மாரடோனா

கால்பந்து ரசிகர்களுக்கு அவர் என்றும் அபிமானத்திற்குரிவர். கிரிக்கெட்டில் பிராட்மேன், சச்சின் என்றொரு வரிசை உண்டென்றால் கால்பந்தில் பீலே, மாரடோனா என்றொரு வரிசை நிச்சயம் உண்டு

1980களின் கால்பந்து உலகம் அவருக்கானது, அவருக்காகவே ஆட்டங்கள் நடத்தபட்டன, கிட்டதட்ட 12 ஆண்டுகாலம் கால்பந்து உலகம் அவரை சுற்றியே சுழன்றது.

அர்ஜெண்டினா அணிக்கு கோப்பையினை அவர்தான் பெற்றுகொடுத்தார்.

1986ல் அவர் ஆடிய ஆட்டம் அபாரமானது, நொடிபொழுதில் தட்டிய கோல் இன்றுவரை கடவுளின் கை என்றே சொல்லபடுகின்றது.

கால்பந்து விதிமுறைபடி அது சர்ச்சை எனினும், பின் 6 வீரர்களை தாண்டி 60மீட்டர் தொலைவில் இருந்து அவர் அடித்த கோல்தான் இந்த “நூற்றாண்டின் சிறந்த கோல்” என கொண்டாடபடுகின்றது

குட்டையான உருவம் தான், ஆளை பயமுறுத்தும் ஆஜானபாகு தோற்றமெல்லாம் இல்லை, ஆனால் பந்தோடு ஓட ஆரம்பித்தால் அவ்வளவு சீற்றம். பந்தோடு பந்தாக அவரும் உருளுவது போலத்தான் இருக்கும் அவ்வளவு வேகம். அத்தனை துல்லியம்

எத்தனை ரொனால்டோ, ரொமாரியோ, மெஸ்ஸி, மாப்பே வந்தாலும் மாரடோனாவிற்கு இருக்கும் ரசிகர் பட்டாளமே தனி

எத்தனையோ சர்ச்சைகளில் சிக்கினார், அதில் போதையும் உண்டு, அதில் சிக்கி மரணத்தின் விளிம்புவரை சென்று திரும்பினார்

இன்றோடு 57 வயது ஆகின்றது, மாரடோனாவிற்கு இன்று பிறந்த நாள்

பீலே தன்னிகரற்ற கால்பந்து வீரர், பல சூட்சும மூவ்களை அறிமுகபடுத்தியவர்

ஆனால் மாரடோனா அதிரடி வீரர், வேகமும் விவேகமும் கலந்த அற்புத ஆட்டக்காரர் அவர்

பிலே கருப்பு முத்து என்றால், மாரடோனா ஒரு வெள்ளை வைரம்

கடந்த உலககோப்பையில் அர்ஜெண்டினா பயிற்சியாளர் ஆனார், மெஸ்ஸி தலமையில் அவ்வணி இறுதிபோட்டி வரை சென்றது, மெஸ்ஸி நல்ல ஆட்டக்காரர் சந்தேகமில்லை

ஆனால் 4 ஆட்டகாரர்கள் சுற்றிவிட்டால் மெஸ்ஸி கட்டுபடுவார், அந்த வித்தை ஜெர்மனிக்கு தெரிந்தது, அது கோப்பையினை தட்டி சென்றது

மராடோனா 6 பேர் சேர்ந்தாலும் கட்டுபடுத்தமுடியாத பிசாசு, தன் ஆக்ரோஷத்தை மெஸ்ஸியிடம் எதிர்பார்த்தார் அது நடக்கவில்லை

வரலாறு அர்ஜெண்டினாவில் ஒரே மாரடோனா என குறித்துகொண்டது.

அந்த ஜாம்பவானுக்கு இன்று பிறந்த நாள். அதிரடி கோல் அடிப்பது எப்படி என உலகிற்கு பலமுறை சொல்லிகொடுத்த அந்த அற்புத ஆட்டகாரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

[ October 30, 2018 ]

============================================================================