் அவனை கொல்லாமல் விட்டாய் என கேட்கின்றான் அர்ஜூனன்

“அர்ஜூனா, கடைசி நொடியிலாவது அவன் திருந்தி தர்மத்தை உணரமாட்டானா என ஏங்குகின்றேன்” என்றான் கண்ணன்

ஆம், கொரோனா இன்று நமக்க்கு இல்லாவிட்டாலும் நாளை வரலாம், இன்று விழாவிட்டாலும் இன்னொரு நாள் விழலாம்

விழவே மாட்டேன் என மார்தட்டுபவன் எவன்?

டிரம்பும் போரிஸ் ஜாண்சணுமே சிக்கும் பொழுது நாமெல்லாம் எம்மாத்திரம்? சீனாவில் இருந்து நம் வீட்டு முனை வரை வந்துவிட்ட கொரோனாவுக்கு நம்மேல் பாய எவ்வளவு நாழிகையாகும்?

பலத்த சிந்தனை ஒவ்வொருவர் மனதிலும் ஏறவேண்டிய நேரமிது, ஆலயங்கள் பூட்டபட்டது ஊழிகாலத்தின் எச்சரிக்கை, அதை தவிர்ப்பது எப்படி?

ஒரு நிமிடம் சிந்தியுங்கள், பஞ்ச பூதங்களின் ஒத்துழைப்பில் நாமெல்லாம் இன்னும் பிழைக்கின்றோம்

ஆம் காற்றிலும், நீரிலும் , நிலத்திலும் கொரோனா பரவும் என நிலைவந்தால் தாங்குமா? இல்லை அப்படி ஒரு நோய்வராது என சொல்லமுடியுமா?

அப்படி ஒரு நிலைவந்தால் ஒரு நொடி மானிட இனம் வாழுமா? வாழா

தர்மத்தை மீட்டெடுக்க வேண்டிய நேரமிது, ஊழியினை வெல்வதும் விரட்டுவதும் நம் கையிலே இருக்கின்றது

தர்மம் இவ்வீட்டில் வாழ்கின்றதா? என ஒவ்வொரு வீடாக தர்ம தேவதை தேடி அலையும் நேரமிது, காலதேவன் அடக்கி வைத்தும் தர்மமில்லை எனில் அது வாழவில்லையெனில் அவள் மனமுடைவாள்

தர்மம் அழுதால் தாரணி அழியும்

அதை மீட்டெடுக்க நம்மால் முடிந்ததை எல்லாம் செய்வோம்

எது தர்மம்? சக மனிதனுக்கு உதவுவதும் அவனை காப்பதும் தர்மம், விதி முடிந்தவனுக்கு அழுது அவன் ஆன்ம இழைப்பாற்றிக்கு அழுவது மாபெரும் தர்மம்

ஆம் கொத்து கொத்தாக, பாளம் பாளமாக மானிடர் சாகும் நேரமிது, அவர்கள் நமக்கு உறவா பகையா இனமா அந்நியமா என்பது விஷயமல்ல, அவர்கள் மானிடர்கள், ஆத்மா வாழ்ந்த மானிட கூடுகள்

கடலில் பேதமில்லை ஆன்மாக்களில் வேறுபாடு இல்லை

வாழும் மானிடருக்கு முழு உதவி செய்வோம், முடிந்த உதவியினை எல்லோரும் செய்வோம், இப்போது அரசு எடுக்கும் முயற்சிக்கு சிரமம் பாராது ஒத்துழைப்பதே பெரும் தர்மம்

அதைபோலவே இருந்த இடத்தில் இருந்து ஒரு தர்மம் செய்யலாம், அது ஆத்ம தர்மம். இறந்தவர்களுக்காக பிரார்த்திப்பது, அவர்களின் ஆன்மாவின் இளைப்பாற்றிக்கு மன்றாடுவது

ஆம் , மானிடன் எனும் ஒரே இணைப்பில் கொரோனாவால் இறந்த அந்த மானிடர்களும் நம்மவர்களே, அவர்களுக்காக விளக்கேற்றி அழுது புலம்பி பிரார்த்திப்போம்

நம் வீட்டு துக்கம் போல் அதை அனுசரிப்போம்

வீடு தோறும் விளக்குகள் ஏறட்டும், நம் பிரார்த்தனைகளில் அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக பிரார்த்தனைகள் சேரட்டும்

அந்த பிரார்த்தனையில் நித்திய ஒளியுடன் அந்த ஆத்மங்கள் கலக்கட்டும், அவர்கள் இந்த பூமிக்கு காவலாக நிற்கட்டும்

அதில் நோயுற்றோர் பிழைக்கட்டும், அந்த காவலில் கொரோனாவுக்கு மருந்தும் வரட்டும், மானிடம் செழிக்கட்டும்

இது தனித்திருக்கும் நேரம், அதில் கொஞ்சநேரம் அந்த ஆத்துமாக்களுக்காக ஒதுக்குவோம், காற்றுக்கு தலையாட்டும் மரம் போல கொஞ்ச நேரமாவது அவர்களுக்காக தலைகுனிந்து அழுவோம்

வீடு தோறும் அவர்களுக்காக ஒரு விளக்கு வைப்போம், இறந்த ஒவ்வொரு மக்களையும் ஒவ்வொருவர் தத்தெடுப்போம்

நோயுற்று போராடும் ஒவ்வொரு மானிடனுக்காகவும் பிரார்த்திப்போம்

இந்த காட்சிக்காகத்தான் தர்ம மகள் கண்ணீரோடு காத்திருக்கின்றாள், காலதேவன் இந்த காட்சியினை காணத்தான் தவமிருக்கின்றான்

சக மனிதனுக்காக அழும் மானிட சமூகத்தை, சக மனிதனையும் தன் பித்ருக்கள் வரிசையில் சேர்க்கும் மனிதனை கண்டபின்னும் தர்ம தேவதை பொறுப்ப்பாளா?

ஏ பகவானே தர்மம் இன்னும் சாகவில்லை, மானிட இனம் இன்னும் மனிதத்தை இழக்கவில்லை என மகிழ்ச்சி
கண்ணீரோடு ஓடுவாள் , அந்நொடியில் கொரோனா சட்டென காணாமலே போகும்

நெருப்பு நெருப்பை வாழவைக்கும், நீர் நீரை வாழவைக்கும்

மனிதன் மனிதனை வாழவைக்க வேண்டும், மனித ஆன்மா இன்னொரு ஆத்மாவுக்கு ஒளியேற்ற வேண்டும்

உங்கள் வீட்டின் கொண்டாட்டத்தை குறையுங்கள், டிவியினை அணைத்துவிடுங்கள், உணவினை குறையுங்கள், நம்மில் ஒருவர் இறந்தது போன்றே நாம் துக்கம் அனுசரிப்போம்

அந்த கண்தெரியா சகோதர சகோதரிகளுக்காக விளக்கேற்றுவோம் மெயின் ஹாலில் அது நிரந்தரமாகா எரியட்டும்

மாலை 7 மணிக்கு எல்லோர் வீட்டு வாசலிலும் அந்த விளக்கு எரியட்டும்

அதை காணும் தர்ம தேவதை மகிழட்டும், கண்ணுக்கு தெரியா சகோதர்களுக்காக நாம் மானுட நேயத்துடன் துக்கம் அனுசரிக்கும் பொழுது கண்ணுக்கு தெரியா அவர்கள் ஆன்மா நமக்கு வழிகாட்டும்

மருத்துவர்களுக்கும் நோயுடன் போராடும் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டும், கொரோனா நம் வீட்டு பக்கம் வராது உலகை விட்டே ஓடிவிடும்

அந்த ஆத்மபலத்தில் நிலமை சரியாகும், மானிடம் பூத்துவிட்ட மகிழ்வில் ஊழிகாலம் தள்ளிபோடபட்டு கோவில்களின் கதவுகள் தானே திறக்கும்

கடவுள் சக்தி ஒரு அசையா சக்தி, அதாவது அணுகுண்டு அல்லது பெட்ரோல் போன்ற பெரும் சக்தி, ஆனால் அது இயங்க தொடங்க ஒரு தூண்டுதல் அவசியம்

அணுகுண்டு நியூட்ரான் கோலால் தூண்டபடும், வெடிபொருள் தீகுச்சியால் தூண்டபடும்

கடவுள் எனும் அந்த பெரும் சக்தி மானிட நேயம் சக மனிதன் மேலான அன்பு, அவன் ஆத்மாவின் மகிழ்ச்சி எனும் தூண்டலில்தான் விஸ்வரூபமெடுக்கும் இல்லாவிட்டால் அதுபோக்கில் இருக்கும்

உலகை மாற்றியது வெறுப்பும் போரும் சுயநலமும் அல்ல மாறாக சக மனிதர்கள் மேலான அன்பு. அந்த அன்புதான் அவதாரங்களை கொண்டு வந்தது, அந்த அன்புதான் சக மனிதனுக்காக விஞ்ஞான கருவிகளை கொண்டுவந்தது, சக மனிதன் படும்பாடு பொறுக்காலமே அன்பின் உச்சியில் மருத்துவம் வளர்ந்தது

அன்புதான் இந்த உலகத்தையே மாற்றியது, அந்த அன்பினாலே இந்த உலகம் சுழன்றது, இன்னும் சுழல வைப்போம்

வாருங்கள், தனித்திருக்கும் நாம் அந்த ஆத்மாக்களுக்காய் துக்கம் ஏந்தி வழிபாடுகளை அனுசரிப்போம், அவரவர் மதம் எதுவோ அதன் வழி பிரார்த்தியுங்கள்

கிறிஸ்தவர்கள் தனித்து பிரார்த்திகட்டும், மெழுகு ஏந்தி ஜெபமாலை சொல்லி பிரார்த்திகட்டும்

இஸ்லாமிய மக்கள் ஐந்து நேர தொழுகையிலும் அம்மக்களை நினைத்து கொள்ளட்டும்

இந்துக்கள் வீடுகளில் அவர்களுக்கொரு இடம் ஒதுக்கி விளக்கு ஏந்தி அவர்களை பிரார்த்திப்போம், உண்ணும் உணவில் ஒருபிடி ஒதுக்கி வைத்து பிரார்த்திப்போம்

இவை முன்பெல்லாம் வழக்கில் இருந்த விஷயங்களே புதியவை அல்லவே அல்ல, மறக்கடிபட்ட விஷயம் அவ்வளவுதான்

கொள்ளை நோய்முதல் போர்வரை இறந்தவர்களின் ஆன்மாவினை சாந்தபடுத்தி கடவுளின் அருளை தேடுவது எக்காலமும் இந்த மண்ணின் தர்மமே

ஆதரவற்ற ஆத்மாக்களுக்காக வேண்டிகொள்வது பெரும் யாகங்களை நடத்துவதற்கு சமம் என்கின்றது இங்குள்ள் தாத்பரிய நம்பிக்கை

அதில் அந்த ஆன்மாக்கள் மகிழும், சாந்தி அடையும், பஞ்ச பூதங்களோடு அவை கலந்து நிம்மதிபெறும்

தெய்வம் தானாய் அந்த ஆத்மாக்களோடு வரும் அதன் பின் நடப்பவை எல்லாம் நல்லவையாய் அமையும், புது மானிட குலமாய் மீண்டெழுவோம்..

மாலை 7 மணிக்கு உங்கள் வீட்டு வாசலில் ஒரு விளக்கு அந்த ஆத்மாக்களுக்ககாக எரியட்டும் , அதில் நிச்சயம் பலன் இருக்கும், முடிந்தால் முயற்சியுங்கள்.

நாம் சொல்வதை சொல்லிவிட்டோம், நாம் எளியவன், நம்மை கவனிப்பார் மிக குறைவு

யார் சொல்லுக்கு பெரும் செல்வாக்கு உண்டோ , யார் சொன்னால் எல்லோரையும் எட்டுமோ அவர்கள் இதை சொன்னால் தெய்வமும் தர்ம தேவதையும் அவர்களை வாழ்த்தி அவர்கள் வம்சத்துக்கே காவல் இருக்கும்..

ஆழ்ந்த அஞ்சலி பாரிக்கர் அவர்களுக்கு

இந்த தலைமுறையில் ஊழலுக்கு அப்பாற்பட்டு , மிக மிக எளிமையாக‌ வாழ்ந்தவர்கள் மிக மிக சிலர்

அவர்களில் ஒருவரான பாரிக்கர் இப்போது இல்லை

எந்த முதல்வருக்கும் இல்லா சிறப்பு அவருக்கு உண்டு, ஐஐடியில் படித்து பட்டம்பெற்று முதல்வரான முதல் நபர் அவர்தான்

அவரும் இன்போசிஸ் நிலக்கேணியும் வகுப்பு தோழர்கள்

பாரிக்கர் மிகபெரும் பட்டம் வைத்திருந்தார், நினைத்திருந்தால் உலகின் எந்த மூலைக்கும் கோடிகளில் கொட்டபடும் சம்பளத்திற்கு சென்றிருக்கலாம்

ஆனால் செல்லவில்லை, தேசபற்று அவரை கட்டி போட்டது

கோவா முதல்வராக சிலமுறை இருந்தார், பாஜக அரசின் பாதுகாப்புதுறை அமைச்சரானார்

நிச்சயம் ராணுவ அமைச்சராக இருந்து அவர் பல நல்ல விஷயங்களை செய்ததை மறுக்க முடியாது, ராணுவம் முழு பலம் பெற மிக மிக கடுமையாக உழைத்தார்

மோடி அரசில் இருந்த மிகபெரும் அடையாளம் இந்த பாரிக்கர்

அவர் புற்றுநோய்க்கு பலியாகிவிட்டார். அது என்னமோ தெரியவில்லை அமெரிக்காவினை நேரடியாக அல்லது மறைமுகமாக எதிர்க்கும் எல்லோருக்கும் புற்றுநோய் வந்து தொலைகின்றது

யாசர் அராபத், சாவேஸ் போன்ற பெரும் தலைவர்களுக்கு வந்தது

இப்பொழுது பாஜகவின் அறிவார்ந்த முகமாக கருதபட்ட பாரிக்கருக்கும் வந்து அவரையும் கொண்டு சென்றுவிட்டது

பிரமோத் மகாஜனின் மறைவினை போலவே பாரிக்கரின் மறைவும் பாஜகவுக்கு மிகபெரும் இழப்பு

இந்த நாட்டின் ராணுவத்தின் பலத்திற்கு பலம் சேர்க்கும் விஷயங்களில் கடும்பாடுபட்ட அன்னாரின் ஆத்மா சாந்தியடைய தேசம் பிரார்த்திக்கின்றது

அவருக்கு ஆழ்ந்த அஞ்சலி..

பட்டுகோட்டை கல்யாண சுந்தரம்

எல்லா துறையிலும் பிறவியிலே திறமையானவர்கள் உண்டு, அப்படி அல்லாமல் கஷ்டபட்டு தன்னை உருவாக்கியவர்கள் உண்டு , தமிழக கவிஞர்களில் பட்டுகோட்டை கல்யாண சுந்தரம் முதல் வகை, பிறவி கவிஞன்
மிக சிறுவயதிலே உலகத்தை கவனித்தவன் அப்பொழுதே கம்யூனிச பொதுவுடமை கருத்துக்கள் அவனை பாதித்தது, தமிழோடும் பொதுவுடைமை தத்துவத்தோடும் வளர்ந்தார்
19 வயதிற்குள் 16 தொழில்களை செய்திருந்தார் விவசாயம் முதல் நடனம் வரை அதில் உண்டு, மீன்பிடியும் உண்டு அவர் எல்லா மக்களின் துயரமும் அறிந்தது அக்காலத்தில்தான், அதுதான் பின் பாடலாய் ஒலித்தது
பாரதிதாசனிடம் தமிழ்கற்றார், அப்படியே கவிஞராய் மலர்ந்தார்
அவர் பாட்டெழுதியது வெறும் 3.5 வருடம் மட்டுமே, அந்த மிககுறுகிய காலத்தில் காலத்திற்கும் நிற்கும் பாடல்களை கொடுத்து சென்றார்
உடுமலை நாராயண கவி, தஞ்சை ராமையா தாஸ் போன்றோரின் ஒரு மாதிரி லாகிரியில் ஒலித்துகொண்டிருந்த தமிழ்பாடல்களுக்கு சுருக்கென்று எளிய தமிழில் திருப்பம் கொடுத்தவர் இவர்
பின்னாளில் இவர் போட்ட வழியில்தான் கண்ணதாசனும் , வாலியும் எளிய தமிழில் பயணித்தார்கள்
3.5 வருடத்திற்குள் அவன் எழுதிய பாடல்கள் 99% எளிய மக்களின் துயரம் பற்றியவை, விவசாயிகளுக்கும், ஆலை தொழிலார்களின் குரலாகவும் அவன் பாடியது
அவனளவு ஏழைகளுக்காக பாடிய கவிஞன் இன்றுவரை தமிழகத்தில் இல்லை, இனி வரப்போவதுமில்ல‌
விவசாயிகளின் வரிகளாக‌
“காடு வெளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலும் தானே மிச்சம்”
உழைத்து வாழ்வோம் எனும் நோக்கில்
“உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம் வளராது – மனம்
கீழும் மேலும் புரளாது”
மூட நம்பிக்கைக்காக
“செம்பும் கல்லும் தெய்வமென்று
நம்புவோர்கள் பித்தரென்று
சித்தர்கள் உரைத்த மொழி மெய்தானே?
சிற்பிகள் செதுக்கி வைத்த
சித்திரச் சிலைகளுக்குள்
தேவி வந்திருப்பதுவும் பொய்தானே?”
சிறுவர்களை தட்டி எழுப்பும் விதமாக‌
“வேப்பமர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப் போகும்போது
சொல்லிவைப்பாங்க – உன்
வீரத்தைக் கொளுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க…”
பொதுவுடமை தத்துவத்திற்காக‌
“தனிவுடமைக் கொடுமைகள் தீரத்
தொண்டு செய்யடா! நீ
தொண்டு செய்யடா!
தானா எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா!– எல்லாம்
பழைய பொய்யடா!”
பெண் விடுதலைக்காக‌
“தன் கணவனை இழந்தவள் கட்டழகியானாலும்
கடைசியில் சாகமட்டும் உரிமையுண்டு – இதில்
கதைகளும் கட்டிவிடும் ஊர் திரண்டு!”
பித்தலாட்ட கும்பலுக்காக‌
“தன் ரேகை தெரியாத பொய்ரேகை காரரிடம்
கைரேகை பார்க்க வரும் முறையாலும் – அவன்
கண்டது போல் சொல்லுவதை ஆறறிவில்
நம்பிவிடும் வகையிலும் ஓரறிவு அவுட்டு
அறிவுக் கதவை சரியாய் திறந்தால்
பிறவிக் குருடனும் கண் பெறுவான்.”
தொழிலாளிக்காக‌
“பட்டினிக்கும் அஞ்சிடோம்!
நெஞ்சினைப் பிளந்த போதும்
நீதி கேட்க அஞ்சிடோம்!
நேர்மையற்ற பேர்களின்
கால்களை வணங்கிடோம்!.”
“தேனாறு பாயுது! செங்கதிர் சாயுது!
ஆனாலும் மக்கள் வயிறு காயுது”
கலை என்பதற்கு மாவீரன் லெனினின் வரிகள் இப்படி இருக்கும்,
“கலை மக்களுக்குச் சொந்தமானது. அதன் வேர் வஞ்சிக்கப்பட்ட பெரும்பாலான உழைப்பாளி மக்களுக்கு இடையில் படர்ந்திருக்க வேண்டும். அது அவர்களை ஒன்றுபடுத்தி அவர் தம் உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் நிறைவேறச் செய்வதாய், அவர் தம் கலையுணர்வைத் தூண்டுவதாய் அமைதல் வேண்டும்.”
இந்த வரிகளுக்கு வாழ்வாய் வாழ்ந்தவன் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்
பெரும் புகழ்பெற்று அவன் சாகும்பொழுது வயது வெறும் 28
அந்த 28 வயதில் அவன் கண்ட மரணம்தான் கண்ணதாசனுக்கும், வாலிக்கும் வழிவிட்டது. அல்லாவிட்டால் அந்த சிம்மாசனம் கடைசி வரை அவனுக்குத்தான் இருந்திருக்கும்,விதி அது அல்ல‌
மிக சொற்பமாக பெண்கள், காதல் பாடலும் எழுதியிருந்தான், “வாராயோ வெண்ணிலாவே” அதில் அபாரம், அதனை விட அழகான பாடல் ஒன்று உண்டு, இன்றுவரை அந்த வரிகள் உயர்ந்த
இடத்திலே இருக்கின்றன, எந்த கவிஞனின் வரிகளும் அதை எட்டவில்லை
“ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
குளிர் ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ”
(குஷ்பூ படத்தினை பார்க்கும் பொழுதெல்லாம் , இந்த வரிகள்தான் காதில் ஒலிக்கும், அவருக்காகவே எழுதபட்ட வரிகள் என்பது எம் எண்ணம்..)
எளிய தமிழால், எளிய மக்களுக்கு பாடல் சொன்ன தமிழ்கவிஞனின் நினைவுநாள் இன்று
மறக்கமுடியாத கவிஞன் அவர், பாட்டுகோட்டையினை கட்டியாண்ட கவிராஜன் அவன்..
அவனுக்கு ஆழ்ந்த அஞ்சலிலிகள் [ October 8, 2018 ]
Image may contain: 1 person, selfie and closeup

கவிராயர் “உடுமலை நாராயண கவி”

ஏகபட்ட சமஸ்கிருத வார்த்தைகள், தெலுங்கு கீர்த்தனைகள் மிகுந்திருந்த தமிழ் திரைபாடல்களின் காலத்தில், எளிய தமிழ் பாடல்களை கொடுத்து பெரும் திருப்பம் கொடுத்தவர் அவர்.
பாரதியாரின் நண்பர், அதனால் பாரதி போலவே நாட்டுபற்றும், சமூக விழிப்பு பாடல்களும் எழுதினார்
கலைவாணருக்கும் அவரே குருநாதர், கலைவாணரின் புகழ்பெற்ற கிந்தனார் நாடகத்தின் பாடல் எல்லாம் இவர் எழுதியது
அண்ணாவின் வேலைக்காரி, கலைஞரின் பராசக்தி என உடுமலை நாராயணகவியின் பாடல்கள் பிரசித்திபெற்றது
திராவிட இயக்கத்தின் கருத்துக்களை முதன் முதலில் பாடலில் கொண்டுவந்தவர் அவரே, திராவிட குரல் தமிழ்பாடல் வரிகளாக அவரால் ஒலித்தது
பின்னாளில் சினிமாவில் திராவிட கட்சிகள் வெல்ல அதுதான் அஸ்திவாரம்
நிச்சயமாக அவரின் பாடல்கள் காலத்தை வென்றவை. பின்னாளில் வந்த பட்டுகோட்டைக்கும், கண்ணதாசனுக்கும், வாலிக்கும் அவரே முன்னோடி, வழிகாட்டி
கண்ணதாசனின் முதல் பாடல் அவரிடம்தான் திருத்ததிற்கு சென்றது, இதில் திருத்தம் செய்ய அவசியமில்லை என அன்றே அவருக்கு அங்கீகாரம் கொடுத்தவர் உடுமலையார்
அவர் போட்ட பாதையில்தான் நல்ல தமிழ் திரைபாடல்கள் கிடைக்க தொடங்கின,
அவர் கவிராயர் “உடுமலை நாராயண கவி”
புராண பாடல்களிலும் சமஸ்கிருத ஸ்லோகங்களிலும் சிக்கி இருந்த தமிழ் திரைபாடல்களை சுத்த தமிழுக்கு திருப்பி கிட்டதட்ட 10 ஆயிரம் பாடலகளை எழுதிய அவரின் சாதனை மகத்தானது
இன்று அவரின் பிறந்தநாள், தமிழ் திரை கவியுலகில் பெரும் திருப்பத்தை கொடுத்த அந்த கவிராயருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
(அவர் ஏகபட்ட பாடல்களை எழுதி இருந்தாலும், ரத்தகண்ணீரில் வரும் “குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி என்பது ஏது?” என்பது இன்றிருக்கும் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்
ஆம், ஒரு அரசியல்வாதியும் நிம்மதியாகவே இல்லை.)
Image may contain: 1 person, closeup

கொன்றதற்கான காரணம் சாதிவெறி

அது தமிழக கோகுல்ராஜோ, இளவரசனோ இல்லை ஆந்திர பிரணவ் என்பவரோ சாதிக்காக கொல்லபட்ட எல்லோருமே இந்துக்கள்

ஆனால் இந்து கொல்லபட்டான் என யாரும் கிளம்பவில்லை காரணம் கொன்றதற்கான காரணம் சாதிவெறி, அது இந்துக்களின் தேசம் என சொல்லபடும் இத்தேசத்தின் அடிப்படை விதி

சாதிமாறி திருமணம் செய்ததற்காக நிகழ்ந்த இப்படுகொலைகளில் ஒரு பரபரப்புமில்லை. ஆனால் இதுவே மதம் மாறி நிகழ்ந்திருந்த படுகொலை என்றால் இந்நேரம் தேசம் தாங்காது

என்று செத்தவன் எந்த சாதி ஆனாலும் அவன் இந்து என சொல்லி பரிகாரம் தேடுகின்றார்களோ அந்த நாளில் அன்றி இங்கு இந்துத்வா உருப்படாது

அட இருவரும் என்ன சாதி என்றால் என்ன? இரு இந்துக்கள் என நினைத்தாலே இக்கொலை நிகழ்ந்திருக்காது

இந்துக்களை காக்க வந்திருப்பவர்கள் செய்ய வேண்டியது இம்மாதிரியான சாதி ஒழிப்பும் , எல்லா சாதிக்காரர்களுக்கும் இந்து மதத்தில் பாதுகாப்பும்

இதை செய்தால் மதமும் நன்றாக இருக்கும், நாடும் அமைதியாக இருக்கும்

அதை விட்டுவிட்டு விநாயர் சிலை முன்பே நான் இந்து, மற்றபடி நான் இந்த சாதிக்காரன் என ஒதுங்குவது இந்துதன்மை மட்டுமல்ல மனித தன்மையே அற்ற விஷயம்

முதலில் இந்துக்களை காக்க வந்திருப்பவர்கள் சாதியினை ஒழித்து சொந்த மதத்தினை காக்கட்டும், அதன் பின் தாமரை மொட்டாவது வைக்கும்

இல்லாவிட்டால் தாமரை செடி வேர் கூட விடாது

இக்காலமே இப்படி என்றால் பெரியார் காலம் எப்படி இருந்திருக்கும்?

அந்த மனிதன் ஏன் அவ்வளவு மூர்க்கமாக சாதியினை சாடினான், சாதிக்கு மூலகாரணமான மதத்தை வெட்ட கோடரி எடுத்தான் என இப்பொழுது நன்றாக புரிகின்றது

சொந்த மதத்துகாரன் சாதி பெயரால் செத்தாலும் கண்டு கொள்ளாமல் மதம் காக்க கிளம்பியிப்பவர்களை விட, மனிதனை மனிதனாக மதிக்க சொன்ன பெரியார் எவ்வளவோ உயர்ந்தவர்

எம்.எஸ் சுப்புலட்சுமி பிறந்த நாள்

இன்று [ September 16, 2018 ] எம்.எஸ் சுப்புலட்சுமி பிறந்த நாள். நினைவுகள் அவருக்குள் முழ்கி அப்படியே பிராமணரின் இசை அரசாங்க காலாத்திற்குள்ளும் செல்கின்றது

இசை என்பது பிரமண சொத்து , அதை பிராமணர் மற்ற சாதிக்கு தரமாட்டார்கள் என்ற பெரும் கட்டுகதை இங்கு உண்டு

இந்த பெரும் அநியாய பொய்க்கு எதிர் சாட்சியாக, மவுன சாட்சியாக நின்றுகொண்டிருக்கின்றார் இளையராஜா

மனசாட்சியுள்ள இளையராஜா.

ஆம் அவர் தாழ்த்தபட்டவர் ஆனால் சென்னைக்கு வந்து அவர் தன் இசையினை கூராக்கும்பொழுது பல பிராமண வித்வான்கள் அவருக்கு உதவியிருக்கின்றனர், ஆசானாய் நின்றிருக்கின்றனர்

பிராமணர்கள் இசையினை மற்ற சாதிக்கு தரமாட்டார்கள் எனும் மாபெரும் பொய்யினை அன்றே உணர்ந்தவர் இளையராஜா

இதனால்தான் இன்றுவரை ஆன்மீகவாதியாக நிற்கின்றார், பிராமண வெறுப்பு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதை மனமார நம்புகின்றார். பெரியார் படத்திற்கு இசை அமைக்கமாட்டேன் என அவர் சொன்னதெல்லாம் இதற்காகத்தான்

டி.எம் சவுந்திரராஜன் முதல் இளையராஜா, ஜேசுதாஸ் என பல ஜாம்பவான்களை உருவாக்கிய பிண்ணணியில் பல பிராமணர்களும் இருந்தார்கள்

சுப்புலட்சுமி பிறந்த நாளில் இளையராஜா நினைவும் வந்து போகின்றது

திறமை எங்குள்ளதோ அது மதிக்கபடும், மாறாக பிராமணர் இசையினை கற்றுகொடுக்கமாட்டார்கள். அவர்கள் சாதி வெறியர்கள் என்பதெல்லாம் இங்கு அரசியலுக்கு செய்யபடும் பெரும் பொய்கள்


இசை என்பது ஒரு ஆசீர்வாதம், கடவுளின் வரம் மிக சிலருக்கே அந்த பிராப்தம் வாய்க்கின்றது. அதனை முறைபடி பயன்படுத்தியவர்கள் மிக பெரும் உயரத்தை அடைகின்றார்கல், தாம் பிறந்த நாட்டிற்கே பெருமை சேர்க்கின்றார்கள், அவர்களின் ஒருவர்தான் “இசை பேரரசி” என அழைக்கபட்ட எம்.எஸ் சுப்புலட்சுமி

மதுரை சன்முகவடிவு சுப்புலட்சுமி

உலகிலே தாயின்பெயரை இன்சியலாக கொண்ட மிக சிலரில் அவரும் ஒருவர், காரணம் துயரமானது. தாய் பாடகி எனினும் தந்தை சுப்பிரமணிய அய்யர் என்பதை பின்னாளில்தான் அறிந்தார், அதனால் தாயின் பெயரிலே அழைக்கபட்டார்

அவர் தாயும் நல்ல‌ பாடகர் அதனை விட வீணை வித்வான், அவரின் வீணை இசையினை ஒரு நிறுவணம் பதிவு செய்ய வந்தபொழுது என் மகள் பாடுவாள் தெரியுமா என சொல்லி, மகளை அழைத்து பாட செய்தார், கம்பெனியார் அசந்தனர், அங்கு வந்திருந்த அன்றைய ஆளுநரும் அசந்துவிட்டார். வீணை இசை பதிவு செய்ய சென்றோர் சுப்புலட்சுமியின் பாடலையும் பதிவு செய்தனர்

அன்றிலிருந்தே , அந்த 8 வயதில் இருந்தே பாட தொடங்கினார். அவரின் அசாத்திய திறனை உணர்ந்த அன்றைய பெரும் பாடல் ஆசான்களான பல பாகவதர்கள் அச்சிறுமியினை கூர் படுத்தினர்

அவருக்கு 10 வயதாக இருந்த 1926ல் சுப்புலட்சுமியின் முதல் இசைதட்டு வெளிவந்தது, கொஞ்சம் கொஞ்சமாக உலகம் அவரை அறிய தொடங்கியது

அது திரையுலகம் தொடங்கிய காலம், அன்று ஒரே தகுதி பாடல் தெரிந்தவர்களே நடிக்க வேண்டும். காரணம் பிண்ணணி நுட்பங்கள் அன்று வரவில்லை, டப்பிங் எல்லாம் இல்லை

(அதனால்தான் ராமசந்திரன் போன்றோர் அரைகிழடு ஆனபின்னே, தொழில்நுட்பங்கள் மாறியபின்னேதான் நடிகனாக முடிந்தது, யழவு தொழில்நுட்பம் வராமலே போயிருக்கலாம்)

இதனால் பாடகர்கள் மட்டுமே நடிக்கமுடியும் என்பதால் தியாகராஜ பாகவதர் ,கிட்டப்பா போன்று எம்.எஸ் சுப்புலட்சுமியும் நடிக்க வந்தார். 1936களில் நடிக்க வந்தார், அப்பொழுது சதாசிவம் என்பவருடன் காதலாகி 1941ல் திருமணமும் செய்தார்

அப்பொழுது சாவித்திரி படத்தில் நாரதர் வேடத்தில் நடிக்க கேட்டுகொள்ளபட்டார், ஆண்வேடத்தில் நடிக்க சுப்புலட்சுமிக்கு எண்ணமில்லை, சினிமா விட்டு வெளியேறும் முடிவில் இருந்தபொழுது சிக்கல் வேறுவகையில் வந்தது

சதாசிவமும், கிருஷ்ணமூர்த்தி என்பவரும் ஆனந்த விகடனின் இருந்தார்கள், பின் வெளியேறி பத்திரிகை தொடங்க எண்ணினார்கள், பெரும் பணம் தேவைபட்டது. வேறுவழியின்றி நாரதர் வேடத்தில் நடித்து பணம் கொடுத்தார் சுப்புலட்சுமி

அந்த பணத்தில் தொடங்கபட்டதுதான் “கல்கி” பத்திரிகை, அந்த கிருஷ்ணமூர்த்திதான் பொன்னியின் செல்வன் எல்லாம் எழுதிய அசாத்திய எழுத்தாளன்

இதனிடையே காந்திவாதியான சதாசிவம், சுப்புலட்சுமியினை காந்திக்கு அறிமுகம் செய்துவைத்தார். காந்திக்கு விருப்பமான பாடலை பாடி அவரை நெகிழ செய்தார் சுப்புலெட்சுமி

அதுமட்டுமன்றி 4 கச்சேரிகளிலே ஏராளமான பணம் வசூலித்து காந்திக்கு நன்கொடையாக கொடுத்தபொழுது காந்தி உருகி நின்றார், கச்சேரிகளில் அவர் வசூலித்தது 4 கோடி இருக்கலாம் என்கின்றன செய்திகள், அப்படிபட்ட வரவேற்பு அவருக்கு இருந்திருக்கின்றது

பாரதியாரின் பாடல்களுக்கு அன்றே குரல்வடிவம் கொடுத்தவர் சுப்புலட்சுமி

அதன் பின் மீரா படத்தில் அவர் பாடி நடிக்க இந்தியா எல்லாம் கொண்டாடபட்டார், 1945ல் வந்த அப்படம் வட இந்தியாவில் பெரும் வரவேற்பினை பெற்றது, அவரின் அழியா பாடலான “காற்றினிலே வரும் கீதம்” அதில்தான் வந்தது

இப்பாடலுக்கு பின் நேருவும், விஜயலட்சுமி பண்டிட்டும் சுப்புலட்சுமியினை தலைக்கு மேல் வைத்து கொண்டாடினர். இந்தியா முழுக்க பிரபலமான சுப்புலட்சுமி, காட்டுவாசிகள் மொழியினை தவிர எல்லா மொழிகளிலும் பாடினார், அப்படியே அயல்நாடுகளுக்கும் அழைப்பு வந்தது

நான் “இந்நாட்டின் சாதாரண பிரதமன், சுப்புலட்சுமி இசை உலகின் பேரரசி” என நேரு சொன்னபின் உலகம் அவரை அழைத்தது

“இந்தியா இந்த தலைமுறையில் ஓர் மாபெரும் கலைஞரை உருவாக்கியுள்ளது என்பதில் இந்தியர் பெருமிதம் கொள்ளலாம்” என சொன்னவர் விஜயலட்சுமி பண்டிட்.

ரஷ்யாவில் அவர் பாட சென்றபொழுது, சில ரஷ்யர்கள் அவமானபடுத்தினர், ஆனால் பாடி முடித்தபொழுது கண்ணீர் மல்க அவர்முன் நின்று, உள்ளத்தை உருக்கும் பாடலை முதன்முறையாக கேட்டதாக சொன்னார்கள்

1966ல் ஐநாவில் உலக அமைதிக்காக பாட சென்றார், ராஜாஜி “லார்டு மே பார்கிவ் அவர் சின்” என்ற பாடலை எழுதிகொடுத்தார், சபையில் சுப்புலட்சுமி பாடியபொழுது அப்படி ஒரு அமைதியும் அவர் பாடி முடித்தபின் பெரும் கரகோஷமும் எழும்பின‌

இன்று சென்னை இசை நகரம் என ஐ.நா சொல்ல சுப்புலட்சுயின் அந்த பாடல் அரங்கேற்றம் மகா முக்கியமானது

எல்லா விருதுகளும் அவரை தேடி வந்தன, சங்கீத கலாநிதி பட்டத்தை வென்ற முதல் பெண் அவர்தான், பிலிப்பைன்ஸ் நாட்டின் ராமன் மகசேச விருதும் அவரை தேடி வந்தது

அந்த அளவு அவர் மக்கள் அபிமானமும், சர்வதேச கவனமும் பெற்றறிருந்தார், கேட்காமலே விருதுகள் குவிந்தன‌

அவர் பாடாத ராகமில்லை, மயங்கா உள்ளமில்லை, பெறாத விருதுகள் இல்லை.

எத்தனை பெரும் புகழை பெற்றாலும், எத்தனை பெரும் சிறப்புக்களை பெற்றிருந்தாலும் ஒருவர் காலத்திற்கு பின் எது நிலைத்திருக்கின்றதோ அதுதான் புகழ்

திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு அவர் பாடிய “கௌசல்யா, சுப்ரஜா..” எனும் பாடல் ஒலிக்கா இந்து நண்பர்கள் வீடு ஏதும் உண்டா? அது அவர் பாடியது, அனுதினமும் அவர் குரல் எல்லா வீடுகளிலும் துயில் எழுப்புகின்றது

இதற்கு நன்றிகடனாக திருப்பதியிலே அவருக்கு சிலை வைத்தது தேவஸ்தானம்

ராஜாஜியின் புகழ்மிக்க வரிகளான ‘குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா” என்ற வரிகளை குரலாக்கி தேனமுதமாக அவர்தான் மாற்றினார், இன்றும் பலமுறை கேட்டாலும் ரசிக்கதக்க பாடல் அது

மகாத்மா காந்தியின் விருப்பபாடலான வைஷ்ணவ ஜனதோ பாடலை இன்றும் நிறுத்தியிருப்பது அவர் குரல்தான்

மதுரையில் பிறந்த அந்த தமிழச்சி தன் இசையால் உலகம் முழுக்க பெரும் பெயர் பெற்றார், பெரும் அடையாளமிட்டார், இத்தேசத்திற்கு பெரும் கலைச்சேவை செய்து மங்கா புகழ் அடைந்தார்

இதனால் அவருக்கு பாரத ரத்னா எனும் மிக உயரிய விருதை இத்தேசம் கொடுத்து கவுரவித்தது

தன் வாழ்வில் தன் தாயும், தன் கணவருமே தன்னை உருவாக்கியவர்கள் என சொல்லிகொண்டிருந்த எம்.எஸ் சுப்புலட்ச்சுமி சாதாசிவம் 1997ல் இறந்தபின் பாடவில்லை

அவர் இல்லாமல் பாடுவதில்லை எனும் வைராக்கியத்திலே இருந்த அவர் 2004ல் மறைந்தார்

இன்று அவர் பிறந்த நாள்.

தமிழகத்து இசையான கர்நாடக (கரைநாடக) இசையினை உலகெல்லாம் கொண்டு சென்று பெரும் புகழை தனக்கும் தமிழகத்திற்கும் கொண்டுவந்தவர் அவர்

ஆணாதிக்கம் நிறை உலகில் அவற்றை எல்லாம் உடைத்தெறிந்து பெரும் பிம்பமாக எழும்பிய பெண் அவர். இசைக்கு ஆண்பெண் பேதமில்லை என நிரூபித்துகாட்டியவர் அவர்

தனக்கு கிடைத்த இசை வரத்தை சமூகம், நாட்டு விடுதலை போராட்டம், சினிமா, மதம் , நாடு என எல்லாவற்றிற்கும் பயன்படுத்திய பாடகி அவர். மறுக்க முடியாது

இசை அரசி சுப்புலட்சுமி மறைந்தாலும் அவர் பாடல்கள் மூலம் அவர் நம்முடன் வாழ்ந்துகொண்டே இருப்பார்

காற்றினிலே வரும் கீதம் கேட்டு கொண்டே இருக்கும்”

Image may contain: 1 person, eyeglasses